Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

காற்றே எனைக் கிள்ளாதிரு 24

வீட்டிற்கு வந்த கௌதமுக்கு அமுதினியைப் பார்த்தவுடன் கோவமாக வந்தது.  அவள் வேலையை முடித்து அறைக்கு வரும் வரை பொறுமையாக காத்திருந்தான் அவளுக்காக.  இரவு உணவு முடிந்து அறைக்கு வந்தவள் கௌதம் உறங்காது இருப்பதைப் பார்த்து இன்னும் இவங்க தூங்கலையா என எண்ணிக் கொண்டே அவள் உறங்குவதற்காக, தலையணையும் போர்வையும் எடுத்து சோபாவில் போட்டாள் உறங்குவதற்காக.

அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன், அவளிடம் பேச எண்ணி அவளை சைகையால் அழைத்தான்.  அவன் அழைத்ததும் யோசனையாக அவன் அருகில் வந்தவள் அவன் கண்ணசைவில் அவனுக்கு எதிரே கட்டிலில் அமர்ந்தாள்.

அவளையே உற்றுப் பார்த்தவன் நேரிடையாகவே “அரவிந்த் கனிய லவ் பண்றது… உனக்கு தெரியுமா?” என்றான் அவளிடம்.

ஓஹ்… இவங்ககிட்ட சொல்லிட்டானா… என மனதில் நினைத்தவள், “ஹ்ம்ம்…” என தலையசைத்தாள்.



Advertisement

“ஏன்? என்கிட்ட நீ சொல்லல?”

இது அவளுக்கு புதுமையாக இருந்தது.  என்ன கேட்கிறாங்க இவங்க? இவங்க எப்போ என்கிட்ட சகஜமா பேசினாங்க?  இவங்ககிட்ட நான் சொல்றதுக்கு என எண்ணியவளுக்கு அவனிடம் என்ன சொல்வது இதற்கு என அமைதியாக இருந்தாள் பேசாமலே.

கௌதம் அவள் ஏதும் பேசாமல் இருப்பதைப் பார்த்து எரிச்சல் அடைந்தவன், “ரக்‌ஷி உனக்கு போன் பண்ணாளா…?” என்றான் விடாமல்.

Advertisement

அவன் கேட்டதும் அவனை அதிர்ந்து பார்த்தவள் ஆமாம் என தலையசைத்தாள்.

Advertisement

“ஓ… வாயைத் திறந்து பேசமாட்டீங்களா…?” என முறைத்தவன்,  “அவள் ஹாஸ்பிட்டல்ல அட்மிட் ஆகியிருந்தப்பவாவது என்கிட்ட இதெல்லாம் சொல்லியிருக்கலாமில்ல?” என்றான்.

என்னவென்று சொல்லுவாள்?  அவள் பேசிய வார்த்தைகளை யாரிடமும் சொல்ல விரும்பாமல் தானே அதை மறைத்திருந்தாள்.  கௌதம் சகஜமாக பேசி பழகியிருந்தால், கணவனிடம் பகிர்ந்திருப்பாளோ என்னவோ?

“என்ன எதுக்கும் பதில் பேசக் கூடாதுன்னு… ஐடியாவா…” என்றான் பல்லைக் கடித்து.

Advertisement

அவளுக்கும் கோவம் வந்தது.  இன்னைக்கு இப்படி கூட்டு வச்சி கேள்வி விசாரணை பண்றவர், இத்தனை நாளா ஏன் பேசலையாம்? என எண்ணினாள் மனதில்.

புருஷன்ன்ற அதிகாரத்தை காமிக்கறாரா?  என்னவோ நான் தப்பு செஞ்ச மாதிரி என்னாலதான் அவள் ஹாஸ்பிட்டல போய் படுத்துகிட்டது மாதிரியிருக்கு இவர் கேள்வியெல்லாம்.

அமுதினி வேண்டுமென்றே இடக்காக, “நீங்க இப்படி கேட்பீங்கன்னு எனக்கு தெரியாது? தெரிஞ்சிருந்தா உங்ககிட்ட சொல்லியிருப்பேன்…” என்றாள்.

கௌதம், “என்ன நக்கலா…?”

அமுதினி மனதில் ஓ.. புரிஞ்சிடுச்சா…? பொண்டாட்டின்னு ஒருத்தி இருக்கறதே தெரியாத மாதிரி இத்தனை நாளா இருந்திட்டு இப்ப திடிர்னு ஞானோதயம் வந்திடுச்சி போல.  அதிகாரமெல்லாம் தூள் பறக்குது என நினைத்துக் கொண்டாள்.

“ச்ச ச்ச… நிஜமாங்க.  உண்மையைதான் சொல்றேன்.  இத்தனை நாள் என்கிட்ட நீங்க பேசியிருக்கீங்களா?  நானே ஏதும் உங்க கிட்ட பேசனும்னு வந்தாலும் கண்டுக்காம போயிடுவீங்க.  அதனால எதுக்கு வம்புன்னு சொல்லாம இருந்தேன்.  இதுவேற நான் பேசி நீங்க கேட்பீங்களான்னு எனக்கு தெரியலையே.  அதா…ன் சொல்லல.  உங்ககிட்ட மறைக்கனும்…னு எல்லாம் இல்ல”.

அவனுக்கு அவள் பேசியதில் இன்னும் நம்பிக்கை வரவில்லை.  தன்னிடம் கிண்டலாக பேசுகிறாளா..?  அல்லது உண்மையாக கூறுகிறாளா… என்ற ஆராய்ச்சி பார்வைதான்.  அதை வார்த்தையாகவும் கேட்டிருந்தான்.

:ம்ப்ச்… நான் சீரியஸா பேசிட்டிருக்கேன்.  நீ என்னை கிண்டல் பண்ணிட்டிருக்கே…”

அவளுக்கும் கோவம் வந்தது.  அதை மறைக்க முடியாதவளாக “என்ன கிண்டல் பண்ணேன்?  நீங்க கேட்டதுக்கு பதில் சொன்னேன்.  அதுதான உண்மை” என வேகமாக மொழிந்தவள் “என்னவோ இவர் என்கிட்ட மணிகணக்கா குலாவுற மாதிரி” என முனுமுனுத்தவள் “நீங்க எப்போ என்கிட்ட சரியா பேசனீங்க?  நான் உங்ககிட்ட இதெல்லாம் ஷேர் பண்றதுக்கு?” என்றாள் முறைத்துக் கொண்டே.

அவனுக்கு என்ன சொல்வது என தெரியவில்லை. அப்போதும் புரிந்துகொள்ளாமல், நான் என்ன கேட்கிறேன், இவள் என்ன சொல்றாள்? என கோவம்தான் வந்தது.

“நீ அரவிந்த், ரக்‌ஷி பத்தின விஷயங்களை பேசியிருந்தா… நான் நிச்சயம் பேசியிருப்பேன்”.

“ஓஹ்… எனக்கு எப்படி தெரியும்? இவங்களைப் பத்தி பேசுனா மட்டும், நீங்க நின்னு காது குடுத்து கேட்பீங்க…, பேசுவீங்கன்னு” என இழுத்தாள் கேலியாக.

“எப்பவுமே ஒழுங்கா பேசமாட்டியா…?  இப்படிதான் கேட்கறதுக்கு எல்லாம் ஏறுக்குமாறா குதர்க்கமா பேசிட்டிருப்பியா…?” என்றான் அடிக்குரலில் அதட்டலாக.

ஐயாவுக்கு கோவம் வந்திடுச்சு போல, உண்மைய சொன்னா பதில் சொல்ல முடியல.  கோவம் மட்டும் வருதோ?  இவங்க வீட்டு ஆளுங்கள பத்தி பேசுனா மட்டும் கேட்பாராம்.  எங்கள எல்லாம் மனுஷியா? மதிக்க கூட மாட்டாரோ?  அப்படியென்ன ஸ்பெஷல் இவங்க மட்டும் என கொதித்தாள் மனதில்.

“உங்களுக்கு யார் சொன்னது?  இதெல்லாம்…”

என்னடா இவள்?  இவள்கிட்ட நான் கேள்வி கேட்டா திருப்பி இவள் என்னையே கேள்வி கேக்கறா? என எரிச்சலுடன் பதில் மொழிந்தான்.

“அரவிந்த் அம்மாகிட்ட இன்னைக்கு இதையெல்லாம் சொல்லிட்டிருந்தான்”

அமுதினி மனதில் என்னை யார்கிட்டயும் சொல்லாதீங்கன்னு சொல்லிட்டு, அவன் சொல்லிட்டானா…? என்ற எண்ணம்தான்.

“அவன் சொல்லிதான் எனக்கு தெரிஞ்சிக்கனும்னு இருக்கு.  இந்த வீட்ல என்னை தவிர எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கு” என்று குறைபட்டான்.

“அத்தைக்கும் தெரியுமா…?” என்றாள் பதட்டமாக.

“ஹ்ம்ம்… அம்மாக்கு முன்னமே தெரிஞ்சிருக்கு.  அவங்களும் என்கிட்ட சொல்லல” என வருத்தப்பட்டான்.

ஏனோ அவன் வருத்தப்படுவதை பொறுக்க முடியாமல் “ம்ப்ச்… உங்ககிட்ட சொல்லக்கூடாதுன்னு எல்லாம் இல்ல.  எந்த நம்பிக்கையில நான் உங்ககிட்ட சொல்லுவேன்.  உங்க கிட்ட ஷேர் பண்ற அளவுக்கு நீங்க எனக்கு க்ளோஸ் இல்லையே.  நான் எப்படி சொல்லுவேன்” என்றாள் நிதானமாக தன்னை புரிய வைத்துவிடும் எண்ணத்தில்.

“ரக்‌ஷி ஏதோ போன்ல பேசப் போய்தான நீ அன்னைக்கு முழுக்க அழுதிருக்க” என்றான் அன்றைய தினத்தை நினைவில் வைத்து.

அவளுக்கு ஆச்சர்யமாக இருந்தது.  நான் அழுதது எல்லாம் இவங்களுக்கு தெரிஞ்சிருக்கு. அப்படியிருந்தும், ஏன்? என்கிட்ட எதுவும் கேட்கல? என நினைத்தாள்.

அவளையே பார்த்திருந்தவன் அவளது முகமாற்றத்தை அவதானித்து “நீ வருத்தப்படற மாதிரி ரக்‌ஷி என்ன சொன்னா..?” என்றான்.

அன்றைய நிகழ்வை, அவள் பேசிய வார்த்தைகளை எண்ணி அவளுக்கு சட்டென கண்கள் கலங்கிவிட்டது.  வாய்விட்டு வெளியில் சொல்லவே கூச்சமாக இருந்தது அவளுக்கு.  எப்படி சொல்வது என யோசித்தவள், இவ்வளவு தெரிந்த பிறகு மறைக்கவும் முடியாது.

அது தன் மீது வீணான சந்தேகங்களை எழுப்பும் என அவனிடம் அன்று ரக்‌ஷி பேசியதை முழுவதுமாக கூறிவிட்டாள்.

அவள் அழுகையுடன் சொல்ல சொல்ல அவனுக்கு அவ்வளவு கோவம் வந்தது ரக்‌ஷியின் மீது.  இத்தனை நாள் சின்ன பெண் என அவளை நினைத்திருந்தவனுக்கு, அவள் பேசியிருந்ததைக் கேட்டதும், இவ்வளவு கீழ்தரமாக பேசியிருந்தாளா என ஆத்திரம்தான் வந்தது.

இதை எப்படி இவள் யார்கிட்டயும் சொல்லாம உள்ளுக்குள்ளயே வச்சு கஷ்டப்பட்டாள்.  அதான் அன்னைக்கெல்லாம் அழுதழுது முகமே வீங்கியிருந்தது போல.

“என்கிட்ட அவள் போன் பண்ணப்பவே சொல்லியிருந்தனா அவளை இழுத்து இரண்டு அப்பு விட்டிருப்பேனில்ல” என்றான் ரௌத்திரமாக.  “இல்ல அம்மாகிட்டயாவது சொல்லியிருக்கலாமில்ல…” என்றான் ஆதங்கமாக.

“பர்ஸ்ட் சொல்லனும்னு தான் நினைச்சேன்.  அரவிந்த் வந்து யார்கிட்டயும் சொல்ல வேணாம்னு கேட்டுகிட்டதால நான் யார்கிட்டயும் சொல்லல.  இதை என்னன்னு வெளிய சொல்லுவேன்?  எனக்கே அசிங்கமாயிருந்துச்சு… அவள் பேசனத கேட்டு.  விருப்பமில்லாமதான… நீங்களும் என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க?”

“அத்தையோட விருப்பத்துக்காக, அவங்க சொன்னாங்கன்னுதான கல்யாணம் பண்ணீங்க?   என்னை பிடிக்காம கல்யாணம் பண்ணதாலதான் என்கிட்ட பேசாம இருக்கீங்களோ?  நான் உங்களுக்கு பொருத்தமில்லையோ?  உங்க ஸ்டேட்டஸ்க்கு நான் மேட்ச் இல்லையோன்னு என்னையே போட்டு வருத்திட்டிருந்த சமயத்துல ரக்‌ஷியும் இப்படி பேசினதும் எனக்கே என்னை நினைச்சி அசிங்கமாயிடுச்சி”.

“நானும் கஷ்டப்பட்டு உங்களையும் கஷ்டப்படுத்தறேனான்னு எனக்கு வருத்தமாயிடுச்சு…” என பேசமுடியாமல் தேம்பினாள் அன்றைய நினைவில்.

அவளை இழுத்து அணைத்துக் கொண்டவன் அழக் கூடாது என அவளது முதுகை வருடி கொடுத்து கண்களைத் துடைத்து விட்டான்.  அவள் சொல்வது எல்லாம் உண்மைதானே.

இதுவரை இவளை நான் மதித்தது கூட இல்லை.  எந்த உரிமையில் இவளிடம் ஏன் என்னிடம் இதையெல்லாம் பகிரவில்லை என கேட்கிறேன் நான் என தன்னையே மனதளவில் கடிந்து கொண்டான்.

இவ இத்தனை நாள் மனசுல இதையெல்லாம் வச்சு மருகிட்டிருந்தாளா?  என்னை மட்டுமே நினைச்சு இவளை நான் கவனிக்காம புரிஞ்சிக்காம கஷ்டப்படுத்திட்டனே என அவனை எண்ணி அவனுக்கே கோவம் வந்தது.

அவன்மீது சாய்ந்த நிலையிலேயே கண்ணீர் வடித்தவள், சில நிமிடங்களில் தன்னை சுதாரித்து அவனிடமிருந்து நகர்ந்து அமர்ந்தாள்.  அவளது கைகளை ஆதுரமாக பற்றியவன், அவளைப் பார்த்து “ஸாரி…  நான் உன்னைக் கஷ்டப்படுத்தனும்னு நினைச்சு உன்கிட்ட பேசாம இருக்கல. என்னோட இயல்பே அதுதான்” என்றான்.

அவன் சொல்வது புரியாமல் புருவம் சுருக்கி அவனைப் பார்த்தாள்.

“நிஜமாதான் சொல்றேன்.  நம்ம ஹாஸ்பிட்டல்லயே என்னை நீ பார்த்திருப்பே.  எந்த லேடி ஸ்டாப் கூடயாவது அனாவசியமா பேசி பார்த்திருக்கியா…?”

இல்லை என தலையசைத்தாள்.  அது அவளுக்கும் தெரியும்தானே.  ஏன்? அவளிடம் கூட ஹாஸ்பிட்டலில் வேலையின் போது தேவைக்கு மேல் பேசியதில்லை.

“என்னைப்பத்தி புல்லா… சொன்னாதான்… உனக்குப் புரியும்” என்றவன், அவனது சிறிய வயதில், அவனது தந்தையால் அவர்களது வாழ்க்கையில் நடந்த கசப்பான அனுபவங்களை எல்லாம் அவளிடம் பகிர்ந்தான்.

“எனக்கு விவரம் தெரிஞ்ச வயசுல இருந்தே பொண்ணுங்கனாலே பிடிக்காம போயிடுச்சு” என்றவன் ஆழ மூச்செடுத்துவிட்டு “நீ கேட்கலாம் உங்க அம்மா பாட்டிலாமும் பொம்பளைங்கதானேன்னு.  அவங்க என் அப்பாவால பட்ட கஷ்டத்தை கண்ணால பார்த்து வளர்ந்ததாலதான் எனக்கு பொண்ணுங்கனாலே பிடித்தமில்லாம போயிடுச்சு.  ஏன்னு தெரியாமயே தானாவே மனசுல ஒரு வெறுப்பு வளர்ந்துடுச்சு”.

“என் அப்பாவுக்கு கல்யாணம் ஆகி குழந்தையிருக்குன்னு தெரிஞ்சும், அவரோட வீக்னெஸ புரிஞ்சு அவரை மயக்கி, குடும்பத்திலேர்ந்து பிரிச்சு, டைவர்ஸ் வாங்க வச்சு, இரண்டாவதா கல்யாணம் பண்ணிக்கிட்டவங்களும் ஒரு பொம்பளைதானே”.

“அவங்களுக்கு தெரியாதா?  இவருக்கு ஏற்கனவே மனைவி இருக்காங்க.  குடும்பம் இருக்கு. குழந்தையிருக்குன்னு.  தெரிஞ்சும் பண்ணியிருக்காங்கன்னா, எவ்வளவு கீழ்தரமானவங்களா இருப்பாங்க?”

“உனக்கு தெரியுமா?  எனக்கு அப்பதான் விவரம் தெரியற வயசு.  என்கூட ஸ்கூல்ல படிக்கற பசங்க எல்லாம் அவங்க அப்பாவோட ஸ்கூலுக்கு  வரும்போது, நான் எப்படி ஏங்கியிருக்கேன்னு? என் அப்பாவும் என்னோட வர மாட்டாரா?  அவரோட கையை பிடிச்சிகிட்டு நான் ஸகூல்கு போகமாட்டேனான்னு?”

“அம்மாவும் எப்பவும் அப்பாவ நினைச்சு அழுதுகிட்டே இருப்பாங்க.  அரவிந்தன் அப்ப அம்மா வயத்துல இருந்தான்.  அது வார்த்தையால சொல்லமுடியாத கஷ்டகாலம் எங்க வாழ்க்கையில.  எனக்கு அப்பா வேணும்னு தோணினாலும் அம்மாகிட்டயோ, பாட்டி கிட்டயோ போய் கேட்க முடியாது.

எனக்கு அப்ப ஓரளவு விவரம் தெரியும்.  அப்பா  விட்டுட்டு போயிட்டாங்க.  வரமாட்டாங்க.  அதான் அம்மா அழறாங்க. நாமளும் அப்பாவை கேட்டு அம்மாவை அழ வைக்க கூடாதுன்னு கேட்கமாட்டேன்”.

“தாத்தா என்கிட்ட சொல்லிட்டேயிருப்பாங்க.  அரவிந்தன் பிறந்த சமயம் அது.  நல்லா நினைவிருக்கு.  இனி நீதான் உன் அம்மாவ, தம்பிய எல்லாம் பார்த்துக்கனும்னு சொல்லுவாங்க…”

“அவர் சொல்லி சொல்லி அப்படியே வளர்ந்ததாலயோ என்னவோ?  சின்ன வயசுலயே நான் மெர்ச்சூர்டா ஆன மாதிரி ஒரு பீல்.  எதுக்கும் எப்பவும் அழுது அடம் பண்ணி அம்மாவ தொந்தரவு பண்ண மாட்டேன்.  பெரிய மனுஷன் மாதிரி நடந்துக்கறேன்னு பாட்டி அடிக்கடி சொல்லுவாங்க”.

“அரவிந்த் பிறந்ததுக்கு அப்புறம் கூட அப்பா வந்து பார்க்கல.  சொல்லப் போனா அவன் அப்பாவ பார்த்ததே இல்ல.  அவனுக்கு எல்லாமே  நானும் அம்மாவும் தான்”.

“பாட்டி தாத்தா இருந்த வரைக்கும் அவன் அவங்க செல்லம்.  அதனால பெரிசா யாரையும் தேடமாட்டான்.  அம்மா எப்பவும் அவனை ரொம்ப கேர் எடுத்துப் பார்த்துப்பாங்க”.

அமுதினியும் பார்த்திருக்கிறாளே.  இன்றளவும் ஷ்யாமளா அரவிந்தனிடம் அதிக அன்பு செலுத்துவதை.  அவளால் இப்பொழுது ஏனென்று உணரமுடிந்தது.  கணவனுக்கு அதனால் ஏதும் வருத்தமோ என அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

அவளது பார்வையை உணர்ந்தவன், “ஹேய்… அதுக்காக அம்மாக்கு என் மேல பாசம் இல்லன்னு அர்த்தம் இல்ல.  அவன் மேல எக்ஸ்ட்ரா கேர் இருக்கும்.  அதை என்னாலயும் புரிஞ்சிக்க முடிஞ்சது…”

“அம்மா அப்பதான் அவங்க வேலையில முன்னேற ஆரம்பிச்சிருந்த காலம்னு சொல்லுவாங்க.  நாந்தான் அரவிந்தோட முழு நேரமும் இருப்பேன்.  அதனாலேயே என்னோட க்ளோஸாகிட்டான்னு கூட சொல்லலாம்”.

“வளர வளர அம்மா தாத்தா பாட்டியவிட என்னைதான் அதிகம் தேடுவான்.  எப்பவும் அரவிந்த் எங்களுக்கு ஸ்பெஷல்தான்.  ஏன்னு உன்னால புரிஞ்சுக்க முடியுதா?” என்றான் அவளைப் பார்த்து.

“இதை எல்லாம் பார்த்து வளர்ந்ததாலயோ என்னவோ எனக்கு பொண்ணுங்க மேல பெருசா அபிப்பிராயமோ, மதிப்போ இருந்ததில்ல.  ஸ்கூல்லயும், காலேஜ்லயும் கூட பொம்பளை பிள்ளைங்கன்னாலே ஒதுங்கிப் போயிடுவேன்.  அவங்களா பேசினாலும் ஆர்வம் காட்டமாட்டேன்”.

“அதுவும் காலேஜ்ல சில கேர்ள்ஸ் பப், டிரிங்ஸ், டிஸ்கோத்தேன்னு போறது, பாய் ஃபிரண்ட்ஸ்ன்ற பேர்ல ஊர் சுத்தறது எல்லாம் பார்த்ததுக்கு அப்புறம் இன்னும் வெறுப்பு தான் அதிகமானது”.

“அதனாலதான் அம்மா கல்யாணத்தை பத்தி பேசும் போதெல்லாம், அதுல இன்ரெஸ்ட் காமிக்காம இருந்தேன்.  அவங்க உன்னைக் கைகாட்டும் போதும் இன்ரெஸ்ட் இல்லாம அவங்க சொன்னாங்கன்னுதான் கல்யாணம் பண்ணிகிட்டேன்.  நீன்னு இல்ல, அந்த இடத்துல எந்த பொண்ணாயிருந்தாலும் கல்யாணம் பண்ணியிருப்பேன்.  கல்யாணம்னா என்னன்னு தெரியாத சின்ன பையன் இல்ல நான்”.

“கல்யாணத்துக்கு அம்மாக்கு ஓகே சொன்னதும், என்னை எல்லாத்துக்கும் தயார் படுத்திக்கனும்னு முயற்சி பண்ணிட்டுதான் இருந்தேன்.   இருந்தும் என்னால அந்த எண்ணத்துல இருந்து சட்டுன்னு வெளிய வர முடியல”.

“ஆப்டர் மேரேஜ் உன் கிட்ட பேசனும், இயல்பாயிருக்கனும்னு நிறைய தடவை நினைப்பேன்.  ஆனால் முடியறதில்ல.  ஒரு அடி எடுத்து வச்சா ஒன்பது அடி சருக்குதுன்னு சொல்வாங்களே அது மாதிரி.  என்னவோ எனக்குள்ள இருக்கற தயக்கம் உன்கிட்ட நெருங்க விடல”.

“மத்தபடி நீ நினைக்கறமாதிரி, பீல் பண்ற மாதிரி எனக்குள்ள எதுவும் இல்ல.  நான் சொல்ல வரது உனக்குப் புரியுதா…?” என்றான் அவனது தவிப்பையெல்லாம் கண்களில் தேக்கி.

“உன்னை வேதனைப்படுத்தனும் கஷ்டப்படுத்தனும்னு நான் என்னைக்கும் நினைச்சதில்ல.  நீ நினைக்கறது போல அந்தஸ்து, வசதிலாம் பார்த்திருந்தா இந்த கல்யாணத்துக்கே அம்மாகிட்ட ஓகே சொல்லியிருக்க மாட்டேன்”.

அவன் பேசியதைக் கேட்டு அவளது கண்களில் கண்ணீர் நிற்காமல் வழிந்து கொண்டேயிருந்தது.  பிறந்ததிலிருந்து தாய் தந்தை இருவரின் அரவணைப்பிலும், அன்பிலும் வளர்ந்தவளுக்கு அவனுடைய வேதனையை புரிந்து மனம் வருந்தியது.

கணவனுக்கு என்ன ஆறுதல் சொல்வது என தெரியாமல் பார்த்திருந்தாள்.  கைநீட்டி அவளது கண்ணீரைத் துடைத்து விட்டவன், “ம்ப்ச் அழக் கூடாது. எதையும் நீ ஸ்போர்டிவா எடுத்துக்கறதும், தைரியமா இருக்கறதும்தான் உன்கிட்ட எனக்குப் பிடிச்சதே.  இப்படி அழக்கூடாது…” என்று அவளை சமாதானப்படுத்தினான்.

“ரக்‌ஷி பிரச்சனையினால, இன்னைக்கு அம்மா அரவிந்த ரொம்ப திட்டிட்டாங்க.  எனக்கும் அவன் மேல வருத்தம்தான்.  அம்மா பேசினதால அவன் பயங்கர அப்சப்ட்.  நானும் பேசினா நல்லாயிருக்காதுன்னுதான் விட்டுட்டேன்”.

“அவள் உன்கிட்ட போன்ல பேசின முறையும் தப்புதான.  நான் கண்டிக்கிறேன் அவளை.  சின்னப் பொண்ணுன்னு நினைச்சா என்னல்லாம் பேசியிருக்கா….?” என கோவப்பட்டான்.

“இப்பதான் அவளே உயிர் பொழைச்சு வந்திருக்கா…, நானே இதை அவள்கிட்ட பேசிக்கறேன், நீங்க இதுல தலையிட வேண்டாமே” என்றாள் கெஞ்சலாக அவனைப் பார்த்து.

கௌதம் அவளை முறைத்தான்.

“தப்பா நினைக்காதீங்க.  உங்களை மதிக்காம பேசல.  பொறுமையா நானே அவள்கிட்ட பேசிக்கறேன்னுதான் சொன்னேன்” என்றாள் சமாதானமாக.

சரி எனத் தலையசைத்தான்.  அவள் படுப்பதற்காக எழுந்ததும், “அவள் கைகளைப் பிடித்து தடுத்தவன், தயங்கியபடியே இங்கே..யே என்கூட படு…த்து….க்கோ….”. என்றான் வெளிவராத குரலில் பாதி வெட்கம் கலந்து.

அவனையே பார்த்திருந்தாள்.  அவனே இறங்கி வந்து சகஜமாக பேச முயலும் போது தான் முறுக்கிக் கொள்வதில் அர்த்தமில்லை என நினைத்தவள், சரி எனத் தலையசைத்து தலையணையும் போர்வையும் எடுத்து வந்து கட்டிலில் போட்டு படுத்துக் கொண்டாள் அவனுடன்.

எங்கே மறுத்துப் பேசுவாளோ எனப் பயந்து இருந்தவனுக்கு, அவள் ஒன்றும் பேசாமல் வந்து படுத்துக்கொண்டது பெரும் ஆசுவாசத்தைக் கொடுத்தது.

ஹப்பா… என்ற ஆசுவாசம்தான் அவனுக்கு.  நீண்ட நாள் எண்ணம் இன்று ஈடேறிவிட்டதுபோல் நிம்மதி பிறந்தது மனதுள்.  இத்தனை நாட்கள் மனைவியை தன்னுடன் வந்து படுத்துக் கொள்ளுமாறு அழைக்க அவா இருந்தாலும் வாய்விட்டு வெளிப்படையாக கூப்பிட முடியாமல் கூச்சத்தில் தடுமாறிக் கொண்டிருந்தான்.  அந்த குறை இன்று தீர்ந்திருந்தது.

அமுதினி அவன் பக்கமாகத்தான் பார்த்து படுத்திருந்தாள்.  அவளைப் பார்த்துக் கொண்டே படுத்தவன் அவள் கைகளை எடுத்து தன்னை சுற்றி அணைவாகப் போட்டுக் கொண்டு அவளைப் பார்த்து முறுவலித்தவன் “கண்ணைமூடி… நிம்மதியா தூங்கு” என்றான்.

அவனைப் பார்த்து புன்னகைத்தவள் கண்களை மூடி நிம்மதியாக உறங்க முற்பட்டாள்.  இத்தனை நாட்கள் மனைவி தூங்கிய பின் அவளருகில் சென்று சத்தமில்லாமல் ரசித்தவன், இன்று அவனது அருகிலேயே படுத்திருந்தவளைப் பார்த்து ரசித்துக் கொண்டே உறங்க முற்பட்டான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!