Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Vinmeengalin Sathiraattam

விண்மீன்களின் சதிராட்டம் – 12

அத்தியாயம் – 12

விஸ்வா பில்டர்ஸ் என்ற பெயர் தாங்கிய அந்த பெரிய கட்டிடத்தின் உள் சென்று தன் பைக்கை நிறுத்தினான் ராஜேந்திரன். மனதில் ஒரு உற்சாகம், பார்வையில் ஒரு ஆர்வம். ஹெல்மெட்டைக் கழட்டி வண்டியில் மாடியவன், விரலால் முடியைக் கோதி சரி செய்தவாறே, லிஃப்டில் மூன்றாவது தளத்தை அடைந்தான். அங்கிருந்த ரிசப்ஷனிஸ்டைப் பார்த்ததும், அவள் புன்னகைத்து, “சார் உள்ளதான் இருக்காங்க. நீங்க போய் பாருங்க.”, என்றாள் புன்னகைத்து.

வந்தவன், எதிர்புறம் அக்கௌண்ட்ஸ் செக்ஷனைப் பார்த்தவாறே, விஸ்வரூபன், ஜி,எம் என்று போட்டிருந்த அறைக் கதவைத் தட்டினான். அதுவரை இருந்த ஆர்வம் வடிந்தது. அவள் இருக்கை காலியாக இருந்தது.

உள்ளிருந்து அழைப்பு சத்தம் கேட்கவும், உள்ளே சென்றான்.



Advertisement

“ஹே, ராஜா, வா வா. கல்யாண அலைச்சல் எல்லாம் முடிஞ்சுதா ?”, அவனின் M.B.A  தோழனும், முக்கியமான க்ளையண்ட்டுமான விஸ்வா புன்னகையுடன் வரவேற்றான்.

வரவழைத்துக்கொண்ட உற்சாகத்துடன், “ஆச்சு விஸ்வா, ஹனிமூன் போயிருக்காங்க. இப்ப பெண்டிங் வேலையெல்லாம் பார்த்துகிட்டு இருக்கேன்.”

பேச்சு தொழில் சார்ந்து சென்றது. விஸ்வாவின் புது ப்ராஜெக்ட், அதற்கான பட்ஜெட் என்று பேசி விடை பெற்று வெளியே வந்தவன் கண்கள் மீண்டும் அவளின் காலி இருக்கையைப் பார்த்து நொந்தது. ‘சே..அவளைப் பார்க்கணும்னுதான் வந்ததே. அதுக்கு கூட குடுப்பினை இல்லை போலவே.’ என்று சலித்தவாறே வெளியே வந்தவன் ரிசெப்ஷனில் அவளைக் கண்டு முகமலர்ந்தான்.

Advertisement

அவனைப் பார்த்து, “ராஜன் சார். சௌக்கியமா ?”, என்றாள்.

Advertisement

“மஞ்சரி மேடத்துக்கு என்னை அடையாளம் தெரியுதா ? ஒரு வேளை வேட்டி சட்டை போட்டாதான் தெரியுமோன்னு நெனச்சேன்.”

“அப்பா, இன்னும் அந்த ஒரு தப்பை பிடிச்சிட்டு தொங்கறீங்களா ?”, பொய்யாக அலுத்துக்கொண்டாள்.

“பின்ன, ஒரு செகண்ட்ல யாருன்னு கேட்டு என் ஃபுசைப் பிடிங்கிட்டீங்களே, மறக்க முடியலையே.”, நெஞ்சில் கை வைத்து முகத்தில் சோகக் களையைக் கொண்டு வந்து அவன் சொன்ன பாவத்தில் கல கல வென்று சிரித்தாள் மஞ்சரி.

Advertisement

சட்டென்று சிரிப்பு நின்று, அவள் பார்வை அவன் பின்புறம் செல்லவும், “ஹே, அப்பவே கிளம்பின, இங்க நிக்கற?”, என்று அவன் தோளில் கைபோட்டுக் கேட்டான் விஸ்வா.

சுதாரித்தவன், ‘இல்லை விஸ்வா, சாமி வரம் குடுத்தாலும், பூசாரியும் குடுத்தாதானே செக் ரிலீஸ் ஆகும். அதான்,சாமி உங்களைப் பார்த்துட்டு, அப்படியே பூசாரிக்கும் வணக்கம் வெச்சிகிட்டிருந்தேன். (Alprazolam) ”, என்று சொன்னவாறே இருவரையும் பார்த்தான்.

மஞ்சரியின் கண்ணில் ஒரு மெச்சுதல் தெரிந்தது. விஸ்வாவை பார்த்து “சீட்டுக்குப் போறேன் சார்.” என்றவள், அவனையும் பார்த்து தலையசைத்துச் சென்றாள்.

ராஜேந்திரன், விஸ்வாவுடன் லிஃப்டில் ஏறினான். “என்ன ராஜா, நீ அப்படியெல்லாம் பொண்ணுங்ககிட்ட சிரிச்சு பேசமாட்டியே ? கேட்டா எனக்கு தங்கச்சி இருக்காபா, அப்ப நான் ஒழுங்கா இருக்கணும் லெக்சர் அடிப்ப ?”, சந்தேகமாய்க் கேட்டான் விஸ்வா.

தலை சற்றே சாய்த்து, ஒற்றை கண்ணை மூடி, “தங்கச்சிக்கு கல்யாணம் ஆயிட்சிபா.”, என்று ஜனகராஜ் வாய்சில் கூறினான் ராஜேந்திரன்.

அவன் மிமிக்ரியில் சத்தமாய் சிரித்த விஸ்வா, “டேய்…என்னாச்சு உனக்கு ?அது என் ஸ்டாஃப்.”, என்றான்.

“எனக்கு சொந்தகார பொண்ணு.”, பெருமிதமாய் கூறியவாறே, லிஃப்டிலிருந்து வெளியே வந்தான். பின்னோடே வந்த விஸ்வா, ஆச்சர்யத்துடன் புருவம் உயர்த்தி, “இத்தனை நாள் சொன்னதே இல்லை ? அவளுமே உன்னை சார்னுதானே கூப்பிட்டு பார்த்திருக்கேன் ?”

“இப்பதான்பா சொந்தமாச்சு. எங்க மாப்பிள்ளையோட அத்தை பொண்ணு. கல்யாணத்துலதான் தெரிஞ்சது.”, விரிந்த புன்னகையோடே சொன்னான் ராஜன்.

அவன் தோளைத் தட்டியவன், “ஓ..அதான் ஐயா தைரியமா களத்துல இறங்குறீங்களோ ? முன்னாடி எல்லாம் சொல்லுவியே, எங்கம்மா முறைச்சி பாக்கறமாறியே இருக்குடா, நான் என்னத்த பொண்ணுங்களை பார்க்கன்னு ? இப்ப அம்மா முறைக்கலையோ ?”, கேலியாய்க் கேட்டான் விஸ்வா.

“சேச்சே, அம்மா வாழ்த்தறா மாதிரிதாண்டா இருக்கு.”

“வழியிது, துடை. ஆனா ராஜா, மஞ்சரி கூட கடலை போடணும்னா வெளியே எங்க்காச்சம் போடு, ஆபிஸ்ல வேண்டாம். அது அவளுக்கு தேவையில்லாத பிரச்சனைய குடுக்கும். “

“தெரியும் விஸ்வா, இன்னும் அவளுக்கே தெரியாது, எனக்கு அவ மேல இருக்க இன்ட்ரஸ்ட். அவளுக்கும் இருக்குமான்னு தெரியலை. பார்க்கலாம்.”

“உன் மேல இருக்க நம்பிக்கையாலதான் நானும் ஒண்ணும் சொல்லலை. நல்ல பொண்ணு, இரண்டு பேருக்கும் நல்லாவே செட் ஆகும். ட்ரை பண்ணு. என்கிட்ட ஒபினியன் கேட்டா, நல்லவிதமா  நாலு வார்த்தை சொல்றேன்.”, விஸ்வா அவனின் ஒப்புதலைக் கூறினான்.

“ஹ்ம்ம்… மஞ்சரி அப்படியெல்லாம் கருத்துக் கணிப்பு கேட்கமாட்டா.  பிடிக்குதோ இல்லையோ, அவளேதான் முடிவெடுப்பா.”, ரோஷமாய் சொன்னான் ராஜேந்திரன்.

“அடேயப்பா, அவ்ளோ தெரியுமா? சரி சீக்கிரமே நல்ல நியூஸ் சொல்லு.”, என்று விடையளித்தான் விஸ்வா.

மூணாறு சென்று திரும்பி வந்து இரண்டு  நாட்களாக, வேலை கல்லூரி என்று தினப்படி வாழ்க்கைக்கு பழகியிருந்தனர் விக்ரமும் வேதாவும். காலையில் மாலினியுடன் சேர்ந்து அவளால் முடிந்த உதவிகளை செய்துவிட்டு, கல்லூரிக்குச் செல்லுவாள். மாலையில், வேதா இரவுக்கான சமையலை ஆரம்பிக்க, பர்வதம்மா நிம்மதியாக பிள்ளைகளுடன் கோவிலுக்கு சென்று வருவார். மாலினி அவளை ஏழு மணிக்கெல்லாம் படிக்க அனுப்பிவிட்டு மற்றதைப் பார்த்துக்கொள்வாள்.

தேனிலவின் தித்திப்பு இன்னுமும் வாழ்வில் இருந்தது. விக்ரம் வாங்கியிருந்த புத்தகங்களைப் படித்து செயல்முறைத் தேர்வுகளில் இருவரும் மூணாறில் தேறியிருந்தனர். வேதாவிற்கு  விக்ரம் ‘வீரு’ வாகியிருந்தான். ஒருவொருக்கொருவர் அவர்களின் பிடித்தங்கள், ஆசை, நிராசைகள், குடும்பத்தினர், கணக்கு வழக்குகள் என்று நிறைய பேசியும் இருந்தனர்.  எந்த இடையூருகளும் இல்லாமல், குடும்பத்தினர் முன் போட வேண்டிய முகமூடிகள் எதுவுமின்றி , முழு நேரமும் ஒன்றாக இருந்தது, ஒரு நல்ல புரிதலைக் கொடுத்திருந்தது.

மூன்றாம் நாள் காலை மாதவிலக்கானாள் வேதா. பர்வத்ம்மாவிற்கு தெரிந்தபோது உடனே அவர் முகத்தில் ஒரு நிராசையும் ஏமாற்றமும் வந்து போனது. முதலில் அவளுக்குப் புரியவில்லை. கல்லூரிக்கு கிளம்பிவிட்டாள். அப்போதுதான் காரணம் ஃப்ளாஷ் அடித்தது. அடக் கடவுளே என்று தலையில் தட்டிக்கொண்டு சென்றாள். சற்று நேரத்தில் விக்ரமும் ராகவனும் காலை உணவருந்த அமர, பர்வதம்மா பரிமாரிக்கொண்டே, ‘டேய், விக்ரம் . என்னடா வேதா வீட்டு விலக்காயிட்டா ?”

விக்ரமிற்கு புரியவில்லை. அதற்கு அவன் என்ன செய்யமுடியும் ? முதலில் அண்ணன் எதிரில் இதென்ன பேச்சு என்றும் எரிச்சல். “இப்ப அதுபத்தி என்ன ? “ என்றான் சாப்பிட்டவாறே.

“என்னவா, மாசமாவான்னு பார்த்தா உக்கார்ந்துட்டா, என்னன்னு கேக்கக்கூடாதா ? மூணாரெல்லாம் போய்வந்தீங்களே ?”

“மா…விளையாட்றீங்களா ? கல்யாணம் முடிஞ்சே ரெண்டு வாரம்தான் ஆகுது. இப்படி அவகிட்ட கேட்டுவெக்காதீங்க.  உங்களுக்கு கேக்கணும்னா போய் அந்த ஜோசியரையும், பூசாரியையும்  போய் கேளுங்க.” என்றான்.

“அவங்க எல்லாம் அவங்க பங்கை முடிச்சிட்டாங்க, நீங்க இரண்டு பேரும் உங்க வேலையை சரியா செய்யரீங்களா ?”

“மா “, இந்த முறை இரு மகன்களும் கத்திவிட்டனர். மாலினி அடுக்களையிலிருந்து வந்தவள், பர்வதம்மா பார்க்காதவாறு தலையில் அடித்துக்கொண்டு , அவரை கைபிடித்து இழுத்துக்கொண்டு சென்றாள்.

ஒரிரு சங்கடமான நொடிகளுக்குப்பின், ராகவன் , “விக்ரம், விடு அம்மாக்கு கொஞ்ச நாளா கூறு கெட்டுப்போச்சு. அந்த ஜோசியர் சொன்னதுலர்ந்து கிலி பிடிச்சமாதிரி இதே யோசனையில் இருக்காங்க.”

“முடியலைண்ணா, என்னவோ சினைக்கு விட்ட மாடுங்க மாதிரி தோணுது. நானும் எவ்ளோதான் பொறுத்துப்போறது ?”,  அடிப்பட்ட குரலில் கேட்கவும் ராகவனுக்கும் வருத்தமாகியது. “ மாலினி உள்ள பாடமெடுத்துகிட்டு இருப்பாடா…கொஞ்சம் அமைதியாவாங்க.”

“விக்ரம் எல்லார் வாழ்க்கைலயும் நடக்கறதுதான், பின்னாடி யோசிக்கும்போது சிரிப்புவரும். உனக்கு இப்படின்னா, எனக்கு கல்யாணமான புதுசுல, மாலினி எங்க மாசமாகிடுவாளோன்னு அம்மாக்கு பயம். கடனெல்லாம் அடைக்கணுமே, குழந்தை வந்துட்டா இன்னும் செலவாச்சேன்னு அவளைவிட டேட் எல்லாம் கரக்டா கணக்கு வெச்சிருந்தாங்க.  அழகான பொண்டாட்டி பக்கதுல இருந்தாலும் காண்டம் வாங்க பட்ஜட் போட்ட காலம்டா…இப்ப நெனச்சா சிரிப்பு வருது. அதுனால நீ ஃப்ரீயா விடு”, என்று கண்ணடித்தான் ராகவன்.

அண்ணன் இப்படியெல்லாம் பேசியதில்லை. அம்மா அவர் எதிரில் கேட்ட முட்டாத்தனத்தால், தனக்காத்தான் அவர் அந்தரங்கத்தையும் வலிய பகிர்ந்து கொள்கிறார் என்று புரிந்தது. சற்று தேறிக்கொண்டவன், ஒரு அரைகுறை புன்னகையோடே, ‘என்னவோ போங்கண்ணா…”, என்று கை கழுவி, உடனே அலுவலகதிற்கு கிளம்பினான்.

உள்ளே மாலினியோ, பர்வதம்மாவை மந்தரித்துக்கொண்டிருந்தாள். “ அத்தை, உங்க அவசரத்துக்கு அரச மரத்த சுத்திவந்த உடனே பிள்ளை கேட்டா எப்படி ? இந்த மாதிரி அவங்ககிட்ட கேட்டு இன்னும் டென்ஷன் ஏத்தினா, பிள்ளை தங்குமா ? நீங்களே சொல்லுங்க. நம்ம பார்த்துகிட்டுதான இருக்கோம். ரெண்டு பேரும் சந்தோஷமா இருக்காங்கதானே. இப்போதைக்கு நீங்க சாமிகிட்ட வேண்டறத மட்டும் செய்ங்க. அவங்களை ஃப்ரீயா விடுங்க. உங்களுக்கு என்ன வேண்டுதலோ, நீங்க செய்யறேன்னு வேண்டிக்கோங்க. அவங்கள இதுல இழுக்காதீங்க. சும்மா விரதம் , வேண்டுதல்னு அவங்கள படுத்தாமா இருந்தாதான் நீங்க எதிர்பாக்கறது நடக்கும். சரியா?”

கொஞ்சம் அமைதியானவர், இவர்களை விட்டு, அம்மனை நச்சரிப்பதற்கு தயாரானார்.

அந்த வாரம் இரண்டாவது சனிக்கிழமை என்று அனைவருமே வீட்டில் இருந்தனர்.  தலைக்கு குளித்து முடித்து, ட்ரையர் எடுக்க வந்தாள் வேதா. திரும்ப உள்ளே போகையில், “சித்தி, இருங்க சித்தா உங்களுக்கு ட்ரையர் போடுவாரு. போங்க சித்தா..”, என்றாள் சிந்து அதிகாரமாக.

எல்லோரும் அவனைப் பார்க்க, விக்ரம் திருதிருத்தான். சில வாரங்கள் கழித்து அவனை அப்படி பார்க்க, வேதாவிற்கு புன்னகை மிளிர்ந்தது.

“நான் ஏன் போடணும் ?”

“ஹான்…சித்திக்கு நீளமா முடி இருக்கணும்னு எங்கிட்ட சொன்னபோது, நான் சொனேன்ல்ல, அப்பா எனக்கு போட்டுவிடற மாதிரி, நீ சித்திக்கு போடணும்னு. அப்போ, ஓ அதவிட வேற என்ன வேலை குட்டி எனக்குன்னு ஈன்னு பல்ல காமிச்ச, இப்ப ஏன்னு கேக்கற ?”, சிந்து கோபமாக கேட்டாள்.

சாப்பாடு மேசையில்,கீரை கிள்ளிக்கொண்டிருந்த பர்வதம்மா அவனை பார்வையால் பஸ்மமாக்கிக் கொண்டிருந்தார். இங்கே, சோபாவில், அண்ணன், பேப்பருக்கு பின்னே மறைந்திருந்தாலும்,உடல் சத்தமில்லாமல் குலுங்கிக்கொண்டிருந்தது தெரிந்தது.

சிரிப்பை அடக்கி, மாலினி, ‘சிந்து…விடு” என்றாள்.

“மா, நீங்க தான சொல்வீங்க, ஒரு விஷயம் செய்ய ஒத்துக்கிட்டா, செய்யணும்னு ? இப்போ சித்தா மட்டும் இப்படி பண்ணலாமா ?”, என்று நியாயம் கேட்டு மாலினியையும் லாக் செய்தாள்.

மூணாரில் செய்தவன்தான், ஆனால் எங்கிருந்து எல்லார் முன்பும் வேதாவிற்கு முடி காயவைக்க உள்ளே செல்லமுடியும் ? ‘குட்டிச்சாத்தான், இப்படியா போட்டு உடைக்கும்.’, என்று சிந்துவை அர்ச்சனை செய்து ஒரு அவஸ்தைப் பார்வை வேதாவிடம் செலுத்தினான்.

“கரக்ட் சிந்துமா, ஆனா எனக்கு என் முடிய நானேதான் காய வெக்கணும். என் அம்மாவைக்கூட விடமாட்டேன். அதான் உங்க சித்தப்பாவையும் வேண்டாம்னு சொல்லிட்டேன். அதான் அவங்க செய்யலை. சரியா ?”, என்று விளக்கிவிட்டு, இத சமாளிக்க துப்பில்லையா என்று விக்ரமை ஒரு பார்வை பார்த்துச் சென்றாள்.

மாலினி சிந்துவை உள்ளே அழைத்துச்செல்ல, பர்வதம்மா “குழந்தைகிட்ட என்ன பேசறதுன்னு விவஸ்தையே கிடையாதுடா உனக்கு. அதான் இப்படி நடுகூடத்துல பல்பு வாங்கற.”, என்று அவர் பங்குக்கு நக்கலடித்துவிட்டு போனார்.

மதியம் உணவருந்திக்கொண்டிருந்தனர் ராகவனும், விக்ரமும். வேதா பரிமாறிக்கொண்டிருந்தாள். விடுமுறை  நாள் சலுகையாக சோபாவில் அமர்ந்து சிந்துவிற்கு ஊட்டிக்கொண்டிருந்தார் பர்வதம்மா. மாலினி சித்துவிற்கு.

திடீரென்று, ‘போறும் முடியலை பாட்டி, சினைக்கு விட்ட மாடு மாதிரி இருக்கு எனக்கு…’, என்றாள் சிந்து.

‘என்னாதூ….’, என்று கத்தினார் பர்வதம்.

சாப்பிட்டுக்கொண்டிருந்த ராகவன் கையில் எடுத்து சாப்பாடு அப்படியே நிற்க, மாலினியை அவசரமாய்ப் பார்த்தான். விக்ரமோ, உணவு முழுங்கும்போது , இது கேட்கவும் புரைக்கேறியது. இதன் பின்னணி தெரியாத வேதாவோ, கவனம் விக்ரமிடம் திரும்ப, அவனுக்கு தண்ணி கொடுத்தாள்.

“யார்றீ சொல்லி கொடுத்தது ?”, பர்வதம்மா சிந்துவிடம் பாய்ந்தார்.

“அண்ணைக்கு சித்தாதான் சொல்லிகிட்டு இருந்தார்.”, தோளைக் குலுக்கிச் சொன்னாள் சிந்து.

“செத்தேன் நானு. இன்னைக்கு என்னை பொங்கல் வச்சிட்டுதான் விடுவா போல..” என்று உள்ளுக்குள் அலறினான் விக்ரம்.

“ஏண்டா, எத்தனவாட்டி சொன்னாலும் புத்தியே கிடையாதா உனக்கு…”, என்று அடுத்து அவனிடம் பாய்ந்தார்.

“அத்தை, விக்ரம் எங்ககிட்ட, மாத்தி மாத்தி விருந்துக்கு போய் சினை மாடு மாதிரி இருக்கு வயறுன்னு சொல்லிகிட்டு இருந்தான். இவதான் அரையும் குறையுமா கேட்டுட்டு தப்பா சொல்றா, நீங்க அங்க ஏன் பாயரீங்க.”, என்ற மாலினி

“சிந்து, புரியாத வார்த்தைங்க எது கேட்டாலும், எங்கிட்ட அர்த்தம் கேக்கணும்னு சொன்னென்ல உனக்கு ? பெரியவங்க மட்டும்தான் சில வார்த்தை பேசணும், குழந்தைங்க பேச கூடாதுன்னு சொல்லிருக்கேன் இல்லை உனக்கு ?”, தண்ணிய குடிச்சிட்டு போய் ஹொம்வொர்க் செய். “, என்று சிந்துவை விரட்டினாள்.

போன மூச்சு, மீண்டது அண்ணனுக்கும் தம்பிக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!