Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

வரம் – 2.1

“வெல்கம் டூ அவர் பிகினிங்க் ( Welcome to our Beginning ) சதீஷ் & சங்கீதா” என்று அழகாய் அலங்கரிக்கப்பட்டிருந்த அந்தப் பதாகையை கண்களில் தோன்றிய வியப்புடன் பார்த்துக் கொண்டே அந்த ஐந்து நட்சத்திர விடுதிக்குள் தன் தமக்கை சங்கீதாவின் கையைப் பற்றிக் கொண்டு நுழைந்தாள் வந்தனா.



Advertisement

“ஹேய் சங்கி மங்கி செம்மையா இருக்கு டி டெக்கரேஷன் எல்லாமே..” என மேடை அலங்காரத்தைக் கண்டு சொக்கிப் போய் வந்தனா வாயைப் பிழக்க,

Advertisement

“எல்லாம் உங்க மாமாவோட ஐடியா தான்.. இப்படித்தான் இருக்கணும்னு ஒவ்வொன்னையும் பார்த்து பார்த்து செஞ்சிருக்காங்க” என்று கூறிய சங்கீதாவின் குரலில் அவளின் காதலனை எண்ணி பெருமிதமே மிதமிஞ்சி இருந்தது.

Advertisement

“ச்சே இவ்ளோ நல்ல ரசனையான மனுஷன், கல்யாண விஷயத்துல மட்டும் சொதப்பிட்டாரு.. சரி விடு. யானைக்கும் அடி சறுக்கும்னு சும்மாவா சொல்லியிருக்காங்க” என சங்கீதாவை ஓரக்கண்ணால் பார்த்து நமுட்டுச் சிரிப்புடன் வந்தனா கூற,

Advertisement

சற்று நேரம் சென்றே அவள் கூறியதற்கான பொருளை விளங்கிக் கொண்ட சங்கீதாவோ, “அடிங்க உன்னை!!!” எனத் தன் தங்கையின் காதைப் பிடித்து வலிக்காமல் திருகினாள்.

அப்போது அவர்கள் பின்னே வந்து கொண்டிருந்த சங்கீதாவின் தமையன் சந்தோஷ், “ஏய் எருமைங்களா!! உங்க சேட்டையெல்லாம் கொஞ்சம் மூட்டை கட்டி வச்சுகிட்டு போய் கெளம்புற வழியை பாருங்க.. இப்போ போய் மூஞ்சிக்கு பெயின்ட் அடிக்க ஆரம்பிச்சா தான் மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வரதுக்குள்ள முடிப்பிங்க… சீக்கிரம் உங்க ரூமுக்கு போங்க.. செகன்ட் ஃப்ளோர் ரூம் நம்பர் 205.. இந்தாங்க சாவி.. எனக்கு இங்க கொஞ்சம் வேலை இருக்கு” என அவர்களை அனுப்பியவன், அங்கிருந்து நகர்ந்து விட,

“இந்த அண்ணனுக்கு கொழுப்பைப் பார்த்தியா?? உன்னோட சேர்த்து என்னையும் கிண்டல் பண்ணிட்டு போகுது.. நானெல்லாம் நேச்சுரல் ப்யூட்டி எனக்கெதுக்கு மேக்கப்” என தன் தமக்கையிடம் வாயாடிக் கொண்டே அவர்களுக்கென ஒதுக்கப்பெற்றிருந்த அறைக்குள் நுழைந்தாள் வந்தனா.

“ரூம் கூட சூப்பரா இருக்கே சங்கி மங்கி!! இங்க பாரேன் ‘வெல்கம் பிரின்செஸ்ன்னு’ மாமா இங்க கூட டெகரேட் பண்ணி வச்சிருக்காங்க.. உன் மூஞ்சிக்கு இதெல்லாம் ஓவர் தான்.. ஆனாலும் நல்லா இருக்கு டி!!” என மெத்தையில் அலங்கரித்து வைத்திருந்ததை பார்த்துக் கொண்டே உற்சாகத்துடன் வந்தனா பேசிக்கொண்டே போக, அப்போது தான் தன் தமக்கையிடம் இருந்து எந்த ஒரு எதிர்வினையும் இல்லை என்பதை உணர்ந்து அவளை நோக்கினாள்.

அங்கு சங்கீதாவோ இவள் பேசுவதை சுத்தமாக கவனிக்காமல், தன் கைப்பையில் எதையோ மும்முரமாக தேடிக் கொண்டிருக்க,

“ஏய் எருமை!! நான் இங்க பேசிகிட்டு இருக்கேன்.. நீ என்னை கண்டுக்காம எதையோ நோண்டிகிட்டு இருக்க?” என அவளைப் போட்டு வந்தனா உலுக்கினாள்.

“ப்ச்!!!” என சலித்துக் கொண்ட சங்கீதா தன் தங்கையை பார்த்து, “என் தங்கப்பிள்ளை தான நீ!! என் போனை கார்லயே மறந்து வச்சிட்டு வந்துட்டேன் டி.. ப்ளீஸ் போய் அதை எடுத்துட்டு வாயேன்.. உங்க மாமா கிட்ட நாம இங்க வந்துட்டோம்னு இன்ஃபார்ம் பண்ணனும்ல” என அவள் தாடையைப் பற்றி கொஞ்ச,

“ஷப்பா இந்த லவ்வர்ஸ் தொல்லை தாங்க முடியலைப்பா.. எப்படியும் இன்னும் ரெண்டு மணி நேரத்துல ஒன்னா தான ஸ்டேஜ்ல நிக்க போறிங்க.. அதுக்குள்ள கடலை போடணுமாக்கும்.. ஏதோ நீ இவ்ளோ கெஞ்சுறதுனால போனா போகுதுன்னு எடுத்துட்டு வரேன்.. ஆனா அதுக்கு பதிலா எங்கப்பாகிட்ட எப்படியாச்சும் பெர்மிஷன் வாங்கி நாளைக்கு என்னையை நம்ம ‘தல’ படத்துக்கு நீ கூட்டிட்டு போகணும்.. டீல் ஓகே வா” என வந்தனா சூழ்நிலையை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு அவளிடம் பேரம் பேச,

சங்கீதாவும் வேறு வழியில்லாமல், “சரி கூட்டிட்டு போறேன்.. இப்போ போய் போன் எடுத்துட்டு வா மா பரதேவதை” என அவளை அனுப்பி வைத்தாள்.

மீண்டும் அங்கிருந்த அலங்காரங்களையும் வாசலில் வைத்திருந்த பேர் பலகையையும் ரசித்துக் கொண்டே கீழிறங்கி வந்த வந்தனா, சுற்றத்தை கவனிக்கவில்லை. அப்போது அவளை மோதுவதைப் போல் வேகமாக வந்த ஒரு கார் கடைசி நொடியில் அவளை உரசிக் கொண்டு கிரீச்சிட்டு நின்றது.

நொடி நேரத்தில் நடக்கவிருந்த அசம்பாவிதத்தில் வந்தனாவின் இதயத்துடிப்பு ஒரு நிமிடம் நின்றுவிட, அதிர்ச்சியில் நெஞ்சில் கைவைத்து அப்படியே மடங்கி அமர்ந்துவிட்டாள்.

அவளின் நடவடிக்கைகளை காரில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த வினய், “ஸ்டெல்லா அந்த வாட்டர் பாட்டிலை எடு” என பின் பக்கம் இருந்த தண்ணீர் பாட்டிலை பெற்றுக் கொண்டு வேகமாக காரிலிருந்து இறங்கி வந்தனாவை நோக்கிச் சென்றான்.

அவனைத் தொடர்ந்து ஸ்டெல்லாவும், அவனின் டிரைவர் மணியும் பின்னே வர, வந்தனாவோ இவர்கள் யாரையும் கவனிக்கும் நிலையில் இல்லை.

அவளின் மனம் முழுக்க, ‘அந்த கார் மட்டும் நம்ம மேல மோதிருந்தா??’ என்ற எண்ணத்தின் சுழலிலே சிக்கித் தவித்துக் கொண்டிருந்தது.

அவளைக் கண்டவுடனே அவளின் மனநிலையை யூகித்த வினய் அவளை நிதானத்திற்கு கொண்டு வர எண்ணி அவளுக்கு நிகராய் மண்டியிட்டு அமர்ந்தவன், “ஹேய்!! யூ ஆர் கம்ப்ளீட்லி ஓகே.. உங்களுக்கு ஒன்னும் இல்லை.. ஜஸ்ட் ரிலாக்ஸ்!!” என்று அவள் தோள்களைத் தட்ட,

அவன் தொடுகையில் விலுக்கென நிமிர்ந்த வந்தனாவோ, இவ்வளவு நெருக்கத்தில் தெரிந்த ஒரு ஆணின் முகத்தைக் கண்டு மிரண்டு போய் தன்னிச்சையாக இரண்டடி பின்னால் நகர,

வினய்க்கு அவள் முகம் போன போக்கைக் கண்டு சிரிப்பு வந்தது.

‘முதல் முறையா என்னைப் பார்த்து இப்படி பயந்து தெறிச்சு ஓடற பொண்ணு நீ தான்.. அவ்ளோ பயங்கரமாவா இருக்கோம்’ என மனதில் நினைத்துக் கொண்ட வினய், “ஹேய் கூல்!! நான் மனுஷன் தான்.. ஏதோ கார்ல அடிபட்டு செத்து அப்படியே நரகத்துக்கு போய் அங்க இருக்க அரக்கனை பார்க்குற மாதிரி இப்படி பயந்து போய் பார்க்குறீங்க” என அவளை இலகுவாக்க அவன் முயல,

வந்தனாவிற்கோ அவன் பேச்சு எரிச்சலைக் கிளப்பியது.

‘கார்ல அடிச்சு கொல்ல பார்த்ததும் இல்லாம இப்போ லொள்ளை பார்த்தியா??’ என மனதிற்குள் அவனை வறுத்தெடுத்தவளுக்கு அப்போது தான் இருக்கும் சூழல் நினைவு வந்தது.

‘அச்சச்சோ இந்நேரம் அப்பா வந்திருந்து இதை மட்டும் பார்த்திருந்தாருன்னா நம்மளை கொன்னே போட்டிருப்பாரு.. ரெண்டு நாள் முன்னாடி சந்தோஷ் அண்ணா கூட இங்க அனுப்புறதுக்கே அவ்ளோ பேச்சு பேசுனாரு.. இப்போ யாருனே தெரியாதவங்க கூட பேசிட்டு இருக்கதை பார்த்தா இங்கயே நமக்கு சமாதி கட்டிருவாரு.. முதல்ல இங்க இருந்து எஸ்கேப் ஆகணும்’ என மனதிற்குள் நினைத்துக் கொண்டவள் அங்கிருந்து எழுந்து கொள்ளப் பார்க்க,

அவள் முகத்தில் வந்து போன பாவங்களை சுவாரசியமாக பார்த்துக் கொண்டிருந்த வினயோ அவளின் முயற்சி புரிந்து அவளுக்கு உதவ எண்ணி கைகொடுக்க,

தன் முன்னால் நீண்ட அவன் கரத்தையும் அவன் முகத்தையும் ஒரு நொடி முறைத்துப் பார்த்த வந்தனா, அங்கிருந்து எழுந்து, நிற்காமல் தங்கள் கார் இருக்கும் இடம் நோக்கி ஓடி விட்டாள்.

அவளின் செய்கையில் வினய் மட்டுமல்லாமல் ஸ்டெல்லா, மணி கூட பக்கென சிரித்து விட்டனர்.

செல்லும் அவளையே புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்த வினய் , “இன்ட்ரெஸ்டிங்க் கேர்ள்” என முணுமுணுத்துவிட்டு தன் டிரைவரிடம் திரும்பியவன், “மணி நீ காரை பார்க் பண்ணிரு.. நான் முடிச்சிட்டு உனக்கு கூப்பிடுறேன்” என்று பணித்தவன், ஸ்டெல்லாவை பார்வையாலே தன்னுடன் அழைத்துவிட்டு விடுவிடுவென அந்த விடுதியின் உள்ளே சென்றுவிட்டான்.

இங்கு தங்கள் காரில் இருந்து சங்கீதாவின் கைபேசியை எடுத்துக் கொண்ட வந்தனா, வந்த வழியே சென்றால் தன்னை மோத வந்த அந்த காரையும், அதில் இருந்து வந்த அந்த ஆறடி மனிதனையும் மீண்டும் காண வேண்டுமே என்று தயங்கிக் கொண்டு கார் பார்க்கிங்கில் இருந்த லிஃப்ட்டை தவிர்த்துவிட்டு படி வழியாக மேலே சென்று அங்கே அமையைப்பெற்றிருந்த ஒரு லிஃப்ட்ற்குள் ஏறினாள்.

அங்கே, யாரைப் பார்க்கக் கூடாதென்று நினைத்தாளோ அவனே புன்னகை முகத்துடன் நின்று கொண்டிருக்க, வந்தனாவிற்கு ‘அய்யோ’ என்றானது.

இப்போது திரும்பி சென்றால் அது சரியாக இருக்காது என்ற வந்தனா வேறு வழியின்றி உள்ளே நுழைந்தாள்.

அவனும் அவளை எதிர்பார்க்காததால் ஒரு நொடி ஆச்சரிய பாவத்தை முகத்தில் காட்டியவன், அடுத்த நொடியே அவளை சங்கடப்படுத்த வேண்டாம் என எப்போதும் போல் புன்னகையுடன் திரும்பிக் கொண்டான்.

அவன் எப்போதுமே இப்படி சிரித்த முகமாய் தான் இருப்பான் என்று அறியாத வந்தனாவோ, அவன் தன்னைக் கண்டு தான் கேலிப்புன்னகை உதிர்க்கிறான் என்று எண்ணி மனதில் அவனை வறுத்தெடுத்தாள்.

அவர்கள் இருவரும் இறங்க வேண்டிய இரண்டாம் தளமும் வர, முதல் ஆளாய் லிஃப்டில் இருந்து வெளியேறிய வந்தனா அவனை திரும்பிக் கூடப் பார்க்காமல் தங்கள் அறைக்குச் சென்று பட்டென கதவை அறைந்து சாற்றினாள்.

அந்த சத்தத்தில் அவளை கவனித்த சங்கீதா, “ஏய் எருமை!! எதுக்கு இப்படி பட்டுன்னு சாத்துற?? மெதுவா க்ளோஸ் பண்ண மாட்டியா?? முதல்ல போனைக் குடு” எனக் கேட்டவள், தங்கையின் பதிலை எதிர்பாராமல் தன் கைபேசியை வாங்கிக் கொண்டு தன் வருங்காலக் கணவனிடம் கடலை வறுக்கச் சென்று விட்டாள்.

அப்போது சரியாக அவர்களின் அறைக்கதவு தட்டப்பட, “தனு குட்டி யாருன்னு பாரு” என குரல் கொடுத்த சங்கீதா மீண்டும் தன் போனில் மூழ்கி விட,

தமக்கையின் செய்கையில் ஏற்பட்ட கடுப்புடன் போய் கதவைத் திறந்த வந்தனாவிற்கு அங்கு நின்றிருந்த வினயைக் கண்டு மயக்கமே வரும் போல் இருந்தது.

‘ஏண்டா தெரியாம பராக்கு பார்த்துட்டு உன் கார்ல விழுகப்போனதுக்கு, விடாது கருப்பு மாதிரி இப்படி துரத்துறியே டா பாவிப்பயலே.. அய்யோ இது எங்கப்பா கண்ணுல விழுந்தா என்ன ஆகுறது’ என மனதின் உள்ளே அவள் நொந்து கொண்டிருக்க,

“எக்ஸ்க்யூஸ் மீ!!” என்று அழைத்து அவள் கவனத்தை தன் பக்கம் ஈர்த்தான் வினய்.

அவன் அடுத்து ஏதும் பேசும் முன்னே முந்திக்கொண்ட வந்தனா, “ஹலோ சார்!! தெரியாம வேற எங்கேயோ பார்த்துட்டு உங்க காரை கவனிக்காமல் விட்டுட்டேன்.. தப்பு தான்.. அதுக்காக இப்படி ரூம் வரை ஃபாலோவ் பண்ணிட்டு வரதுலாம் நல்லதுக்கில்லை.. தயவு செஞ்சு இங்க இருந்து கிளம்புங்க.. யாராச்சும் பார்த்தா பெரிய பிரச்சனை ஆகிடும்” என அவள் கடகடவென பேச,

அவள் பேசுவதை சுவாரசியத்துடன் கேட்டுக் கொண்டிருந்த வினய் பதில் கூறும் முன் அவனை முந்திக்கொண்ட ஸ்டெல்லா, “ஹலோ மேம்!! நாங்க உங்களை ஃபாலோவ் பண்ணி வரலை.. இன்னைக்கு இங்க எங்கேஜ்மென்ட் நடக்குதுல அதுக்கு பொண்ணுக்கு மேக்கப் பண்ண வந்துருக்கோம்.. கொஞ்சம் வழியை விட்டா எங்க வேலையை போய் பார்ப்போம்.. லேட் ஆச்சு” என பதிலளித்தாள்.

‘ஓஹ் மேக்கப் போடுறவங்களா?? ச்சே நாம தான் அவசரப்பட்டு லூசு மாதிரி உளறிட்டோம்’ என மானசீகமாய் தன் தலையில் தட்டிக் கொண்ட வந்தனா, ஸ்டெல்லாவை நோக்கி, “ஓஹ் அப்படியா!! சாரி மேம்!! நீங்க உள்ள போங்க.. கீழ ஸ்நாக்ஸ் அரேஞ்ச் பண்ணியிருக்காங்க.. உங்க டிரைவரை அங்க போக சொல்லிருங்க மேம்” என அவள் வினயைப் பார்த்துக் கொண்டே சொல்ல,

அதைக்கேட்ட ஸ்டெல்லாவுக்கு நெஞ்சுவலியே வந்து விட்டது.

“வாட்!!! டிரைவரா??”என அவள் வாய் விட்டே கேட்டு விட,

“பின்ன இல்லையா?? உங்க எடுபிடியா?? இருந்தாலும் ஒரு லேடி அசிஸ்டென்ட் வச்சுக்கலாம்ல” என வந்தனா அப்போதும் வாயை விட,

‘என் வேலைக்கு உலை வச்சிருவா போலையே இவ’ என பயந்த ஸ்டெல்லா, “ஹலோ மேம்!! இவரு தான் ஒன் ஆஃப் தி லீடிங்க் மேக்கப் ஆர்டிஸ்ட்ஸ் இன் இந்தியா.. இவரு தான் மேக்கப் பண்ண போறாரு.. நான் ஜஸ்ட் இவருக்கு அசிஸ்ட் பண்ண வந்திருக்கேன்.. கொஞ்சம் ப்ளீஸ் வழியை விடுங்க” என சற்று கடுப்பாய் கூறிவிட,

“ஏதேய்!! ஆம்பளை மேக்கப் மேனா???” என வெகுவாய் அதிர்ந்தாள் வந்தனா.

இவ்வளவு நேரமும் அமைதியாக அவளின் பேச்சுக்களை கேட்டுக் கொண்டிருந்த வினய், அவளின் இந்த அதிர்ச்சியில் பட்டென வாய் விட்டு சிரித்து விட்டான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!