Skip to content
Post Views: 819
நேசம் 03
கார்த்திக்கேயன் மங்கை சொன்ன இடத்தில் கொண்டு வந்து இறக்கிவிட்டவன்,”சரி நான் கிளம்புறேன். நீ பார்த்துப்போ” என்றதும் அவனை செல்ல விடாது வழிமறித்து நின்றவள் வண்டி சாவியை தன்னோடு எடுத்துக் கொண்டாள்.
Advertisement
“என்ன பண்ற? எனக்கு நேரமாகுது அம்மு விளையாடாம சாவியை கொடு” என கார்த்திக் கையினை நீட்டவும், அதில் ஒரு அடியை போட்டவள் பின் பாவமாய் அவன் முகம் பார்த்தாள்.
“உன் லுக்கே சரியில்லையே. என்ன வேணும் உனக்கு?” தங்கையை சரியாய் கவனித்திருந்தான்.
Advertisement
Advertisement
“அது… அது…” அவள் இழுக்க,
“முடியாது. ஒழுங்கா சாவியை கொடு நான் கிளம்புறேன்” முன்னெச்சரிக்கையாக முடியாது என்பவனை முறைத்தாள்.
Advertisement
“சாவி வேணுமா? வேண்டாமா?”
“சாவடிக்காம கொடுத்துட்டு ஓடிடு இல்ல அடி விழும் பார்த்துக்க”
“அப்போ பைசா தேதோ ” என கையை நீட்டி கேட்கவும், கார்த்திக் தலையில் அடித்துக் கொண்டான்.
“அப்பவே சுதாரிச்சிருக்கணும். என்னடா சும்மா போற ஓனான் வண்டில ஏறுதேன்னு” தன்னையே நொந்து கொண்டவன்,
“எவ்வளவு வேணும்?” என்றான்.
“தௌசண்ட் போதும். பேலன்ஸ் அப்புறமா கேட்டு வாங்கிக்கிறேன்” சொன்னதும் அவள் தலையில் குட்டு வைத்தவன்,
“கொடுத்து வச்சது போலவே கேக்குறது” என்று கொட்டினாலும் அவள் கேட்ட பணத்தோடு ஐந்நூறு சேர்த்தே கொடுத்தான்.
“தேங்க்ஸ் டா அண்ணா…” என்றாள் முகம் கொள்ளா புன்னகையுடன்.
மங்கையர்க்கரசி வயது இருபத்தி நான்கு. கோதுமை நிறத்துடன் சுறுசுறுப்பான தோற்றம். குழந்தைத்தனமான சிரிப்பிலும் கண்களில் விளையாடும் சுட்டித்தனத்திலும் மற்றவர்களை நிறத்தில் அல்லாது குணத்தால் கவரக்கூடிய பெண்.
“இன்னைக்கு எங்க போறதா ப்ளான் போட்ருக்க அம்மு?”
“இன்னைக்கு வேளச்சேரி பீனிக்ஸ் மார்க்கெட்சிட்டி தான். ஃபுட் சேலேஞ் பண்றதா இருக்கோம். அதுக்கு தான் ஆயிரம் கேட்டதே” என்றாள் கேட்காத கேள்விக்கும் பதிலாக.
“எதையாவது சாப்பிட்டு வந்து அப்புறம் அம்மா வயிறு வலிக்குதுன்னு அழுத அடிதான் விழும் உனக்கு. ஒழுங்கா என்னோட கம்பெனில வேலைக்கு சேர்ந்திருக்கலாமா? ஒன்னும் சொல்றதுக்கில்லை” என்று தங்கையை திட்ட, அவள் முகத்தை தூக்கி வைத்து கொண்டாள்.
“சரி, உன்ன எதுவும் சொல்லலை. இங்கிருந்து எப்படி போறதா ஐடியா?”
“சந்தோஷ் ப்ரோ வந்து பிக் பண்ணிப்பான் னா. நீ கிளம்பு ” என்றவள் அவனின் வண்டி சாவியை கொடுத்தாள்.
“பார்த்துக்கோ அம்மு” என்றவன் வேலைக்கு நேரமாவதை உணர்ந்து அங்கிருந்து கிளம்பிவிட்டான்.
கார்த்திக் சென்ற பத்தாவது நிமிடத்தில் சந்தோஷ் வந்து அவளை அழைத்து கொண்டு பீனிக்ஸ் மால் சென்றான்.
வாரத்தின் முதல் நாள் என்பதால் பெரிதாக சொல்லிக்கொள்ளும் அளவிற்கு கூட்டம் அதிகமில்லை. பெரிய ஷாப்பிங் மாலில் நிறைய பேர் தங்கள் அலுப்பை போக்கி கொள்ள ஜாலியாக சுற்றித் திரிந்தனர்.
“ப்ரோ, இன்னைக்கு எப்படியாவது ஒரு த்ரி டூ ஃபோர் வீடியோஸ் எடுத்திடனும். அப்போ தான் அடுத்த ஃப்யூ டேஸ்க்கு ப்ராப்ளம் ஏதும் இருக்காது” மங்கை சொல்லவும் ஆமோதித்தான் சந்தோஷ்.
“என்னென்ன ப்ளான்ஸ் வச்சிருக்க மங்கை?” சந்தோஷ் கேட்க,
“இன்னைக்கு வீடியோஸ் எல்லாமே ஃபுட் பேஸ்ட் எடுக்கலாம். ஆல்ரெடி புதுசா ஓபன் பண்ணியிருக்க ஒரு ஷாப்ல அட்வெர்டைஸ்மெண்ட்க்கு வர சொல்லி இருந்தாங்க. சோ முதல்ல அங்க முடிச்சிட்டு மத்ததை பாக்கலாம்” என்றவள் வாஷ்ரூம் சென்று உடைகளை சரிசெய்து கொண்டு வெளியில் வந்தாள்.
“போலாமா ப்ரோ?”
“ம்ம்ம்…போலாம்” என்றான்.
கடைக்குள் நுழையும்போதே மேனேஜர் அவர்களை எதிர்க்கொள்ள, சிரித்த முகமாக வரவேற்றார்.
“நாங்க கேட்டதும் வந்ததுக்கு நன்றி”
“இதுல என்ன இருக்கு. நீங்க இந்த மாதிரி வேலை சொன்னா தானே எங்களுக்கு வேலையே” என்றவள் அவரிடம் சில கேள்விகளை கேட்டு அறிந்து கொண்டாள்.
பின்னர்,” ஓகே சார். நாங்க வீடியோ எடுக்க ஸ்டார்ட் பண்றோம். முதல்ல உங்க கடையை வீடியோ எடுக்கிறோம். அப்புறமா உங்களோட ஸ்பெஷல் ஃபுட் சாபிட்டு ரிவ்யூ மாதிரி கொடுத்து ஹைப் பண்ணிடுவோம்” என்று அவள் இவர்களுக்காக எடுத்து வைத்த ப்ளானை கூறி முடிக்க, சந்தோஷ் கேம்ராவை செட் செய்தான்.
“ப்ரோ, ஆல் ஓகே?” அவள் ஒளிந்து நின்று கேட்க, சந்தோஷூம் சைகையில் ஓகே என்பது போல் கட்டை விரல் காட்டி சொன்னான்.
“ஹாய் ஃபுடி லவர்ஸ்! இன்று நாம வந்திருக்குறது புதுசா ஓபன் ஆன ஒரு சூப்பர் ஃபுட் ஜாயின்ட். இங்க இருக்குற ஸ்பெஷல் உணவுகளை சாப்பிட்டு எப்படி இருக்குன்னு பார்ப்போமா?” என்றவள் டேபிளை அவளுக்கு ஏற்றவாறு மாற்றி வைத்தாள்.
மங்கை தனது அழகான புன்னகையுடன் கேமராவை நோக்கி பேசத் துவங்கினாள். சந்தோஷ் உற்சாகமாக கேமராவின் கோணங்களை அவளுக்கு ஏற்ற மாதிரி மாற்றி பிடித்துக்கொண்டிருந்தான்.
“முதல்ல, இவங்களோட மோஸ்ட் பேமஸ் சீஸ் ஓவர்லோடெட் க்ரீமி பாஸ்தா தான் ட்ரை பண்ண போறோம்” என்றவள் ஆர்டர் கொடுத்து விட்டு காத்திருக்க, அந்த இடைவெளியிலும் கடையின் சூழலலை பற்றி கூறி முடிக்கும் முன்பே உணவு வந்துவிட, வாசத்தை முகர்ந்து பார்த்தாள்.
“சொன்ன டைம்க்கு ஃபுட் கொடுத்துட்டாங்க. பாக்கும்போதே சாப்பிட நாக்கு ஊறுது” என்றவள், உணவை அவளின் மொபைல் கொண்டு ஒரு ஸ்னாப் எடுத்தவள் உண்ண ஆரம்பித்தாள்.
மங்கை ஒரு ஸ்பூன் பாஸ்தாவை எடுத்து வாயில் போட்டவுடன், முகத்தில் ஒரு மென்மையான புன்னகை வந்தது.
“ஹூம்… பாஸ்தாவோட சுவை அருமையா இருக்கு! சீஸ் எக்ஸ்ட்ரா சேர்த்ததால, ரொம்ப ரிச் ஃபீல் கொடுக்குது” என்றவள் தொடர்ந்து, கேமிராவை நோக்கி ஆர்வத்துடன் பேசினாள்.
சந்தோஷ் கேமிராவை நன்றாக ஃபோக்கஸ் செய்து, அவளது உணவை அனுபவிக்கும் முகபாவனைகளை அழகாகப் பிடித்தான்.
“இந்த பாஸ்தா நமக்கு கிடைக்குற நார்மல் பாஸ்தா மாதிரி இல்ல. இதுலயே ஹோம்-மேட் பாஸ்தா ஷீட்ஸ் தான் யூஸ் பண்ணிருக்காங்க. சோ, சாப்பிடும்போது ரொம்ப ஃப்ரெஷ் ஃபீலாகுது. சீஸ், க்ரீம், ஸ்பைஸஸ் எல்லாத்துக்கும் நல்லா பேலன்ஸ் பண்ணிருக்காங்க. சாப்பிட ஆரம்பிச்சுட்டா நிறுத்தவே முடியாது!” என்றவள் பாஸ்தாவை ரசித்து ருசித்து சாப்பிட்டாள்.
அவளது துள்ளலான பேச்சும் உணவை ரசிக்கும் விதமும், உணவக மேலாளரை மகிழ்ச்சியடையச் செய்தது.
“மிஸ் மங்கை, நீங்க எங்களுக்கு இப்படியான பிரமோஷன் பண்ணதுக்கு ரொம்பவே தேங்க்ஸ்.இதுக்குப் பிறகு எங்க ஃபுட் ஜாயிண்ட் கண்டிப்பா ஹாட் ஸ்பாட் ஆகிடும்!” என்றார் அவர்.
பின் சந்தோஷிடம் திரும்பி, “ஆல்ரெடி அட்வான்ஸ் அமௌண்ட் பே பண்ணிட்டோம். பேலன்ஸ் அமௌண்ட் வீடியோஸ் போஸ்ட் ஆனதும் பே பண்ணிடுறோம்”
“டெஃபினிட்டா, சார்! வீடியோ முடிச்சு போஸ்ட் போட்ட பிறகே வாங்கிக்கிறோம்” என்றான் சந்தோஷ்.
வீடியோ ரெக்கார்டிங் முடிந்ததும், மங்கை தனது மொபைலில் புகைப்படங்களை எடுத்து ஸ்டோரி போடுவதற்காக எடிட் செய்யத் தொடங்கினாள்.
“இன்னிக்கு வீடியோ செம ஹிட் ஆகிடும் ப்ரோ” என்றாள் சந்தோஷிடம் அத்தனை உற்சாகத்துடன்.
“ஓகே, இன்னைக்கு அடுத்த ப்ளான் என்ன?”
“ஃபுட் சேலேஞ் தான் ப்ரோ” என்றதும் அதற்கான வேலையை ஆரம்பித்தார்கள்.
இங்கே அன்பு தலைவலியின் காரணமாக அலுவலகத்திற்கு விடுமுறை சொல்லி வெளியே வந்ததும் பெரியப்பா பெரியம்மாவை பார்த்ததில் மனம் சுருக்கென்றது.
மேகாவை பிரிந்த போதில் பைத்தியம் போல் சுற்றி திறிந்தவனை கேட்க ஆள் இல்லாது போக, அவன் இஷ்டத்திற்கு சுற்றி திறிந்தான்.
தில்லையப்பன் தான் தம்பி மகனின் நலனை கருத்தில் கொண்டு அவனிடம் பேசப்போய், அன்பு அவரை வார்த்தையால் நோகடித்துவிட அன்றைய பொழுதிலிருந்து தில்லையப்பனை நேர்க்கொண்டு பார்ப்பதை தவிர்த்தான் அன்பு.
இன்று அவரை காணவும், அன்று அவன் பேசியது நினைவில் வந்து அவன் பேசிய வார்த்தைகளே அவனை சுட்டு எரித்தது.
வண்டியில் ஏறியவன் அது போகும் போக்கில் சென்றவன் மீண்டும் வந்து நின்றது என்னவோ கடற்கரைக்கு தான்.
என்னவோ அவனின் தொடக்கமும் முடிவும் இந்த கடற்கரையாகவே இருக்கிறது.
காதல், பிரிவு, வேதனை என அனைத்திற்கும் உயிர் கொண்டு விளையாடும் ஒரு இடம் தான் கடற்கரை. அதிலும் இந்த கடற்கரை தான் அவனின் இந்த வெறுமைக்கு காரணமே.
அன்று மட்டும் அவளது அழைப்பினை ஏற்றிருந்தால், இன்று இந்த நிலையில் இருந்திருக்க மாட்டான்.
அன்பு அவனையே குற்றவாளி கூண்டில் நிறுத்திக் கொண்டிருந்தான். அவனை அவன் மன்னிக்க என்றுமே தயாராக இல்லை.
மேகாவின் அழைப்பைத் தவிர்த்தவனைச் சுற்றிலும் இப்போது வெறுமை தவிர எதுவுமில்லை. அவள் இனி அவனுடன் இல்லை, அவனுக்காக காத்திருக்கவில்லை, ஆனால் அவளின் நினைவுகள் மட்டும் அவனிடம் பிணைக்கப் பட்டிருந்தன.
இன்றுவரை அன்பு உயிருடன் பிரவேசிக்கிறான் என்றால் அதற்கு காரணம் அவனின் மேகமலையே!
அவளின் நினைவில் அலைமோதிக் கொண்டிருந்தவனை யாரோ “அண்ணா” என்றழைக்க, திரும்பி பார்த்தவன்,”என்ன வேணும் ?” என்றான்.
“அண்ணா சாப்பிட்டு ரெண்டு நாளாச்சு. பசிக்குது ஏதாவது சாப்பிட இருந்தா கொடுங்க னா” என ஒரு சிறியவன் கேட்க, அந்த சிறுவனோடு ஒரு குட்டி பெண்.
சரியான உடையில்லாது கிழிந்து போன சட்டையணிந்து என பார்க்கவே பாவமாக இருக்க, அந்த இரு குழந்தைகளையும் பக்கத்தில் இருந்த கடைக்கு அழைத்துச் சென்றான்.
முதலில் இருவருக்குமாக புது ஆடைகள் வாங்கி தந்தவன், பிறகு சாப்பிட அழைத்து வந்தான் அன்பு.
பெரிய கடைக்குள் ஒருவித தயக்கத்துடனே இரு குழந்தைகளும் உள்ளே நுழைய, அவர்களின் தயக்கம் புரிந்து கைபிடித்து அழைத்து சென்றான்.
முதலில்,”அண்ணா இவ்வளோ பெரிய கடை வேணாம்னே. ஏதாவது காசு இருந்தா கொடுங்க நாங்க ரோட்டு கடையில சாப்டுக்கிறோம்” சிறுவன் தயக்கம் காட்டி பேச,
“சாப்பிட என்ன வேணும்?” என்று அச்சிறுவன் பேசியதை ஒதுக்கி கேள்வி கேட்டான்.
“எதுனாலும் சரி” என சிறுவன் கூற, கூடவே அவன் குட்டி தங்கையும் தலையாட்டியது.
என்னவோ அந்த தலையாட்டலில் அவன் அவனின் மேகமலையை கண்டான். புன்னகைத்தான். உளமாற இரசித்தான்.
பின்னர் சர்வென்டை வரவழைத்தவன் மதிய நேரம் என்பதால், மினி மீல்ஸ் இரண்டை ஆர்டர் கொடுத்தான்.
சற்று நேரத்தில் ஆர்டர் கொடுத்தது வரவும் இரு குழந்தைகளும் சாப்பிட, அன்புவின் பார்வை பின்னால் படமெடுத்து கொண்டிருந்தவனின் மேல் பதிந்தது.
அன்புவின் உள்ளம் வெறியாய் கொதித்தது. அவன் உள்ளுருகும் எரிமலையாக வெடிக்கத் தயாராகி கொண்டிருந்தான். அவனது கோபம், கட்டுப்படுத்த முடியாத ஆத்திரமாக மேலோங்க டேபிளிலிருந்து எழுந்தவன் வேகமாக அங்கே நடந்தான்.
“ஏய்! என்ன செய்றீங்க ரெண்டு பேரும்? இப்படியொரு வேலை செய்ய அசிங்கமா இல்ல?”
அவன் எழுப்பிய சத்தம் காற்றில் அதிர்வெழுப்ப, மங்கையர்க்கரசி திடுக்கிட்டு திரும்பிப் பார்த்தாள்.
அன்று கடற்கரையில் வைத்து சந்தித்தவனை மீண்டும் காண, அதிலும் அவன் கோபமாய் தங்களை முறைப்பது எதற்கு என்று புரியாமல் முழித்தாள்.
அன்றே அவன் பேச்சுக்கள் நல்லவிதமாக இல்லை. இன்றும் இவனிடமா சிக்க வேண்டும் மனது சலிப்பு தட்டியது.
“முதல்ல யார் நீங்க?” எழுந்து நின்று மங்கை கேட்க, அதற்குள் சந்தோஷ் கேமராவுடன் வந்தான்.
“ப்ரோ, என்னாச்சு?”
“தெர்ல ப்ரோ. இவர் பாட்டுக்கு வந்து கத்திட்டு இருக்காரு” என்றாள் ஒருவித எரிச்சலில்.
“அடுத்தவங்களை வீடியோ எடுக்குறது தானே உங்க வேலையே. அதான் நேத்து கூட பாத்தேனே” என இழிவாக அவன் பேச,
“நான் நேத்தே உங்க கிட்ட சொன்னேன். வாய் இருக்குன்னு பேசாதீங்கன்னு. என்ன ஏதுன்னு தெரியாம நீங்க பாட்டுக்கு பேசிட்டே போறீங்க” என்றவளுக்கு புசுபுசுவென கோபம் வந்தது.
அதற்குள் கூட்டம் கூட, அன்புவின் கோபம் மேலும் தீவிரமாவதற்குள், கடை மேலாளர் விரைந்து வந்து, “என்ன பிரச்சனை, சார்?” என்று கேட்டார்.
“இவங்க எங்களை தேவையில்லாம வீடியோ எடுத்து சீன் க்ரியேட் பண்றாங்க?” என்றதும்,
“உங்களை வீடியோ எடுத்தோமா என்ன பேசுறீங்க நீங்க?” மங்கை புரியாது பேசினாள்.
“நீங்க ரெண்டு பேரும் எங்களை வீடியோ எடுத்ததை பார்த்துட்டு தான் சொல்றேன்” என அவன் கோபமாய் மொழிய,
மங்கையர்க்கரசி அமைதியாக அன்புவை நோக்கி பார்வையை வீசினாள். அவள் கண்களில் வெறுப்போ கோபமோ இல்லை. மாறாக, எதிர்பாராத ஒரு வித சங்கடம் ஏற்பட, என்னவோ போல் உணர்ந்தாள்.
“உங்களை வீடியோ எடுத்து எனக்கு என்ன ஆகப்போகுது. அதுவுமில்லாமல் வீடியோ எடுக்க கடையின் அனுமதி பெற்றிருந்தோம். உணவின் தரம், சுவை, விருந்தோம்பல்ன்னு இதை மட்டும் தான் பதிவு செய்திருக்கோம். வேற எதுவும் இல்லை” அவள் திடமாக கூற, அவளை ஏளனமாக பார்த்தான்.
அந்த பார்வை அவளை என்னவோ செய்ய, அங்கிருந்து போனால் போதும் என்று தோன்றியது அவளிற்கு.
“இதையெல்லாம் என்னைய நம்ப சொல்றீங்களா? சார், அந்த வீடியோவை காட்ட சொல்லுங்க பார்ப்போம்” என அன்பு மங்கையிடம் தொடங்கி கடை மேலாளரிடம் கேட்க சொல்ல,
“ப்ரோ, அந்த வீடியோவை காட்டிடு. சிலரெல்லாம் என்ன சொன்னாலும் நம்ப மாட்டாங்க. அவங்க பிடிச்ச முயலுக்கு மட்டும் ரெண்டு கால் தான் இருக்கும்” என்றவள் அங்கேயே இருக்கையில் அமர்ந்து விட்டாள்.
மங்கை சொன்னது போலவே சந்தோஷ் அந்த வீடியோவினை காட்ட, அதில் அன்பும் அந்த இரு குழந்தைகளும் எந்தவொரு இடத்திலுமே இல்லை. வெறும் உணவுகள் அடங்கிய வீடியோ மட்டுமே இருக்க, தான் தான் தவறாக புரிந்து கொண்டதை உணர்ந்தாலும் அதனை வெளிக்காட்டிக் கொள்ள விரும்பவில்லை.
“இப்ப உங்களுக்கே நாங்க சொல்றது உண்மைன்னு புரிஞ்சிருக்கும்ன்னு நினைக்கிறேன்” என்றவள் அன்பை நேருக்கு நேர் பார்த்து,
“இப்பவும் சொல்றேன் பேசுறதுக்கு முன்னாடி பார்த்து பேசுங்க. எதுவும் தெரியிறதுக்கு முன்னாடி வார்த்தையை விட வேண்டாம். இனி உங்களை திரும்ப பார்த்திட கூடாதுன்னு வேண்டிக்கிறேன்” என்றவள் சந்தோஷூடன் வெளியேறிவிட்டாள்.
அந்த இடத்திலே நின்றவண்ணம் போகும் மங்கையை கோபமாய் பார்த்திருந்தான்.
மங்கையர்க்கரசி வெளியேறிய பின், அவளது எதிர்ப்பாராத அமைதியும் தன்னம்பிக்கையும் அவனுக்குள் ஒரு வித எரிச்சலை தான் எழுப்பியது.
எதற்கும் தடுமாறாமல் அவன் முன்பே தைரியமாக எதிர்த்து நின்றவளின் பார்வை தான் அவனை மேலும் எரிச்சலடையச் செய்தது.
அன்று இரவே மங்கை அவள் எடுத்த புகைப்படத்தினை அவளின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவினை போட்டவள், உறக்கம் வராது அந்த நிலவினை வெறித்தப் படி நின்றாள்.
அதே நேரம் அவனின் மொபைலில் நோட்டிஃபிக்கேஷன் சத்தம் வர, என்னவென்று பார்க்க இன்ஸ்டாகிராமில் இருந்து வந்திருந்தது.
பார்த்தால், அது ஒரு உணவின் படங்கள் போடப்படும் ஐடி. அதுமட்டுமில்லாமல் அது அவனின் மேகமலைக்கு பிடித்த ஐடியும் கூட.
error: Content is protected !!