Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Kalvanae Kalvanae

கள்வனே கள்வனே – 20

கள்வன் – 20

 

“காதலும் ஒருவித போதைதான்… அதுவும் சுகமான போதை.” என்று கண்களில் மென்மையை கூட்டி, சன்னமான குரலில் அஜய் சொல்ல இனியா புரியாத பார்வை பார்த்தாள்.

 



Advertisement

“என்ன?”

 

அவளின் பாவனையில் கணநொடியில் தன் இயல்பை மீட்டெடுத்துக் கொண்டவன், “இல்லையா பின்னே?… காதல் போதை எல்லோருக்கும் வருவதில்லை தான், இருப்பினும் அதை அனுபவித்தவர்களுக்கு மட்டுமே அதன் இதம், சுகம் புரியும். சிலபல நேரம் காரணமின்றி ஒருவர்பால் ஈர்க்கப்பட்டு இவங்க தான் நம் வாழ்க்கைத் துணை என்று உள்மனது கூறும் பாரேன் அப்போ தோணும் அவங்களயே பார்த்துட்டு இருக்கனும், அவங்களோட பழகணும், அவங்க மகிழ்ச்சியிலும், துக்கத்திலும் பங்கெடுத்துக்கணும், நம்மோட களிப்பிலும், சோகத்திலும் அவங்க இருக்கனும், அவங்க கை பிடித்து இறுதி வரை நடக்கணும், நம்முடைய ஆசைகளை அவர்களுடன் சேர்ந்து நிறைவேற்றி அனுபவிக்கணும், அவங்க கனவுகளை நனவாக்கி அவர்கள் அடையும் களிப்பை பார்த்து நாம் நிறைவான மகிழ்ச்சியை உணரணும்னு தோணும் பாரு… அந்த போதையே தனிதான்.” என்று உணர்ந்து உளமார விளக்க இனியாவின் உள்ளமெல்லாம் அங்கு இல்லவே இல்லை. 

Advertisement

 

Advertisement

சில நாட்களாக மனதை போட்டு வாட்டி, குழப்பிய விஷயத்திற்கு பதில் கிடைத்தது போலவும் இருந்தது, கிடைக்காதது போலவும் இருந்தது.

 

“என்ன யோசனை இனியா?”

Advertisement

 

“ஹான்… நீங்க சொன்னதை யோசிச்சிட்டு இருந்தேன். அது எப்படி காரணமின்றி முதல் சந்திப்பிலே காதல் வரும்… ஏதோ கதைகளில், சினமாக்களில் வருவது போல உள்ளது உங்களது விளக்கம்.” தன்னுடைய குழப்பத்திற்கு இடமளித்து அவன் விளக்கத்தை நிராகரித்து அதில் பொதிந்திருந்த விஷமத்தையும் கவனியாது எதிர் கேள்வி எழுப்பினாள் பெண். அவளை பொறுத்தமட்டில் அகத்தில் நிறைந்திருப்பவனும் அதற்கான விளக்கம் தேவைப்படுவதும் இதயன் ஒருவனே… அந்த இடத்தில் வேறு யாரையும் கற்பனையில் கூட நினைத்து பார்த்திராதவளால் அஜயின் விளக்கங்கள் கூறும் செய்தியில் இதயனையே முன்னிறுத்தி, ஒப்பிட்டு தன் உணர்வுகளுக்கு பெயர் கொடுக்க முனைந்தாளே ஒழிய அந்த செய்தியில் அஜயை பொருத்திப் பார்க்கவில்லை. பார்த்திருந்தால் அவனின் எண்ணம் புரிந்திருக்குமோ என்னவோ? அந்த வகையில் அஜயின் முயற்சிகள் தோல்வியையே தழுவின.

 

“ஏன் வராது? புறத்தால் முதலில் ஒருவர்பால் ஈர்க்கப்பட்டாலும் அது உறவாய் மாற அந்த நபரின் நினைப்பிலே ஏக்கம் கொள்ள வைக்க மற்றவரின் நடத்தை ஏதோவொரு விதத்தில் நம் ஆழ்மனதை தொட்டிருக்கும். அதற்கு குறிப்பிட்ட கால வரையறை எல்லாம் இல்லை… ஒரு சிலருக்கு கணநொடியில் ஏற்பட்டுவிடும் சிலருக்கு கொஞ்சம் நேரம் பிடிக்கும் பிடித்ததை உணர…” 

 

அதுவரை அவள் உள்ளம் ஏற்க மறுத்ததை அஜயின் வார்த்தைகள் ஏற்க வைத்தது. யுக்தா கேட்கும் போதெல்லாம் ஏதேதோ தனக்குத் தானே சப்பை கட்டு கட்டிக்கொண்டவள் மனம் இப்போது  இதயனிடம் ஏதோ ஒரு பிரித்துணரமுடியா பிடித்தம் இருப்பதை உறுதியாக ஏற்றுக்கொண்டது. இல்லையென்றால் அவனுக்காக இவ்வளவு மெனக்கெட வேண்டிய அவசியம் என்ன? இருப்பினும் அந்த பிடித்ததை எந்த வகையில் சேர்ப்பது என்பதில் குழப்பமே. 

 

அதை ஈர்ப்பு என்பதா? இல்லை காதல் என்பதா? இல்லை பரிதாபம் என்பதா?

 

ஆனால் அவளை ஈர்க்கக்கூடிய தோற்றத்திலும் அவன் இல்லை; அவள் அகராதியில் இருக்கும் காதல் என்பதற்கான விளக்கமும் வேறல்லவே; பரிதாபம் என்றும் முடிவு செய்யமுடியாதே… ஏனெனில் அவனை பார்க்கும் போது பரிதாபத்தை தாண்டி ஏதோவொன்று அல்லவா அவளை ஆட்கொள்கிறது, உந்துகிறது.

 

“இருந்தாலும் பழகாமல் ஒருவர் எப்படிப்பட்டவர் என்று எப்படித் தெரியும்? அவர் நமக்கு பொருத்தமானவர் என்று எப்படி தெரிவு செய்வது? ஸீ இப்போதெல்லாம் எவ்வளவு செய்திகள் கேள்விப்படுகிறோம்… காதல் வலையில் பெண்களை வீழ்த்தி அவர்களை ஏமாற்றி அதட்டி, மிரட்டி காரியம் சாதித்துக் கொள்கிறார்கள்… பணம் பறிக்கிறார்கள்… மிரட்டி அடிபணிய வைக்கிறார்கள் என்று…  எனக்கு இதில் எல்லாம் நம்பிக்கை இல்லை சார்.” தனக்குள்ளே குழப்பம் இருப்பினும் அறிவு விழித்துக்கொள்ள, இப்போதுள்ள நடைமுறை சிக்கல்களை தெளிவாகவே பேசினாள் இனியா. 

 

“நீ சொல்வதும் சரிதான்…” என்று பேச்சை வளர்க்காமல் கத்தரித்து அவள் சிந்தையை குறுக்கிட்டவன் பட்டென்று, “லெட்ஸ் பீ பிரெண்ட்ஸ்.” வா பழகலாம் என்ற மறைமுக செய்தி அதில் பொதிந்திருக்க வேண்டினான் அவளின் அகம் அறிந்த நொடியில்.

 

அவனின் வார்த்தைகளில் பொதிந்திருந்தை இனம்காணாமால் கடிவாளம் கட்டிய குதிரை போல் அவளது காரியத்தில் மட்டுமே கண்ணாய் இருந்தவள், விழிகளில் வியப்பை கூட்டி, மொழியிலும் அதை வெளிப்படுத்தி, “நீங்க என் பிரெண்ட் என்ற நினைப்போடு உங்கள் விழாவில் பங்குகொண்டு உங்களிடம் ஒரு உதவி கேட்கலாமான்னு வந்தால் நீங்க இப்போ தான் நட்புக்கரம் நீட்டுறீங்க?” வியப்பு முறைப்பாக இறுதி வாக்கியத்திற்கு ஏற்றது போல் மாறிக்கொண்டது.

 

அசட்டுச் சிரிப்பை உதிர்த்து இடக்கை விரல்களால் நெற்றியை லேசாக தட்டிக் கொண்டவன் மானசீகமாய் புன்னகைத்து அவளை ஏறிட்டான், “உனக்கு இல்லாத உதவியா… என்ன செய்யணும்?”

 

எச்சில் கூட்டி விழுங்கியவள் தயக்கத்துடன் அவனை நோக்கி, “என் பிரெண்ட் ஒருவர் விபத்தில் சிக்கி நடக்க முடியாமல் படுக்கையில் இருக்கிறார். நீங்க எனக்காக சிறப்பு கவனம் செலுத்தி அவரை சரி செய்யணும்.” என்றவுடன் அவன் முகம் பிரித்துணர முடியா இறுக்கம் மற்றும் கலவரத்தை தத்தெடுத்து பின் மீண்டது, 

 

“உனக்கு தெரிய வாய்ப்பில்லைனு நினைக்கிறன்… நான் நரம்பியல் சார்ந்த நோயை குணப்படுத்துவதை விட உளவியல் சார்ந்த பிணிகளுக்குத் தான் சிகிச்சை கொடுக்கிறேன். ஹாஸ்பிடலிலும் நரம்பியல் சார்ந்த நோயாளிகளை என்னிடம் அனுப்ப மாட்டார்கள். பிகாஸ் உடல் அளவு பிரச்சனைகளை தீர்க்க பல மருத்துவர்கள் இருக்காங்க… ஆனால் உளவியல் ரீதியான பிரச்சனைகளுக்கு தான் மருத்துவர்களும் குறைவு, அது பற்றிய விழிப்புணர்வும் மக்களிடம் குறைவு. விழுப்புணர்வு ஏற்படுத்தி பெருகி வரும் உளவியல் பிரச்சனைகளை தீர்க்கனும் என்ற ஆர்வத்தில் என்னுடைய மேஜரையே மாத்திக்கிட்டேன்… இன்னமும் படித்தவர்கள் கூட மனநல மருத்துவரை சந்திப்பது என்பது மனசமன்பாடு இல்லாமல் சட்டையை கிழித்துக் கொண்டு சுற்றும் பித்தன்களுக்கு மட்டுமே உரியதுனு நினைக்கிறாங்க…” என்று சிறு இடைவெளி விட,

 

முதலிலே ஒத்துக்கொள்ளாமல் அவன் இப்படி விளக்கும் போதே தன் கோரிக்கையை தவிர்க்கத் தான் இப்படி செய்கிறான் என்று கணித்தவள் முகம் தானாய் சுருங்க, ஒளியற்றவளாய் அவனை பார்த்து வைத்தவள் முகம் அவனது அடுத்த வார்த்தையில் முற்றிலும் மாறி உற்சாகத்தை தத்தெடுத்துக் கொண்டது.

 

“பட்… எனிவே, நீ கேட்பதால் நான் அவரை பார்க்கிறேன்… அவரின் நிலை என்னனு பார்த்துட்டு பெரிய மருத்துவரையோ இல்லை நானே அவருக்கு சிகிச்சை கொடுப்பதா என்று முடிவு செய்யலாம். இப்போ திருப்தியா?” 

 

“தேங்க்யூ சோ மச் சார்…” முகத்தில் அப்படியொரு நிம்மதி, உற்சாகம். அந்த உற்சாகம் அவனின் புருவம் உயரச் செய்தது.

 

“அந்த பிரெண்ட் ரொம்ப ஸ்பெஷலோ?” கேள்வி முந்திக்கொண்டு வந்தது அவனிடமிருந்து.

 

அவன் கேள்வி எவ்வளவு வேகமாய் வந்ததோ அதே வேகத்தில் வந்தது பதில், “பிரெண்ட்ஸ் என்றாலே ஸ்பெஷல் தானே சார்…” என்று இன்பன் டயலாக்கை காப்பி அடித்து தனக்கேற்றார் போல் மாற்றிக் கொண்டு அடித்துவிட்டாள் இனியா.

 

“ஓ… என்னையும் பிரெண்டுனு சொல்லிட்டு இன்னும் என்னை சார் சார்னு கூப்பிடிட்டு இருக்க… அப்போ நான் ஸ்பெஷல் இல்லையோ?”`என்று அஜய் அங்கலாய்க்க என்ன சொல்வதென்று தெரியாமல் வாய் மூடிக்கொண்டாள் இனியா.

 

இதயனை ஸ்பெஷல் என்று மறைமுகமாக சொல்லும் போது ஏற்படாத தயக்கம் அஜய் கேள்வியில் ஏற்பட்டது. அவன் கேள்விக்கான பதில் ஏற்படுத்தியது. பெயருக்கு கூட அஜயை ஸ்பெஷல் என்று சொல்ல முடியவில்லை ஏன் அதுபோல் நினைக்கக்கூட முடியவில்லை. இதில் பதிலுக்காக காத்திருக்கும் அவனுக்கு என்ன பதில் சொல்லி சமாளிப்பது என்று குழம்பி போய் அமர்ந்திருந்தாள். இருப்பினும் சுதாரித்துக் கொண்டு புன்னகையை முயன்று வரவழைத்து, “ஒன்ஸ் அகைன் தேங்க்ஸ் பார் யூவர் ஹெல்ப் அஜய்.” 

 

“பார்த்தியா இப்போவும் சும்மா வாய் வார்த்தையா தான் சொல்ற… பிரெண்ட்க்கு யாராவது நன்றி சொல்லுவாங்களா?” என்று மீண்டும் பேச்சை வளர்க்க, என்னடா இவன்… என்று எரிச்சல் வந்துவிட்டது அவளுக்கு. உதவி கேட்டதும் அதிக உரிமைக்கு எடுத்துக் கொள்கிறானோ என்று கூட தோன்றியது.

 

இருந்தாலும் தனக்கு காரியம் ஆக வேண்டுமே என்று முயன்று தன் உணர்வுகளை அடக்கியவள், “தென்… எப்போ அவரை உங்க மருத்துவமனைக்கு கூட்டிட்டு வர?”

 

“ம்… நீ எப்போ கூட்டிட்டு வந்தாலும் நான் பார்க்க ரெடி. பட் முன்னாடியே சொல்லிடு எனக்கு வேறு அப்பாயின்மெண்ட்ஸ் இருந்தால் மாற்றிக் கொள்கிறேன்.”

 

“நாளை காலையே அழைத்து வரவா?” ஆவலுடன் அவசரமாய் வந்தது அவளது கேள்வி.

 

“விட்டால் இப்போதே பார்க்கச் சொல்லுவ போலிருக்கு?” அவன் கிண்டலாய் கேட்க அவள் அதையே பிடித்துக் கொண்டாள்.

 

“இப்போவே பார்க்குறீங்களா?” சட்டென்று கேட்டவள் அதிக உரிமை எடுத்து அவனை இம்சிக்கிறோம் என்று புரிந்த நொடி, “எனக்கு நாளைக்கு ஆபீஸ் லீவ் போட முடியுமான்னு தெரியல… அதான்…” என்று ஏதோ கூறி சமாளித்தாள். 

 

அவளைப் பொறுத்தவரை இதயன் விரைவிலேயே குணமாக வேண்டும். அவன் குரலை கேட்க வேண்டும். அவன் தன் உயரத்திற்கு நிமிர்ந்த நடை போடுவதை பார்க்க வேண்டும். அவன் விழிகளில் தேங்கியிருக்கும் துக்கம் நீங்கி தெளிவு மற்றும் நிமிர்வை நேராய் கண்ணோடு கண் சந்திக்க வேண்டும். அவனுடன் நிறைய நிறைய பேச வேண்டும். அவன் பேசுவதை கேட்க வேண்டும். அவனுடன் பழக வேண்டும். பழகினால் தானே வளரும் அவளது உணர்வுகளை பிரித்துணர்ந்து அதற்கு உயிர் கொடுப்பதா இல்லை கிள்ளி எறிவதா என்று கண்டுகொள்ள முடியும். 

 

குழப்பத்துடன் வந்தவளுக்கு அஜயின் பேச்சுக்கள் ஒரு சிறு தெளிவை கொடுத்திருந்ததே உண்மை. அந்த தெளிவே அவளை இப்படி சிந்திக்க வைத்தது. அவளது விருப்பத்தை உணர வைத்தது. இதயனை குணப்படுத்துவதில் தீவிரத்தை கூட்டியது. சுருக்கமாக கூறினால் இந்த சந்திப்பில் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்தது போலத் தான் அவளுக்கு. இதயனின் உடல்நிலை கருதி அவனை சந்திக்க வந்தவளுக்கு அகத்தில் குழுமியிருந்த அயற்சிகளும் சேர்ந்து விலகி தெளிவானது. ஆனால் சந்திப்பில் கலந்துகொண்ட மற்றவனுக்கோ பல கற்கள் வீசியும் ஒன்றும் கிடைக்காத நிலை. ஆயினும் தளர்ந்து விடவில்லை அவன். அவளின் வேண்டலுக்கு உடனே தலையசைத்தான்.

 

“ஆனால் இப்போ அவரை கூட்டிட்டு ஹாஸ்பிடல் வந்துட்டு நீ திரும்ப வீட்டுக்கு போகணும்னா லேட் ஆகிடுமே?” விழா எல்லாம் முடிந்து மணி ஒன்பதை தொட்டுக் கொண்டிருக்க அவள் பாதுகாப்பு கருதி யோசனையுடன் கேள்வி எழுப்பினான்.

 

இனியாவின் கண்களோ நேராக கைக்கடிகாரத்திற்கு தான் சென்றது. மணியை பார்த்ததும் அவன் கூறுவதும் சரி தான் என்று தோன்றியது. இனி இதயன் வீட்டிற்கு சென்று அவனை அழைத்துக்கொண்டு மருத்துவமனை சென்று பின் திரும்ப வீட்டில் விட்டுவிட்டு அவள் வீட்டிற்கு செல்ல நடுசாமம் ஆனாலும் ஆகிவிடும். 

 

“ஓகே அஜய்… நாளை பார்க்கலாம்…” என்றுவிட்டு எழுந்தவள் விடைபெற முயல அஜயும் எழுந்துவிட்டான்.

 

“ஹே!… இனியா நீ சரியாக சாப்பிடக்கூட இல்லை. அதற்குள் கிளம்புகிறாய்?” என்று பதற, மென்னகை சிந்தியவள், “என் பிளேட் எம்ட்டியாகத் தான் இருக்கு… உங்க சாப்பாடு தான் அப்படியே இருக்கு அஜய். மிச்சம் வைக்காம சாப்பிட்டுட்டு காலை பத்து மணிக்கு ஷார்ப்பா உங்க ஹாஸ்பிடல் அறையில் இருங்கள்.” என்றுவிட்டு மின்னலென வெளியேறினாள் பெண். அஜய் ஒரு அசட்டு புன்னகையுடன் அவள் செல்வதையே பார்த்துக் கொண்டு நின்றான்.

 

மின்னலென வெளியேறியவளோ நேராக இதயன் வீட்டிற்கு தன் இருசக்கர 

வாகனத்தை விரட்டினாள். அகம் தெளிவடைந்தது அவள் வதனத்தில் பிரதிபலிக்க, மனதில் இருந்த பாரம் பாதி குறைந்தது போல உணர்ந்தாள். இருப்பினும் ஒருவித பதட்டம் எழுவதை தவிர்க்க முடியவில்லை.

 

வாகனத்தை இதயன் வீட்டு வாயிலில் நிறுத்தியது தான் தாமதம் அவள் வண்டி சத்தம் கேட்டு சிவகாமி வெளியே வந்துவிட்டார்.

 

“என்னடா இரண்டு நாளா இந்த பக்கமே வரல… வேலை அதிகமா? யுக்தாவும் இரண்டு நாட்களாகவே வரவில்லை.” என்று வாஞ்சையாய் கேட்ட சிவகாமி அவள் கை பிடித்து உள்ளே அழைத்து வர,

 

“கொஞ்சம் வேலை இருந்தது ஆன்ட்டி அதனால் தான் வர முடியல…” என்று வாய் தான் பதில் அளித்ததே தவிர அவளின் அகமும், விழியும் இதயனின் இருப்பை தேடியது. அகம் சற்று தெளிவடைந்த பின் அவனை சந்திக்கப் போகும் முதல் சந்திப்பு. ஆவல் பெருகி தான் இருந்தது.

 

“சாப்பிடுறீயா? கொத்சு வைத்தேன் தோசை ஊத்தி தரேண்டா காம்பினேஷன் நல்லா இருக்கும்.” சிவகாமி பரிந்துரைக்க அதனை ஒரு மென்முறுவளுடன் மறுத்தவள், இதயன் அறையின் புறம் தன் விழிகளை விரட்டி, “எங்க உங்க செல்ல பசங்க யாரையும் காணும்?”

 

“இந்த வாரம் முழுதும் நீங்க இங்க வந்தீங்க இரண்டு பேரும் கலகலனு இருந்தானுங்க… இப்போ வீடு பழைய மாதிரி ஆயிடுச்சு.” என்றவர் குரல் உள்ளே சென்றுவிட, மாறாய் அவரது கால்கள் துள்ளலுடன் இதயன் அறைக்கு விரைந்தது.

 

“இன்பா இனியா வந்திருக்கா… அண்ணனையும் கூட்டிட்டு வெளியில் வா…” தன் சேயை பற்றி அறியாத தாயா அவர்? இதயனின் உடலிலும், உள்ளத்திலும் எப்போதுடா மாற்றம் வரும் என்று காத்திருந்து, காத்திருந்து நாட்களை கடத்திக் கொண்டிருக்க, இப்போது இனியாவின் மூலமாய் அவனது உள்ளத்தில் நிகழ்ந்திருக்கிறது முதல் மாற்றம். அவனின் உள்ளத்தில் மட்டுமல்ல… அவரின் உள்ளத்திலும் தான். வெளிச்சத்தை நோக்கி பயணிக்க இருளில் கிடைத்த பற்றுக்கோளாகவே இனியா தெரிந்தாள்… அதை கெட்டியாக பிடித்துக்கொள்ளவே விரும்பியது அந்த அன்னையின் உள்ளம்.

 

செவியில் விழுந்த செய்தி சகோதரர்களின் இதழ்களில் முறுவலை தருவிக்க, இதயனின் விழிகளும் ஒளிபெற்று மகிழ்ச்சியில் தவழ்ந்தது.

 

“சரி நீ எப்போதும் போல ஓய்வு எடுடா… நான் போய் இனியாகிட்ட பேசிட்டு வந்துறேன்.” என்று கள்ளத்தனத்துடன் இன்பன் கூற, அதிர்ச்சியில் துவங்கி இரைஞ்சலில் இறங்கியது இதயனின் விழி மொழிகள்.

 

ஓசையின்றி நகைத்துக்கொண்டே இதயனின் வேண்டலை ரசித்தவன் குறும்புடன் கட்டிலை விட்டிறங்கி வாசலை நோக்கி நடைபோட முயல, இதயனின் விழிகள் உதிர்த்த வெளிப்படையான அதிருப்தியில் திருப்தியாகி அவனை கைகளில் ஏந்திக் கொண்டு சக்கரநாற்காலி வாங்க இன்றே பதிவு செய்துவிட வேண்டும் என்று மனதில் குறித்துக் கொண்டான். முன்பே ஒரு முறை வாங்கி இதயனின் மறுப்பால் அதை விற்றிருந்தனர். அவனுக்கு சிகிச்சை அளிப்பவனும் அவனுடைய நண்பன் என்பதால் வீட்டிற்கே வந்து பார்த்துவிட்டு சென்றுவிடுவான். அதனால் அதற்கான அவசியம் இல்லாமல் இருக்க, இப்போது இனியாவால் இதயன் அகத்தில் ஏற்பட்டிருக்கும் மாற்றம் அவனுக்கான வசதிகளை செய்துதர வேண்டும் என்று உந்தியது.

 

“அதிக வேலைபளுவோ? ஆள் அட்ரெஸ் இல்லாம காணாமல் போய்ட்ட?” என்று உரிமையாய் வினா எழுப்பிக்கொண்டே கூடத்திற்கு வந்தான் இன்பன். 

 

அவனின் கேள்வியை மெல்ல உள்வாங்கி பதில் கூற சாவுகாசமாய் குரல் வந்த திசை நோக்கி திரும்பியவள், இதயனை கண்ட நொடி பரபரப்பானாள்.

 

பிடித்தத்தை உணர்ந்தபின்னோ முன்னர் போல இயல்பாய் இருக்க கடினப்பட வேண்டியிருந்தது. 

 

“கொஞ்சம் வேலை அதிகம்.” என்று கூறி சமாளித்தாள். உண்மை அதுவல்லவே…

 

இன்பன் அவனை அங்கிருந்த நாற்காலியில் அமர வைக்க, இதயனின் பார்வை அவளை நட்பு கலந்த நன்றிவுணர்வுடன் தொடர, அவளோ பிடித்தத்துடன் அவனை கண்காணித்தாள். இனியாவின் அதிகப்படியான உதவிகளையும், உரிமையையும் முதலில் எதிர்த்த இன்பன் கூட இப்போது அவளின் வரவை, அவளின் இருப்பை எதிர்நோக்க துவங்கியிருந்தான். 

 

“எனக்கு தெரிந்த மருத்துவர் ஒருவரிடம் இவருடைய சிகிச்சை பற்றி பேசியிருக்கிறேன். நாளை அவர் மருத்துவமனைக்கு வர சொல்லியிருக்கிறார். நீங்கள் வேண்டுமென்றால் பாருங்கள் சீக்கிரமே இவர் குணமாகிவிடுவார்…” என்று இனியா தான் வந்த நோக்கத்தை சுற்றி வளைக்காமல் கூறிவிட,

 

யுக்தாவின் தோழி என்ற போர்வையில் இத்தனை நாள் உரிமையுடன் வலம் வந்தவள், இப்போது அவர்களின் நலம் விரும்பியாய், அவர்களின் குடும்பத்தில் ஒருத்தியாய் தெரிந்தாள். 

 

கரும்பு தின்ன கூலியா! சிவகாமி தலை அவளின் யோசனைக்கு மறுப்பின்றி வேகமாக ஆடயது.

 

இன்பனோ நெகிழ்ச்சியுடன், “எப்போ போகணும் இனியா? நேரம் சொன்னால் அதற்கேற்றது போல் என் வேலையை சீக்கிரம் முடித்துக் கொள்வேன்.” என்று வினவ, இதயனின் இதழிலும், விழியிலும் மென்மையும், எதிர்பார்ப்பும் போட்டிப் போட்டுக்கொண்டு வந்தது. 

 

சகோதரர்கள் மனதில் நம்பிக்கை துளிர் விட, எவ்வளவோ சிகிச்சைகள் எடுத்தும் குணமாகும் சாத்தியக்கூறுகள் இதுவரை தென்படவில்லை என்றதும் கிட்டத்தட்ட ஒவ்வொருவரும் தொய்வு நிலையில் அயர்ந்திருக்க, இனியாவின் முயற்சியும், ஆர்வமும், நம்பிக்கைவூட்டும் வார்த்தைகளும்  நேர்மறை சிந்தனைகளை அவர்களுள் விதைத்தது.

 

“காலை பத்து மணிக்கு.”

 

“பத்து மணிக்கா?…” என்று யோசனையுடன் இழுத்தவன், பின் ஏதோ முடிவெடுத்தவனாய், “ஓகே இனியா. எந்த டாக்டர்? எங்கே பார்க்கிறார் என்று சொல். நான் நாளை விடுப்பு எடுத்து அவனை அழைத்துச்சென்று வந்துவிடுகிறேன்.”

 

“நானே வருகிறேன்… அவர் எனக்கு பரிட்சயம் தான்… நான் வந்தால் தெளிவாக எல்லாவற்றையும் கேட்டுக்கொள்ள முடியும்… நான் நாளைக்கு அரை நாள் விடுப்பு சொல்லிவிட்டு வந்துவிடுகிறேன்… நீங்கள் எல்லா ரிப்போர்ட்ஸையும் எடுத்துக் கொள்ளுங்கள்… இதை சொல்லத் தான் வந்தேன்.. நேரமாகிவிட்டது காலை பார்க்கலாம்.” என்றுவிட்டு அவள் கிளம்ப,

 

“இன்பா துணைக்கு போடா… மணி பத்தாகப் போகிறது…” சிவகாமி மகனை ஏவ,

 

மின்னலாய் வந்தது இனியாவின் பதில், “பரவாயில்லை ஆன்ட்டி… வீடு இங்க பக்கம் தான்… நானே போயிடுவேன். எனக்கு பழக்கம் தான்…”

 

“இல்லடா… நான் இன்பாவை துணைக்கு அனுப்புறேன்… இந்த நேரத்திற்கு தனியாக போக வேண்டாம்.” என்று சிவகாமி பிடிவாதமாய் நிற்க, அப்போது தான் தன் வீட்டில் இங்கு வந்து செல்வது பற்றி மூச்சுவிடாதது நினைவு வந்தது. இப்போது இன்பனுடன் சென்று நின்றால்… கேள்விகள் முளைக்கும். யுக்தாவின் கணவனாகப் போகிறவன் தான் எனினும் அஜய் அழைப்புக்கு இணங்க அங்கு சென்றுவிட்டு இவனோடு எப்படி திரும்பி வந்தாள் என்ற கேள்விகள் எழும்… இதயனைப் பற்றி சொல்ல வேண்டி வரும். ஏற்கனவே அவள் அன்னைக்கு இதயன் நிலை குறித்து பெரிதாக எவ்வித நேர்மறையான எண்ணங்கள் இல்லை எனும்போது அவள் பழகுவது தெரிந்தால்… 

 

அவன் குணமானதும் அவனை இழுத்துச் சென்று தன் பெற்றோர் முன் நிறுத்தி அறிமுகம் செய்யவே விருப்பம் அவளுக்கு. யுக்தா நிச்சயதார்த்தம் அன்று கீதா இதயனை பற்றி பேசிய போதே முடிவு செய்தது தான். அதை மாற்ற அவளுக்கு விருப்பமில்லை.

 

“நீங்கள் தூங்கப்போகும் நேரத்தில் வந்து ஏற்கனவே உங்களை தொந்தரவு செய்துவிட்டேன்… நீங்க தூங்குங்க… இந்த தெரு முனை திரும்பினால் ஐந்தாறு வீடு தள்ளி தான் எங்க வீடு இருக்கு… நான் பார்த்துக்குறேன்.” என்று கூற அதற்கு மேல் அவளை வற்புறுத்த விரும்பாது அவள் அந்த தெரு முனை திரும்பும் வரை தாயும் மகனும் வாசலில் நின்று உறுதி செய்துகொண்டு உள்ளே நுழைந்தனர். செல்லும் முன்பு மறவாது இதயனிடம் கண்களாலேயே விடைபெற, பிரகாசமாய் புன்னகைத்து புரிதலாய் கண்சிமிட்டினான் இதயன். 

 

*^*^*

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!