Skip to content
Post Views: 1,553
அத்தியாயம் 12
பிரத்தியங்கரா புன்னகையுடன் திரும்பி பார்த்தாள். அங்கே அமுதா நின்று கொண்டிருந்தாள்.
Advertisement
“அமுதா…” என்றாள் வாய் நிறைய.
கொல்லிக்கும் அது பிடித்திருந்தது!
Advertisement
Advertisement
“அன்னைக்கு நீ எங்க போயிட்ட? கண்ணுல தூசி விழுந்துட்டுனு கண்ணை தேய்ச்சிட்டு பாக்குறதுக்குள்ள காணாம போயிட்ட.” என கேட்டாள் பிரத்தியங்கரா.
“கையில என்ன வச்சிருக்க?” என பேச்சை மாற்றினாள் அமுதா.
Advertisement
“இது உனக்காக தான் வாங்கிட்டு வந்தேன். இந்தா…” என அட்டை பெட்டியோடு கொடுத்தாள் பிரத்தியங்கரா.
“என்னது இது?” என புரியாமல் பார்த்தாள் கொல்லி.
“நீ இங்க வெறும் காலோட சுத்துறல… அதுக்கு தான் உனக்கு ஷூ வாங்கிட்டு வந்தேன். இதை போட்டுக்கோ. மலை ஏறி இறங்க உனக்கு கஷ்டமா இருக்காது.” என்றாள் பிரத்தியங்கரா.
அதை கேட்டு சத்தமாக சிரித்தாள் அமுதா (கொல்லி).
காடு முழுவதும் இருந்த பறவைகள் அந்த சத்தத்திற்கு கேட்டு அஞ்சி ஒரே நேரத்தில் பறந்து சென்றன.
“என்னாச்சு ஏன் பறவைங்களாம் பறக்குது?” என புரியாமல் குழம்பினாள் பிரத்தியங்கரா.
அமுதா ஒரு பார்வை வானத்தை நோக்கி பார்த்ததும், பறவைகள் தங்களது பயத்தை விட்டு, தங்களது இருப்பிடத்திற்கு சென்றன.
பிரத்தியங்கரா குழம்பி கொண்டு இருக்கையிலே, சக்திவேல் அவளை நோக்கி வர ஆரம்பித்துவிட்டார்.
“இதை நீயே வைத்துக் கொள். நான் உன்னை உன் உறைவிடத்தின் அருகிலே வந்து சந்திக்கிறேன்.” என்று சொல்லிவிட்டு, அங்கிருந்து சென்றாள் அமுதா.
அமுதா செல்லும் பொழுது, அவளின் நீளமான கருங்கூந்தலில் சூரிய ஒளி பட்டு மின்னியது! அதை ஆச்சரியமாக பார்த்து கொண்டிருந்தாள் பிரத்தியங்கரா.
“பாப்பா ரெசார்ட்டுக்கு போகலாங்களா?” என கேட்டார் சக்திவேல்.
பிரத்தியங்கராவும் தலையாட்ட, இருவரும் காரை சென்றடைந்தனர்.
சக்திவேலுக்கு ஒரே யோசனை. திடீரென்று வீசிய சூறை காற்றும், ஒட்டு மொத்த பறவைகளும் திடீரென பறப்பதும் எதுவோ சரியில்லை என்றே தோன்றியது அவருக்கு. அத்தோடு மட்டுமல்லாது, பிரத்தியங்காரவிற்கு இரத்த காயமெல்லாம் ஏற்பட்டிருக்கிறது. எல்லாம் கூட்டி கழித்து பார்த்தாள் அவளுக்கு தான் எதுவோ சரியில்லையோ என தோன்றியது சக்திவேலுக்கு.
“பாப்பா இங்க ஒரு சாமியாரு இருக்காரு. நாளைக்கு அவரை போயி பாத்துட்டு வருவோமா?” என கேட்டார் சக்திவேல்.
“எங்க திரும்பினாலும் கோவிலும் சாமியாரும் மட்டும் தானா உங்க ஊருல?” என கேட்டாள் பிரத்தியங்கரா.
“சென்னை மாதிரி இது என்ன பெரிய ஊராமா? இங்க இவ்வளவு தான் இருக்கும்.” என்றார் சக்திவேல்.
சொன்னது போலவே அடுத்த நாள் கொல்லிமலையிலே குறி சொல்லும் ஒருவரிடம் கூட்டி சென்றார் சக்திவேல்.
நீண்ட நேரமாக அவளின் கையை ஆராய்ச்சி செய்த சாமியாரோ, “உனக்கு அந்த எட்டுக்கை அம்மனோட அருள் பரிபூரணமா இருக்கு தாயி. உன் எதிர்காலம் அம்சமா இருக்கும். நோய் நொடி இல்லாம பிள்ளைங்க பெத்து மகராசியா வாழுவ…” என்றார் அவர்.
பிரத்தியங்கராவிற்கு இதெல்லாம் கூச்சமாக இருந்தது. திருமணத்தை பற்றி கூட சொல்லாமல் நேரடியாக அவர் பிள்ளைகளை பற்றி பிரத்தியங்கராவிற்கு எதுவுமே பேச முடியவில்லை. அவரிடம் தன் எதிர்காலம் எப்படி இருக்கும் என்னவெல்லாம் நடக்கும் என எதையும் கேட்கும் நுட்பம் எல்லாம் அப்பொழுது அவளுக்கு இல்லை.
சக்திவேல் தனக்கும் தன் குடும்பத்திற்கும் அருள் கேட்டுக் கொண்டார்.
வழக்கம் போல எட்டுக்கை அம்மன் கோவிலுக்கு சென்றுவிட்டு, அமுதா வருகிறாளா என பார்த்துக் கொண்டிருந்தாள் பிரத்தியங்கரா. நேரமாகிவிட்டது என சக்திவேல் தான் அவளை அழைத்து வந்து ரிசார்ட்டில் விட்டுவிட்டு போனார்.
பல நாள்கள் ஆகிவிட்டது கார்த்திக்கோடு பேசி. எப்படியும் ஒருவாரம் பக்கம் இருக்கும். அவனுக்கு அழைக்கவா வேண்டாமா என்ற சிந்தனையிலே இருந்தாள் பிரத்தியங்கரா.
இப்பொழுதெல்லாம் யோசிக்க நிறைய நேரம் இருக்கிறது அவளுக்கு. தான் செய்வது உண்மையிலே காதல் தானா என்று சந்தேகம் நாளுக்கு நாள் வலுத்துக் கொண்டே போகிறது. காதல் என்பது கூட உறுதியில்லாமல் எப்படி திருமணம் வரை வந்தோம் என நினைத்தாலே அவள் மீதே அவளுக்கு கோபம் வருகிறது.
எதை எதையோ நினைத்து அமுதாவின் நியாபகம் வந்தது அவளுக்கு. இங்கு வருகிறேன் என சொன்னாளே, தேடி பார்ப்போமா என்று வெளியே கிளம்பினாள் பிரத்தியங்கரா.
வானம் சிவப்பையும் நீலத்தையும் அள்ளி தெளித்து கொண்டு, கிறுக்கன் வரைந்த ஓவியமாக இருந்தது. அன்றைய சம்பவம் மட்டும் நடக்கவில்லை என்றால், இந்த கொல்லிமலை மிக மிக அழகிய மலை என்று மட்டுமே நம்பிக் கொண்டு இருந்திருப்பாள் பிரத்தியங்கரா.
கொஞ்ச தூரம் நடந்து சென்றவளுக்கு, சுற்றிலும் பூமணம் வீசுவது போல இருந்தது. எந்த பூ என்று தெரியவில்லை. ஆளையே மயக்குவது போல இருந்தது.
“பிரத்தியங்கரா…” என்று அழைத்தாள் அமுதா.
உடல் சிலிர்த்து கொண்டது பிரத்தியங்கராவிற்கு.
திரும்பி பார்த்தாள். அங்கே அமுதா இருந்தாள்.
“அமுதா…” என புன்னகை ததும்ப அவளிடம் ஓடி வந்தாள் பிரத்தியங்கரா.
கொல்லிக்கு மனிதர்களை கண்டாலே ஆகாது. நயவஞ்சகமான கூட்டம். இருக்க இடத்தை கொடுத்தால் மடத்தை பிடிங்கி கொள்ள எண்ணும் பேராசை பிடித்தவர்கள். அத்தனை பேரிலும் அவளுக்கு பிரத்தியங்கராவை மட்டும் மிக பிடித்திருந்தது.
முதலில் அவளால் தன்னை காண முடிகிறது என்பதே ஆச்சரியமாய் இருந்தது கொல்லிக்கு. அவளுடன் பழகும் பொழுதும் அவளின் தூய ஆன்ம மலரை கொல்லியால் உணர முடிந்தது. கலங்கங்கள் ஏதூமற்ற தூய உயிரினத்தை பார்த்து எத்தனை காலம் ஆகிற்று! அதுவும் தன்னை கண்டால் பயந்து ஓடி ஒளியாமல், ஆசையாய் பேச வரும் பெண்ணை கண்டதும் மிகவும் பிடித்து போனது கொல்லிக்கு. இதுவரையில் பேச்சு துணைக்கு கூட யாரும் இல்லாது, கடமை ஒன்றே தனது குறிக்கோள் என்றிருக்கும் கொல்லியை, பிரத்தியங்கராவின் தூய நேசம் அசைத்துவிட்டது.
“உன்னை தான் தேடிட்டே இருந்தேன் தெரியுமா?” என்று புன்னகையோடு சொன்னாள் பிரத்தியங்கரா.
அமுதாவின் முகத்திலும் புன்னகை.
“என்னை தேடுனியா?”
“ஆமா…”
“எதுக்கு?”
“இதென்ன கேள்வி? உனக்கு நான் ஷூ வாங்கி வச்சிருந்தேன்ல. அதை குடுக்கனும்னு தான் நினைச்சிட்டு இருந்தேன்.” என்றவளுக்கு அப்பொழுது தான் தான் வாங்கிய ஷூக்கள் அறையிலே இருந்தது நியாபகம் வந்தது.
அமுதா நிஜமாகவே இங்கே இருப்பாள் என எதிர்பாராததாள், பிரத்தியங்கரா ஷூக்களை எடுத்து வரவில்லை.
“அடடா எடுத்துட்டு வர மறந்துட்டேனே…” என தலையிலே தட்டிக் கொண்டாள் பிரத்தியங்கரா.
“பரவாயில்லை விடு…”
“உனக்காக தான் வாங்கினேன் அமுதா. என் கூட ரூமுக்கு வாயேன். உனக்கு எடுத்து தர்றேன்.”
“அங்கெல்லாம் நான் வர மாட்டேன்.”
“ஏன்? அது நல்ல இடம் தான்!”
“அழகான வனத்தை சிதைத்து கட்டிய கட்டிடம்!”
சொல்லும் பொழுதே உக்கிரம் ஏறியது கொல்லிக்கு.
“கஷ்டம் தான். ஆனா என்னை மாதிரி சாமி கும்பிட வர்றவங்க, சுத்தி பாக்க வர்றவங்களாம் தங்குறதுக்கு இடம் வேணும்ல.” என்றாள் பிரத்தியங்கரா.
கொல்லி எதுவுமே பேசவில்லை.
“சரி உனக்கு பிடிக்கலைனா விடு. நான் போயி எடுத்துட்டு வர்றேன்.” என்றவள் வேகமாக நடந்து சென்றாள்.
பிரத்தியங்கராவையே பார்த்தபடியே இருந்தாள் அமுதா.
அறைக்கு சென்றவள், ஷீ டப்பாவை எடுக்கும் பொழுது, தான் வாங்கி சாப்பிடுவதற்காக வைக்கப்பட்ட தின்பண்டங்களை கண்டவள், அதையும் எடுத்துக் கொண்டு, சற்றே குளிர் எடுப்பது போல இருக்க, ஜெர்கினையும் அணிந்து கொண்டு தான் திரும்பி வந்தாள்.
“நல்ல வேளை அமுதா நீ எங்கையாச்சும் திரும்ப காணாம போயிருப்பியோன்னு பயந்துட்டே தான் வந்தேன்.”
அமுதா எதுவும் பேசாமலே நடந்தாள். அவளோடு வளவளவென பேசிக் கொண்டே நடந்தாள் பிரத்தாயங்கரா.
வழிப் பாதையில் மரம் ஒன்று முறிந்து விழுந்து கிடந்தது. அதன் அருகில் சென்ற பிரத்தியங்கரா, அதை சுற்றிலும் நன்றாக பரிசோதித்து விட்டு, “அமுதா இங்க வா… இங்க வந்து உட்காரு…” என்றாள்.
அடர்ந்து பரந்து விரிந்திருக்கும் இந்த மொத்த கொல்லி மலைக்கும் காவல் தெய்வமான கொல்லிப் பாவைக்கே பாதுக்காப்பை உறுதிபடுத்திக் கொண்டாள் பிரத்தியங்கரா!
‘முட்டாள் பெண்’ என மனதிற்குள்ளே பிரத்தியங்கராவை பற்றி எண்ணி சிரித்துக் கொண்டே வந்து அமர்ந்தாள் அமுதா.
“அமுதா காலை நீட்டேன்.” என்றாள் பிரத்தியங்கரா.
அமுதாவும் காலை நீட்ட, அவளுக்கு ஷூவினை எடுத்து அணிவித்துவிட்டாள் பிரத்தியங்கரா.
“அளவெல்லாம் நல்லா இருக்கா? உனக்கு பிடிச்சிருக்கா அமுதா?” என கண்களில் ஒரு எதிர்பார்ப்போடு கேட்டாள் பிரத்தியங்கரா.
ஷூக்களை அணிந்ததும் கால்கள் திடீர் புழுக்கமாக இருப்பதையும், அதே சமயம் பாதங்கள் நோகாமல் மெத்தன்று இருப்பதையும் உணர்ந்தாள் அமுதா.
“இரண்டு அடி நடந்து பாரு அமுதா. அப்போ தான் கரெக்ட்டா இருக்கா இல்லையான்னு தெரியும்.” என அமுதாவின் தயக்கத்தை கண்டு ஊக்கினாள் பிரத்தியங்கரா.
அமுதாவிற்கு ஷூக்களை அணிந்திருப்பது கால்கள் பாரமாக இருப்பது போல இருந்தது. மெல்ல மெல்ல நடக்க, கல்லும் முள்ளும் குத்தாது நடப்பது சுகமாக இருந்தது.
“நல்லா இருக்குல?” ஆசையாக கேட்டாள் பிரத்தியங்கரா.
ஆமாம் என தலையசைத்தாள் அமுதா.
“இந்தா உனக்காக கேக் எடுத்துட்டு வந்தேன் சாப்பிடு.” என கொடுத்தாள் பிரத்தியங்கரா.
“இது என்னது?” என கேட்டு திருப்பி திருப்பி பார்த்தாள் அமுதா.
தொடுவதற்கு பஞ்சு போல கலர் கலராய் இருந்தது. பஞ்சை போய் சாப்பிடுவதா என்று இருந்தது அமுதாவிற்கு.
“சூப்பரா இருக்கும் அமுதா சாப்பிட்டு பாரு...” என கேக்கில் ஒரு சிறு துண்டை ஊட்டி விட்டாள் பிரத்தியங்கரா.
கேக்கின் இனிப்பானது அமுதாவின் நாக்கில் பட்டதும் அவளுக்கு அந்த சுவை மிகவும் பிடித்துவிட்டது.
“இது… இது… இப்படி ஒன்றை நான் சுவைத்ததே இல்லை.” என்ற அமுதாவிற்கு வியப்பாக இருந்தது.
அவள் வாழ்ந்த காலத்தில் இவ்வளவு மிருதுவாக, நாக்கில் பட்டாலே கரைவது போல, இனிப்பை அவள் உண்டதில்லை. மிகவும் பிடித்திருந்தது அமுதாவிற்கு.
“இந்தா இதையும் சாப்பிடு.” என இன்னொரு கேக் துண்டையும் கொடுத்தாள் பிரத்தியங்கரா.
அமுதா வேக வேகமாக அதை சாப்பிடுவதை கண்டு ரசித்தாள் பிரத்தியங்கரா.
“பொறுமையா சாப்பிடு அமுதா. இல்லைனா விக்கல் எடுக்கும் பக்கத்துல தண்ணீ கூட இல்லை.”
அமுதா சாப்பிட்டு முடிக்கவும் சூரியன் அந்தி சாயவும் சரியாக இருந்தது. இதற்கு மேலும் பிரத்தியங்கரா இங்கே இருப்பது உசிதமில்லை என்று தோன்றியது கொல்லிக்கு.
“நேரம் ஆகிவிட்டது. நீ கிளம்பு.” என்றாள் அமுதா.
“சரி நான் கிளம்பறேன்.” என்ற பிரத்தியங்கரா, அமுதாவை பார்த்து, “உனக்கு குளிராதா? எப்படி தினமும் ஒரே போல ட்ரெஸ் போட்டிருக்க?” என கேட்டாள்.
பிரத்தியங்கரா பயன்படுத்திய ஆங்கில வார்த்தை புரியாமல் நின்றாள் அமுதா.
“எதை கேட்டாலும் இப்படியே பதில் சொல்லாம நில்லு.” என அமுதாவை கடிந்துக் கொண்டு, தான் அணிந்திருந்த ஜெர்கினை கலட்டி, அமுதாவிற்கு அணிவித்தாள் பிரத்தியங்கரா.
சோள கொல்லை பொம்மை போல காட்சி அளித்தாள் அமுதா.
“சரி நான் போயிட்டு வர்றேன். நீ பத்திரமா உன் வீட்டுக்கு போ.” என்றவள், லேசாக குளிரவும் வேகமாக ரெசார்ட்டிற்கு ஓடி சென்றாள்.
ஓடும் அவளையே பார்த்து கொண்டிருந்தாள் அமுதாவாகிய கொல்லி.
error: Content is protected !!