Skip to content
Post Views: 6,329
அத்தியாயம் – 19
“பாப்பா எங்க????” ஊருக்குள் சென்று அனைவருக்கும் அழைப்பு விடுத்து வந்த பின் நாட்டரசன் கேட்ட முதல் கேள்வியே இதுதான்.
Advertisement
பொங்கல் கிண்டி முடித்து அப்போது தான் வைஜெயந்தியும், சங்கீதாவும் அதை உள்ளே கொண்டு போயிருக்க, அபிஷேகம் செய்வதற்கு தாம்பாளத்தில் அனைத்தையும் எடுத்து வைத்துக் கொண்டிருந்த இளவரசிக்கு அந்த நொடி வினய்யும் அவர்களுடன் சென்றிருக்கிறான் என்பதே நினைவில் வராமல் போனது தான் கடவுளின் திருவிளையாடலோ??
Advertisement
“மாப்பிள்ளைக்கு தோட்டத்து வீட்டைக் காமிக்க நான் தான் அனுப்பி வச்சேன்!! பொங்கல் பொங்கிடுச்சு.. சாமி கும்பிட கூட்டிட்டு வாங்க அவங்களை!!” என அவரை நிமிர்ந்தும் பார்க்காமலே தன் வேலையில் அவர் கவனமாக இருக்க, அதுதான் பிழையாகிப் போனது. பார்த்திருக்க வேண்டுமோ???
Advertisement
பார்த்திருந்தால் நிச்சயம் அவர் வினய்யைத் தேடி நாலாபக்கமும் கண்களை சந்தேகத்துடன் சுழற்றியது இளவரசியின் கண்களில் தப்பாமல் விழுந்திருக்கும். என்ன செய்ய?? நடத்திக் காட்டுபவன் இறைவன் எனில், கைகட்டி வேடிக்கை மட்டுமே பார்க்க முடிகிறது மானிடர்களால்.
Advertisement
இத்தனை நேரமும், சதீஷுடன் வினய் ஒட்டிக்கொண்டே சுற்றியது நாட்டரசன் மனதில் வலம் வர, இப்போது அவனும் இங்கில்லாதது அவரின் சந்தேகத்தை வலுவாக்க, அடுத்த நொடி அங்கிருந்து விரைவாக தோட்டத்தை நோக்கி அவர் சென்று கொண்டிருந்தார்.
“சித்தி!! சித்தப்பா எங்க இவளோ வேகமா போறாரு??” என கேட்டுக்கொண்டே சந்தோஷ் வர,
“மாப்பிள்ளையை கூப்பிடத் தான்!!! சரி இந்தா இதை கொண்டு போய் உள்ள கொடு!! நேரமாச்சு சாமி கும்பிட்டிடலாம்” என அவர் தாம்பலத் தட்டை எடுத்துக் கொண்டு நிமிர,
“அட என்ன சித்தி!! அங்க சதீஷ் மாப்பிள்ளை கூட வினய்யும் இருக்காரே!! சும்மாவே அவரைக் கண்டா சித்தப்பாக்கு ஆகாது.. இப்போ அவர் இருக்கப்போ தனுவை எதுக்கு தனியா அனுப்பி வைச்சீங்கன்னு சண்டை போடப் போறாரு” என கலவரத்துடன் சொல்லிய சந்தோஷ், சதீஷிற்கு அழைத்து எச்சரிக்க முயல,
அந்தோ பாவம், அவன் தொழில் சம்பந்தமாக அமைச்சர் ஒருவரிடம் முக்கியமான அழைப்பில் இருக்க, இவனின் அழைப்பு காத்திருப்பிலே போய் அவனை மேலும் கலவரமூட்டியது.
அடுத்ததாய் அவன் வினய்க்கு அழைக்க, அவனோ வந்தனாவிடம் மனம் விட்டு பேசும் பொழுது எவ்வித தொந்தரவும் வந்துவிடக் கூடாதென்று முன்னெச்சரிக்கையாக கைபேசியை சைலண்டில் போட்டு வைத்திருக்க, சந்தோஷின் அழைப்பு எடுக்கப்படாமலே போனது.
‘இது சரிவராது!!’ என்றெண்ணிய சந்தோஷ்,
“நான் போய் பார்த்துட்டு வரேன் சித்தி!!” என இளவரசியின் பதிலைக் கூட எதிர்பார்க்காமல் அவன் ஓடியிருக்க,
இளவரசிக்கு இவனின் இந்த அதீத பதற்றம், சந்தேகத்தை தோற்றுவித்தது.
‘சதீஷும் உடன் இருக்கையில் இவன் ஏன் இவ்வளவு பதறுகிறான்??’ என குழம்பியவர், சற்றும் யோசிக்காமல் அவனைப் பின் தொடர்ந்து தோட்ட வீட்டிற்கு ஓடினார்.
இங்கே இத்தனை பேர் இவர்களைத் தேடி வந்து கொண்டிருப்பது தெரியாமல் வினய்யும் வந்தனாவும் தங்களுக்கான உலகில் சஞ்சரித்துக் கொண்டிருக்க, சதீஷோ அவர்களுக்குத் தனிமை அளிக்க வேண்டி, வீட்டை விட்டு சற்று தூரம் வந்து அந்த அமைச்சருடன் தீவிர ஆலோசனையில் இருந்தான்.
சந்தேகத்துடன் அங்கே வந்து கொண்டிருந்த நாட்டரசனின் கண்களில், சதீஷ் தனியாக நின்று கைபேசியில் யாருடனோ பேசிக் கொண்டிருக்கும் காட்சி விழ,
‘இவர் மட்டும் இங்க இருக்காரு?? அப்போ அவன்???’ என அவரின் உள்ளம் வேகமாக எதையோ கணக்கிட, அடுத்த நொடி அவரின் நடையின் வேகம் அதிகரிக்க,
கோபத்துடன் தோப்பு வீட்டை அவர் அடைவதற்கும், உள்ளிருந்து வெட்கச் சிதறல்களுடன் மோகனப் புன்னகையுடன் வினய்யும் வந்தனாவும் வெளியே வருவதற்கும் சரியாக இருக்க,
இருவர் முகத்தில் இருந்த ஒளியும், உதட்டோரம் உரைந்திருந்த மந்தகாசப் புன்னகையும் அவருக்கு ஏதேதோ கதைகள் சொல்ல, அந்த நொடி அவர் சுத்தமாய் தன்னை மறந்து கோபத்தின் பிடியில் சிக்கியிருக்க, அவர் பார்வைக்கு மட்டும் எரிக்கும் சக்தி இருந்திருந்தால், இந்நொடி வினய்யும் வந்தனாவும் சாம்பலாகி காற்றோடு கரைந்திருப்பர்.
வெளியே வந்த இருவருமே அங்கே நாட்டரசனை துளியும் எதிர்பாராமல் ஒரு நொடி அதிர்ந்து நின்று விட, வந்தனாவிற்கு பயத்தில் மூச்சே நின்று போனது.
இத்தனை நேரமும் அவன் காதல் கொடுத்த நம்பிக்கையும், தைரியமும் நாட்டரசனின் பார்வையில் எங்கேயோ விடைபெற்று பறந்திருக்க, அவர் கண்களில் தெரிந்த கோபத்தில் அவள் வெளிப்படையாகவே நடுங்கத் தொடங்கி விட,
அதை உணர்ந்த வினய், வருவது வரட்டும் எனும் மனநிலைக்கு வந்து அவள் அருகில் நெருங்கி நின்றவன்,
“வதனா!! டோண்ட் பேனிக்!!! நான் இருக்கேன்!! பார்த்துக்கலாம்” என மெல்லிய குரலில் அவளுக்கு ஆறுதல் அளிக்க,
அதுவெல்லாம் அவளின் செவியில் விழுந்தால் தானே!?
அவளின் கண்கள் எல்லாம், நாட்டரசன் அடுத்து என்ன செய்வாரோ என மிரட்சியோடு அவரையே பார்த்திருக்க, மற்ற எதுவும், எவரும் அவள் கருத்தில் பதியவில்லை.
இருவர் வந்து நின்ற தோற்றமே அவருக்கு பல கதைகளை கட்டியம் கூற, இப்போது இதோ, வினய்யின் ஆறுதல் அவரின் சந்தேகத்தை ஊர்ஜிதப்படுத்த, மொத்தமாய் தன்னிலை இழந்து, மிருகமாய் மாறிய தருணம் அது!!!
“பொறுக்கி நாயே!!! அங்க தொட்டு இங்க தொட்டு என் வீட்டுலயே கை வச்சுட்டியா நீ??? உன்னை இன்னைக்கு கொல்லாம விட மாட்டேன் டா!!!” என அடிக்கப் பாய்ந்து வந்த நாட்டரசனைக் கண்டு துளியும் அஞ்சாமல் அவன் துணிவாய் எதிர்த்து நிற்க,
நாட்டரசனின் கூற்றில் சுயம் வந்த வந்தனாவிற்கு, அவர் வினய்யை அடிக்க வருவது பெரும் அதிர்ச்சியைக் கொடுக்க, அடுத்த நொடி வினய்யை மறித்தவாரு அவள் வந்து நிற்க, அவன் சுதாரிக்கும் முன்பே நாட்டரசனின் கரங்கள் அவளின் பஞ்சுக் கன்னத்தில் இடியாய் இறங்கியிருக்க, அந்த அடியின் வீரியத்தை தாங்க மாட்டாமல் அவள் இரண்டு சுற்று சுழன்று போய் கீழே விழுந்திருந்தாள்.
வந்தனா இப்படி இடையில் வருவாள் என நினைத்திராத நாட்டரசன் ஒரே ஒரு நொடி அதிர்ந்து போய் நிற்க, அடுத்த நொடியே அவனைக் காக்க இவள் வருகிறாள் என்றால்?? இவளுக்கு எவ்வளவு திண்ணக்கம் இருக்க வேண்டும் என அவளின் மேல் மேலும் கோபம் கொண்டார்.
வினய்யோ, இதை சற்றும் எதிர்பாராமல், “வதனா!!!!!” என கத்திக்கொண்டே அவளைத் தாங்கியவன்,
“நீ எதுக்கு டா உள்ள வந்த?? நான் பார்த்துப்பேன் தான??? இப்போ பாரு!! ரொம்ப வலிக்குதா??” என அவரின் அடியில் சிவந்து கைவிரல்கள் பதிந்திருந்த அவனின் பட்டுக் கன்னத்தை ஒரு விரல் கொண்டு லேசாய் வருடியவாறே கலங்கிவிட்ட குரலில் வினய் கேட்க,
இருவரையும் இங்கேயே கொன்று போட்டுவிடும் ஆவேசம் பிறந்தது நாட்டரசனுக்கு.
அதற்குள் சந்தோஷ் வந்திருக்க, அவரைத் தொடர்ந்து வந்த இளவரசி தான் கண்ட காட்சியில் சிலையாய் சமைத்து விட்டார்.
“எவ்ளோ தைரியம் இருந்தா என் முன்னாலேயே அவ மேல கையை வைப்ப?? நீயும் என்ன அவனை தொட விட்டுட்டு வேடிக்கை பார்த்திட்டு இருக்க?? உன்னையை இப்படித்தான் வளர்த்தேனா??? பொட்டைக்கழுதை!!! என் மானத்தை வாங்குன உன்னையும் இவனையும் இன்னைக்கு என்ன பண்றேன் பாரு!!” என கோபம் கண்ணை மறைக்க, மீண்டும் அவர் இருவரையும் அடிக்கப் பாய,
சந்தோஷ் அவரை பின்னால் இருந்து இழுத்துப் பிடித்திருந்தான்.
“சித்தப்பா பொறுமையா இருங்க!! எதுனாலும் பேசிக்கலாம்” என அவன் சமாதானப் படுத்த முனைய, அதற்கெல்லாம் அடங்கும் ஆளா நாட்டரசன்??
அவன் பிடியில் இருந்து திமிறிக் கொண்டே, “நீங்க எல்லாரும் கூட்டு தான டா?? விடுறா முதல்ல!! உன்னை பெத்த பையன் மாதிரி நினைச்சிருந்தேன்.. ஆனா நீ என் முஞ்சில கரியை பூசிட்ட தான?? விடுறா என்னை!!” என கத்திக் கொண்டே அவனிடமிருந்து தன்னைப் பிரித்துக் கொள்ள அவர் முயற்சி செய்ய,
அதற்குள் இவர்களின் சத்தம் கேட்டு, சதீஷ் மற்றவர்களுக்கு தகவல் சொல்லிவிட்டு இங்கே ஓடி வர, அவனைத் தொடர்ந்து மற்றவர்களும் அங்கே கூடி விட்டிருந்தனர்.
சங்கீதா வந்தனாவிடம் விரைய, வைஜெயந்தியோ அங்கே இன்னும் நடப்பதை நம்பமுடியாமல் நின்றிருந்த இளவரசியை கவனிக்கச் சென்றார்.
அறிவழகன் அங்கே வந்ததுமே,
“அரசா!! என்ன இது?? கொஞ்சம் பொறுமையா இருப்பா.. எதுக்கு இவ்வளவு கோபம்?? எதுநாலும் பேசி சரி பண்ணிக்கலாம்” என தன்மையாகவே அவரைக் கையாள முனைய,
தந்தை வந்துவிட்ட நிம்மதியில் சந்தோஷ் லேசாய் தன் பிடியை தளர்த்திய சமயம், அவனிடமிருந்து வெளிவந்த நாட்டரசன், சண்டைக்கோழியாய் சிலிர்த்துக் கொண்டு நின்றார்.
“முதல்ல அவ மேல இருந்து கையை எடுடா!! இல்லை நான் மனுஷனாவே இருக்க மாட்டேன்!!” என அவர் வினய்யிடம் நகர,
வந்தனாவை முழுதாய் சங்கீதாவிடம் ஒப்படைத்து விட்டு, தன் முழு உயரத்திற்கும் நிமிர்ந்து நின்ற வினய், கைகளைக் கட்டிக் கொண்டு அவரை அழுத்தமாய் பார்த்திருந்தான்.
அவனின் இந்த நேர்கொண்ட பார்வை அவருக்குத் திமிராய்த் தோன்ற, அது மேலும் அவரை சினமூட்டியது.
“என்னடா முறைக்கிற??” என இவர் எகிறிக் கொண்டு போக,
அவரை அடக்குவதே சந்தோஷிற்கு பெரும் பாடாய் போனது.
“என்ன சொல்லி டா என் மகளை மயக்குன??? உன் பொறுக்கி வேலையை என் வீட்டுலயே காமிச்ச உன்னை வெட்டிப் போடுற அளவுக்கு ஆத்திரம் வருது!!” என கத்திக் கொண்டிருந்தவர்,
வந்தனாவிடம் திரும்பி, “ஏய்!!! பொட்டைக்கழுதை!! உன்னை இப்படி தான் நான் வளர்த்தேனா??? என்ன தெனவு இருந்தா இவன் கூட ஜோடி போட்டுட்டு சிரிச்சிட்டு இருப்ப நீ?? என் மகளா இருந்துட்டு இப்படி ஒரு கேடுகெட்ட காரியத்தை செய்ய எங்கிருந்து தைரியம் வந்துச்சு உனக்கு??” என வார்த்தைகளால் அவளைச் சாட,
பெண்ணவளின் வதனம் பயத்திலும், இத்தனை பேரின் முன்பு பெற்ற மகளையே இப்படி ஏசும் தந்தையைக் கண்டு அவமனாத்திலும் கூனிக் குறுக, அவளின் முகம் வெகுவாய் கலங்கி விட்டிருந்தது.
அதைக் கண்ட வினய்க்கு நெஞ்சம் தவிக்க, நாட்டரசனின் மேல் கோபம் வந்தாலும், தானும் கோபப்பட்டால் நிலைமை கை மீறி போய்விடும் என உணர்ந்து, அவன் தன்னை அடக்கிக் கொண்டு,
“இதோ பாருங்க சார்!! உங்களுக்கு என் மேல தான கோவம்?? என்னை என்ன வேணும்னாலும் பேசுங்க.. அவளை ஒன்னும் சொல்லாதீங்க” என முடிந்தளவு தன்மையாகவே அவன் பேச,
அவையெல்லாம் அவர் புத்திக்குள் நுழைவதற்குக் கூட வழி இல்லாத அளவிற்கு கோபம் அவர் கண்களை மறைத்திருந்தது.
“என் பொண்ணை என்னமும் நான் பேசுவேன்!! அடிப்பேன்!! ஏன் கொலை கூட பண்ணுவேன்.. நீ யாருடா அதைக் கேட்க??” என அதற்கும் அவர் எகிறிக் கொண்டே இருக்க,
அவனின் வதனாவைக் கொல்லக் கூட தயங்க மாட்டேன் என்பது போல் அவர் பேசவும், வினய்யின் பொறுமையும் கரையைக் கடக்க,
“மைண்ட் யுவர் வோர்ட்ஸ் சார்!!! அவ என் வதனா!! அவ மேல ஒரு துரும்பு பட்டாக்கூட நான் சும்மா இருக்க மாட்டேன்.. ஏதோ நீங்க அவ அப்பான்ற ஒரே காரணத்துக்காகத் தான் அவளை நீங்க அடிச்ச பின்னாடி கூட உங்ககிட்ட இவளோ பொறுமையா பேசிட்டு இருக்கேன்!! இல்லை நடக்குறதே வேற!!” என அவனும் கை முஷ்டிகள் இறுக எச்சரிக்கை விடுக்க,
“அப்படி என்ன பண்ணிருவ நீ?? எங்க முடிஞ்சா என் மேல கை வச்சுப் பாருடா!!” என அவனின் முன் நாட்டரசன் சிலிர்த்துக் கொண்டு போக,
“என்ன வினய்!!! ரிலாக்ஸ்!! பொறுமையா இரு” என கணேசன் மகனின் அருகில் வர, சதீஷும் அவனின் மறுபக்கம் வந்து ஆதரவாய் அவன் தோளைத் தட்டிக்கொடுத்தான்.
அறிவழகனும் சந்தோஷும் நாட்டரசனை இழுத்துப் பிடித்தனர்.
எது நடக்கக் கூடாது என வந்தனா பயந்து வினய்யை விட்டு விலகினாளோ, அது இவ்வளவு விரைவில் அவள் கண் முன்னே நடந்து கொண்டிருக்க,
“ஏன் எனக்கு மட்டும் இப்படி???” என இறைவனிடம் மௌனமாய் கதறியவளின் கண்களில் நிற்காமல் கண்ணீர் மட்டும் வழிந்து கொண்டிருந்தது.
“அரசா பொறுமையா இரு.. முதல்ல உட்காரு!! கொஞ்சம் தண்ணீ குடி!!” என அவரை நிதானத்திற்கு கொண்டு வர அறிவழகன் முனைய,
“பொறுமையா இருந்து!! என் பொண்ணை அவனுக்கு தூக்கி கொடுக்க சொல்றீங்களா?? நீங்க பேசாதீங்க!! அண்ணேன்னு உங்க மேல எம்புட்டு மரியாதை வச்சிருந்தேன்.. இப்படி பண்ணிட்டீங்களே??? நீங்க எல்லாரும் இந்த கேடு கெட்டவனுக்கு கூட்டுன்னு முன்னாடியே தெரிஞ்சிருந்தா உங்க ஒட்டும் வேணாம் உறவும் வேண்டாம்னு உங்க மூஞ்சிலயே முழிக்காம நான் இருந்திருப்பேனே!!” என அவர் என்ன பேசுகிறோம் என்று உணராமலே வார்த்தைகளை வஞ்சனை இன்றி சிதறடித்திருக்க,
கண்ணாடிப் பாத்திரம் போல் கவனமாய் கையாளத் தவறியதால், இப்போது அவர்களுக்கு இடையில் உள்ள உறவில் விரிசல் விழுந்து விட்டதைக் கூட அவர் உணரவில்லை.
“மாமா பார்த்து பேசுங்க!!! வினய் நீங்க நினைக்கிற மாதிரி இல்லை.. ரொம்ப நல்லவன்.. அவனை மாதிரி ஒருத்தனை நீங்க எங்க தேடுனாலும் உங்களால கண்டுபிடிக்க முடியாது” கணேசன் மகனைப் பேசுவது பொறுக்காமல் ஏதாவது பேசி மேலும் ரசபாசம் ஆவதைத் தடுக்கும் பொருட்டு சதீஷ் முந்திக்கொண்டு பக்குவமாய் பேச,
“இவனை மாதிரி ஒருத்தனை நான் ஏன் தேடணும்?? இவனை விட நூறு மடங்கு உசத்தியா, கவுரவமான உத்தியோகத்தில இருக்க மாப்பிள்ளையை என் பொண்ணுக்கு நான் பார்த்து வச்சிருக்கேன்.. இன்னைக்கு நீங்க வரவும் மாப்பிள்ளை வீட்டை போய் பார்த்துட்டு வந்துடலாம்னு தான் உங்ககிட்ட முன்னமே தகவல் சொல்லலை!! இனி சொல்லவும் அவசியமில்லை.. இனிமே இந்த பொம்பளைங்களுக்கு பவுடர் போட்டு விடுற இந்த ஈத்தரை பயலுக்கு யாரச்சும் ஏந்துகிட்டு வந்தீங்க!!! நான் மனுஷனா இருக்க மாட்டேன் சொல்லிட்டேன்” என அவர் நாவை வாள் போல் சுழட்டு, வார்த்தைகளால் அங்கிருந்தவர்களின் மனதை கொஞ்சம் கொஞ்சமாய் கொன்று கொண்டிருந்தார்.
இத்தனை நேரம் பொறுமையாக இருந்த வினய்க்கு, அவன் தொழிலை பற்றி இழிவாக பேசவும், கோபத்தை இழுத்துப் பிடிக்க முடியாமல்,
“இனஃப்!!! இனி ஒரு வார்த்தை!!! ஒரே ஒரு வார்த்தை என்னோட வேலையைப் பத்தி தப்பா பேசுனீங்க, நான் மனுஷனா இருக்க மாட்டேன்!! இவளோ தான் உங்க லிமிட்!!!” என சுட்டு விரல் நீட்டி, கண்களில் கனலுடன் அவன் கர்ஜிக்க,
முதன்முதலாக அவனிடமிருந்து இப்படி ஒரு கோப முகத்தை கண்ட வந்தனாவிற்கு நெஞ்சுக்கூடே வற்றி விட்ட உணர்வு.
எப்பொழுதும் சிரித்த முகமாய் அதிர்ந்து கூட பேசியிராதவன், இன்று அவனின் இயல்பைத் தொலைத்து இப்படி இவரிடம் கண்டபடி பேச்சு வாங்கி நிற்பது அனைத்தும் தன்னால் தானே என ஏதேதோ எண்ணி அவள் தன்னையே வருத்திக் கொள்ள,
அந்நிலையிலும் வந்தனாவின் அதிர்ந்த முகத்தைக் கண்டு தன் கோபத்தைக் குறைத்த வினய்,
“இதோ பாருங்க சார்!!! பிச்சை எடுக்குறது, திருடுறது மத்தவங்களை கஷ்டப்படுத்தி சம்பாதிக்காத எல்லாத் தொழிலுமே என்னைப் பொறுத்தவரைக்கும் உயர்ந்த தொழில் தான்.. இதை ஒரு காரணமா வச்சிட்டு என் வதனாவை என்கிட்ட இருந்து பிரிச்சுடாதீங்க.. உங்க பொண்ணை உங்களை விட கண்டிப்பா நான் ரொம்ப சந்தோஷமா வச்சுப்பேன்.. கொடுத்திருங்க என்கிட்ட!!! ” என முயன்று மிகத் தன்மையான குரலிலே அவன் கேட்கவும்,
வந்தனாவிற்கு அது இன்னுமின்னும் குற்றவுணர்ச்சியைத் தான் அதிகரித்தது.
“ஏன் இப்படி என்னைக் காதலால கொல்றீங்க வினய்!!! வேண்டாம்!! இவர்கிட்ட எனக்காக நீங்க கெஞ்சாதீங்க.. ” என மனதோடு அவனுடன் போராடிக் கொண்டிருந்தவளின் பார்வை பரிதவிப்புடன் அவனையே பார்த்தபடி இருக்க,
இளவரசியும் மகளைத் தான் அழுத்தமாகப் பார்த்திருந்தார்.
அவரால் இன்னமும் கூட நம்ப முடியவில்லை. தன் மகள் தனக்குத் தெரியாமல் ஒருவனைக் காதலிக்கிறாள் என்பதை அந்த நிமிடம் அவரால் ஜீரணித்துக் கொள்ளவே முடியவில்லை.
அவரும் கிராமத்திலே பிறந்து வளர்ந்ததால், மற்றவர்க்கென்று வரும் பொழுது இலகுவாக எடுத்துக்கொள்ள முடிந்த ஒன்றை, இன்று தன் பெண்ணிற்கு என்று வரும்போது அப்படி எடுக்க முடியவில்லை.
“என்கிட்டக் கூட மறைக்குற அளவுக்கு நீ அவ்ளோ பெரிய பொண்ணாயிட்டியா தனு?” என மனதோடு அவளிடம் கேள்வி கேட்டுக் கொண்டிருந்த இளவரசிக்கு சுற்றமும் உரைக்கவில்லை, நாட்டரசனின் வரம்பு மீறிய பேச்சுக்களும் மனதில் பதியவில்லை.
அவர் தனக்குள் மிகவும் இறுகிப் போய் வந்தனாவை கண்கள் இடுங்கப் பார்த்துக் கொண்டே நின்று விட்டதை அந்த கலவரத்தில் கவனிக்கத் தான் யாருமில்லை.
வினய்யின் பேச்சைக் கேட்டு அவனை இளக்காரமாக பார்த்து வைத்த நாட்டரசன்,
“நீ கேட்டா நான் உடனே இத்தனை வருஷம் அருமை பெருமையா வளர்த்த என் புள்ளையைத் தூக்கி உன் கையில கொடுத்துடனுமா??? போடா மரியாதையா!! இல்லை இங்கேயே உன்னை கொன்னு புதைச்சிடப் போறேன்!!” என அவர் இன்னும் அடங்காத வெறியுடன் கத்திக் கொண்டிருக்க,
அங்கிருந்த அனைவருக்குமே, “ச்ச!! என்ன மனிதர் இவர்??” என்று வெறுத்துப் போனது.
“சித்தப்பா என்ன இது??” என சந்தோஷ் அவனை மீறி கடுப்புடன் கேட்க,
“யாருக்கு யார் டா சித்தப்பா?? தங்கச்சியை கூட்டிக் கொடுக்கப் பார்த்த உனக்கு நான் சித்தப்பாவா??” என அவர் சற்றும் யோசியாமல் அமிலத்தை அள்ளி முகத்தில் ஊற்றியதைப் போல் பேசி விட,
“சித்தப்பா!!!”
“நாட்டரசா!!”
“அப்பா!!”
“மாமா!!”
“சார்!!” என நாலாபக்கமும் இருந்து வந்த கண்டனக் குரலில் தான் அவருக்குமே தான் பேசியதின் அர்த்தம் விளங்க,
இப்படி பேசிவிட்டோமே என ஒரு நொடி வருந்தினாலும், மீண்டும் மனதை இரும்பாக்கியவர்,
“உண்மையைத் தானே சொன்னேன்!! இப்படி கூட இருந்தே குழி பறிக்கப் பார்த்த உங்களுக்கும் எங்களுக்கும் இனி சம்பந்தமே இல்லை!!!” என வீம்புடன் ஒரே நொடியில் தொப்புள் கொடி உறவை தூக்கி வீசியிருந்தார்.
“என்ன பேச்சு பேசுறான்??” என ஆதங்கத்துடன் அவரைப் பார்த்த அறிவழகன்,
“நீ இதுக்கெல்லாம் கண்டிப்பா ஒரு நாள் வருத்தப்படுவ நாட்டரசா!!! உன்னை மாதிரி தரம் கெட்டு பேச எனக்குத் தெரியாது.. ஆனா இத்தனை நாளும் கூடப் பொறந்த பிறப்பா உன்மேல அவ்வளவு மரியாதையும் அன்பும் வச்சிருந்தேன்.. அதை ஒரே நிமிஷத்துல தூக்கிப் போட்டுட்ட!! உன்னோட இந்த ஆணவமும் அகங்காரமும் உன்னை அதள பாதளத்துல தள்ளிடும்.. பார்த்து இரு” என சூழ்நிலையின் கன்னத்தை தாங்க முடியாமல், தளர்ந்து போய் கூறியவர்,
அங்கே கண்ணீர் விட்டுக் கொண்டிருந்த வந்தனாவைக் கண்டு, “ஒரு அப்பாவா நான் இதை சொல்லக்கூடாது மா!! ஆனா உன் நல்லதுக்கு சொல்றேன்.. தயவு செஞ்சு இந்த தம்பி கூட போயிடு!! இவன் மனுஷனாவே இல்லை!! மிருகமா மாறிட்டான்.. வேண்டாம் மா.. இங்க இருக்காத” என அவளின் நலனை எண்ணி அறிவுறுத்த,
வந்தனாவின் விழிகள் தவிப்புடன் வினயையும் அவளின் தாய் தந்தையையும் மாறி மாறிப் பார்த்தது.
இரண்டு விழிகளில் எது வேண்டும் என கேட்பது போல் இருந்தது அவளின் தற்போதைய நிலை.
அவளின் நிலையை உணர்ந்த வினய்யின் மனம் தன்னவளை எண்ணிக் கனிய,
“அங்கிள்!!! நானும் வதனாவும் யாரோட கண்ணீர்லயும் கோபத்துலயும் எங்க வாழ்க்கையைத் தொடங்க விரும்பலை.. என் வதனா சந்தோஷம் எனக்கு முக்கியம்.. அவளை என்னால இவங்க கிட்ட இருந்து பிரிச்சுக் கூட்டிட்டு போய் கஷ்டப்படுத்த முடியாது.. அவங்களா மனநிறைவோட வதனாவை என்கிட்டக் கொடுக்கணும்!!! அப்போதான் அவ சந்தோஷமா இருப்பா!! அவ சந்தோஷத்தில தானே என்னோடதும் அடங்கியிருக்கு.. நிச்சயம் காலம் மாறும்.. எல்லாம் நல்லதே நடக்கும் அங்கிள்!! நான் வெய்ட் பண்ணுவேன் அதுவரை அவளுக்காக!!” என அவன் உணர்வுப் பூர்வமாக பேசவும், வந்தனாவிற்கு கண்கள் கரித்துக் கொண்டு வந்தது.
அவனின் காதலை எண்ணி அனைவரும் பிரம்மித்துப் போக, கணேசனுக்கு மகனை எண்ணி பெருமையாக இருந்தது.
‘ஒரு நல்ல பிள்ளையைத் தான் வளர்த்திருக்கிறோம்’ என அவர் கண்களில் தெரிந்த பெருமிதம் மற்றவர்களுக்கும் புரிய,
“எப்படியாவது இந்த இருவரையும் சேர்த்து வைத்து விடு இறைவா!!” என வேண்டுவதைத் தவிர அவர்களுக்கும் வேறு வழி இருப்பதாய் தெரியவில்லை.
“எதுனாலும் கால் பண்ணு டா!! அப்பா நான் இருக்கேன்!! கலங்காத!!” என வந்தனாவின் உச்சந்தலையில் கைவைத்து ஆறுதல் அளித்த அறிவழகன், தளர்ந்த நடையுடன் அங்கிருந்து கிளம்ப,
அவரைத் தொடர்ந்து மற்றவர்களும் வந்தனாவிடம் சொல்லிக்கொண்டு கனத்த மனதுடன் கிளம்பினர்.
கடைசியாக வந்த கணேசன், “ரொம்ப அழுகாத மா!! உன் சிரிப்புல என் பையனோட சந்தோஷம் இருக்கு!! என்னைக்கும் அதை தொலைச்சிராத!! சந்தோஷமா இரு!! எதுனாலும் பார்த்துக்கலாம்” என அவர் வந்தனாவிற்கு தைரியம் சொல்லிவிட்டு முன்னே நடந்தவர்,
அங்கே இன்னமும் முறைத்துக் கொண்டு நின்ற நாட்டரசனை நெருங்கி, “வார்த்தைகளை எப்பவும் கவனமா விடணும் மிஸ்டர் நாட்டரசன்!!! என் பையன் நீங்க பேசுனதை எல்லாம் கேட்டு அமைதியா இருந்ததுக்கு காரணம், உங்க மேல இருந்த பயம் இல்லை.. உங்க பொண்ணு மேல இருந்த காதல்!!! உங்க வறட்டு கௌரவம், வீராப்பு எல்லாத்தையும் தூக்கி போட்டுட்டு உங்க பொண்ணை யோசிங்க!!! பிள்ளைகள் சந்தோஷத்திற்காக தானே பெத்தவங்க இவளோ பாடுபடுறோம்.. அப்போ நாமளே அவங்களை பிடிக்காத ஒரு வாழ்க்கையில தள்ளி, நம்ம கௌரவத்துகாக அவங்க சந்தோஷத்தை கொன்னு புதைக்கிறது எந்த விதத்துல நியாயம் ஆகும் மிஸ்டர் நாட்டரசன்???” என அமைதியாய் அதே சமயம் அழுத்தமாய் கேள்வி கேட்ட கணேசன்,
இறுதியாய், “நல்லா யோசிங்க!! சீக்கிரமே நம்ம நல்ல முறையில சந்திப்போம்!! போய்ட்டு வரோம்” என சன்னமான புன்னகையுடன் அவர் கையெடுத்து கும்பிட்டு விடைபெற,
அவரை நினைத்து நாட்டரசனுக்கே வியப்பாய் இருந்தது.
‘பையனை இத்தனை பேசிருக்கோம்!! இந்த ஆளு சிரிச்சிட்டு போறாரு!!’ என அவர் பார்த்து நிற்க,
வினய்க்கு, இப்படி ஒரு தந்தைக்கு மகனாய் பிறந்ததை எண்ணி கர்வமாக கூட இருந்தது.
கணேசனின் புரிதலைக் கண்டு, இத்தனை நேரம் இருந்த இறுக்கங்கள் கூட லேசாய் விடைபெற, “லவ் யூ டாட்!!” என மனதில் கூறிக் கொண்டவன்,
மீண்டும் அதே புன்னகையுடன் வந்தனாவின் பக்கம் திரும்பி, “என்ன நடந்தாலும் பார்த்துக்கலாம் வதனா!! டோண்ட் க்ரை!! இந்த டைம்ல தான் நம்ம இன்னுமே தைரியமா இருக்கணும்.. டிஃபிகல்ட் சுட்சுவேஷன் தான் உன்னை இன்னும் ஸ்டாரங்கா மாத்தும்.. பீ ஸ்ட்ராங் மை லிட்டில் கேர்ள்!! நான் இருக்கேன்.. நிஜமா உன்னோட இல்லைனாலும், நிழலா எப்பயும் உன்னோட உனக்குள்ள தான் உயிர்ப்போட இருப்பேன் நான்.. கூடிய சீக்கிரமே எல்லாம் சரியாகும்!! இப்போ நான் வரட்டா!!” என காதலுடன் அவளிடம் விடைபெற,
அவளின் உயிர் அவளிடமிருந்து பிரிந்து முன்னே நடப்பதைப் போல ஒரு மாயை அவளுக்குள்!!!
இருந்தும் அவனின் வார்த்தைகள் தந்த தைரியத்தில், கண்ணீர் சுரப்பிகள் தங்கள் வேலையை இப்போது நிறுத்தியிருந்தது.
அதைக் கண்ட நாட்டரசனுக்கு இன்னுமே கோபம் வர,
“இனியொரு முறை என் பொண்ணைப் பார்க்கவோ, பேசவோ முயற்சி பண்ண உன்னையும் அவளையும் சேர்த்தே வெட்டி போட்டிடுவேன்” என அவர் குதிக்க,
அவனிடம் அதே மென்முறுவல்.
“உங்களுக்கு என்ன?? உங்க பொண்ணைப் பார்க்கக் கூடாது அவ்ளோ தானே?? சரி பார்க்கலை!! பேசலை!!” என இலகுவாக அவருக்கு வாக்கு கொடுத்தவன்,
வந்தனாவை ஒரு முறை திரும்பிப் பார்த்து விட்டு,
“எங்க காதல் அவ்ளோ பலவீனமானது இல்லை சார்.. அது நான் சொல்லி உங்களுக்குப் புரியாது.. பட் கூடிய சீக்கிரம் நீங்களே புரிஞ்சுப்பீங்க!!! எங்க காதல் கண்டிப்பா எங்களை சேர்த்து வைக்கும்.. அதுவரைக்கும் உங்க பொண்ணை நான் பார்க்க வர மாட்டேன்” என காதல் மீது கொண்ட நம்பிக்கையில் அவன் வாக்களித்து விட்டு அவரிடம் விடைபெற்று சென்று விட,
அவனின் கூற்றில் பெண்ணவள் தான் பெரிதாய் அதிர்ந்து போய், வலியுடன் அவன் சென்ற பாதையை பார்த்தபடி, இப்போதிருந்தே அவனை அடுத்து காணப் போகும் நாளுக்காய் காத்திருந்தாள்.
error: Content is protected !!