Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

ஆனந்த பூந்தோரணம்

Aanandha Poonthoranam 51 2

தான் போவதை ஈசனிடம் சொல்லவேண்டுமே என்று தோன்ற,  ‘இதுக்கு மட்டும் போய் நின்னா என்ன சொல்வாங்க மாமா…’ என்று யோசித்து நிற்க, வந்தவர்களும் சிறிது நேரத்தில் பேசிவிட்டு கிளம்பிட,

“என்ன லட்சுமி அப்படியே வந்ததும் மேல போயிட்ட.. என்னாச்சு உனக்கு….” என்று முத்தழகு தன் விசாரணையை தொடங்க,

“ஆ… என்ன பாட்டி… என்ன கேட்டீங்க…??” என்று அவள் முழிக்க,

“எனக்கு தான் சரியா காது கேட்காதுன்னு பார்த்தா.. உனக்குமா.. இப்போவே இப்படினா பாவம் என் பேரன்…” என்று போகிற போக்கில் கிண்டல் செய்துவிட்டு போக, லட்சுமிக்கு தன்னை மீறி சிரிப்பு வந்துவிட்டது..



Advertisement

மரகதமோ “வீட்டுக்கு வந்த பொண்ணு இப்படி சிரிச்சு சந்தோசமா இருந்தா தான் வீடு செழிப்பா இருக்கும் லட்சுமி..” என்று சொல்லிச் செல்ல, அதற்கும் தலையை உருட்டியவள் ஒன்றும் சொல்லாமல் அங்கே அமர்ந்துவிட்டாள்.

ஆனால் மரகதம் உள்ளே போனவர் சும்மா இருக்கவில்லை ஈசனுக்கு அழைத்து என்ன பிரச்சனை என்று கேட்க, அவனோ,

“எப்போ கூப்பிட்டாலும் இதே கேள்வி தான்மா கேட்கிற…??” என்றான் சலிப்பாய்..

Advertisement

“ஈசா.. காலையில நல்லா போன பொண்ணு இப்போ கண்ண கசக்கிட்டு வந்தா என்ன அர்த்தம்.. அவளா எதை எதையோ சொல்லிட்டு அழற.. சங்கடமாயிருக்கு..” என்று வருந்த,

Advertisement

‘அழுதாளா…??’ என்று யோசித்தவன், பதில் பேசாமல் இருந்தான்..

“ஈசா இருக்கியா???”

“ஆ.. சொல்லும்மா..”

Advertisement

“இல்ல நேத்தே இரும்மிட்டு இருந்தா.. சளி வேற பிடிச்சிருக்கு.. ரொம்ப அழுதா காய்ச்சல் வந்திட போகுது.. மதியம் கொஞ்சம் சீக்கிரம் வந்து அவக்கிட்ட பேசு என்ன…” என்றவர் ரேவதியின் அப்பா அம்மா வந்து அழைத்ததையும், லட்சுமியை போக சொன்னதையும் சொல்ல, “சரிம்மா…” என்றுமட்டும் சொல்லி வைத்துவிட்டான்.

அழைப்பை வைத்தவனுக்கும் மனதில் ஒரு நிம்மதியில்லை.. லட்சுமியோடு காரில் பேசியதும் அதன்பின் கதிரவன் அவனிடம் பேசியதும் மனதில் வந்துபோக, ‘என்னடா வாழ்க்கை…’ என்று சலிப்பாய் இருந்தது அவனுக்கு.

கோடிக்கணக்கில் பணம் இருக்கிறது தான் சொத்துக்கள் இருக்கிறது தான்.. ஆனால் நினைத்த நேரத்தில் நினைத்த ஒன்றை செய்ய இயலவில்லையே.. அப்போ அந்த பணத்திற்கு என்ன மதிப்பு அங்கே.. ஆக பணத்தை விட காலத்திற்கு சக்தி அதிகம் என்று தோன்றியது ஈசனுக்கு..

கஜேந்திரன் எப்போதுமே சொல்வார் ‘எல்லாத்துக்குமே கால நேரம் கூடி வரணும் ஈசா…’ என்று.

அது தான் உண்மையும் கூட.. எதற்குமே நேரமும் காலமும் கூடி வரவேண்டும். அது மட்டும் சரியாய் அமைந்துவிட்டால் எல்லாமே சரியாய் நடந்துவிடும் என்று எண்ணியவனுக்கு இன்னொன்றும் நினைவில் வந்தது..

அவனாகத் தானே அவ்விடத்தை வேண்டாம் என்றான்.. ஆக தனக்கு வேண்டாததை இனி எண்ணிக்கூட பார்த்திட கூடாது என்று மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டவனுக்கு அடுத்த பெரும் குழப்பம் லட்சுமி..

‘என்ன பேசினாலும் என்னை புரிஞ்சுக்கவே மாட்டேங்கிறா… கோவமோ… வருத்தமோ என்கிட்ட சொல்லவேண்டியது தானே.. அம்மா பேசுற அளவுக்கு வைக்கிறா..’ என்று புலம்பிக்கொள்ள தான் அவனால் அப்போது முடிந்தது..

அடுத்தடுத்து வேலைகள் இருக்க, அனைத்தையும் முடித்துக்கொண்டு வீடு செல்ல, லட்சுமி எங்கே என்று பார்த்தான்..

“சாப்பிட்டு தூங்குறா ஈசா..  முகமெல்லாம் செவந்து போச்சு.. லேசா காய்ச்சல் மாதிரி இருந்துச்சு அதான் ஒரு மாத்திரைய கொடுத்து தூங்க சொன்னேன்…” என்றவரிடம்,

“ஏன்மா… முடியலைன்னா டாக்டர்ட போகணும்.. நம்மலா மாத்திரை எடுக்கக்கூடாது…” என்றபடி ஈசன் வேகமாய் மேலே போக, லட்சுமியோ மாத்திரை சாப்பிட்டதால் நன்றாய் உறங்கியிருந்தாள்.

மரகதம் சொன்னதுபோல் லட்சுமியின் முகம் சிவந்து தான் இருந்தது. ரொம்ப அழுதிருக்கிறாள் என்று அவள் கண்களின் வீக்கம் சொல்ல, மெல்ல அவள் நெற்றியை தொட்டுப் பார்த்தான். லேசாய் உடம்பு சூடாய் தான் இருந்தது..

கொஞ்ச நேரம் அவளருகே அமர்ந்திருந்தவன், மரகதம் அழைக்கவும் கீழே வந்து உண்டுவிட்டு கஜேந்திரனிடம் தோட்டத்தில் நடக்கும் வேலைகளை பற்றி சொல்லிவிட்டு, வழக்கம் போல் பண்ணைக்கு கிளம்பிவிட்டான். மாலை லட்சுமி உறங்கி எழுந்த கொஞ்ச நேரத்திலேயே பேச்சி வந்துவிட்டார்..

“என்ன லட்சுமி உடம்பு சரியில்லையா?? பாட்டி வந்து சொன்னாங்க…”

“ஒண்ணுமில்ல மா.. சரியா போச்சு.. மாத்திரை கொடுத்தாங்க அத்தை..” என்றவள்,

“ம்மா கடைக்கு போகலாமா.. ரேவதிக்கு வாங்க..” என்று கிளம்பினாள்.

பேச்சி வேண்டாம் என்று மறுத்தும், “இல்லம்மா நல்லாத்தான் இருக்கேன்… போகலாம்..” என்றவள் மரகதத்திடம் சொல்ல, அவர், “உனக்கும் ஏதாவது வாங்கிக்கோ லட்சுமி…” என்று பணத்தை கொடுத்தார்.

“எனக்கெதுக்கு அத்தை…” என்று லட்சுமி தயங்க…

“கல்யாணமானதுல இருந்து அடுத்து எதுவும் வாங்கல.. அதான் உனக்கு பிடிச்சதா வாங்கிக்க…” என்று பணத்தை நீட்ட, அவளுக்கு அப்போது நகை எடுக்கும் ஆசையெல்லாம் இல்லை என்பதால்,

“இருக்கட்டும் அத்தை.. இன்னொரு நாள் நம்ம போய் எடுப்போம்…” என்று சொல்லி பேச்சியை அழைத்துக்கொண்டு சென்றாள்..

‘நல்ல பொண்ணு.. நகை நட்டு சேலை துணிமணி எதுமேலயும் ஆசையில்ல எப்போ பாரு ஈஸ் மாமா ஈஸ் மாமான்னு இருக்கா..’ என்று சிரித்துக் கொண்டார்.

அடுத்தடுத்த நாட்களும் நகர, லட்சுமி வழக்கமாய் கல்லூரி சென்றுவர, ஈசனும் அவளிடம் எந்த பேச்சும் வைத்துகொள்ளவில்லை. லட்சுமிக்கோ அவளாய் சென்று பேசவும் ஒருமாதிரி தயக்கமாய் இருக்க மனதில் ஒரு தவிப்போடு தான் நாட்களை கடத்தினாள் லட்சுமி.

அந்தா இந்தாவென்று ரேவதிக்கு கல்யாணப் புடவை எடுக்கும் தினமும் வந்துவிட, அப்போதும் மரகதம் அவளிடம் பணம் கொடுத்தார் தான். அன்று நகை வாங்கு என்றதையும் மறுத்துவிட்டதால், இன்று எதுவும் சொல்லாமல் வாங்கிக்கொண்டாள்.

மதுரையின் பிரபல துணிக்கடையில் பட்டுச் சேலை பிரிவில் இருக்க, மாப்பிள்ளையும், அவர்கள் வீட்டினரும் வந்திருந்தனர்.. லட்சுமிக்கு ரேவதியை பார்க்கையில் தான் ஆச்சர்யமாய் இருந்தது..

கல்யாண கலை அவள் முகத்தில் ஜொலிக்க, கொஞ்சம் பூசினார் போல் இருந்தாள்.. ரேவதியின் முகத்தில் இருக்கும் மகிழ்வும், நொடிக்கொரு முறை தன் வருங்கால கணவனை தொட்டு மீளும் பார்வைகளும், இருவரும் அவ்வபோது பேசிக்கொள்வதும், ரேவதி மகிழ்வாய் மலர்ந்து சிரிப்பதுமாய் இருக்க, இதெல்லாம் அவளுக்கு ஆச்சர்யமாய் தான் இருந்தது.

கடைக்காரர் ஒவ்வொரு புடவை எடுத்து போடும் போதும், ரேவதி அவள் மாப்பிள்ளையிடம் ‘இது நல்லாயிருக்கா…’ என்பது போல் பார்ப்பதும், அவனும் அதற்கு தக்க ஏதாவது ஒரு பதில் சொல்வதுமாய் இருக்க, அனைத்தையும் வேடிக்கை பார்த்த லட்சுமியின் மனமோ ஈசனை தேடியது..

‘நம்மளும் தான் ஆசைப்பட்டு கல்யாணம் பண்ணோம்.. ஆனா ஒருநாளாவது இப்படி சந்தோசமா சிரிச்சு ஈஸ் மாமா கூட இருந்திருக்கோமா..’ என்று தனக்கு தானே சொல்லிக்கொள்ள,

ரேவதி “லட்சுமி.. உன்னைய எத்தன தடவ கூப்பிடுறது.. இங்க பாரு… இந்த சேலை நல்லாயிருக்கா.. அவருக்கும் பிடிச்சிருக்கு…” என்று ஒரு பட்டுப் புடவையைக் காட்ட, அது அழகாகவே இருந்தது.

“சூப்பரா இருக்கு டி…” என்று லட்சுமி சொல்ல, “ம்ம் அவர் செலக்சன்…” என்று சொன்ன ரேவதியின் முகத்தில் அத்தனை  பெருமிதம்.. லட்சுமியும் பதிலுக்கு சிரித்தாள்.

“ஆமா நீ ஏன் டி ஒண்ணுமே எடுக்காம இருக்க…” என்று ரேவதி கேட்க,

“அது.. அத்தை பணம் கொடுத்து விட்டாங்க தான்.. ஆனா இப்போ எடுக்க தோணல.. நிறைய பட்டு சேலை புதுசே அப்படியே இருக்குடி…” என, அதற்கு ரேவதி பதில் சொல்வதற்குள் அவளின் வருங்கால மாமியார் என்னவோ அவளிடம் சொல்ல அடுத்து அவர்களிடம் திரும்பிவிட்டாள் ரேவதி..

இப்படி ஒருவழியாக திருமணப் புடவை எடுத்து அனைவரும் ஊர் வரும் போது மாலை ஆகிவிட, லட்சுமி அவர்கள் வீட்டின் முன்னே இறங்கிக்கொண்டாள். ஈசனும் அப்போது வீட்டில் தான் இருந்தான் போல.

ஈசனும் கஜேந்திரனும் பேசிக்கொண்டிருக்க,  இவள் வந்ததும், அவளை ஒரு பார்வை பார்த்தவன், ஒன்றும் சொல்லாமல் அடுத்து அமைதியாய் இருக்க, கஜேந்திரன் தான்,

“என்னம்மா நல்லபடியா சேலை எல்லாம் எடுத்தாச்சா…??” என்று விசாரித்தார்.

“ம்ம் எடுத்தாச்சுங்க மாமா…” என்று தலையை உருட்டியவள் பார்வை ஈசன்  மேல் தான் படிந்து மீண்டது.

‘பண்றதெல்லாம் பண்ணிட்டு இப்படி ஒரு பார்வை வேற…’ என்று ஈசன் முகத்தை திருப்பிக்கொள்ள,

மரகதம் உள்ளிருந்து வந்தவர், “லட்சுமி.. என்ன வெறும் கையோட வந்திருக்க…” என்று கேட்க, அவர் கொடுத்த பணத்தை அப்படியே திரும்பக் கொடுத்தாள்.

“அட என்ன.. அன்னிக்கு நகை வாங்க சொன்னதுக்கும் வாங்கல.. இன்னிக்கும் அப்படியே பணத்தை கொண்டு வந்திருக்க, என்ன லட்சுமி…” என, ஈசனுக்கு இதெல்லாம் தெரியாது அல்லவா அவனும் அவளை என்னவென்று பார்க்க,

லட்சுமிக்கோ அவளது கட்டுபாட்டையும் மீறி “நா.. நான் இன்னொரு நாள் ஈஸ் மாமா கூட போய் எல்லாம் வாங்கிக்கிறேன் அத்தை…” என்று அவள் உள்ளத்து ஆசை வெளிப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!