Skip to content
Post Views: 1,651

அகம் 11
இருள் சூழ்ந்த அந்த மாலை நேரம் சங்கீத் நிகழ்ச்சி கோலாகலமாக ஆரம்பித்தது. பெரியவர்களுக்கு இதிலெல்லாம் பெரிதாக ஈடுபாடு இல்லையென்றாலும் எல்லோரும் இப்படி கலகலப்பாக இருப்பது அவர்களுக்கும் மகிழ்ச்சி தானே, போட்டோ ஷூட் பிரச்சனையால் வந்த சுணக்கம் கூட பேத்தியின் திருமணம் நல்லமுறையில் நடக்க வேண்டுமென்ற நினைப்பில் காணாமல் போயிருந்தது. அதனால் பேரன் பேத்தி விருப்பத்திற்கே அனைத்தையும் விட்டுவிட்டவர்கள், அவர்களும் அந்த நிகழ்ச்சியை ஆவலாகவே பார்த்தனர்.
Advertisement
ஒவ்வொருவராக பங்கேற்று நிகழ்ச்சியில் நடனம் ஆடினர். நயந்தினி கனா காண்கிறேன் கண்ணாளா பாட்டுக்கு மேடையேறி நடனம் ஆட, நிகர்வேலனால் அங்கிருந்து வேறுபக்கம் கண்களை திருப்பவே முடியவில்லை. அவள் ஆடப் போகிறாள் என்பதாலேயே அவனுக்கு இருந்த சின்ன சின்ன வேலைகளை கூட விட்டுவிட்டு வந்து அமர்ந்து அவளது நடனத்தைப் பார்த்தவன், அவளது ஆட்டத்தில் அப்படியே மூழ்கிவிட்டான். நயந்தினி ஆடி முடித்து கை தட்டல்கள் ஓசையின் பெருமிதத்தில் இறங்கி வந்தவளின் கையை குலுக்கி, “சூப்பரா டான்ஸ் ஆடின நயா,” என்று பாராட்ட, உடன் இருந்த ராகவிக்கு அப்போது தான் மூளைக்குள் பல்ப் எரிந்தது.
Advertisement
‘எப்போது இவர்கள் நன்றாக பேசிக் கொண்டார்கள்?அதிலும் நிகர் அவளை நயா என்று அழைக்கிறானே? அன்று அந்த பிரச்சனையின் போதும் நயா என்று அழைத்து தானே ஆறுதல் கூறினான்? போட்டோ ஷூட் அப்போது இவர்களுக்கு கிடைத்த தனிமையில் சமாதானம் ஆகி கொண்டார்களா? ஆனால் நெடுநாள் பழக்கம்போல் அல்லவா நிகர் அவளை உரிமையாக அழைக்கிறான். என்ன நடக்குது இவங்களுக்குள்ள?’ என்று பார்த்திருந்தாள்.
Advertisement
நிகர்வேலனின் பாராட்டில் நாணத்துடன் புன்னகைத்துக் கொண்ட நயந்தினியோ, “தேங்க்ஸ்,” என்றாள்.
Advertisement
அப்போது அவளது அலைபேசிக்கு அழைப்பு வந்தது. விக்கி தான் அழைத்தது. சங்கீத் நிகழ்ச்சி அன்று பேசுவதாக விக்கிக்கு முன்னமே குறுந்தகவல் அனுப்பியிருந்தாள். அதை ஞாபகப்படுத்தும் விதமாக விக்கி ஒருமுறை அழைத்துவிட்டு விட்டுவிட, இவளுக்குப் பின் மணமகன் வீட்டுப் பக்கம் யாரோ நடனம் ஆட இருக்க, அடுத்து மதியும் மொழியும் ஆடப் போகிறார்கள். அன்னையும் அதை பார்க்கும் கவனத்தில் இருப்பார். தன்னை பெரிதாக கண்டுக் கொள்ள மாட்டார். அதனால் இந்த நேரம் விக்கியிடம் பேசுவது தான் சரி என்று நினைத்தவள்,
“என் ஃப்ரண்ட்க்கிட்ட பேசிட்டு வந்துட்றேன்.” என்று அலைபேசியை காட்டி இருவரிடமும் பொதுவாக சொல்லவும், இருவரும் தலையசைத்து சம்மதம் சொன்னதும், நயந்தினி அங்கிருந்து சென்றுவிட,
அதன்பின் ராகவியோ, “எப்போ நயனி உனக்கு நயாவா மாறினா, ரெண்டுப்பேரும் சண்டை போட்டுட்டு இருந்தீங்க? இப்போ ஒன்னுமே நடக்கல என்பது போல சாதாரணமா பேசிட்டு இருக்கீங்க,” என்று நிகர்வேலனிடம் கேட்க,
“ரெண்டுப்பேரும் எங்க சண்டை போட்டோம், அவதான் என்னைப் பார்த்தா முறைச்சிக்கிட்டு இருந்தா அதுவும் ஒருநாள் தான், அப்புறம் சமாதானம் ஆகிட்டா,” என்று நிகர் பதில் கூறினான்.
நயந்தினியை பற்றி பேசும்போதே அவன் முகம் புன்னகையை பூசிக் கொண்டதை ராகவி உணர்ந்தவள், “ஆமாம் இந்த நயாக்கும் நம்ம கடைக்கு, அப்புறம் இந்த ரெசார்ட்க்கு வச்ச நயா என்கிற பேருக்கு ஏதாவது சம்மந்தம் இருக்கா?” என்று அவள் சந்தேகமாக கேட்க,
அந்த கேள்வியை எதிர்பார்க்காமல் அதிர்ச்சியானவனோ, “ஆனாலும் நீ இவ்வளவு ஷார்ப்பா இருக்கக் கூடாது ராகவி.” என்றான். எத்தனை காலம் தான் தன் காதலை மனதில் பூட்டியே வைப்பது. ஏற்கனவே மொழியும் மதியும் கண்டுப்பிடித்துவிட்டார்கள். எப்படியும் இந்த திருமணம் முடிவதற்குள் நயந்தினியிடம் தன் மனதை வெளிப்படுத்திவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறான். அதனால் இப்போது ராகவிக்கு தெரிவதில் பிரச்சனை இல்லை என்று நினைத்து தான் அப்படி கூறினான்.
அவன் சொன்னதை கேட்டவளோ, “அடப்பாவி, இது எப்போதிலிருந்து டா, நீங்க அப்போ பார்த்ததுக்குப் பிறகு இந்த கல்யாணத்தில் தானே பார்த்திருக்கீங்க, அப்போ அப்பவே நயனி மேல காதலா? ஆனா அவ அப்போ ஸ்கூல் படிச்சிட்டு இருந்த பொண்ணாச்சே?” என்று ராகவி கேட்க,
“அதான் இத்தனை வருஷம் பொறுமையா என் காதலை எனக்குள்ளேயே வச்சிருந்தேன். ஆனா இனி காத்திருக்க முடியாது. இங்க இருந்து போறதுக்குள்ள சொல்லிடணும்,” என்றவன்,
“நான் நயாவை காதலிக்கிறது தப்பா?” என்று ராகவியிடம் கேட்டான்.
“என்ன தப்பு, நயனிக்கு உன்னை மாதிரி ஒரு பையன் கிடைக்க கொடுத்து வச்சிருக்கணும், உங்க ஜோடிப் பொருத்தமும் சூப்பர். நீ சொன்னா நயனி மறுக்க மாட்டான்னு தான் தோனுது. சீக்கிரம் சொல்லிடு, பெஸ்ட் ஆஃப் லக்.” என்று ராகவி சொல்லவும்,
“தேங்க்ஸ் ராகவி, வீட்டில் இதைப்பத்தி பேசும்போது யாராவது எனக்கு சப்போர்ட்க்கு வேணும், நீ சப்போர்ட்டா இருப்ப தானே,” என்று நிகர் கேட்க,
“கண்டிப்பா நிகர், மாமாவும் உன் விருப்பத்துக்கு எதிரா நடக்க மாட்டாரு, அப்புறம் என்ன?” என்று ராகவி நம்பிக்கை அளிக்கவும், முதலில் எப்போது? எப்படி? நயந்தினியிடம் தன் மனதை திறப்பது? என்று நிகர்வேலன் அப்போதே யோசிக்க ஆர்மபித்துவிட்டான்.
நயந்தினியோ அங்கிருந்து வந்தவள் ஒரு தனிமையான இடம் தேடி நீச்சல் குளத்திற்கு அருகில் வந்தவள், அங்கு யாரும் இல்லாததால் விக்கிக்கு அழைத்து பேச ஆரம்பித்தாள். இருவரும் இப்படி பேசி சிலநாட்கள் ஆகிவிட்டதால் சிறிதுநேரம் பேசிக் கொண்டிருந்தனர்.
பின்னரோ, “சரி விக்கி, இன்னும் 4 நாள் தான், அதுக்குப்பிறகு நான் சென்னைக்கு வந்துடுவேன். அங்க நாம நேரில் மீட் செய்யலாம்,” என்றவள், அலைபேசி அழைப்பை அணைத்துவிட்டு திரும்ப, அங்கே அவினாஷ் நின்று கொண்டிருந்தான்.
அவன் பெண்கள் விஷயத்தில் சரியில்லை என்று நிகர்வேலன் சொன்னதிலிருந்து அவனை அவள் அறவே தவிர்த்தாள். இப்போது அவன் இங்கே ஆள் இல்லாத இடத்தில் வந்து நிற்கவும், அவளுக்கு கொஞ்சம் பயமாக தான் இருந்தது. ஆனாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அங்கிருந்து போக முயற்சிக்க, அவனோ அவளது கையைப் பிடித்து நிறுத்தினான்.
அதை எதிர்பார்க்காதவளோ, “எதுக்கு கையை பிடிச்சீங்க, விடுங்க,” என்று அவன் பிடியிலிருந்து கையை விடுவிக்க முயற்சிக்க, அது அவளால் முடியவில்லை. அவனது பிடி பலமாக இருந்தது.
அவனோ, “என்ன நயனி, எதுக்கு என்னைப் பார்த்தாலே விலகிப் போற, அன்னைக்கு பார்ட்டியில் பார்த்தபோது பேசின தானே, அப்புறம் என்னாச்சு?” என்று கேட்டான்.
அவன் பேசும் தோரணையும் பார்த்தவிதமும் அவன் மது அருந்தியிருக்கிறான் என்பதை நன்றாகவே உணர முடிந்தது. “இங்கப் பாருங்க, நீங்களா வந்து பேசவும் பேசினேன். அதுக்குப்பிறகு உங்களோட பேச எனக்கு என்ன இருக்கு? இப்போதும் எனக்கு உங்களோட பேச விருப்பம் இல்லை. நான் டான்ஸ் ப்ரோகிராம் பார்க்கப் போகணும்,” என்றவள், அவள் பிடியிலிருந்து விலக முயற்சித்துக் கொண்டிருந்தாள்.
அவனோ, “ஏன் என்னிடம் பேச விருப்பமில்லை. நிகரிடம் மட்டும் பேசற, ஏன் அவன் பணக்காரன் என்பதாலா?” என்றான்.
“யாரிடம் பேசணும், பேசக் கூடாது என்பது என்னோட விருப்பம். அது எதுக்கு உங்களுக்கு? நீங்க லிமிட் தாண்டி போறீங்க, ஒழுங்கா கையை விடுங்க, நான் போகணும்,” என்றவளுக்கு அழுகையே வந்துவிட்டது.
அவனோ அப்போதும் கையை விடாமல், “இப்போ என்ன செய்துட்டன்னு நீ ஓவர் ரியாக்ட் செய்ற, சாதாரணமா தானே பேச வந்தேன். வேற ஏதாவது செய்தேனா?” என்றவனோ,
“ஆனா இவ்வளவு பக்கத்தில் அழகான ஒரு பொண்ணு இருக்கும்போது என்னென்னவோ செய்ய தோனுது தெரியுமா?” என்று கிறக்கமாக கூறவும்,
“இங்கப்பாரு நீ குடிச்சிருக்கப் போல, இதான் உன் லிமிட். ஒழுங்கா கையை விட்டிடு, இல்லை கத்தி எல்லோரையும் கூப்பிடுவேன்.” என்று நயந்தினி கோபமாக கூற,
“இங்க இருந்து கத்தினா கேட்கும்னு நினைக்கிற, ஒருத்தரும் வரமாட்டாங்க,” என்ற அவனது பதிலில் மிகவுமே பயந்து போனாள்.
“சும்மா பேசலாம்னு வந்தா பிகு செய்ற, நீ நல்லப்படியா பேசியிருந்தா நானும் அதோட போயிருப்பேன். ஆனா நீ ஓவரா ரியாக்ட் செய்யும்போது தான் எனக்கு என்னென்னல்லாமோ செய்ய தோனுது.” என்று அவன் கூற,
“இப்போ என்ன உன்னிடம் நல்லா பேசணும் தானே, நான் நல்லா பேசறேன் போதுமா? முதலில் கையை விடு,” என்று அவள் நல்லவிதமாக பேச முயற்சிக்க,
“நீ பேசல்லாம் வேண்டாம், உன்னோட இந்த லிப்ஸ்டிக் போட்ட உதடு என்னை காந்தமா இழுக்குது. ஒரு கிஸ் மட்டும் கொடு போதும்,” என்று அவன் கேட்டதில் அதிர்ச்சியானவள்,
“ஹெல்ப் ஹெல்ப்,” என்று கத்தினாள்.
ஆனால் அங்கங்கே ஸ்பீக்கர் வைத்து அதில் நடனத்துக்கான பாடல்கள் ஒலிக்கும் சத்தத்தில் அவளது குரல் யாருக்கும் கேட்கவில்லை. கேட்காது என்பது அவளுக்கே புரியும், ஆனால் என்ன செய்வதென்று தெரியவில்லை. தன் பலம் கொண்டு அவனிடமிருந்து விலக முயற்சித்தாள். ஆனால் முடியவில்லை.
அவனோ அவள் குரலுக்கு யாரும் வரமாட்டார்கள் என்பதை உணர்ந்து குரூரமாக சிரித்தவன், “ஜஸ்ட் ஒரு முத்தத்தோட போயிடலாம்னு பார்த்தா விடமாட்ட போலயே,” என்றவன்,
“நீ கொடுக்கலன்னா என்ன? நானே முத்தம் கொடுக்கிறேன்.” என்று கூறி அவள் முகம் நோக்கி குனிய, எதுவும் செய்ய முடியாத நிலையில் அவள் கண்களிலிருந்து தாரை தாரையாக கண்ணீர் வரவும், அப்போதும் அவளை விடாமல் அவன் காரியத்தில் கண்ணாக அவளுக்கு முத்தம் கொடுக்க நெருங்கிவிட்டவனது முகத்தில் பலமாக ஒரு குத்து விழுந்தது. நிகர்வேலன் தான் அவினாஷை அடித்திருந்தான்.
மொழியும் மதியும் எந்த பாடலுக்கு ஆடுகிறார்கள் என்பது தெரியாமல் அவர்களிடம் கேட்க, “அது சஸ்பென்ஸ், சங்கீத் அன்னைக்கு பார்த்துக்கோங்க,” என்று முன்பு சொல்லியிருந்தார்கள். அதனால் அவர்களது நடனத்தை காணும் ஆவலில் நிகர்வேலன் காத்திருந்தான்.
இருவரும் ஒரு பழைய இந்திய பாடலை தேர்ந்தெடுத்து நடனம் ஆடினர். இரட்டையர்களாக இருவரும் ஆடியது அங்கு அனைவராலும் ரசிக்கப்பட்டது. நிகர்வேலனும் அவர்கள் நடனத்தை பார்த்து மகிழ்ச்சியடைந்தவன், அதன்பின் தான் நயந்தினி அலைபேசியில் பேசிவிட்டு வருவதாக சொல்லிவிட்டுப் போனவள் இன்னும் வரவில்லை என்பதை கவனித்தான். அவள் இவ்வளவு நேரம் பேசிக் கொண்டிருப்பதில் பிரச்சனையில்லை. ஆனாலும் அனைவரும் இங்கிருக்க அவள் தனியாக சென்றிருக்கிறாள் என்பதை உணர்ந்து,
அதிலும் அலைபேசியில் தனியாக பேச பால்கனி தாண்டி வந்தவள் ஆயிற்றே, அப்படி ஏதாவது அவள் கிறுக்குத்தனம் செய்துவிடக் கூடாது என்று நினைத்தவன், அவளை தேடி வர, அப்போது தான் அவினாஷ் அவளது கையைப் பிடித்துக் கொண்டு அத்துமீற இருந்ததை பார்த்தான். உடனே அவர்கள் இருக்குமிடத்திற்கு விரைந்து வந்து அவினாஷை தாக்கினான்.
ஏற்கனவே போதையில் இருந்த அவினாஷ், அந்த ஒரு குத்துக்கே நிலைகுலைந்து கீழே விழ, அப்போதும் நிகர்வேலனுக்கு ஆத்திரம் அடங்காமல் அவனை எழுப்பி, “எவ்வளவு தைரியம் இருந்தா, இவளிடம் தப்பா நடக்க முயற்சி செய்திருப்ப,” என்று அடித்தான்.
பின், “ஏதோ உறவுக்காரனா போயிட்டியேன்னு விட்டு வச்சா, கல்யாண வீட்டிலேயே உன்னோட கை வரிசையை காட்டுறீயா?” என்று திரும்ப அடித்தான்.
நிகர்வேலன் அடித்த அடியில் அவினாஷிற்கு போதை தெளிந்தே போக, “நிகர், ஏதோ போதையில் என்ன செய்றோம்னு தெரியாம செய்துட்டேன். இனி இதுமாதிரி செய்ய மாட்டேன். என்னை விட்டிடு,” என்று கெஞ்சினான்.
“ஏற்கனவே உன்னை நான் வார்ன் செய்திருக்கேன். அப்பா சொன்னதால் தான் உனக்கு திரும்ப எங்க குடோன்ல பொறுப்பு கொடுத்தேன். ஆனாலும் நீ திருந்தல, அதுவும் கல்யாண விசேஷத்தில் நீ குடிச்சது இல்லாம, இவளிடம் மிஸ்பிகேவ் செய்ய துணிஞ்சிருக்க, உன்னை சும்மா விடக் கூடாது. ஆனா இப்போ ராகவி கல்யாணம் நல்லப்படியா நடக்கணும் என்பதால உன்னை விட்றேன். ஆனா அதுக்காக உன்னை அப்படியே விட்ருவேன்னு நினைக்காத, ராகவி கல்யாணம் முடியட்டும், அப்புறம் தான் உனக்கு இருக்கு, இப்போ ஒழுங்கா இங்க இருந்து போயிடு, இங்க இதுக்குப்பிறகு என் கண்ணில் மாட்டவே கூடாது. புரிஞ்சுதா?” என்று நிகர்வேலன் கூறவும், தப்பித்தால் போதுமென்று அவினாஷ் அங்கிருந்து போய்விட,
அங்கே அழுகையோடு நின்றிருந்த நயந்தினியை பார்த்து, “எதுக்கு இந்த நேரம் இங்க வந்த?” என்று கோபமாக கேட்டான்.
ஏற்கனவே பயந்து போயிருந்தவள், அவன் கோபமாக கேட்டது தாங்கிக் கொள்ள முடியாமல் இன்னும் அதிகமாக அழவும், அப்போது தான் அவளது நிலை புரிந்தவனோ, அவளை தன்னோடு சேர்த்து அணைத்து, “அவன் செய்த தவறுக்கு உன்மேல கோபப்பட்றேன் சாரி.” என்றான்.
இன்னும் நடந்த நிகழ்வுகளில் அவளது உடல் நடுக்கத்தில் இருக்க, “அதான் நான் வந்துட்டேன் இல்ல, பயப்படாத, உனக்கு ஏதாவது ஆக விட்ருவேனா? அதான் எதுவும் தப்பா நடக்கலையே, ரிலாக்ஸ்,” என்று ஆறுதல் கூறவும், அவளும் அவனுடன் இன்னுமே ஒன்றினாள்.
சிறிது நேரத்திற்கு இருவரும் அப்படியே இருந்தனர். பின் அவளை அணைப்பிலிருந்து விலக்கியவன், “இதுவே இது வேற டைமா இருந்திருந்தா அவனை நான் சும்மா விட்டிருக்க மாட்டேன். ஆனா இப்போ ராகவியோட கல்யாண நேரம். அதான் நான் அமைதியா போக வேண்டியதா போச்சு, இந்த விஷயம் இப்போதைக்கும் யாருக்கும் தெரிய வேண்டாம், எல்லாம் சந்தோஷமா இருக்காங்க, இப்போ இதை சொன்னா எல்லோருடைய மனநிலையும் மாறிடும், நான் சொன்னது புரியுதுல்ல நயா,” என்று அவன் கேட்க,
அவளுக்குமே இதை அன்னையிடம் சொன்னால் அவர் அதை எப்படி எடுத்துக் கொள்வாரோ, இவளையே திட்டக் கூட செய்யலாம் என்பதை உணர்ந்தவள், “சரி, நான் யாரிடமும் சொல்ல மாட்டேன். ஆனா அவன் திரும்ப ஏதாவது செய்வானா? எனக்கு ரொம்ப பயமா இருக்கு,” என்று நயந்தினி சொல்லவும்,
“இனி இந்த இடத்துக்கு அவன் வரவே மாட்டான். கல்யாணம் முடியட்டும் அப்பாவையும் மாமாவையும் கூப்பிட்டு அவனுக்கு ஒருவழி செய்றேன். நீ பயப்பட வேண்டிய அவசியமில்லை. அதான் நான் இருக்கேனே, அப்புறம் என்ன பயம்,” என்று அவன் கேட்க, அவளும் தலையசைத்துக் கொண்டாள்.
“சரி கண்ணை துடைச்சுக்கோ, வேணும்னா அங்க டேப் இருக்கு, ஃபேஸ்வாஷ் செய்துக்கோ, எதுவும் நட்ந்தமாதிரி காட்டிக்காம சாதாரணமா போ. நான் கொஞ்சநேரம் கழிச்சு வரேன். ஒன்னா போனா நல்லா இருக்காது.” என்று அவன் சொல்லவும், அதற்கும் சம்மதமாக தலையசைத்தவள், முகம் கழுவி அணிந்திருந்த துப்பட்டாவில் முகம் துடைத்துக் கொண்டவள், அங்கிருந்து சென்றாள்.
சாதாரணமாக இருக்க நினைத்தாலும் அவளால் அது முடியவில்லை. நடந்த விபரீதத்தை நினைத்து இன்னும் அவள் உடல் நடுங்கிக் கொண்டிருக்க, மெதுவாக திரும்பி திரும்பி பார்த்தப்படியே நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு வந்தவளை தொலைவில் நின்றிருந்த நளினி எதேச்சையாக பார்த்துவிட்டார்.
‘எங்க போயிட்டு வரா இவ,’ என்று அவர் மனதில் நினைத்தப்படி மகளை பார்த்திருந்தார். அந்த இடத்திற்கு வந்தவளோ, ராகவி, ரோஹன், மொழி, மதி அனைவரும் இருந்த இடத்திற்கு சென்றால், எங்கே அவள் உடல்மொழி நடந்த விபரீதத்தை காட்டிக் கொடுத்துவிடுமோ என்று நினைத்து, அவர்களுக்கு கொஞ்சம் தொலைவில் ஏதோ ஒரு இடம் பார்த்து அமர்ந்து கொண்டவள், வந்த திசையை திரும்பி திரும்பி பார்த்திருந்தாள்.
சில நிமிடங்களில் நிகர்வேலன் அதே திசையில் இருந்து வந்தவன், யாருக்கும் சந்தேகம் வராதது போல் அலைபேசியை பார்த்தப்படியே வந்தவன், நயந்தினி அருகில் இயல்பாக அமர்வது போல் அமர்ந்தான். நளினி பார்த்துக் கொண்டிருப்பது அவனுக்கு தெரியவில்லை.
அவன் வந்ததும் அவள் அவனை நிமிர்ந்து பார்க்க, “நடந்ததை ஒரு ஆக்ஸிடென்ட்டா நினைச்சு மறக்க முயற்சி செய் நயா,” என்று அவளது கையில் தன் கை வைத்து ஆறுதலாக கூறினான்.
தொலவில் இருந்து அவர்களை பார்த்துக் கொண்டிருந்த நளினிக்கு அவன் பேசியது கேட்கவில்லையென்றாலும் அவன் செயல் நன்றாகவே தெரிந்தது. அவருக்கு அதை எப்படி எடுத்துக் கொள்ள வேண்டுமென்று கூட தெரியவில்லை. அவர்கள் நடந்து கொள்வதை பார்த்தால் இருவரும் ஒரே இடத்திலிருந்து வந்தது போல் தான் தெரிகிறது. ஆனால் அவரால் அவர்களை சந்தேகப்படவும் முடியவில்லை. ஆனால் இதுவே வேறு யார் கண்ணிலாவது பட்டிருந்தால் கண்டிப்பாக பிரச்சனை வரும், ஏற்கனவே மகளிடம் இதைப்பற்றி பேச நினைத்திருந்தார். ஆனால் இப்போது பேசுவது சரியாக வருமா என்றும் தெரியவில்லை. இப்போது கணணால் பார்த்ததை வைத்து அவரால் எந்த முடிவிற்கும் வரமுடியவில்லை. மனதில் குழப்பம் சூழ்ந்து கொண்டது தான் மிச்சம்.
இங்கு நயந்தினியோ நிகர்வேலன் சொன்னதை ஆமோதித்து நடந்ததை விபத்தாக நினைத்து மறந்துவிட எண்ணி, நடன நிகழ்ச்சியில் தன மனதை திசை திருப்ப நினைத்தாள். ஆனால் நடந்தது அத்துடன் முடியவில்லை. அது அவள்வாழ்க்கை பாதையையே மாற்றப் போகிறது என்பதை அவள் மட்டுமல்ல நிகர்வேலனும் அறிந்திருக்கவில்லை.
அகம் சேர்வான்…
error: Content is protected !!