Skip to content
Post Views: 1,846

அகம் 13
Advertisement
அங்கிருந்து நேராக நால்வரும் தங்களது அறைக்கு வந்தனர். உள்ளே நுழைந்ததும், “இனி நாம இங்க ஒருநிமிஷம் கூட இருக்கக் கூடாது. உங்க திங்க்ஸ் எல்லாம் எடுத்து வைங்க கிளம்பலாம்,” என்று நளினி மகள்களிடம் கூற,
மொழியும் மதியும் அதை ஆமோதித்து அவர்களது உடைமைகளை எடுக்க சென்றனர். ஆனால் நளினியின் சொல்லுக்கு எந்தவித எதிர்வினையும் காட்டாமல் இருந்தாள் நயந்தினி . அங்கு நடந்ததை விட அன்னை தன்னை அடித்ததை தான் அவளால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. எத்தனையோ விஷயத்தில் அவருக்கு பிடிக்காததை செய்திருக்கிறாள். அதற்கு கோபப்படுவார் திட்டுவாரே தவிர, நளினி மகளை இதுவரை ஒரு அடி கூட அடித்ததில்லை. ஒன்றிரண்டு முறை மொழி, மதியை அடித்துக் கூட அவள் பார்த்திருக்கிறாள்.
Advertisement
Advertisement
ஆனால் தன்னை இதுவரை அடித்திடாத அன்னை தான் தவறே செய்யாத இந்தநேரம் அடித்தது அவளுக்கு மிகவுமே வருத்தமாக இருந்தது. அதுவும் அத்தனைப்பேர் கூடியிருந்த இடத்தில், அதே இடத்தில் தான் நளினியையும் அவமானமாக பேசினார்கள். ஆனால் அதற்கு இவள் எப்படி பொறுப்பாக முடியும், நான் அப்படி நினைப்பவள் கிடையாது. என் மகள் அப்படிப்பட்டவள் கிடையாது என்று வாதிடாமல் அவரும் அவளை குற்றம் சாட்டுவதுபோல் அடித்தது தான் அவளுக்கு மிகவுமே அவமானமாக இருந்தது.
அறைக்குள் வந்து கட்டிலில் அமர்ந்தவள் அப்படியே அமர்ந்திருந்தாள். அவளது உடைமைகளையும் அவள் சகோதரிகளே எடுத்து வைத்தனர். அப்போது சாகரியும் கார்மேகனும் அங்கு வந்தவர்கள், அவர்கள் பொருட்களை எடுத்து வைப்பதை பார்த்து, கணவனும் மனைவியும் அதிர்ச்சியாக ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள். பின், “என்ன நளினி கிளம்பறீங்களா?” என்று சாகரி நளினியிடம் கேட்க,
Advertisement
“ஆமாம் சாகரி, இவ்வளவு நடந்தப்பிறகு இங்க எங்களால ஒருநிமிஷம் கூட இருக்க முடியாது. உன் பொண்ணு கல்யாணத்தில் இப்படி ஒரு பிரச்சனை நடந்ததுக்கு நாங்க காரணம் ஆகிட்டோம், எங்களை மன்னிச்சிடு,” என்று நளினி கூறவும்,
“நீ எதுக்கு மன்னிப்பு கேட்கிற நளினி, நாங்க தான் நடந்ததுக்கு உன்னிடம் மன்னிப்பு கேட்கணும், உன்னை இங்க வரவழைச்சு இப்படி ஒரு அவமானம் நடக்கற அளவுக்கு விட்டது எனக்கே கஷ்டமா இருக்கு, ஆனா நடந்ததை தான் நிகர் சொல்லிட்டானே, அவங்க மேல தப்பில்லைன்னு எல்லோருக்கும் புரிஞ்சிருக்கும் நளினி.” என்று சாகரி கூற,
“ஆனா நடந்த அவமானம் நடந்தது தானே சாகரி. என்ன விஷயம்னு தெரியாம என்னல்லாம் பேசிட்டாங்க, என்னைப் பேசினா கூட பரவாயில்லை. ஆனா என் பொண்ணுங்களை எப்படி அவங்க பேசலாம், அவர் போனதுக்குப் பிறகும் நான் உயிர் வாழறதே இவங்களுக்காக தான், நான் தினம் தினம் கடவுளிடம் வேண்டிக்கறது ஒன்னே ஒன்னு தான், இவங்க 3 பேருக்கும் நல்ல நிலமைக்கு ஆளாக்கும் வரை கடவுள் எனக்கு ஆயுளையும் கொடுக்கணும், ஏதோ இருக்கறதை வச்சு நல்லப்படியா வாழ்ந்தா போதும்னு நினைச்சிட்டு வாழ்ந்துட்டு இருக்க என்னை என்னல்லாம் பேசிட்டாங்க,” என்று சொல்லி நளினி அழுதார்.
“இங்க உனக்கும், உன் பிள்ளைகளுக்கும் நடந்தது ரொம்பவே மோசமான அவமானம் தான், நான் இல்லைன்னு மறுக்கல, ஆனா எங்க பொண்ணு கல்யாணத்துக்கு வந்துட்டு, நீங்க மனசு கஷ்டத்தோட போனா அது எங்க பொண்ணுக்கு ஆசிர்வாதத்துக்கு பதில் சாபத்தை தான் சேர்க்கும் ம்மா,” என்று கார்மேகன் கூற,
“அய்யோ, ஏன் அப்படி சொல்றீங்க, நான் இங்க இல்லன்னாலும் என் ஆசிர்வாதம் எப்போதும் ராகவிக்கு இருக்கும், அவ நல்லா இருப்பா,” என்று நளினி பதில் கூறவும்,
“நீ அப்படி நினைக்க மாட்ட சாகரி. ஆனா நீயும் பிள்ளைங்களும் மனசு வேதனைப்பட்டுப் போனா, கண்டிப்பா அது ராகவிக்கு நல்லதா அமையாது. உன்னை இங்க இருக்க சொல்ற தகுதி இப்போ எங்களுக்கு இல்லை. ஆனா இன்னும் ரெண்டுநாள் தானே நீங்க ரிஸப்ஷன் வரைக்கும் கூட இருக்க வேண்டாம், நாளை மறுநாள் காலையில் கல்யாணம் முடிஞ்சதும் கூட கிளம்புங்க,” என்று சாகரியும் கூறினார்.
நளினிக்கு இங்கு இருக்கவே விருப்பம் இல்லை. ஆனால் சாகரிக்காகவும் ராகவிக்காகவும் என்று நினைத்துக் கொண்டவர், “சரி நாங்க கல்யாணம் முடிஞ்சே கிளம்பறோம்,” என்றதும்,
“ரொம்ப சந்தோஷம் ம்மா, கண்டிப்பா இந்த ரெண்டுநாளும் உங்களை யாரும் எதுவும் சொல்லாம நாங்க பார்த்துக்கிறோம்,” என்று கார்மேகன் கூற,
“நீங்கல்லாம் சாப்பிடவே இல்லை. நான் உங்களுக்கு சாப்பாடு அனுப்பி வைக்கிறேன்.” என்று சாகரி கூறினார்.
பின் இருவரும் அங்கிருந்து சென்றதும், “நாளை மறுநாள் கல்யாணம் முடியற வரை யாரும் எங்கேயும் போகாதீங்க, இந்த ரூம்லயே இருங்க, கல்யாணத்தில் கூட நீங்க கலந்துக்க வேண்டாம்,” எனறு நளினி பொதுவாக மூவரிடம் கூறியவர், கட்டிலில் சென்று படுத்துக் கொண்டார். பின் உணவு வந்ததும் பேருக்கு நால்வரும் சாப்பிட்டனர். வந்ததிலிருந்து நயந்தினி இதுவரை யாரிடமும் எதுவும் பேசவில்லை. சாப்பிட்டு முடித்ததும் யாரும் எதுவும் பேசாமல் படுத்துக் கொண்டனர். சிறிதுநேரம் உறக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்திருந்தவர்களை தானாக உறக்கம் வந்து தழுவியது. ஆனால் நயந்தினி மட்டும் உறக்கம் வராமல் படுத்திருந்தாள்.
இங்கே நிகர்வேலன் நிலையும் அதேதான், தனதறையில் இருந்தவனுக்கோ திரும்ப திரும்ப நளினி நயந்தினியை அடித்ததே கண் முன்னே வந்து போனது. அவன் அருகே இருந்தும் இப்படி ஒரு நிகழ்வை தடுக்க முடியாத சூழ்நிலையை அவன் அறவே வெறுத்தான். அவன் நினைத்திருந்தால் அத்தனை பேர் முன்னிலையிலும் அவன் நயந்தினியை விரும்புவதை அவனால் தைரியமாக சொல்லியிருக்க முடியும்,
ஆனால் இன்னும் நயந்தினியிடம் தன் மனதை வெளிப்படுத்தாத போது அதை பொதுவில் சொல்ல அவன் விரும்பவில்லை. அப்படி அனைவரின் முன்னிலையில் சொல்லி அதனால் அவளுக்கு வேறு ஏதாவது பிரச்சனை வந்து சேரவும் வாய்ப்பிருக்கிறது. அவளும் அந்தநேரம் அதை எப்படி எடுத்துக் கொள்வாள் என்று தெரியாது. அதனால் தான் தன் காதலை அவனால் வெளியில் சொல்ல முடியவில்லை. ஆனால் இப்போதோ அவளை நினைத்து அவனுக்கு கவலையாக இருந்தது. அத்தனைப்பேர் முன்னிலையில் அவளை அடித்த நளினி அறைக்குள்ளும் அவளை அடித்திருப்பாரா? திட்டியிருப்பாரா? அவனுக்கு அதை எப்படி தெரிந்து கொள்வது என்று தெரியாமல் கவலையோடு இருந்தவன், ஏதோ அசட்டு தைரியம் பெற்றவனாக,
இங்கு வந்ததும் வாட்ஸ் அப்பில் அனைவரையும் சேர்த்து ராகவி ஒரு குழு உருவாக்கி வைத்திருந்தாள். அதில் நயந்தினியை எண்ணை சேமித்துக் கொண்டவன், ‘ஹாய், நான் நிகர். சாரி, இப்படி ஒரு விஷயம் நடக்கும்னு நானே எதிர்பார்க்கல, எல்லோருக்காகவும் திரும்பவும் சாரி. ஆன்ட்டி திரும்ப அடிச்சாங்களா? திட்டினாங்களா? நீ நல்லா தானே இருக்க, இதை தெரிஞ்சக்கலன்னா எனக்கு தூக்கமே வராது. ப்ளீஸ் ரிப்ளை பண்ணு’ என்று வரிசையாக குறுஞ்செய்தி அனுப்பினான்.
வெறுமனே கண்களை மூடி படுத்திருந்தவளுக்கோ, முதல் செய்தி வரவுமே அந்த சத்தத்தில் விக்கியாக இருக்குமோ? என்று அடுத்த குறுஞ்செய்திக்கு சத்தம் வராமல் செய்தவள், அந்த செய்தியை பார்க்க முதலில் யார் எண் என்று அவளுக்கு புரியவில்லை. ஆனால் அவள் அந்த செய்தியை பார்த்ததற்கான அறிகுறியாக நீலக்குறி தெரியவும் தான் நிகர் அடுத்தடுத்த செய்திகளை அனுப்பினான்.
அவன்தான் அனுப்பியிருக்கிறான் என்பது தெரிந்து அவள் எந்த பதிலும் போடாமல் அமைதியாக இருக்கவும், நீலக்குறியை வைத்தே அவள் அவனது குறுஞ்செய்திகளை பார்த்திருக்கிறாள் என்று தெரிந்து கொண்டவன், ‘ப்ளீஸ் நயா, உன்னோட அம்மா உன்னை அடிச்சதை பார்த்து எனக்கு ரொம்ப கஷ்டமா ஆகிடுச்சு, அந்தநேரம் அதை தடுக்கவோ, ஏன் அடிச்சீங்கன்னு கேட்கவோ முடியாத என்னோட நிலையை நானே வெறுக்கறேன். எனக்கு இப்பவே உன்னை பார்க்கணும் போல இருக்கு, எல்லோரும் தூங்கிட்டாங்களா? கொஞ்சம் பால்கனுக்கு வாயேன்.” என்று அடுத்து அனுப்பியிருந்தான்.
எந்த தைரியத்தில் அவளை பால்கனிக்கு அழைத்தான் என்று தெரியவில்லை. ஏற்கனவே அவர்கள் இருவரும் இருந்த புகைப்படத்தால் நயந்தினியை மட்டுமில்லாமல் அவள் குடும்பத்தையே தவறாக பேசியிருக்க, இந்தநேரத்தில் அவளை அழைக்கிறோமே என்று புரியாத அளவிற்கு காதல் அவனது கண்ணை மறைத்திருந்தது.
அவன்தான் அழைத்தான் என்றால், இவளாவது செல்லாமல் இருக்கலாம், ஆனால் நடந்த சம்பவம் குறித்து யாராவது தனக்கு ஆறுதலாக இருப்பார்கள் என்று இத்தனைநேரம் எதிர்பார்த்திருந்தவளுக்கோ, அப்படி இதுவரை ஒருவிஷயம் நடக்காமல் இருக்கவே, இப்போது தன்னை நினைத்து நிகர்வேலன் கவலைப்படுவதே அவளது மனதிற்கு இதமாக இருந்தது. அதுமட்டுமில்லாமல் அவனை ஒரு நல்ல தோழனாக மட்டுமே நினைத்திருந்தால், அந்த புகைப்பட விஷயத்திலும் நடந்தது என்னவென்று அனைவருக்கும் தெரிந்ததால், இப்போது ஒருமாதிரி பாரமாக இருந்த மனதிற்கு அவனது ஆறுதல் வார்த்தைகள் இன்னும் தேவைப்படுவதுபோல் தோன்றியதால் அவனை காண பால்கனிக்கு செல்வதென முடிவெடுத்தாள்.
ஒருமுறை அன்னையையும் தங்கைகளையும் பார்க்க மூவரும் நல்ல உறக்கத்தில் இருந்தனர். அதனால் மெல்ல பூனை நடைப்போட்டு அவள் பால்கனி கதவை திறந்து கொண்டு வெளியே சென்றாள். அவள் வருவதாக எந்த பதிலும் அளிக்காதபோதும் நிகர் அவளுக்காக பால்கனியில் காத்திருக்க, கதவை திறந்து கொண்டு வந்தவளை பார்த்ததும் தான் அவனது மனதிற்கு நிம்மதியாக இருந்தது.
அவரவர் பால்கனியின் நின்றிருந்தாலும் அவர்கள் பேசுவது அவளது அன்னைக்கு கேட்டுவிட்டால் என்று நினைத்தவன், “இந்தப்பக்கம் வர்றியா?” என்று கேட்டான். அவன்தான் இப்படியெல்லாம் தாண்டி வரக்கூடாது என்று சொல்லியிருந்தான். இப்போதோ அவளிடம் பேசவேண்டுமென்றிருந்ததால் அவனே வரச் சொல்லி கூற, அவள் ஒருநொடி கூட தயங்காமல் அந்தப்பக்கம் வந்துவிட்டாள்.
அவளை கைப்பிடித்து அவனது அறைக்கு அழைத்து சென்றவன், ஞாபகமாக பால்கனி கதவை தாழ் போடாமல் வெறுமனே சாத்தியவன், “சாரி நயா, இப்படி நடக்கும்னு கொஞ்சம் கூட நினைக்கல, ஆன்ட்டி திரும்ப உன்னை அடிச்சாங்களா? திட்டினாங்களா?” என்று கேட்டதற்கு அவள் அமைதியாக இருக்க,
“என்மேல கோபமா? என்னிடம் பேச மாட்டீயா?” என்று கேட்டான்.
“உங்க மேல ஏன் கோபப்படணும், நீங்க என்ன செய்தீங்க? ஆனா உங்க வீட்டில் எப்படியெல்லாம் பேசறாங்க, உங்க மாதிரி ஆளுங்க கூட பேசினா சொத்துக்காக தான் இருக்குமா? எல்லோரும் அந்த நினைப்போடவே சுத்திட்டு இருப்பாங்களா? நீங்க என்ன அவ்வளவு பெரிய ஆளா? எதுக்கு பூசி மொழுகிக்கிட்டு, வெளிப்படையாகவே கேட்கிறேன், நீங்க என்ன அவ்வளவு பெரிய அப்பாடக்கரா? உங்க பாட்டி ஏன் அப்படி பேசறாங்க,” என்று அவள் கோபமாக கேட்க, அந்த கேள்வியில் அவளை குறித்த மனக்கவலைகள் தீர்ந்து போன உணர்வு வந்ததில்லாமல், கூடவே அவள் கேட்டதில் சிரிப்பும் வர,
“அப்படித்தான் போல,” என்று அவன் பதில் கூறவும்,
“அப்படியே இருக்கட்டும், நீங்க அப்பாட்டக்கர்னே வச்சுக்கோங்களேன். அதனால் எனக்கென்ன வந்தது. உங்களை பார்த்தோ உங்க பணத்தை பார்த்தோ எல்லோரும் மயங்கிட மாட்டாங்க,” என்றாள்.
உண்மையை சொல்லப் போனால் படிக்கும் காலத்திலிருந்தே ஆண்கள் பெண்கள் என்று சிலர் அவன் பணத்திற்காகவே அவனுடன் பழகுவது போல் தான் அவனுக்கு தோன்றும், அவர்களோடு நெருக்கமாக இருக்க அவனும் விரும்பமாட்டான். இப்போது வரைக்கும் சிலரின் நோக்கம் அதுவாக தான் இருக்கும், ஆனால் அதை சொல்லி இப்போது அவளிடம் பெருமைப்பட்டு கொள்ள விரும்பவில்லை. ஆனால் நயந்தினி இப்படி பேசும்போது, அவளிடம் எப்படி காதலை சொல்லி அவளை ஒத்துக் கொள்ள வைத்து திருமணம் செய்து கொள்வதோ என்பதை நினைத்து அவனுக்கு கவலையாக இருந்தது. அதற்கான வழியை யோசித்து தான் செய்ய வேண்டுமென்று நினைத்து மனதை சமாதானப்படுத்திக் கொண்டவன்,
“அப்போ நிஜமா என்மேல உனக்கு கோபமில்லை தானே,” என்று அவளிடம் கேட்க,
“நிஜமா இல்லை. நேத்து நீங்க வரலன்னா என்ன நடந்திருக்கும்னு இப்போ நினைச்சாக் கூட பயங்கரமா இருக்கு, அதுமட்டுமில்லாம நடந்ததை தான் இன்னைக்கு எல்லோருக்கும் புரிய வச்சீங்களே, அதனால நான் ஏன் உங்கமேல கோபப்படப் போறேன்.” என்றாள்.
“சரி சொல்லு, உங்க அம்மா உன்னை திரும்ப அடிச்சாங்களா? திட்டினாங்களா?” அதைப்பத்தி எதுவுமே சொல்லலையே,” என்று அவன் கேட்க,
“ஒரு அடி அடிச்சா என்ன? நிறைய அடி அடிச்சா என்ன? அவங்களும் என்னை தப்பா நினைச்சுட்டாங்களே, மத்தவங்க இந்த பத்து நாளில் என்னைப்பத்தி என்ன தெரிஞ்சி வச்சிருப்பாங்க, யார் என்னை என்ன வேணும்னா பேசட்டும், நாளைக்கு என்னை வச்சு அவங்களா சோறு போடப் போறாங்க, ஆனா அத்தனைபேர் பேசினபோது, என் பொண்ணு அப்படி கிடையாதுன்னு சொல்லாம அவங்க என்னை அடிச்சு நான் இதுமாதிரின்னு எல்லோருக்கும் சொல்லாம சொல்லிட்டாங்கல்ல, அதைவிடவா அவங்க என்னை அடிக்கிறது எனக்கு வலிக்கப் போகுது.” என்று அவள் விரக்தியாக பேசவும்,
“அது அப்படியில்லை. அந்தநேரம் அவங்களுக்கு அதை எப்படி எடுத்துக்கறதுன்னு தெரியாம கூட அவங்க அப்படி நினைச்சிருக்கலாம், ஆனா அப்புறம் உன்னை அடிச்சதுக்காக கண்டிப்பா அவங்க வருத்தப்பட்டிருப்பாங்க, உலகத்திலேயே எந்த எதிர்பார்ப்பும் இல்லாம அன்பு காட்டும் ஒரே ஜீவன் அம்மா தான், அவங்க மேல கோபப்படலாம், ஆனா அதுக்காக அவங்களை வெறுக்க மாதிரி பேசாத,” என்று அவளுக்கு அறிவுரை கூறினான்.
“அதைக்கேட்டவளோ, இப்படியே பேசினீங்கன்னா எனக்கு தூக்கம் வந்துடும், இதை சொல்லத்தான் என்னை கூப்பிட்டீங்களா?” என்று அலுத்துக் கொள்ள,
“அட்வைஸ் செய்தா பிடிக்காதே,” என்று சொல்லி சிரித்தவனோ,
“உன்னை இப்படி பார்த்ததுக்குப் பிறகு தான் நிம்மதி ஆச்சு, சரி ஆன்ட்டி, மொழி, மதி யாராவது எழுந்து உன்னை காணும்னு தேடப் போறாங்க, நீ உன்னோட ரூம்க்கு போ,” என்று சொல்லி அவன் பால்கனி கதவை திறக்கப் போக, அது வெளிப்புறமாக சாத்தப்பட்டிருந்தது.
அவன் சாதாரணமாக சாற்றிய கதவு எப்படி வெளிப்புறம் சாற்றியிருக்கும், யாருடைய வேலை இது? என்று யோசித்தப்படி அவன் கதவை திறக்க முயற்சிக்க,
“என்னாச்சு?” என்று நயந்தினி கேட்டாள்.
“கதவை வெளிப்பக்கமா லாக் ஆகியிருக்கு,” என்று அவன் பதில் கூற,
“நாம ரெண்டுப்பேரும் உள்ள இருக்கோம், அப்போ யார் லாக் செய்திருப்பா?” என்று அவள் புரியாமல் கேட்கவும்,
“யாரோ வேணும்னே சாத்தியிருக்க மாதிரி தெரியுது. ஒருவேளை அவினாஷா இருக்குமோ?” என்று அவளிடம் சொல்வது போல் தன்னையே அவன் கேட்டுக் கொள்ள,
“அவன் இனி இங்க வரமாட்டான்னு சொன்னீங்க, வாட்ஸ் அப்ல போட்டோ அனுப்பின மாதிரி இப்போ ஏதாவது பிளான் செய்துட்டானா? நாம ஒரே ரூம்ல இருக்கறதை வச்சு திரும்ப உங்க வீட்டில் ஏதாவது தப்பா பேசுவாங்களா? அம்மாக்கு மட்டும் இப்போ நான் ரூம்ல இல்லன்னு தெரிஞ்சா என்னாகுமோன்னு பயமா இருக்கு, அவங்க என்னை நம்பலன்னு சொல்லிட்டு இப்போ நான் அதுக்கேத்த மாதிரி தானே நடந்துக்கிறேன். நான் இங்க வந்திருக்கவே கூடாது.” என்று அவள் புலம்பவும்,
“அப்படின்னு பார்த்தா நான்தானே உன்னை ரூம்க்கு வரச் சொன்னேன். இதுக்கும் மேலேயும் நான் உன்னை தப்பா பேசற மாதிரி விடமாட்டேன். இப்போ ஒரே ரூம்ல இருந்தா நாம தப்பு செய்தவங்களா? அப்புறம் நாம ஏன் பயப்படணும், நீ வந்தது வேணும்னா பின் பக்கமா இருக்கலாம், அதுக்காக நீ பயப்படணும்னு அவசியமில்லை. நான் முன்பக்கமா உன்னை கூட்டிட்டுப் போய் உன்னோட ரூம்ல விட்றேன்.” என்று நிகர்வேலன் கூற,
“நான் இந்த நேரத்தில் வெளியப் போனது அம்மாக்கு தெரிஞ்சா அவ்வளவுதான், இந்த கதவை திறக்க முடியுதான்னு பாருங்க,” என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கும்போதே அவனது அறையின் அழைப்பு மணி சத்தம் கேட்க, அதில் நயந்தினி இன்னும் அதிர்ந்து போனவள்,
“யார் இந்த நேரத்தில் காலிங்பெல் அடிக்கறது? எனக்கு பயமா இருக்கு,” என்றாள்.
“இரு இந்த ரெசார்ட் என் பொறுப்பில் இருக்கு இல்லையா? ஏதாவது பிரச்சனைன்னா என்னிடம் தான் வருவாங்க, ஒருவேளை அவினாஷ் வந்திருந்தா மாட்டியிருக்கலாம், அதுவா மட்டும் இருக்கட்டும், அவனுக்கு இருக்கு,” என்ற நிகர்வேலன்,
“நீ இப்படி மறைவா நில்லு,” என்று அவளிடம் கூறிவிட்டு கதவை திறக்கப் போக, அவளும் அவன் சொன்னப்படியே மறைவாக நின்றாள்.
உள்ளுக்குள்ளே பதட்டம் இருந்தாலும் அதை மறைத்தப்படி நிகர் கதவை திறக்க, வெளியே சேகரன், நாகராஜன், கார்மேகன், சாகரி இவர்களுடன் நளினியும் நின்றிருந்தார்.
இவன் கதவை திறந்ததுமே, “நிகர், நயந்தினியை காணலையாம், நடந்த பிரச்சனையில் நளினி அவளை அடிச்சதால ஏதாவது விபரீதமா யோசிச்சு இருப்பாளோன்னு நளினி பயப்பட்றா,” என்று சாகரி பதட்டத்துடன் கூறினார்.
நடந்த விஷயங்களால் யாருக்குமே உறக்கம் வராததால் அனைவரும் கூடி பேசிக் கொண்டிருக்க, அப்போது தான் நளினி பதட்டத்துடன் அங்கு வந்தவர், “சாகரி, நயனியை காணல,” என்று கூற,
“என்ன சொல்ற நளினி, நயனியை காணலையா? திரும்ப அவளை திட்டினியா? அடிச்சியா?” என்று சாகரி கேட்டார்.
அதற்கு நளினியோ, “அதெல்லாம் நான் எதுவும் செய்யல, ரூம்க்கு வந்ததிலிருந்தே இறுக்கமா உட்கார்ந்திருந்தா, நடந்த விஷயம் நான் அடிச்சது எல்லாம் தான் காரணம்னு புரிஞ்சதால நான் அதுக்குப்பிறகு எதுவும் சொல்லல, யாருமே எதுவும் பேசிக்கல, நீ கொடுத்தனுப்பிச்ச சாப்பாட்டை சாப்பிட்டதும் எல்லாம் படுத்த கொஞ்ச நேரத்திலேயே தூங்கிட்டோம், திடீர்னு கண்விழிச்சுப் பார்த்தா நயனியை காணல, எனக்கு என்னமோ பயமா இருக்கு,” என்று கூறி நளினி அழவும்,
“அழாத ம்மா, நயனி எங்கேயும் போயிருக்க மாட்டா, உடனே நிகரிடம் விஷயத்தை கூறி, என்ன செய்யலாம்னு பார்க்கலாம்,” என்று சேகரன் கூற, உடனே அனைவரும் அவனை தேடி வந்திருந்தார்கள்.
நயந்தினியை காணவில்லை என்று வந்திருந்தவர்களிடம் என்ன கூறுவதென்று தெரியாமல் விழித்த நிகர்வேலனோ, பின் தைரியம் பெற்றவனாக, “அத்தை, நயந்தினி எங்கேயும் போகல, இங்க தான் இருக்கா,” என்று உண்மையை கூறிவிட, மறைந்தப்படி நின்றிருந்த நயந்தினியும் அவர்கள் முன் வந்து நின்றாள்.
நிகர்வேலன் சொன்னதையும் நயந்தினியை அவன் அறையில் கண்டதையும் அதிர்ச்சியுடன் பார்த்தப்படி அனைவரும் உள்ளே வர, கார்மேகன் உடனே அறைக்கதவை சாத்தினார். சேகரனோ, “நீ இப்படி ஒரு காரியத்தை செய்வன்னு நான் எதிர்பார்க்கல நிகர்,” என்று மகனிடம் கோபமாக சொல்ல,
நளினியோ ஒருபடி மேலே போய், “என்னடி காரியம் செய்து வச்சிருக்க, நட்ட நடுராத்திரியில் கல்யாணம் ஆகாத ஒரு பையனோட அவன் ரூம்ல வந்து பேசிட்டு இருக்க, ஏற்கனவே நம்மளை மோசமா பேசினது பத்தாதா? அதெல்லாம் உன்னோட புத்திக்கு உறைக்கலையா? நீயே உன் எதிர்காலத்தை குழி தோண்டி புதைக்க முடிவு செய்திட்டீயா?” என்று கேட்டப்படி அவளை அடிக்க ஆரம்பித்துவிட்டார்.
சாகரியோ அவரை தடுத்தவர், “என்ன ஏதுன்னு கேட்டு தெரிஞ்சுக்காம, எதுக்கு எடுத்ததும் வயசு பிள்ளை மேல கை வைக்கிற நளினி.” என்று கேட்க,
“பின்ன என்னை என்ன செய்ய சொல்ற சாகரி. உன்னோட அம்மா இவளை என்னெல்லாம் பேசினாங்க, உங்க வீட்டு பையனை இவ தான் மயக்கியிருப்பான்னு சொன்னாங்க, இப்போ இந்த ரூம்க்கும் இவ தான் வந்திருப்பான்னு பேசுவாங்க, நாங்க வசதியில் குறைந்தவங்கன்னு என்ன வேணும்னாலும் எங்க மேல பழியை போடுவாங்க, அதுக்கேத்த போல நடந்தா நான் இவளைத்தானே கேள்வி கேட்க முடியும்,
உங்க வீட்டுப் பொண்ணு கட்டிக்க போறவனோட போட்டோ எடுத்ததே தப்புன்னு உங்க அப்பா, அம்மா பேசினாங்க, ஆனா இவளும் உங்க வீட்டுப் பையனும் ஒன்னா இருக்க போட்டோ வந்தது மட்டுமில்லாம இப்போ ஒரே ரூமில் இருக்காங்க, அதை என்ன ஏதுன்னு தீர விசாரிச்சு என்ன செய்வீங்க, எதுவும் தப்பா நடக்கலன்னு தெரிஞ்சா மன்னிப்பு கேட்பீங்க, ஆனா இவ எதிர்காலம் என்னாகும் என்கிற கவலை எனக்கு தானே இருக்கு,
இப்பவே இவளுக்கு 22 வயசாகிடுச்சு, இன்னும் ரெண்டு மூனு வருஷத்தில் இவளை கட்டிக் கொடுக்கணும், அப்போ இந்த விஷயம் தெரிஞ்சு இவ கல்யாணத்தில் சிக்கல் வந்தா என்ன செய்றது? வசதியான உங்களுக்கு தான் மான ரோஷம் கௌரவமெல்லாம் இருக்கும், நாங்க என்ன கேவளம் நடந்தாலும், நடந்ததை துடைச்சு போட்டுட்டு போயிட்டே இருப்போம்னு நினைச்சீங்களா?” என்று நளினி பதிலுக்கு கேட்டார்.
“என்ன நளினி, ஏன் இப்படியெல்லாம் பேசற,” என்று சாகரி கேட்க,
“உன் பொண்ணு கல்யாணத்தில் எந்த பிரச்சனையும் வரக் கூடாதுன்னு நீ நினைக்கிற மாதிரி, என் பொண்ணு எதிர்காலம் பாழாகிடக் கூடாதுன்னு நான் நினைக்க மாட்டேனா?” என்று கேட்ட நளினி,
“எல்லாம் இவளால வந்தது,” என்று சொல்லி மீண்டும் நயந்தினியை அடிக்கப் போக,
ஏற்கனவே புகைப்பட விஷயம் நாகராஜனுக்கு கொஞ்சம் உறுத்தலாகவே இருக்க, இப்போது நளினி பேசியதிலும் ஒரு நியாயம் இருப்பது போல் அவருக்கு தோன்றவும், “உன் பொண்ணோட எதிர்காலம் எந்தவிதத்திலும் பாழாகாது ம்மா,” என்று நளினியிடம் கூறியவர்,
“சேகரா, நாளை மறுநாள் ராகவி கல்யாணத்துக்கு குறிச்ச முகூர்த்தத்தில் இவங்க கல்யாணமும் நடக்கணும்,” என்று மகனிடமும் கூற,
தந்தை பேச்சை இதுவரை மீறாத சேகரனும், “சரி ப்பா,” என்று தலையசைத்தார்.
அவர் இப்படி ஒரு முடிவெடுப்பார் என்று எதிர்பாராத நயந்தினி அந்த முடிவைக் கேட்டு அதிர்ந்தாள். அதிலும் சாதாரண பிரச்சனையை பேசும் விதத்தில் பேசி நாகராஜனை இப்படி ஒரு முடிவெடுக்க வைத்ததே தன் அன்னை தான் என்பதாக தான் நினைத்தாள்.
அறையின் கதவு உள்புறம் தாழிட்டு இருக்க, அவளால் எப்படி வெளியில் சென்றிருக்க முடியும், அது நளினிக்கு நன்றாகவே தெரிந்திருக்கும், அவள் பால்கனி வழியாக இங்கு வந்ததும் அவருக்கு தெரிந்திருக்க வேண்டும், கதவை யாரோ வெளியே இருந்து சாற்றியதாக நிகர் கூறினானே, அது நளினியாக தான் இருக்க வேண்டுமென்பது நயந்தினியால் நன்றாகவே யூகிக்க முடிந்ததது.
ரோஹனிடம் வெளிநாட்டில் சென்று எம்.எஸ் படிக்கப் போவதாக அவள் கூறியதை கேட்ட நளினி அதுகுறித்து அவளிடம் பேசாதது அவளுக்கு கொஞ்சம் உறுத்தலாக தான் இருந்தது. இங்கு வைத்து பேச வேண்டாமென்று நினைத்திருப்பார் என்று தவறாக கணக்குப் போட்டுவிட்டாள். ஆனால் நேரம் பார்த்து கிடைத்த வாய்ப்பை அவர் பயன்படுத்திக் கொள்வார் என்று அவள் நினைக்கவேயில்லை. திருமணம் என்ற ஒன்றில் அவளை சிக்கவைத்து அவளின் கனவுகளை கருக்கிவிடுவார் என்று அவள் துளி கூட எதிர்பார்க்கவேயில்லை.
அகம் சேர்வான்…
error: Content is protected !!