Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Margazhi Poove...! - 4

Advertisement

Uma saravanan

Tamil Novel Writer
The Writers Crew
பூ 4:

அமைச்சர் கனகவேல் வீடு....

வழக்கத்திற்கு மாறாக அந்த வீடு கொஞ்சம் கூட்டத்துடன் காணப்பட்டது.அமைச்சர் கனகவேல் என்று சொல்வதைக் காட்டிலும், தொழில்துறை அமைச்சர் கனகவேல் என்று சொன்னால் தான் அவருக்கே பிடிக்கும். அந்த பதவியின் மேலும், அரசியலிலும் அவருக்கு அப்படி ஒரு ஈடுபாடு.

அரசியலில் அவருக்கு அப்படி ஒரு நல்லபெயர். ஆனால் திரைக்கு பின்னால் என்பதைப் போல, அந்த நல்ல பெயரைக் கூட, சில திரை மறைவு விஷயங்களைச் செய்து தான் அவர் வாங்க வேண்டியிருந்தது.

பார்ப்பதற்கு எதார்த்தமான மனிதர் போல் தெரியும் அவருக்குள், ஊறிப் போன ஒரு விஷயம் உண்டென்றால் அது ஜாதி தான். இன்றைய காலகட்டத்தில் ஜாதி இல்லை என்றால் அரசியல் இல்லை என்பதை நன்கு உணர்ந்தவர்.

எந்த தீயை மூட்டினால், எங்கு பற்றிக் கொள்ளும், எங்கு வெடிக்கும், எங்கு ஜெயிக்கும் என்று திறம்படக் கணிக்கத் தெரிந்த, ஒரு அரசியல் வாதி. அடுத்ததாக, முதல்வர் ஆகவேண்டும் என்ற கனவெல்லாம் அவருக்குக் கிடையாது. அந்த பதவியில் இருந்தால் சில விஷயங்களை அவரால் செய்ய முடியாது என்பது அவருக்கு நன்றாகத் தெரியும். அதனால், அவர் சொன்னால் தான் தலமையிடமே தலையாட்டும் என்கிற நிலையை உருவாக்கி வைத்திருப்பவர்.மொத்தத்தில் அரசியல் சாம்ராஜ்யத்தில் அவர் இன்றி ஒரு அணுவும் அசையாது.

அவர் தொழில் துறையில் அமைச்சராகி மூன்றாண்டு காலம் நிறைவடைந்ததை அடுத்து, அந்த நிகழ்வைக் கொண்டாட, தொண்டர்கள் அனைவரும் சேர்ந்து விழா ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தனர்.

அதற்காகவே அவர் வீட்டின் முன்பு, அன்றைக்கு அப்படி ஒரு கூட்டம். சென்னையில் இருந்து வரும் அவரை வரவேற்பதற்காக, அவர் வீட்டின் முன்பு குழுமியிருந்தனர்.



“தலைவர் எப்ப வருவார்..?” என்று சில விசுவாசிகள் கேட்க,

“தலைவர் வர்ற நேரம் தான்...” என்று சிலர் பதில் சொல்லிக் கொண்டிருந்தனர்.அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே..கார்கள் ஒன்றன் பின் ஒன்றாக, வரிசையாக உள்ளே நுழைந்தன.அனைவரும் ஆவலுடன் எதிர்நோக்க, கட்சி வேட்டி சட்டை சகிதம் இறங்கினார் கனகவேல்.சொந்த ஊருக்கு வரும் போதெல்லாம், அதை ஒரு திருவிழாவாகவே கொண்டாடி விடுவார்கள் அடிமைகள். ஆம், கண்மூடித்தனமான அடிமைகள்.

“தலைவர் வாழ்க..!” என்ற கோஷங்கள் ஒரு புறம் இருக்க,

“எப்படி இருக்கீங்க தலைவரே..!” என்று வழிந்து கொண்டும், குனிந்து கொண்டும் சென்ற சமயவாதிகள் ஒரு புறம். அனைத்தையும் இறுமாப்புடன் பார்த்த கனகவேல்...அறுபது வயதை முடித்திருந்தார்.

“நான் சொன்ன காரியம் என்ன ஆச்சு...?” என்றார் ஒருவனைப் பார்த்து.

“அதெல்லாம் அசால்ட்டா முடுச்சுட்டோம் தலைவரே..!” என்றான் அவனும்.

“ம்ம்..இனி நம்ம ஜாதிப் பொண்ணைக் காதலிக்கணும், கல்யாணம் பண்ணனும்ன்னு ஒரு பய நினைக்கக் கூடாது. அப்படியே நினைச்சாலும், நம்ம செஞ்சது தான் அவனுகளுக்கு நியாபகத்துக்கு வரணும்..!” என்றார் கனகவேல்.

“கண்டிப்பா தலைவரே...! நான் ஜெயிலுக்குப் போகக் கூடத் தயாரா இருக்கேன் தலைவரே..!” என்றான் அந்த விசுவாசி.

“உன்னை ஜெயிலுக்கு அனுப்புறதுக்கு, இந்த சின்ன விஷயம் எல்லாம் ஒன்னும் செய்யாது. அப்பறம் நான் இருக்குறதுல என்ன பிரயோஜனம்? நம்ம மூச்சு விட சொன்னாத்தான்...சி எம் மூச்சே விடுவார்.இதெல்லாம் எம்மாத்திரம்..?” என்றார் கனகவேல்.

“பொண்ணை அவங்க வீட்டுல ஒப்படைச்சுட்டோம் தலைவரே..!” என்றான் பவ்யமாய்.

“நல்லது..” என்றபடி உள்ளே செல்ல முயன்ற கனகவேலை, உள்ளிருந்து வந்த அவர் மனைவி ராதிகாவின் ஆரத்தித் தட்டு தடுத்தது.

“என்னம்மா இதெல்லாம்...?” என்றார்.

“சும்மா இருங்க..! உங்க மேல நிறைய கண்திருஷ்ட்டி பட்டிருக்கு... அதான்..!” என்றபடி அவர் ஆரத்தியைச் சுற்ற, மனைவியை பெருமை பொங்க பார்த்தார் கனகவேல்.

“இப்ப உள்ள போங்க..!” என்றபடி அவர் ஆரத்தியை வெளியே கொட்ட சென்றார்.

உள்ளே சென்ற கனகவேல் அதற்கு அடுத்து வந்த மூன்று மணி நேரமும், கட்சி ஆட்களுடன் செலவிட்டார்.

“என்னம்மா..? அப்பா எப்ப வந்தார்..?” என்றபடி வந்தாள் திவ்யா.

“அவர் அப்பவே வந்துட்டார்..!” என்ற ராதிகா, அதற்கு மேல் ஒன்றும் பேசவில்லை.ஏனோ அவரின் விலகல் திவ்யாவை கொஞ்சம் பாதித்தது. காரணம் தெரியாமல் முழித்துக் கொண்டிருந்தாள்.காசை இழைத்துக் கட்டப்பட்டிருந்த அந்த பங்களா அமைப்பிலான வீட்டில், பாசம் மட்டும் ஏனோ வெளிப் பூச்சாகத்தான் இருந்தது.

அனைவரும் களைந்து சென்ற பின்பு, கொஞ்சம் ஓய்வாக சாய்ந்து அமர்ந்தார் கனகவேல்.

“ஹாய் டாட்..! எப்ப வந்திங்க..? எப்படி இருக்கீங்க..?” என்றாள் திவ்யா.

“வாடா கண்ணு. எப்படி இருக்க..? பிஸ்னஸ் எல்லாம் எப்படிப் போகுது..?” என்றார் மகளை வாஞ்சையுடன்.

“நீங்க இருக்கும் போது, என்ன பிரச்சனை வந்திடப் போகுது டாட்...?” என்றாள். அதற்கு அவருடைய இறுமாப்பான சிரிப்பு மட்டுமே பதிலாய்க் கிடைத்தது.

“எனக்கு உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும் டாட்..!” என்றாள்.

“சொல்லுமா..? அப்படி என்ன முக்கியமான விஷயம்..?” என்றார் கனகவேல்.

“டாட்..! எனக்கு எதையும் நேராப் பேசித்தான் பழக்கம். அதனால உங்ககிட்ட நேரடியாவே கேட்குறேன்..எனக்கு ஒருத்தரைப் பிடிச்சிருக்கு..!” என்றாள் நேராக.

அவளின் பேச்சில் கனகவேலின் புருவம் இடுங்கியது. ‘காதல்’ என்ற வார்த்தையைக் கேட்ட உடன், அவருக்கு உள்ளே பற்றிக் கொண்டு எரிந்தது.ஆனால் வெளியே காட்டிக் கொள்ளவில்லை.

“ம்ம்..சரி..! பையன் யாரு..? என்ன பண்றான்..? முக்கியமா என்ன ஜாதி..?” என்றார் சற்று உற்று நோக்கிய கண்களுடன்.

“டாட்..! நான் உங்க பொண்ணு.கண்டிப்பா தப்பான ஆளை சூஸ் பண்ண மாட்டேன். பையன் நம்ம ஜாதி தான். RRS இண்டஸ்ட்ரீஸ் எம்டி விஜய குமார் தான்..!” என்றாள் அசிரத்தையாக.

அவள் அசாதாரணமாக சொல்ல, அதைக் கேட்ட கனகவேலோ அதிர்ந்து நின்றார்.

“நீ என்ன சொல்ற திவ்யா..?” என்றார், அதிர்ச்சி கொஞ்சமும் மாறாமல்.

“நான் சொன்னது உங்களுக்கு புரியலையா டாடி...?” என்றாள் அவளும் குழப்பமாக.

“அந்த பையனும் உன்னை விரும்புறானா..?” என்றார் யோசனையுடன்.

“இல்ல டாடி..! அவன் என்னை ஒருதடவை தான் பார்த்திருக்கான். எனக்கு அவனைப் பார்த்த உடனே பிடிச்சுடுச்சு.ஐ லைக் ஹிம்..” என்றாள்.

“இது நடக்காது திவ்யா..” என்றார்.

“என்ன டாடி சொல்றிங்க...?”

“இதுக்கு அந்த பையனும் சம்மதிக்க மாட்டான். அவங்க வீட்லயும் சம்மதிக்க மாட்டாங்க..!” என்றார் கனகவேல்.

“என்ன டாடி..? உங்களால முடியாததுன்னு எதுவுமே இல்லைன்னு சொல்லுவிங்க. இப்ப என்னடான்னா இப்படி சொல்றிங்க..? எனக்கு எல்லா விதத்துலயும் அவன் மட்டும் தான் பொருத்தமா இருப்பான்..!” என்றாள் விடாப்பிடியாக.

“இது நடக்காது..!” என்றார் உறுதியாக.

“நடந்த எல்லா விஷயமும் எனக்குத் தெரியும் டாட்..” என்ற திவ்யா, மீண்டும் தகப்பனை அதிர வைத்தாள்.

“நீ என்ன சொல்ற திவ்யா..?” என்றார்.

“ஆமா டாட்..! எனக்கு எல்லா விஷயமும் தெரியும்ன்னு சொல்றேன். எனக்கு அவனைப் பழிவாங்கியேத் தீரனும். என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறது தான் அவனுக்கு மிகப் பெரிய தண்டனையா இருக்க முடியும்..!” என்றாள் திவ்யா.

“நீ என்ன சொல்ல வரேன்னு எனக்கு சுத்தமா புரியலை. ஆனா இந்த விஷயம் கண்டிப்பா நடக்காது. அது மட்டும் உறுதி..” என்றார் கனகவேல்.

“எனக்கு விஜய் தான் வேணும்..! நீங்க நடத்திக் குடுக்குறிங்க. இல்லைன்னா என்ன பண்ணுவேன்னு எனக்கேத் தெரியாது..!” என்றபடி, வார்த்தைகளில் முழுக் கோபத்தையும் காட்டி விட்டு சென்றாள் திவ்யா.அவள் சென்ற பின்பு அவருக்குத் தான் தலைவலியாக இருந்தது.அவள் நினைப்பது போல், அது சாதாரண காரியம் அல்ல என்று அவருக்கு நன்றாகத் தெரியும். அவர் யோசனையில் ஆழ்ந்திருக்க,

“டீ எடுத்துக்கோங்க..!” என்றார் ராதிகா.

“ம்ம்..தேங்க்ஸ் ராதிகா..!” என்றபடி டீயை எடுத்துக் கொண்டவர், அதே யோசனையுடன் குடிக்க, அவரையேப் பார்த்துக் கொண்டிருந்த மனைவிக்குப் புரிந்து போனது அவரின் மனநிலை.

“திவ்யாவுக்கு சொல்லிப் புரியவைக்கலாம். அவளுக்காக ரொம்ப யோசிக்காதிங்க..” என்றார் ராதிகா.

“அது கஷ்ட்டம் ராதிகா..! அவ முடிவுல உறுதியா இருக்கா..!” என்றார் கனகவேல்.

“அதுக்காக, நீங்க அந்த வீட்டுக்குப் போகப் போறிங்களா..? அதனால எவ்வளவு பிரச்சனை வரும்னு உங்களுக்கத் தெரியும் தான..!” என்றார்.

“இது உடனே செய்யக் கூடிய விஷயம் இல்லை. கொஞ்சம் யோசிச்சு தான் செய்யணும். இப்போதைக்கு இதை இப்படியே விடுவோம்..!” என்றார்.

“உங்களால, அவங்க பட்டது போதும்..!” என்றார் ராதிகா உறுதியாக.

“பழசைப் பத்தி இப்ப பேசாத.என்ன பண்ணனும்ன்னு எனக்குத் தெரியும். நீ தேவையில்லாததை நினைச்சு உடம்பைப் போட்டு வருத்திக்காத...” என்றவர்,

“விமல் எங்க..?” என்றார்.

“வர்ற நேரம் தான்..!” என்றபடி சென்றார் ராதிகா.

கனகவேலின் தங்கை மகன் தான் விமல். விமலின் பெற்றோர் ஒரு விபத்தில் இறந்து விட, சிறுவயதில் இருந்து தாய்மாமன் வசமே வளர்ந்தான். மாமனுக்கு எல்லாமே அவன்தான்.இப்போது திவ்யாவுக்கும்.
 
விஜய்யின் வீட்டில்....

“என்ன மாமா சொல்றிங்க..?” என்றார் சுரேஷ் அதிர்ச்சியாக.

“இதுல அதிர்ச்சியாக என்ன இருக்கு மாப்ள. நம்ம விஜய்க்கு, துளசியை கட்டுக் குடுங்கன்னு கேட்குறோம்..!” என்றார் ரத்னவேல் தாத்தா மீண்டும் உறுதியாக. அவருக்கு அருகில் ராஜ சேகரும், சுந்தர சேகரும் அமர்ந்திருக்க, வித்யாவோ கையைப் பிசைந்தபடி அமர்ந்திருந்தார்.

“என்ன மாமா திடீர்ன்னு..?”

“சில விஷயங்களை திடீர்ன்னு தான் செய்ய வேண்டியிருக்கு மாப்பிள்ளை..! உங்களுக்கு துளசியை கட்டிக் குடுக்க விருப்பமா இல்லையா..? என்றார்.

“அதை நான் எப்படி முடிவு பண்ண முடியும். விஜய்க்கு குடுக்குறதுல எனக்கு முழு சம்மதம், சந்தோசம். ஆனா துளசி சரின்னு சொன்னா மட்டும் தான்..!” என்றார்.

“நீங்க பார்த்து சொன்னா, துளசி சரின்னு சொல்லுவா..” என்றார் வள்ளியம்மை பாட்டி.

“மன்னிக்கணும் அத்தை..! என் பொண்ணுக்கு விருப்பம் இல்லாத ஒரு விஷயத்தை செய்யச் சொல்லி நான் கட்டாயப் படுத்த மாட்டேன்..!” என்றார் உறுதியாக.

“என்னங்க..?” என்றார் வித்யா.

“நீ சும்மா இரு வித்யா..!” என்று அதட்டிய ரத்னவேல்,

“விஜய்க்கு வேற பக்கம் பொண்ணுப் பார்க்கத் தெரியாமலோ, இல்லை பொண்ணுக் கிடைக்காமலோ நாங்க இதை சொல்லலை. நடந்த விஷயம் நமக்குத் தெரியும். ஆனா, வெளிய தெரிஞ்சா ஒன்னை, பத்தா திரிச்சு பேசுவாங்க. அதுக்காக மட்டும் தான் துளசியை முடிக்கலாம்ன்னு கேட்குறோம்..!” என்றார் ரத்னவேல்.

“சபாஷ்..!” என்ற துளசியின் குரலில் அனைவரும் திரும்ப,

“இப்பக் கூட உங்களுக்கு, உங்க வீட்டு கவுரம் போயிடக் கூடாது. உங்க பேரன் கெத்தா வெளிய சுத்தணும். அதுக்கு நான் பலியாடு ஆகணும். என் வாழ்க்கையை பணயம் வைக்கணும்...அப்படித்தான..?” என்றாள் விஷ்வ துளசி.

“அமைதியா இரு துளசி..! பெரியவங்க பேசிட்டு இருக்காங்கல்ல..” என்றார் வித்யா.

“இது என் வாழ்க்கை. நான் யாரைக் கல்யாணம் பண்ணினா சந்தோஷமா இருப்பேன், யாரைக் கல்யாணம் பண்ணினா நாசாமாப் போவேன்னு எனக்குத் தான் தெரியும். மிஸ்டர் விஜய்க்கு நான் வாழ்க்கை குடுத்தா...என் வாழ்க்கை தான் நாசம் ஆகும். அதுக்கான வாய்ப்பே இல்லை..” என்றாள் விஷ்வ துளசி உறுதியாக.

“என்னடா துளசி இப்படி எல்லாம் பேசுற..?” என்றார் நீலாவதி.

“பின்ன என்ன அத்தை..! சம்பந்தப்பட்ட என்கிட்டே கேட்காம, எங்கப்பாவை சிபாரிசுக்கு கூப்பிடுறாங்க...நான் தான் ஏற்கனவே தெளிவா என் முடிவை சொல்லிட்டேனே..! மறுபடியும் டாடிகிட்ட பேசுனா என்ன அர்த்தம். அவரை பிரெயின் வாஷ் பண்றாங்கன்னு தான அர்த்தம்..” என்றாள் கோபமாய்.

“துளசி அமைதியா இருடா...! உன் சம்மதம் இல்லாம டாடி ஒன்னும் சொல்ல மாட்டேன். நீ இதைப் பத்தி வொரி பண்ணிக்காத...நீ ஆபீஸ் கிளம்பு..!” என்றார்.

“ஓகே டாடி..!” என்றவள், எல்லாரையும் முறைத்துக் கொண்டு, மனமே இல்லாமல் அங்கிருந்து நகன்றாள்.

நடந்து கொண்டிருந்த அனைத்தையும் மேலே நின்று வெறுமையான முகத்துடன் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தான் விஜய். துளசி பேசிய அனைத்தும் அவனுக்கு செருப்பால் அடித்த மாதிரி இருந்தது.

உள்ளுக்குள் கனன்ற கோபத்தை வெளியே காட்டாமல் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தான். முதல் நாள் கோபப்பட்டதற்கு பரிசாய் அவன் கைகயில் கட்டு இருந்தது.

வீட்டின் வாயில் வரை சென்ற விஷ்வ துளசிக்கு ஏதோ தோன்ற, திரும்பி மேலே பார்த்தாள். அவளையே பார்த்துக் கொண்டிருந்தான் விஜய். அந்த பார்வையின் பொருளை யாராலும் விளங்கிக் கொள்ள முடியாது. உயிர்ப்பில்லாத கண்களில் உயிரைத் தேடினால் எப்படி கிடைக்கும்..?

சில நிமிடங்கள் அவனையேப் பார்த்துக் கொண்டிருந்தவள், பட்டென்று நினைவிற்கு வந்தாள். அவனை முறைத்தவள்..’பொறுக்கி’ என்றாள் முணுமுணுப்பாக. யாருக்கும் கேட்காது என்று அவள் சொல்ல, அவள் வாயசைவில் கண்டு கொண்டான் வார்த்தையை. கண்டு கொண்டும் அமைதியாகத் தான் இருந்தான். பழைய விஜய்யாக இருந்திருந்தால், இந்நேரம் நடந்திருப்பதே வேறு.

“இந்த பேச்சு வேண்டாம் விட்டுடுங்கப்பா..” என்றார் ராஜசேகர்.

“விஜய்க்கும், துளசிக்கும் தான் கல்யாணம் நடக்கணும். இல்லைன்னா இந்த வீட்ல நடக்குறதே வேற..!” என்றார் ரத்னவேல் கடுமையாக.

“அப்பா..!!!” என்று அதிர்ந்தனர் மகன்கள் இருவரும்.

“சாரி மாமா..! விஜய் நான் பார்க்க வளர்ந்த பையன் தான். அவனை எனக்கு பிடிக்கும் தான். ஆனா துளசிக்கு விருப்பம் இல்லைங்கும் போது, எதுவும் பண்ண முடியாது..!” என்று எழுந்த சுரேஷ்,

“மாமாகிட்ட சொல்லிப் புரியவை..!” என்று வித்யாவிடம் சொல்லி விட்டு சென்றார்.

“ஒரு நிமிஷம் மாமா..!” என்ற விஜய்யின் குரலில் நின்றார். அவன் நிதானமாக இறங்கி வந்து கொண்டிருந்தான். சமீப காலமாக விஜய்யின் நிதானம் சுரேஷையே அதிசயிக்க வைத்திருக்கிறது. அவர் அறிந்த விஜய் வேகமானவன். அதிரடியான முடிவுகளை எடுப்பவன். இப்போது இருக்கும் விஜய் வேறு விதமாக இருந்தான். அவனையே யோசனையுடன் அவர் பார்த்துக் கொண்டிருக்க, அவர் அருகில் வந்தவன்,

“உங்க பொண்ணுக்கு யாரைப் பிடிக்குதோ, அந்த பையனையே கல்யாணம் பண்ணி வைங்க. இனி தாத்தா உங்களைக் கட்டாயப்படுத்த மாட்டார். அதுக்கு நான் உத்திரவாதம் தரேன்..!” என்றான் இறுகிய குரலில்.

“என்ன விஜய் பேசுற..?” என்று ரத்னவேல் அதிர்ந்து எழுந்திருக்க,

“என்னோட வாழ்க்கையை, யார்கிட்டையும் பிச்சையா கேட்காதிங்கன்னு சொல்ல வரேன்..!” என்றான் கோபமாய்.

“என்ன விஜய்..? பிச்சை அது இதுன்னு எல்லாம் பேசுற..?” என்ற வித்யா அழுதே விட்டார்.

“இங்க பாருங்க அத்தை..! நான் எதுக்கும் வக்கத்தவனும் இல்லை. போக்கத்தவனும் இல்லை. யார்கிட்டயும் கெஞ்சி, யாசகனும் பண்ணி தான் கல்யாணம் பண்ணியே தீரனும்ங்கிற கட்டாயத்திலும் இல்லை. தாத்தா என் மேல இருக்குற அக்கறையில ஏதோ பேசியிருப்பார். அதையெல்லாம் பெருசா யோசிக்காதிங்க. உங்க பொண்ணுக்கு ஏத்தப் பையனா, பிடிச்ச பையனா பார்த்து கல்யாணம் பண்ணி வைங்க. எனக்கு எந்த கஷ்ட்டமும் இல்லை..! “ என்றான் உறுதியாக.

“குத்திக் காட்டிப் பேசுற மாதிரி இருக்கு விஜய்..” என்றார் சுரேஷ்.

“உங்க மக குத்திட்டு போன வார்த்தைக்கு முன்னாடி இதெல்லாம் ஒன்னும் இல்லை மாமா...!” என்றவன்,

“தாத்தா..எனக்கு இப்போதைக்கு மேரேஜ் பண்ற எண்ணமும் இல்லை. அதுக்கான அவசியமும் இல்லை. இனி ஒரு முறை இந்த பேச்சை எடுக்காதிங்க..” என்றான்.

“உனக்கு இப்போதான் அந்த நேரம் வந்திருக்கு. இதை விட்டா அப்பறம் கஷ்ட்டம் விஜய்..” என்றார் வள்ளியம்மை.

“நேரமே வரலைன்னாலும் பரவாயில்லை. எனக்கு அதில் எல்லாம் நம்பிக்கை இல்லை..!”என்றபடி அவன் திரும்ப, அங்கே துளசி நின்றிருந்தாள்.கார் சாவியை மறந்து சென்றவள், அதை எடுக்க வந்திருந்தாள்.

அவளைக் கண்டவுடன் அவனுக்கும் மனதுக்குள் ஆத்திரம் வர,

“முக்கியமா எவகிட்டையும் கெஞ்ச வேண்டாம்..!” என்றான் உறுத்து விழித்துக் கொண்டே.

அவனை கோபமாய் பார்த்தவள்,

“மரியாதையா பேசிக்க..” என்றாள்.

“அதெல்லாம் கேட்டு வாங்கக் கூடாது. தானா வரணும். கொஞ்சம் பொறுத்துப் போனா, ரொம்பத்தான் ஆடுற. பார்த்து ஆடு...தலைகால் புரியாம ஆடுனவங்க எல்லாம் ரொம்ப நாள் அதே நிலமையில இருந்ததா சரித்திரம் இல்லை..!” என்றவன், அவளை அற்பப் பார்வை பார்த்துவிட்டு சென்றான்.

பல்லைக் கடித்துக் கொண்டு, கைகளை இறுக மூடிக் கொண்டு, போகும் அவனையே பார்த்திருந்தால் துளசி. மனதிற்குள் பெரிய அலையே அடித்துக் கொண்டிருந்தது.

குடும்பமே அவளை முறைத்ததைப் பார்க்காமல், அவளும் அதே வேகத்துடன் சென்றாள்.ஒரு வீட்டிற்குள் இருந்து புறப்பட்ட இரண்டு கார்களும், வாயிலைக் கடந்தவுடன் இரு வேறு திசைகளில் பிரிந்து சென்றது.

அவர்களின் மனதைப் போல..





 
:love::love::love:

என்னதான்டா நடந்தது உங்கள் ரெண்டு பேருக்கும் இடையில்???
துளசி நீ விஜய் வேண்டாம்னு சொல்ற........
அங்கே ஒருத்தி விஜய் தான் வேணும்னு மல்லுகட்டுறா.......
விஜய் யாருக்கோ???
 
Last edited:
ரத்னவேலுவுக்கு கனகவேல் உறவா?
இல்லை ராதிகா உறவா?
முன்னாடி ரத்னவேல் குடும்பத்திற்கு கனகவேல் என்ன கெடுதல் செய்தார்?
கனகவேல் செய்தது திவ்யாவுக்கு எப்படி தெரியும்?
 
Last edited:
Top