Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அணலில் துளிர்த்த பூந்தளிரே 11

Advertisement

ரமா

Member
Member
அணலில் துளிர்த்த பூந்தளிரே 11

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரம் இரவின் குளுமையில் நிலவு அழகாய் பிரகாசித்தது.. மாடியில் தான் அமைத்த தோட்டத்தில் பூக்களின் நடுவே நிலவுக்கு போட்டியாய் மங்கையவள் அமர்ந்திருந்தாள்.

கண்களில் கண்ணீர் அருவி பொழிய இரவின் நிழலில் கோட்டோவியமாய் அமர்ந்தவளை ரசிக்க முடியாமல் இருந்த சூழ்நிலையில் சிபியின் கோபம் இன்னும் அதிகமானது.

இங்கே இருவரும் வந்து முழுதாய் இரண்டு மாதமாகிவிட்டது.. இங்கிருக்கும் பிஸ்னஸை கவனிக்க என வந்துவிட்டான் தன்னவளை அழைத்துக் கொண்டு.

இங்கு வந்த இரு நாட்கள் எல்லாம் நல்லபடியாக தான் சென்றது.. இருவருக்கும் அதிகம் பேச்சு வார்த்தை இல்லை என்றாலும் அவனுக்கு தேவையான எல்லாமே அவளின் கைகளால் தான் செய்தாள்.. ஏன் இன்னமும் செய்து கொண்டிருக்கிறாள் தான்.

இத்தனை நாளாக தனக்கு தேவையான அனைத்தையும் தானே செய்து கொண்டவனுக்கு இந்த அனுபவம் புதுமையாய் இருந்தது.

கொண்டவளின் கரங்களால் அவனின் தேவைகள் அனைத்தும் நடந்தது.. தன் சிறிய வயதிலிருந்து அவள் மேல் இருந்த கோபம் கானல் நீராய் மறைந்து போனது.

காதலில் திளைத்திருந்தவனின் மகிழ்ச்சியை பறிக்கவென அந்த நாளும் வந்தது.

இருவருக்கும் அதிகம் ஒட்டுதல் இல்லையென்றாலும் அவனின் சொல்லுக்கு கட்டுபட்டு அதை செய்ய பழகி கொண்டாள்.

அதே போல் அவன் அழைத்த இடங்களுக்கு மறுப்பு சொல்லாமல் சென்றாள்.. பெரிதாக அதில் விருப்பம் இல்லையென்றாலும் இத்தனை நாளாக சிரிப்பை காணாதவன் முகத்தில் இன்று மலர்ந்து மணம் வீசிய புன்னகைக்காகவே அவனோடு சென்றாள்.

அதிலும் அவள் அருகில் இருந்தால் அவனின் அகத்தில் பூத்த புன்னகை அவன் வதனத்திலும் பிரதிபலித்தது.

அவனருகில் தான் இருந்தால் அவன் சந்தோஷமாக இருக்கிறான் என்பதை அவனின் செயல்கள் மூலம் உணர்ந்து கொண்டவளுக்கு இது எந்த வகையான நேசம் என்பது மட்டும் புரியவில்லை.

அங்கு வந்த இந்த இரண்டு மாதத்தில் மட்டும் கிட்டதிட்ட ஐந்து முறை தொழில் முறை பார்ட்டி என அழைத்து சென்று விட்டான்.

இத்தனை நாளாக எந்த ஒரு பார்ட்டிக்கும் செல்லாதவன் இன்று தன் மனைவியுடன் வந்தது அங்கிருந்த அனைவருக்கும் ஆச்சர்யம் தான்.

ஏன் அவன் பிஸ்னஸ் சர்க்கிளில் நடக்கும் எந்த ஒரு பார்ட்டிக்கும் செல்லமாட்டான்.. எத்தனையோ முறை ஒரு மரியாதைக்காவாது சென்று வர வேண்டும் என அரவிந்தன் கூறினாலும் அவனை அனுப்பி வைத்து விட்டு இவன் நின்று விடுவானே ஒழிய இவன் சென்று யாரும் பார்த்ததில்லை.

ஆனால் இன்றோ அவனுக்கு உரிமையானவள் வந்ததுமே அனைத்து பார்ட்டிக்கும் செல்ல ஆரம்பித்துவிட்டான்.. அதுவும் செல்லும் நேரத்தில் அவளிடம் வந்து ஒரு புடவையும் அதற்கு மேட்சிங் பிளவுஸ் அதற்கு தோதான நகைகள் என் கொடுப்பவனை விசித்திரமாக பார்ப்பாள் பெண்ணவள்.

அவளுக்கு தெரிந்து அவன் அலுவலக வேலைகளில் தான் பிஸியாக இருப்பான்.. இதெல்லாம் எப்பொழுது சென்று எடுத்தான் என்பது தான் பெண்ணின் மிகப்பெரிய கேள்வியாகும்.

அது மட்டுமல்லாமல் அந்த பிளவுஸ் அவளுக்கே அளவெடுத்து தைத்தது போல் இருக்கும்.

அதுபோல் அவன் கொடுத்த ஒவ்வொரு பொருளுமே அவளுக்கென வாங்கியதாக தான் இருக்கும்.. ஆனால் எப்பொழுது என்பது தான் மிகப்பெரிய கேள்வி.. அதே வினாவுடன் தான் கிளம்புவாள்.

அதேபோல் அங்கே சென்றால் அங்கிருக்கும் வயது பெண்கள் எல்லாம் அவனையே பார்த்து கொண்டிருந்தாள் கூட ஆடவனின் விழிகள் மட்டும் பெண்ணவளை தாண்டி யாரையும் சென்றது இல்லை.

இதில் அவனுடைய ஆளுமை அவளுக்கே வியப்பாய் தான் இருக்கும்.. அவனின் நடையிலும் நுனி நாக்கின் ஆங்கிலமும் வஞ்சியவளை வினாவாய் பார்க்க வைத்தது.

அதுவும் எந்நேரமும் தன் கையை பிடித்துக் கொண்டே சுற்றுபவனின் உணர்வுகள் புரியாமல் வஞ்சி மகள் தான் தவித்து போனாள்.

அவளின் கைகளை பிடிப்பவனின் விரல்களில் இருந்த இளக்கமும் மென்மையும் பெண்ணவளுக்கு புதிது.

அரக்கனாய் அடாவடிக்காரனாய் தெரிந்தவன் இன்று வித்தியாசமாய் தெரிந்தான்.

அவன் கண்களில் இருந்த தேடல் இன்று முழுமையடைந்ததை போல் அவனின் மகிழ்ச்சி இருந்தது.. ஏன் சில நேரம் அவனின் செயல்கள் சிறுபிள்ளையாய் கூட தோன்றும் மங்கைக்கு.

எப்பொழுதும் சாப்பிடாமல் ஓடுபவன் இவள் அழைத்தாள் அடுத்த நொடி எந்த வேலைக்கும் நடுவில் வந்து சாப்பிட அமர்ந்து விடுவான்.

அவள் பரிமாறினாள் சாப்பிடுபவன் அவள் ஏதோ வேலைக்காக உள்ளே சென்றால் என்றாள் அடுத்த நொடியே சாப்பாட்டிலிருந்து எழுந்து ஓடிவிடுவான்.. அதுவும் அவளிடம் சொல்லாமலே.

இப்படி ஒவ்வொரு நாளும் தன் காதலை சொல்லால் அல்லாமல் செயலால் உணர்த்தி கொண்டிருந்தான் ஆடவன்.

இருவரும் இன்னும் பரஸ்பரமாய் கூட பேசாத இந்த தருணத்தில் பெண்ணவளுக்கு அவனின் அந்த கரை காணாத காதல் மனதில் பயத்தை தோற்றுவித்தது.

தன் செயல்கள் சொல்லட்டும் தன் காதலை என நினைத்தவனுக்கு அத்தனை சுலபமாய் அவளுக்கு விளங்கவைக்க முடியவில்லை என்பதே உண்மை.

சில நேரங்களில் புரிந்து கொள்பவள் பல நேரங்களில் எதுவும் புரியாமல் ஆடவனிடம் ஆட்டம் காட்டி கொண்டிருந்தாள்.

ஆனாலும் அதுவும் ஆடவனுக்கு பிடித்து தான் இருந்தது.. காதலும் காதலிப்பதும் ஆடவனுக்கு சுகமாய் தான் இருந்தது.

அன்று அவனின் தொழிற்முறை போட்டியாளர் ஒருவருக்கு கிடைத்த பெரிய டெண்டர்க்காக பார்ட்டி.. அன்று தன்னவளிடம் ஒரு பெரிய பாக்ஸை கொடுத்து கிளம்ப சொல்லிவிட்டு இவனும் கிளம்ப தன் அறைக்கு சென்றான்.

கிளம்பி வந்து தன்னவளை பார்த்தவன் சிலையாய் சமைந்து விட்டான் தன்னவளின் அழகில்.

அந்த பாசான் படர்ந்த லெஹன்கா பெண்ணவளின் இயல்பான தோற்றத்தையே மாற்றியிருந்தது.

தன்னவளா இது வென புரியாமல் தன்னவளின் அழகில் பித்து பிடித்து போனான் ஆடவன்.

பச்சை நிற தேவதையாய் உயிருள்ள சிலையாய் வந்தவளை பார்த்தவனுக்கு கண்கள் இரண்டும் போதவில்லை.

அதே பெருமையுடன் அவளை அழைத்து கொண்டு பார்ட்டி நடக்கும் இடத்திற்கு சென்றான்.

பெண்ணவளுக்கு அங்கிருந்த கலாச்சாரம் சற்று பிடிக்கவில்லை என்றாலும் தன்னால் தன்னவன் சந்தோஷமாக இருப்பதை எண்ணி அந்த இக்கட்டான சூழ்நிலையை கடக்க பழகிக் கொண்டாள்.

ஆனால் அன்று அவர்களின் வாழ்க்கையை பெரிதும் திருப்பத்தை ஏற்படுத்தும் என இருவருமே எண்ணி இருக்கமாட்டார்கள் போலும்.

எப்பொழுது எங்கே பார்ட்டி நடந்தாலும் அவளை அழைத்து கொண்டு வருபவன் அவளை விட்டு சிறிதும் விலகமாட்டான்.. ஏன் அவளே நினைத்தாலும் தன்னருகிலே அவளை வைத்துக் கொள்வான்.

அன்றும் அவளை தன் கைக்குள் தான் வைத்துக் கொண்டான்.. ஆனால் ரெஸ்ட் ரூம் சென்று வருவதாக கூறி சென்றவள் அறை மணி நேரம் ஆகியும் வராமல் போனதும் ஆடவனின் உயிர் துடித்து கூடாகியது.

வேகமாய் அவள் சென்ற திசைக்கு சென்று தன்னவளை தேடியவன் கண்களுக்கு விழுந்த நிகழ்வு ஆடவனை ருத்ரனாக்கியது.

ஆம் அங்கே அவனவள் ஒரு காமகனின் கைகளுக்குள் சிக்கிய கோழி குஞ்சாய் பரிதவித்து கொண்டிருந்தாள்.

அதை பார்த்தவனுக்கு இத்தனை நாளாய் அடக்கி வைத்திருந்த கோபம் சீறி கொண்டு வரும் வேங்கையாய் சீறினான்.

கோபத்தில் தன்னவளின் நிலைக்கு காரணமானவனை போட்டு புரட்டி எடுத்துவிட்டான்.

கயவனிடம் சிக்கி வேரறுந்த கொடியாய் மயக்க நிலையில் இருந்தவளுக்கு நடக்கின்ற எதுவும் விளங்கவில்லை என்றாலும் தன்னவனின் கோபம் அறிந்தவள் தன் கைகளால் அவனை அழைக்க முயன்று தோற்று மயக்கத்தில் ஆழ்ந்தாள்.

நல்லவேளையாக அந்த ஏரியா ஒதுக்குப்புறமாக இருந்ததால் யாருக்கும் இது தெரியவில்லை.. இல்லையென்றால் தன்னவளின் பேரை இதில் இழுத்து தன்னையும் அவளின் பெயரையும் நாரடித்துவிடுவார்கள்.

அந்த காமுக குடிகாரனை அடித்து துவைத்து விட்டு வேகமாய் தன்னவளின் அருகே வந்தவன் ஆழ்நிலை மயக்கத்தில் இருந்தவளின் நிலை பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.

அவளை காதலிக்க ஆரம்பித்த நாளிலிருந்து இன்றுவரை அவளை எப்படியெல்லாமோ பார்க்க வேண்டும் என்று ஆசைபட்டவனின் முன்னே அரை உயிராய் கிடந்தவளின் நிலையை கண்டு மனம் விம்மி வெடித்தது.

வீட்டிற்கு அழைத்து வந்தவன் முதலில் தனது பேமிலி டாக்டரை அழைத்து விட்டு அவளின் நலிந்த உடையை மாற்றினான்.. அந்த நேரம் அவனின் பார்வையில் சற்றும் விரசமில்லை.. தாயாய் அவளை மடிதாங்கினான்.

மாலையில் அந்த உடையில் அவளை பார்த்து ரசித்த நிமிடங்கள் வந்து அவனை மனம் விதிர்க்க செய்தது.

அங்கே வந்த மருத்தவர் அவளை சோதித்து விட்டு அவளுக்கு எந்த விதமான பாதிப்பும் இல்லையென்றும் அதிர்ச்சியில் ஏற்பட்ட மயக்கம் என்றும் சொல்லி மயக்கம் தெளிய ஊசியை போட்டுவிட்டு சென்றார்.

அவர் சென்ற பின்பு தன்னவளின் இந்த நிலைக்கு காரணமானவனை உயிரோடு விட்டு வைக்க கூடாது என்று ஆக்ரோஷம் எழ அவன் அங்கிருந்து செல்லும் நொடியில் "அம்மா.." என்ற தன்னவளின் அலறலில் அவளை ஓடி வந்து அணைத்துக் கொண்டான்.

" ஒன்னுமில்லை டா.. ஒன்னுமில்லை கண்ணம்மா.." என்றான் அவளின் முதுகை தடவியபடி ஆறுதலாய்.

அவளின் உடல் நடுங்க அவனின் சட்டையை இறுக பிடித்தபடி அவனின் தோளில் குழந்தையாய் தூங்கிவிட்டாள்.

அப்பொழுதிலிருந்து அவளை விட்டு விலகாமல் அவள் பயத்திற்கு மருந்தாய் அவளுடனே தான் இருந்தான்.

அருகிலிருந்து அவளை நன்றாக பார்த்துக் கொண்டான்.. அவள் எழுவதற்குள்ளாக இவன் எழுந்து அவளுக்கு தேவையானதை செய்து வைத்தான்.

ஆனால் பெண்ணவள் தான் இன்னமும் ஒட்டுக்குள் சுருங்கும் நத்தையாய் சுருங்கி விட்டாள்.

ஆனால் அவ்வப்பொழுது அவனை யோசனையாய் பார்ப்பதை வாடிக்கையாக்கி கொண்டாள்.

அவளின் சிந்தனை படிந்த முகத்தை கண்டதும் ஆடவனுக்கு அவள் எதை பற்றி சிந்திக்கிறாள் என்று புரிந்தும் அவளிடம் எந்த விதமான விளக்கங்களும் கூறவில்லை.. விளக்கம் சொல்லி தான் உன்னை ஏற்பேன் என்பது உண்மை காதல் இல்லை.

என் காதல் எந்த சூழ்நிலையிலும் உன்னை கைவிடாது.. உன்னை விட்டு விலகாது என்பதில் ஆடவன் தெளிவாய் உணர்த்தி விட்டான் அவனின் செயல்கள் மூலம்.

அதை உணர்ந்து கொண்டவள் தான் இப்பொழுது கண்ணீர் சிந்தி கொண்டிருக்கிறாள் தன்னவனை நினைத்து.

அவனை கண்டு பயந்த நாட்களில் எத்தனை வலி அனுபவித்திருப்பான்.. நான் அவனுக்கு வலியை மட்டும் தானே கொடுத்திருக்கிறேன்.. ஆனால் அவனோ என்னை தேவதையாய் மகாராணியாய் அல்லவா வைத்திருக்கிறான்.

தாத்தா பாட்டி சொல்வது போல் நான் அவனை புரிந்து கொள்ளவில்லையா..? அவனிடமிருந்து விலகியதால் அவனின் எண்ணங்களை தெரியாமல் விட்டு விட்டதா..? என புரியாமல் தான் தன் கணவனை எண்ணி கண்ணீர் வடிக்கிறாள் பேதை.

அவளுக்கு நன்றாக தெரியும் தன் பின்னே நிற்பது தன் கணவன் தான்.. இந்த ஒரு வாரமாக அலுவலகத்திற்கு கூட செல்லாமல் தன்னை மட்டுமே உடனிருந்து பார்த்துக் கொண்டு தனக்கு தேவையானவற்றை பார்த்து பார்த்து செய்து கொண்டிருக்கிறான்.. அதுவும் தான் எந்த விதத்திலும் பாதிக்க கூடாது என்பது உறுதியாய் இருக்கிறான்.. ஆனால் இவனை அரக்கனாய் அல்லவா பார்த்திருக்கிறேன் என்றவளின் நினைவில் தன் தாத்தா கூறியது நினைவில் வந்து போனது.

"என் பேரன் இன்னைக்கு இப்படி இருக்க காரணம் நாங்க மட்டுமில்லமா நீயும் தான்.. அவனோட அப்பா அம்மாவை அவன்கிட்ட இருந்து பிரிச்சவ நீதான்.. அது தான் அவ உன் மேல கோபமா இருக்கான்.. அவங்களோட மரணத்துக்கு அதாவது என் மகன் மருமகளோட மரணத்துக்கு நீதான் மாது காரணம்.." என்றார் கண்களில் வழியும் கண்ணீருடன்.

அதை கேட்டவள் உயிர் உறைந்த நிலையில் "தாத்தா.." என்று அதிர்ச்சியாய் கத்தியபடி எழுந்தமர்ந்தாள்.

" ஆமா மாது நீதான் என் குடும்பம் சிதைஞ்சதுக்கு காரணம்.. ஆனா உன்னை எங்களோட பேத்தியா தான் பாக்குறோம்.. அதுமாதிரி நீ எங்களோட சொந்த பேத்தியும் இல்லை.. எங்களை மன்னிச்சிரு மா இத்தனை வருஷமா சொல்லாத விஷயத்தை இப்போ சொல்ல வேண்டிய கட்டாயத்தில் காலம் கொண்டு வந்து நிறுத்திருச்சி.." என்றார் தாட்சாயனி.

பெண்ணவளோ விழிகளில் வழிந்த கண்ணீரை கூட துடைக்க முடியாமல் பெரியவர்கள் சொன்ன உண்மையை ஏற்றுக் கொள்ளவும் முடியாமல் பரிதவித்து போய் நின்றாள்.


அடுத்த பாகத்தில் பாக்கலாம் மக்களே.. இந்த கதை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்க பொன்னான கருத்துக்களை சொல்லிட்டு போங்க பட்டூஸ்.
 
Top