Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அணலில் துளிர்த்த பூந்தளிரே 6

Advertisement

ரமா

Member
Member
அணலில் துளிர்த்த பூந்தளிரே 6

வர்த்தனின் வீடே கோலாகலாமாய் காட்சியளித்தது.. பின்னே இருக்காதா என்ன.. வர்த்தன் தாட்சாயினியின் ஆருயிர் பேத்திக்கு அல்லவா திருமணம்.

வயதான தாட்சாயினி ஏதோ வயது பெண் துள்ளி குதித்த படி அனைவரையும் வேலை வாங்கி கொண்டிருந்தார்.. வர்த்தனும் தன் பேத்தியை மணக்கோலத்தில் காணப்போகிறோமே என்ற ஆசையில் ஓடி ஓடி வேலை செய்து கொண்டிருந்தார்.

அங்கே அவர்களுக்கு உதவியாய் அரவிந்தன் மட்டும் இருந்தான்.

அவனின் மனம் அவனது பாஸை நினைத்து கவலை கொண்டது.. இங்கிருப்பவர்கள் அனைவரும் சந்தோஷமாயிருக்க ஒருவனோ அங்கே உயிர் வெறுத்து கூடாய் அல்லவா கடல் தாண்டி இருக்கிறான்.

சிபியின் இடத்திலிருந்து அரவிந்திடம் பொறுப்பை செய்யச் சொன்னவன் பிஸ்னஸ் விஷயமாக ஆஸ்திரேலியா சென்றவன் தான் இந்த நொடி வரை வரவில்லை.

அன்று அரவிந்தனிடம் மனம் திறந்து பேசியதுடன் சரி அதற்கடுத்த நாளில் எல்லாம் வழமை போலவே இருந்தான்.. ஆனால் முயன்ற வரை அவனிடம் மாந்தளிரின் பெயரை எடுக்காமல் இருக்கும் வரை நன்று தான்.. ஆனால் எடுத்து விட்டால் அடுத்த நொடி அவனை கட்டுப்படுத்தும் அங்குசம் அங்கே யாருமில்லை.

அடுத்தடுத்த நாளில் அவனின் வெளிநாடு பயணம் நிர்ணயிக்கப்பட்டு அடுத்த ஒரு வாரத்தில் ஆஸ்திரேலியா சென்று விட்டான்.

இது தெரிந்த பெரியவர்கள் வருந்தினாலும் அவனின் குணத்தை தெரிந்து விட்டு விட்டார்கள்.. ஆனால் அவனின் உடமையை தான் அடுத்தவர்களுக்கு தாரை வார்க்க துடித்து கொண்டிருக்கிறார்கள் என்பதை அறியவில்லை.

மாந்தளிரை சுற்றி பார்லர் ஆட்கள் நின்றிருக்க அவளை அலங்கரித்துக் கொண்டிருந்தார்கள்.. பெரிதாக எந்த விதமான வருத்தமும் இல்லாமல் இயல்பான புன்னகையில் அளவான மேக்கப்பில் அழகாய் இருந்தாள் மாந்தளிர்.

இன்று நிச்சயம் நாளை திருமணம் என்ற நிலையில் நிச்சயத்தன்று தான் அந்த அசம்பாவிதம் நடந்தது.

நிச்சயத்திற்காக மாப்பிள்ளை வீட்டார் வந்து கொண்டிருந்த காரில் ஒரு கண்டெய்னர் அதன் கட்டுப்பாட்டை இழந்து காரில் மோத கார் தலைகீழாய் கவிழ்ந்திருந்தது.

அதில் வந்த மாப்பிள்ளை அதே இடத்தில் உதிரம் மினுமினுக்க உயிர் துறந்தான்.

பெரியவர்கள் சீட் பெல்ட் போட்டதில் நூழிலையில் தப்பித்திருந்தனர்.

தங்களின் ஒரே மகனை இழந்த வேதனையில் தவித்த மாப்பிள்ளையின் தாய்க்கு மாந்தளிரின் மேல் கோபம் வந்தது.. அதிலும் சொந்தங்கள் பெண்ணின் ராசி தான் மாப்பிள்ளை இறந்து விட்டார் என்று தூபம் போட பழமையில் ஊறிப்போன அந்த பெரிய மனிதிக்கு மாந்தளிரின் மேல் அதிகளவு கோபத்தை கொண்டு வந்தது.

அதே கோவத்துடன் வர்த்தனின் வீட்டிற்கு வந்தவர் மாந்தளிரை பார்த்து,

"ச்சீய் நீ இவ்வளவு மோசமான ராசியா உனக்கு.. அநியாயமா என் பையனை கொன்னுட்டியே டி.. உன்னோட மோசமான ஜாதகம் என் பையனை எமனுக்கு தூக்கி கொடுத்துட்டு நிக்குறேனே.. அது தான் பிறந்ததும் நாலு உசுரை காவு வாங்கிட்ட.. யோவ் பெரிய மனுசா முதல்ல இந்த மூதேவியை வீட்டை விட்டு தொரத்துயா.. அப்போ தான் உன்னோட குடும்பத்துக்கு நல்ல காலம் பிறக்கும்.. உன் பையன் மருமகளும் இவளால தான் இறந்துட்டாங்க.. உன் பேரனும் இவளால தான் உங்களோட இல்லை.. இந்த ராசி கெட்டவளை கட்டிக்க சொல்லி என் பையனை கொன்னுட்டியேயா நீயெல்லாம் நல்லாருப்பியா.. நாசமா போயிருவ டி.. நீ கடைசி வரைக்கும் கன்னி கழியாத நல்ல வாழ்க்கையே உனக்கு கிடைக்காதுடி.. நல்லாவே இருக்க மாட்டே.. நாசமா போயிடுவேடி..

இதோ நான் பத்து மாசம் சுமந்து பெத்த பையனை எப்படி வாரிகொடுத்துட்டு நிக்கறனோ அதே மாதிரி நீயும் அனாதை மாறி நடுத்தெருவுல தாண்டி நிக்க போற.. இப்பவே நீ அனாதை தானே.. உனக்குன்னு யாருடி இருக்காங்க.. இதோ இந்த வயசான கிழடுங்க மட்டும் தான் இருக்கு.. ஏதோ காணாத பொக்கீஷம் மாறி.. யோவ் நீங்களும் இவகிட்ட பாத்தே இருங்கய்யா.." என்று ஆவேசமாய் அள்ளி தெளித்தவர் அங்கிருந்து கோபத்துடன் அவரின் கணவர் அவரை அழைத்து சென்றார்.

இங்கே அதிர்ச்சியில் எதுவும் பேசாமல் சிலையாய் நின்று விட்டாள் பெண்ணவள்.

இதுவரை யாரின் மனதையும் நோகாமல் பேசும் குணம் படைத்தவளை இன்று ராசி இல்லாதவள் என்று சொல்லிவிட்டு சென்று விட்டார்.. ஆனால் அதை கேட்டவளின் உள்ளமோ சில்லு சில்லாய் நொருங்கி போனது.

மாந்தளிரின் சிதைந்து போன மனம் அவளை ஆழ்நிலை மயக்கத்திற்கு அழைத்துச் சென்றது.

ஒரே நாளில் தங்களின் செல்ல பேத்தியின் வாழ்க்கை தலைகீழாக மாறும் என்பதை வர்த்தனும் தாட்சாயினியும் ஒரு நொடியும் சிந்தித்ததில்லை.

எத்தனை கோலாகலமாய் ஆரம்பித்த விசேஷம் ஆனால் இன்று இப்படி அலங்கோலமாய் மாறவா..?

இன்னும் இரண்டு நாளில் வெட்க புன்னகை சிந்தி மணாளனுடன் புகுந்த வீட்டிற்கு செல்ல இருந்தவளின் இன்றைய நிலை அந்த வயதானவர்களின் மனதை மிகவும் பாதித்தது.

வேறருந்த கொடியாய் விழுந்தவளை தங்களின் நெஞ்சில் தாங்கிக் கொண்டார்கள்.

நடந்ததை அரவிந்தன் உடனே சிபிக்கு சொல்ல கடல் தாண்டி இருந்தவனின் உயிர் துடித்தது.. அடுத்த நொடியே பறந்து வந்தான் தன் உயிர்களை கான.

அன்று தன் பேத்தியை சமாதானம் செய்து திருமணத்திற்கு ஏற்பாடு செய்த வர்த்தன் இன்று அந்த பேத்தியின் நிலையை கண்டு தன்னை தானே நொந்து கொண்டார்.

சிபி வந்த நேரம் நடுநிசியானது.. வீடே நிசப்தமாய் அமைதியாய் இருந்தது.. ஆனால் அந்த அமைதியில் இருந்த வேதனை ஆடவனை வாட்டியது.

அவனின் எதிரே வேகமாய் வந்து நின்றான் அரவிந்தன்.

"அரவிந்த் என்னாச்சி.. தாத்தா பாட்டி எங்கே..அவ எங்க இருக்கா.." என்றான் படபடப்பாய்.

" பாஸ் தங்கச்சி மா இன்னும் சரியா மயக்கம் தெளியலை.. தாத்தாவும் பாட்டியும் அவளோட தான் இருக்காங்க.." என்றான் பதட்டத்துடன்.

அதை கேட்டதும் கண்களை இறுக மூடித்திறந்தவன், "எங்க இருக்கா அரவிந்த்.." என்றான் விட்டோத்தியாய்.

"ரூம்ல தான் பாஸ்.." என்றதும் அடுத்த நொடி அவனின் கால்களில் சக்கரம் கட்டியது போல் அவளை தேடி ஓடினான்.

அவனின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் அரவிந்தனும் அவனின் பின்னோடு ஓடினான்.

அவளின் அறைக்கு முன்னே நின்று சற்று யோசித்தவன் அடுத்த நொடியே கதவை திறந்து கொண்டு உள்ளே சென்றான்.

வெளியே சோபாவில் தாட்சாயினியும் வர்த்தனும் உறங்கியிருக்க உள்ளே காய்ந்து போன சருகாய் மயக்கத்திலிருந்தாள் பெண் பேதை.

அவளை அப்படி பார்க்கையில் உள்ளம் நொந்து போனவன் மெதுவாய் அவளருகில் சென்றான்.

"தளிர் மா.." என்றான் மென்மையாய் முனுமுனுத்தபடி.

அவனின் அழைப்பு கேட்டதா இல்லை அவன் வந்ததை அவன் வாசத்தை வைத்து உணர்ந்தாளா என புரியாமல் அவளின் விழிகளில் கண்ணீர் துளிகள் சுரந்தது.

அதை மென்மையாய் துடைத்தவன் அவளின் தலையை மெல்லமாய் வருடிவிட்டான்.

அவனின் கண்களும் கலங்கி தான் இருந்தது.. தான் உயிராய் நினைத்தவளை இன்று யாரோ அசிங்கபடுத்தி சென்றதை அவனால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.

ஏனோ அவளை அப்படியே அணைத்து படுத்து ஆறுதல் கூற மனம் துடித்தது.. ஆனால் தன்னை தானே கட்டுப்படுத்திக் கொண்டான்.

அவளை பார்த்தபடி அவளருகில் அப்படியே அமர்ந்து விட்டான்.

இத்தனை தூரத்தில் இருந்த வந்த உடல் அசதியில் அப்படியே அவளை பார்த்துக் கொண்டே தூங்கி விட்டான்.

சற்று நேரத்தில் ஏதோ அழுகுரல் கேட்க அவசரமாய் கண் விழித்தவனின் முன்னே பெண்ணவள் தூக்கத்திலே கதறி துடித்துக் கொண்டிருந்தாள்.

மனம் உடைந்த நிலையில் ஆழ் தூக்கத்தில் சில கனவுகள் நம்மை நிம்மதியாய் உறங்க விடாது என்பது போல் அவளையும் கனவு அரக்கன் தன்னுள் சுருட்டிக் கொண்டானோ...

அவள் துடிப்பதை கண்டவன் வேகமாய் அவளருகில் வந்து, "தளிர் மா தளிர் மா ஒன்னுமில்லை டா தூங்குமா நீ.." என்றவளை சமாதானம் செய்ய விழைந்தான்.

அவனின் எந்த சமாதானமும் அவளின் மனதிற்கு எட்டவில்லையோ என்னவோ ஒரு கட்டத்தில் அவளின் உடல் அதிகமாய் நடுங்க துவங்கியது.

அதை கண்டவன் அவளின் கரத்தை பிடித்து சமாதானம் செய்ய அவளின் உடலில் இருந்த சூடு அவன் கைகளில் இறங்கியது.

அதற்கு மேலும் அவள் நிலை காண பொறுக்காதவன் அவளின் அருகில் படுத்து அவளை இறுக்கமாய் அணைத்துக் கொண்டு அவளின் முதுகை தடவி கொடுத்தான்.. கொஞ்ச கொஞசமாய் அவளின் நடுக்கம் குறைய அவனின் மார்பு சூட்டில் நிம்மதியாய் தூங்கி விட்டாள்.

அவள் நன்றாக தூங்கியதும் அவளை தனியாக படுக்க வைத்து எழ முனையும் போது அவன் எழ முடியாமல் அவனின் சட்டை பட்டனை இறுக்கமாய் பற்றியிருந்தாள் வஞ்சியவள்.

அவளின் கரத்திலிருந்த சட்டையை விடுவித்து அவளை தனியே வைக்க ரொம்ப நேரம் ஆகாது தான்.. ஆனால் அவளிடமிருந்து தன்னை பிரிக்க விரும்பாதவன் அவளை அணைத்து கொண்டு மீண்டும் அவளருகில் நிம்மதியாய் படுத்து விட்டான்.

இதை பார்த்திருந்த மூன்று உருவமும் தங்களுள் பார்வை பரிமாற்றத்தை நடத்திக் கொண்டது.

ஆம் அவளின் சத்தம் கேட்டு பெரியவர்கள் இருவரும் விழித்து கொண்டனர்.. அவள் அறைக்கு நுழையும் தருணமதில் அங்கே நின்றிருந்த அரவிந்தை கேள்வியாய் பார்த்தனர்.

"இங்கே என்ன பன்ற அரவிந்த்.." என்றார் வர்த்தன் வேகமாய்.

"தாத்தா பாஸ் உள்ளே இருக்காரு.. இப்போ தான் வந்தாரு.. அது தான் மாதும்மா அழுவாளோங்கற பயத்துல நின்னுட்டு இருந்தேன்.. இவ்வளவு நேரம் சத்தம் இல்லை.. இப்போ தான் சத்தம் வருது.. என்ன பன்றதுன்னு தெரியலை தாத்தா.." என்றான் பயந்தபடி.

அதை கேட்ட வர்த்தனோ, "டேய் என்ன பண்ணி வச்சிருக்க நீ.. அவனை ஏன் உள்ளே விட்ட.. ஏற்கனவே பயந்து போய் இருக்கா டா.. இதுல இவனும் மிரட்டுனா அவ என்ன டா பண்ணுவா.." என்று அவனை கோபமாய் கடிந்தபடி கதவை திறந்து உள்ளே செல்ல அங்கே தன் பேரன் செய்த செயலில் அப்படியே அதிர்ந்து போய் நின்றுவிட்டார்.

ஆம் அங்கே அவளை இறுக்கமாய் அணைத்தபடி அவளின் முதுகை தடவி கொடுத்தான் சிபி.

சற்று நேரம் அங்கே நின்று அங்கே நடப்பதை பார்த்துக் கொண்டிருந்தவருக்கு சட்டென்று ஒரு பதில் கிடைக்க மகிழ்ச்சியாய் அதை தன் மனையாளிடம் பகிர்ந்து கொண்டார்.

முதலில் மறுத்த தாட்சாயினியும் பின்பு வேற வழி இல்லாமல் அவரின் ஆலோசனைக்கு சரி என்றார்.

மறுநாள் அதைபற்றி சிபியிடம் பேச அதற்கு அவன் கூறிய பதிலில் தான் பெரியவர்கள் இன்னும் அதிர்ச்சியாகி போனார்கள்.. இன்னும் சிபியை அதிசயமாய் பார்த்து நின்றார்கள்.

அது என்ன என்று அடுத்த பாகத்தில் பாக்கலாம் மக்களே.
 
Top