Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், tamilnovelwriters@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அனிதாவின் அப்பா 12 2

Admin

Admin
Member“நான் எதாவது சொல்லப்போய் அவங்களுக்குக் கோபம் வந்திட்டா.... அதனால தான் விட்டுட்டேன். எங்களுக்குக் கல்யாணம் ஆகி ஒரு நாள் தான் ஆகி இருக்கு.... எனக்குக் கொஞ்சம் டைம் கொடுங்க....ப்ளீஸ்...” ஹரி தன் அம்மாவை பரிதாபமாகப் பார்க்க..... வைஷ்ணவியும் தன் கோபத்தைக் கைவிட்டார்.

அப்போது மீனாவும் அனியும் அங்கு இல்லை.... அனிக்கு உறக்கம் வந்ததால் மீனா வீட்டில் இருந்து கொண்டு வந்த உணவை அவளுக்கு வெளியே வைத்து ஊட்டிக் கொண்டு இருந்தாள். அவள் சாப்பிட்டு முடிக்கவும், இவர்கள் செல்லவும் சரியாக இருந்தது.

“டேய் எனக்குப் பானிப்பூரி வேணும் டா....” என்ற தன் அம்மாவை பார்த்துத் தலையில் அடித்த ஹரி “நீங்க அனியை கூடிட்டு காருக்கு போங்க. நாங்க வந்திடுறோம்.” என மீனாவிடம் சொன்னவன், தூரத்தில் இருந்தே காரை திறந்து விட.... அனியை தூக்கிக்கொண்டு சென்ற மீனா அவளைப் பின்புறம் வசதியாகத் தன் மடியில் படுக்க வைத்துக் கொண்டாள்.

ஒரு நல்ல கடையில் தன் அம்மாவுக்குப் பானிப்பூரி வாங்கிக் கொடுத்தவன், மீனாவுக்கும் வாங்கிகொண்டு காருக்கு சென்று கொடுக்க....

“நான் இவ்வளவு சாப்பிட மாட்டேன். அனிக்கு தான் பானிப்பூரி ரொம்பப் பிடிக்கும்.” என்றவள் மகளை எழுப்ப....

“அவளுக்கு நான் நாளைக்கு வாங்கித் தரேன். நீங்க சாப்பிட முடிஞ்ச அளவு சாப்பிடுங்க.” என்றதும், மீனா நான்கு பூரிகளை மட்டும் எடுத்துக்கொள்ள.... மீதி இருந்ததைத் தன் தாயிடம் கொடுத்தான்.

திரும்பி வரும் வழியில் வைஷ்ணவி “அப்போ கடையில எதோ சொல்ல வந்தியே மீனா..... என்ன அது?” என அவர் நியாபகமாகக் கேட்க....

“இதுவரை தேவைக்கு அதிகமா நான் எதுவுமே அனிக்கு வாங்கிக் கொடுத்தது இல்லை.... வாங்கிக் கொடுக்கிற நிலையிலும் நான் இல்லை....”

“எல்லாமே ரொம்ப ஈஸியா கிடைச்சிட்டா அனி அதை எப்படி எடுத்துப்பாளோன்னு எனக்குக் கவலையா இருக்கு. தேவைக்கு அதிகமா எல்லாமே இருக்கிற குழந்தைகள் மனம் அடுத்து என்ன என்னன்னு தான் யோசிக்குமே தவிர... இருக்கிறதை வச்சுச் சந்தொஷபடுறது இல்லை.....”

“முன்னாடி மாதிரி இல்ல இப்ப இருக்கிற காலம். பசங்க மனம் திசை திரும்ப நிறைய விஷயங்கள் இருக்கு.... செல்போன், டாப், லேப்டாப் அப்படின்னு நிறைய இருக்கு....”

“முதல்ல இருந்து தேவைக்கு மட்டும் வாங்கிக் கொடுத்து பழக்கினா.... நல்லா இருக்கும்னு தோணுது. ஆனா நான் நினைக்கிறது தப்பா கூட இருக்கலாம். எனக்கே சரியா தெரியலை....”

மீனா சொன்னதைக் கேட்ட வைஷ்ணவி “தப்பு எல்லாம் இல்லை சரி தான். ஹரி நீ தான் கவனமா இருக்கணும். குழந்தை வளர்ப்பு ஒன்னும் ஈஸி இல்லை.... எல்லாமே வாங்கிக் கொடுக்கிற பெற்றோரை விட.... குழந்தைக்கு எது தேவைன்னு யோசிச்சு வாங்கிக் கொடுக்கிற பெற்றோர் தான் சிறந்தவங்க.”

“நீ உன் அன்பை காமிக்கிறேன்னு அனிக்கு ரொம்பச் செல்லம் குடுத்துடாதே....” என்றதற்கு ஹரியும் சரி என்றான். அவனுக்கு ஏற்கனவே மீனா மீது மரியாதை உண்டு, அது இன்னும் அதிகமாகியது.

இரவு வீடு வந்து சேரும் போது கிட்டத்தட்ட பத்து மணி ஆகிவிட்டது. தோசை ஊற்றி சாப்பிட்டு இரவு உணவை முடித்தார்கள்.

அனி சாப்பிட்டு ரொம்ப நேரம் ஆனதால் மீனா மகளை எழுப்பி அவளுக்குக் குடிக்கப் பாலை கொடுக்க.... பாலை குடித்து முடித்ததும் அனி ஹரியை பிடித்துக்கொண்டாள்.

“அப்பா கதை சொல்லுங்கப்பா....”


தினமும் கதை கேட்டால் அவனும் கதைக்கு எங்குப் போவான்? அவன் அனியை சமாளிக்க முடியாமல் திணறுவதைப் பார்த்த மீனா, அவனிடம் சிறுவர்களுக்கான நீதி கதைகள் சொல்லும் புத்தகத்தைக் கொண்டு வந்து கொடுத்தவள், குளியல் அறையில் உடை மாற்றி விட்டு வந்து, நேற்று போலவே இன்றும் தரையில் போர்வை விரித்துப் படுத்து, படுத்ததும் உறங்கியும் விட்டாள்.

ஹரி புத்தகத்தைப் படித்துப் படித்து அனிக்கு கதை சொல்ல... அவள் கதையைக் கவனிக்காமல் தன் அம்மாவை பார்த்துக் கொண்டு இருந்தாள்.

“என்ன அப்படிப் பார்க்கிற?”

“அம்மா தூங்கி நான் இப்ப தான் பார்கிறேன்.”

அனி சொன்னதைக் கேட்ட ஹரிக்கு ஆச்சர்யமாக இருந்தது.

“அம்மா நான் நைட் தூங்கினதுக்கு அப்புறம் தான் தூங்குவாங்க. காலையில நான் முழிச்சிகிறதுக்கு முன்னாடியே எழுந்துப்பாங்களா... அதனால் நான் அவங்க தூங்கி பார்த்ததே இல்லை....”

அவள் எதோ சாதாரணமாகச் சொல்வது போல் இருந்தாலும், அதற்குள் இருந்த உண்மை ஹரிக்கு புரியவே செய்தது. தனியாகக் குழந்தையை வளர்ப்பது என்ன சாதாரண விஷயமா.... கணவன் துணையில்லாமல் அதோடு போதிய பொருளாதார வசதியும் இல்லாமல்... எல்லாவற்றையும் தனியே எதிர்கொள்வது எவ்வளவு பெரிய விஷயம்.

பாவம் எவ்வளவு கஷ்ட்டபட்டாளோ.... என மீனாவுக்காக வருத்தபட்டவன், இனி அவளையும் அனியையும் நன்றாகப் பார்த்துக்கொள்ள வேண்டும் என நினைத்தவன், அனியை அணைத்துக்கொண்டு உறங்க முயன்றான்.

மறுநாள் விமலா அவர்களைத் தங்கள் வீட்டிற்கு மதிய உணவுக்கு அழைத்திருந்ததால்.... அங்கே சென்றனர். அப்படியே மீனாவின் அண்ணன் வீட்டிற்கும் சென்றுவிட்டு மாலையே திரும்பி விட்டனர். வைஷ்ணவி அன்றே ஊர்க்குக் கிளம்புவதாக இருந்தது. இன்னும் சில நாட்கள் இருங்கள் என்றால் கேட்கவில்லை....

“பாவம் டா உங்க அப்பா... எத்தனை நாள் வெளியே சாப்பிடுவார். அவருக்கும் தனியா போர் அடிக்கும். நீங்க கொஞ்ச நாள் கழிச்சு பத்து நாள் தங்கிற மாதிரி வாங்க.” எனச் சொல்லிவிட்டு கிளம்பினார்.


வைஷ்ணவி கிளம்புவது மீனாவுக்குக் கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல் இருந்தது. ஹரிக்கு என்ன பிடிக்கும்? என்ன பிடிக்காது? என்று எதுவும் தெரியாததால்.... அவள் ரொம்பவே பயப்பட....


“போன் எதுக்கு இருக்கு? எதுனாலும் போன் பண்ணு....” என்றவர் பஸ் ஏறும் முன். “உன் குழந்தையோட சேர்த்து என் குழந்தையும் பார்த்துக்கோ....” எனக் கேலியாகச் சொல்வது போல் ஹரியை பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டு சென்றார். ஹரியிடமும் நிறைய மீனாவிற்காகப் பேசி இருந்தார்.

வைஷ்ணவி சென்ற பிறகு கூட அனிக்காக ஒரே அறையில் தான் இருவரும் படுத்துக்கொண்டனர். இல்லையென்றால் அவள் கேட்கும் கேள்விகளுக்கு யார் பதில் சொல்வது?
அனிக்கு என்று தயார் செய்த அறையில் தான் மூவரும் உறங்குவது. ஹரி இரவு நேரம் தூங்க மட்டும் தான் இந்த அறைக்கு வருவான். குளித்துக் கிளம்புவது எல்லாம் பக்கத்து அறையில் தான். மீனாவுக்காகத் தரையில் விரித்துப் படுக்க மெத்தை ஒன்றும் வாங்கினான்.


அனி பள்ளிக்கு சென்று வர தொடங்கினாள். இன்னும் அவளுக்கு முழுப் பரீட்சை முடியவில்லை.... இரண்டாம் வகுப்பிற்கு ஒரு பெரிய பள்ளியில் அவளுக்கு ஹரி இடம் வாங்கினான். அதற்கே அவன் நிறையச் செலவு செய்தான்.

ஹரிணி தினமும் மீனாவுக்குப் போன் செய்து பேசிவிடுவாள். அப்படிப் பேசும் போது பிருந்தாவை பற்றியும் நிறையச் சொல்வாள். அண்ணன் வச்சிருக்கப் பைக், கார் எல்லாம் அவங்க இஷ்ட்டப்படி வாங்கினது தான் அண்ணி.

அதுல அவங்களுக்கு வேற யார் ஏறினாலும் பிடிக்காது. கார்ல கூட அண்ணன் பக்கத்தில அவங்களைத் தவிர வேற யாரும் உட்கார கூடாது. இப்படி நிறையக் கண்டிஷன்ஸ் போடுவாங்க.

வைஷ்ணவி மீனாவிடம் பிருந்தாவை பற்றி எதுவும் பேசவில்லை... அவர் ஹரியே சொல்லிக்கொள்ளட்டும் என்று நினைத்தார். ஆனால் ஹரிணி எல்லாவற்றையும் உளறி கொட்ட.... இன்று சாதாரணமாக எல்லாவற்றையும் கேட்கும் மீனாவின் மனநிலை பின் வரும் நாட்களில் எப்படி இருக்குமோ....

ஹரிணி சொல்லி இருந்ததால்.... மீனாவும் ஹரியிடம் கவனமாகவே நடந்து கொண்டாள். காரில் அவளாகவே சென்று பின்புறம் அமர்ந்து கொள்வாள். மீனா வெளியே வரும் சமயங்களில் ஹரி பைக்கே எடுக்க மாட்டான் கார் தான்.

காலையில் அனியை பள்ளியில் விட்டுவிட்டு தன் ஷோரூம் செல்லும் ஹரி.... மதியம் இரண்டு மணி போல் தான் வீட்டுக்கு வருவான்.

மீனா அவனுக்கு உணவு பரிமாற வந்தால் தடுத்துவிட்டு அவனே போட்டுக் கொண்டு சாப்பிடுவான். அதனால் மீனாவும் டேபிளில் எடுத்து வைப்பதோடு சரி... அவனுடைய தனிப்பட்ட வேலைகளை அவனே தான் செய்து கொள்வான்.

பள்ளி முடிந்ததும் ஹரி சென்று தான் அனியை அழைத்து வருவான். அனி வந்ததும் மாலை வரை விளையாடுவார்கள். பிறகு ஹரி மீண்டும் ஷோரூம் செல்ல... சில நேரம் அனியையும் தன்னோடு அழைத்துக்கொண்டு சென்று விடுவான்.

இரவு எட்டு மணிக்கெல்லாம் வீடு திரும்பினால்.... படுக்கும் வரை இருவரும் கொட்டம் அடிப்பார்கள். சில நேரம் ஹரி மகளுக்குச் செஸ்ஸும் விளையாட சொல்லித் தருவான்.

பரீட்சை முடிந்து விடுமுறை விட்டதும், மகளைச் சம்மர் கிளாஸில் சேர்த்து விட்டு, மகளுக்கு நீச்சல் ஓவியம் என்று கற்றுக்கொடுக்க ஏற்பாடு செய்தான்.

மீனா வீட்டு வேலை போக.... தந்தையும் மகளும் விளையாடுவதைப் பார்த்துக்கொண்டு இருப்பாள். வீட்டு வேலைக்கு ஆள் வைத்துக்கொள் என்று வைஷ்ணவி சொன்னதை அவள் கேட்கவில்லை... தன் வீட்டு வேலையைத் தானே செய்ய வேண்டும் என்று நினைத்தாள்.

அதோடு ஹரியும் அனியும் காலையில் சென்றால் வர மதியத்திற்கு மேல் ஆகும் போது... அவளும் தனியாக அவ்வளவு நேரம் சும்மாவே இருக்க முடியாது இல்லையா... அதனால் எதாவது செய்து கொண்டே இருப்பாள்.

மீனாவை பொறுத்தவரை அவள் சந்தோஷமாகவே இருந்தாள். அவளுக்கு அனியின் சந்தோஷமே முக்கியம். அந்த வகையில் ஹரி அவளைக் கண்ணுக்குள் வைத்துப் பார்த்துக்கொண்டான். அனியின் அப்பா என ஹரியை அவளால் இயல்பாக ஏற்றுக்கொள்ள முடிந்தது. ஆனால் அவனைத் தன் கணவன் என்று உணரும் நாளும் வெகு விரைவில் வரும் என்பதை அப்போது அவள் உணரவில்லை....

ஹரியை பொறுத்தவரை அவன் மீனாவை மறந்தாலும் வைஷ்ணவி விடமாட்டார். அவனுக்கு நினைவு படுத்திக் கொண்டே தான் இருப்பார். அவனுக்கு மீனா மீது மரியாதை இருந்தது. அவளை நன்றாக வைத்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இருந்தது.

மீனாவை எதற்கும் தன்னிடம் எதிர்ப்பார்க்கும் படி ஹரி வைத்துக்கொள்ளவில்லை.... வீட்டில் பணம் வைக்குமிடத்தை அவளிடம் காட்டி, அவளுக்கு எவ்வளவு தேவையோ அதிலிருந்து எடுத்துக் கொள்ளலாம் எனச் சொல்லிவிட்டான்.

பழங்கள் காய்கறிகள் என்று நிறையவே வாங்கிப் போடுவான். ஆனால் மீனாவிடம் உனக்கு என்ன பிடிக்கும் என்று கேட்டதில்லை.... பொதுவாக அவளிடம் பேசுவதோடு சரி. மனைவி என்ற முறையில் அவளிடம் இதுவரை பேசியதே இல்லை....

காலம் இப்படியே இருக்குமா என்ன?

 
SINDHU NARAYANAN

Well-known member
Member
:love: :love: :love:

மீனாவுக்காக...

தாமரை மேலே நீர்த்துளி போல்
தலைவனும் தலைவியும் வாழ்வதென்ன
நண்பர்கள் போலே வாழ்வதற்கு
மாலையும் மேளமும் தேவையென்ன?
சொந்தங்களே இல்லாமல்
பந்த பாசம் கொள்ளாமல்
பூவே உன் வாழ்க்கை தான் என்ன..சொல்……

மன்றம் வந்த தென்றலுக்கு
மஞ்சம் வர நெஞ்சமில்லையோ
அன்பே.. என் அன்பே
 
Last edited:

Joher

Well-known member
Member
😍😍😍

ஹரி அனிதா & ஹரி வைஷ்ணவி 😍😍😍

மீனா குழந்தையோடு உங்க குழந்தையையும் நல்லா பார்த்துக்க சொன்னீங்க மீனா கிட்ட......
பையன் கிட்ட விஸ்வம் பொண்ணை பார்த்துக்க சொன்னீங்களா இல்லை பொண்டாட்டியை பார்த்துக்க சொன்னீங்களா????
தரையில் விரித்து படுக்க மெத்தை வாங்கிக்கொடுத்திருக்கானே உங்க பையன்.......

ஹரிணி ஏற்றிய நெருப்பில் புகை வருமோ ஹரி பேசுறப்ப???
 
Last edited:

Priyababu

Well-known member
Member
:love: :love: :love:

மீனாவுக்காக...

தாமரை மேலே நீர்த்துளி போல்
தலைவனும் தலைவியும் வாழ்வதென்ன
நண்பர்கள் போலே வாழ்வதற்கு
மாலையும் மேளமும் தேவையென்ன?
சொந்தங்களே இல்லாமல்
பந்த பாசம் கொள்ளாமல்
பூவே உன் வாழ்க்கை தான் என்ன..சொல்……

மன்றம் வந்த தென்றலுக்கு
மஞ்சம் வர நெஞ்சமில்லையோ
அன்பே.. என் அன்பே
Sindhu epidippa ipidi.love u sis
 
Top