Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஆதிரையின் கண்மணி நீ வரக் காத்திருந்தேன் - Episode 2

Advertisement

Aathirai

Well-known member
Member
1950

(Episode-2)
அழகிய சிங்கப்பூர்... உலகில் உள்ள பல பேரின் விருப்பமான இடம்... தமிழர்கள் அதிகமாக வாழும் இடம்... சுத்தத்திற்கு பெயர் போன இடம் என அதைப் பற்றி சொல்லிக்கொண்டே போகலாம்... சிங்கப்பூரின் அந்த பிரபலமான கட்டிடத்தின் ஜன்னல் வழியே தன் அழகிய விழிகளைப் பதித்திருந்தாள் அஞ்சலி...
அன்று அவளது பிறந்தநாள்... அவள் எந்தவித கவலையும் இல்லாமல், சந்தோஷமாக இருக்க வேண்டிய நாள்... ஆனால், அவள் கண்களில் ஒரு வித ஏக்கம், ஒரு வருத்தம்... எதையோ இழந்து தவிப்பதைப் போல் இருந்தாள்... எதையோ யோசித்துக்கொண்டிருந்தவள், தன் செல்போன் ரிங் ஆவதைக் கேட்டு நினைவுக்கு வந்தாள்... கால் செய்தது அவள் மாமா மகேஷ்...
“ஹலோ, அஞ்சலி மா.. எப்படி டா இருக்கே..? விஷ் யூ மெனி ஹாப்பி பர்த்டே.. மிஸ் யூ டா மா... ஸாரி.. இந்த பர்த்டேக்கு நாங்க யாரும் இல்லாம நீ அங்க எப்படி இருக்கியோன்னு கவலையா இருக்கோம் டா... பட், எங்களோட ப்ளஸ்ஸிங்க்ஸ் உனக்கு எப்பவுமே இருக்கும்... ஓகே... தென், பர்த்டே பேபி என்ன பண்ற..?” அடுக்கடுக்காய் பேசிக்கொண்டே போனார் மாமா...
“ஆங், மாமா தேங்க் யூ சோ மச்... நான் நல்லா இருக்கேன் மாமா... நீங்க எப்படி இருக்கீங்க.? வொர்க்ல தான் இருக்கேன் மாமா.. அப்பறம், அங்க அத்தை, வருண், பூஜா எல்லாரும் எப்படி இருக்காங்க..?? நானும், உங்க எல்லாரையும் ரொம்ப மிஸ் பண்றேன் மாமா...” என்றாள் ஏக்கத்துடன்...
“ஹும்ம்... ஸாரி டா... எனக்குத் தெரியும்... பட், நீ அங்க இருக்கும் போது நாங்க என்ன பண்றது...?? எனக்கும் கரெக்ட்டா பாத்து ஒரு நியூ ப்ரஜெக்ட் வந்துடுச்சு... அதுல கொஞ்சம் பிஸியா இருக்கேன்... இல்லன்னா, உன்னோட பர்த்டே அப்போ எல்லாரையும் சிங்கப்பூர் கூட்டிட்டு வரலாம்னு பிளான் பண்ணிருந்தேன்.. பட், முடியாம போச்சு டா... எகைன், ஸாரி டா...” என்றார்...
“ஹய்யோ... மாமா... பரவால்ல... எனக்குத் தெரியும், நீங்க எல்லாரும் என்னப் பத்தி தான் யோசிச்சுட்டு இருப்பிங்கன்னு... இருக்கட்டும் மாமா, இந்த பர்த்டே எனக்கு சிங்கப்பூர்லதான்னு இருக்கு... நாம என்ன பண்ண முடியும்..??”
“சரிடா மா... அப்பறம் நான் பேசினதுல இருந்தே பாக்கறேன், ஏன் உன்னோட வாய்ஸ் ஒரு மாதிரி இருக்கு..?? ரொம்ப டல்லா பேசற மாதிரி தெரியுது... உடம்பு சரியில்லையா டா...?? என்னாச்சு மா...” என்றார் ஒரு அப்பாவின் பாசத்துடன்...
“அப்படியெல்லாம் ஒண்ணும் இல்ல மாமா... நான் நல்லா தான் இருக்கேன்... நீங்க இல்லைங்கற குறை தான்...” என்றாள் மழுப்பியபடி...
“இல்லடா எனக்குத் தெரியாதா, என் அஞ்சலியப் பத்தி... என்னாச்சு சொல்லு...?? நீ இன்னைக்கு எதிர்பார்த்து யாரவது போன் பண்ணலையா...??” என்றார் சந்தேகத்துடன்... அவர் அப்படிக் கேட்டதும் அவள் கண்களில் இருந்து கரகரவென்று கண்ணீர் வழிந்தது... அவளால் எதுவும் பேச முடியவில்லை...
“அஞ்சலி மா... சொல்லு டா... ஓ... எனக்குப் புரிஞ்சுடுச்சு...” என்று அவர் சொன்னதும் அவள் சற்று அதிர்ந்தாள்... “அப்பா கூப்பிடல தானே... அதனால தான் வருத்தமா இருக்கியா...?? ஹும்ம்... அப்போ அவர் இன்னைக்குக் கூட உனக்குக் கால் பண்ணவே இல்ல... என் அருமை அக்காவாது கூப்பிட்டாளா, இல்லையா...??”
“இல்ல மாமா, அம்மா காலைலயே கூப்பிட்டு விஷ் பண்ணிட்டாங்க... அப்பா...” என்று இழுத்தவள், “அவருக்கு அதெல்லாம் ஞாபகம் இருக்குமான்னு கூட தெரியாது மாமா... அதைப் பத்தி நினைக்கறதும், நினைக்கததும் ஒண்ணு தான் மாமா...” என்று வெறுப்புடன் சிரித்தாள்...
“ஹும்ம்... ஓகே டா... எதைப் பத்தியும் கவலைப்படாதே... உடம்பைப் பாத்துக்கோ... நல்லா சாப்டு... ஓவர் டைம் வொர்க் பண்ணாதே... கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கோ... சரியா... நான் மறுபடியும் ப்ரீயா இருக்கும் போது கூப்பிடறேன்.. ஓகே டேக் கேர்... பை...” என்று போனை வைத்தார்... “ஓகே மாமா... யூ டூ டேக் கேர்... பை...” என்று அவளும் போனை வைத்தாள்....
போனை வைத்த அடுத்த நிமிடம் அப்பாவைப் பற்றி நினைத்தாள்.. அவள் நினைவு தெரிந்த நாளில் இருந்து, அவள் அப்பா ரகுராம் அவளுடன் அதிகமாக பேசியதில்லை.. ஏன், அவள் அம்மா பானுமதியிடம், அக்கா ஸ்வேதாவிடம் கூட தான்.. அவர் ஏன் அப்படி இருக்கிறார் என்று அவர்கள் யாருக்குமே தெரியாது... அவருடைய ஒரே நோக்கம் பணம் மட்டுமாகவே இருந்தது...
ரகுராம் சென்னையில் இருக்கும் போது சொந்தமாக செய்து கொண்டிருந்த பிசினஸ்ஸில் நஷ்டம் ஏற்பட்டது.. ரொம்பவும் சோர்ந்து போனார்... ஒரு வாரமாக சரியாக சாப்பிடாமல், தூங்காமல், வீட்டிற்க்கு வராமல் இருந்தார்... அப்போது, ஸ்வேதாவும், அஞ்சலியும் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தனர்... ஸ்வேதாவிற்கு ஓரளவு விவரம் தெரிந்தாலும், அஞ்சலி அப்போது மிகவும் சிறிய பெண்ணாக இருந்ததால் அவளுக்கு எதுவும் புரியாது...
பானுமதியுடன் அவரது தம்பி மகேஷ் கூடவே இருந்தார்... பி.இ படித்து முடித்தவுடன் அவருக்கு பெங்களுருவில் உள்ள ஒரு பெரிய கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனியில் வேலை கிடைத்தது... அவருடைய வற்புறுத்தலின் காரணமாக, அவர்கள் பெங்களுருவுக்கு குடி பெயர்ந்து விட்டனர்.. அஞ்சலியும், ஸ்வேதாவும் அப்போது ஓரளவிற்கு வளர்ந்து விட்டனர்... அதன் பிறகு, அவர்களை பெங்களுருவில் உள்ள தனியார் பள்ளியிலேயே சேர்த்தும் விட்டனர்... பாவம் அஞ்சலி தான் சென்னையை ரொம்பவும் மிஸ் பண்ணினாள்...
இதற்க்கிடையில் தன் நண்பன் ஒருவரின் உதவியுடன் மும்பைக்குச் சென்ற ரகுராம் நண்பரின் பணத்தைக் கொண்டு அங்கே ஆட்டோ மொபைல் பிசினஸ்சை ஆரம்பித்து இப்போது அதை வெற்றிகரமாக தன் நண்பருடனேயே சேர்ந்து நடத்திக்கொண்டிருக்கிறார்...
இப்போது அவருடைய ஒரே குறிக்கோள் இந்தியாவின் நம்பர் ஒன் மில்லினியர் ஆக வேண்டும் என்பது... அதற்காக வாழ்வின் அத்தனை சுகங்களையும் தூர எரிந்து விட்டு, பிஸ்னெஸ் ஒன்றே வாழ்க்கை என வாழ்ந்து கொண்டிருக்கிறார்..
ஒரு நல்ல நாள், அனைவருடனும் சந்தோஷமாக ஒன்றாக இருக்க வேண்டும் என்று கூட நினைக்க மாட்டார்.. அப்பொழுதும், பிஸ்னெஸ்சை கவனிக்கச் சென்று விடுவார்... ஏதோ, மாதம் இருமுறை ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் தான் வீட்டுக்கு வருவார்... அதுவே ஒரு சில முறை பெரிய விஷயமாக இருக்கும்.... பாவம் பானுமதி தான்....
அப்பா தங்களுடன் பேச மாட்டாரா., மற்ற அப்பாக்களைப் போல் தங்களோடு விளையாட மாட்டாரா., என்று மகள்கள் இருவரும் அம்மாவைக் கேட்டு நச்சரிக்கும் போது, பானுமதிக்கு கண்களில் கண்ணீர் வந்து விடும்... அதைப் பற்றி பேசலாம் என்றால் கூட, அதற்க்கான நேரம் ஒதுக்க மாட்டார்...
இப்படிச் சென்ற கசப்பான நாட்களில் மகேஷ் மட்டும் தான் அவர்களின் ஒரே ஆறுதல்.. அவர்களின் அப்பா என்னென்னவெல்லாம் செய்ய வேண்டுமோ, அதை அவர்களின் மாமா ஒரு தகப்பன் ஸ்தானத்தில் இருந்து செய்தார்..
மகேஷ் தன்னுடன் கல்லூரியில் படித்த மீனா என்ற பெண்ணை விரும்பினார்.. மகேஷிற்கு அப்பா, அம்மா யாரும் இல்லை.. எப்போதோ தவறி விட்டனர்... அம்மாவாக, அப்பாவாக இருந்து அவரை கரையேற்றியது பானுமதி தான்.. இந்த விஷயத்தைத் தன் அக்காவிடம் தான் முதலில் கூறினார்.. இதில் ஏனோ அஞ்சலியின் அப்பா ரகுராமிற்கு உடன்பாடு இல்லை...
ஆனால், பானுமதிதான் மீனாவின் பெற்றோரிடம் பேசி அவர்களின் திருமணத்தை நடத்தினார்.. தன் பேச்சை மீறி கல்யணம் நடந்தேறியதில் ரகுராமிற்கு சற்று கோபம்.. அதிலிருந்து மகேஷிடம் அவர் அவ்வளவாக பேசுவதில்லை.. இதில் மகேஷுக்கு சற்று வருத்தம்...
மகேஷ், மீனாவின் அழகான வாழ்க்கைக்கு அடையாளமாய் வருணும், பூஜாவும் பிறந்தனர்... அஞ்சலிக்கு அவர்கள் என்றால் கொள்ளைப் பிரியம்.. முதலில் அத்தை மீனா எப்படி இருப்பாளோ என்ற பயம் ஸ்வேதாவுக்கும், அஞ்சலிக்கும் இருந்தது... ஆனால், அவளும் அவர்கள் அம்மாவைப் போலவே குணத்தில் சிறந்தவளாகவும், அவர்களுக்கு நல்ல தோழியாகவும் இருந்தாள்...
ரகுராம் ஒருவர் இல்லாத குறையைத் தவிர அங்கே அவர்களுக்கு வேறு எந்தக் குறையும் இருந்ததே இல்லை... இருந்தாலும், அவரும் ஒன்றாக இருந்தால் நன்றாக இருக்குமே என அவர்கள் நினைத்ததுண்டு....
இதையெல்லாம் நினைத்துப் பார்த்துக் கொண்டிருந்த அஞ்சலியின் வருத்தம் அவள் மாமா சொன்னதைப் போல் அப்பாவிற்காக அல்ல.. அவளின் உண்மையான வருத்தமே வேறு... நினைவு வந்தவள், தன் போனில் வந்த பேஸ்புக் அலெர்ட் சௌண்டை கவனித்தாள்.. பேஸ்புக்கைத் திறந்து பார்த்தாள்...
“விஷ் யூ ஹாப்பி பர்த்டே அஞ்சலி”... என்ற அர்ஜுனின் வாழ்த்துக்கள் வந்திருந்தது.. அதைப் பார்த்த கணத்தில், அவளுடைய அழகிய விழிகள் மறுபடியும் கலங்க ஆரம்பித்தன... சொல்ல முடியாத துக்கம் அவள் தொண்டையை அடைத்தது...
“அர்ஜுன்... அர்ஜுன்....” அப்படியே அவன் பேரை உச்சரித்தபடி வீறிட்டு கத்தி அழ வேண்டும் போல இருந்தது அவளுக்கு... ஆனால், அவளால் எதுவும் செய்ய முடியவில்லை... மனதுக்குள் சொல்லிக்கொண்டாள்...
அப்போது, “ஹே... அஞ்சலி.. நீ என்ன பண்ணிட்டிருக்க...?? உன்ன மேனேஜர் அவசரமா கூப்பிடறார் வா...” என்று அவளை இழுத்துக்கொண்டு சென்றாள் அவள் தோழி மது என்கிற மதுமிதா...
வந்ததும் வராததுமாய், இப்படி இழுத்துக்கொண்டு செல்கிறாளே என்று அவளுடனே எதுவும் கேட்காமல் சென்றாள் அஞ்சலி... மது அவளைக் கூட்டிக்கொண்டு சென்றது ஒரு சின்ன கான்பிரன்ஸ் ஹாலுக்கு.. உள்ளே நுழைந்ததும் ஒரே இருட்டு.. படாரென்று ஏதோ உடைபட்டு அஞ்சலியின் தலை மேல் விழுந்தது.. அனைத்தும் கலர் ரிப்பன்கள்... லைட்கள் ஆன் ஆனது...
“விஷ் யூ மெனி மோர் ஹாப்பி ரிடர்ன்ஸ் ஆப் தி டே அஞ்சலி...” என்று கோரஸாக அங்கிருந்த அனைவரும் கத்தினர்... அப்போது தான் அது அவளுடைய பர்த்டே செலிப்ரேஷன் என்று புரிந்தது அவளுக்கு.. அங்கிருந்த அந்த பெரிய கேக்கை கட் செய்தாள்.. முதலில் மதுவுக்கு ஊட்டினாள்... பிறகு, அனைவருக்கும் கட் செய்து கொடுத்தாள்..
அனைவரும், கிப்ட் கொடுத்து தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.. இத்தனை நடந்தும், அவளால் சந்தோஷமாக இருக்க முடியவில்லை.. அவளால் சமாதானம் ஆக முடியவில்லை... அழுகை தான் முட்டிக்கொண்டு வந்தது..
அவளின் நிலையை அறிந்த மது அவளை எப்படியாவது தேற்றி விட வேண்டும் என நினைத்தாள்... ஏனென்றால், அவளின் அனைத்து விஷயங்களும் மதுவுக்குத் தெரியும்... அவர்கள் கல்லூரியில் ஒன்றாகப் படித்து, ஒரே இடத்தில் வேலையும் கிடைத்து இன்றும் ஒன்றாக இருப்பவர்கள்...
“ஹே அஞ்சலி... ஏன் நீ இப்படி இருக்க...?? இன்னைக்கு உனக்கு பர்த்டே மா... நீ ரொம்ப ஹாப்பியா இருக்கணும்... சிரிச்சுட்டே இருக்கணும்... பட், நீ இன்னைக்கு ஜஸ்ட் ஆப்போசிட்டா இருக்க... ப்ளீஸ் மா... அழாதே... எனக்கு கஷ்டமா இருக்கு... எல்லாத்தையும் நெனச்சுட்டு இருக்காதே... அப்பறம், உன்னால சந்தோஷமா இருக்க முடியாது...” என்றாள் மது அவளை சமாதனம் செய்ய...
“எப்படி மது, என்னால எல்லாத்தையும் நெனச்சுப் பார்க்காம இருக்க முடியும்..?? போன வருஷம் இதே நாள, என் லைஃப்ல மறக்கவே முடியாது... அன்னைக்கு மாதிரி நான் எப்பவும் அவ்ளோ ஹாப்பியா இருந்ததே இல்ல... அதே மாதிரி, இந்த பர்த்டேவையும் என்னால மறக்க முடியாது.. ஏன்னா, இன்னைக்கு மாதிரி நான் என்னைக்குமே இவ்ளோ சோகமா இருந்ததே இல்ல...”
“அஞ்சலி.. நீ வீணா மனசப் போட்டு குழப்பிட்டு இருக்காதே... நம்ம கைல எதுவும் இல்ல.. அடுத்த நிமிஷம் என்ன நடக்கப் போகுதுன்னு யாருமே சொல்ல முடியாது... அடுத்த செகண்ட்ல என்ன வேணும்னா நடக்கலாம்... சோ, ப்ளீஸ் டோன்ட் வொர்ரி மா... ஆபீஸ்ல எல்லாரும் பர்த்டே பேபி ஏன் இவ்ளோ டல்லா இருக்கான்னு என் கிட்ட கேக்கறாங்க... நான், உடம்பு தான் கொஞ்சம் சரியில்லன்னு சொல்லி வைச்சுருக்கேன்... ப்ளீஸ் கொஞ்சம் நார்மலா இரு மா... தயவு செய்து எதைப் பத்தியும் யோசிக்காதே...” என்றாள் மது...
ஆனால், மது தோற்று தான் போனாள்... அவள் அவ்வளவு சொல்லியும் அஞ்சலியால் நார்மலாக இருக்க முடியவில்லை... அதைப் பற்றி நினைக்க நினைக்க அவளுக்கு அழுகை வந்து கொண்டே இருந்தது... திடீரென்று முடிவு எடுத்தவள் அன்றைக்கு விடுப்பு எடுத்துக் கொண்டு மதுவிடம் சொல்லி விட்டு அவர்கள் தங்கியிருக்கும் அறைக்கு வந்து சேர்ந்தாள்...
வந்தவள் கொஞ்சம் வாய் விட்டே அழுதாள்... “அர்ஜுன்... நான் உன்ன மிஸ் பண்ணிட்டேன் அர்ஜுன்... என்ன மன்னிச்சுடு... அர்ஜுன்.... அர்ஜுன்....” என்று அவனது பேரை உச்சரித்தவாறே தேம்பித் தேம்பி அழுதாள்... அவள் அழுக அழுக பழைய நினைவுகள் எல்லாம் அவளின் கண் முன் வந்து போனது... அந்த அழகான நாட்களை எண்ணிக் கொண்டே அவள் கண்களை மூடினாள்....
அஞ்சலியின் நிலைமை போலவே தான் அங்கே அர்ஜுனின் நிலைமையும்... அவனால், அன்று ஏனோ சரியாக வேலையில் கவனம் செலுத்த முடியவில்லை... சற்று தடுமாறினான்... முடியாமல் போகவே, அவனும் உடம்பு சரியில்லை என்று விடுப்பு சொல்லி விட்டு, அருகே ரவி மற்றும் அவனின் நண்பர்கள் தங்கியிருக்கும் அறைக்குச் சென்றான்.. ஒருவனைத் தவிர அனைவரும் வேலைக்குச் செல்வதால் அங்கே வேறு யாரும் இல்லை... வீட்டிற்க்கு சென்றால் அம்மா கவலை கொள்வாள் என்பதால் அவன் அங்கே சென்றான்... வேதனையில், தலைவலி என்று அவனிடம் சொல்லிக்கொண்டு படுத்தவன் பழைய நினைவுகள் அனைத்தையும் நினைத்துக் கொண்டே கண்களை மூடினான்....
 
Top