இருளோடு தீபம் ஏற்றினாய் 2

Advertisement

ரமா

Active member
Member
அத்தியாயம் 2


"சிவா, இன்னும் என்ன யோசனையில் இருக்க? இதோ பாரு, உன்னோட அன்புக்குக் கொஞ்சமும் தகுதியில்லாதவங்கடி அவங்க... தயவுசெஞ்சு பழசை மறந்துட்டு வெளியே வா சிவா..." என்றாள் கெஞ்சலாக.

தன்னை சமாதானம் செய்த தன் தோழியை ஆறுதலாய் பார்த்தவள்,

"ஏன் நந்து, அப்பா அம்மா இல்லாம அனாதையா இருக்குறது அவ்வளவு பெரிய தப்பாடி? என் அப்பா அம்மா வேணாம்னு தான் நான் நினைப்பேனாடி? இத்தனை நாளா எவ்வளவோ காயம் கொடுத்துருக்காங்க... ஆனா அவங்க இப்போ பண்ணது என் மனசைப் போட்டு அறுக்குது நந்து. இந்தக் குடும்பத்துக்கு நான் பாரமா தெரிஞ்சிட்டேன் இல்லை நந்து...? எனக்கு வாழவே பிடிக்கலைடி..." என்றவளின் கண்களில் கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது.

அதே நேரம், "சிவா... சிவா... எங்கேம்மா இருக்க...?" என்று அவளைத் தேடியபடி வந்த தேவகியின் குரலில் தன் கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்தவள் சிரித்தபடி தன் வதனத்தை மாற்றிக் கொண்டாள்.

"நந்து இதைப் பத்தி பேசாத... அத்தைக்கு நடந்த எதுவும் தெரியாது. எனக்கு அவங்களை கஷ்டப்படுத்துறதுல கொஞ்சமும் விருப்பம் இல்லை நந்து..." என்றாள் தெளிவாக.

"சரிடி! நான் எதுவும் சொல்லலை. நீயும் பழசை மறந்துட்டு வாழப் பழகு. இந்த வாழ்க்கை உனக்கு நிறையக் கஷ்டத்தைக் கொடுத்தாலும்கூட நிச்சயம் உனக்குச் சந்தோஷத்தையும் கொடுக்கும்டி... அந்தக் காலம் ரொம்ப தூரத்துல இல்லை சிவா..." என்றாள் நம்பிக்கையாய்.

தோழியின் வார்த்தையில் நம்பிக்கை இல்லை என்றாலும்கூட தனக்காக ஆறுதல் சொல்லும் ஒரு ஜீவனை வருத்த விருப்பம் இல்லாமல் வெறுமையாய் புன்னகைத்து வைத்தாள்.

அப்போது அங்கே வந்த தேவகி இருவரையும் பார்த்துச் சிரித்தபடி வந்தவர்,

"அட! ரெண்டு பேரும் இங்கே இருக்கீங்களா? உங்களை எங்கே எல்லாம் தேடுறது? ஏன் சிவா நான் உன்னைய என்ன சொன்னேன்? இந்த நெக்லஸை கழுத்துல போடுன்னு தானே சொன்னேன். ஆனா நீ பாட்டுக்கு அங்கேயே வச்சிட்டு வந்துட்ட... கழுத்தைக் காட்டு நானே போட்டு விடுறேன்..." என்றபடி ஆசையாய் தன் அண்ணன் மகளுக்கு அந்த நகையை மாட்டிவிட்டார் அவள் தடுத்தும் கேளாமல்.

"ம்ம்... இப்போ பாரு எந்தங்கம் எவ்வளவு அழகா இருக்கான்னு...? எந்த அலங்காரமும் இல்லாமையே நீ பேரழகி தான். ஆனா இந்த ஒரு நகை உன்னைத் தேவதையா காட்டிடுச்சு... சரி வாங்க, தாலி கட்டுற நேரம் ஆச்சு மேடைகிட்ட போலாம்..." என்றபடி தன் ஆசை மருமகளை கைப்பிடித்து அழைத்துச் சென்றார்.

அவர் மனதிலும் ஓர் ஆசை இருந்தது. தன் மகன் அமுதனுக்கு சிவாவை திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று! ஆனால், எந்நேரமும் அவளை வார்த்தையால் வதைத்துக் கொண்டிருக்கும் தன் மகனைப் பற்றி அறியாமல் பெண் மனதில் ஆசையை வளர்த்திக் கொள்ளக் கூடாது என்ற எண்ணத்தில் அமைதியாய் இருந்தார்.

ஆனால், அவரின் மகனோ அவளை உயிரோடு எரித்து சாம்பலாக்கிவிட்டான் என்பதை அவர் அறியவில்லை.

அதே நேரத்தில் அமுதனும், நிகிதா என்ற பணக்காரப் பெண்ணைக் காதலிப்பதாக வந்து நிற்க, எப்போதும் மகனின் விருப்பத்திற்குக் குறுக்கே நிற்காத பெற்றவர்களும் அவனின் காதலை ஏற்று அவனின் காதல் திருமணத்திற்குச் சம்மதம் கூறினார்கள்.

கோடீஸ்வரர் மார்த்தாண்டத்தின் ஒரே மகள் தான் நிகிதா. சிறுவயதிலேயே தாயை இழந்த நிகிதாவிற்கு தந்தை தான் ஒரே துணை.

தாயை இழந்த நிகிதா எதற்காகவும் வாடி வதங்கி நிற்கக் கூடாது என்ற ஒரே காரணத்திற்காகவே அவள் கேட்ட அனைத்தும் அடுத்த நொடியே அவளின் கைகளில் கிடைக்கும்படி செய்த மார்த்தாண்டத்திற்கு அவள் அமுதனைக் காதலிக்கிறேன் என்று வந்து நிற்கும்போது மறுக்க முடியவில்லை.

அமுதனைப் பற்றி விசாரிக்கும் போது அவனைப் பற்றி நல்லவிதமாக அனைவரும் சொல்ல அவனின் குடும்பமும் சமுதாயத்தில் கௌரவமாய் இருந்துவிட அதைவிட வேறென்ன வேண்டும் அவருக்கு!

உடனே அமுதனின் குடும்பத்தினரிடம் சென்று பேசிவிட்டார்.

இரு குடும்பமும் இணைந்து இதோ இன்று திருமணத்தில் வந்து நின்றது.

பெண்ணும் மாப்பிள்ளையும் மணவறையில் அமர்ந்திருக்கக் கம்பீரமாய் இருந்த அமுதனின் பார்வை அவ்வப்போது நிகிதாவை சென்றடைந்தது.

அவனோ வெட்கப்பட்டு தலையைத் தாழ்த்தியபடி அமர்ந்திருந்தவளின் காதில் என்ன கூறினானோ அதில் அவளின் வதனம் குங்குமமாய் சிவந்து போனது.

அப்போது தேவகியுடன் அங்கே வந்த சிவாவின் பார்வையில் அது தப்பாமல் விழுந்தது.

நிகிதாவுடன் சிரித்தபடி ஏதோ கூறியவன் தலையை நிமிர்த்திப் பார்க்க அங்கே கலங்கிய கண்களுடன் இருந்த சிவாவை பார்த்தவனின் கண்களிலும் முகத்திலும் ஓர் எள்ளல் வந்து போனது.

பெண்ணவளோ தன் கண்களை யாரும் அறியாமல் துடைத்தபடி தன் அத்தையின் பக்கத்தில் அமைதியாய் நின்று கொண்டாள்.

சற்று நேரத்தில் ஐயர் தாலி எடுத்துக் கொடுக்க அதைச் சந்தோஷமாய் வாங்கிய அமுதன் நிகிதாவின் கழுத்தில் கட்டி தன்னவளாய் ஏற்றுக் கொண்டான்.

திருமணம் நல்லபடியாய் முடிந்ததும் விருந்து உபசரிப்பு என மதியம் வரை இழுத்தது.

அங்கே இருக்கும் வேலைகளை எடுத்துப் போட்டுச் செய்து கொண்டிருந்தாள் சிவா. அவளுக்குத் துணையாக நந்தினியும் வேலை செய்து கொண்டிருந்தாள்.

நந்தினியும் அவள் தாய் அழைத்ததும் சென்று விட அதற்கு மேல் தனியாக வேலை செய்து கொண்டிருந்தாள் சிவா.

தேவகியும் வாசுதேவனும் உறவினர்களுடன் பேசியபடி அமர்ந்து விட பெண்ணும் மாப்பிள்ளையும் தங்களுக்குள் பேசியபடி தனியே அமர்ந்திருக்க அப்போது அங்கே வந்த நிகிதாவின் தோழிகள்,

"அமுதன் சார், இன்னைல இருந்து நீங்க தான் நிகிதாவோட பேசிட்டு இருக்கப் போறீங்க... ஒரு ஒருமணி நேரம் எங்களோட தோழியை எங்களுக்குக் கடன் கொடுக்குறீங்களா சார்? நாங்க கொஞ்சம் பேசிட்டு இருப்போம்..." என்றனர் கிண்டலாய்.

அதில் சற்று அசடு வழிந்த அமுதனோ தன் அலைபேசியை எடுத்துக் கொண்டு,

"ஓகே சிஸ்டர், நீங்க பேசிட்டு இருங்க... நான் கொஞ்சம் முக்கியமா போன் பேச வேண்டியது இருக்கு பேசிட்டு வந்துடறேன்..." என்று அவர்களிடம் சொல்லிவிட்டு அங்கிருந்து வெளியேறினான்.

"ஏய்! ஏன்டி அவரை விரட்டி விட்டீங்க? பாவம் பாருங்க உங்களுக்குப் பயந்து அவர் எப்படி போறாருன்னு..." என்று தன் தோழிகளைத் திட்டினாள் நிகிதா.

"பாருடா! மேடத்துக்கு சாரை சொன்னதும் தாங்க முடியலை. நிகி பேபி இனிமே நீ உன் புருஷனோட தான் அதிகமா பேசப்போற... இன்னைக்கு எங்களோட கொஞ்சம் பேசுடி..." என்று அவளையும் கிண்டல் அடித்தனர் தோழிகள்.

நிகிதாவும் தன் தோழிகளுடன் அரட்டையில் கலந்து கொண்டு பேசினாள்.

இங்கே தன் அலைபேசியை எடுத்துக் கொண்டு வந்தவன் யாருக்கோ பேசிவிட்டுத் திரும்பும் வேளையில் அவனின் கண்ணில் விழுந்தாள் சிவா.

அவளைக் கண்டதும் எள்ளலாய் புன்னகைத்தவன் மெல்ல அவளின் அருகே சென்று சொடக்கிட்டு அவளை அழைத்தான்.

அதில் திரும்பியவள் அவனை அங்கே சுத்தமாய் எதிர்பார்க்கவில்லை.

"உன்னோட தகுதிக்கு நீ இருக்க வேண்டிய இடம் இதுதான்டி... என்னையவே கை நீட்டி அடிச்ச இல்லை... இனி தான்டி உனக்கு நரகம்னா என்னன்னு காட்டப்போறேன்..." என்றவனின் வார்த்தைகளில் அத்தனை வஞ்சம் இருந்தது.

அவனின் வார்த்தையில் உள்ளம் மருகி போனாலும்கூட அவனிடம் அதைக் காட்டாமல் வெறுமையாய் சிரித்தபடி அங்கிருந்து சென்றாள்.

அவளை அழ வைத்துப் பார்க்க வேண்டும் என்ற அவனின் எண்ணத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் ஊற்றிவிட்டு அவள் சென்றுவிட்டாள்.

அனைவரும் மண்டபத்தைக் காலி செய்து விட்டு அமுதனின் வீட்டிற்குச் சென்றுவிட்டனர்.

வாசலிலே மணமக்களை நிறுத்தி ஆரத்தி எடுத்தார் தேவகி.

"தேவகி, எம் பேத்தியை கூட்டிட்டு போய் பூஜை ரூம்ல விளக்கேத்து..." என்றார் சௌந்திரம்.

"சரிங்க அத்தை..." என்று மாமியாரிடம் கூறியவர் நிகிதாவிடம் திரும்பி,

"வாம்மா..." என்று கைப்பிடித்து பூஜை அறைக்கு அழைத்துச் சென்றார்.

இதையெல்லாம் ஓரமாய் நின்று பார்த்துக் கொண்டிருந்தாள் சிவா.

ஆனால், அவளின் வதனத்தில் வலியின் சாயல் நிறைந்திருந்தது. அவளைக் கண்ட சௌந்திரம் வேகமாய் அவளருகே வந்து,

"ஏய்! இங்கே என்னடி பண்ற? எம்பேரனுக்கு புதுசா கல்யாணம் ஆகி புதுமருமக வீட்டுக்கு வந்துருக்கா... உன்னோட விடியாத மூஞ்சியை முன்னாடி கொண்டு வந்துறாதடி... முதல்ல போடி இங்கிருந்து..." என்று ஆத்திரமாய் அவளை இங்கிருந்து துரத்தினார் சௌந்திரம்.

அவரின் வார்த்தைகள் எப்போதும் போல் இருந்தாலும் ஏனோ இன்று மனதால் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை அவளால்.

அடுத்த நொடியே அங்கிருந்து பின்கட்டு வழியே வெளியே சென்றிருந்தாள் சிவா.

அந்தப் பங்களாவின் பின்புறத்திலிருந்து மரத்தின் நிழலில் அமர்ந்திருந்த சிவாவின் கண்களில் கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது.

அதைத் தடுக்கும் வழியறியாது அப்படியே அமர்ந்திருந்தாள் பெண்ணவள்.

அதே நேரம் அவளின் தோளில் அழுத்தமாய் ஒரு கரம் விழுந்தது.

யாரென்று பார்த்தவளின் பின்னே நின்றிருந்த தேவகியை கண்டவள் தாயைக் கண்ட சேயாய் அவரின் தோளில் சாய்ந்து அழ ஆரம்பித்தாள்.

"சிவா, நீ எதுக்கு அழறன்னு எனக்குத் தெரியும்டா..." என்றார் தேவகி அவளின் முதுகைத் தடவியபடி.

அதில் அதிர்ச்சியாய் நிமிர்ந்து தன் அத்தையைப் பார்த்தாள் விழிகள் விரிய.

'அய்யோ! அத்தைக்கு நான் அமுதன் மாமாவை விரும்பியது தெரிந்து விட்டதா? அதுதான் அப்படி அத்தை சொன்னார்களா? இப்போது எப்படி அத்தையைச் சமாளிப்பேன்? இவரும் என்னைத் தவறாக நினைத்து விடுவாரோ?' என்று மன தோரம் நினைத்தபடி தன் அத்தையை அதிர்ச்சியுடன் பார்த்தாள்.

ஆனால், அவர் அடுத்துக் கூறிய வார்த்தையில் தான் சற்று நிம்மதியாய் அத்தையின் முகத்தைப் பார்த்தாள் சிவா.

அப்படி தேவகி என்ன கூறியிருப்பாரோ?


***

வெள்ளை மாளிகை போல் மின்னிய அந்த அரண்மனையின் முன்னே நின்ற அந்த ரோல்ஸ் ராய்ஸ் கருப்பு நிறக் கார் தரையை வழுக்கியபடி வெளியே ஓடி நகரத்தின் நெரிசலில் கலந்தது.

அந்தக் கார் அதற்குப் பின்னே வந்த கார்களும் கட்டி முடிக்கப்படாத கட்டிடத்தின் முன்னே நின்றது.

அந்தக் காரிலிருந்து நெடுநெடுவென ஓர் உருவம் இறங்கி அந்தக் கட்டிடத்தை விழி உயர்த்திப் பார்த்தான்.

அதே நேரம் அங்கே வந்த ஒருவன், "பாஸ் எல்லாம் தயாரா இருக்கு..." என்று கூற அதற்குத் தலையசைத்த அவனோ தன் கால்களை அழுத்தமாய் பதித்து உள்ளே நுழைந்தான்.

அங்கே தலைகீழாய் தொங்கவிடப்பட்ட ஒருவனின் உதிரம் முழுவதும் அவனின் முகத்தில் வழிய உயிர் பயம் விழிகளில் உறைந்து போகத் தொங்கிக் கொண்டிருந்தான் அவன்.

அவனின் முன்னே இருந்த சேரில் அமர்ந்த அந்த உயரமான மனிதனோ கால்மேல் கால் போட்டு அமர்ந்தவன் தன் முன்னே தொங்கிக் கொண்டிருந்தவனை அழுத்தமாய் பார்த்தான்.

"பாஸ்! என்னை மன்னிச்சிடுங்க... நான் தெரியாம தப்பு பண்ணிட்டேன் பாஸ்..." என்றான் உயிர் பயத்தில்.

"மன்னிப்பா என்னைப் பத்தி தெரிஞ்சும் நீ பண்ணது தப்பு இல்லையா பிரபா? உன்னை நான் மன்னிச்சு விட்டா நாளைக்குத் தப்பு பண்ற எல்லாரையும் இல்ல மன்னிக்கணும். அது இந்த ருத்ராவால செய்ய முடியாதே பிரபா! அதனால நீ நிம்மதியா போய் சேரு... கவலைப்படாத உன் குடும்பம் கடைசி வரைக்கும் நிம்மதியா சந்தோஷமா வாழ நான் கியாரண்டி... என்ன வரவா பிரபா...?" என்று நக்கலாய் கூறியவன் தன் கையை நீட்ட அதில் ஒருவன் துப்பாக்கியை வைத்தான்.

அதை அலட்சியமாய் பிடித்தவன் தன் முன்னே இருந்தவனின் நெற்றியில் ஒரே ஒரு புல்லட்டை இறக்கினான். அடுத்த நொடியே அவன் உயிரற்ற சடலமாய் தலைகீழாய் தொங்கிக் கொண்டிருந்தான்.

அதை அலட்சியமாய்க் கடந்து எழுந்தவன் தன் ஆட்களைப் பார்த்து, "டிஸ்போஸ் த பாடி..." என்று சொன்னவன் அடுத்த நொடியே அங்கிருந்து சென்றான். அவன் ருத்ரதேவேஷ்!



யார் இந்த ருத்ரதேவேஷ்? அடுத்தடுத்த பாகங்களில் பார்க்கலாம் செல்லம்ஸ்.

தீபம் ஏற்றும்...
✍️
 
யார் இந்த உயர்ந்த மனிதன்
👿

அமுதன் இத்தனை வஞ்சமாக
பேசறான்
எங்க போய் முடியுமோ
 
நைஸ் எபிசோட் 🤩🤩
தேவகி.... என்ன சொல்லியிருப்பாங்க.... அவங்க மாமியார் பேசினதுக்காகத் தான் அழறா என்று சொல்லி இருப்பாங்க 🙄🙄🙄

ருத்ரதேவேஷ்.....ஹீரோ என்ட்ரி கொடுத்தாச்சு 😨😨😨
 
நைஸ் எபிசோட் 🤩🤩
தேவகி.... என்ன சொல்லியிருப்பாங்க.... அவங்க மாமியார் பேசினதுக்காகத் தான் அழறா என்று சொல்லி இருப்பாங்க 🙄🙄🙄

ருத்ரதேவேஷ்.....ஹீரோ என்ட்ரி கொடுத்தாச்சு 😨😨😨
thanks for your support sis
 

Advertisement

Advertisement

Back
Top