இருளோடு தீபம் ஏற்றினாய் 7

Advertisement

ரமா

Active member
Member
அத்தியாயம் 7


"ஏய் சிவா... சிவா... எத்தனை தடவைடி உன்னைக் கூப்பிடறது? எந்தக் கப்பலைப் பிடிக்கடி இத்தனை யோசனை?" என்று கத்தினாள் நந்தினி.

ஆனால் அவள் கூறிய எதுவும் சிவாவின் காதுகளில் சுத்தமாய் விழவில்லை. அவளின் நினைவு முழுவதும் இன்று வீட்டில் நடந்த நிகழ்விலேயே இருந்தது.

யார் அவளை என்ன சொன்னாலும் தாங்கி கொண்ட மனது இன்று அவளின் அத்தை பேசாது இருந்தது அவளின் மனதில் நீங்கா வலியைக் கொடுத்தது.

'ஏன் அத்தை என்கிட்டச் சரியா பேசலை? நேத்து நான் வேலை கிடைச்சுதுன்னு சொன்னதுல இருந்து அவங்க இப்படித்தானே இருந்தாங்க... என்னாச்சு அத்தைக்கு? நான் ஏதாவது தப்பு பண்ணிட்டேனா? அப்படின்னா அதைச் சொல்லி என்னைத் தண்டிக்க அத்தைக்கு உரிமை இருக்குதே! அதுக்குன்னு பேசாம இருப்பாங்களா? என்று தன் அத்தையைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்தவளுக்கு நந்தினி கேட்டதும் அழைத்ததும் சுத்தமாய் நினைவில் விழவில்லை.

சிவாவின் முதுகில் பட்டென்று ஓர் அடி வைத்திட சுள்ளென்று அடி விழுந்ததில் தன் தோழியைத் திரும்பிப் பார்க்க அவளோ அவளை முறைத்தபடி நிற்க,

"எருமை எதுக்குடி அடிச்ச? கூப்பிட்டிருக்கலாம் இல்லைடி, இப்படியா சுளீர்னு அடிப்ப... எப்படி வலிக்குது தெரியுமா?" என்று கோபமாய் முறைத்தபடி தன் தோழியைத் திட்டினாள்.

"எப்படி எப்படி... நான் உன்னைக் கூப்பிடவே இல்லைல? எருமை மாடே எத்தனை முறைடி கத்துறது? நீ மனுஷியா என்ன... அவ அவ கத்தி தாவு தீர்ந்து போச்சு. ஆனா நீ எப்படிலாம் பேசுற?" என்று கத்தினாள்.

"சாரிடி நீ கூப்பிட்டியா? எனக்கு காதுல கேட்கலடி..." என்றாள் அசட்டுச் சிரிப்புடன்.

"ஆமா, இன்னைக்கு உனக்கு என்னாச்சு ஏதோ நினைப்புல இருக்க? வீட்ல யாராவது ஏதாவது சொன்னாங்களாடி?" என்றாள் தோழியைப் புரிந்தவளாய்.

"இல்லை நந்து, வேற யாரு என்ன சொன்னாலும் நான் அதைக் கடந்து வந்திடுவேன்னு உனக்குத் தெரியுமில்ல... இது வந்து அத்தை இன்னைக்கு என்கிட்டச் சரியா பேசலை நந்து. நான் என்ன தப்பு பண்ணேன்னு எனக்குத் தெரியலைடி? அத்தையோட அந்தப் பாராமுகத்தை என்னால தாங்க முடியலை டி... அது தான் மனசு ஒரு மாறி இருக்குடி..." என்றாள் கலங்கிய கண்களுடன்.

"என்னடி சொல்ற உன்னோட அத்தையா? ஆனா அவங்க தானே அந்த வீட்ல உன்னை நல்லா பாத்துக்குவாங்க..." என்றவளுக்கும் உள்ளே பயம் இருந்தது.

தேவகி மட்டும் தான் அந்த வீட்டில் அவளுக்கு என்று இருக்கும் ஒரே ஆறுதல். இன்று அவரும் அவளிடம் பாராமுகம் காட்டினால் அவள் என்ன தான் செய்வாள் என்று மனம் தன் தோழிக்காக வருந்தியது.

அதுவும் சற்று நேரம் தான் எதையோ யோசித்தவள்,

"ஏய் சிவா, வீட்டுல ஏதாவது பிரச்சனையாடி? அந்த அமுதன் அவனோட பொண்டாட்டி புதுசா வந்துருக்கால்ல... வீட்டுல ஏதாவது சண்டையா சிவா?" என்றாள் அவளைப் பார்த்தபடி.

"இல்லையே நந்து, நான் இப்போ வீட்ல எது நடந்தாலும் கண்டுக்கறது இல்லைன்னு உன்கிட்ட முன்னவே சொன்னேனில்ல... அவங்க இருக்குற பக்கம்கூட நான் போகலை. என்னோட பேச்சு இப்போ அத்தையோட மட்டும் தான்டி..." என்றாள் இயல்பாய்.

"அப்போ அப்படிதான் இருக்கும். வீட்ல ஏதாவது சண்டையா இருக்கும். அதுதான் உன்னோட அத்தை அப்படி இருந்துருப்பாங்க, நீ வேணா பாரு நாளைக்கே உன்னோட அத்தை உன்கிட்டப் பேசுவாங்கடி..." என்றாள் ஆறுதலாய்.

"ஹேய் நந்து! உண்மையா அத்தை என்கிட்டப் பழையபடி பேசுவாங்க இல்லைடி..." என்றாள் சந்தோஷமாய்.

"கண்டிப்பா பேசுவாங்க... அதனால நீ இப்படி வருந்த வேண்டிய அவசியமே இல்லை சிவா" என்றாள் அவளின் கரத்தை அழுத்தியபடி.

"இப்போ தான் நந்து எனக்கு ரொம்பவே சந்தோஷமா இருக்கு" என்றாள் மகிழ்ச்சியாய்.

"அம்மா தாயே! போதுமே உன்னோட சந்தோஷம் சாப்பிட வாடி... அதுக்குத்தான் உன்னைக் கூப்பிட வந்தேன். இப்போ நேரத்தை பாரு, லஞ்ச் டைம் முடிய போகுதுடி... சீக்கிரம் வா சாப்பிடப் போலாம்" என்றாள் அவசரமாய்.

"சாரிடி, இதோ இப்பவே சாப்பிட்டுப் போலாம்" என்றபடி சந்தோஷமாய் தன் தோழியுடன் சாப்பிட அமர்ந்தாள்.


***

காலையில் எழுந்ததில் இருந்தே ருத்ராவின் மனம் எதையோ நினைத்துத் தவித்தது. ஆனால், எதற்காக இந்த தவிப்பு என்று புரியவில்லை. இன்று அலுவலகம் செல்லவும் மனதில்லாமல் சந்தோஷை அழைத்து இன்று அலுவலகம் வராததைக் கூறியவன் முக்கியமான வேலை என்றால் மட்டும் தன்னை அழைக்கும்படி கூறி விட்டுத் தன் அலைபேசியை அணைத்தவனின் மனமெங்கும் ஏதோ வலியுடனே இருந்தது.

தன் தங்கையின் புகைப்படத்தின் அருகே போய் நின்றவன்,

"நிலாக் குட்டி, என்னடா மனசு ஏதோ மாறி தவிக்குது. இந்த தவிப்பு எதுக்குன்னு கொஞ்சமும் புரியலையேடா? ஏதோ எனக்கு நெருக்கமான உறவுக்கு ஏதோ ஆபத்துன்னு மனசு சொல்லுதேடா... எனக்கு நெருங்கின உறவுன்னா உன்னைத்தவிர இந்த உலகத்தில யாருமில்லையேடா? ஏன் இப்படி இதயம் துடிக்குது? ஏதோ ஆபத்து... யாருக்கு? எனக்குப் புரியலை நிலாக் குட்டி, நீதான் எனக்குத் துணையா இருக்கணும்" என்று வேண்டியவன் ஹாலில் இருந்த சோபாவில் சென்று அமர்ந்தான்.

தன் மனதை ஒரு நிலைப்படுத்தியவன் முன்பு தேநீர்க் கோப்பை நீட்டப்பட யாரென்று நிமிர்ந்து பார்த்தவன் அங்கே மாதையன் நிற்க,

"எப்போ வந்தீங்க மாதையன்? வர்றதா சொல்லவே இல்லை?" என்றபடி சிரிப்புடன் அந்தக் கோப்பையை எடுத்துக் கொண்டான்.

"சொல்லணும்னு தான் தம்பி நினைச்சேன் ஆனா ஏதோ நினைவுல அப்படியே வந்துட்டேன். சரிங்க தம்பி, இன்னைக்கு நீங்க ஆபிஸுக்குப் போகலையா?" என்றார் அவனைப் பார்த்தபடியே.

"இல்லைங்க மாதையா... என்னவோ காலையில இருந்து மனசு சரியில்லை. ஆபிஸ் போகவும் தோணலை. அதுதான் வீட்ல இருந்தே வொர்க் பாக்கலாம்னு..." என்று அத்துடன் முடித்துவிட்டான்.

"அப்படின்னா சரிங்க தம்பி, நீங்க வேலையைப் பாருங்க... நான் போய் இன்னைக்கு உங்களுக்குப் பிடிச்சதா சமைக்கிறேன்" என்றபடி தேநீர்க் கோப்பைகளை எடுத்துக் கொண்டு சென்றார்.

இவனும் தன் வேலையைப் பார்த்துக் கொண்டிருக்க அடுத்த அரைமணி நேரத்தில் அவனின் முன்னே வந்து நின்றார் மாதையன்.

தன் முன்னே நிழலாடுவதைக் கண்டவன் தலை நிமிர்ந்து பார்க்க அங்கே நின்றிருந்த மாதையனைக் கண்டவன்,

"என்னாச்சு மாதையா?" என்றான் கேள்வியாய்.

"தம்பி, உங்க டிரெஸ் துவைக்கலாம்னு நினைச்சு எடுத்தேன். அதுல ஒரு சட்டையில இது இருந்துச்சுப்பா..." என்றபடி தன் கையில் இருந்த ஒரு தோட்டைக் கொடுத்தார்.

அதை கையில் வாங்கியவன் 'இது யாரோட தோடு' என்ற யோசனையில் இறங்கினான்.

'ஆமா, இது எப்படி என்னோட சட்டையில வந்துருக்கும்? நான் எந்த பொண்ணுக்கிட்டேயும் பேசுறது கூட இல்லையே... அப்புறம் இது எப்படி...' என்று தனக்குள்ளே யோசித்தவனின் சிந்தனைக்குள் அப்போது தான் அவளின் வதனம் தோன்றியது.

'ஓ... இது அவளோடதா? ஆனா இது எப்படி என் சட்டை பாக்கெட்டுல வந்திருக்கும்?' என்றவனின் நினைவுகள் அன்றைய நாள் நடந்த நிகழ்வுக்குள் சென்றது.

தன் மேல் பனிப்பூவாய் மோதிய பெண்ணவளின் நயன விழிகளில் ஆடவனின் மனம் சொக்கித் தான் போனது.

ஆனால், அடுத்த நொடியே இது போல் எண்ணங்களுக்கு உருவம் கொடுக்கக் கூடாது என்ற அவனின் எண்ணம் முன்னே வர அதனாலேயே அவளை அப்படி முறைத்து விட்டு வந்தான்.

'உன்னைப் பத்தி நினைக்கவே கூடாதுன்னு தான் நான் நினைக்குறேன். ஆனா இப்படி உன்னோட பொருளை என்கிட்ட விட்டுட்டு உன் நினைப்பில் என்னை வச்சிருக்க நினைச்சிருக்க பாத்தியா... உன்னை என்ன தான் பண்றது பேபி? ஆமா, உன்னோட பேர் என்ன? நீ அந்தக் காலேஜ்ல தான் படிக்கிறியா? அப்போ உன்னைப் பத்தின முழுத் தகவலும் இருக்குமே...' என்று யோசித்தவனின் நினைவெங்கும் அவளின் பிம்பம் தான்.

அந்தத் தோட்டைப் பத்திரமாய் எடுத்துச் சென்றவன் தன் கப்போர்டை திறந்து அதில் இருந்த சின்ன பெட்டியில் போட்டு அதைப் பத்திரப்படுத்தினான்.

அவன் அதை பத்திரப்படுத்துமளவிற்கு அது தங்க நகை ஒன்றும் அல்ல. சாதாரண கவரிங் தான். ரோட்டு கடையில் இருபது முப்பது ரூபாய் கொடுத்தால் வாங்க முடிந்தது தான். அதைப் பத்திரப்படுத்தி அதன் பயன் தான் என்னவோ அவனே அறிவான்!

உடனே கிளம்பியவன் அவள் யார் என்று தெரிந்து கொள்வதற்காகத் தன் கல்லூரிக்குக் கிளம்பினான் ருத்ரா.


***

இங்கே நந்தினியோ சிவாவை கல்லூரி முழுவதும் தேடிக் கொண்டிருந்தாள். ஆனால் அவளோ எங்கேயும் காணவில்லை. இதுவரை தன்னைவிட்டு எங்கும் தனியே செல்லாதவள் இப்போது எங்கே சென்றாளோ என்ற பயமோ நந்தினியை அலைக்கழித்தது.

"அய்யோ சிவா! எங்கேடி போன? நான் உன்னைத் தனியா விட்டுப் போயிருக்கக் கூடாதுடி, சிவா என்கிட்ட திரும்பவும் வந்துடுடி... முருகா என் சிவாவை என்கிட்டப் பத்திரமா திருப்பித் தந்துடுப்பா... அவளுக்குன்னு இருக்குற உறவு நான் மட்டும் தான்பா, என் சிவாவுக்கு எதுவும் ஆகியிருக்கக் கூடாது முருகா" என்று தனக்குள்ளே பேசியபடி அந்தக் கல்லூரி வளாகத்திலேயே சுத்திச் சுத்தி வந்தாள்.


***

நந்தினியின் தேடலுக்கு உரியவளோ... அந்த இருட்டு அறையில் ஆழ்ந்த மயக்கத்தில் இருந்த சிவாவின் அருகே ஓர் உருவம் அமர்ந்தது. அதன் விழிகளில் அத்தனை வெஞ்சினம் இருந்தது.

"ரொம்ப தப்பு பண்ணிட்டே சிவா... என்கிட்டே உன்னோட ஆட்டிட்யூட்டை காட்டியிருக்கக் கூடாது. ஆனா பாரு உன்னை எனக்குப் பிடிக்காது தான். ஆனா உன்னோட உடம்பை பிடிக்காதுன்னு நான் சொல்லவே இல்லையே? இத்தனை நாளா நான் காத்திருந்தது இதுக்கு தான் சிவா. இந்த நேரத்துக்குத் தான். இனி நீ எனக்கு மட்டும் தான் சொந்தம். உன்னை இனி யாருக்கும் விட்டுக் கொடுக்க முடியாது சிவா. அப்படி அனுப்பவும் மாட்டேன்" என்றது அந்த உருவம்.

அந்தக் குரலுக்குச் சொந்தமான உருவம் யாரோ?

அப்போது மெல்லத் தன் மயக்கத்திலிருந்து வெளியே வந்தாள் சிவா. மெல்லத் தன் இமையைப் பிரித்தெடுக்கக் கண்ணுக்கு முன்னே இருந்த இருட்டு தெரிய மெல்லக் கண்களைக் கசக்கிப் பார்த்தவளின் முன்னே இருந்த உருவத்தைப் பார்த்துப் பயந்தவள் நன்றாக இருட்டு கண்ணுக்குப் புலப்பட்டதும் அவள் முகத்தில் அடித்த வெளிச்சத்தில் தன் முன்னே இருந்த உருவத்தின் முகத்தைக் கண்டவளுக்குக் கண்களில் அத்தனை பயம் வந்தது.

"நீயா...?" என்றாள் அந்த உருவத்திடம்.


அந்த உருவம் யாரோ? அவளுக்குத் தெரிந்த நபரா? யார் அவனோ?

அடுத்தடுத்த பாகத்தில் பார்க்கலாம் செல்லம்ஸ்.

தீபம் ஏற்றும்...
✍️
 

Advertisement

Advertisement

Back
Top