என் ஆயுள் ரேகை நீயடி 18

Advertisement

Sagee Elumalai

Member
Member
Chapter 18
விட்டு விலகி செல்வது போல
தெரிந்தாலும்
வானுடன் ஒன்றென கலந்திருப்பதே
மேகத்தின் இயல்பு...
என்னுடன் நீயும் உன்னுடன் நானும்

கலந்தே இருப்பதே காதலின் இயல்பு...

அவன் சொன்ன பதிலில் அவள் விக்கித்து நிற்க, “ஒரு பொண்டாட்டியா உன்னோட செயல் எவ்வளவு கேவலமானதுன்னு நினைச்சா கூட, என் பொண்டாட்டி தானேன்னு விட்டுடுவேன். ஆனா அந்த ராகவி உனக்கு என்னடி செஞ்சா, அவளை போய் எதுக்கு இழுத்து விட பார்த்த. நாளைக்கு இன்னொரு வீட்டுல வாழ போற பொண்ணு இதெல்லாம் தெரிஞ்சா அவ வாழ்க்கை என்னாகறது. அகல்யா போலத்தான் அவளையும் நினைச்சிட்டு இருந்தேன். ஆனா நீ செய்ய சொன்ன அசிங்கத்துக்கு,..” என்றவன் கண்களில் அனல் பறந்து கொண்டிருந்தது.

“சொல்லுடி அவ உனக்கு என்ன துரோகம் செய்தா” என்றவன் அவள் தோள் பட்டையை பிடித்து உலுக்கி இருந்தான்.

“அவளுக்கு நான் நல்லது தான் செய்ய நினைச்சேன்” என்றிருந்தாள் மேகவி.

“எது நல்லது உன் புருஷன் கூட அவளை சேர்த்து வச்சு ஊரையே பேச வைக்கிறதா” அவன் பார்வை கூர்மை பெற்று அவளில் நிலைத்தது.

“இல்லை, விரும்பின ஒருத்தனுக்காக, உயிரையே விட தயாரா இருந்த ஒருத்தியை அவ விரும்பினவனோடவே சேர்த்து வைக்கிறது”

“ஏய் பைத்தியக்காரி அவ விரும்பினா போதுமா, நான் விரும்ப வேண்டாமா. அப்படி இருந்திருந்தா உன்னை ஏண்டி கட்டம் கட்டி தூக்கிட்டு வந்திருக்க போறேன்” என்றான் இறைந்தபடி.

“அது தான் எனக்கு புரியலை, நீங்க என்னை விரும்பினீங்கன்னா, எதுக்காக என்னை ஏமாத்தி, இந்த கல்யாண நாடகம் எல்லாம்” என்றாள் கண்களை அழுந்த துடைத்தபடி.

அவனும் அவளை காதலிக்கிறான் என்ற சொல்லில் எரிமலையாய் குமுறிகொண்டிருந்த இதயத்தை சட்டென இமய மலையில் வைத்தது போல சில்லென்ற உணர்வு உள்ளிறங்கியது.

“வீரா, எனக்கு தெரிஞ்சாகனும், நீங்க என்னை விரும்பினீங்கன்னா என்னை நேரடியாவே கல்யாணம் செய்திருக்கலாமே, ஏன் ஏமாத்தி கல்யாணம் செய்தீங்க” அவள் விடாமல் கேட்கவும், கையை கட்டிகொண்டு அவளை பார்த்தவன், நான் உன்னை விரும்புறேன்னு உன்கிட்டே சொன்னா நீ என்ன செய்திருப்ப மேகவி” என்றான் தலை சாய்த்து அவளை பார்த்து.

“எங்க அப்பாக்கிட்டே பேசி நல்லபடியா இந்த கல்யாணத்தை நடத்தி இருப்பேன்”

“ம்ம், உங்கப்பா, தன்னோட மச்சான் பையனுக்கு உன்னை முழுமனசோட கட்டிக்கொடுத்திருப்பாரா”

“அது”.., எப்படி முடியும், அவர் சுமரியாதை சரியும் இடத்தில் தன் பெண்ணை கட்டி கொடுக்க சுகுமார் ஒரு போதும் ஒப்பு கொண்டிருக்க மாட்டாரே.

அவள் தயங்கி நிற்க, “அதனாலதான் திட்டம் போட்டு கல்யாணத்தை பண்ணேன்” என்றான் அவன் சிறிதும் குற்றவுணர்ச்சி இல்லாமல்.

“அது தப்பில்லையா, என்னை ஏமாத்தி பத்திரத்திலே கையெழுத்து வாங்கினது எந்த விதத்திலே சரி”

“என்னடி ஏமாத்தினேன், ஏமாத்தினேன்னு சொல்ற அப்படி என்ன உன்னை ஏமாத்தி, பிள்ளையை கொடுத்து விட்டுட்டு இன்னொருத்தி கூட போய்ட்டேனா” என கத்தினான் அவன்.

“இல்லை தான், ஆனா என்னோட விருப்பமில்லாம என்னை கல்யாணம் செய்ததை உங்களால மறுக்க முடியுமா” என்றாள் அவளும் விடாமல்.

“ஆமாடி கல்யாணம் பண்ணேன் தான், ஆனா உன்னோட விருப்பம் இல்லாம இல்லை. உன் கண்ணுல என் மேல இருக்கிற விருப்பம் தெரிஞ்சதால தான். உனக்கு என்னை பிடிக்கும்னு நீ வாய் வார்த்தையா சொல்லலை, ஆனா உன் மனசு அதை ஒவ்வொரு நிமிஷமும் சொல்லிக்கிட்டே இருந்தது. அது என்னோட மனசுக்கு புரிஞ்சது. அதனால தான் எந்த தயக்கமும் இல்லாம கல்யாணம் பண்ணேன். அப்புறம் உனக்கு வேணும்னா உன்னோட காதல் புரிய இவ்வளவு நாள் ஆகி இருக்கலாம். ஆனா, எனக்கு எப்போவோ புரிஞ்சிருச்சி. இல்லைன்னு உன்னால மறுக்க முடியாது அதுக்கு சாட்சி உன்னோட கண்ணுல கொட்டிக்கிட்டு இருக்க இந்த கண்ணீர்” என்றவன் ஒற்றை விரல் கொண்டு அவள் கண்ணீரை துடைத்து காட்டினான்.

அவள் மனதில் இருந்ததை அவன் அப்பட்டமாக கூறியதில், சற்றே முகம் சிவந்தவள் முகத்தை திருப்பி கொள்ள போக, அவள் முகத்தை பற்றி தன்னை நோக்கி திருப்பியவன், “நீ நேர்மையானவன்னு நினைச்சேன் மேகவி, ஆனா இப்படி முதுகுல குத்துவேன்னு நினைக்கவே இல்லை” என்றான் வேதனையுடன்.

“உன்னால எப்படி டி என்னை இன்னொருத்திக்கு விட்டு கொடுக்க முடிஞ்சது, அதை கொஞ்சமாவது உன்னால கற்பனை பண்ணி பார்க்க முடியுதா. என்னால உன்னோட இடத்திலே வேற ஒருத்தியை நினைச்சு கூட பார்க்க முடியலைடி. நீ விலகி இருந்தா கூட உன்னை உரசிக்கிட்டே தானடி இருப்பேன். அப்போ கூட என்னை நீ புரிஞ்சுக்கலையா. உன்னால உன்னையே சரியா புரிஞ்சுக்க முடியலையே, அப்படி புரிஞ்சு இருந்திருந்தா இப்படி என்னை விட்டு விலக நினைக்க மாட்ட. உன் மனசாட்சிக்கு மாறான காரியத்தை செய்ய நினைச்சிருக்க மாட்ட. உன்னோட காதலுக்கு நீயே எதிரியா இருந்திருக்க மாட்ட” என்றான்.

அழுதபடியே அவனை பார்த்து கொண்டிருந்தவளுக்கு அவன் சொல்வதில் உள்ள உண்மை சுட்டது. அவள் அவனை காதலிக்கிறாள் தான், அதனால் தானே இன்னொருத்தியுடன் அவனை சேர்த்து வைக்க நினைத்தவளுக்கு அதை நடைமுறைப்படுத்தும் திடம் இருக்கவில்லை. ஆனால் தந்தைக்காக அவனை இழக்க துணிந்ததிலும் தவறு இல்லை என்று தானே நினைத்தாள். ஏன் பிரெச்சனையின் ஆணி வேர் என்ன என்று அறிந்து அதை சரி செய்ய முயலவில்லை. எல்லாரையும் இணைத்து அவளும் அவனுடனான வாழ்க்கையை சுகித்து வாழலாமே அதை ஏன் அவள் யோசிக்கவில்லை.

காரணம் ஈகோ, தன் தந்தையின் மீது அவள் வைத்திருந்த பாசத்தில் உண்டான ஈகோ, என் தந்தையை அவமதிக்கிறாயா என்ற ஈகோ. அதில் அவள் வாழ்க்கை முடிந்து போக போகிறதை அவள் உணர்ந்துகொள்ளவில்லை. இது எல்லாம் சரியாகாதா, மீண்டும் அவன் அவளிடம் நெருங்கவே மாட்டானா.. அவள் எண்ணிக்கொண்டிருக்கும் போதே, ஏதோ முடிவெடுத்தவனாக வீராவே தொடர்ந்தான்.

“சரி மேகவி என்னோட எண்ணம் தான் நிறைவேறலை, உன்னோட எண்ணமாவது நிறைவேறட்டும்” என்றான் முடிவாக.

அவள் திகைத்து அவனை பார்க்க, “உன்னோட நோக்கம் அது தானே என்னை விட்டு பிரியனும் அவ்வளவு தானே, நானே உனக்கு டிவோர்ஸ் தரேன்” என்றான் பட்டென்று.

அதை கேட்டவள் உள்ளம் உலைக்கலனாய் கொதிக்க துவங்கியது. அய்யோ இதை சொல்லாதே என்று அவள் மனம் கதற துவங்கியது, அவள் தான் இதை விரும்பினாள், செய்ய தகாத செயலை செய்து, அவனை நிரந்தரமாக பிரிய நினைத்தாள். ஆனால் இப்போது அதை அவன் சொல்லும் போது வலிக்கிறது. இதயத்தை கசக்கி பிழிவது போல வலித்தது. இனி எந்த முகத்தை வைத்து கொண்டு, நான் உன்னுடனே இருக்க விரும்புகிறேன் என்று கூறுவாள். ஒரு வேளை அவள் அப்படி கூறினாலு அவன் தான் நம்புவானா. இனி ஒரு போதும் அவன் அவளை நம்ப போவது இல்லை. விரக்தி இழையோடும் முகத்துடன் அவள் நிற்க, அவள் தலையை ஆதூரமாக வருடியவன், “எங்க வீட்டுக்கு போகலாம் மேகவி” என்று விட்டு ஆழ்ந்த பார்வையோடு வெளியேறினான்.

இருவரும் அவன் வீட்டிற்கு வந்திருந்தனர். முன்னரெல்லாம் நம் வீடு என்று, அவள் மனதில் பதிய வைத்திடும் நோக்கோடு அவன் அழுத்தி கூறியதை நினைவு படுத்தி கொண்டாள். ஒரு நொடியில் எல்லாம் தலை கீழாகி விட்டது. இனி நான் உட்பட எதுவும் உனக்கு சொந்தமில்லை என்று சொல்கிறானா. இனி இதையெல்லாம் அவள் ஏற்று தான் ஆக வேண்டுமா.

அதற்கு மேல் அங்கே நிற்காமல் அவளை அழைத்து கொண்டு வீட்டிற்கு வந்தான். வீட்டில் இருந்தவர்களிடம் எந்த மாற்றத்தையும் அவளால் காண முடியவில்லை. முதலில் அவள் அப்படி மாறுபாடு காணுவதற்கு அவர்களுடன் பழகி இருந்தால் தானே. யார் எப்படி பட்டவர்கள் என்று தெரிவதற்கு.

மாடி ஏற போகும்போது, “எக்ஸாம்ஸ் நல்லா எழுதி இருக்கியாம்மா” என்று கேட்டார் விசு. திடுகிட்டவள் என்ன சொல்வது என்று ஒரு நொடி தயங்கி பின் ஆமாம் என்பது போல தலையசைத்தாள்.

“சரிம்மா, போய் ரெஸ்ட் எடுங்க” என்று கூறி விட்டு அவர் போய்விட்டார்.

இதுவரையில் அவரிடம் நின்று கூட அவள் பேசியது இல்லை, நீ யாரோ நான் யாரோ என்பது போலத்தான் இந்த வீட்டில் இருந்தவர்களுடன் அவள் உறவு இருந்திருக்கிறது. சில பொழுதுகளில் அலட்சியம் கூட செய்திருக்கிறாள். இதோ இப்போது கூட யாரும் செய்ய தயங்கும் செயலை தான் அவள் செய்திருக்கிறாள். ஆனால் அதை பற்றிய முகச்சுழிப்பு கொஞ்சமும் கூட இல்லாமல், எப்படி பேச முடிகிறது என்பது தான் புரியவில்லை.

அறைக்குள் வந்ததும் கதவடைத்தவன், அவளை நேராக பார்த்தான், “இங்கே பாரு இந்த விஷயத்தை பத்தி யாரும் நேரடியா உன்கிட்டே எதுவும் பேச மாட்டாங்க, அதனால மத்தவங்க என்ன நினைப்பாங்கன்னு நீ நினைக்க வேண்டாம். இங்கே இருக்கிற வரைக்கும் முன்னாடி மாதிரியே இருக்கலாம்” என்றவன் தனது வேலையை பார்க்க சென்று விட்டான்.

அப்போ எல்லாருக்கும் இது தெரியுமா, அவள் செய்த காரியத்திற்கு யாராக இருந்தாலும் வீட்டிற்குள்ளேயே நுழைய விட மாட்டார்கள். அப்படி எதுவும் இவர்கள் சொல்லவில்லை தான். ஆனால் இனி அவள் எப்படி முன்பு போல அங்கே வலம் வர முடியும். அதுவும் அகல்யா இனி தன்னோடு பேசுவாளா என்று நினைத்தபடியே அமர்ந்து விட்டாள்.

இரவு நேரம் ஆகியதில் அனைவரும் சாப்பிட வருமாறு ராணி வந்து அழைத்து விட்டு போக, இவள் அப்படியே அமர்ந்து இருந்தாள்.

அதை கவனித்தவன் “சாப்பிட வா மேகவி” என்றான்.

“இல்லை நான் இங்கேயே” அவள் கூற வருவதற்குள் இடைபுகுந்தவன், “இங்கே பாரு நான் ஏற்கனவே சொன்னேன், உன்கிட்டே யாரும் இதை பத்தி பேச மாட்டாங்க. அதனால நீ எப்பவும் போல இருக்கலாம். இந்த விஷயத்திலேயாவது என்னை நம்பு” என்றவன் கீழே சென்று விட்டான்.

அவன் இவ்வளவு சொல்லிய பிறகும் கூட உள்ளே இருந்த தயக்கம் குறையவில்லை. ஆனாலும் அவனை தொடர்ந்து கீழே சென்றாள். உணவருந்த அமர்ந்து இருந்தனர். வழமை போல உணவுகள் டேபிள் மீது இருக்க, அவர்களுக்கு வேண்டியதை அவர்களே எடுத்து வைத்து உண்டனர். தாத்தாவிற்கு மட்டும் அறைக்குள் உணவை கொடுத்து வந்திருந்தனர்.

அகல்யா சாப்பிட வந்தவள் இவள் ஒருத்தி அங்கே அமர்ந்திருப்பதே அறியாதவள் போல சாப்பிட்டு விட்டு அவள் அறைக்கு சென்று விட்டாள். இவளுக்கு தான் கண்ணை கரித்து கொண்டு வந்தது. இந்த வீட்டில் வீராவிற்கு பிறகு அவளுடன் சகஜமாக பேசும் ஒரே ஆள் அகல்யா தான். அவள் தன்னை அலட்சியம் செய்து விட்டு போனதில் என்னமோ உள் மனம் அடி வாங்கியது போல உணர்ந்தாள். வாய்க்குள் திணித்த உணவு தொண்டைக்குழிக்குள் சிக்கிக்கொண்டது போல இருந்தது. கஷ்டப்பட்டு விழுங்கி வைத்தவள் அறைக்கு ஓடி சென்று இருந்தாள்.

ஓரக்கண்ணால் மனைவியின் அவஸ்தையை பார்த்து கொண்டிருந்தாலும் அமைதியாகவே இருந்தான் வீரா. சரியாக உண்ணாதவள் கையை கழுவி விட்டு வேகமாக மேலே ஏறி செல்லவும் அவன் பார்வை அவளையே தொடர்ந்தது.

இவர்களை பார்த்து கொண்டிருந்த விசு “பிள்ளைக்கிட்டே நீ ஏதும் பேசினியா தம்பி” என்று கேட்டார்.

இவன் அமைதியாக இருக்க, “விடு தம்பி ஏதோ நம்ம மேலே உள்ள கோபத்திலே இப்படி செஞ்சிருக்கும். நீ எதையும் பெருசு பண்ணி பேசிடாத” என்றார்.

“என்ன பேச வேண்டாம்னு சொல்றீங்க, அவ செய்த காரியம் என்ன லேசானதா, ஒரு பொம்பளை செய்ய துணியற காரியத்தையா செஞ்சிருக்கா. உடம்பு கூசலை அவளுக்கு நீங்க வேற வக்காலத்து வாங்கிட்டு வறீங்க” என எரிந்து விழுந்தார் மீனாட்சி.

“அம்மா இது எங்க ரெண்டு பேரொட விஷயம், உங்களுக்கு தெரியும்றதாலயே மட்டுமே நீங்க அதை பத்தி பேச வேண்டாம்னு நினைக்கிறேன்”

“என்ன சொல்ற வீரா உங்களோட சொந்த விஷயமா, அப்போ ராகவி, அவ நிலைமை என்ன. இவளால அவளோட வாழ்க்கையே கெட்டு போய்ருக்குமே, அதுக்கு என்ன பதில் சொல்ல போறா அவ. ஆனாலும் உன் பொண்டாட்டிக்கு நீ ரொம்ப தான் முட்டு கொடுக்கிற” என்றார்.

வீரா பேச வாயெடுக்கும் முன், “என்ன பண்றது மீனா, அவன் அவனோட அப்பனை போல பொண்டாட்டியை தாங்கிட்டு இருக்கான். இது பரம்பரை ரத்தம் மாத்திக்க முடியாதுல” என்றார் விசு குறும்பாக.

“என்னது உங்களை போலவா, அப்படி என்ன நீங்க எனக்காக எல்லாம் செஞ்சிட்டீங்க சொல்லுங்களேன் பார்க்கலாம்” என்றார் மனைவி.

“அதை எல்லாமே மகன் முன்னாடி சொன்னா, அவன் இன்னும் அதிகம் பொண்டாட்டி தாசன் ஆகிடுவான், அப்புறம் என் புள்ளை என் பேச்சை கேட்கிறது இல்லைன்னு நீ இன்னும் அதிகமா புலம்ப ஆரம்பிச்சிடுவ” என்றார் சீரியசாக.

இவர்கள் பேச்சை கேட்டு வீரா முகத்தில் இளநகை துலங்க, “ஆமா இதுல ஒண்ணும் குறைச்சல் இல்லை, இங்கே பாரு வீரா நடந்ததை மாத்த முடியாதுன்னு நீ முடிவா சொன்னதால, நானும் சொல்றேன் அவளை ஒழுங்கா உன் கூட குடும்பம் நடத்த சொல்லு. இல்லை அப்பா ஆட்டுக்குட்டின்னு பேசிக்கிட்டு இருந்தா அவங்க அப்பாகிட்டேயே அனுப்பி வச்சிடு. அவ்வளவு தான் சொல்லுவேன்” என்றார் கோபமாக.

“ஆமா வீரா உன்னோட அம்மாவும் இதே போல பேசிக்கிட்டு இருந்தா, நானும் உங்க அம்மாவை அவங்க அப்பா வீட்டுக்கு” என்று விசு ஏதோ பேச மீனாட்சி முறைத்த முறைப்பில் பாதியிலேயே அந்த வார்த்தைகளை நிறுத்தி கொண்டார்.

அதை பார்த்து வீரா சிரிப்பை அடக்க முயல, கோபமாக எழுந்து சென்று விட்டார் மீனா.

“அப்பா என்னப்பா” என்று வீரா கேட்க, “உங்கம்மாவை சமாளிக்க எனக்கு தெரியும்டா மகனே. ஆனா உன் பொண்டாட்டியை நீ தான் சமாளிக்க கத்துக்கனும். மேகவி நல்ல பொண்ணு தான், அப்பா பாசம் அவளை தப்பு செய்ய வச்சிருக்கு. கொஞ்சம் பொறுத்து போனா எல்லாம் சரியாகிடும்” என்றார்.

அவனும் ஆமோதிப்பாக தலையசைத்தவன், பிறகு மாடிக்கு சென்று பார்க்க, அங்கே மெத்தையில் குப்புற படுத்து குலுங்கி அழுது கொண்டிருந்தாள் மேகவி.

அழுது கொண்டிருந்த மனைவியை அள்ளி அணைத்து சமாதானம் செய்யத்தான் வீராவின் கைகள் பரபரத்தது. ஆனால் அவளை கொஞ்சம் அவள் போக்கில் விட்டு வைக்கலாமே என்றும் தோன்றியது.
 

Advertisement

Advertisement

Back
Top