என் ஆயுள் ரேகை நீயடி 24

Advertisement

Sagee Elumalai

Member
Member
Chapter 24
ஒற்றை குடையில்
உன் தோள் உரச
நடந்து செல்லும் போதெல்லாம்
வெளியே குளிரும்
உள்ளே அனலும்

ஒன்றாக தாக்குகின்றது.

“என்ன மாமா இப்படியே தான் இருக்க போறாங்களாமா, ஊர் உலகத்துக்கு கல்யாண விஷயத்தை சொல்ல வேண்டாமா, கழுத்துல தாலி இல்லாம எவ்வளவு நாள் தான் இப்படியே இருக்கிறது” என்று கேட்டார் மீனா.

“என்ன பண்றது மீனா எல்லாரும் ஒத்து வர வேண்டாமா”, என்று கேட்டார் வேதாசலம்.

“ஒத்து வரணும்னா யாராவது இறங்கி போய் பேசணும் மாமா, இப்படி எனக்கென்னன்னு எல்லாருமே இருந்தா எப்படி. அவர் தான் இறங்கி வருவாரா, நாம தான் போய் பேசணும், நம்ம பிள்ளைங்க வாழ்க்கையாச்சே” என்றார் மீனா.

“அது சரி தான் வீரா என்ன முடிவு பண்ணிருக்கான்னு கேட்கணுமே”, என்றார் விசு.

“ஏங்க அவனுக்கு நீங்க அப்பாவா, இல்லை உங்களுக்கு அவன் அப்பாவா, என்னதான் அத்தை மகளா இருந்தாலும் தாலி கட்டாம இப்படி வச்சிருக்கிறது நல்லது இல்லை, முறைப்படி தாலி கட்டனும்னு சொல்லுவீங்களா, அதை விட்டுட்டு அவன் என்ன முடிவு பண்ணிருக்கானோன்னு சொல்லிட்டு இருக்கீங்க” என கணவனிடம் பாய்ந்தார்.

அதற்கு மேல் மனைவியிடம் பேச தயங்கிய, விசு யோசிப்பது போல அமைதி காக்க, “விசு மருமக சொல்றது தான் சரி, அவங்க ரெண்டு பேருக்கும் நாம முறைப்படி கல்யாணம் செய்து வைக்கணும்” என்றார் வேதாசலம்.

“அப்பா எனக்கும் நீங்க சொல்றது எல்லாம் புரியாம இல்லை, ஆனா நம்ம அருணாவும் அவ வீட்டுக்காரரும் இல்லாம எப்படிப்பா” என்றார்.

“அதுக்கு தான் போய் அவர்க்கிட்டே பேசுங்கன்னு சொல்றேன், இதுல என்ன உங்களுக்கு கௌரவ குறைச்சல். பிள்ளைங்க வாழ்க்கையை விட நம்ம வெட்டி வீராப்பு தான் பெருசா உங்களுக்கு” என்று கேட்டிருந்தார் மீனா.

“ஏம்மா நான் அப்படி நினைக்கிறவனா, நடந்த பிரெச்சனைக்கு அப்புறம் எத்தனை முறை அவரை தேடி போய் மன்னிப்பு கேட்டிருக்கேன். ஆனா அவர் இறங்கி வர மாதிரியே இல்லையே” என்றார் விசு.

“அப்போ இறங்கி வரலைன்னா என்ன இப்போ வருவார், அதான் அவர் பொண்ணு நம்ம வீட்டுலே இருக்காளே. பொண்டாட்டிக்காக இறங்காத மனுஷன் பொண்ணுக்காக இறங்கி வந்து தானே ஆகணும். நீங்க போய் பேசுங்க, இல்லையா சொல்லுங்க நானும் கூட வரேன். போய் பேசிட்டு வருவோம்” என்றார்.

கணவன் திகைத்து போய் அமர்ந்து இருக்க, “என்ன அப்படியே திகைச்சு போய் பார்த்துட்டு இருக்கீங்க”, என்று கேட்டாள் மீனா.

“என்ன மீனா நீ திடீர்னு இப்படி மாறிட்ட”, என்றார் விசு திகைப்பு நீங்காமலே.

“ஏங்க என்னை பார்த்தா, உங்களுக்கு எப்படி தெரியுது. ராட்சசி மாதிரியா, இல்லை கொடுமைக்காரி மாதிரியா. நடந்த விஷயத்தை நினைச்சு நான் எவ்வளவு நாள் வேதனை பட்டுக்கிட்டு இருக்கேன்னு உங்களுக்கு தெரியாதா. பாவம் அருணா, வாய் பேச தெரியாத பொண்ணு, அவளை அந்த மனுஷன் ஒரு மனுஷியா கூட நடத்தலைன்னு நீங்க கேள்வி பட்டு வந்து சொல்லும்போதெல்லாம் இதுக்கு நாமளும் ஒரு காரணம்னு எவ்வளவு வருத்தப்பட்டு இருக்கேன் தெரியுமா. ஏதோ என்னோட நல்ல நேரம் நீங்க, மாமா அத்தை எல்லாம் நல்லவங்களா இருந்ததால என்னை விட்டு வச்சிருக்கீங்க, இல்லைன்னா நீங்களும் அவரை போலவே நடந்துக்கிட்டு இருந்திருந்தா என்னோட நிலைமை என்ன ஆகி இருக்கும்னு யோசிச்சிருக்கேன். நாம ஒதுங்கி இருந்தா அவர் அவளை நல்லா வச்சிருப்பாருன்னு தான் நானும் நினைச்சேன். ஆனா அப்படி இல்லைன்னு தெரிஞ்சதுல இருந்தே. எப்படியாவது அந்த மனுஷன்கிட்டே மன்னிப்பு கேட்டு அவளை இங்கே கூட்டிட்டு வந்திட மாட்டோமான்னு எனக்கும் தோணும். ஆனா நாம பேச போய் இன்னும் அவளுக்கு வாழ்க்கை கஷ்டமாகிடுச்சுன்னா என்ன செய்யறதுன்னு தான் இருந்திடுவேன். எனக்கும் மனசாட்சி இருக்குங்க” என்றாள் குரல் கமற.

“அப்புறம் ஏன் மீனா, நம்ம வீரா மேகவியை கல்யாணம் செய்துகிட்டு கூட்டிட்டு வந்ததுக்கு அவ்வளவு கோபப்பட்ட”

“இங்கே பாருங்க அருணா மேல பாசம் இருக்கு, என்னால தான் அவ வாழ்க்கை இப்படி ஆகிடுச்சுன்னு குற்றவுணர்வு இருக்கு. அதுக்காக எங்கண்ணன் பொண்ணு ராகவி இருக்க வேண்டிய இடத்திலே உங்க தங்கச்சி பொண்ணை வச்சி பார்க்க நினைக்கலை. அது வேற இது வேற”

“அப்புறம் இப்போ மட்டும் எப்படி அவர்க்கிட்டே போய் பேசி கல்யாணம் பண்ண சொல்ற”

“அதுக்காக என் புள்ளை மனசை நான் நோகடிக்க முடியுமா, அவ அவ்வளவு பெரிய தப்பு செய்தும் கூட அவ தான் என்னோட மனைவின்னு அவன் சொல்றான்னா, அவ மேலே எவ்வளவு பிரியம் வச்சிருக்கனும். முன்னாடி நினைச்சேன், மாமா சொன்னதுக்காகத்தான் அந்த பொண்ணை கல்யாணம் பண்ணி கூட்டிட்டு வந்திருக்கான். அவளும் வேண்டா வெறுப்பா தான் இவன் கூட வந்திருக்கா, அதனால ஏதாவது காரணம் சொல்லி பிரிச்சு வச்சிடலாம்னு நினைச்சேன். ஆனா அவன் மனசுல அவ தான் இருக்கா. அதை மாத்த முடியாதுன்னு தெரிஞ்ச பிறகு, அவன் சந்தோசத்தை நான் எப்படி கெடுப்பேன்” என்று கேட்டார்.

“ம்ம் என்று ஆமோதிப்பாக தலையாட்டினார் விசு, அப்போ மேகவினியை நீ ஏத்துகிட்டியா”

“அதெல்லாம் எனக்கு தெரியாதுங்க, ஆனா ராகவி இங்கே மருமகளா வரலை, எங்கண்ணனுக்கு நான் கொடுத்த வாக்கை காப்பாத்த முடியலைன்னு எனக்கு வருத்தம் இருக்கு. அது சரியாக எவ்வளவு நாள் ஆகும்னு எல்லாம் தெரியாது, அதுவரைக்கும் நான் கொஞ்சம் முறைப்பா தான் இருப்பேன்” என்றார் மீனா இப்போதும் முறைப்பாக.

என்ன இது என்று கணவனும் மாமனாரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொள்ள, “சரி சரி சீக்கிரம் உங்க புள்ளைக்கிட்டே பேசி ஒரு முடிவுக்கு வாங்க. ஊருக்குள்ள கேள்வி கேட்க ஆரம்பிச்சா பதில் சொல்லி முடியாது” என்று விட்டு வெளியே வந்தவர், அங்கே நின்று இருந்த மேகவியை கண்டு லேசாக திகைத்தார். பின்பு எனக்கென்ன என்பது போல அவர் விலகி செல்ல போக, அவரை தாவி அணைத்து கொண்டாள் மேகவினி.

மீனாவுக்கு திக்கென்று ஆனது, ஆனாலும் சமாளித்து கொண்டு முறைப்பாகவே அவளை பார்த்தவர், ஒன்றும் சொல்லாமல் அவள் கையை விலக்கி விட்டு சென்று விட்டார்.

அவள் உள்ளே வரவும், தாத்தாவும் தாய் மாமனும் அவளை திகைத்து பார்த்தனர். முதலில் சுதாரித்த வேதாசலம் “என்னம்மா உங்க அத்தை பேசினதை எல்லாம் கேட்டியா” என்று கேட்டார்.

“ஆமாம் தாத்தா” என்றாள் இவள்.

“அவ்வளவு தான்மா மனுஷங்க, அவங்க அவங்க தரப்பு நியாயம் பெருசுன்னு பேசுவாங்க, ஆனா பாசத்துக்கு முன்னாடி பனியா உருகிடுவாங்க” என்றார்.

முதியவரின் அந்த வார்த்தைகளை ஆமோதிப்பது போல தலையசைத்தவள், “நீங்க போக வேண்டாம் மாமா, அப்பாவை நான் இங்கே வரவைக்கிறேன்” என்றாள் விசுவிடம்.

“இல்லைம்மா, உங்க அப்பா ஏற்கனவே எங்க மேலே கோபமா தான் இருப்பார், நாங்க போய் பேசறது தான் முறை” என்றார் விசு.

“இருக்கலாம் மாமா, உங்க மேலே எல்லாம் எவ்வளவு கோபம் இருந்தாலும் கூட அம்மாவுக்கு அப்பா செய்தது பெரிய மன்னிக்க முடியாத தப்பு. அதை அவர் உணரனும், அவர் பொண்ணுக்கு ஒரு நியாயம், அடுத்தவங்க பொண்ணுக்கு ஒரு நியாயம் கிடையாதுன்னு அவருக்கு தெரியணும். அதுக்கு அவர் தான் இறங்கி வந்தாகனும். ஒரு பொண்ணா அம்மாவுக்கு நான் எதுவும் செய்யலை. குறைஞ்ச பட்சமா, அப்பாவுக்கு அவர் பண்ண தப்பை புரிய வைக்க ஒரு சந்தர்ப்பம் கிடைச்சா நல்லா இருக்கும்னு நினைக்கிறேன்” என்றாள்.

ஒரு நொடி தந்தையும் மகனும் பார்வை பரிமாறிக்கொள்ள, சரிம்மா என்றனர்.

இதையே கணவனிடம் அவள் சொன்ன போது, அவளை இறுக அணைத்து கொண்டான் அவன்.

“இதை தான் மேகவி நானும் உன்கிட்டே எதிர்பார்த்தேன், பாதிக்கப்பட்டவங்க அவங்களுக்காக போராடறதை விட, மத்தவங்க போராடும் போது தான் அதுக்கு இன்னுமே பலம் கூடுதலா இருக்கும்” என்றான்.

ம்ம் என்றவள், நீண்ட நாட்களாக எடுக்கபடாமல் இருந்த தந்தையின் அழைப்பை எடுத்து பேசினாள் அன்று.

“அப்பா”, குரல் தழுதழுக்க அவள் அழைத்ததில், “மேகா என்னம்மா ஆச்சு, எப்படிம்மா இருக்க” என்று பதறினார் சுகுமார்.

“அப்பா, இங்கே இங்கே என்னை ரொம்ப கொடுமை படுத்தறாங்கப்பா”.

“என்னம்மா சொல்ற”, அவரால் பேச முடியவில்லை.

“ஆமாப்பா, எல்லா வேலையும் என்னையே செய்ய சொல்றாங்க. நான் ஒரு வார்த்தை கூட பேச கூடாதாம். அவங்க சொல்றதை தான் செய்யனுமாம். என்னை ஏதோ அடிமை போல நடத்தறாங்கப்பா. நல்ல துணிமணி போடக்கூடாதாம். போட்டா உங்கப்பா வீட்டுலே இருந்த மாதிரியே இருக்க நினைக்காதன்னு சொல்றாங்கப்பா. நான் யார்க்கிட்டேயும் பேச கூடாதாம் பேசினா அவங்களை என்கிட்டே இருந்து பிரிச்சு வச்சிடறாங்க. உங்களை பார்க்கணும்னு சொன்னா, உங்கப்பா நல்லா தானே இருக்காரு எதுக்கு போய் பார்க்கணும்னு சொல்றாங்க” என்றாள் தேம்பலுடன்.

“அம்மாடி, நீ முதல்ல கிளம்பி இங்கே வந்திரும்மா, அவன் உனக்கும் அவனுக்கும் நடந்ததா சொன்ன கல்யாணமே போலிம்மா. அப்படி ஒரு கல்யாணமே எங்கேயும் பதிவாகலை. அவன் கொடுத்த சர்டிபிகேட் எல்லாம் போலிம்மா. ஒரு வக்கீலா இருந்தும் கூட இதை எல்லாம் கவனிக்காம இருந்திருக்கேன், என் மனசு ஒரு நிலையிலேயே இல்லை. அதனால தான்மா, நீ கிளம்பி வந்திருடா” என்றார்.

“அப்பா என்னால இங்கே இருந்து வர முடியாதுப்பா, நீங்க வந்து கூட்டிட்டு போங்கப்பா” என்றாள்.

அவள் சொன்ன அடுத்த நொடி, “அப்பா வரேன்மா, உனக்கு ஒண்ணும் ஆகாது அப்பா உடனே கிளம்பி வரேன்மா” என்று பதறினார் சுகுமார்.

“அம்மாவையும் தம்பியையும் கூட்டிட்டு வாங்கப்பா, அப்பத்தான் அவங்களுக்கும் இவங்க என்னை பண்ற கொடுமை எல்லாம் தெரியும். அவங்களும் இவங்க சுயரூபத்தை நம்புவாங்க” என்றாள்.

“அதுவும் சரிதான்மா, கண்டிப்பா கூட்டிட்டு வரேன். நீ தைரியமா இரும்மா, அப்பா உடனே கிளம்பி வரேன்” என்று வைத்து விட்டார்.

எல்லாவற்றையும் பேசிவிட்டு இருக்கையில் சாய்ந்து அமர்ந்தாள் மேகவி, அவளை பார்த்து வாயில் கை வைத்தான் வீரபத்ரன்.

என்ன என்று அவள் புருவம் உயர்த்தி வினவ, “என்னடி இப்படி நடிக்கிற” என்றான் அவன்.

“அது சும்மா, நடிப்புக்கு” என்றாள் அவள் தோள் குலுக்கி.

“அடியே இப்படி நடிச்சா ஜட்ஜ் கூட நம்பிடுவாரு, எதுக்கும் உன்கிட்டே கொஞ்சம் உஷாரா இருக்கணும். இல்லை என் மேலேயே கேஸ் கொடுத்திருவ” என்றான் அவன் பயந்தவன் போல.

“ச்ச ச்ச, அதெல்லாம் செய்ய மாட்டேன். நீங்க என்னை தாராளமா நம்பலாம்” என்றாள் அவள் சிரிப்புடன்.

“ம்ம் வேற வழி லவ் பண்ணி தொலைச்சுட்டேனே”, என்று அவன் சொல்ல ஏதோ யோசனையில் இருந்தாள் மேகவி.

“என்னடி பலமா யோசிக்கிற”

“இல்லை நம்ம விஷயத்திலே ராகவி ரொம்பவே ஹர்ட் ஆகி இருப்பா, அவக்கிட்டே எப்படி மன்னிப்பு கேட்கிறதுன்னு தான் தெரியலை” என்றாள்.

“ம்ம் கொஞ்சம் ஹர்ட் ஆகி இருந்தது உண்மை தான், ஆனா இப்போ ரொம்பவே சந்தோஷமா இருக்கா” என்றான் வீரா.

“சந்தோஷமா இருக்காளா எப்படி” என்றாள் இவள் ஆச்சரியமாக.

“ம்ம் நம்மளை உண்மையா நேசிக்கிறவங்க கிடைச்சா நாம சந்தோஷமா தானே இருப்போம்” என்றான்.

“ஆமா, ஆனா ராகவி உங்களை தானே நேசிச்சா”

“அது நேசம் எல்லாம் இல்லை மேகவி, சின்ன வயசுல இருந்தே அவங்க அம்மாவும் எங்க அம்மாவும் என்னை தான் கட்டிக்க போறான்னு சொல்லி சொல்லி வளர்த்ததால வந்த ஒரு ஈர்ப்பு. உண்மையிலே அவளுக்கு என் மேலே காதல் எல்லாம் இல்லை” என்றான்.

“என்ன இப்படி சொல்றீங்க, காதல் இல்லாம தான் உங்களுக்காக சாக முடிவெடுத்தாளா”

“ஏண்டி, நம்மளை நேசிக்கிறவங்க கிடைக்கலைன்னா கூட தற்கொலை முடிவு தவறானது தான், அப்படி இருக்கும்போது நான் அவளை காதலிக்கலைன்னு தெரிஞ்சும் அவ அந்த முடிவு எடுத்தா அது தப்பு தானே”

“அது தப்பு தான் ஆனா அவ உங்களை காதலிச்சாதானே”

“அதான் சொன்னேனே, அப்படி எல்லாம் ஏதும் இல்லை. அவளுக்கு இருந்தது ஈர்ப்பு மட்டும் தான், அப்படியே விட்டிருந்தா அவளே கொஞ்சம் நாள்ல அதை உணர்ந்திருப்பா. ஆனா கனகா அத்தை தான் ஏதேதோ பேசி அவளை அந்த முடிவுக்கு கொண்டு வந்திருக்காங்க. அது தவறான முடிவுன்னு அவளே கொஞ்சம் உணர ஆரம்பிச்ச நேரம் தான். நீ போய் அவக்கிட்டே உன்னோட பிளானை சொல்லிருக்க. அத்தை அதை ஏத்துக்க சொன்னாலும் அவளால அதை ஏத்துக்க முடியலை. அதனால தான் அவளே வந்து என்கிட்டே அதை சொல்லிட்டா” என்றான்.

“என்ன ராகவியே உங்ககிட்டே சொன்னாளா”

“ஆமா” என்று அவன் சொன்னபோது இவளுக்கு குற்றவுணர்வாக இருந்தது. ஒரு கணவனாக தன்னிடமே தன் மனைவியின் குறையை ஒருவர் சுட்டி காட்டும்போது அவன் எவ்வளவு வேதனை பட்டிருப்பான் என்று நினைத்து கொண்டாள்.

“இப்போ ராகவிக்கு சரியான ஜோடி கிடைச்சாச்சு” என்று அவன் சொன்னபோது, அவள் எண்ணங்களில் இருந்து வெளியே வந்தவள், ஆச்சரியமாக “அப்படியா யாரு” என்றாள் அவரமாக.

“என்னோட ஜூனியர் அஜய், நம்ம ஃபர்ம் ல தான் வொர்க் பண்றான். கிட்டதட்ட நமக்கு சொந்தம் தான். அவனுக்கு ராகவியை பிடிச்சிருந்து இருக்கு. எனக்கு அவளை பேசி இருக்கிறதா நினைச்சு தன்னோட ஆசையை வெளியே சொல்லாம இருந்தான். ஆனா அவ மருந்து குடிச்சு ஹாஸ்பிடல்ல இருந்தப்ப பையன் ரொம்பவே சோகமா திரிஞ்சுகிட்டு இருந்தான். என்னடா பிரெச்சனைன்னு கூப்பிட்டு வச்சு மிரட்டினேன். அவனுக்கு என் மேலே கொஞ்சம் பயம் அதிகம், மிரட்டினதும் சொல்லிட்டான்”

அவனுக்கு தைரியம் சொல்லி ராகவிகிட்டே பேசுன்னு சொன்னேன், அவனும் பேசறதா முடிவு பண்ணி இருந்தப்ப தான். நீ உன்னோட ஐடியாவை அவக்கிட்டே சொல்லிருக்க. அவளுக்கு இதுல முழுசா உடன்பாடு இல்லை, ஆனா கனகா அத்தை தான் ஏதேதோ பேசி ஒத்துக்க வச்சிருக்காங்க. ராகவி தயங்கிட்டு இருந்தப்ப தான் அஜய் அவளை சந்திச்சு காதலிக்கிறதா சொல்லிறுக்கான். அவ நேரா என்னை தேடி வந்தா”

“உங்களை தேடி வந்து..”

அன்று ராகவி அவனிடம் பேசியதை கூறினான் வீரா, மனைவி ஊருக்கு போனதில் இருந்து தனியாக விடப்பட்ட அன்றில் போல இருந்தவனை பற்றி அங்கலாய்த்து கொண்டிருந்தார் மீனா.

“என்னவோ பத்து பதினைஞ்சு வருஷம் குடும்பம் நடத்தின பொண்டாட்டி பிரிஞ்சு போய்ட்ட மாதிரி இவன் சோகமாகவே சுத்திகிட்டு இருக்கான்” என்று கனகாவிடம் கூறினார். அதை கேட்ட கனகா, இது தான் சந்தர்ப்பம் என்று ராகவிக்கு கண்ணை காட்டி வீராவை சென்று பார்க்க சொன்னார்.

அப்படி ராகவி மேலே செல்ல போக அதை பார்த்து கொண்டிருந்த அகல்யாவும் அவளை பின் தொடர்ந்து சென்றாள்.

தன்னறைக்குள் திடீரென வந்த ராகவியை கண்ட வீரா, “எப்படி இருக்க ராகவி” என்று நலம் விசாரித்தான்.

“நான் நல்லா இருக்கேன் மாமா, உங்ககிட்டே கொஞ்சம் பேசணும்” என்றாள்.

“சொல்லும்மா என்ன விஷயம்”

“நீங்க மேகவினியை பார்க்காம இருந்திருந்தா, தாத்தா அவங்களை கல்யாணம் பண்ணிக்க சொல்லாம இருந்திருந்தா என்னை கல்யாணம் பண்ணி இருப்பீங்க தானே” என்று கேட்டாள்.

ஒரு நொடி அவளை கூர்ந்த வீரா மெல்லிய சிரிப்புடன், “ஆமா ராகவி கல்யாணம் செஞ்சி இருப்பேன்”, என்றான் அதை கேட்டதும் அவள் முகம் பிரகாசமானது.

அவனே தொடர்ந்தவன், “ஆனா அவளை காதலிக்கிற அளவுக்கு உன்னை காதலிச்சு இருப்பேனா தெரியாது” என்றான் உண்மையாக.

“ஏன் மாமா, அப்போ உங்களுக்கு என்னை பிடிக்காதா”

“பிடிக்கும்மா, நீ சின்ன வயசுல இருந்தே என்னோட கண்ணு முன்னாடி வளர்ந்தவ. அந்த பாசம் இருக்கு. கல்யாணத்துக்கு பிறகு அது காதலா மாறி இருக்கலாம், மாறாமலே போய்ருக்கவும் வாய்ப்பிருக்கு. ஆனா இப்போ என்னோட காதல் அவ மட்டும் தான்” என்றான் உறுதியாக.

கொஞ்சம் அவள் கண்கள் கலங்கியது போல இருந்தது, “எனக்கும் என்னை மட்டுமே நேசிக்கிற ஒருத்தரோட தான் மாமா வாழனும். யாரையும் கட்டாயப்படுத்தி, இல்லை இன்னொருத்தவங்க விட்டு கொடுக்கிற வாழ்க்கை வாழ எனக்கு விருப்பமில்லை. உங்க ஜூனியர் அஜய் என்னை லவ் பண்றதா சொன்னார்” என்று அவள் சொல்லவுமே “எனக்கு தெரியும் ராகவி அஜய் என்கிட்டே சொன்னான், அவன் கண்ணுல உண்மையான காதலை பார்த்தேன்” என்றான் வீரா.

“நான் அவரையே கல்யாணம் பண்ணிக்கிறேன் மாமா, நீங்க அம்மா கிட்டே பேசுங்க” என்றாள்.

வீராவுக்கு மிகவுமே மகிழ்வாக இருந்தது, எங்கே அந்த பெண்ணின் மனதை மிகவும் நோகடித்து விட்டோமே என்று தவித்து கொண்டிருந்தவனுக்கு அவளது மனமாற்றம் நிறைவை தந்தது.

“நிச்சயமா பேசறேன் ராகவி, அஜய் நல்லவன் அமைதியானவன் உனக்கு நல்ல துணையா இருப்பான். நம்ம வீட்டு ஆளுங்ககிட்டே எல்லாம் பேசி நல்லபடியா முடிக்க வேண்டியது என்னோட பொறுப்பு” என்றான்.

“சரி மாமா” என்று திரும்பியவள், “அப்புறம்” என்று தயங்கினாள்.

“என்ன ராகவி சொல்லு” என்றான் இவன்.

“மாமா, ஒருத்தர் மனசுல இருக்கிறதை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் சம்மந்தபட்டவங்கக்கிட்டே சொல்றது நல்லதுன்னு நினைக்கிறேன். ஏன்னா அஜய் காதலை நான் புரிஞ்சுகிட்ட மாதிரி, உங்க காதலையும் உங்க மனைவி புரிஞ்சுகிட்டா நல்லா இருக்கும். அவங்க தவறான முடிவு எடுக்கிறதுக்குள்ள அவங்களுக்கு உங்க காதலை புரிய வச்சிடுங்க” என்றாள்.

வீரா அவளை புரியாமல் பார்க்க, மேகவி தன்னிடம் சொன்னதை கூறினாள்.

இவனுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை, என்ன பைத்தியக்காரத்தனம் செஞ்சு வச்சிருக்கா இவ என்று தான் தோன்றியது.

சரிம்மா என்று ராகவியை அனுப்பி வைத்தான். ஆனால் வெளியே நின்று அகல்யாவும் மீனா, கனகா என்று இந்த விஷயத்தை கேட்டு கொண்டிருந்தனர் என்று அறிந்திருக்கவில்லை.

ராகவியும் இதை சொல்லவேண்டும் என்றெல்லாம் சொல்லவில்லை, அவள் மாமன் கொண்ட நேசம் வீணாய் போய் விட கூடாது என்ற எண்ணத்தில் தான் கூறினாள்.

மகளை மேலே அனுப்பி விட்டு, உள்ளே நடப்பதை காட்டவே நாத்தனாரையும் அழைத்து வந்த கனகாவிற்கு ராகவியின் முடிவு ஏமாற்றத்தை தந்தாலும், மீனாவுக்கு இந்த விஷயம் தெரிந்து போனதில் சந்தோஷமே. ஏனென்றால் இதற்கு மேல் எப்படி மேகவியை இங்கே வாழ விடுவாள் மீனா என்ற எண்ணம் கொஞ்சம் நிறைவை தந்திருந்தது.

வீராவிற்கு மேகவி மேல் சொல்ல முடியாத கோபம் வந்தது. எப்படி இது போல அவள் செய்ய நினைக்கலாம். ஒரு பெண்ணாக இன்னும் அவள் கணவனை இன்னொருத்திக்கு விட்டு கொடுக்க எப்படி அவளுக்கு மனம் வந்தது என்ற புள்ளியிலேயே உழன்று கொண்டிருந்தான். அந்த அளவுக்கா அவள் என்னை வெறுக்கிறாள், அப்போது அவள் கண்ணில் கண்ட நேசம் வெறும் ஈர்ப்பு மட்டும் தானா. இல்லை அன்று இரவு இருவரும் வெளியே சென்று விட்டு திரும்பி வந்த போது அவள் கண்ணில் காதலை கண்டானே, அவன் லேசாக தொட்டதற்கே கிறங்கி நின்றாளே. காதல் இல்லாமல் ஒரு பெண் அதுவும் திடமான மனதுடைய ஒரு பெண் அப்படி இன்னொருவனிடம் மயங்குவாளா. அதுவும் மேகவி அப்படி பட்டவள் இல்லையே. அவன் விசாரித்தவரையில் கல்லூரியில் கூட அவளிடம் காதலை சொன்னவர்களுக்கெல்லாம் தனக்கு அந்த மாதிரி எண்ணம் வரவில்லை என்று தெளிவாக கூறி இருந்தாளே. அந்த தெளிவு அவன் மீது கொண்ட நேசத்தை அவளுக்கு உரைக்கவில்லையா. நிச்சயமாக அவள் மனதில் தான் இருக்கிறேன் என்று உறுதி செய்துகொண்ட பின்பு தானே அவன் இந்த திருமண நாடகத்தையே துணிந்து நடத்தினான்.

அவன் சொல்லாமல் வீட்டை விட்டு வந்திருந்த போதும் கூட, அவனுக்காக அவள் ஏங்கி தவித்தது அத்தை மூலமும், சஞ்சய் மூலமும் அறிந்து கொண்டானே. அவளுக்கு அது புரியவில்லையா. இல்லை புரிந்திருக்கும், ஆனால் அவளின் தந்தை பாசம் அதை தடுத்திருக்கிறது. அவர் மீது கொண்ட பாசத்தை காட்ட இப்படி ஒரு முட்டாள் தனமான முடிவை எடுத்திருக்கிறாள்.

அவளின் முடிவிற்கு அவளை விட்டு கொடுக்கவா இத்தனை தூரம் திட்டம் தீட்டி காரியம் சாதித்தேன் என்று பொங்கிய கோபத்தில் தான். Ai ல் அந்த படத்தை உருவாக்கி அனுப்பி இருந்தான். அதன் பிறகு நாடகத்தில் நடிக்கும் ஒரு பெண்ணை ஏற்பாடு செய்து அவளின் எதிரேயே சில நிகழ்வுகளை நிகழ்த்தி அவளின் மனதை அவளுக்கு உரைக்கும்படி செய்து இருந்தான்.

அவன் மனதின் எண்ணங்களை கேட்டு மேகவி குற்றவுணர்வுடன், கண்ணீரை கட்டுபடுத்தியபடி அமர்ந்திருக்க, “ஏய் பொண்டாட்டி ஒரே விஷயத்துக்கு எத்தனை முறை தான் வருத்தப்படுவ” என்றான் ஆறுதலாக அவள் தோள் வருடி. அவர்கள் இருவருக்கும் இன்னும் திருமணம் நடக்கவில்லை என்பதையே இருவரும் மறந்து இருந்தனர்.

“உங்களுக்கு கஷ்டமா இருந்திருக்கும்ல” என்றாள் அழுகையை அடக்க முயன்றபடி.

“கஷ்டம், கோபம் அது ஒரு பக்கமிருந்தாலும், நீ என்னை என்னோட காதலை புரிஞ்சுக்கலைன்னா கூட பரவாயில்லை, உன்னோட காதலையே புரிஞ்சுக்கலையேன்னு ஆதங்கம் தான் அதிகமா இருந்தது. அதான் இப்போ எல்லாம் சரியாகிடுச்சே” என்று அவள் மூக்கோடு மூக்கு உரசினான்.

“சாரி” என்றாள் அவன் கழுத்தை கட்டிகொண்டு. அவனும் அவள் கழுத்தில் தன் கையை மாலையாக கோர்த்தவன், “உன் சாரியை வேற மாதிரி சொல்லு அக்சப்ட் பண்ணிக்கிறேன்” என்றான்.

அவளும் சரி என தலையசைத்தாள், “அது அப்புறம் இப்போ ஒரு சின்ன சாம்பிள் எனக்கு வேணும்” என்று அவள் இதழோடு இதழ் சேர்த்து வெளி வர துடித்த அவள் அழுகையாய் அவன் விழுங்கி கொண்டான்.
 

Advertisement

Advertisement

Back
Top