என் ஆயுள் ரேகை நீயடி 4

Advertisement

Sagee Elumalai

Member
Member
Chapter 4
சிறு தேடல் கூட இல்லையென்றால்
புதையலின் அருமை தெரியாது,
சிறு ஊடல் கூட இல்லையென்றால்
காதலில் சுவாரஸ்யம் கிடையாது...
உன்னோடு கூடல் நிகழ்த்த
இந்த ஊடல் தான் ஆஸ்திவாரமாகிறது..

ஆப்பரில் துணி கடைக்கு வந்து குவியும் கூட்டம் போல மொத்த கூட்டமும் வீரா மீது வந்து விழுந்தது. இவள் திகைத்து போய் பார்க்க, அவளை பார்த்து லேசாக கண்ணை சிமிட்டியவன் எல்லாரையும் ஒருவாராக சமாளித்து முடித்தான்.
“டே கொஞ்சம் மெச்சுர்டா நடந்துகோங்கடா, இப்படியா சின்ன புள்ளைங்க மாதிரி மேலே வந்து விழுவீங்க” அவன் சிறு அதட்டல் போட அதை எல்லாம் யாரும் கண்டுகொள்ளவில்லை, “யாருடா மேடம்” என்று ஒருவன் கேட்க, “இவங்க மேகவினி என்னோட அத்தை பொண்ணு, லா படிச்சுட்டு இருக்கா” என்றான்.
ஒவ்வொருவரையும் தனி தனியாக அறிமுகம் செய்து வைத்தான், இந்த சிடு மூஞ்சிக்கு இத்தனை பெரிய நண்பர்கள் கூட்டமா என்று வியப்பாகத்தான் இருந்தது.
சிடு மூஞ்சின்னு நீயே எப்படி முடிவு பண்ணுவ, வந்த முதல் நாளே சஞ்சய் கூட இவன்கிட்டே எப்படி ஒட்டிக்கிட்டான் அப்புறம் என்ன.. ஆமா சஞ்சய்கிட்டே நல்லா தான் பேசறான் ஆனா என்னை பார்த்தா மட்டும் ஏனோ குத்தம் சொல்லிக்கிட்டே இருக்கான்.
அவள் நினைத்து கொண்டிருக்கும் போதே எல்லாரையும் அனுப்பி வைத்து விட்டே அவளை அழைத்து கொண்டு ஓரிடம் பார்த்து அமர்ந்தான் வீரா.
“என்ன இந்த வானரங்களை பார்த்து பயந்துட்டியா”
“அப்படி எல்லாம் இல்லை, ஆனா உங்களுக்கு இவ்வளவு ஃபிரண்ட்ஸ் இருப்பாங்கன்னு நினைக்கலை”
“ஏன்” அவள் புறம் பார்க்காமல் எதிரே மேடை மீது இருந்து கையசைத்த மணமகனை பார்த்து இவனும் கையசைத்த படி கேட்டான்.
“ஏன்னா நீங்க கொஞ்சம் கறார் பேர்வழி மாதிரி தெரிஞ்சீங்க”
“ம்ம் சரியா தான் கெஸ் பண்ணிருக்க, நான் கொஞ்சம் ஸ்ட்ரைட் ஃபார்வார்டு தான். ஆனா அதுக்கும் ஃபிரண்ட்ஸ் இருக்கிறதுக்கும் சம்மந்தம் இல்லை. நாம சரியா இருக்கிறதால நம்மளை சுத்தி ஆளுங்க இருக்க மாட்டாங்கன்னு அர்த்தம் இல்லையே. இது என்னோட குணம் அவ்வளவு தான். எனக்கு மனசுல பட்டதை நான் சொல்லிடுவேன். என்னை புரிஞ்சிக்கிட்டவங்களுக்கு அது தப்பா தெரியாது”
அவன் சொல்லிக்கொண்டே போக அவள் கவனமாக அவனைத்தான் ஆராய்ந்து கொண்டிருந்தாள். நடை உடை மேனரிசம் எல்லாமே அவனை ஒரு ஹீரோ மெடீரியலாகவே காட்டியது. ஆனால் அந்த கர்வம் மட்டும் கொஞ்சம் தூக்கலாக இருப்பது போல தெரிந்தது.
“என்ன பதிலே காணோம்”
அவள் வாய் திறக்கும் முன் மீண்டும் அவன் நண்பர்கள் பட்டாளம் வந்து நின்றது, எல்லாருமாக சென்று விருந்து உண்டனர். திருமண தம்பதிகளை அவளுக்கு அறிமுகம் செய்து வைத்தான். எல்லாரும் குழுவாக நின்று புகைப்படம் எடுத்து கொள்ள, சற்றே நகர்ந்து நின்றவளை இயல்பு போல கரம் பற்றி தன்னருகில் நிறுத்தி கொண்டான்.
மேடையை விட்டு இறங்கும் சமயம், ஒரே ஒரு நிமிஷம் என அவளை நிறுத்தினார்கள் நண்பர்கள், என்னடா என வீரா கேட்க, “இதுல ஒரு ஸைன் பண்ணிட்டு போங்க சிஸ்டர்” என்றான் ஒருவன்.
“ஸைன்.. ஆ.. எதுக்கு” இவள் புரியாமல் பார்க்க,
“எங்க ஃபிரண்ட்ஸ் வட்டத்துக்குள்ள ஒரு பழக்கம் உண்டு யாருக்கு கல்யாணம் ஆனாலும் அவங்க வாழ்க்கை துணைக்கிட்டே, ஒரு ஒப்புதல் கையெழுத்து வாங்கி வச்சிப்போம்”
“கல்யாணம் ஆனாலும் எங்க ஃப்ரெண்ட்டை எங்ககிட்டே இருந்து பிரிக்க கூடாது, எப்பவும் போல எங்க நட்பு தொடர வழி விடனும்னு. அதுக்கு சாட்சி கையெழுத்து நீங்க போடுங்க. நீங்க லாயர் வேற அதான்” என்றான் இன்னொருவன்.
இவள் வீராவை பார்க்க, போடு என்று தலையசைத்தான். அவன் சொன்னதும் இவளும் கையெழுத்து போட்டு கொடுக்க, இவனிடம் நீட்டி “நீயும் போடு மச்சி” என்றார்கள்.
அவனும் போட்டு கொடுக்க அதை புகைபடம் எடுத்து கொண்டு ஹோ வென்று கத்தி கொண்டே அவர்கள் நகர, இவர்களும் சிரித்தபடி வண்டியை நோக்கி நடந்தனர்.
ஹோட்டல் புல்வெளியில் நடந்து வந்து கொண்டிருக்க, “இப்படி எல்லாமா கையெழுத்து வாங்குவீங்க” என்று கேட்டாள் அவள் புன்னகையுடன்.
“ஆமா வேற என்ன செய்யறது, கல்யாணம்னு ஒண்ணு ஆனதுக்கு அப்புறம் ஃபிரண்ட்ஸ் பார்க்கக் போக கூடாது, பங்க்ஷன்ஸ் போக கூடாதுன்னு மனைவிகள் கண்டிஷன் போடறாங்க. அதனால இதெல்லாம் செய்ய வேண்டி இருக்கு”.
“இதே ரூல்ஸ் பொண்ணுங்களுக்கும் உண்டா”
“நிச்சயமா உண்டு, ஆனா நாங்க கேட்கிறது போல அவங்களும் கேட்கனும். கேட்காமலே எல்லாம் கிடைக்கும்னு நினைச்சுட்டு. அப்புறம் அது கிடைக்கலை இது கிடைக்கலைன்னு அழுது புலம்ப கூடாது. ஃபைட் போர் யுவர் விஷ். ஒரு விஷயம் வேணும்னா அதுக்காக போராடனும். சுலபமா கிடைச்சுட்டா அதுக்கு மதிப்பு இருக்காது”
“ம்ம் நைஸ்” என்றாள் அவள்.
லேசாக சிரித்தவன், “எல்லாமே அடுத்தவங்க குடுக்கணும்னு நாம ஏன் நினைக்கனும், முதல்ல நமக்கு வேண்டியதை நாம கேட்டு வாங்கனும், கிடைக்காதப்ப கிடைக்கிற வரைக்கும் போராடனும்”.
அதற்குள் வண்டி இருக்கும் இடம் நெருங்கி இருக்க, “நீ இரு நான் கார் எடுத்துட்டு வந்திடறேன்” என்று சென்றவன் சில நிமிடங்கள் கழித்து காரோடு வந்தான், இருவரின் பயணமும் துவங்கியது.
வீடு வந்து சேர்வதற்குள் ஒரு சுமூகமான நிலை உருவாகி இருந்தது இருவருக்குள்ளும், அதை அவளால் நன்றாக உணர முடிந்தது. சரி அம்மாவின் குடும்பத்தை பற்றி கேட்கலாம் என்றால் ஏதோ சங்கடம் அவளை தடுத்தது.
முன்பு போல ஏதாவது இடக்காக பேசி இருக்கும் சூழ்நிலையை கெடுத்து விடுவானோ என்று தோன்ற மேலோட்டமாக பேசிக்கொண்டே வீடு வந்து சேர்ந்தனர்.
ஒரு சிறிய தலையசைப்புடன் அவள் அறைக்கு செல்ல போக, மேகவி என்று அவளை அழைத்து நிறுத்தினான்.
அவள் தந்தை அவளை மேகா என்று அழைப்பார், மற்றவர்கள் அவள் பெயரை சுருக்கி அழைத்தால் அவளுக்கு பிடிக்காது. அம்மா கவி என்று அழைப்பாள்.
இப்போது இவன் மேகவி என்று அழைக்கவும் அப்படியே நின்றவள் திரும்பி பார்த்தாள். அவள் அருகே நெருங்கி வந்தவன், நெற்றியில் புரண்டு கொண்டிருந்த முடி கற்றையை ஒற்றை விரலால் ஒதுக்கி விட்டான். அவள் விழி விரித்து பார்க்க. “தாங்க்ஸ் போர் தி கம்பெனி” என்றான்.
அவன் நெருங்கி நின்ற விதமும் நெற்றி முடியை ஒதுக்கி விட்டதும் ஏதோ உள்ளுக்குள்ளே குறுகுறுப்பை உண்டாக்கி இருந்தது. வேறு ஏதோ சொல்ல போகிறான் என்று நினைத்திருக்க அவன் தாங்க்ஸ் சொல்லவும் “யு ஆர் வெல்கம்” என்றவள் அறைக்கு செல்ல சென்றாள்.
வாயில் கதவை தாண்டும் நேரம் “இந்த சாரி உனக்கு ரொம்ப அழகா இருக்கு. இனிமேல் ஸாரியே பிரெபர் (prefer) பண்ணு” என்றான்.
அவன் சொன்னதில் மத்தாப்பாய் மனம் மலர, சரி என தலையசைத்தவள் உற்சாகமாய் ஒரு குட் நைட்டுடன் அறைக்கு வந்து விட்டாள். அவள் சென்ற பிறகு ஒரு நீண்ட பெருமூச்சை வெளியிட்டவன் தன்னறைக்கு சென்றான்.
முந்தைய நாள் இரவில் புது அறையில் புது மெத்தையில் படுத்தது போல உறக்கம் வருவேனா என்று அழிச்சாட்டியம் செய்தது.
இதுவரையில் பாராட்டை கண்டிராதவள் அல்லவே, காலேஜ் ஃபங்சன்களுக்கு புடவை கட்டும்போது எல்லாம் தோழிகள் சில தோழர்களிடம் இருந்து வந்து குவியும் பாராட்டை சாதாரணமாக கடந்து வந்தவளுக்கு அவன் கூறியது மட்டும் ஏன் இத்தனை முக்கியமானதாக தோன்றுகிறது.
ஒருவேளை பார்த்த நிமிடத்தில் இருந்து மோதிகொண்டிருந்த ஒருவனிடம் இருந்து வந்த மெச்சுதலை மனம் ரசிக்கிறதா. இது என்னடி டீன் ஏஜ் பொண்ணு மாதிரி வெட்கம் எல்லாம் வந்து தொலைக்குது. உத்தரத்தில் ஓடிகொண்டிருந்த மின் விசிறியை பார்த்தபடி சிரித்து கொண்டாள்.
காற்றின் வேகத்தில் முன் நெற்றியில் புரண்ட கூந்தலை ஒதுக்க எழுந்த கரங்கள் அப்படியே அந்தரத்தில் நின்றன. எத்தனை நாசூக்காய் விரல் தீண்டாமல் ஒதுக்கி விட்டான்.
விசேஷ வீட்டில் சாப்பிடும்போது கூட, அவளை நெருங்கியும் இல்லாமல், விலகியும் இல்லாமல் அமர்ந்து சாப்பிட்ட விதம், அவளுக்கு ஏதும் தேவையா என கேட்டு வாங்கி கொடுத்த விதம். நிச்சயம் அவன் ஒரு ஜென்டில்மேன் தான் என்று தோன்றியது.
அவன் நேரடியான குணத்தினால், முகத்தில் அடிப்பது போன்று பேசி இருக்கிறான் அவ்வளவு தான் என்று அவனுக்கு சாதகமாகவே மனம் யோசித்து கொண்டிருந்தது.
என்ன படித்திருப்பான், என்ன வேலை செய்வான், எந்த ஊர் எதுவுமே தெரியாத போதும் அவனை தவறானவனாக என்ன தோன்றவில்லை.
கொஞ்சம் அவனை பற்றியும் கேட்டு இருக்கலாம். எங்கே அவள் பேச்சை துவங்கும் முன் அவன் தான் பொதுவான விஷயங்களை பற்றி பேச்சு கொடுத்து அவளை திசை திருப்பி இருந்தானே. என்னவோ பல வருடங்கள் பழகியது போல அவனுடன் இயல்பாக பேச முடிந்தது அவளுக்கே ஆச்சர்யம் தான்.
அவனை பற்றிய நினைவுகளுடனே உறங்கி இருந்தவள் காலையில் வீட்டில் கேட்ட சலசலப்பிலேயே உறக்கம் கலைந்து எழுந்தாள்.
அவசர அவசரமாக முகத்தை கழுவி துடைத்து கொண்டே வெளியே வந்து பார்க்க, கூடத்தில் நின்று இருந்தார் சுகுமாரன். வழக்கம் போல அவர் ஏதோ சொல்ல அம்மா அமைதியாக தலை குனிந்தபடி கேட்டுக்கொண்டிருந்தார்.
இவளை கண்டதும் “மேகா குட்டி” என்று அவர் கை விரித்து அழைக்க, அப்பாவை பார்த்த அதிர்ச்சியிலும் சந்தோசத்திலும் ஓடி வந்து அவரை அணைத்து கொண்டாள் மகள்.
“எப்படிடா இருக்க” தோள் மீது சாய்ந்திருந்த மகளின் தலைமுடியை வருடியபடியே கேட்டார்.
“நல்லா இருக்கேன் பா, நீங்க ஏன் ஒரு போன் கூட பண்ணலை. ஐ மிஸ்டு யூ சோ மச்” என்றாள்.
“நானும் தாண்டா, என்ன பன்றது போன இடத்திலே வேலை முடியலை. முடிஞ்சதும் ஓடி வந்துட்டேன். ஆமா இத்தனை நாளும் அம்மா ஒழுங்கா சமைச்சு கொடுத்தாளா இல்லை மிச்சம் மீதியை வச்சு போட்டாளா” மனைவியை பார்த்தபடியே கேட்டார் சுகுமாரன்.
“இல்லைப்பா, நல்லா வெரைட்டியா செஞ்சு கொடுத்தாங்க. அப்புறம்” அவள் சொல்ல வரும் முன், இடையிட்டு “கவி போய் குளிச்சுட்டு வா காலேஜ்க்கு நேரம் ஆகுது” என்றாள் அருணா.
“என்ன புதுசா அதிகாரம் எல்லாம் பண்ற, எதை எப்போ செய்யணும்னு என் பொண்ணுக்கு தெரியும். நீ போய் உன் வேலையை பாரு” என்றார் மனைவியிடம்.
“அம்மாடி நீ போய் குளிம்மா நாம அப்புறம் பேசலாம்” என்றார் மகளிடம்.
“சரிப்பா” என்று சென்று விட்டாள். அறைக்குள் வந்தவளுக்கு,
‘அம்மா ஒன்றும் அவளை அதட்டி பேசவில்லை, தன்மையாகத்தான் சொன்னார். அதற்கு ஏன் அப்பா இத்தனை கோவத்தை காட்டுகிறார்’ என்று முதல் முறையாக யோசித்தாள் மகள்.
அப்பாவும் அம்மாவும் எப்போதும் சிரித்து பேசிக்கொண்டே இல்லை, அவர் ஏதாவது சொல்வார் அம்மா கேட்டுக்கொள்வாள். கொஞ்சம் அதிகமாக போனால் சரி என்ற பதில் மட்டுமே அம்மாவிடம் இருந்து வரும். இதை இத்தனை நாள் அவள் கண்டுகொண்டதே இல்லை. இதை தான் கவனிக்கவில்லை என்று அந்த வீரா கூறினானோ.
வீராவின் நினைப்பு வந்ததும் குளிக்க சென்றவள் வேகமாக ஓடி வந்து ஷாட்டில் கோர்ட்டை ஜன்னல் வழியாக பார்த்தாள். வழக்கமாக இந்த நேரத்திற்கு தானே சஞ்சய்யும் வீராவும் விளையாடிக்கொண்டு இருப்பார்கள். இன்று அந்த இடம் வெறிச்சோடி கிடந்தது. ஒரு வேலை என்னை போலவே அவனும் நேரம் கழித்து உறங்கி இருப்பானோ. இன்னும் எழுந்து வரவில்லையோ சரி முதலில் குத்து விட்டு சென்று பார்க்கலாம் என்று வேக வேகமாக குளிக்க சென்றாள்.
அவசரகதியில் குளித்து, உடை மாற்றி தலையை வாரிக்கொண்டு மீண்டும் வெளியே வர, எதிர்பட்ட அம்மா, கவி உன்கிட்டே ஒண்ணு சொல்லனும் என்றார்.
“என்னம்மா”
வீராவை காணும் ஆவலில் கைகளில் வலையலை அணிந்தபடியே கேட்டாள்.
“வீராவை பத்தி உன் அப்பாக்கிட்டே எதுவும் சொல்லாத, நானே சொல்லிக்கிறேன்”
“அதெப்படிம்மா அப்பா பார்த்தா யார் என்னனு கேட்க தானே செய்வார். சொல்லித்தானே ஆகனும்”
“அப்பாதான் வீராவை பார்க்கலையே”
“ஏன் அவர் இன்னுமா எழுந்து வரலை”
“அவன் அப்பா வர்றதுக்கு முன்னாடியே கிளம்பிட்டான்”
‘கிளம்பிட்டாரா.. எங்கே’ மனம் கேள்வி கேட்டாலும் வெளியே வாய் திறந்து அம்மாவிடம் கேட்க மனம் வரவில்லை. என்கிட்டே சொல்லாமலே கிளம்பி போய்ட்டாரா’
“மேகா குட்டி” சுகுமார் அழைக்க “இதோ வரேன் பா” என்று ஓடினாள்.
உணவு மேசையில் சஞ்சய் இருக்க, இவனிடம் கேட்கலாமா என்று எழுந்த உந்துதலை வேண்டாம் தனியா கேட்டுக்கலாம் என்று அடக்கி விட்டு சாப்பிட அமர்ந்தாள்.
அப்பாவும் பிள்ளைகளும் சேர்ந்து உண்டனர். அம்மா வழக்கம் போல மூலையில் நின்று வேடிக்கை பார்த்து கொண்டிருந்தாள்.
“அம்மா வாங்க சேர்ந்து சாப்பிடலாம்”. மேகவி அழைக்க, அப்பா அம்மாவை ஒரு பார்வை பார்த்தார். “இல்லை நான் அப்புறம் சாப்பிட்டுக்கிறேன்” என்று கூறிவிட்டு உள்ளே சென்று விட்டார் அருணா.
“என்னம்மா திடீர்னு அம்மாவை சாப்பிட கூப்பிடற” சுட சுட ஹாட்பாக்ஸ்ஸில் இருந்த இட்லியை எடுத்து மகளுக்கு வைத்தபடியே கேட்டார் சுகுமார்.
“அது சும்மா தான் பா, அம்மா நம்ம கூட சேர்ந்து சாப்பிடறதே இல்லை அதான் கூப்பிடனும்னு தோணுச்சு”
“நான் இல்லாதப்போ அம்மா உங்க கூட சேர்ந்து சாப்பிட்டாளா” விசாரணை போன்ற அவர் கேள்வியில் திகைத்தவள், “இல்லப்பா, ஏன் கேட்கறீங்க” என்றாள் புருவம் சுருங்க.
“நானும் சும்மா தான்மா கேட்டேன், எப்போ கூப்பிட்டாலும் வர மாட்டா. ஒரு வேலை உங்களோட சேர்ந்து சாப்பிட்டாளோ என்னவோன்னு கேட்டேன்”
“இல்லப்பா”
“சரிம்மா நீ சாப்பிடு அப்பா உன்னை காலேஜ்ல டிராப் பண்றேன்” அப்பா சொல்ல சரிப்பா என்று தலையாட்டிக்கொண்டாள் மகள்.
காலேஜ் வந்து கூட அவன் நினைவுகள் அவளை சுற்றியே வந்து கொண்டிருந்தன, “உன் வீரா அத்தான் ஏதாவது சொல்லிட்டு போனாரா” சஞ்சய்யை தனியாக பிடித்து கேட்டபோது, “கூடிய சீக்கிரமே திரும்ப பார்க்கலாம்னு சொன்னாரு” என்றான் அவன்.
“வேற ஏதும் சொல்லலையா” அவள் என்ன எதிர்பார்க்கிறாள் என்று அவளுக்கே தெரியவில்லை.
“வேற என்ன சொல்லனும்” அவன் அவளையே திரும்ப கேட்டதில் ஒண்ணுமில்லை என்று தான் தலையசைக்க முடிந்தது.
அவன் யாரோ தானே, சில நாட்கள் அவர்கள் வீட்டிற்கு விருந்தாளியாக வந்திருந்தான், இப்போது சென்று விட்டான். அவனை பற்றி ஏன் அளவுக்கு அதிகமாக யோசிக்கிறாய் என்று தன்னை தானே கட்டுபடுத்தி கொள்ள முயன்றாள். ஆனால் அடக்கி வைக்க வைக்க வெளியே வரும் நீராவி போல அவன் எண்ணங்கள் மேலெழும்பி வருவதை அவளால் தடுக்க முடியவில்லை.
கல்லூரியில் விட வந்த தந்தை கூட, “என்னம்மா ஏதோ யோசனையா இருக்க” என்று கேட்டு விட்டார்.
“ஒண்ணுமில்லைப்பா எக்ஸாம்ஸ் வருதுள்ள அதான் எப்படி ப்ரிப்பேர் ஆகலாம்னு யோசிச்சுட்டு இருந்தேன்”...
“பாருடா என்னோட பொண்ணுக்கு இவ்வளவு யோசிக்க வேண்டிய அவசியமே இல்லையே. நீ எப்படியும் டாப்பர் தானே” என்றார் பெருமையாக. அவள் பதிலேதும் சொல்லாமல் சிரித்து வைத்தாள்.
வந்தான், சென்றான், அவ்வளவு தான் என்று இருக்க முடியாமல் அவளுள் புகுந்து என்னவோ செய்து கொண்டிருக்கிறான் அவன்.
அம்மாவிடம் யார் என்ன என்று விசாரிக்க வேண்டும் என நினைத்து கொண்டு முயன்று பாடங்களை கவனிக்க துவங்கினாள்.
 

Advertisement

Advertisement

Back
Top