Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'என் கண்களில் காண்பது உன் முகமே' அத்தியாயம் 12

Advertisement

'என் கண்களில் காண்பது உன் முகமே' அத்தியாயம் 12

அத்தியாயம் 12

கற்பகம் கத்தியதில் அதிர்ந்து போனவர், “என்னாச்சு, பாம்பு, பூதம், பிசாசு எதையாவது பார்த்தியா என்ன? கெளுத்தி மீனு மாதிரி, இந்தத் துள்ளு துள்ளுற, உடம்பெல்லாம் இப்படி நடுங்குது! உண்மையான பயம் விசுவின் குரலில் எட்டிப் பார்த்தது!

“தோ! தோ! உங்க கண்ணை எங்க புடணியிலையா வச்சிருக்கீங்க, அந்த மீசைக்காரனை நீங்க பார்க்கலையா?” நடுங்கிக் கொண்டே கூறினார் அம்மா

விசுவின் கரங்களில் நடுங்கி கொண்டே கற்பகம் ஏதோ ஒரு திசையைக் காட்ட, பல்லுப் போன ஒரு கிழவியையும், மேட்சிங் மேட்சிங் என்று பிளவ்ஸ் அன்ட் தாவணியை ஒரே கலரிலும், அதே மங்களகரமான மஞ்சள் நிறத்திலேயே பாவாடையும் அணிந்த ஒரு குமரிப் பொண்ணையும், சேலையை இறுக்கிச் சொருகிய இன்னும் நான்கைந்து பொம்மனாட்டிங்களையும், பெல்பாட்டம் அணிந்த சில இளவட்டங்களையும் தவிர, அந்த நீண்ட, நெடிய ஸ்டீல் மேம்பாலத்தில் அவரால் எந்த ஒரு மீசைக்காரனையும் பார்க்க முடியவில்லை!

கண்களில் பயத்தோடு இன்னும் நடுங்கிக் கொண்டிருந்த அம்மாவின் மலர் முகத்தை நிமிர்த்தி, அதில் அச்சத்துடன் துடித்துக் கொண்டிருந்த இரண்டு கெண்டை மீன்களைப் பார்த்தவர்,

"தபாலாபிசில் பார்த்தப்ப நீ பெரிய புலிக்குட்டியாட்டம் கர்ஜிச்ச? இப்ப என்ன பூனைக்குட்டி மாதிரி மியாவ் மியாவ்னு கத்துற? எது உண்மையான கற்பகம்னு நான் தெரிஞ்சுக்கலாமா?” என்று சொல்லிக் கொண்டே அந்த மூலையை உற்றுப் பார்த்த பின் பெருங்குரலெடுத்து சிரிக்கத் தொடங்கினார் விசு.

அந்த சிரிப்புச் சத்தம் கேட்டு அந்தப் பாலத்தில் நடந்து சென்ற பலர் அடுத்த காலடியை எடுத்து வைக்க மறந்து அப்படியே அங்கே நடக்கப் போகும் நாடகத்தைப் பார்க்க ஆவலுடன் காத்திருக்க, கற்பகம் கண்களில் நீர் கட்டியது! அந்தக் கண்ணீரைப் பார்த்துப் பதறிப்போன விசு, அவள் கண்ணீரைத் தன் விரல்களால் சுண்டியவர், அப்படியே அவரைத் தன் கரங்களுக்குள் அணைத்துக் கொண்டு, அந்த இடத்தைவிட்டு வேகமாக நடந்து சென்றுவிட்டார்!

இருவருமே பொதுமக்களோடு அதிகமான தொடர்புடையவர்கள் என்பதால் அவர்கள் கதை ஸ்கூப் நியூசாவோ, கிசுகிசுவாகவோ மாறி மறுநாள் பேப்பரில் வர்றதுக்குள்ள அந்த இடத்தைக் காலி பண்ணும் வேகம் இருவரின் நடையிலும் இருந்தது! சிறிது தொலைவு சென்று, அம்மா பயம் தெளியும் வரைக் காத்திருந்து அப்பா பேசத் தொடங்கி உள்ளார்.

“என்ன நீ? ஒரு சின்னக் கரப்பான் பூச்சிக்கே இப்படி பதரநாட்டியம் ஆட ஆரம்பிச்சிட்ட, இந்தப் பந்தையக் குதிரையிடமிருந்து நான் இதை எதிர்பார்க்கலை!”

“சும்மா ஒண்ணும் என்னைக் கலாய்க்க வேணாம், எனக்குக் கரப்பான் பூச்சியையும், உயரங்களில் தனியாப் போவதையும் தவிர, வேறு எதுக்குமே பயமில்லையாக்கும், என்று ஜம்பமாய் பேசிய அம்மா,

“உங்களுக்கு எதைப் பார்த்தால் பயம்?” என்று அப்பாவிடம் வினா எழுப்ப,

“எனக்குப் பெண்களின் கண்ணீரைப் பார்த்தால் மட்டும்தான் பயம், அதுவும் என் கற்பகத்தோட கண்ணில் நான் என்னைக்கும் கண்ணீரைப் பார்க்கக் கூடாது!” என்று, அவரைத் திருப்பி, நீரினால் கழுவப்பட்ட என் தாயின் கண்களைப் பார்த்துக் கூறியவர், அன்று என் தாயிடம் கூறியதை அவர்களை விட்டுப் பிரிந்து செல்லும் நாள்வரை தன்னால் இயன்றவரை நிறைவேற்றியுள்ளார்.

என் அப்பா விசு வீட்டிலிருந்தால் வீடே சிரிப்பில் கலகலத்துப் போகும்! என் தந்தை என்னையும் அம்மாவையும் கடைசிவரை தன் உள்ளங்கையில் வைத்துத்தான் தாங்கினார். இதுபோல் எத்தனையோ கதைகளை என்னிடம் இருவரும் பகிர்ந்துள்ளார்கள்!

ஓருநாள் அம்மா, கிச்சனுக்குள் நின்று “ஐயோ! ஐயோ” ஓடிப் போயிரு, இல்லைனா இந்தக் குச்சியவச்சே உன்னை அடிச்சுக் கொண்ணுறுவேன்னு மிரட்டலோடு கத்திக் கொண்டிருக்க,

ரோஜாமலரே ராஜ குமாரி, ஆசைக்கிளியே அழகிய ராணி,
அருகில் வரலாமா? வருவதும் சரிதானா?”


என்று பெருங்குரலில் அப்பா பாடிக் கொண்டிருக்க, ஸ்கூல் முடிந்து வந்த நான் முதுகில் சுமந்து வந்த புத்தக மூட்டையை இறக்கிப் போட்டுவிட்டு! என்னவோ ஏதோவென்று அரக்கப் பரக்க ஓட, அங்கே நான் பார்த்த காட்சி எனக்கு ஜென்மத்துக்கும் மறக்காது! எனக்கு சிரிச்சு சிரிச்சு வயிறே புன்னாப் போயிருச்சு! அப்படி ஒரு ஜோக் அது! என்று சொல்லிவிட்டு கௌதம் விழுந்து விழுந்து சிரிக்க,

“சொல்லிவிட்டு சிரிங்க சார்!” என்று தாமரை கேட்டுக் கொண்டே சிரிக்க, பவி தனக்கும் ஏதோ புரிந்தது போல் அதுவும் கைதட்டி சிரித்தது!

அது ஒண்ணும் இல்லை தாமரை, கிச்சனில் அம்மா மிரட்டிக் கொண்டிருந்தது, ஒரு கரப்பான் பூச்சியைப் பார்த்துதான், அதைப் பார்த்து அப்பா பாடிய பாட்டுத்தான் அதில் ஹைலைட்! வாங்க ராஜகுமாரினு அப்பா அந்தக் கரப்பானின் மீசையைப் பிடித்துத் தூக்கி, ‘போ பிழைச்சுப் போ!’ என்று சொல்லி சமையலறை ஜன்னல் வழியாகத் தூக்கி வேளியே போட, அம்மா போன உயிர் திரும்பியவராக என்னைப் பார்த்துச் சிரித்தார்!”

“ஒருவாரம் கழிச்சு இன்னைக்குத்தான் நான் மனம் விட்டுச் சிரிச்சிருக்கேன் என் ரயில் ஸ்னேகிதியே! உன் தோழமைக்கு நன்றி!” என்று கௌதம் புன்னகைக்க,

“உண்மையாவே உங்க சிரிப்பில் ஒரு காந்தம் இருக்கு கௌதம்!” என்றவள் “இன்னும் வேறு மலரும் நினைவுகள் இருக்கா?” என்று கேட்க,

“என்னோட நினைவுகள் இருக்கட்டும் தாமரை, நீ உன்னைப் பத்தி ஒண்ணுமே சொல்லலியே! உனக்கு அப்பா, அம்மா, உடன்பிறப்புகள், அப்புறம்,,,,!” என்று அவன் இழுக்க,

“எனக்குக் கல்யாணம் ஆச்சா, கணவர் இருக்காரான்னு கேட்கிறீங்க இல்லையா?” என்று கேட்டு, எச்சில் கூட்டி விழுங்கியவள், மறுபடியும் பேசத் தொடங்கினாள். அவள் குரலில் ஒரு நடுக்கம் இருந்தது!

“இல்லை! இன்னும் எனக்குத் திருமணம் ஆகலை! ஆனால் நேத்து எனக்குத் திருமணம் நடந்திருக்கணும். பத்திரிகை அடிச்சு, பந்தக்கால் நட்டு, மாவிலைத் தோரணம் கட்டி, கல்யாணப் பந்தல் போட்டு, உறவினர்கள், நண்பர்களுக்கெல்லாம் அழைப்பு விடுத்து, கல்யாணத்திற்கான அனைத்தும் ரெடி, ஆனால் மணப்பெண் நான் அதிர்ஷ்டவசமா கல்யாணமண்டபத்திலிருந்து தப்பிச்சு ஓடி வந்து விட்டேன்” என்று மெல்லிய சிரிப்போடு கௌதமைப் பார்த்தவள், முகம் முழுவதும் ஆயிரம் கேள்விக்குறிகளோடு தன்னைப் பார்த்த கௌதமிடம் தன் கதையைக் கூறத் தொடங்கினாள்.

“உயிரோட என் அக்காவின் வாழ்க்கையைப் புதைத்துவிட்டு என்னைக் கல்யாணங்கட்ட நினைத்தார் என் அக்காவோட மாமா! அதுக்காக என் மாமனார், மாமியார், நாத்தனாரிலிருந்து, அம்மா, அப்பானு மொத்தக் குடும்பமும் கூட்டா சேர்ந்து கும்மி அடிச்சாங்க!

என் அக்காவும் இந்தக் கூட்டத்திலிருந்ததுதான் எனக்கு ஆச்சரியமாவும் வேதனையாவும் இருந்தது! இங்க பாருங்க, நேத்துத் திருமணத்துக்காக என் கையில் வச்ச மருதாணியும், நலுங்கும் இன்னும் காயலை! எங்க ஊரு சென்னைக்குப் பக்கத்தில உள்ள ஒரு சிறிய ஊர்.

அந்த ஊர் சென்னையை ஒட்டிப் பிறந்த சகோதரியா இருந்தாலும், நடை, உடை பாவனை என்று மனித நாகரீகத்தில் வளர்ச்சி அடைந்திருந்தாலும், அங்குள்ள மனிதர்களின் மனங்கள் இன்னும் மாறவில்லை. மேல் சாவனிசம்; அதுதான் ஆணாதிக்கம் என்று சொல்வோமே, அது அப்படியே ஒரு சதவிகிதம் கூடக் குறையாம எங்க ஊரில் ஆழமாப் பதிஞ்சு போயிருக்கு. இதுவும் உயிர்களை எடுக்காம மனங்களைக் கொல்லும் ஒரு மாதிரி கௌரவக் கொலைதான்.

“ஐய்யையோ என்னங்க சொல்ல வர்றீங்க?”

“அவளோட அத்தானை, அதுதான் அவ புருஷனை, நான் கட்டிக்கலைனா விஷங் குடிச்சுச் செத்துப் போயிருவேனு என் அக்கா மிரட்டினதால நான் அந்த நேரத்துக்குத் தலையாட்டி, பத்து நாள் விடுப்பெடுத்து ஊருக்குப் போய், பல பிரச்சனைகளை சந்திச்சு, வெளி உலகத்துக்குத் தெரியாம பிரச்சனையத் தீர்த்து,

“என்னைத் தேடி டில்லி வந்தா, நான் செத்து ஆவியாகி உங்க மடியில மறு ஜென்மம் எடுத்துக் குழந்தையா பிறப்பேன்னு அக்காவுக்கும், அத்தானுக்கும் ரெண்டு வரிக் கடிதம் எழுதி வச்சிட்டுத்தான் வந்திருக்கேன்!”

“அப்பக் கல்யாண வீட்டிலிருந்து தப்பிச்சு ஓடி வந்திட்டீங்களா?”

“ஆமாம், நான் டில்லியில தங்கியிருந்து வேலை பார்ப்பது குடும்பத்தில் உள்ள அத்தனை பேருக்கும் தெரியும், ஆனால் என் டில்லி வீட்டு முகவரியை யாருக்குமே கொடுக்கலை! இப்ப ஆஃப் பண்ணி வச்சிருக்க ஃபோனை டில்லி போனப்புறம்தான் ஆன் பண்ணப் போறேன்.

அக்கா, அத்தான் ரெண்டு பேருமே ரொம்ப நல்லவுங்கதான்! ரெண்டு பேருக்கும் இருந்த ஒரே குறை குழந்தை இல்லைன்றதுதான். எனக்கும், அக்காவுக்கும் அஞ்சு வயசு வித்தியாசம்! அக்கா புத்திசாலிதான், ஆனாலும் +2வுக்கு மேல படிக்காம 20 வயசு முடியிறதுக்குள்ளையே மாமனை விரும்பிக் கல்யாணம் பண்ணிக்கிச்சு! இப்ப அவங்க திருமணம் முடிஞ்சு பத்து வருஷம் முடியப் போகுது! என்ன காரணமோ தெரியலை அக்காவுக்குக் குழந்தைப் பேரு மட்டும் தள்ளிக்கிட்டே போனது!

அரசமரம், கோயில், குளம், சாமின்னு எல்லாத்தையும் சுத்தி, சாமிக்கு, அலகு குத்துறேன், காவடி எடுக்குறேன், தீ மிதிக்கிறேன்னு சாமிக்கி எந்த நேர்த்திக்கடனும் பாக்கி இல்லாம எல்லாத்தையும் செஞ்சு முடிச்சிட்டாங்க!

ஜாதகம் பார்த்து, ஜாதக நிவர்த்தி செய்து, அரசமரத்தை சுத்தி வந்து தொட்டில்கட்டி, இன்னும் என்னன்னவோ வேண்டுதல்கள். சாமியை வேண்டினது எல்லாம் பெரிய குத்தமில்லை, ஆனால் விஞ்ஞானப் பூர்வமாவும் கொஞ்சம் ட்ரைபண்ணி பார்த்திருக்கலாம் இல்லையா?

டாக்டரைப் பார்க்கிறதை தவிர, மத்த எல்லாம் செஞ்சாச்சு. இந்தக்குழந்தையின்மைக்கு அந்த முட்டாப்பசங்க கண்டுபிடிச்ச தீர்வு, மாமாவுக்கு இன்னொரு கல்யாணம் செய்வது.

இதுல பெரிய கூத்து என்னன்னா அக்கா, அத்தான் ஜாதகத்தோட என்னோட ஜாதகத்தையும் சேர்த்துக் கொடுத்து ஜாதகம் பார்த்திருக்காங்க! அந்த ஜோசியக்காரருக்கு என் மேல் என்ன கோபமோ? இல்லை அக்கா மேல என்ன வெறுப்போ தெரியலை, என் ஜாதகத்தைப் பார்த்தவர்,

‘இந்தப் பெண்ணோட ஜாதகம் அமோகமா இருக்கு! இந்தப் பெண்ணை ரெண்டாந்தாரமா திருமணம் செஞ்சா எல்லாம் கூடிவரும், உங்க வீட்டுக்குப் புத்திரபாக்கியமே இந்தப் பெண்ணால்தான்னு சொல்லியிருக்காரு.

மாமாவுக்கும் ரெண்டு லட்டு திங்க ஆசை வந்திருச்சு!!! ஏற்கனவே என் மேல் அவருக்கு ஒரு கிறக்கம் உண்டு. அவ்வளவுதான் பெரிசுக எல்லாம் கூடி என் அக்கா வாழ்க்கையை அழித்து, ஒரு புதிய வார்ப்புக்குத் தயாராயிட்டாங்க! என்னையும் பத்து நாள் லீவில் டில்லியிலிருந்து வரவச்சு, மறு வார்த்தை பேசக்கூட சான்சே கொடுக்காம எனக்கும் என் மாமாவுக்கும் திருமண ஏற்பாட்டை ஃபாஸ்ட் ஃபார்வேர்ட்ல எடுத்துச் செய்ய ஆரம்பிச்சிட்டாங்க!

நான் எல்லோரையும் ஏமாத்திவிட்டு கல்யாண வீட்டிலிருந்து தப்பி ஓடி வந்துவிட்டேன், ஆனால் அப்படி வர்றதுக்கு முன்னால ஒரு நல்ல காரியம் பண்ணிவிட்டு வந்திருக்கேன்!”

“என்ன?” என்பது போல் கௌதம் அவளைப் பார்க்க,

“இந்தத்திருமணம் நடக்கணும்னா அவங்க ரெண்டுபேரும் மருத்துவ பரிசோதனை செஞ்சுக்கிட்டாத்தான் நடக்கும்னு ஒரு கண்டிஷனை அக்கா மாமாக்கிட்டப் போட்டு, நைசாப்பேசி அக்காவையும், மாமாவையும் மருத்துவ மனைக்குக் கூட்டிட்டுப்போய், அவங்களுக்குக் குழந்தைப் பேரு இல்லாமப் போனதுக்கான காரணத்தைத் கண்டுபிடிக்க ட்ரை பண்ணி அதில் வந்த ரிசல்ட்டை அவங்க ரெண்டு பேர்கிட்டையும் கொடுத்துட்டுத்தான் வந்திருக்கேன்!

“விஞ்ஞானம் என்ன சொல்லுது!”

“விஞ்ஞானம், அவர்களோட அஞ்ஞானத்தையும், அறியாமையையும் புட்டுப் புட்டு வச்சிருச்சு, என்ன ரிஸல்ட்டு வந்ததுன்னு சொன்னா நீங்களே நம்பமாட்டீங்க!

‘அக்கா பெர்ஃபெக்ட்லி ஆல்ரைட்! அவங்களோட கர்ப்பப்பையும், சூல் கொள்வதற்கான சூழ் நிலைகள் அனைத்தும் மிக நன்றாக இருப்பதாகவே முடிவு கூறியது! ஆனால் அத்தானுக்கு செய்யப்பட்ட சோதனையில் கிடைத்த முடிவு அவ்வளவு சுகமாக இல்லை! அவருக்கு, ஸ்பெர்ம் கவுன்டும், மொட்டிலிட்டி ரேட்டும் ரொம்பக் கம்மியா இருந்ததால,,,

அவர் கொஞ்ச நாள் மாத்திரை மருந்துகளோடு நல்ல உணவு சாப்பிட்டு வந்தா எல்லாம் சரியாயிரும்னு மருத்துவர் கூற, என் அக்கா முகத்தில் ஈயாடலை!

வீட்டுக்கு ஒரு வாரிசைப் பெத்துக் கொடுக்க முடியாத மலடி, மலடின்னு, மாமியாரும், ஊரும், உலகமும் என் அக்காவை வசை பாடியது கொஞ்ச நஞ்சமில்லை! ஒரு கல்யாண வீட்டுக்குப் போனாலோ, வளைகாப்பிற்குப் போனாலோ, பெயர்சூட்டு விழாவிற்குப் போனாலோ, இல்லை ஒரு சடங்கு வீட்டிற்குப் போனாலோ, எல்லா இடத்திலும் தீண்டத்தகாதவர் போலத்தான் என்னோட அக்கா ஒதுக்கப்பட்டார்? அவர் கண்ணீரில் எத்தனை தலையணை நனைஞ்சிருக்குனு எனக்குத் தெரியும்?.

ஆனால் என்னோட அக்கா சோதனையின் முடிவு தெரிஞ்சவுடன் என்ன செய்தார் தெரியுமா? அதுவரையிலும் மூச்சுக்கூட விடாமல் தன் கதையைச் சுருக்கமா கூறிவந்த தாமரையின் கண்கள் இப்பொழுது கண்ணீரில் தத்தளித்தது!

“நோ தாமரை, இவ்வளவு நேரமும் சூரியனைப் பார்த்து முகம் மலரும் தாமரையைப் போல் சிரிச்ச நீங்க, இப்ப எதுக்கு

‘தண்ணீரிலே தாமரைப்பூ! தள்ளாடுதே அலைகளிலே’ னு பாட வைக்கிறீங்க? பீ ஸ்ட்ராங் அன்ட் காம்! உங்க கதையைக் கண்ணீர் இல்லாம சொல்லி முடிங்க, என்னை மாதிரி உங்க கதைக்கு உங்க ஞாபகப்பெட்டகத்தைத் தேட வேண்டாம் பாருங்க!” என்று சொல்லி இந்த முறை தன் ரயில் ஸ்நேகிதியின் கண்ணீரை ஆறுதல் வார்த்தைகளால் தொடைத்துவிட்டான்.

அப்பா மடியிலிருந்து, தாமரை மடிக்குத் தாவிய பவி ஆதரவாய் அவளின் முகத்தை தன் பிஞ்சுக்கரங்களால் தொடைத்துவிட்டு,

“அப்பாக்கு மாதிரி உனக்கும் வலிக்குதா?” என்று தாமரையின் நெற்றியைத் தொட்டுத் தொட்டுப் பார்க்கத் தொடங்கியது குழந்தை!

“உனக்கும் மாத்திரை வேணுமா” என்று அவளின் முகத்தை நிமிர்த்தி அது கேட்க, அந்தக் குழந்தையின் முகத்தைப் பார்த்துக் கண்ணீரோடு சிரித்து, அந்தக் குழந்தையை அணைத்து முத்தமிட்டவள்,

“இல்லடா, ஆன்ட்டிக்கு மனசுக்குள்ள வலிக்குது, அதுக்கெல்லாம் மருந்தே இல்லை,!” என்றவள் ஒரு வழியாக கண்ணீரை விழுங்கித்தன் துக்கத்தை சரி செய்து மறுபடியும் புன்னகையோடு பேசத் தொடங்கினாள்.

“சாரிப்பா, நான் உங்களைத் தொந்தரவு செய்றேனா?” என்ற அவளின் கேள்விக்கு,

“நம் துன்பங்கள் மட்டும்தான் பகிரும் பொழுது குறையக் கூடிய ஒரே உணர்வு! உங்க கதையைக் கேட்கும்பொழுது என் கதை வெள்ளைப் பேப்பரில் உள்ள ஒரு சின்னப் புள்ளியாத் தெரியுது தாமரை! உங்க அக்கா அதுக்கென்ன தீர்வு சொன்னாங்க!?”

“நீ கல்யாண விட்டில இருந்து ஓடிப்போயிருனு சொன்னாங்க?”

“ரொம்ப நல்ல தீர்வு தாமரை!!! ஆனால் இதால உன் எதிர்காலமே பாதிக்கப்படுமே! உங்க ஊருல உன்னைப் பத்தித் தப்புத்தப்பா பேசுவாங்களே!?”

“நரம்பு இல்லாத நாக்குத்தானே! பேசினா பேசிட்டுப் போகட்டுமே! ஒரே கல்லில் ரெண்டு மாங்காய்! அக்கா தங்கச்சி ரெண்டு பேரோட எதிர்காலமும் காப்பாத்தப்படுதில்லையா! நின்னு போனது என் மாமோவோட ரெண்டாவது கல்யாணம்தானே!?”

“அப்ப உங்க அக்காவுக்குக் கிடைச்ச மலடிப் பட்டம், அது எப்படி சரியாகும்!”

“மாமா அவருக்கு எந்தக்குறையும் இருக்காது என்ற தீர்க்கமான முடிவோடுதான் அவர் இந்த விஞ்ஞான சோதனைக்கு ஒப்புக் கொண்டு வந்தார்.

முடிவு தெரிஞ்சப்புறம் நான் மாமாவைத் தனியா சந்திச்சு மருத்துவ குறிப்பு உட்பட எல்லாத்தையும் கொடுத்தேன். எல்லாத்தையும் பார்த்தவர் ஆடிப் போய்விட்டார்! என்கிட்ட காலில் விழாத குறையா 'யார்கிட்டயும் சொல்லிறாத தாமரைனு' கெஞ்சினார்! சோ அவர் குடுமி இப்ப என் கையில் வகையா மாட்டிக்கிச்சு! நானும் அவர்கிட்ட என் முடிவைக் கூறினேன்

“மாமா, அக்காவுக்கு குழந்தை பிறக்காததுக்கும்; அவளுக்கு மலடின்ற பட்டம் கொடுத்ததுக்கும்; உங்க அம்மாவோட ஏச்சுப்பேச்சுக்கும்; அக்காவோட கண்ணீர் எல்லாத்துக்குமே காரணம் நீங்கதான்!” என்கிற ரகசியத்தை நான் உயிருள்ள வரை காப்பாத்துவேன், ஆனால் அதுக்கும் ஒரு விலை உண்டு!”

“சொல்லு சொல்லு, நான் என்ன வேணா செய்றேன், நான் ஆண்மைக் குறைவுள்ளவன்கிற பட்டத்தை மட்டும் என்னால் ஓரு நாளும் சுமக்க முடியாது!”

நான் சிரித்துக் கொண்டே அவருக்குப் பதில் கூறினேன்!

“நல்லது மச்சான் உங்க பேரைக் காப்பாத்திக்குங்க, உங்களுக்கான சிகிச்சையை உடனே ஆரம்பிங்க! கண்டிப்பா இது சரி பண்ணக்கூடிய குறைதான்னு டாக்டர்ஸ் சொல்லி இருக்காங்க! ஏற்கனவே அக்கா பேரு ரிப்பேர்ல இருக்கு, நீங்க சிகிச்சை எடுக்கிறது உங்களுக்கு, எனக்கு, அக்காவுக்குத், தவிர வேற யாருக்குமே தெரியாது! அதனால முழு நம்பிக்கையோடு மருத்துவ உலகம் சொல்றதைக் கேட்டு ஒரு குழந்தையைப் பெற்றெடுக்க வழியைப் பாருங்க!”

“அப்ப நீ? நம்ம கல்யாணம்!? உன்னையும் கட்டிக்கலாம்னு ரொம்ப ஆசையோட இருந்தேனே? ஒரே நேரத்தில் ரெண்டு லட்டு கிடைச்சா சும்மாவா! எனக்கு உன்னையும் ரொம்பப் பிடிச்சிருக்கு!” என்று சிரித்தார்.

“பிடிச்சவங்களை எல்லாம் கல்யாணங்கட்ட முடியாது மாமா! அதுக்குத்தான் இந்தக் கல்யாணம்கிற கான்செப்டே இருக்கு! உங்களைக் கட்டிக்கிட்டு, எனக்குப் பிடிச்சன்கூட நான் போகமுடியுமா? இந்த உலகத்தில ஆண் பெண் இருவருக்கும் ஒரே ரூல்தான் மாமா! நல்ல வேளை கடவுள் உங்கக்கிட்டயிருந்து என்னைக் காப்பாற்றிவிட்டார், ஏற்கனவே அக்கா பேரு கெட்டுப்போயாச்சு! நானும் உங்களுக்காக ஒரு கெட்ட பேரை சுமக்கப் போறேன்,

இன்னைக்கு இராத்திரியோட இராத்திரியா, உங்க கொழுந்தியா ரெண்டு வரி லெட்டர் எழுதிவச்சிட்டு ஓடிப்போகப் போறா! அதுக்கப்புறம் என்னைத் தேடாதீங்க! அதுமட்டுமில்லை, உங்க குறையை மூடி மறைச்சு வேற யாரையாவது ஒரு பொண்ணை ஆத்தா சொன்னா அப்பத்தா சொன்னானு கட்ட நினைச்சீங்க, அன்னைக்கே உங்க மெடிக்கல் ரிப்போர்ட்டை, வாட்ஸாப், பேப்பர், ட்விட்டர் நம்ம ஊரு லோக்கல் டிவிசேனல்னு, எல்லாத்திலையும் ஷேர் பண்ணிவிட்ருவேன்” என்று நான் கூற,

“ஐயையோ வேண்டான்டி ராசாத்தி, எனக்கு உன் அக்கா ஒருத்தியே போதும், இனிமேல் நோமோர் மைனர் விளையாட்டுக்கள்!” என்று கூறியவர்,

“நன்றி செல்லம், நீ என் மானத்தைக் காப்பாத்திக் கொடுத்திட்ட!!!” என்று அவர் என் கன்னத்தில் தட்ட, அவரை ஒரு பத்ரகாளியாக முறைத்த நான்,

“இந்த நன்றியை அக்கா செல்லத்துக்குச் சொல்லுங்க, அவள்தான் 20 வயதில் உன்னைத் திருமணம் முடித்து, இந்தப் பத்து வருஷமா உனக்காக உன் சிலுவையை சுமப்பவள்!” என்று கூறிவிட்டு, என் அக்கா பேக் பண்ணிக் கொடுத்த பெட்டியை இழுத்துக் கொண்டு இரவோடிரவாக ரயிலடிக்கு ஓடிவந்து விட்டேன்!

தாமரை கூறிய வார்த்தைகளைக் கேட்ட கௌதமின் மனதிற்குள் மறுபடியும் திடுக்கிடல்! அந்த அதிர்வலைகளில் மேலும் சில ஞாபகங்களின் ஊர்வலம்.

“நீ அவளைத் திருமணம் செஞ்சா வாழ்நாள் பூரா அந்தச் சிலுவையை சுமக்க வேண்டி வரும்!” இது கௌதமின் அம்மா கூறிய கூற்று! அதையே தாமரை கூறி அவன் கடந்த கால ஞாபகங்களை மேலும் கிளறிவிட்டாள். தொடரும்
 
Top