Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'என் கண்களில் காண்பது உன் முகமே' அத்தியாயம் 14

Advertisement

'என் கண்களில் காண்பது உன் முகமே அத்தியாயம்' 14

அத்தியாயம் 14

“கற்பகம், இவங்க, இவங்கதான் இவங்களேதான், நான் அன்னைக்கு கௌதமோடு பார்த்தது இவங்களைத்தான்!” கற்பகம் தாராவை வெறிக்க வெறிக்கப் பார்த்துவிட்டு,

“இவ இல்லை போஸ், என் மகனைக் கட்டினவ இவ இல்லை போஸ்! என் மருமக இவ இல்லை போஸ்!” என்று தலையில் அடித்துக் கொண்டு, கால் மடங்கி அந்த வாசலிலேயே தரையிலமர்ந்து ஏங்கி ஏங்கி அழத் தொடங்கினார் கற்பகம்.

“க,,,ற்,,,ப,,,க,,,ம்,,,!” இதுதான் கௌதம் கூறிய அவனுடைய தாயின் பெயர்! அப்படி என்றால் கௌதம் எங்கே??? அவன் கோவை செல்லவில்லையா!?

இல்லையென்றால் ஒரே நேரத்தில் எதிரெதிர் திசையில் இரண்டு ரயில்கள் கடந்து செல்வது போல் ஓருவரை ஒருவர் பார்க்காமல் கடந்து வந்துவிட்டார்களா? ஓ மை காட்! இப்ப என்ன செய்யலாம்! ஒரே வினாடியில் தன்னை நிலைப்படுத்திக் கொண்ட தாரா, அந்தத் தாயின் அருகில் சென்று

“அம்மா நீங்க கௌதமோட அம்மாதானே?” என்று தாரா கேட்டவுடன், வாரிச் சுருட்டிக் கொண்டு தரையிலிருந்து எழுந்தவள்,

“அம்மாடி! தாயே சரஸ்வதி தேவி! உனக்கு என் பையன் கௌதமைப் பத்தித் தெரியுமா? அவன் எங்கமா? உள்ள இருக்கானா, என் பேத்தி பவிச் செல்லம் இருக்காளா! ஆத்தா மஹமாயி என்னைக் காப்பாத்திட்டம்மா!” என்று அவளுடைய கீழ்நாடியைப் பிடித்துக் கொண்டு கெஞ்ச, கற்பகத்தின் கண்ணிலிருந்து வற்றாத நீரூற்றாய் கண்ணீர் வடிந்து கொண்டிருந்தது!

“உள்ள வாங்கமா எல்லாத்தையும் விளக்கமா பேசலாம்!”

“அப்ப என் பையன்,,,,?”

“வாங்க, வாங்க உங்க பொண்ணு வீடா நினைச்சு உள்ள வாங்க!” என்று கூறிவிட்டு அவள் போஸைப் பார்க்க,

“நான் கௌதம் அப்பா விசுவோட ரொம்ப க்ளோஸ் ஃப்ரென்ட்! கடந்த ஒரு வருஷமா நாங்க தொலைஞ்சு போன எங்க பையனைத்தான் தேடிக்கிட்டு இருக்கோம்! இந்தப் பிரபஞ்சத்திலிருந்தே தொலைஞ்சு போயிட்ட மாதிரி, ஒரு காலடிச்சுவடு கூட இல்லாமத் தொலைஞ்சு போயிட்டான். உங்க ரெண்டு பேரையும் குழந்தையோடு அந்த அம்மன் கோவிலில் பார்த்தப்புறம்தான் எனக்கு உயிரே வந்தது! என் நண்பன் விசுதான் மேலே இருந்து உங்களை எனக்குக் காட்டிக் கொடுத்திருக்கணும்!” போசும் உணர்ச்சிவசப்பட்டுப் பேசிக் கொண்டே போனார்!

“கற்பகம் உன்னை சரியான இடத்தில கொண்டு வந்து சேர்த்திட்டேனு நினைக்கிறேன்! இனி நீயாச்சு, உன் மருமகளாச்சு, எனக்குக் கொஞ்சம் சென்னை மத்திய ரயில் நிலையம் வரைக்கும் போற வேலை இருக்கு, நாளைக்கு டிக்கெட் போடணும், எல்லா விபரமும் கேட்டு ஃபோன் பண்ணு! என்று அவர் கிளம்ப எந்த விதமான உணர்ச்சிகளும் இல்லாத ஜடம் போல் அமர்ந்திருந்தாள் கற்பகம்.

“நெஞ்சம் மறப்பதில்லை! அது தன் நினைவை இழக்கவில்லை!
நான் காத்திருந்தேன், உன்னைப் பார்த்திருந்தேன்!
கண்களும் மூடவில்லை; என் கண்களும் மூடவில்லை
காலங்கள் தோறும் உன் மடி தேடி கலங்கும் என் மனமே!
வரும் காற்றினிலும், பெரும் கனவினிலும்,
நான் காண்பது உன் முகமே!”


அந்தப் பாடலை தன் இனிமையான குரலில் தாரா பாட தன்னுணர்வு பெற்ற கற்பகம் விலுக்கென்று தன் தலை உயர்த்தி அவளைப் பார்த்தார். அவர் கண்களில் ஆயிரம் வாலா பட்டாசுகள் ஒரே நேரத்தில் வெடித்துச் சிதற, ஓடி வந்து தாராவைக் கட்டிக் கொண்டவர்,

“உனக்கு என் பையன் கௌதம் பற்றி கண்டிப்பா தெரிஞ்சிருக்கு, எங்கேமா அவன், அவனை எங்கமா ஒளிச்சு வச்கிருக்க, என் பெத்த வயிறு பதறுதுமா? கடந்த 365 நாளா அவனைத் தேடித் தேடி ஓஞ்சு போயிட்டேன்.

அவன் வர்றேன்னு சொன்ன மாதிரி என் பேத்தியோடு விமானத்துல சென்னை வரைக்கும் வந்திருக்கான். அதுக்கப்புறம் ஒரு சின்னத் தடயம் கூட இல்லாம மறைஞ்சு போயிட்டான்! என்கிட்ட அவனைக் கொடுத்திருமா, நீ மஹாராசியா இருப்ப, இல்லை நீயும் அவனோட வரணும்னா வா உங்களுக்காகத் தான் என் வீட்டுவாசலை இத்தனை வருஷமா திறந்து வச்சிருக்கேன்!”

கற்பகத்தின் பெச்சைக் கேட்டு, அவ்வளவு நேரமும் அடக்கி வைத்திருந்த அழுகை விம்மலாய் தெறித்து விழ, கற்பகத்தைக் கட்டிக்கொண்டு மனம் விட்டுக் கதறத் தொடங்கினாள் அந்த மனநல மருத்துவர் தாரா!

என்ன செய்வதென்று ஒன்றுமே புரியாமல், இலக்கில்லாமல் கரையில் மோதும் கடலலை போல இரண்டு பெண்களும் கண்ணீரோடு மோதி நிற்க, அங்கே முடிவில் அவர்களின் கண்ணீரைத் துடைக்க யாருமின்றி, யாருமற்ற அனாதைகளாய் ஒருவர் கண்ணீரை மற்றொருவர் துடைத்துவிட, அவர்களே அறியாத ஒரு பாசப் பரிமாற்றம் அங்கே நடந்தேறியது.

ஏனோ தாராவின் கரங்களில் வழிந்த குளிர்ச்சியில் தன் மகனின் குளிர்ச்சியை, ஒரு பாசத்தை, ஒரு நெகிழ்வைக் கற்பகத்தால் உணர முடிந்தது! கண்களால் புகைப்படங்களை நிரந்திரமாய் படம்பிடித்து சேமிக்க முடிந்திருந்தால் தாராவின் கருவிழிகள் முழுவதிலும் கௌதம் நிறைந்திருப்பதை அவளால் கண்கூடாய் பார்த்திருக்க முடியும். எவ்வளவோ தொழில் நுட்ப வளர்ச்சிகளைப் பார்த்துவிட்ட இந்த உலகம், விழியில் பொருத்தும் உயிருள்ள டிஜிட்டல் கேமராவையும் ஒருநாள் கண்டு பிடிக்கலாம்.

“வாங்க ஆன்ட்டி, இது உங்க புள்ளையோட வீடுதான்! அவனுக்காகவும், பவிக்காகவும் மட்டுமே நான் வாங்கிய வீடு. வாங்க இதுதான் உங்க பையனும் குழந்தையும் கடந்த ஒரு வருடமாய் வாழ்ந்த அறை.

புது மழைத் தூறலின் மண்வாசத்தை சுவாசிக்க விரும்பும் உயிர், எப்படி புழுதி அமுங்கியபின் மண் வாசனை நிறைந்த காற்றை உள்ளிழுத்து, அந்த சுகந்த மணத்தை முகர்ந்துவிட்டு, வெளியில் விடுமோ அது போல கற்பகம் தன் மகனின் மூச்சுக் காற்றுக் கலைந்து விடுமோ என்று அவசர அவசரமாய்த் தன் மூச்சை உள்ளிழுத்து அதை அனுபவித்து பின் வெளியில்விட, தன் மகனின் வாசனையை அவளின் உணர்வு நரம்புகளால் உணர்ந்து கொள்ள முடிந்தது!

“இப்ப அந்த ராஸ்கல் எங்கம்மா? ஒருநாள் கூட இந்த கற்பகம்மா தனிமையில் வாடும் இல்லத்தையும், அவனுடைய தந்தை விசு வாழ்ந்து மரித்த கோவிலையும் வந்து பார்க்கணும்னு என் பிள்ளைக்குத் தோணலையா?!”

அந்தத் தாயின் பாசத்தில் உருகிய தாரா, தன் பற்களால் உதட்டைக் கடித்து, மூச்சை உள்ளிழுத்து, தன் கண்ணீரைத் தொண்டையில் விழுங்கியவள்,

“அவனை ஓரே இரவில் நான் என் கையிடுக்கில் தொலைச்சிட்டேன் ஆன்ட்டி!” என்று நெகிழ்ந்து போன குரலில் கூற,

“எங்க? எப்ப?? ஏன்??? எப்படி????” கற்பகத்தின் முகத்தில் எண்ணிலடங்கா கேள்விக் குறிகள்!!!

“ம்ம்ப்ச்,,,என்னை அப்படிப் பார்க்காதீங்க ஆன்ட்டி, நானே அவனையும் குழந்தையையும் தொலைச்சிட்டு, அடுப்புத் தணலில்; 1000 டிகிரி வெப்பத்தில்; தகதகனுஎறியும் சிவப்புக்கங்கின் மேல், ஊண்உருக நின்னுட்டிருக்கேன். இன்னும் என்னை சிறிது வாட்டினால் போதும் அப்படியே சாம்பலா உதிர்ந்து போயிருவேன்!!!”

“நீ என்ன சொல்ல வர்ற? முதல்ல என் பையன் உயிரோட இருக்கானா அதை மட்டும் சொல்லி இந்த பெத்த வயிற்றுக்குப் பால் வார்த்திருமா! அப்புறம் நீ என்ன கதை வேணா சொல்லு கேட்டுக்கிறேன்! அனுமர் ஸ்ரீராமர்கிட்ட ‘கண்டேன் சீதையைனு’ சொல்ற மாதிரி, ஒரே ஒரு நல்வாக்கு சொல்லு! ஏன்னா என் பையன் உயிரோடிருந்தா என் பேத்தியும் கண்டிப்பா உயிரோட இருப்பா!”

“நேத்துக்காலை நான் அவனைப் பிரிந்து மருத்துவமனை போற வரைக்கும் அவனும் குழந்தையும் உயிரோட நல்லா ஹெல்த்தியாத்தான் இருந்தாங்க!”

“இந்த ஒத்த வார்த்தை போதும் ராசாத்தி! இதிலேயே நான் சொச்ச காலத்தையும் கழிச்சிருவேன்! இந்தத் தாயோட பாசம்தான் நான் அவன் உயிருக்குப் போட்டிருக்கும் கவசம், அவன் இந்த உலகத்திலுள்ள எந்த மூலைக்கு வேணா போகட்டும், சந்தோஷமா இருந்தா போதும் அது மட்டும் போதும் எனக்கு!”

“உங்க பிள்ளை உயிர் பிளைச்சிருப்பார், ஆனால் சந்தோஷம்,,,, ம்கூம் இருக்காது!”

“உனக்கு உடம்புக்கு முடியலியா? எதுக்கு நீ நேத்து மருத்துவமனை ,,,,,போன??” கற்பகத்தின் கேள்வி முடியும் முன்னரே,,,

“நான் ஒரு மனநல மருத்துவர் மா!”

“அப்ப என் பிள்ளை ஒரு நோயாளியா!” கற்பகத்தின் கேள்விக்கு முதலில் கிழக்கு மேற்காக ‘இல்லை’ என்று தலை ஆட்டியவள் மெல்ல அதை மாற்றி வடக்குத் தெற்காக ‘ஆம்’ என்று தலையாட்டினாள்.

“நினைச்சேன் ஏன்னா என் பிள்ளையோட ரூமில் அவன் வாசனையைவிட மருந்து மாத்திரைகளின் வாசனைதான் தூக்கலா இருந்துச்சு!”

“இன் ஃபேக்ட்!” என்று ஆரம்பித்த தாரா, சொல்ல வந்ததை நிறுத்தி,

“நான் உங்களை அத்தைனு கூப்பிடவா? இல்லை அம்மானு கூப்பிடவா?” என்ற கேள்வியோடு அவரைப் பார்க்க,

“எப்படி வேணா கூப்பிட்டுக்க, அவரோட அக்கா பொண்ணு தர்ஷிதான் என்னை அத்தை அத்தைனு வாய் நிறைய கூப்பிட்டுக்கிட்டே வளைய வளைய வருவா! கோபம் வந்தா, ‘அடியே கற்பகம்னு’ கூடக் கூப்பிடுவா! எனக்கு என் பையனைக் மட்டும் காட்டு அது போதும் எனக்கு!”

“கௌதமிற்கு போன வாரம்தான் அவனுடைய மறந்து போன நினைவுகள் திரும்பத் தொடங்குச்சு! நினைவு திரும்பியவுடன் அவன் உங்களைத்தான் பார்க்க வருவான்னு நினைச்சேன்,,, ஆனால் என்று யோசித்தவள்,

“இப்பவும் நீங்க இந்தப் பக்கம் கிளம்பின அதே நேரம் அவன் அந்தப் பக்கம் கோவைக்குக் கிளம்பிப் போயிருக்கலாமோ!”

“நீ என்னம்மா சொல்ற, என் பையன் நினைவில்லாம இந்த ஒரு வருஷமும் கிடந்தானா?” தாரா பதிலுக்கு,

“அது ஒரு மிகப் பெரிய கதை அத்தை! அவனுக்கு நினைவில்லாம இல்லை! அவனுக்கு நினைவு தெரிஞ்ச நாளிலிருந்து ஒரு வருடத்துக்கு முன்னால் அந்த ரயில் விபத்து நடந்த நாள் வரையிலான பழைய நினைவுகளை இழந்துவிட்டான்!”

“அம்மாடி! அவனோட 28 வருட நினைவுகள் அப்படியே அழிஞ்சு போயிருச்சா? ஐயோ!” என்றவள், வழியில் கிடந்த பெரிய கரப்பான் பூச்சிகளின் படைக்குள் சிக்கிக் கொண்டது போல அதிர்ந்து போனார்.

“அத்தை அந்தக் கதையை நிறுத்தி நிதானமா உங்களுக்குச் சொல்றேன். அதுக்கு முன்னாடி நாம ரொம்ப ஃபாஸ்டா மூவ் பண்ண வேண்டியிருக்கும்! இந்த நிமிடம் உங்க பிள்ளை எங்க இருக்கார்னு முதலில் தெரிஞ்சுக்கணும்,,,

ஏன்னா அவர் உடலளவில் ஹெல்த்தியா இருந்தாலும் மனதளவில் இன்னும் ஒரு குழந்தைதான். அவன் மூளை முழுமையா இன்னும் ரீசெட்டாகலை.

இப்பத்தான் கடந்த ஒரு வாரமா கொஞ்சம் கொஞ்சமா அவனுக்கு நினைவு திரும்பத் தொடங்கியிருக்கு! ரெண்டு நாளைக்கு முன்னால என்கிட்ட காஷுவலா கேட்கிற மாதிரி, ரயிலில் தட்காலில் டிக்கெட் போடுறதைப் பத்திப் பேசிக்கிட்டிருந்தான். அவனோட நினைவுத் தடத்தில் பதியப்பட்டுள்ளவை மூன்றே ஊர்கள்தான் ஒன்று கோவை, இன்னொன்று சென்னை மற்றோன்று டில்லி!” தாராவின் பேச்சைக் கேட்கக் கேட்கக் கற்பகத்தின் மனம் மேலும் பதறத் தொடங்கியது!

“நான் என் வீட்டிலிருக்க பெரியம்மாகிட்ட கை பேசியில் பேசுறேன், நேத்து காலையிலிருந்து இரவுவரை பஸ்சில் இல்லை எந்த ரயிலில் கிளம்பி இருந்தாலும் இந்நேரம் அவன் கோவை போய் சேர்ந்திருக்கணும்!”

“நேற்று காலைவரை என் கையில் இருந்தவனை இன்னைக்கு தொலைச்சிட்டேனே! இதை எந்த விதியில் சேர்ப்பது அத்தை!?” அந்தக் கேள்விக்கு அவள் மனதிற்குள்ளிருந்து கௌதமே பதில் கூறினான்

“நியூட்டனின் மூன்றாம் விதியில் சேர் தாரா! ஏன்னா அவர்தான் மனித விதிகளை பௌதிகத்தில் அழகாய் சொல்லி இருப்பார்! அந்தப் பதிலோடு தாரா மனதிற்குள் வந்த கௌதம் மெல்லிசையாய் சிரித்துக் கொண்டே,

‘ஃபார் எவ்ரி ஆக்ஷன் தேர் இஸ் ஈக்வல் அன்ட் ஆப்போசிட் ரியாக்ஷன்’

அதாவது ‘ஒவ்வொரு வினைக்கும் சமமான எதிர்வினை உண்டு’ என்பது அவர் கூறிய விதி! இது கூட இந்த டாக்டர் பொண்ணுக்குத் தெரியலியா?’ என்று இதயத்தில் ஏறி நின்று சிரித்தான் அந்த ஆணழகன். அதிர்ந்து போய் நின்றிருந்தவளை தட்டி எழுப்பியது கற்பகத்தின் குரல்,

“இதுவரை வீட்டிற்கோ, தபாலாபிசிற்கோ இல்லை கோவை ரயில்வே சந்திப்பிற்கோ என்னைத் தேடி கௌதம் வரலைனு பெரியம்மா ஸ்ட்ராங்காச் சொல்லுது!” கற்பகம் பேச்சில் அதிர்ந்து தன்னிலை அடைந்தவள்,

“இதுவரை என் துணை இல்லாமல் கௌதம் எங்குமே போனதில்லை!

“இருங்க கௌதமிற்கு ஆதார் கார்ட் வாங்கி, பேங்க் அக்கவுன்ட் ஓப்பன் பண்ணி, ஆன்லைன் ட்ரான்ஷாக்ஷ்ன் பண்றது, பாஸ் வெர்ட், ஓடிபின்னு நான்தான் எல்லாம் சொல்லிக் கொடுத்து, செட் பண்ணிக் கொடுத்தேன். ஏடிஎம் கார்டு கையில் இருந்தாலும் இது வரை ஒருநாள் கூட அதை அவன் உப்யோகிச்சதில்லை!

எனக்குத் தெரியாம ஒரு துரும்பைக்கூட அசைக்க மாட்டான், பேங்க் அக்கவுண்டிலிருந்து எதுக்காவது பணம் போயிருக்கானு பார்க்கலாம்.

ஒண்ணும் கண்டுபிடிக்க முடியலைனா, நேற்றைய தட்கால் புக்கிங்க் செக் பண்ணுவோம். டில்லிக்கு, சென்னையிலிருந்து இரவில் கிளம்பி நேராப் போற வண்டினா ஜீடி விரைவு வண்டியும், தமிழ்நாடு விரைவு வண்டியும்தான் இருக்கு. பகல் வண்டி எதிலும் போயிருப்பானானு தெரியலை! வரிசையா ஒரு திட்டத்தை வகுத்துக்கிட்டே போனா கௌதம் எங்க இருந்தாலும் நம்ம கையில் கப்புனு கேட்ச் புடிச்சிறலாம்!

“வான்வெளியில் பறக்கவும் சான்ஸ் இருக்கு! ஆனால் அதைத் தேர்ந்தெடுத்திருக்க மாட்டான்!

"அவன் ஒரு ரயில் பைத்தியம்” என்று கூறியவள்,

“கவலையை விடுங்க அத்தை, நீங்க இப்ப என் கூட இருப்பது எனக்கு யானை பலம் வந்தமாதிரி இருக்கு! நீங்களும் உங்க களைப்புத் தீர குளிச்சு உடை மாத்தி ரெடியா இருங்க! சீக்கிரமே உங்களுக்கு நல்ல செய்தி சொல்றேன்! கௌதம் ஞானம் பெற எந்த போதி மரத்துக்கடியில் போய் ஒளிஞ்சிருந்தாலும் நாம கண்டு புடிச்சிரலாம்!” என்று அவரை அவன் அறைக்குள் விட்டவள்,

‘தாயைக் கண்ட கன்றுக்குட்டியின் துள்ளலோடு தன் அறைக்கு ஓடி, அவசர அவசரமா மடிக்கணினியை எடுத்துத் தன் மடியில் கிடத்தி பவரை ஆன் செய்தாள்.

ஒரு நாள் தாரா ஹாலில் அமர்ந்து தன் மடிக்கணினியை தன் மடியில் கிடத்தி ஏதோ மும்முறமாய் வேலை பார்த்துக் கொண்டிருக்க அங்கே வந்த கௌதம் அவளைக் கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருப்பதை அவளின் உள்ளுணர்வு உணர்த்த! தன் மேல் குறு குறு பார்வை ஒன்று சுழல்வதை உணர்ந்தவள், தலையை நிமிர்த்தாமலேயே

“என் செல்லத்துக்கு அம்மா மடியில படுக்கணுமா? உனக்கு என் மடியில் கிடக்கும் கணினியைப் பார்க்க பொறாமையா இருக்கா?”

‘தன் தலையை நிமிர்த்தாமல் தன் உள்ளக் கிடக்கையை படித்துவிட்டாளே என்று அவன் துணுக்குற,

“வாடா மகனே! அம்மா மடிக்கு வா, உனக்கு இல்லாத மடியா?” என்று தன் இரு கரங்களையும் விரித்து அவள் அவனை அழைக்க, அவளின் அந்த அழைப்பில், அவன் இதயமும் மூளையும் ஒரு முறை சுழன்று பின்னர் நின்று போனதாய் அவளிடம் கூறியுள்ளான். அந்தச் சுழற்சியில் நீந்திக் கரையேற அவனின் ஒரு முகம் முயன்றதாய் அன்று அவன் கூறினான்!

‘இதுபோல யாரோ ஒரு ஆண் அவனைத் தன் மடியில் கிடத்தி, பின் தன் கைவளைக்குள் பொதிந்து தூங்க வைத்துள்ளார்! யார்? யார்? முகம் தெரியாத அந்த ஆண்மகன் யார்!?’ இதுவும் அவன் அவளிடம் கேட்ட கேள்விதான். ஆனால் அவளின் காதல் கொண்ட மனம், தான் ஒரு மன நலமருத்துவர் என்பதையே அந்த வினாடி மறந்து போனது! அவன் கூறிய பதிலைக் காதில் வாங்காமல்

“என்னடா மகனே அங்கயே நின்னுட்ட, அம்மா மடில படுக்க ஆசை இல்லையா?” என்று கேட்க,

“எனக்கும் ஆசைதான் எந்த மடையனுக்காவது ஒரு தேவதையின் மடியில் படுக்கக் கசக்குமா? ஆனால் அந்த தேவதை எனக்கு சொந்தமாகனுமே! நீ எனக்கு சொந்தமானவுடன் உன்னை என் மடியில் போட்டுத் தாலாட்டுவேன், என்னோட பவி மாதிரி நீயும் என் குழந்தைதானே செல்லம்!” அவன் கூற்றில் உண்மை இருந்ததாகவே அவளுக்குத் தோன்றியது.

பேசிக்கொண்டே அவளருகில் வந்தவன், பறந்து கொண்டிருந்த அவளின் முடிக்கற்றைகளை ஒதுக்கிவிட்டு, நைட்டியில் போடப் படாமல் விடுபட்டிருந்த பட்டனைப் போட்டுவிட்டவன், துடிக்கும் அவள் விழிகளைப் பார்த்து,

“நான் என் மலரின் மடியில் தஞ்சமடையத்தானே ஏங்கி நிற்கிறேன்! என் மஹாராணியின் கைவளைக்குள் அடங்கும் ஒரு நாள் வரும்! அந்த நாளுக்காய் காத்திருப்பேன்” என்று அவளை பட்டும் படாமல் தன் கைகளுக்குள் அணைத்துக் கொண்டான்! அந்த ஆண்மையின் நெருக்கமும், அது தந்த போதையும், அவன் அணைப்புத் தந்த பாதுகாப்புணர்வும் அவளைக் கிறங்கடித்தாலும், இது போன்ற சந்தர்ப்பங்களில் அவன்தான் முதலில் விழித்துக் கொள்வான்!

அன்றும் அதுதான் நடந்தது! காதல் போதையிலிருந்த அவளை விழித்தெழ வைத்தான்! அவள் விரல்களை ஆதரவாய்ப் பற்றிக்கொண்டவன்,

“ரயில் விபத்து நடந்த நாளில் தொடங்கி, இந்த ஒரு வருஷம் மட்டும் முடியட்டும் தாரா! எனக்குக் கொஞ்சம் டைம் கொடு! அதுக்குள்ள என் மூளையில் ஏதாவது நினைவுகள் புரண்டு படுக்குதானு பார்ப்போம்! இல்லை என்னைத் தேடி யாராவது உறவுகள் வர்றாங்களான்னு பார்ப்போம்!” என்றவன் அவளுடைய மூடியிருந்த இமைகளைத் திறந்து, அந்த ஜன்னல்களின் மூலம் தன் கண்களிலிருந்த ஒளியைப் பாய்ச்சிக் கொண்டே, பேசினான்!

“இந்த நிமிஷம், நீ மட்டும்தான் இந்த மனசு ஃபுல்லா நிறைஞ்சு போயிருக்க, உன்னைவிட்டு என்னால ஒருநாளும் பிரிஞ்சிருக்க முடியாது! என்னை நம்புடா! செம்புலப் பெயல் நீர் போல அன்புடை நெஞ்சம் தான் கலந்தனவேனு’ ஒரு சங்க இலக்கிய பாடல் வரிதான் என் நினைவுக்கு வருது! நம் நெஞ்சங்கள் எப்பவோ கலந்து சேர்ந்திருச்சு! இந்த உடல் சுகம் எப்ப வேணா கிடைக்கும், ஆனல் இரண்டு இதயங்கள் இணையும் போது கிடைக்கும் பேரின்பத்தை விவரிக்க வார்த்தையே இல்லை!” என்று குறுந்தொகையை குத்தகைக்கு எடுத்த கவிஞன்போல அவன் பேச,

“சரி கவிஞரே! பாப்பா எந்திரிக்கிறதுக்குள்ள நான் இந்த ஆராய்ச்சி கட்டுரையை எழுதி முடிக்கணும், நம்மளைப் பத்திய ஆராய்ச்சியைப் பிறகு வச்சுக்குவோம்!” என்றவளிடம்,

“இதுதான் சரியான மருத்துவ ரீதியான பேச்சு! நீங்க பாப்பாவைப் பத்தி கவலைப் படவேண்டாம்! தன் கன்றிற்குப் பசிக்கும்போது பசுவிற்குப் பால் கொடுக்கத் தெரியும்!” என்று அவன் கூற,

“ஐயையோ! நீ காளையாச்சே!” என்றவளிடம்,

“தன் உயிரின் கலப்படமான சேயின் மூலம் ஒவ்வொரு தந்தையும் தன் தாய்மைபேற்றை அடைகிறான்; தாய்மைக்கு மட்டும் பால் வேற்றுமை கிடையாது! முதலில் நீங்க உங்க ஆராய்ச்சியை முடிங்க!”

“உன்னைப் பற்றித்தானே என் ஆராய்ச்சிக் கட்டுரையில் எழுதிக் கொண்டிருந்தேன், என் ஆராய்ச்சி முடிவதற்குள் நீ பறந்து சென்றாயா?!” என்று வலித்த தன் மனதிற்கு அவன் ஞாபகங்களைக் கொண்டே ஒத்தடம் கொடுத்தவள்;

நாவல் பழக் கவிதை1 .jpgஅவள் தன் மடியில் கிடந்த கணினியில் அவனைப் பற்றிய உண்மைகளைத் தேடத் தொடங்கினாள்! அவன் முதல் நாள் காலை, சென்னை-டில்லி ஜிடி எஃஸ்ப்ரஸ் விரைவு ரயிலில் பேங்க் ஏடிஎம் கார்டை உபயோகித்து இரண்டடுக்கு ஏஸி கோச்சில் தட்காலில் டிக்கெட் பதிவு செய்திருப்பதை அவனுடைய வங்கிக் கணக்கு தெள்ளத் தெளிவாகக் காட்டியது அவளுக்கு!

தொடரும்
 
Top