Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'என் கண்களில் காண்பது உன் முகமே' அத்தியாயம் 16

Advertisement

'என் கண்களில் காண்பது உன் முகமே' அத்தியாயம் 16

அத்தியாயம் 16

தாமரை, கௌதமிடம் தன் காதல் கதையைத் தொடர்ந்தாள்.

“நல்ல வேளை அகத்தியம், தொல்காப்பியம், சங்க இலக்கிய நூல்கள்னு இன்னும் சுத்தத் தமிழ் இலக்கிய நூல்களைப் படிக்காமப் போனீங்க!” என்று நான் அவனைத் தொடர்ந்து கலாய்க்க,

“யார் சொன்னது நான் சங்க இலக்கியம் படிக்கலைனு! எட்டுத் தொகை, பத்துப்பாட்டு, பதினென்கீழ் கணக்கு நூல்கள்னு எதைப் பத்தி வேணா கேளுங்க,,,

இல்லை பாரதியார், பாரதிதாசன் இவங்க பாட்டு வேணுமா? சொல்லுங்க எடுத்து விடுறேன்!” என்றவன்,

‘வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும்’ என்று குற்றால குறவஞ்சில திரிகூடராசப்பக் கவிராயர் குற்றாலத்தைப் பத்தியும் அந்த மலைகளைப் பத்தியும் எழுதியிருப்பாரே! அந்த அடித்துக் கொட்டும் அருவிகள் நிறைந்த அந்த குற்றாலம்தான் எங்க ஊரு! ஆனால் இன்னும் அந்த குற்றால நீர்வீழ்ச்சிகளை நான் பார்த்ததில்லை!”

“ஐயோடா சாமி! நீங்க சாதாரணமா, கண்ணதாசன், கவிகோ, சுரதா வைரமுத்து, தாமரை, பா.விஜய் கவிதைப் புத்தகங்களை வாங்கிப் படிங்க, இல்லைனா சிவாஜி, எம்.ஜி.ஆர், சினிமாப் பாடல்கள், டி.எம்.எஸ், சுசிலா, எஸ்.பி.பி, ஜானகி, பிபிஸ்ரீனிவாஸ் பாடிய பாடகல்கள்னு கடையில் கிடைக்கும். தினத்தந்தி, தினமலர்னு நாளிதழ் வாங்கிப் படிங்க, நல்ல பல தமிழ் எழுத்தாளர்களோட புத்தகங்களை வாங்கிப் படிங்க ஒரே மாசத்துல உங்க பேச்சுத் தமிழும், கவிதைத் தமிழும் எங்கயோ போயிரும். இப்ப உள்ள ட்ரென்டுக்கு கதை எழுதும் ஒராயிரம் தமிழ் எழுத்தாளர்கள் உண்டு!”

“உங்கள் அறிவுரைக்கு நன்றிகள் மாம்!” அவன் பவ்யமாய் நன்றி கூறியதில் மறுபடியும் முகம் சிவந்து, நான் கலகலவென்று சிரிக்க,

இப்படி சோவிகளை அள்ளிவீசுவது போன்ற இந்தக் கலகல சிரிப்புத்தான் அன்று அலுவலகத்தில் என்னைத் திரும்பிப் பார்க்க வைத்த்து! ஆனால் நான் ஒரு சாதாரண கணக்காளன் நீங்களோ, உயிரியல் தொழில்நுட்பத் துறையில் முதுகலைப்பட்டம் பெற்று இன்று மிகப் பெரிய ஆராய்ச்சியாளரா இருக்கீங்க!”

“என்னைப்பத்தி இவ்வளவு விஷயம் தெரிஞ்சு வச்சிருக்கீங்க! எப்படி?”

“அதுதான் மாம் உண்மை! நமக்குப் பிடிச்சவங்களைப் பத்தி நம்ம மனசு எப்பவும் ஆராஞ்சுக்கிட்டே இருக்கும்னு உங்களுக்குத் தெரியாதா?”

“டேய் இன்னொரு தடவை மாம்னு சொன்னா உன் கையில் வச்சிருந்தியே ஒரு செங்கோல் அதை வச்சே அடிப்பேன், அப்படியாவது உன்னை ஒரு சின்னப் பையனாட்டம் காட்ட ட்ரை பண்றியா!” என்று அதட்டிவிட்டு, என் தோழியரிடம் ஆங்கிலத்தில் சில உரையாடலின் நகலைமட்டும் மொழி பெயர்த்த நான், அவனிடம் திரும்பி சூடான சமோசாவும், ஃபில்டர் காப்பியும் கொண்டுவரப் பணித்தேன்.

இதுதான் எனக்கும் அஷ்வினுக்குமான காதல் கதையின் முதல் எபிசோட்!” என்று கௌதமிடம் கூறி முடித்தாள் தாமரை! ஒரே அலுவலகத்தில் வேலை பார்த்தாலும் எங்கள் காதல் அலுவலகத்தில் வளரவில்லை! ஆனால் வார இறுதி நாட்களில் ஹாஸியாபாத் வந்து நானும் அவனோடு சேர்ந்து ஊர் சுற்ற, எங்கள் காதல் வளரத் தொடங்கியது.

என் வீடு, என் பெற்றோர், அக்கா, மாமா, அவர்களின் பெற்றோர் என்று என்வீட்டின் அனைத்துக் கதாபாத்திரங்களும் அவர்களின் திருவிளையாடல்கள் என அவனுக்கு ஆதியோடந்தமாத் தெரியும். ஆனாலும் அவனுக்குள்ளேயே என்னைப் பற்றிய ஒரு நம்பிக்கையின்மை, என்னோடு யார் பேசிச் சிரித்தாலும் ஒரு வகையான பொறாமை, ஒரு விதமான பொஸஸிவ்னஸ் வளர்ந்து கொண்டிருந்தது! அது எங்களை வெவ்வேறு திசையில் தடுமாறச் செய்து, எங்களோட காதல் வண்டியை தடம் மாற்றிவிடுமோ என்ற பயம்கூட என்னிடம் இருந்தது!”

“பொறாமைப்படாத காதலர்களே இந்த உலகத்தில் இருக்க முடியாது தாமரை! உன் காதலன் பொறாமைப்படுகிறான் என்றால் அவன் இன்னும் அதிகமாய் உன்னைக் காதலிக்கிறான் என்று அர்த்தம். இவள் தனக்கு மட்டுமே சொந்தம் என்பதில் அவனுக்கு ஒரு கர்வம் இருக்கும்!”

“ஆனால் அந்த பொறாமை எவ்வளவு வேதனைகளைக் கொடுக்கும்னு தெரியுமா நண்பரே!”

“இல்லை தாமரை, அந்தப் பொறாமைதான் அந்தக் காதலோடு உன்னைப் பிணைக்கும் கண்ணுக்குத் தெரியாத பொன் விலங்கு என்பதை புரிஞ்சுக்க!”

ஒரு நாள் நாங்களிருவரும் கை கோர்த்துக் கொண்டு சிட்டி ஃபாரெஸ்ட் என்று சொல்லும் அந்தக் காட்டிற்குள் சென்று கொண்டிருந்தோம்! மிகவும் அழகான, கண்ணுக்கு விருந்தளிக்கும் பசுமை இலைக் காடுகளோடு, ஒரு சின்ன ஏரியும், படகுத் துறையும், குதிரை சவ்வாரியும் அங்கே உண்டு. நான் அங்குதான் அவன் என் மேல் எவ்வளவு சொந்தம் கொண்டாடுகிறான் என்ற உண்மையைப் புரிந்து கொண்டேன்.

அது ஒரு மாதிரி போதை தரும் சொந்தமாகவும் அதே நேரம், பயத்தைக் கொடுக்கும் பயங்கர பூதமாகவும் தெரிந்தது எனக்கு!”

‘போட்டிங் போகலாம்’ என்ற சிறு குழந்தையின் குதூகலத்துடன் அங்கே சென்றோம். முதலில் அவன் படகில் ஏறிவிட்டான். அதன் பின் நான் ஏறிய பொழுது பயங்கரமாய் அந்தப் படகு ஆட, என் உடம்பு தள்ளாட, அந்தப் படகோட்டி எனக்குக் கை கொடுக்க, நான் அந்த மனிதனின் படகு வலித்துக் காய்த்துப் போயிருந்த விரல்களை இறுக்கிப் பிடித்துக் கொண்டு படகில் ஏறி அமர்ந்தேன்!

அவ்வளவுதான் அஷ்வின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்கத் தொடங்கியது! அவன் காதுக்குள்ளிருந்து கரும்புகை வளைய வளையமாய் வெளியேறுவது போல் எனக்குத் தோன்றியது! அவன் முகம் சிவந்து அந்த படகோட்டியை வெறிக்க வெறிக்கப் பார்த்தவன், அவன் கையிலிருந்த என் விரல்களை வெடுக்கென்று பிடுங்கிவிட்டு,

“இறங்கு, இறங்கு, இந்த வெட்கங்கெட்ட படகுச் சவ்வாரி போதும், நீ நீரில் விழுந்தால் எனக்கு நீச்சல் தெரியாது! உன்னைக் கையில் அள்ளி அணைப்பதற்காகவே படகோட்டி உன்னை நீரில் தள்ளினாலும் தள்ளலாம்,,, அதன் பின்னர் அவனே நீரில் குதித்து,,,” அவன் படகோட்டிக்குப் புரியாத தமிழ் பாசையில் தமிழ் அகராதியில் இல்லாத கெட்ட வார்த்தை எல்லாம் சேர்த்து திட்டிக் கொண்டே போக,,,

நான் வெடுக்கென்று அவன் கரத்திலிருந்து என் கரத்தை விடுவித்துக் கொண்டு, நீரில் குதிக்க, அவனும் பின்னால் குதித்தான். அந்தப் படகோட்டி காச்சு மூச்சென்று ஹிந்தியில் கத்திவிட்டு,

“நீ போய்க்கோ! என் பெண்டாட்டியை நான் காப்பாத்திக்கிறேன்!” என்று சொல்லி என்னை அவ்விடம் விட்டு இழுத்துச் செல்ல, எங்களை ஏதோ புரியாத பாஷையில் திட்டிவிட்டு படகிலிருந்த மற்றவர்களோடு தன் படகுப் பயணத்தைத் தொடர்ந்தான் படகோட்டி. அவன் செய்கையால் மனம் வெறுத்துப் போன நான் முறைத்துக் கொண்டு ஒரு மரத்தின் அடியில் சென்று அமர்ந்துவிட்டேன். அன்றுதான் எனக்குப் புரிந்தது காதல் உணர்வுகளிலிருந்து, பொறாமையையும், காதலையும் பிரிக்க முடியாதென்று

சிறிது நேரம் அமைதியாய் என்னருகில் அமர்ந்திருந்தவன்,

“தாமரை உனக்காக ஒரு தமிழ் கவிதை எழுதி வந்திருக்கேன் வாசிக்கவா?” என்று கேட்டான். குழந்தை போல் முகத்தை வைத்துக் கொண்டு அவன் கேட்கவும், என் கோபம் பனித்துளிபோல் ஆவியாவதை என்னால் உணர முடிந்தது, ஆனாலும் கோபம் குறையாதது போல் நடித்துக் கொண்டே,

“என்ன? ‘நிலா நிலா ஓடிவா! நில்லாமல் ஓடிவான்னு’ பாடப் போறியாடா?” என்று வெடுக்கென்று நான் கேட்க,

“நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் அது நெருப்பாய் கொதிக்கிறது” என்று நான் பாடுறதுதான் இந்த காட்சிக்குப் பொறுத்தமா இருக்கும் என்று கர கர குரலில் அந்த பழைய பாடலைப் பாடி என்னை அதிரவைத்தவன், தொடர்ந்து ஒரு உண்மையான தமிழ்கவிதை படித்து என்னை மேலும் அதிரவைத்தான்.

“அழகு தமிழே! நீயும் நானும் ஒரே மொழி!
உயிரும் உடலும் இணைபிரியா தமிழ் மொழி!
உயிரையும் மெய்யையும் பிரித்துப்பார்,
நீ மறைத்து, மறித்து, மரித்து நின்றால்
உயிரும் மெய்யும் உதிர்ந்து வார்த்தைகள் மரிக்கும்!
வார்த்தைகளின்றி வரிகளின் ஜனனம் இல்லை!
வலிகளில் பிறப்பது உயிரின் ஜன்னம்
மரணத்தில் பிரிவது சேர்ந்த இரு உயிர்கள்! ஆனாலும்
விண்ணிலிருந்து கண் விழிப்பேன் ஓர் சந்திரனாய் நான்!
சந்திரனைப் பார்த்து கண்விழிக்கும் தாமரையாய் நீ!
என் சாவிலும் என்னை மட்டுமே பார்த்துக்
கண் மலர வேண்டும் நீ”


அவன் கவிதையைப் படித்தபின் என் மனதின் கோபம் முற்றிலுமாய் ஆவியாகிவிட, அவனைப் பற்றிய பிம்பம் என் மனதில் பெரிதாய் வளரத் தொடங்கியது! அதோடு அவனுக்கு நான் மட்டுமே சொந்தம் என்ற உரிமையும் அவனிடம் சேர்ந்து வளரத் தொடங்கியது!

எங்கள் இருவருக்குள்ளும் சண்டை வந்தால் என்னை அவன் மட்டுமே சொந்தம் கொண்டாடும் உரிமையைப் பற்றி விவாதிப்பதால் மட்டுமே வரும். எனக்கென்றொரு குடும்பம், பெற்றோர், அக்கா, மாமா, இன்னும் என்னைப் பிண்ணிப் பிணைந்த உறவுகள் அனைத்தையும் என் அருகிலிருந்து தெரிந்து கொண்டவன் அவன். என் அக்கா வாழ்க்கையில் குழந்தை இன்மையால் ஏற்பட்டுள்ள சிக்கல்கள், அவள் படும் துன்பங்கள், வசவுகள்’ என்று,

எதையும் அவன் காது கொடுத்துக் கேட்கத் தயாராயில்லை!

நானோ என் அக்காவோடு ஒண்ணு மண்ணாய் பழகியவள். அவள் மலடி என்ற புனைபெயரோடு அசிங்கப்படுத்தப்பட்டு, அதனால் அவள் படும் வேதனைகளையும், கண்ணீரையும் அருகிலிருந்து பார்த்தவள் நான். அவளுக்கு என்னை விட்டால் அவள் துன்பங்களைப் பகிர்ந்து கொள்ள ஒரு ஜீவன் கூட அருகில் இல்லை! அவள் வாழ்க்கையில் ஒரு விடிவிளக்கை ஏற்றவேண்டும் அதுமட்டும் தான் என் லட்சியமாயிருந்தது! ஆனால் காதலில் சிக்கிய என்னை அவன் வேறொரு திசையில், இழுத்துச் சென்றான். இரண்டும் என்றுமே ஒன்று சேரமுடியாத ரயில்பாதை போல் தோன்றியது எனக்கு!”

“ரயில் பாதைகளும் ஓரிரு இடங்களில் இணைந்து பிரியும் தாமரை!!!”

“அந்தப் பாதைகளை இணைக்கும் பாயின்டுகளைத்தான் நான் உன்னிப்பாக தேடத் தொடங்கினேன்.

ஒருநாள் நாங்கள் ஹாஸியாபாத்தில் உள்ள ஸ்வர்ண ஜெயந்தி பார்க்கில் அமர்ந்திருந்த பொழுது பேச்சுவாக்கில் நான் அவனை ‘மாமா’ வென்றழைக்க, அவன் முற்றிலுமாக அதிர்ந்து போனான்!

“சொல்லு! சொல்லு! இப்ப என்ன சொல்லி கூப்பிட்ட?!” என்று என்னை அதிர்ச்சியோடு கேட்க,

“மாமானு கூப்பிட்டேன். புருஷனாகப் போறவனை மாமானு கூப்பிடாம அங்கிள், சித்தப்பா, பெரியப்பானா கூப்பிடமுடியும்!?” என்று முசுமுசுவென்ற கோபத்தில் நான் கத்த,

“ஹா ஹா!” வென்று பெருங்குரலெடுத்து சிரித்தவன்,

“ஏய் குத்தா! (நாய்) நீ உன் அக்கா புருஷனையும் மாமான்னு சொல்வ என்னையும் மாமான்னு சொல்லுவியா?” என்று ஏழூரு நக்கலில் அவன் கேட்க, அவன் கேள்வியிலிருந்த ஞாயம் எனக்குப் புரிந்தது.

“ம்ம்ம்ம்ம்ம்!!! அப்புறம் எப்படிக் கூப்பிடுறதாம்!?” என்று சற்றே கோபம் தணிந்த குரலில் கொஞ்சலாகக் கேட்ட நான், சிறிது யோசித்துவிட்டு,

“தமிழ் நாட்டில் ஒவ்வொரு ஊருக்கும் ஒரு பழக்கம் இருக்கும், நான் சொல்றேன் நீ செலக்ட் பண்ணிக்கோ! காரைக்குடி பக்கம் ஏங்க? ஏங்கனு? புருஷனைக் கூப்பிட்டு ஏங்க வச்சிருவாங்க; கோவைப் பக்கம் ஏனுங்கோ இந்தாருங்கோனு கவிதையா கூப்பிட்டு உருக வைப்பாங்க; திருநெல்வேலி பக்கம், எலே? என்னலேனு மரியாதை இல்லாம இருந்தாலும் அதில் ஒரு உரிமை இருக்கும்; மதுரையில் வாங்க இருங்கனு பேச்சில் ஒரு மரியாதை இருக்கும்; சென்னையில் ‘இன்னாமே! கஸ்மாலம், வந்து குந்துமேனு மரியாதையை அப்படியே குதறிப் போட்டுருவாங்க; விருதுநகர், சிவகாசி பக்கம் அவிய இவியனு சொல்லி, நம்மளை வெண்ணித் தண்ணிப் பானையில போட்டு அவிச்சு எடுத்திருவாங்க; உன்னை எப்படி கூப்பிடணும்னு நீயே சொல்லு!” நான் சொல்வதை முகத்தில் புன்னகையோடு கேட்டுக் கொண்டிருந்தவன்,

“முக்கியமான ஒரு முறையை விட்டுட்டியே கண்ணம்மா!” என்று என் முகத்தை நிமிர்த்தி என் கண்களில் பார்த்தவனின் கண்களில் குளிர் நிலவின் ஒளி இருந்தது! அவனின் லேசான ஸ்பரிசத்தில், என் மனம் ஆனந்தக் களிநடம் புரிய,

“சொல்லு!” என்றேன் ஒருவித மயக்கத்தில். என்னை அவனுடைய தோள்மேல் சாய்த்துக் கொண்டவன்,

‘அத்தான் என்னத்தான், அவர் என்னைத்தான்
எப்படிச் சொல்வேனடி-அவர் கையைத்தான்
கொண்டு மெல்லத்தான்- வந்து கண்ணைத்தான்
எப்படி சொல்வேனடி?”


என்று அழகான குரலில் பாடிக் கொண்டு அவன் கரங்கொண்டு என் கண்களை மூட, அந்த நிமிடம் அவனை முழுமையாக நம்பினேன். அதற்கு மேல் அவன் விரல்கள் எதையும் தேடி அலையாமல் அவற்றை என் விரல்களுக்குள் சிறை எடுத்த நான்,

“பெண்ணைத்தான் கண்டு துடித்தான்,
அழைத்தான், சிரித்தான் அணைத்தான்”


என்று அந்தப் பாடலை பாடி முடித்த நான், “நீ சரியான கேடிடா, நீ என்னை ‘அத்தான்னு’ ஒரு மந்திரச் சொல் கொண்டு, தந்திரமாய் உன்னைக் கூப்பிடச் சொல்ற, என்னைப் பொறுத்தவரை அந்த வார்த்தை கணவனின் மனதைத் திறக்கும் மந்திரக்கோல்! ஆனால் என் காதல்மேல் அடிக்கடி நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வரும் உன்னை நான் எப்படி நம்பி அத்தான்னு கூப்பிடுறது?!”

“தாமரை உன் காதல் வேணா தாமரை இலைத் தண்ணீர் மாதிரி என்கிட்ட முழுசும் ஒட்டாம இருக்கலாம், ஆனால் நான் அப்படி இல்லை, நீ எனக்கே எனக்கு மட்டும்தான் சொந்தம்னு எப்பவோ உளி கொண்டு செதுக்கி வச்சுட்டேன் உன்னை என் உயிரோடு கட்டிப் போட நினைக்கிறேன்!” அந்த வார்த்தைகளில் நான் கோபத்தோடு அதிர்ந்து போனேன்

“என் காதலில் உனக்கென்னடா சந்தேகம்!” என்று அவனை நான் உலுக்க; “இருக்கு!” என்று மிக அழுத்தமாகக் கூறியவன்,

“எனக்குச் சந்தேகம் இருக்கு, உங்கக்கா, நீ மாமாவைக் கட்டிக்கலைனா செத்துப் போயிருவேன்னு ஒப்பாரி வச்சா உடனே, பெற்றோர், அக்கா மாமான்னு ஓடிப்போயிருவியோனு தோணுது!”

“அந்த உறவுகளெல்லாம் உன் உறவுக்கு முன்னாலயே எனக்கு உறவானவர்கள் அஷ்வின்! காதலின் முதல் அரிச்சுவடியே நம்பிக்கை, அது இல்லைனா நாம எப்படி காதலிச்சு புருஷன் பொண்டாட்டியாய் குப்பை கொட்டப் போறோம்னு தெரியலை!” நான் உண்மையான வருத்தத்துடன் பேசினேன்.

“அது அப்படி இல்லடி, என்னால் உன்னை ஒரு மைக்ரோக்ராம் அளவுகூட யாருக்கும் விட்டுக் கொடுக்க முடியாது! நீதான் மை ஆல்பா அன்ட் ஒமேகா! என் ஆதியும் அந்தமும் ஆனவள், நம் வாழ்க்கை சூரியனில் தொடங்கி சந்திரனில் முடிந்தாலும், ஜனனத்திலிருந்து, மரணம் வரை நீ என்னவள். உன் உச்சிமுதல் பாத நுனிவரை எனக்கே சொந்தம்!

“அப்ப நாளைக்கு நமக்குக் குழந்தைகள் பிறந்தால்,,,?”

“ம்,,, ம்,,, ம்,,,” என்று யோசித்தவன், “நீ என்னைக் குழப்பாத நாயே!” என்று மறுபடியும் கோபத்தில் கத்தியவன், என்னை இழுத்துக் கொண்டு அந்தப் பார்க்கைவிட்டு வெளியேறினான்.

“உன் காதலனுக்குத்தான் உன்மேல் எவ்வளவு அன்பு!” என்று கௌதம் கூற, “மண்ணாங்கட்டி!” என்று சலித்துக் கொண்டவள்,

“அந்த உயிர் காதலன்தான் எனக்கு ஒரு பிரச்சனை என்றவுடன், அதைத் தீர்க்க என்ன வழி என்று சொல்லாமல் ‘ப்ரேக் அப்’ என்று ஒரே வார்த்தையில் என் மனதை உடைத்துவிட்டு ஓடிப் போனான்.

“உன் மேல் உண்மையான அன்பிருப்பவன் என்றால் உன்னிடம் அவன் திரும்பி வருவான்!”

“இப்படி ஒரு நிலையில்லா மனதுடனும், ஓவர் பொஸஸிவ்னஸ் உள்ளவனுடனும் என் வாழ்க்கையைப் பிணைத்துக் கொள்ளச் சொல்றியா கௌதம்!?”

“ஷ்யூர், அஷ்வின் உன்னை அளவுக்கதிகமா நேசிச்சதைவிட வேறு எந்தத் தப்பும் செஞ்ச மாதிரித் தெரியலை!

“உன் காதலன்கிட்ட, ஜவடாலா தடாலடியா ‘என் மாமாவைத் திருமணம் செஞ்சுக்கப் போறேன்னு சொன்னவக் கிட்ட, அவன் மறுபடியும் முகம் கொடுத்துக் பேசுவது கூடத் தவறுதான்!”

“அந்தக் காதல் கிறுக்கனாலும் என்னை விடமுடியாதுனு தெரியும் கௌதம், இப்பக்கூட அவன்,

“சாதி மல்லிப் பூச்சரமே சங்கத் தமிழ் பாச்சரேமேன்னு” எங்காவது பாடிக்கிட்டுத் திரிவான்,

ஆனால் அவன் ‘ப்ரேக் அப்னு’ சொன்ன ஒரே வார்த்தையில என் மனசே உடைஞ்சு போச்சு கௌதம். ஆனாலும் எனக்கு அவன் தமிழ் ரொம்பப் பிடிக்கும், அவன் காதல் எனக்கு ரொம்ப ரொம்பப் பிடிக்கும், என் மேல் வச்சிருக்க அந்த பொஸஸிவ்னஸ் எனக்கு மிகப் பெரிய கர்வத்தைக் கொடுக்குது. ஆனால் அதை வெளிய காட்ட என் ஈகோ என்னைத் தடுக்குது!”

“அந்த ஈகோவைக் கடந்து வா! அப்பத்தான் அவனுடைய காதல் மனதில் வழியும் இன்பத் தேனைத் துளித் துளியா உன்னால் சுவைக்க முடியும்!”

“நீயும் அவனை மாதிரியே ரொம்ப அழகாப் பேசுற,,, கௌதம்! அவன்கிட்ட கண்ணதாசன், வாலி, வைரமுத்து இன்னும் பல கவிஞர்களின் பாடல்களைப் படித்து உன் தமிழை வளர்த்துக்கோனு சொன்னாலும் சொன்னேன் அப்பாடி என்னை அவன் அந்தக் கவிதைப் பூச்சரங்களில் மூழ்கடித்து, துடுப்புகள் இல்லாத மீன் மாதிரி என்னை அவனுக்குள்ளேயே கைது செய்து வச்சிட்டானுதான் சொல்லணும். முதலில் என்னை நாணத்தில் முகம் சிவக்க வைத்தான்.

“உன்னைநான் பார்க்கும் போது மண்ணை நீ பார்க்கின்றாயே
விண்ணை நான் பார்க்கும் போது என்னை நீ பார்க்கின்றாயே
நேரிலே பார்த்தாலென்ன நிலவென்ன தேய்ந்தா போகும்
புன்னகை புரிந்தால் என்ன பூமுகம் சிவந்தா போகும்!”


என்று அழகாய் தமிழில் பாடி என் முகத்தை அவன் கரங்களில் அள்ளிய அந்த நிமிடம், அந்த உண்மையான காதல் உணர்வுகளை அவன் கண்களில் பார்த்து, அவன் ஸ்பரிசத்தில் உணர்ந்து அதிசயமாய் வெட்கத்தில் என் முகம் சிவக்க அவன் கரங்களில் நான் துவண்டு போனேன்! அதுதான் ஒரு ஆணின் கரங்களில் நான் உணர்ந்த முதல் காதல் ஸ்பரிஸம்

“ரொம்ப ஸ்வாரஸ்யமா எந்தவித மனத் தடைகளுமின்றி உன் கதையை என்கிட்ட ஷேர் பண்ற தாமரை! இதுதான் உண்மைத் தோழமையின் மகத்துவம்! என்னை நம்பி சொல்ற பார்த்தியா, இந்த மனப் புரிதலை நான் எப்பவும் பத்திரமாப் பாதுகாப்பேன் என்றான் கௌதம். தொடரும்IMG-இஉசூ 0010.jpg
 
அருமை மேம், என்ன விடயமென்று விசாரிக்காமல் பிரேக்அப் சொல்றவன் எப்படி உண்மையான லவ்வரா இருக்க முடியும், இந்த காதல் என்ன காதலோ.....
 
அருமை மேம், என்ன விடயமென்று விசாரிக்காமல் பிரேக்அப் சொல்றவன் எப்படி உண்மையான லவ்வரா இருக்க முடியும், இந்த காதல் என்ன காதலோ.....
இந்த ப்ரேக் சமாச்சாரமெல்லாம் இந்தக் காலக் காதலில் மிகவும் சகஜமப்பா! இன்னைக்கு வெட்டிக்குவோம் நாளைக்குக் கட்டிக்குவோம் மாதிரிதான்
 
Top