Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'என் கண்களில் காண்பது உன் முகமே' அத்தியாயம் 17

Advertisement

'என் கண்களில் காண்பது உன் முகமே' அத்தியாயம் 17

அத்தியாயம் 17 பவி யார் குழந்தை?

ஒரு ஆண் நம்மை ஏமாற்ற மாட்டான், நாம் கூறும் ரகசியங்களை உள்ளக்கிடக்கைகளைப் பத்திரமாய்ப் பாதுகாப்பான் என்ற நம்பிக்கையை உங்க தோழமை கொடுத்திருக்கு கௌதம்! எனக்கு ஒரு நல்ல பாதை காட்டுவீங்கனு நான் நம்புறேன்! ஒரு காதல் மனதிற்குத்தான் இன்னொரு காதல் மனசை புரிஞ்சுக்க முடியும்! அவன் பாடி என் மனதில் பதிந்த இன்னும் சில பாடல் வரிகளைச் சொல்றேன் கேளுங்க,,,

“நிலவிடம் வாடகை வாங்கி உன் விழியினில் குடிவைத்தாய்!”
நான் சாயும் தோள் மீது வேறாரும் சாய்ந்தால் தகுமா?”
முன்பே வா என் அன்பே வா
நான் நானா கேட்டேன் என்னை நானே
நான் நீயா என் சொந்தம் சொன்னதே!”


இப்படி எண்ணிலடங்கா பாடல்கள் கௌதம்! ஒருநாள் அவன்,

“அன்னப்பொடி நடை முன்னும் பின்னும் ஐயோ ஐயோ என்றது
வண்ணக்கொடி இடை கண்ணில் விழுந்து மெய்யோ பொய்யோ என்றது
கன்னிப்பருவம் உனைக்கண்டு காதல் காதல் என்றது
காதல் என்றதும் வேறோர் இதயம் நாணம் நாணம் என்றது”


என்று பாடியவன், என் கண்களில் முத்தமிட்டு என்னை மறுபடியும் நாணத்தில் கண்சிவக்க வைத்தான். எங்கள் இருவர் மனதிலும் தோன்றிய காதல் உணர்வுகளை நான் பொய்யென்று சொல்ல மாட்டேன், ஆனால் அவை அனைத்தும் பொய்மையாகிவிடுமோனு இப்ப பயமாயிருக்கு!”

“பயப்படாதடா, உண்மையான காதல் என்றும் தோற்காது! ஆனால் என் காதல் தோற்றுப் போனது! ஏன்னா அந்தக் காதலில் பொய்மை கலந்திருக்கலாம் என்று இப்பத் தோணுது!"

“யாரு உங்க காதலி தாராவையா சொல்றீங்க?”

“இல்லை என் காதல் மனைவி சிந்துவைப் பற்றி சொல்றேன்! தூர்ந்து போன என் நினைவலைகளின் குளம் இப்பப் பெய்யும் ஞாபக மழையில் துளித் துளியா நிரம்ப ஆரம்பிச்சிருக்கு!”

“ட்ராஜிக் லவ் ஸ்டோரியா கௌதம்?!”

“ப்ச்,,,ம்,,,!” என்று தலையாட்டியவன் தன் மடியில் எந்தக் கவலையுமின்றி தந்தை மடியே சொர்க்கம் என்பது போல் உறங்கிக் கொண்டிருந்த தன் குழந்தையைப் பார்த்தான்!”

அவள் முகத்தில் கலைந்து கிடந்த முடியை ஒதுக்கியவன், என் குழந்தை பவியைத் தூக்கிக் கொண்டு வெளிநாட்டிலிருந்து வந்தவுடன் தனிமையில் வாடும் என் தாயை சந்திக்க முதலில் டில்லி-சென்னை விமானத்தில் பறந்து பின்னர் அவர்களை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் சந்திக்க வேண்டுமென்ற அவசரத்தில், சென்னை-கோவை ஃப்ளைட்டில் செல்லாமல் மதியம் கிளம்பி இரவில் கோவை செல்லும் பகல் நேர இன்டர்சிட்டி விரைவு வண்டியில் பயணம் செய்துள்ளேன்.

அந்த வண்டிதான் ஈரொடுக்கு அருகில் ஒரு காட்டுப் பகுதியில் விபத்துக்குள்ளான ரயில். நான் அதில் பயணம் செய்தது யாருக்குமே தெரிய வாய்ப்பில்லை, ஏன்னா என் கையிலிருந்தது அன்ரிசர்வ்ட் ஓப்பன் டிக்கெட். அதிகப்பணம் கட்டி அதை இரண்டாம் வகுப்பு ஏசி இரண்டடுக்குப் பெட்டி டிக்கெட்டா மாற்றி பயணம் செய்துள்ளேன்.

அதன்பிறகு நடந்த விபத்தில்தான், தாரா டாக்டரால் நான் காப்பாற்றப்பட்டு, நினைவிழந்து, நான் யாரென்றே தெரியாத நிலையில் அவர்களோடு இந்த ஒரு வருடமும் ஒரு வசந்தகாலக் காதல் வாழ்க்கை வாழ்ந்துள்ளேன். அது என் கதையில் வரும் ஒரு அற்புதமானக் கிளைக்கதை!

ஒரு மாதம் கழித்து தெளிவான உணர்வுகளுடன் நான் கண் விழித்த பொழுது என் மூளையும் விழித்துக் கொண்டது! ஆனால் அந்த மூளைக்குள் ஒரு ஊனம்! தன் இறந்தகாலத்தை முற்றிலுமாக மறந்த நிலை! என் அருகில் ஒரு குழந்தை இருந்தது!. நான் ரயிலிலிருந்து குழந்தையோடு தரையில் உருண்டு சென்று ஒரு ஆறடி பள்ளத்தில் புதைக்கப்பட்டதுதான் என் மூளை கடந்த காலத்தைப் பற்றி மறக்காத ஒரே ஞாபகம்.

என் அருகில் என் குழந்தை இருப்பதைப் பார்த்து என் மனம் சாந்தி அடையத் தொடங்கியது! ஆனால்,,,ஆனால் அன்று இருந்த என் குழந்தையின் முகத்தை இந்த வினாடி என் அகக்கண்களால் பார்க்க முடியுது. என்னதான் என் நினைவிழப்பிற்குப் பின் ஒருவருடம் கடந்திருந்தாலும்,,,கௌதம் அதற்கு மேல் பேசமுடியாமல் அவன் முதுகு குலுங்கத் தொடங்க, அதிர்ந்து போனாள் தாமரை. அவன் கண்ணீரின் ஒரு துளி குழந்தையின் முகத்தில் பட்டுத் தெரிக்க சிலிர்த்துக் கொண்டு கண் விழித்தது குழந்தை!

அவன் மடியிலிருந்து எழுந்த குழந்தை அவனின் நீர் நிறைந்த கண்களைப் பார்த்து, “அச்சசோ! அச்சோ தலை வலிக்குதாப்பா?!” என்று தன் பிஞ்சுக்கரத்தால் அவன் நெற்றியை எவ்விப்பிடிக்க,

“இல்லடா செல்லம்! கண்ணில் தூசி விழுந்திருச்சு!” என்று அவன் கண்களைத் தேய்க்க, ஏற்கனவே கண்ணீரில் சிவந்திருந்த அவன் கண்கள் மேலும் சிவந்து போனது!

பவி உடனே அவன் மடியிலேறி நின்று, “தாராம்மா தூசி விழுந்தா பாப்பாக் கண்ணை இப்படித்தான் ஊதி விடுவாங்க!” என்று அவனுடைய கண்களைத் தன் விரல்களால் பிரித்து தன் சிறிய செவ்விதழ் குவித்து பூ! பூ! என்று ஊதத் தொடங்க கௌதமின் கண்கள் இன்னும் அதிகமானக் கண்ணீரைப் பெறுக்கியது!

தாமரை எழுந்து அவன் கண்ணீரைத் தன் கையிலிருந்த கைகுட்டையால் துடைத்துவிட்டு,

“பீ காம் கௌதம், குழந்தை முன்னால் அழாதீர்கள்” என்று ஆங்கிலத்தில் கூறியவள்,

“டாடிக்கு ஒரு பிரச்சனையும் இல்லை பவிமா, சும்மா கண்ணுல இருக்க அழுக்கை கண்ணீர்விட்டு கழுவுறாரு அப்பா! என் தோழி ஒருத்தி குளிக்கும் போது அழுக்குப் போக மூக்குக்குள்ள தண்ணிவிட்டு கழுவுவேனு சொல்வா அது மாதிரி,,,” அதைக் கேட்டுத் தன்னை அறியாமல் குப்பென்று சிரித்தவன்,

“ஆன்ட்டி கூடப் போய் ஃபேஸ் வாஷ் பண்ணிட்டு வாடா நாம கொஞ்ச நேரம் மொபைலில் உனக்குப் புடிச்ச கேம் விளையாடலாம்!” என்று அவன் கூற,

“ஃபர்ஸ்ட் நீங்க போயிட்டு வாங்க கௌதம், உங்க முகம்தான் நிலவில் தெரியும் திட்டுக்கள் போல ரொம்பக் கலங்கிப் போயிருக்கு, நான் பவியை பார்த்துக்கிறேன்!” என்று அவனை அனுப்பி வைத்தாள்.

தாமரை கூறுவது போல கடந்த சில மணி நேரங்களாக அவன் மனம் கலங்கித்தான் போயிருந்தது. ஒரு வருடத்திற்கு முன்னால் அவன் கையிலிருந்த குழந்தையின் முகம் அவன் கண்களில் தெரிந்தது!

“ஓ! மை காட் அப்படி என்றால் இந்தக் குழந்தை யார், அவன் நினைவில் தோன்றும் அந்தக் குழந்தை எங்கே!? இறைவா இவ்வளவு கொடுமையான நினைவுகளைக் கொடுக்கும் அந்த ஞாபகங்களை நிரந்தரமா அழிச்சிருக்கலாமே! ரெஸ்ட் ரூமிற்குள் சென்றவனை, ரெஸ்டே இல்லாமல் அவனுடைய மூளைக் குத்திக் குத்திக் கிழிக்கத் தன்னைச் சுற்றி யாருமே இல்லை என்ற தைரியத்தில் வாய் விட்டுக் கதறி அழத் தொடங்கினான்.

இந்த அழுகை யாருக்காக என்று அவனுக்குத் தெரியவில்லை

‘தன்னைப் பிரிந்து சென்ற சிந்துவுக்காகவா?

இல்லை தன்னிடமிருந்து பிரிக்கப்பட்ட தன் குழந்தை பவிக்காகவா?

இல்லை தான் தாராவிடமிருந்து பறித்துக் கொண்டு ஓடிவரும் இந்தக் குழந்தை பவிக்காகவா?

இல்லை தன் உயிரைக் காத்து தன்னை உயிரினும் மேலாகக் காதலித்த ஒரே குற்றத்துக்காக தாராவின் மனதை சுக்கு நூறாக உடைத்துவிட்டுச் சொல்லாமல் கொள்ளாமல் ஒரு கள்வனைப் போல் ஓடிவருகிறானே அதற்காகவா!?

அவனுக்குப் புரியவில்லை. இப்பொழுது சென்னையிலும் இல்லாமல் டில்லியிலும் இல்லாமல் நடுவழியில் ஒரு ரயில் பயணத்திலிருக்கிறான் அவன்.

இதைவிட மோசமான திரிசங்கு நரகம் வேறு எதுவும் இருக்க முடியாது! எல்லா வழிகளும் அடைக்கப்பட்டு முட்டி நிற்கும் இந்தக் குறுக்குச் சந்தில் அவன் கைபற்றி நடக்கக் கூடிய ஒரே தோழியாய் தாமரை என்ற பெயரில் ஒரு ரயில் ஸ்நேகிதி!

இந்த வினாடியில் அனைத்தையும் தொலைத்த அவன் வாழ்க்கைக்கு அவள் மட்டும்தான் ஒரு பற்றுக்கோல். முகத்தில் படிந்திருந்த கண்ணீர் கரைகளைக் கழுவி விட்டு ரெஸ்ட் ரூமிலிருந்து வெளியே வந்தான் கௌதம்.

ஓடும் ரயிலில் அறைகுறையாகத் திரைகொண்டு மூடப்பட்டிருந்த கண்ணாடி ஜன்னல்களின் வழியே தெரிந்த தெளிந்த வெளிர் நீல வானம் போல மேகத் திட்டுக்களின்றி அவன் மனம் சற்றே தெளிந்திருந்தது! பளிச்சென்ற முகத்துடன் அங்கே தோன்றிய கௌதமைப் பார்த்து,

“இந்த சித்தார்த்தனுக்கு பாத்ரூமில் ஞானம் பிறந்தது போல இருக்கு!”

“இல்ல தாமரை, என் மனதை கொஞ்சம் கண்ணீரில் கழுவிவிட்டேன், இப்ப மனசு கொஞ்சம் லேசா இருக்கு!”

“நம்ம கதையை குழந்தை தூங்கியபின் கன்டின்யூ பண்ணலாம், அதுவரை குழந்தையோடு விளையாடலாம்!” என்று சொல்லிவிட்டு பவியோடு அவர்கள் துன்பங்களையும் அள்ளிக் கொண்டு ரெஸ்ட் ரூம் சென்றாள் தாமரை!

அவளுக்கு நன்றாகப் புரிந்தது, கௌதமின் இறந்த காலம் ஒன்றும் சுகமாமாக இருக்கப் போவதில்லையென்று. சுகமாக இல்லை என்றாலும் அந்தச் சுமைகளை இறக்கிவைக்கும் ஒரு சுமைதாங்கிக் கல்லாய்த் தான் இருக்கலாமே என்ற முடிவுடன் அவனுடைய கதையைக் கேட்க வந்தாள் தாமரை.!

விமானத்தில் தானும் கௌதமின் அம்மா கற்பகமும் டில்லி செல்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் முடித்துவிட்டு, கற்பகத்தின் அருகில் வந்தமர்ந்தாள் தாரா!

கற்பகத்தின் கண்கள் டாக்டர் தாராவையே சுற்றிச் சுழன்றது. அவளுடைய, அழகும், அன்பும், தான் ஒரு டாக்டர் என்ற எந்த ஒரு பந்தாவுமின்றி அவளுடைய பணிவான பேச்சுக்களும், கற்பகம் மனதை மயங்க வைத்தது! இதுவரையிலும் தன் மருமகளைத் தன் கண்ணிலேயே காட்டாமல் திரை சீலைகளுக்குப் பின்னே மறையும் பெண்ணைப் போல் மறைத்து வைத்து விட்டான் கௌதம். அவளுடைய ஒரே ஒரு புகைப்படத்தை மட்டும்தான் பார்த்திருக்கிறாள்

அதையே பலமுறை பார்த்துப் பார்த்து மூளையில் பதிவேற்றம் செய்ததில் அழிக்கமுடியாத ஒரு ஃபைலாய் அவள் மனதில் பதிந்து போனாள் சிந்து! அதனால்தான் தாராவைப் பார்த்த மறுநிமிடம் இவள் சிந்து இல்லை என்பதை அவளால் அடித்துக் கூற முடிந்தது! ‘இதோ இந்தப் பெண் தாரா என் மருமகளாய் இருக்கக்கூடாதா?’ என்று அவள் மனம் ஏங்கத் தொடங்கியது!

டாக்டருக்கோ மறுத்துவமனையிலிருந்து விடாத கைபேசி அழைப்புகள்! அனைவருக்கும் நின்று நிதானமாய் பதில் கூறிக் கொண்டே கற்பகத்திடம் வந்தவள்,

தன்னையே வெறித்து நோக்கிக் கொண்டிருந்த கற்பகத்தைப் பார்த்து,

“என்னாச்சு ஆன்ட்டி, என்கிட்ட எதையோ தேடுற மாதிரி உங்க எஃஸ்ரே கண்கொண்டு என்னைத் துளைச்சுப் பார்க்கிறீங்க!”

“நீ சரியா சொன்னம்மா! நம் கண்களுக்குக் கடவுள் அந்த எஃஸ்ரே கண்களுக்கான பவரையும், லேசர் கதிர்களுக்கான சக்தியையும் கொடுத்திருந்தா இந்நேரம் உன் தோல் முதல், எலும்புகள் வரையிலான அனைத்து உள்ளுறுப்பையும் ஸ்கான் பண்ணி உனக்குள் புதைந்து கிடக்கும் ரகசியங்களையும் கண்டு பிடிச்சிருப்பேன்!”

“ஒரு ரகசியமும் இல்லை ஆன்ட்டி! இந்த ஒரு வருடமும் நானும், காதல் இளவரசனான உங்கள் மகனும், வரம்பு மீராத காதல் பறவைகளாய் இந்த வீட்டிற்குள் வலம் வந்தோம். எங்களுக்குள் எந்த ரகசியங்களும் இல்லை, முழுமையான பகிர்வுகளும், புரிதலும் மட்டுமே இருந்தது.

நான் ஒரு டாக்டர், என்னிடம் அவன் ஒரு நோயாளி, ஆனால் எங்களுக்கிடையில் இருந்த புரிதலையும், உரிமையையும், பாசத்தையும், காதலையும் ஒரு வரையரைக்குள் சொல்ல முடியாது! வாய் வார்த்தையில் கூற முடியாத ஒரு புனிதமான உறவது.

அதோடு நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பிரிய முடியாதென்பதும் எங்க ரெண்டு பேருக்கும் நல்லாத் தெரியும். அதனால்தான் என் கைவளைக்குள் இருந்தவன் என்னிடம் சொல்லாமக் கொள்ளாமத் தப்பிச்சு ஓடப் பார்த்திருக்கான், ஆனால் முடியாது! நானில்லாமல் ஒவ்வொரு வினாடியும் அவன் தவிச்சுப் போயிருப்பான்!

சரி இப்ப இந்த இரவு உணவை முடித்துவிட்டு இரவு விமானத்தில் நாம டில்லி கிளம்புறோம். அவன் போற ரயில் டில்லியை ரீச் பண்றதுக்குள்ள நாம டில்லி ஏர்போர்ட்டிலிருப்போம்!”

“அவன் டில்லிக்குப் பக்கத்தில் நொய்டாவில் வேலை பார்த்தது உனக்குத் தெரியுமா தாரா?!”

“நொய்டா வரை தெரியும்! வேலை பார்த்த கம்பனி பேர் தெரியாது. ஆனால் உள்ள போய் அவன் பயோடேட்டா கொடுத்து சர்ஃபிங்க் பண்ணினா வெப் அனைத்து உண்மைகளையும் கக்கிவிடும்!”

ஓரு வாரத்துக்கு முன்னாடி அவனைப் பற்றிய விபரங்கள், மற்றும் அம்மா, அப்பா, டில்லி செல்வதற்கு முன்னால் அவர்களோடு அவன் வாழ்ந்த வாழ்க்கை என்று பல ஞாபகங்கள் அவன் மனதில் புரளத் தொடங்கி இருந்தது வரை என்னிடம் பகிர்ந்து கொண்டுள்ளான்!

அதுவும் ஸ்விம்மிங்க் பூல் அருகே விளையாடிக் கொண்டிருந்த குழந்தை பவி, தண்ணீரில் விழ அதைப் பார்த்தவன் பவி என்று கத்திக் கொண்டே மூளை ஸ்தம்பித்து ஒரு வினாடி ஒரு மரமாய் நின்றவன்; அவளைக் காப்பாற்றத் தண்ணீரில் விழுந்து அப்படியே மயங்கிவிட்டான். ஓடிவந்த நான் தண்ணீரில் கிடந்தவனை மேலே இழுத்து வந்து சிகிச்சை செய்ததில் மயக்கம் தெளிந்து பல விஷயங்களைக் கொட்டத் தொடங்கினான். ஆனாலும் அவன் இங்கிருந்து கிளம்பும் வரை முழு ஞாபகங்களும் அவனுக்குத் திரும்பவில்லை!

அந்த ஞாபகங்கள், சிந்து, பவி, டில்லி, நொய்டா கம்ப்யூட்டர் மென் பொருளில் பார்த்த தொழில் என்று அத்தோடு நின்றுவிட்டது! அன்றிலிருந்து அவன் என்னைவிட்டுப் பிரிந்து செல்லும் நிமிடம் வரை அல்லும் பகலும் அவனுடைய மூளை அந்த மறந்து போன ஞாபகங்களையேத் தேடித்தேடிக் களைத்துப் போனது. அவன் மூளையை அதிகம் ஸ்ட்ரெயின் பண்ணினால் அவனுக்குத் தாங்க முடியாத தலைவலி வரும். இப்பத்தான் கடந்த சில மாதமா அந்த வலியிலிருந்தெல்லாம் விடுதலை அடைந்திருந்தான்.

ஆனால் கடந்த ஒரு வாரமா அதிகம் மூளைக்கு வேலை கொடுத்ததில் அடிக்கடி தலைவலி வரத்தொடங்கிவிட்டது! அதற்கான மாத்திரை மருந்து அவனிடம் இருந்தாலும் அந்த நேரம் அவன் ஒரு குழந்தையாகிவிடுவான். இரண்டு பெண்களின் கண்களும் ஒரே நேரத்தில் கலங்கத் தொடங்கின!

“அவனுக்கு எந்த வகையிலும் உறவே இல்லாத நீ, இவ்வளவு தூரம் அவனை ஒரு குழந்தையைப் போல் உன் தோளில் சுமந்திருக்கியேமா, உனக்கு நான் எப்படிமா நன்றி சொல்றது?”

“என் செயலிலும் ஒரு தன்னலம் இருக்கு அத்தை! எனக்கு அவனை ரொம்பப் பிடிக்கும்! அவன் தன் கடந்த கால நினைவுகளை இழந்திருந்தாலும் அவன் செயல்களில் ஒரு குழந்தைத்தனம் இருக்கும், ஒரு கண்ணியம் இருக்கும், தவறான எந்த ஸ்டெப்பும் எடுத்து வச்சிரக் கூடாதுனு ரொம்பக் கவனமா இருப்பான், எல்லாத்துக்கும் மேல அந்தக் குழந்தை பவியைத் தன் கைவளைக்குள்ளிருந்து வெளிய விடமாட்டான்!

நானும் அவளை என் குழந்தையாத்தான் வளர்த்தேன். என் மனதை முற்றிலுமா ஆக்கிரமிச்ச அந்த ரெண்டு குழந்தைகளும் எனக்கு இப்ப வேணும்!” ஏதோ ஒரு பொம்மை வேண்டுமென்று கேட்பது போல் படித்து பட்டங்கள் பல பெற்ற டாக்டர் தாரா கற்பகத்திடம் வேண்டி நின்றாள்.

“அது அவனோட அப்பா ஜீன்சுக்குள்ளயிருந்து அவன் ஜீன்சுக்கு சிந்தாம சிதறாம அப்படியே ட்ரான்ஸ்ஃபர் ஆகியிருக்கும் பாசம் தாயே! அவன் குழந்தையா இருக்கும் போது எனக்கு போஸ்டாபிசில் பகலெல்லாம் என் பென்டைக் கழட்டுற வேலையிருக்கும். அவனைப் பகலில் பார்த்துக்கணும்கிற ஒரே காரணத்துக்காக இரவெல்லாம் ஸ்டேஷனில் ட்யூட்டி பார்த்துவிட்டு பகலெல்லாம் அவன் கூடவே இருப்பார் அவனோட அப்பா. கௌதமை அம்மா செல்லம்னு சொல்றதைவிட அப்பா செல்லம்னுதான் சொல்லணும்!”

“உங்க மேல இவ்வளவு பாசம் உள்ளவன் எப்படி உங்களை இப்படித் தனியா தவிக்கவிட்டுட்டு,,,!”

“அதுதான் அந்த வாலிபவயதில், ஹார்மோன்ஸ் போடும் ஆட்டத்தால் வரும் கோளாறு! அந்த அதீத காதல் போதையில் மனிதன் அனைத்தையும் மறந்துவிடுகிறான். காதலில் விழாத இளைஞர்களையோ, இளம் பெண்களையோ காண்பது அபூர்வம். ஏன் நானும் விசுவும் கூட காதலித்துத் திருமணம் புரிந்தவர்கள்தான். சிலசமயம் இந்தக் காதலே ஒரு மரணப் பள்ளமாய் மாறிவிடுகிறது! என் பையனும் அப்படித்தான் விழுந்திருக்க வேண்டும், எங்களிடமிருந்து எதையுமே மறைக்கத் தெரியாத கௌதம் தன் குடும்ப வாழ்க்கையை மட்டும் மறைத்துவிட்டான்.

எங்களிடமிருந்து டில்லிக்கு வேலை என்று கிளம்பிச் சென்ற பொழுது, ‘ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்’ என்று ஒரு ஜாலிலோ ஜிம்கானா பையனாத்தான் போனான். அதன் பின் ஐந்து வருடங்கள் விதி அவனை எங்களிடமிருந்து பிரித்துவிட்டது!

இன்னும் நான் என் மருமகளைப் பார்த்ததில்லை, அந்த செய்தியைக் கேட்ட தாரா சுத்தமாய் அதிர்ந்து போனாள்.

அவனைப் பிரிந்த புத்திர சோகத்தில் மனதிற்குள் மறுகி மறுகி விசு போய் சேர்ந்துவிட்டார்! என் பையன் உயிரோடு சந்தோஷமா இருக்கான்னு தெரிஞ்சாப் போதும்! நானும் போய் சேர்ந்துவிடுவேன்!”

“நோ ஆன்ட்டி, உங்க பையன் உங்களுக்குப் பத்திரமா கிடைப்பான், அதுக்கு நான் காரன்டி.”

“நொய்டா போய் அவனை எப்படிமா கண்ட்டுபிடிப்ப?”

“இப்ப அவன் டில்லி போகும் ரயிலில் இருக்கான்னு நாம் கண்டுபிடிக்கலையா?! அன்று நடந்த அந்தப் பெரும் விபத்தில், அவனிடமிருந்த கைபேசி உடைந்து சிதற, மற்ற அவன் உடமைகள் ஒன்றும் கிடைக்காமல் அனைத்தும் அந்த ஏசி கோச்சில் எரிந்திருக்க வேண்டும். அவன் வந்த கோச்தான் தீப்பிடித்து எரிந்து சாம்பலான கோச். அதிலிருந்து மிச்சம் கிடைத்தது மனித எலும்புகளும் சாம்பலும்தான்.

கௌதம் வாஸ் அ லக்கி சாப். உங்களுக்கு முழுக்கதையும் நாம விமானப் பயணத்திலிருக்கும் பொழுது சொல்றேன். நொய்டாவில் அவன் வேலை பார்த்த அலுவலகத்தைக் கண்டு பிடிச்சா வீட்டு முகவரியைக் கண்டுபிடுச்சிறலாம். அவன் இருந்த வீடு எந்த செக்டர்லனு ஸீரோ டவுன் பண்ணிட்டா அப்புறம் கண்டுபிடிக்கிறது ரொம்ப ஈசி! பார்க்கலாம் வாங்க! யார் அந்த வீட்டுக்கு முதலில் போறோம்னு.

உங்க பையனுக்கு டில்லி பற்றி இன்னும் பல ஞாபகங்கள் வந்திருக்கலாம்! அந்த ஃப்ராடு என்கிட்ட அதை மறைச்சிருக்கலாம்னு இப்ப எனக்குத் தோணுது!”

“உன்னை நான் நம்புறேன்மா, உன்னோட இந்த ஆழ்ந்த அன்புதான் என் பையனைக் காப்பாத்தணும்!” என்றும் மாறாமல் கரையில் மோதும் ராக்ஷ்ச அலைகளும், காற்றும், மழையும், புயலும், கடல் வாழ் உயிரினங்களும் ஒரு மீனவனின் படகை புரட்டி எடுத்தாலும், தலைக்கு மேல் ஆகாசமும், காலுக்குக் கீழ் ஆழம் தெரியாத கடலுமாய் அந்த திறந்த சமுத்திரத்தில் தனி ஒருவனாய் அவன் பயணம் செய்தாலும், கடற்கரையில் அவனுக்காக உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு காத்திருக்கும் அந்த மீனவனோட மனைவியின் நெஞ்சுக் கூட்டில்தான் அவனுடைய உயிர் உறங்கிக் கொண்டிருக்கும்! இது வெறும் சினிமாவுக்காக்ச் சொல்லப்படும் கதை இல்லை தாரா! ஒரு மனைவியின் அன்பு அவள் கணவனைக் காப்பாற்றும் டாலிஸ்மேன் அதாவது ஒரு மந்திரக்கயிராய் அவன் உயிரை இவ்வுலகில் கட்டிப் போட்டிருக்கும்கிறதை நான் நம்புறேன். தொடரும்IMG-EKKUM0040.jpg

 
Top