Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'என் கண்களில் காண்பது உன் முகமே' அத்தியாயம் 18

Advertisement

'என் கண்களில் காண்பது உன் முகமே' அத்தியாயம் 18

என் கதைக்குத் தொடர்ந்து அன்பும் ஆதரவும், லைக்சும்,
கமன்ட்சும் கொடுத்துவரும் என் வாசக நண்பர்கள் அனைவருக்கும் நன்றி, இந்த வார ஞாயிறு முதல் தினம் ஒரு அத்தியாயம் பதியப் போகிறேன். வாசகர்கள் தொடர்ந்து உங்கள் ஆதரவைக் கொடுப்பீர்கள் என்று நம்புகிறேன். இன்னும் படிக்கத் தொடங்காத வாசகர்களும் படிக்கத் தொடங்கலாம்.

அத்தியாயம் 18


"நீங்க எனக்கு ஆறுதல் சொல்றது மூலமா உங்களையே ஆறுதல் படுத்திக்கிறிங்க அத்தை! ஃப்ளைட் கிளம்பிறதுக்கு ரெண்டு மணி நேரம் முன்னாடியே ஏர்போர்ட்டில் நாம் இருக்கணும். ஸோ பீ குயிக்!” என்று அவள் மராத்தான் ஓட்டப் பந்தயத்தில் ஓடப் போவது போல தன்னைத் தயார்படுத்திக் கொண்டே கற்பகத்தையும் முடுக்கிவிட்டாள்.

கௌதம், பவி இருவரின் கப்போர்டையும் தாரா திறந்த பொழுது அவள் மனம் இரண்டாகப் பிளந்து கொண்டது!

‘நீ ஏன்டா என்னைத் தனியாத் தவிக்கவிட்டுட்டு பிரிஞ்சு போன? ஒரிரு நாள் கூடக் காத்திருக்க உனக்குப் பொறுமை இல்லையா! என் வாழ்க்கையை வெறுமையாக்கிவிட்டு, பவியையும் என்கிட்ட இருந்து பிரிச்சுத் தூக்கிக்கிட்டு,,, ஒரே நாளில் இரண்டு இழப்புகளா?’

‘உன்னை விடமாட்டேன்டா, விடாமல் தொடர்வேன், உன்னாலும் என்னை விட முடியாது!’

“ஏன் அப்படி சொல்ற!?” ஒரு நாள் அவள் மேல் கூறிய வசனங்களைப் பேச அதற்கான பதில்தான் அவனிடமிருந்து கேள்வியாய் வந்து விழுந்தது.

“ம்,,,உன்னைப் படைத்த மந்திரவாதி மறந்து போய் உன் உயிரை என் உயிரோடு சேர்த்து வச்சுத் தச்சுப்புட்டாராம், உன்னை என்னிடமிருந்து பிரிச்சா, என் உயிர் பிரிந்துவிடும் இல்லையா?!”

“பெரிய சினிமாக் கதாநயகியினு நினைப்பு! நல்லா சினிமா வசனம் பேசுற!”

“ஆமாண்டா நம் வாழ்க்கையில் நீதான் கதாநாயகன் நான் தான் கதாநாயகி!”

“அப்ப வா தோட்டத்துக்குப் போகலாம்!” அவன் குசும்பாய் முகத்தை வைத்துக் கொண்டு கூற, “எதுக்கு!” என்று இவள் பாவமாய் முகத்தை வைத்துக் கொண்டு கேட்க,

“ஐ அங்க பாரு டாடி! மழை பெய்யுது! வா அங்க போயி மழையில ஆடிக்கிட்டே கண்ணாமூச்சி ஆடலாம்!” என்று பவி கைதட்டிக் கொண்டே குதுகலத்துடன் சிரிக்க!”

“போடி, நீ மரத்தைச் சுத்தி ஓடி, டூயட் ஆடுற அருமையான சான்சை மிஸ் பண்ணிட்ட!” என்று அவன் சிரித்துக் கொண்டே கூறியவன்,

“அடடா மழைடா அடை மழைடா,,,” என்று, குதித்துக்கொண்டே அவன் பவியைத் தூக்கிக் கொண்டு மழையில் ஓட, அந்த ஆட்டத்தை ரசித்துக் கொண்டே வாலாட்டிக் கொண்டே செல்லும் நாய்க்குட்டியாய் அவன் பின்னே சென்றாளவள்.

இருவரும் பொலு பொலுவென்று தூறும் அந்த மழைச் சாரலில் நனைய, வானில் தோன்றிய நிலவோ மழையில் நனைந்து கொண்டே இவர்களை எட்டிப் பார்க்க, அதே நேரம் அவளருகில் வந்தவன்,

குலுங்கும் முந்தானை சிரிக்கும் அத்தானை விரட்டுவதேனடியோ?
உந்தன் கொடியிடை இன்று படைகொண்டு வந்து கொல்வதும் ஏனடியோ?
திருமண நாளில் மணவறை மிது இருப்பவன் நான்தானே
என்னை ஒருமுறை பார்த்து ஓரக்கண்ணாலே சிரிப்பவள் நீதானே!”


என்று ஹஸ்க்கி வாய்சில் பாடி குசலம் விசாரிக்க, அந்த டாக்டர் ஓர் குமரிப் பெண்ணாகி நாணிச் சிவந்து நின்றாள். அதைப் பார்த்த கௌதம்,

“என்னோட கடந்த காலத்தில் நான் ஒரு முழுமையான வாழ்க்கை வாழ்ந்தேனானு தெரியலை தாரா? ஆனால் இந்த வாழ்க்கையில் என் மனம் நிறைஞ்சு போயிருக்கு!” என்று தன்கண்களை மூடி அதற்குள் அவளை அணைத்துக் கொண்டான். அவள் அவனுக்கு வேறொரு கோணத்தில் பதில் கூறினாள்

“ஒரு சிற்பி செதுக்குற சிலை மாதிரி நம் வாழ்க்கை சக்கரம் இந்த இடத்திலேயே நிலையா நின்னு போனா நல்லா இருக்கும் இல்லையா? பதினாறு வயதிலிருக்கும் பெண்ணை சிலை வடிக்கும் சிற்பி ஒருநாள் அழிந்து விடுவான். ஆனால் அந்தச் சிலையோ பல நூற்றாண்டுகளைக் கடந்த பின்னும் அதே பதினாறு வயதிலேயே அதே சிருங்கார ரசத்தோடு அப்படியே நிலைத்து நிற்கும்”

நழுவி ஓடும் காலத்தைப் பார்த்து அவள் அடிக்கடி கௌதமிடம் இதைக் கூறியிருக்கிறாள். ஏன்னா? இந்த தேவகுமாரனை அவள் இழந்து விடுவாளோ என்ற பயம் அவளின் அடிமனதில் குத்தும் முள்ளாக வளர்ந்து கொண்டே இருந்தது!

“என்னம்மா தாரா என்னை வேகப்படுத்தி விட்டு இப்ப அந்த அலமாரியைத் தொறந்து வச்சுக்கிட்டு அப்படியே புடிச்சு வச்ச பிள்ளையார் மாதிரி நிக்கிற?”

“உங்க பிள்ளைதான் என்னைப் புடுங்கிப் போட்டுவிட்டு ஒருவிதமான மயக்கத்தில என்னைத் தள்ளிட்டுப் போய்விட்டாரே! இந்த வீட்டின் மூலை முடுக்கில் எங்க போனாலும் அது எங்க மூணு பேரோட கதையைத்தான் பேசுது அத்தை!” என்றவள் பயணத்திற்கான தன் பெட்டியை அடுக்கத் தொடங்கினாள்.

கௌதம், பவி இருவரின் பொருள்களையும் கொஞ்சம் சேர்த்து, அதோடு தன் நினைவுகளையும் கொஞ்சம் கலைத்துப் போட்டு அடுக்கத் தொடங்கினாள் தாரா. அந்தப் பொருட்களில், டயல் சுக்கு நூறாய் உடைந்து போன ஒரு ரிஸ்ட் வாட்சும் கலைந்து கிடந்தது! அதைப் பார்த்தவுடன் கற்பகம் அவளிடம் ஓடிச் சென்று

அந்த உடைந்து போன ரிஸ்ட்வாட்சை வாங்கி அதை ஆராய்ந்தவர்,

கண்களில் மின்னல் தோன்றியது, “இது என் விசுவோட வாட்ச்மா! அவன் விசுவோட சாவுக்கு வந்துவிட்டுத் திரும்பிச் செல்லும் போது நான் எவ்வளவோ தடுத்தும் கேளாமல் என் கையிலிருந்த வாட்சைப் பிடுங்கிக் கொண்டு,

“இது என் டாடியோட வாட்ச், இது என்கிட்ட இருக்கும் வரை நம் குடும்பம் பற்றிய நினைவுகள் என்றும் என்னைப் பிரியாது!” என்று தன் கரத்திலிருந்த மிகவும் புதுமையான வெளிநாட்டுக் கைகடிகாரத்தை கழட்டி என் கையில் கொடுத்தவன், அந்த ஸ்டீல் செயினிலிருந்த அந்தப் பழைய கால; பெருமை மிகுந்த, சீக்கோ ப்ரான்ட் கைக்கடிகாரத்தை தன் மணிக்கட்டில் அணிந்து கொண்டே,

“நான் இந்த வாச்சைப் பார்க்கும்போதெல்லாம் அப்பா என் கையிலிருந்து, ‘அம்மா தனியா இருக்கா ராஜா! ஒரு எட்டு போய் பார்த்துவிட்டு வாடான்னு” என்னை அவர் ஞாபகப்படுத்திக்கிட்டே இருப்பார்மா!” என்று கூற,

“எப்படா உன் பொண்டாட்டியையும், என் பேரக்குழந்தையையும், என் கண்ணுல காட்டப்போற?” என்று அழுகையுடன் நான் கேட்க,

“அடுத்த முறை உன்னைப் பார்க்க வரும்போது என் மனைவி குழந்தையோடு தான் உன்னைப் பார்ப்பேன். இப்ப அவ நிறைமாத கர்ப்பவதியா இருக்காமா? ‘இப்ப சிந்து எப்படி இருக்காளோ தெரியலியேனு?’ அப்பாவோட சாவுக்கு வந்தவன், அரக்கப் பரக்க ஓடினானே!” அதைக் கூறும்பொழுதே கற்பகத்தின் குரல் அழுகையில் கரைந்தது.

“வேணாம் அத்தை, நம்ம கதையை சோகக் கதை ஆக்கிறாதீங்க! அவன் உங்களுக்குக் கொடுத்த வாக்கை காப்பாத்தத்தான் டில்லிக்குப் போயிருக்கான். இவ்வளவு தகவல் ஒலிபரப்பு சாதனங்கள் உள்ள இந்தக் காலத்தில் உங்க புள்ளை இந்தப் புவியிலிருந்து தொலைந்து போகும் அளவுக்கு ஒண்ணும் சின்னக் குழந்தை இல்லை! அவன் தன் மனைவி, குழந்தையோடு உங்கள் முன் ஒருநாள் வந்து நிற்பான், நீங்க அதைக் கண் குளிரப் பார்ப்பீங்க அத்தை” என்று தனக்கும் சேர்த்து பாசிடிவ் சக்தியை மனதிற்குள் செலுத்தினாள் தாரா.

ஓடும் ரயிலில் அமர்ந்திருந்த கௌதம் தன் கையில் கட்டியிருந்த கைக்கடிகாரத்தைப் பார்த்தான்! அது அந்திமாலை நெருங்கிக் கொண்டிருப்பதை காட்டியதோடு நிறுத்தாமல் அதற்குள் பௌர்ணமி நிலவாய் ஒளிவீசிய டாக்டர் தாராவின் முகத்தையும் சேர்த்தே காட்டியது! அது தாராவால் அவனுடைய ரிஸ்டில் கட்டப்பட்டக் கைக் கடிகாரம். அந்த நாளை அவன் எப்படி மறப்பான்.

அன்று தாராவின் பிறந்த நாள். காலையிலிருந்து நிலவு தோன்றப் போகும் வானத்தைப் போல ஒருவகை குளிர்ச்சியில், மயக்கத்தில், சிரித்துக் கொண்டிருந்தவள், எப்பொழுதும் போல் மருத்துவமனை சென்று திரும்பி வரும் பொழுது கையில் எண்ணிலடங்கா பூங்கொத்துகளோடும் பார்சல்களோடும் வர, அந்த அழகிய மலர்களையும், பல வண்ணங்களில் சுற்றப்பட்டிருந்த பரிசுப் பொருட்களையும் பார்த்து பவி அவளிடம் தாவி ஓடி வந்து ஒரு குழந்தைக்குறிய எதிர்பார்ப்புகளுடன் அந்த வண்ணக் காகிதங்களை அக்கு வேறு ஆணிவேறாக பிரித்துப் போடத் துவங்கியது!

கௌதமிற்கோ அவளைப் பார்த்தவுடன் சிரிப்பில் மலர்ந்த பூ முகம் சட்டென்று மாறும் வானிலை போல இருண்டு போனது!

“ஏம்பா, சட்டுனு உன் முகம் மாறிருச்சு!” என்று அவன் நெற்றிப் பொட்டை அவள் நீவிவிட,

“விடு, நீ ஒண்ணும் உன் போலியான நடிப்பால் என்னை மயக்க வேணாம்!” தட்டிவிட்ட அவன் கரங்களை இறுக்கிப் பிடித்துக் கொண்டவள்,

“இப்ப என்னோட மணிக்கட்டில் ஓடும் அந்த நாடித் துடிப்பை செக் பண்ணு, அதில் எத்தனை துடிப்பு, கௌதம்! கௌதம்னு! புலம்புதுனு எண்ணிப்பார்? உன் உள்ளங்கையைக் கொண்டா ஸ்டெத் இல்லாமலே என் இதயத் துடிப்பை செக் பண்ணு அது உனக்காகவும் இந்தக் குழந்தைக்காகவும் துடிக்கும் துடிப்பு உனக்குக் கேட்கும்!” அவன் கரத்தை எடுத்து அவளின் மார்பகத்தின் அருகில் கோண்டு செல்ல, அதை வெடுக்கென்று உதறியவன்

“அப்ப ஏன்டி இன்னைக்கு என்ன விசேஷம்னு என்கிட்ட சொல்லலை?! இவன்கிட்டச் சொல்லி என்ன ஆகப்போகுதுன்னு என்னை ஒதுக்கிட்டியா!?”

“இன்னும் நீ என்னை புரிஞ்சுக்கலைடா! நீ எனக்கு எவ்வளவு ஸ்பெஷல்னு எனக்குச் சொல்லத் தெரியலை!” என்று பெண்மைக்குறிய நாணத்தோடு சிரித்த அந்த டாக்டர், “இரு நான் கொஞ்சம் ஆஸ்பத்திரி வாடை போகக் குளிச்சிட்டு வர்றேன்! அதுக்குள்ள நம்ம தோட்டத்தில் ஒரு சின்ன பார்ட்டிக்கு ஏற்பாடு பண்ணு; உனக்கு ரொம்பப் பிடிக்குமேன்னு காலையிலயே ஒரு ஸ்வீட் பண்ணி குளிர் பெட்டில இருக்கு பாரு. அதோட உனக்குப் பிடிச்ச கூல் ட்ரிங்கையும் சேர்த்துக்க!”

“உனக்கு என்னடி பிடிக்கும்!”

“இது என்ன லூசு மாதிரி கேள்வி கேட்கிற!?” என்று அவனுடைய மேல் நெற்றியில் ஏறிய புருவங்களை தன் விரல்களால் தேய்த்து கீழே இறக்கி விட்டவள்,

இது மாதிரி குழந்தைத்தனமான முகபாவங்களை எல்லாம் எங்க இருந்துடா கத்துக்கிட்ட!” என்று கேட்டவள்,

“எனக்கு உன்னையும், குழந்தை பவியை விடவும் வேறு எதுவும் பிடிக்காதுடா!” என்று அவன் காதுக்கருகில் குனிந்து பேச, அவளுடைய மூச்சுக் காற்று அவன் காது மடலை உரசிச் சென்றது.

“வேண்டாம் தாரா! என்னை உசுப்பேத்திவிடாத, நீ சொல்லும் குழந்தை சரி, ஏன் என்னையும் அதோட சேர்த்துக்கிற!” அவன் கேள்வியில் ஒரு எதிர்பார்ப்பு இருந்தது அவளுக்குப் புரிந்தது. இது போன்று,

‘உன்னை மட்டும்தான் எனக்கு ரொம்பப் பிடிக்கும்னு’ அவள் சொல்லிக் கேட்பதில் அவனுக்கு ஒரு உள்மன ஆனந்தமிருப்பது அவளுக்கு நன்கு புரிந்தாலும் அவனை மேலும் டீஸ் பண்ண நினைத்தவள்,

மாடும், கன்றும் ஒன்றாய் கிடைத்தால் கசக்கவா போகுது! பவி எனக்குக் கிடைக்கும் பரிசு என்றால் நீ அதற்குக் கிடைக்கும் போனஸ்!”

“ஓஹோ!” என்று கிண்டலாய் கூறியவன், பவியைத் துக்கிக் கொண்டு கோபத்தோடு தன் வேலையைக் கவனிக்கச் சென்றான். அவன் முகத்தில் ஒரு ஏமாற்றம் அப்பட்டமாய் அமர்ந்திருப்பதை அவள் கவனிக்கத் தவறவில்லை!

ஃப்ராடு!” என்று முனங்கிக் கொண்டே உள்ளே சென்றவள், குளித்து முடித்துத் தூய்மையான இரவு உடையில் வெளியே வந்தவளை ஆச்சரியக் குறிகளோடு எதிர்கொண்டான் கௌதம்!

அங்கே பல நூறு மரக்கிளைகளினூடே எட்டிப் பார்த்தச் சந்திரன் பல ஆயிரம் தங்கக் காசுகளைத் தரையில் கொட்டி வரவேற்க, நீச்சல் குளத்திற்கருகில் சாய்மான நாற்காலிகளோடு ஒரு பிக்னிக் மேஜை, அவள் கொண்டு வந்த மலர்களோடு அலங்கரிக்கப்பட்டிருக்க, அங்கே ஒரு கேக் அவளைக் கண்விழித்து அழைத்தது!

“நீ கொண்டுவந்த கேக் டப்பாவில் ஒன்றில் இந்தக் கேக்கைப் பார்த்தேன் தாரா! ‘அதில் என் அன்புக் காதலி தாராவிற்கு கௌதமின் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்’ என்றிருந்தது!” தன் கண்களிலிருந்த ஆச்சரியக் குறிகளைச் சற்றும் குறைத்துக் கொள்ளாமல் கேட்டான் கௌதம்

“இந்தக் கேக் எங்கிருந்து வந்தது தரா? நான் உனக்கு அனுப்பலையே!?

“என் காதலன் பேரில் நானே எனக்குப் பரிசளித்துக் கொண்டேன்!”

“ஏன்டா உன் மனசை இவ்வளவு ஆசைகளுக்கும், ஏக்கங்களுக்கும் உள்ளாக்குற? நான் உன் மனசை உடைச்சிட்டு ஒருநாள் ஓடிப் போனா என்னடா செய்வ?!”

“உன்னால் அப்படி போகமுடியாது கௌதம், உன்னால் எந்தப் பெண்ணின் மனதையும் உடைக்க முடியாது! அப்படி நீ என்னை விட்டுப் போனா ‘உன்னை விடமாட்டேன்டா, விடாமல் தொடர்வேன், உன்னாலும் என்னை விட முடியாது!’ நாம் பாஸிட்டிவா எஞ்சாய் பண்ண வேண்டிய நேரத்தில் எதற்காக, எதிர்மறையா நின்னு பேசிக்கிட்டிருக்க?!” அதைக் கேட்டவன், அந்த தேவதையை தன் கண்களால் கைது செய்த பொழுது அதில் காதல் தளும்பி வழிவதை அவளால் கண்கூடாகக் காண முடிந்தது!

“என்னடா இப்படி ஒரு கள்ளப் பார்வை!” என்று அந்த வார்த்தைகளைத் தன் பற்களுக்கிடையில் போட்டு அவள் கடித்துத் துப்ப,

“மீ! பூ!” என்று ஒரு சிவப்பு ரோஜா மலரை எடுத்து அவளிடம் நீட்டியது குழந்தை! “தாங்க்ஸ்டா!” என்று அதைப் பெற்றுக் கொண்டு குழந்தை கன்னத்தில் அவள் முத்தமிட, ம்,,,ம்,,, எனக்கு இல்லையா?” என்று கௌதம் தன் கன்னத்தைக் காட்ட,

“ம் கூம்,,,குழந்தை முத்தமெல்லாம் உனக்குக் கிடையாது!” என்று அவன் கன்னத்தை பிடித்துத் தள்ள!” அவன் அவளை முறைப்பதைப் பார்த்துக் குழந்தை கைதட்டிச் சிரித்தது!

“சரி! சரி! வா செலிப்ரேஷன் மூடை ஸ்பாயில் பண்ண வேண்டாம் என அவனைக் கை பிடித்து அழைத்து வந்து மேஜை அருகில் நிறுத்தியவள், தன் இரவு உடை பாக்கெட்டிலிருந்து ஒரு கண்ணாடி டப்பாவை எடுத்து அதில் பளபளவென்று மின்னிக் கொண்டிருந்த ஒரு கைக் கடிகாரத்தை அவனுடைய இடதுகரத்தில் கட்டிவிட்டு அந்தக்கரத்தில் தன் முத்தத்தைப் பதித்தாள். குனிந்திருந்த அவள் முகத்தை நிமிர்த்தியவன், அங்கே துள்ளித் திரிந்த இரு விழிகளோடு தன் விழிகளைக் கலந்து,

“எனக்கு ஏன்டா இந்தப் பரிசெல்லாம், ஆக்சுவலா நான்தான் உன் பிறந்த நாளைக்குப் பரிசு தரணும்! வீடு முழுக்க ஒவ்வொரு அறையிலும் ஒரு க்ளாக் மாட்டி இருக்கு! நான் மணியைப் பார்த்து என்ன செய்யப் போறேன் தாரா?” அவன் பேசும் பொழுது அவன் குரல் வெகுவாகக் கனிந்து போயிருந்தது!

“இன்னொரு தரம் என்கிட்ட இப்படிப் பேசினா என் முத்தத்தாலேயே உன்னை அடிப்பேன், காலங்கள் எப்படி மாறினாலும் நீதான் எனக்கென்பதை நான் எப்பொழுதும் மாற்றிக் கொள்ள முடியாது!”

“காலச் சுழற்சியில் எனக்கென்று ஒரு குடும்பம் மனைவி, பெற்றோர் இருப்பதை நான் கண்டறிந்து உன்னை நான் பிரிந்து சென்றால் என்ன செய்வ?”

“போறதுனா போய்க்கோ! உன்னால் இந்த தாராவைப் பிரிந்து செல்ல முடியாது!

உன் கையிலிருக்கும் இந்தக் கடிகாரம் என்னை உனக்கு ஞாபகப்படுத்திக் கிட்டே இருக்கும்!

“உன் நினைவே வரக்கூடாதுன்னு இதை நான் கழட்டி வச்சுட்டா!?” அவன் கேள்விக்கு,

“அப்படி செய்வியாடா?” என்று அவன் காதைப் பிடித்துத் திருகியவள், அந்தப் பரிசை அவனுக்குக் கொடுப்பதற்கான ஒரு அழகான விளக்கமும் கொடுத்தாள்.

கௌதம், நம்மை அறியாமலேயே துளித் துளியாய் நம் கை இடுக்கில் வழிந்து செல்லும் காலத்தை நாம் உணர்வதில்லை, நம் வாழ்க்கையில் ஒரு கால கட்டத்தில் ஓடாமல் நின்று போனாலும் அந்தக் காலம் நமக்காகக் காத்திருக்காது! அதன் பாதையிலிருந்து நம்மை வெளியே துப்பிவிட்டு அது ஓடிக் கொண்டேதான் இருக்கும். பகலையும் இரவையும் மனிதனால் ஜெயிக்க முடியாது! ஜனனம் என்று ஒன்றிருந்தால், மரணம் என்று ஒன்று நிச்சயம்,

கடவுளே வந்து மனித அவதாரம் எடுத்தாலும், அவருக்கு இந்த உலகத்தில் சாவுண்டு! அதனால் நம் இணைப்பைப் பற்றியோ பிரிவைப் பற்றியோ எனக்கு சிறிதும் கவலை இல்லை. நான் ஒரு டாலிஸ்மேன் போல் உனக்கு அணிவிக்கும் இந்தக் கைக்கடிகாரத்தைக் கழட்டித் தூக்கி எறிஞ்சா மட்டும் என்னை மறக்க முடியும்னு நினைக்கிறியா!?”

அந்த கேள்வியிலிருந்த வலியைப் புரிந்து கொண்டவன் அவளை ஏதாவது கூறி ஆறுதல்படுத்த நினைத்தான்! ஆனால் அவனைப் பேசவிடாமல் ஸ்ஸ்ஸ்ஸ்,,,என்று அவன் உதடுகளில் தன்விரலை வைத்து அவனைத் தடுத்தவள்,

“எந்த மனிதனாலும் கால நேரத்தை உணர மணி பார்க்காமல் இருக்க முடியாது! மேலே இருக்கும் சூரியனின் கோணம் பார்த்து மணி கண்டறிய நீ ஒன்னும் கற்கால மனிதன் இல்லை! சோ ஏதாவது ஒரு கடிகாரத்தைப் பார்த்துத்தான் ஆகணும். நீ எந்தக் கடிகாரத்தைப் பார்த்தாலும் நானும் பவியும் அதிலிருந்து சிரித்துக் கொண்டுதான் இருப்போம்!”

“இப்ப நான் சிரிக்கலாமா என் அழகு தேவதையே?” என்று அவள் விரலைத் தன் உதட்டிலிருந்து பிரித்தெடுத்துக் கொண்டவன், அதை தன் விரல்களிலிருந்து விடுவிக்காமலேயே தன் விரல்களுக்குள் வைத்து இறுக்கிக் கொண்டான்! Photo_0015 EKKUM.png“உன்னை நான் புரிந்து கொள்வது போல என்னையும் நீ புரிஞ்சுக்குவன்னு நினைக்கிறேன். கடந்து சென்ற இந்தக் காலத்தில் உன் மேலிருக்கும் அன்பு கூடியிருக்கே தவிர அதில் ஒரு துளிகூட குறையவில்லை!

உன்னை என் சொந்தமாக்கி என் மண்டைக்குள் சலசலக்கும் கேள்விகளுக்கு எல்லாம் ஒரு முற்றுப் புள்ளி வச்சிரலாமானு நினைக்கிறேன்!

ஆனால் எனக்கு முடியலை! சின்ன வயசுல இருந்தே பெண்களை ஒரு போகப் பொருளாப் பார்க்காம ஒரு தாயாப் பார்க்கணும்னு யாரோ எனக்கு சொல்லிக் கொடுத்து வளர்த்திருக்காங்க

ஆனால் வாழ்நாள் பூரா என்னோட இறந்த காலம் என்னனு நான் தேடிக்கிட்டே இருக்க முடியாது! இன்னும் சில நாட்கள்தான் பாக்கி இருக்கு! நீ சொல்ற மாதிரி காலம் ஓடிக்கிட்டேதான் இருக்கும்! நான் எனக்குப் போட்டிருக்கும் காலக்கெடு விபத்து நடந்த நாளிலிருந்து சரியா ஒரு வருஷம்தான். அதுக்கும் மேல நான் ஒரு வினாடிகூட தாமதிக்க மாட்டேன். உன் கழுத்தில் தாலி கட்டி உன்னை என்னவளா ஏத்துக்குவேன்! இது எனக்கே நான் செய்து கொண்ட சத்தியம்! நான் வகுத்துக் கொண்ட காலக்கோடு. இது நான் உன்மேல் கொண்டிருக்குக்கும் என் காதல் மீது ஆணை.

சாகுந்தலம் கதையில வர்ற மாதிரி, மோதிரம் தொலையும் பொழுது அந்த மோதிரத்தோடு பரிசு கொடுத்தவனுடைய நினைவுகள் அழிந்து, அந்த மோதிரம் திரும்ப கிடைக்கும் பொழுது அழிஞ்சு போன நினைவுகள் திரும்புமே? அப்படி ஏதாவது அற்புதம் நடக்காதானு காத்திருக்கேன்!”

“அது அற்புதம் இல்லடா அஸ் அ டாக்டர் எனக்குத் தெரியும் கண்டிப்பாய் உனக்கு உன் ஞாபகங்கள் திரும்பும்னு! அதைப் பத்தி என் நெஞ்சுக்குள் முணுக் முணுக்குனு குத்தும் ஒரு பயம் கூட உண்டு! ஆனால்,,,“ஆனால் என்னடி!?”

“இதுவே என் முதலும் முடிவுமான காதலா இருக்கும்னு எனக்குத் தோணுது! ஏன்னா என் ஞாபகத்தில் எந்தப் பிழையும் இல்லை, எந்தவித எதிர்பார்ப்புகளுமின்றி உன்னை என் மனம் மனதார ஏற்றுக் கொண்டுவிட்டது!” உணர்ச்சியில் வழுக்கிச் செல்லும் அவள் குரல் கேட்டு படக்கென்று தன் இருக்கையிலிருத்து எழுந்தவன்,

அவள் முகத்தை மட்டும் தன் கரங்களில் அள்ளி, சந்திரனை அன்னார்ந்து பார்த்துக் கொண்டிருந்த அவள் கண்களில் தன் முத்தத்தைப் பதித்துவிட்டு, இது என் காதல் கண்ணம்மாவிற்கு நான் கொடுக்கும் அச்சார முத்தம்! இன்னும் நம் திருமண நாள் வர வெறும் பத்து நாள்தான் பாக்கி இருக்கு! அதுக்குள்ள என் ஞாபகங்கள் திரும்ப எந்த அற்புதமும் நடக்கும்னு எனக்குத் தோணலை! என்று ஓடிவந்து அங்கு நீரால் நிறப்பப்பட்டிருந்த அந்த நீச்சல் குளத்தின் வாயருகில் அமர்ந்து கொண்டான்.

தொடரும்
 
Top