Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'என் கண்களில் காண்பது உன் முகமே' அத்தியாயம் 19

Advertisement

'என் கண்களில் காண்பது உன் முகமே' அத்தியாயம் 19

அத்தியாயம் 19

அந்த நீச்சல் குளத்தின் வாயருகில் வந்து அமர்ந்து கொண்ட கௌதம், தன் நீண்ட நெடியகால்களை நீரில்விட்டு விளையாட, கேக் சாப்பிட்டுக் களைத்துப்போன பவி ஓடிவந்து அவன் கழுத்தைக் கட்டிக் கொண்டு அவன் முகத்தை கேக்கால் அபிஷேகம் செய்தது!

“ஐ! ஐ! தண்ணீர்! தண்ணீர்! என்று பவி குதிக்க நோ பவி!” என்று வீரிட்டலறினான் கௌதம்.

“போப்பா உனக்கு பயம்! சரி நான் தண்ணில போகலை!” என்று அதுவும் அவன் மடியில் அமர்ந்து கொண்டு காலாட்டத் தொடங்கியது!

தாராவோ கௌதம் கொடுத்த முத்தத்தின் போதை தெளியாமல் அப்படியே அமர்ந்திருக்க, அவளைத் திரும்பிப் பார்த்த கௌதம்

“வாடா!” என்று அவளை கண்களாலேயே அழைக்க, அவன் பார்வையில் கட்டுண்டவள், எஜமானருக்குக் கட்டுப்பட்ட நாய்குட்டி போல் அவனை நோக்கிச் செல்லத் தொடங்கினாள். அதே நேரம் கௌதம் மடியிலமர்ந்து காலாட்டிக் கொண்டிருந்த பவி, அவன் திரும்பிய வேகத்தில், சற்றும் எதிர்பாராமல் நீரில் கவிழ்ந்தாள்.

“நோ! வென்று கத்திக் கொண்டே அவன் மூளை ஒரு வினாடி ஸ்தம்பித்துப் பின்னர் அவனும் அந்த நீரில் மூழ்கினான்,,,

அவன் கண்விழித்த பொழுது தாராவின் மடியில் கிடக்க, அவனருகில் பவி இருக்க, அவனுடைய மூளை மறந்து போன பழைய நினைவுகளைத் தூசி தட்டிக் கொண்டிருந்தது!

இதோ தன் ஞாபகத் தடாகத்தில் வந்து நிறையும் நினைவுகளோடு கௌதம் போராடிக் கொண்டிருக்க, தாராவும், கௌதம் பற்றிய தன் ஞாபகங்களோடு போராடிக் கொண்டிருந்தாள்.

அந்த வீட்டிலிருக்கும் அவனுடைய எந்த ஒரு பொருளை தரிசித்தாலோ, ஸ்பரிசித்தாலோ இது போன்ற ஞாபக சுழற்சிக்குள் சிக்கி விடுகிறாள் தாரா. இப்பொழுதும் சுக்கு நூறாய் நொறுங்கிய அவனுடைய வாட்ச் அவளை வெளியில் வரமுடியாத புதை மணலுக்குள் இழுத்துச் செல்ல; வேக வேகமாய் அதைவிட்டு வெளியேற நினைத்தவள், அவள் பரிசு கொடுத்த வாட்சை தேடத் தொடங்கினாள். ஃபிளைட்டுக்கு கிளம்ப வேண்டிய அவசரத்திலும் அவள் பரபரவென்று தேட, அந்த கைக்கடிகாரம் இருந்த வெள்ளை டப்பா அமைதியாய் அந்த லாக்கரில் அமர்ந்திருந்தது.

அதற்கருகில் ஒரு அரேபியக் குதிரையின் வேகத்தில் ஓடி, வாயில் நுரைதள்ளி மூச்சு வாங்க நின்றவள், ‘கடவுளே அந்த வாட்சை அவன் இங்கேயே விட்டுச் சென்றிருக்கக் கூடாதென்று’ கண் மூடி ஒரு வேண்டுதலை கடவுளுக்கு அனுப்பியவள், மெல்ல ஒற்றைக் கண்ணைத் திறந்து அந்தக் கண்ணாடி டப்பாவைப் பார்க்க இறைவன் அவளுடைய வேண்டுதலை ஏற்றுக் கொண்டார் என்ற பாவனையில் அது காலியாக இருந்தது!

இப்பொழுதுதான் அவளுக்கு மூச்சு வந்து இதயம் சீராகத் துடிக்கத் தொடங்கியது. அவன் அதைவிட்டுச் சென்றிருந்தால் அவள் இதயத்தையே பிடுங்கி வெளியே எறிந்தது போல அவள் தவித்துப் போயிருப்பாள்.

மருத்துவமனைக்கு ஃபோன் போட்டு ஒரு வாரம் விடுப்பு வேண்டுமென தாரா கேட்க, “என்னம்மா விசேஷம்!” என்று சீஃப் டாக்டரின் கேள்விக்கு,

“என்னோட மூளையை ஒரு சீடி ஸ்கான் பண்ண வேண்டிருக்கு டாக்டர், மூளைப் பரிசோதனை முடிச்சிட்டு முடிஞ்சா என் கல்யாணத்தையும் முடிச்சிட்டு ஒரேயடியா வந்து ஜாயின் பண்றேன் டாக்டர்” என்று அவள் கூற, அந்த பதிலைக் கேட்டு அதிர்ந்து போன டாக்டர்,

“நோயாளிகளோட மூளையை செக்பண்ணிச், செக்பண்ணி, உன்னோட மூளையும் கரப்ட் ஆயிருச்சு போல, என்ன பொன்னுமா நீ? நம்ம மருத்துவமனையோட தலைமை செயலகமே நீதானேமா!”

“கொஞ்ச நாளைக்கு டெயில் பீஸ்களை வச்சு ஓட்டுங்க டாக்டர்! இல்லாட்டி என்னோட மூளை, மூளை சாவுக்குப் போயிரும், பிளீஸ் டாக்டர் புரிஞ்சுக்குங்க திரும்பி வரும்போது ஃப்ரெஷ் பீஸா திரும்பி வர்றேன்!”

உன்னோட கல்யாணத்தையும் முடிச்சிட்டு வந்திரு, இல்லாட்டி அதுக்கு வேற தனியா லீவு கேட்ப!”

“நல்ல மாப்பிள்ளையா பார்த்து வைங்க டாக்டர் திரும்பி வந்தவுடன் பண்ணிக்கிறேன்!” என்று சிரித்துக் கொண்டே கூறியவள், சிறு குழந்தை போல் துள்ளிக் குதித்து ஓடி கற்பகத்தின் மீது மோதிக் கொண்டாள்.

“என்னாச்சுமா, பிறந்த கன்னுக்குட்டி மாதிரி துள்ளிக்கிட்டு வர்ற?”

“சம்திங்க் டெல்ஸ் மீ கௌதம் நம்மைவிட்டுப் ப்ரிஞ்சு போக மாட்டான்னு!”

“உனக்குக் கிடைத்த அந்த நேர்மறை சக்தியைப் புடிச்சுவச்சுக்க! அந்த பாஸிட்டிவ் அதிர்வுகள்தான் நம்மிடமுள்ள ஒரே நம்பிக்கை ஒளி, நம் நெடுந்தூர பயணத்திற்கு நான் கிளம்பிவிட்டேன், நீ ரெடியா மருமகப் பொண்ணே!?”

கற்பகத்தின் ‘மருமகப் பொண்ணே!’ என்ற அழைப்பில் உள்ளம் குளிர்ந்த தாரா, “நான் புக் பண்ணின கார் வந்தவுடன் நம் தலைநகர் டில்லிக்கான பயணம் தொடங்கும் அத்தை!

டில்லியில் கௌதமைப் பிடிக்க முடியுமா என்ற பெரிய கேள்விக் குறியோடு அவர்களின் பயணம் தொடங்க, சூரியன் மறைந்து சந்திரன் அவர்களைப் பின் தொடரத் தொடங்கினான்.

வெளியே மெல்ல மெல்ல இருள் கவியத் தொடங்க, கௌதமின் மணிக்கட்டையே கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்த தாமரை சட்டென்று எதிர்பாராமல் சடசடவென்று கொட்டும் மழையைப் போல் பேசத் தொடங்கினாள்.

“இன்னும் ஒரே இரவுதான்! பின்னர் நீங்க யாரோ நான் யாரோ இல்லையா கௌதம்?!” அவள் கேள்வியில் ஒரு ஆற்றாமை இருந்தது!”

“அப்படினா நடு ரோட்டுல என்னையும் குழந்தையையும் தவிக்கவிட்டுட்டு நீ பாட்டுக்குப் போயிருவியா தாமரை!?”

“நான் கேட்க வேண்டிய கேள்வியை நீ கேட்கிறியா நண்பா? நீதானே உன்னை நம்பி உன் மனைவியின் மேலிருந்த அளப்பரிய காதலின் நம்பிக்கையில் தனியாக் கிளம்பி டில்லிக்கு வந்த?!”

“நோ!” என்று தன் தலையை வேகமாக குறுக்கும் நெடுக்குமா ஆட்டியவன் தன் கரங்களைக் கொண்டு முகத்தை மூடிக்கொண்டு அப்படியே அமர்ந்திருந்தான். அப்பொழுதும் அவளின் கண்கள் முழுவதும் அந்த அழகிய மாடர்ன் வாச்சிலேயே பதிந்திருந்தது. மிகவும் வித்தியாசமான மாடலில் கண்ணைக் கவரும் வண்ணத்தில் கருப்பு நிறப் பட்டையுடன்; ஆண்மை பொருந்திய முடிகளால் அலங்கரிக்கப்பட்ட அவனுடைய வெளுத்த கரங்களுக்கு; அது மிகவும் அம்சமாய் பொருந்தி இருந்தது. அவன் தன் முகத்திலிருந்து கரங்களை எடுத்தவன் தாமரை தன் மணிக்கட்டையே பார்த்துக் கொண்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சியுற்று,

“இங்க பாருமா! நீ எப்படி உருகி, உருகிப் பார்த்தாலும், தவமாய் தவமிருந்து கேட்டாலும் நான் இந்த வாச்சை உனக்குத் தரமாட்டேன். இது என் காதலி எனக்குக் கொடுத்த பரிசு; இது என் உயிர்; என்னையும் அவளையும் இணைக்கும் பாலம்; இந்த வாச்சைப் பெற்றுக் கொண்ட அன்றுதான் என் காதலிக்கு முதல் முத்தம் கொடுத்தேன்; அந்த டாக்டருக்குள் எப்பவுமே ஒரு குசும்பான குழந்தை துள்ளிக்கிட்டேதான் இருக்கும்.

“என்ன கௌதம் ஏறுக்கு மாறாவே பேசிக்கிட்டிருக்கீங்க! உங்க மனைவியை தேடிப் போறேன்றீங்க! இந்தக் காதலியை உயிர்னு சொல்றீங்க, உங்களுக்கே நீங்க பேசுறது அபத்தமாத் தெரியலியா!?”

“இதுதான் மனிதன் பிதற்றிக்கொண்டு திரியும் ‘காதல்னு’ நான் நினைக்கிறேன். என்கிட்ட இருக்கது இரண்டுமே காதல் கதைகள்தான் ஆனால் அதில் ஒன்று முன் ஜென்மக் காதல் கதை.

“நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா?
பழகத் தெரிந்த உயிரே உனக்கு விலகத் தெரியாதா
மயங்கத் தெரிந்த கண்ணே உனக்கு உறங்கத் தெரியாதா?
மலரத் தெரிந்த அன்பே உனக்கு மறையத் தெரியாதா?


என்று என்னைப் பாட வைத்து அடுத்த சீனில் இப்பிறவியிலேயே எனக்கு இன்னொரு ஜென்மத்தைக் கொடுத்து,

“நெஞ்சம் மறப்பதில்லை! அது தன் நினைவை இழக்கவில்லை!
நான் காத்திருந்தேன், உன்னைப் பார்த்திருந்தேன்!
கண்களும் மூடவில்லை; என் கண்களும் மூடவில்லை
காலங்கள் தோறும் உன் மடி தேடி கலங்கும் என் மனமே!
வரும் காற்றினிலும், பெரும் கனவினிலும்,
நான் காண்பது உன் முகமே!”


என்று இன்னொரு ஜென்மத்தில் என்னைக் கலங்க வச்சிருக்காரு! இடையில் இந்தக் குழந்தை பவி! நீயே சொல்லு தாமரை இப்ப என்ன செய்யலாம்!”

நான் ஃபர்ஸ்ட் சீன்லயே சொன்ன மாதிரி நாம ரெண்டு பேரும் ஓடிப் போயிரலாம். மனதில் ஆயிரம் வேதனைகளை வைத்துக் கொண்டு இருவரும் குலுங்கக் குலுங்கச் சிரித்தார்கள்.

“பரமபதம்னு ஒரு விளையாட்டு இருக்கு தெரியுமா தாமரை! ஏணியில் ஏறி பாம்பின் வாயில் நுழைந்து சறுக்குவது! அது மாதிரி வாழ்க்கையில் நாம் ஏறி ஏறிச் சறுக்கிக் கொண்டிருக்கிறோம்!”

‘ஆம்’ என்று தாமரை தலையாட்ட கௌதம் ஆழ்ந்த சிந்தனையில் ஆழ்ந்து போனான்

“என்ன சாக்ரடீஸ் சார் ஒரே சிந்தனைக்குள்ள போயிட்டீங்க? ஷேர் இட் நவ்! உங்க குழந்தையைப் பார்த்து கண் கலங்கியது ஏன்!” அவர்களோடு பேசி சிரித்து, ஸ்னாக்ஸ் சாப்பிட்டு ரயிலில் வந்த பால் தண்ணீரைக் குடித்துவிட்டு அவன் மடியில் சுகமாய்த் தூங்கிக் கொண்டிருந்தது அந்தக் குழந்தை!

இந்தக் குழந்தையைப் பத்தி பேசவே எனக்கு ரொம்பப் பயமாயிருக்கு தாமரை! நேத்து வரைக்கும் இவ என்னோட குழந்தை பவிதான்றதுல எனக்கு எந்தச் சந்தேகமும் வந்ததில்லை!” அவன் கூறியதைக் கேட்டு, டடக் டடக் கென்று உருண்டோடும் இரயிலோடு அவள் இதயமும் தடதடக்கத் தொடங்கியது.

இதை அவள் சற்றும் எதிர்பார்க்கவில்லை என்பதால் சீட்டைவிட்டுப் படக்கென்று எழுந்து தனக்கு மேல் விரிக்கப்பட்டிருந்த சீட்டில் உச்சந் தலை இடிக்க ‘ஹோ!’ வென்ற சப்தத்தோடு தன் சீட்டில் விழுந்தாள் தாமரை.

“எ,,,,ன்,,,ன எ,,,ன்,,,ன சொல்ல வர்றீங்க? பிளீஸ் வேணாம் என்னாலயே இதைத் தாங்க முடியலை, உங்க மனசு சுத்தமா உடைஞ்சு போயிரும்!”

“ஏற்கனவே பல தடவை உடைஞ்ச மனசுதானே இது! நான் வீட்டைவிட்டு கிளம்பிய அன்று கூட எனக்கும் தாராவிற்கும் ஒரு சிறிய வாக்குவாதம். என்னை எப்பவும் எங்க திருமணத்தைப் பற்றிப் பேசியே கடுப்பேற்றிக் கொண்டிருப்பாள் தாரா! அன்றும் அதுதான் நடந்தது. என்ன ஒரே வித்தியாசம்னு பார்த்தா அப்ப என் மூளையில் பழைய ஞாபகங்களின் பாதிக் கிணறு நிறைந்திருந்தது.

அன்று நாங்கள் பேசியதோட ஜிஸ்ட் இதுதான். “என்ன என்னைக் கட்டிக்க சம்மதம்னு குறுஞ்செய்தியில் கூறப் போறியா மை டியர் புருஷா?” என்று அவள் கொஞ்சலாய்க் கேட்க, என் மனம் அப்படியே அலுமினிய டப்பாவாய் நெளிந்து போனது!

“யாருடி உன் புருஷன்!?” என்று கேள்வி கேட்ட நான் அவளுக்கு முகத்தில் அடிப்பது போல் பதில் கூறினேன்,

“நான் உருகி உருகிக் காதலிச்சவளைக் கல்யாணம் பண்ணி, அதுக்கு சாட்சியா இதோ என் கையில் ஒரு அழகான குழந்தை இருக்கு! அவளைப் பற்றிய நினைவுகளை நான் தொலைச்சிருந்தாலும், சூன் ஐ வில் கெட் தோஸ் மெம்மரிஸ்! எனக்கு இந்த நிலமையில இன்னொரு கல்யாணமும் இன்னொரு பொண்ணும் ரொம்பத் தேவைதான்!” என்று நான் பதில் கூற, அதற்கு அவள் கூறிய பதில் இன்னும் கொடுமையாயிருந்தது! நான் சுழற்றிப் போட்ட கூக்ளி பந்தை! நான் சற்றும் எதிர்பார்க்காமல் சிஃஸருக்குத் தூக்கி அடித்தாள் தாரா!

“நல்லா யோசிச்சுப் பாரு! நீ நினைவு இழக்கும் பொழுது உன் குழந்தை இப்படியா இருந்தது?!” என்ற கேள்விக்கான பதிலை யோசிக்க டைம் கொடுத்தவள்,

“இது உன்னோட குழந்தையே இல்லை; என்னோட குழந்தைதானு சொல்லியிருந்தா நீ என்னடா செஞ்சிருப்ப?!” அந்தக் கேள்வியில் நான் முற்றிலுமாக சுருண்டு போனேன், அந்தக் குழந்தையையே சிறிது நேரம் வெறிக்க வெறிக்க நான் பார்த்தேன். அந்தக் குழந்தையின் முகத்தில் தாராவின் சாயல் இலேசாக இருப்பது போல் எனக்குத் தோன்றவே மறுபடியும் பயங்கரமான தலைவலி வருவதற்கான அறிகுறிகள் தோன்றத் தொடங்கியது!Photo_EKKUM 11011.png இது நான் கிளம்பிய நாளன்று நடந்த சம்பவம்! இது போல அவளிடம் நூறு சண்டைகள் போட்டிருக்கேன்!

ஆனால் ஒவ்வொரு முறையும் அவள் தான் வெற்றிக் கொடி நாட்டுவாள், அவள் அன்பு என்னை ஜெயித்துவிடும்.

சரி கௌதம், “நீ இப்ப என்ன சொல்ல வர்ற? இந்தக் குழந்தை யார் குழந்தை என்பதில் சந்தேகம் வந்திருச்சா!” அவள் கேட்டு முடிப்பதற்குள் குபுக்கென்று அவன் கண்கள் நிறைந்து போனது! உன்னால் என் மூளையில் எறியப்பட்டக் கல்லினால் என் ஞாபக மண்டலம் முற்றிலுமாகச் சுழலத் தொடங்கியது தாமரை!

நான் சிந்து இல்லாமல் பவியை மட்டும் தூக்கிக் கொண்டு என் தாயைப் பார்க்க விமானத்தில் கிளம்பியது, அதன் பின் நான் செய்த ரயில் பயணம், முடிவில் நடந்த ரயில் விபத்து, அதுமட்டும் இல்லாம சிந்துவோடு நான் வாழ்ந்த வாழ்க்கை, எங்கள் வெளிநாட்டுப் பயணம், பவியின் பிறப்பு, என் தந்தையின் மரணம் எல்லாமே இப்ப என் ஞாபகக் கிடங்கில் சேர்ந்துவிட்டது.

இப்ப என்னுடைய லைஃப் என்னும் ஃஃபைல் சுத்தமாக் கலைஞ்சு போய் கிடக்கு! அதை வரிசப்படுத்தி மார்க் பண்ணி ஒரு ஃபோல்டரில் போடணும்!”எல்லா விஷயமும் உன்கிட்ட ஷேர் பண்ணுறதுக்கு முன்னாடி என் மனம் கண்டறிந்த ரகசியத்தை உன்கிட்ட சொல்லப் போறேன்.

நானும் சிந்துவும் காதலித்துத் திருமணம் செஞ்சிருந்தாலும் எங்கள் வாழ்க்கை சுகமாக இருக்கவில்லை! அதோடு நான் கையில் துக்கி வந்த ஒரு வயது மூன்று மாதமேயான அந்தைக் குழந்தையின் முகம் என் மனதில் சித்திரமாய்ப் பதிந்துள்ளது! என்னதான் கடந்து போன ஒரு வருட காலத்தில் அந்தக் குழந்தை வளர்ந்திருந்தாலும் அதன் முந்தைய முகம் நம் மனதில் அழுத்தமாய் பதியப்பட்டிருக்கும்

தாரா விளையாட்டாய் என்னிடம் கூறியதில் உண்மை இருக்குமோ என்று இப்ப எண்ணத் தோணுது! என் மனைவி சிந்துவைப் போலவே என் குழந்தை பவி தலை கொள்ளாத சுருள் முடியோடும்; அகன்ற விழிகளோடும், செப்பு இதழோடும் இருக்கும். அந்தக் குழந்தையின் முகம் என் மூளையில் ஒரு ஓவியமாய் பதியப்பட்டுள்ளது, என் மனைவி சிந்து மிகப்பெரிய அழகி! அவள் சிரிக்கும் பொழுது தோன்றும் உதட்டுச்சுளிப்பு அந்த ஒரு வயது குழந்தையிடமும் இருந்தது! இந்தக் குழந்தை பவியின் முகத்தில் தாராவின் சாயல் நிச்சயமா இருக்கு! என்னிடமிருந்து மறைக்கப்பட்ட தாராவின் மிகப்பெரிய கதை ஒன்று அவளுடைய இதய அறைகளில் இருக்க வேண்டும்.

அது எப்படிப்பட்டக் கதையாய் இருந்தாலும் எனக்கு அவளைப் பற்றி எந்தக் கோபமோ, வருத்தமோ இல்லை! எங்கள் இருவருக்கிடையில் இருந்த காதல் சத்தியமானது. அவள் பல முறை என்னிடம் ஏதோ கூற வந்து தயங்கித் தயங்கி நின்றதை நான் உணர்ந்திருக்கிறேன். ஒவ்வொரு முறையும் ‘சொல்றேன்டா! உன் மனசு இன்னும் கொஞ்சம் வீரியம் அடையட்டும்னுதான் சொல்வா!’

ஸோ இதைத் தவிர என் வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம்தான்.

நானும் சிந்துவும் முதன் முதலில் டில்லி ரயில்வே ஜங்க்ஷனில்தான் சந்தித்தோம். அன்றுதான் என்னுடைய டில்லி வாழ்க்கை என்னும் கோலத்தில் தொடக்கப் புள்ளி இடப்பட்டது.

ஒரு பெரிய ட்ராலி பேக்கில் எனக்கு வேண்டிய எல்லாப் பொருட்களையும் அடைத்துக் கொண்டு நான் கிளம்ப, அப்பா, அம்மா, மாமா, தர்ஷி, தர்ஷியின் பாப்பா என்று அனைவரும் எனக்குக் கண்ணாடிக் கண்களோடு பிரியாவிடை கொடுக்க நான் என்னுடைய கண்களைக் கலங்காமல் பார்த்துக் கொண்டேன். ஏன்னா என்னோட அப்பா விசுவிற்கு யார் அழுதாலும் பிடிக்காது! அதிலும் நான் கண் கலங்கினால் என் தந்தை உடைந்து போய்விடுவார்!

அவருக்குத் தெரியாமல் அழவேண்டும் என்பதற்காகவே அன்று காலை யாருக்கும் தெரியாமல் வீட்டிலிருந்து நழுவி வந்து, தபாலாபிசையும், ரயில்வே சந்திப்பையும் இணைக்கும் அந்த குறுக்கு மேம்பாலத்திலிருந்த படிகளில் ஒரு ஓரமாய் சென்று அமர்ந்து கொண்டு அப்பா என்னருகில் இல்லை என்ற தைரியத்தில் மனம்விட்டு அழுதேன்

அதற்குள்தான் எத்தனை எத்தனைக் குட்டிக் கதைகள், கவிதைகள், பாடல்கள் அரங்கேறியுள்ளன. நான் ஓர் புதிய உலகை சந்திக்கப் போகிறேன், என் வாழ்க்கை இனிமேல் ஜாலியோ ஜாலி, என்று அந்த வயசுக்கே உரிய ஆனந்தத்தில் முதலில் என் மனம் துள்ளிக் குதித்தாலும், பெற்றோரோடு எனக்கேற்படப் போகும் பிரிவு என்னைப் பெரிதும் பாதித்தது!

“உனக்குத் தெரியுமா? டீனேஜில் நம் மனம் அவ்வளவு பக்குவப் பட்டிருக்காது! அந்த வயதில் பெண்மை, ஆண்மையின் ஹார்மோன்கள் எல்லாம் காட்டாற்று வெள்ளம் போல் குதித்துத் திரியும்! கழுதைக் குட்டிக்கு ஒரு சுடிதாரோ, டிஷெர்ட்டோ போட்டுவிட்டால்கூட நம்மனம் ரசிக்கத் தொடங்கிவிடும். அப்பொழுது வரும் காதல் பெரும்பாலும் வெறும் இனக்கவர்ச்சியால் வருவது.

ஆனால் இந்த இருபத்து மூன்று, இருபத்து நான்கு வயதென்பது வாலிப வயதிலிருக்கும் அனைத்து இளைஞர், இளைஞிகள் வாழ்க்கையிலும் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தும் வயது. அப்பொழுது ஒரு வாலிபனின் மனது ஓரளவிற்கு பக்குவப்பட்டிருக்கும்! காதலுக்கென்றே கனிந்த வயது அது! பக்குவப்பட்ட மனம்! அழகை மட்டுமின்றி அனைத்தையும் ஆராயத் தொடங்கும். அங்கே பௌதீகம், ரசாயனம் உயிரியல் அனைத்தும் அலசி ஆராயப்படும் என்ற கர்வத்தில் எனக்கு அந்த வயதில் வந்த காதலை நம்பினேன்!

ஆனாலும் நான் அந்தக் காதலில் தோற்றேன் என்பதுதான் அந்தக் காதலுக்கு ஏற்பட்ட மிகப் பெரிய சோகம். ஏன்னா நம்மை அரவணைக்க யாருமற்ற ஒரு ஏகாந்த சூழலில், யாருமே நமக்கு இல்லாதது போன்றதொரு தனிமையில், அன்பிற்கும் அரவணைப்பிற்கும் ஏங்கும் மனம் தனக்குக் கிடைக்கும் எந்த கொலுகொம்பையும் பற்றிக் கொண்டு ஏறிவிடும். அப்படித்தான் நான் காதலிக்கத் தொடங்கினேன்.

அதிலும் அந்தப் பெண் அழகாகவும் அறிவுடனும் இருந்தால் கேட்கவே வேண்டாம்! வேலைக்கு சென்று நாலு காசு பார்த்தவுடனே நமக்கு எல்லாம் தெரியுமென்ற மமதை வந்துவிடுகிறது நமக்கு.

காதல் என்பது உள்ளே விழுந்துவிட்டால் வெளியில் வரமுடியாத ஒரு ஆழ்துளை கிணறு! அதில் விழுந்தபின்தான் தெரியும் அது ஒரு வழிப் பாதை என்று. அதில் அமிழ்ந்துவிடாமல் உயிர் தப்புபவர்கள் வெகு சொற்பப் பேர்தான்.

நான் சிந்துவின் அழகில் மயங்கினேன், அன்பில் மயங்கினேன், பேச்சில் மயங்கினேன்! என் காதல் மயக்கத்தில் அவள் எனக்காகவே படைக்கப்பட்டவள் என்று அந்தக் கானல் நீரை; அந்தத் தோற்றப் பிழையை முற்றிலும் நம்பினேன்.

புதுடில்லி ரயில்வே சந்திப்பில் நான் சென்று இறங்கியவுடன், எல்லாமே மிக எளிதாக இருக்குமென்று நம்பினேன். நாம்தான் ஆங்கிலத்தில் பொளந்து கட்டுவோமே! நம்ம இந்தியாதானே சமாளித்துக் கொள்ளலாம் என்று நினைத்ததற்கு முட்டை மார்க்தான் போட வேண்டும். போலோ, ஜாவ், பைட்டோ, தவ்ட், பானிபீவோ, ஊப்பர், நீச், அச்சா இப்படி சில ஹிந்தி வார்த்தைகளை வச்சு நம் இந்தியத் தலைநகரில் குப்பை கொட்டிவிடலாம் என்று நினைத்தது மகா முட்டாள்தனமென்று பின்னர்தான் புரிந்தது! அங்கே சரளமான ஹிந்தியும், ஆங்கிலமும் தெரிந்த நண்பன் இல்லையென்றால் ரயிலடியிலேயே படுத்துத் தூங்கணும்,, இல்லையென்றால் பெட்டியைத் தூக்கி தலையில் வைத்துக் கொண்டு நடக்க வேண்டியதுதான்.

கையில் மூன்று லக்கேஜ், பெரிய ட்ராலிப் பெட்டி, அதற்கு குழந்தை போல் மற்றொரு பெட்டி, தோளில் ஒரு லாப்டாப் பேக், கண்களில் ரேபான் கூலிங்க் கிளாஸ் மட்டும்தான் அணியவில்லை. இரண்டு நாள் ட்ராவலில் கொஞ்சம் கசங்கித் தெரிந்தாலும் பெரிய பந்தாவோடும் ஒரு வாலிப மிடுக்கோடும், ஆஹா தலை நகரில் வேலை என்ற மமதையோடும்தான் அந்த பிளாட்ஃபார்மில் இறங்கி நின்றேன். நம் ரயில்வே சந்திப்புகள் எல்லாம் உலகத்தின் மிகப் பெரிய சந்தைக்கடை என்பது தெரிந்த கதைதானே! அங்கே நடந்த களேபரங்களுக்கிடையில் நான் தட்டுத் தடுமாறி வெளியே செல்லும் வழியைத் தேடத் தொடங்கினேன். தொடரும்
 
என்னப்பா புதுக் கதை எழுதுறீங்க!? இந்தக் கதையும் நல்லாதான் இருக்கு
நான் எங்கேப்பா எழுதினேன்?
ரெயில் விபத்தில் கௌதம் கையில் பவி கிடைத்தாள்ன்னு நீங்கதானே ஒரு அப்டேட்டில் சொல்லியிருக்கீங்க, டெய்சி டியர்
இருங்க அது எந்த அப்டேட்டுன்னு பார்த்துட்டு வர்றேன்
 
Top