Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'என் கண்களில் காண்பது உன் முகமே' அத்தியாயம் 21

Advertisement

'என் கண்களில் காண்பது உன் முகமே' அத்தியாயம் 21

அத்தியாயம் 21

சிந்து தன் பிங்கிஷ் மெல்லிதழ் திறந்து பேசத் தொடங்கினாள்.

“நான் ஒரு பஞ்சாபிப் பொண்ணு! இளங்கலை ஆங்கிலம் முடித்த எனக்கு, இங்கே உள்ள ஒரு கால் சென்டரில் மிகவும் சுலபமா வேலை கிடைத்தது. என்னுடைய கஸ்டமர்ஸ் நிறையப்பேர் என் குரலில் ஒரு கிக் இருப்பதாக கூறியுள்ளார்கள். 24 மணி நேர வேலை என்றாலும், இந்த வேலை உங்களுக்கு ஒரு சுதந்திரைத்தைக் கொடுக்கும். இதன் மூலம் எனக்குக் கிடைத்துள்ள நண்பர்கள் வட்டம் மிகப் பெரியது!”

“எஸ் உன் குரலினிமையும், ஆங்கில உச்சரிப்பும் ஆசம்!” என்றேன் நான்.

“ஆனால் இந்த வேலை, சம்பளமெல்லாம் என் வீட்டினரின் கண் துடைப்பிற்காக நான் செய்து கொண்டிருப்பது! முக்கியமாக எனக்கு வேண்டியது எந்த வித தளைகளுமற்ற சுதந்திரம். எங்க குடும்பம் பஞ்சாபில் உள்ள ஒரு ஹிந்து குடும்பம்! நான் அங்கேயே வேலை தேடி இருக்கலாம்! ஆனால் அந்தக் குடும்பச் சூழல் எனக்குப் பிடிக்கவில்லை.

தங்களைச் சுற்றி பயங்கர கட்டுப்பாடுகளை விதித்துக் கொண்டு; எப்பவும் கட்டுக்கோப்போடு கூட்டுக் குடும்பமாக வாழ்றவுங்க; கொஞ்ச நாளில் அவர்கள் காட்டும் மாப்பிள்ளைக்கு நான் கழுத்தை நீட்டணும்; அதை மிகப் பெரிய விழாவாக கொண்டாடி, ஊரைக் கூட்டி பஞ்சாபி திருமணம் செய்து வைப்பார்கள், பின்னர் பிள்ளை குட்டிகளைப் பெற்றுக்கொண்டு, ஒரு கூட்டுக்குடும்ப வாழ்க்கை வாழ்ந்து கொண்டு! ஐயோடா சாமி! இவை எல்லாம் சுத்த கம்பக்னு நினைப்பவள் நான்!” சொல்லிவிட்டு அழகாகச் சிரித்தாள் அவள்.

அவள் பேசியதை என் மனம் ஏற்றுக் கொள்ளவில்லை என்றாலும் அவள் பேசிய பொழுது அசைந்த அழகிய பிங்கிஷ் உதடுகளை ரசிப்பதிலேயே என் மூளை கண்ணும் கருத்துமாய் இருந்ததால் என் மனதிற்கு ஒவ்வாத பேச்சுக்களை எல்லாம் அந்த இதழ்கள் எனும் இன்ப சாகரத்தில் தவறவிட்டேன். எதுவானாலும் பின்னர் பேசித் தீர்த்துக் கொள்ளலாம் என்று என் மூளை கூறிய போலி வாக்குறுதிகளை அப்படியே ஏற்றுக் கொண்டேன். இன்னும் அந்தக் கருவண்டு கண்கள் வேறு இடைவிடாமல் என்னை வாவா வென்று அழைத்துக் கொண்டிருந்தது!

“நாம நம்ம வாழ்க்கையை சுதந்திரப் பறவைகளா சுவைத்து மகிழனும் கௌதம், நீ இந்த ஊருக்கு வந்துட்ட இல்ல, இனிமேல் நீயும் எங்க ஜோதியில கலந்திருவ, இது கட்டுப்பாடுகளற்ற சுதந்திர வாழ்க்கை! நாம் என்ன செய்தாலும் நம்மைக் கேட்க யாரும் இங்கே இருக்க மாட்டார்கள்!

நீ உன் வேலையில் ஜாயின் பண்ணி அலுவலகம் போயிட்டு வா! இந்த வார முடிவில், இரவு உணவு விடுதியில் நாம் சந்திப்போம். ஒரே ஆட்டம் பாட்டம் கொண்டாட்டமாய் இருக்கும் என்று சொன்னவள், அதோடு நிறுத்தாமல்,

“இதுதான் என்னோட பெர்சனல் நம்பர்!” என்று என் நம்பரை வாங்கி அதற்கு ஒரு மிஸ்ட் கால் கொடுத்துவிட்டு, என் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டவள் அப்படியே ஒரு சிட்டுக் குருவி போல பறந்து சென்றாள்.

“சிட்டுக் குருவிக்கென்ன கட்டுப்பாடு, தென்றலே உனக்கெது சொந்த வீடு, உலகம் முழுதும் பறந்து பறந்து ஊர்வலம் வந்து விளையாடு!!!"

என் மனம் சிட்டுக் குருவியாய் சிறகடிக்கத் தொடங்கியது! அப்படியே அன்றே என் வாழ்க்கையிலிருந்து அவள் பறந்து சென்றிருக்கக் கூடாதா?” என்று எனக்கு இப்பொழுது தோன்றுகிறது!

“சூரியன் அஸ்த்தமனத்தின் பின் தோன்றும் ஞானத்தைப் போலவா!?” என்று தாமரை கேட்க,

“சரியா சொன்ன தாமரை, காதலில் விழுந்த மனம் அது கிடைக்கும் வரை வேறு பக்கம் திரும்பிப் பார்க்காது! ‘அன்று அவள் பேசியதெல்லாம் எனக்கு மறந்து போனது, ஆனால் அவளுடைய அந்தப் பறக்கும் விழிகளும்; மின்சார விரல் தீண்டலும்; அவளுடைய செவ்விதழ் முத்தமும்; குதித்துக் கும்மாளமிட்ட அவள் இளமையும்; என்னை வா வாவென்றழைத்த; அவை மட்டுமே என் நினைவுகளை ஆக்கிரமித்தவை. அன்று அவள் கூறிய ‘வீக் என்ட்’ எப்பொழுது வருமென்று தவிப்போடு காத்திருக்கத் தொடங்கினேன்.

வாரக்கடைசி வந்தது, ஆனால் அவள் வரவில்லை! அன்றிலிருந்து ஒவ்வொரு வாரமும் அவளுக்காகக் காத்திருந்து ஏமாந்து போனேன்.

என் பெற்றோரிடம் எதையும் மறைக்காத என் மனதில், கள்ளத்தனம் குடிகொண்டது! அவளைத் தவிர மற்ற அனைத்தையும் நான் அவர்களிடம் பகிர்ந்து கொண்டேன். நானாக அவளிடம் ஃபோன் பேச நினைத்தாலும் ஏதோ ஒரு ஈகோ என்னைத் தடுத்தது! ஒரு வழியாக அவள் கூறிய வீக் என்ட், ஆட்டம், பாட்டம், கொண்டாட்டத்தோடு ஒரு மாதம் கழித்து வந்தது! அவளிடமிருந்து வரும் அழைப்பிற்காய் காத்திருந்த நான் யோசிக்காமல் சென்று அந்த வலையில் விழுந்தேன்.

அவளே ஹோட்டலுக்கு வந்து அந்த இரவு விடுதிக்கு என்னைப் பிக் அப் பண்ணிச் சென்றாள்.

“நாம் சந்தித்து ஒரு மாசமாயிருச்சு!!!” என்று பச்சைப் பிள்ளையாய் நான் கூற, என்னருகில் காரில் அமர்ந்திருந்தவள் வெடுக்கென்று என்னைத் திரும்பிப் பார்த்து,

“ஏன் இந்த ராஜ குமாரன்கிட்டயும் ஃபோன் உள்ளது இல்லையா! சிந்துன்ற பேர்ல இருக்கும் தேடிப் பாரு!” அந்தக் கோபத்திற்குள் ஒரு எதிர்பார்ப்பு குட்டி போட்டிருப்பதை என் மனம் உணர்ந்து கொண்டது!

மௌனமாகவே அந்த உணவு விடுதியை அடைந்தோம்! அது போன்ற இரவு உணவு விடுதிகளுக்கு நான் சென்றதில்லை என்பதால், அங்கே நான் பார்த்த காட்சிகளில் என் விழி பிதுங்கிப் போனது. அரை குறை ஆடைகளுடன் ஆண்களின் கை வளைக்குள் ஆடும் பெண்கள்; காதைப் பிளக்கும் ட்ரம்ஸ்; உணர்வுகளைத் தூண்டும் மியூசிக்; வண்ண வண்ண மதுபானங்கள்; கொச்சைப் பேச்சுக்கள்; பஃப்ஃபேயில் உணவு; என்று மேல் தட்டு வர்க்க மீன் சந்தை போல் அவை என் காதுகளுக்குள் கூச்சலிட அதில் சற்றும் என்னை இணைத்துக் கொள்ள முடியாமல் அவற்றின் எல்லைகளுக்கு அப்பால் இருப்பதை நான் உணர்ந்தேன். என் மனம் அந்த ட்ரம்ஸ்கள் போல் அதிரத் தொடங்கியது!

யார் யாரோ ஆண்களும் பெண்களும் வந்து என்னைத் தொட்டுப் பேசினார்கள்! என்னைக் கை பிடித்து இழுத்தார்கள்! மது வகைகள் அங்கே ஆறாய் ஓடியது! யாருடைய கைகளையோ பிடித்துக் கொண்டு போன சிந்து பின்னர் என் கண்களிலிருந்து மறைந்து போனாள். என்னவளைத் தேடினேன், காணவில்லை சிறிது நேரங்கழித்து அவள் கையில் ஒரு மதுக் கோப்பையுடன் என்னருகில் வந்தமர்ந்தவள்,

“இது வெறும் ஜின்தான் நீ என்னோட பகிர்ந்துக்கிறியா!” என்று கேட்டவளின் முகத்தில் ஒன்றும் தெரியாத ஒரு இன்னொசன்ஸ் இருப்பது போலவே என் கண்களுக்குத் தோன்றியது!

எனக்கு மதுவின் மேலும் போதைப் பொருட்களின் மீதும் என்றுமே நாட்டம் இருந்ததில்லை, அந்த வினாடி, என்னவளைக் கொன்று புதைக்கும் அந்த மதுவின் மீது இன்னும் அதிகமான வெறுப்புத்தான் வந்தது!

“ஜின்னை இல்லை என்னுடைய ஜீனையே (மறபணு) உன்னிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்!” என்று மனதிற்குள் கூறிக் கொண்ட நான்,

மனதையும், உடம்பையும் கொல்லும் இந்தக் கொலைகார கும்பலிடமிருந்து இவளைக் காக்க வேண்டுமென்ற வைராக்கியத்தோடு, உறுதியான கரங்கொண்டு அவள் விரல்களைப் பிடித்திழுத்துக் கொண்டு வெளியே ஓடி வந்தேன்.

“புல் ஷிட்! என்னை விடுடா!” என்று அவள் கத்திய வார்த்தைகள் என் வலுவான பிடியில் காற்றில் பறந்தன! அதிர்ந்து போன அவள் விழிகளைப் பார்க்காமல் என் பிடியைவிடாமல் அவளைப் பிடித்திழுத்துக் கொண்டு வர அந்த இரவில் அந்த உணவு விடுதியை விட்டு இருவரும் வெளியேறினோம்.

கடந்த ஒரு மாதமும், தினம் மாலையில் தனிமையில் ஊர் சுற்றி நொய்டாவிலிருந்த பல இடங்களைத் தெரிந்து கொண்ட நான், ஒரு ஆட்டோ பிடித்து அருகிலிருந்த பூங்கா ஒன்றிற்கு அழைத்துச் சென்றேன். அங்கிருந்த வழவழப்பான க்ரானைட் ஸ்டோன் பெஞ்சில் அவளை அமரவைத்துவிட்டு அவளருகில் அமராமல் அவள் கண்களைப் பார்த்துக் கொண்டு நின்றிருந்தேன். வானத்தில் பாதி நிலா, சோம்பேறியாய்க் காய்ந்து கொண்டிருக்க அந்தப் பூங்கா பச்சை ஆடை போர்த்தி செயற்கை ஒளியூட்டலோடு பார்ப்பதற்கு மிகவும் ரம்மியமாயிருந்தது!

என் விழிகள் வழியாக அவள் இதயத்தில் நுழைந்த நான் கமகமக்கும் இன்ஸ்டன்ட் காப்பி போல உடனே ஒரு முடிவுக்கு வந்தேன்.

‘இவள்தான் இனி என் மனைவி என்ற முடிவை என் மனதில் இறுத்திக் கொண்டு திரும்பியே வரமுடியாத ஒரு புதைகுழிக்குள் தானாகவே குப்புற கவிழ்வது தெரிந்திரும் அந்த முடிவை தானாகவே என் இதயம் எடுக்க அதை என் மூளை உடனே செயல்படுத்த அந்தக் காதல் போதை தந்த மயக்கத்தில் அவளருகில் வந்து அவளுடைய இரு தோள்களையும் இறுக்கிப் பிடித்தவன்,,, அந்த ஒரு மாதமும் அவளைக் காணாத வெறியில், அவளைப் பார்க்க வேண்டுமென்று சதா சர்வகாலமும் என் மனம் தவித்த தவிப்பில்,

“ஐ லவ் யூ! ஐ லவ் யூ!” என்று நான் கத்த, அவளின் கருவிழி என் முகத்தைப் படம் பிடிப்பதற்குப் பதிலாய் அந்த விரிந்து போன கருவிழிகளில் ஒரு பாம்பின் சீற்றத்தோடு கோபம் குடி கொண்டிருப்பதைப் பார்த்தேன்.

அதே கோபத்தோடு என்னை பிடித்துத் தள்ளியவள்,

“ஐ ஹேட் யூ! ஐ ஹேட் யூ!” என்று ‘நான் ஐ லவ் யூ’ சொன்ன அதே எண்ணிக்கையில் கத்தத் தொடங்கினாள். அதைக் கேட்ட எனக்கு அவள் மேலிருந்த காதல்தான் கூடியதே தவிர குறையவில்லை! அதுதான் இரு வேறு வகையான காந்த சக்திகள்! நாம் காதலிக்கும் பெண் நம்மை வெறுத்தால் அது இன்னும் அதிக நேர்மறையான எண்ணங்களையும் காம அலைகளையும் தோற்றுவிக்கும் என்பதை நான் அன்று கண்கூடாகக் கண்டேன்.

அவளை அந்த ஸ்டோன் பெஞ்சில் அமர்த்திவிட்டு நானும் அருகில் அமர்ந்து கொண்டேன். அவள் கோபம் குறைந்து சாந்தமடையும் வரை காத்திருந்த நான், மறுபடியும் அவள் கண்களை உறுதியோடு பார்த்து

“ஏன்டா என்னை வெறுக்கிற, என் கண்களைப் பார்த்து, உண்மையாவே என்னை வெறுக்கிறேன்னு ஒரே ஒரு முறை சொல்லு, இந்த நிமிடமே நாம பிரிஞ்சிரலாம்.

“எனக்குப் பயமாயிருக்கு கௌதம்! என்னையும் இது மாதிரி காதல் கல்யாணம்கிற ஒரு போலியான உலகத்துக்கு அழைச்சிட்டுப் போயிருவியோனு எனக்கு ரொம்பப் பயமாயிருக்கு! ஏன்னா உன்னை உன் ஹோட்டல் அறையில் இறக்கிவிட்ட பின் உன்னை என் மனதிலிருந்து இறக்க முடியவில்லை!

எங்கு திரும்பினாலும் உன் முகம்தான் தெரியுது! இது ஏன்டா? நீ என்னை ஏதாவது வசியம் செஞ்சு வச்சிருக்கியா? நம் சுதந்திரத்தைப் பறிக்கும் இது மாதிரி தளைகளெல்லாம் வேண்டாம். இந்த ஒரு மாசமும் உன்கிட்டயிருந்து ஃபோன் வருமா, வருமானு காத்துக் கிடந்து, ஏமாந்து, அம்மாடி, என்னைவிடு சாமி, நமக்கு இந்த எதிர்பார்ப்பு, காதல் எல்லாம் சுட்டுப் போட்டாலும் வராது!”

“நீ பொய் சொல்ற! உன்னையும் ஏமாத்தி, என்னையும் ஏமாத்துற!”

“ஆமான்டா, நான் பொய்தான் சொல்றேன், இப்ப என்ன செய்யலாம்கிற!”

“வா கல்யாணம் பண்ணிக்கிட்டு அப்புறம் காதலிக்கலாம்னு சொல்றேன்!”

“நான் காதலே வேணாம்னு சொல்றேன், நீ கல்யாணம்னு சொல்லி வெறும் சிறைத் தண்டனையைத் தூக்குத் தண்டனையா மாத்தப் பார்க்கிறியா? என்னைப் பத்தி உனக்கென்னடா தெரியும்!”

“உனக்கு என்மேல் காதல் இருக்குனு தெரியும்!”

“ம் அப்புறம்,,,ம்,,,” என்று நான் இழுக்க

“உனக்கு ஒரு மண்ணும் தெரியாது! நீ ஒரு பச்சக்குழந்தை, உன்னை யார் வேணும்னாலும் ஈசியா வளைத்து ஒடித்து நிமிர்த்தி, மோல்ட் செய்து விடலாம்! உனக்குத் தெரியுமா ம்ம்ம்! ம்ம்ம்,,,, “நான் தண்ணி அடிப்பேன், ட்ரக் அடிப்பேன், ஆண்களோடு கை கோர்த்து சுத்தி வருவேன், செஃஸ் பத்தி கூடக் கவலைப்பட மாட்டேன்! ஆனால் இந்த மொராலிட்டி, தூய காதல், கல்யாணம், குழந்தைகுட்டிகள் இதெல்லாம் எனக்கு அலர்ஜி! வேணாம் கௌதம், உன்னோட அழகான உலகத்தை; என் மேல் இருக்கும் காதலோ, காமமோ ஏதோ ஒன்றுக்காக வெல்லாம் குலைத்துக் கொள்ளாதே! அவள் பேச்சில் என் மனம் சுக்குநூறாக உடைந்து கொண்டிருந்தது!

ஆனாலும் என் கண்களில் நிறைந்த அவள் முகத்தை என்னால் வெறுக்க முடியவில்லை!”

“அதுதான் கௌதம் உண்மையான காதல், நம்மால் நாம் காதலிப்பவர்களை வெறுக்க முடியாது!” தாமரையின் கூற்றுக்கு தலையாட்டியவன்,

“என் ஈகோவை விட்டு தினம் அவளை கைபேசியில் அழைக்கத் தொடங்கினேன். அவளை என் கை வளைக்குள் கொண்டு வந்தேன். குடி, கூத்து, மது, போன்ற, போதைப் பொருட்களற்ற வேறொரு உலகத்தைக் காட்டினேன். அவளுக்குள்ளே ஒரு மாற்றம் நிகழ்ந்தது!. ஆனால் கல்யாணத்தை மட்டும் தள்ளிப் போட்டுக் கொண்டே வந்தாள். நான் ஒரு முறை சென்னை சென்ற பொழுது என் காதலைப் பத்தி என் செல்ல அம்மாவிடம் லேசாகக் கோடு கிழித்தேன். அதைக் கேட்ட என் தாய்,

“உனக்கு இந்த லவ் மேரேஜ் வேண்டாம் கண்ணா! நீ வாழ்நாள் பூரா அந்தச் சிலுவையை சுமக்க நேரிடும்! என்றாள். அம்மா எவ்வளவோ எடுத்துக் கூறியும் அவர்களைத் என் பேச்சால் மூளைச் சலவை செய்தேன். காதலின் வலிமை அத்தகையது. நம் பெற்றொரையே தூக்கிய எறிய வைக்கும் வலிமை காதலுக்கு உண்டு. என் தாய் தன் தொலை நோக்குப் பார்வையில் கூறிய அனைத்தும் அப்படியே பலித்தது! இரண்டே வருடத்தில் என் திருமணப் ப்ரப்போசலோடு என் பெற்றோரை சந்தித்தேன்.

நம்ம ஊர்ப்பக்கமுள்ள பொண்ணைத் திருமணம் செஞ்சா கண்டிப்பா நீ சீக்கிரமே நம்ம ஊருக்கு, அட்லீஸ்ட் தமிழ்நாட்டுக்காவது ட்ரான்ஸ்ஃபர் வாங்கிட்டு வந்திருவடா!!! பிளீஸ்டா உனக்கு அந்தப் பொண்ணு வேண்டாம்டா! காதலித்து திருமணம் செய்து கொண்ட என் அம்மாதான் சிந்துவை நான் திருமணம் செய்ய வேண்டாமென்று கூறினார்.

“அவ ஒரு வட இந்தியப் பொண்ணுனு சொல்றப்பா? அவங்களோட, நடை, உடை பாவணை, கலாச்சரம், மொழி, சாப்பாடு, கும்பிடும் தெய்வங்கள் உட்பட எல்லாமே மாறுபடும்! நீ எல்லா விஷயத்திலும் அவளுக்காக விட்டுக் கொடுத்துப் போக வேண்டியிருக்கும், அவளும் அதையே உனக்குத் திருப்பிச் செய்யணும்னு நீ எதிர்பார்ப்ப, உங்க திருமணத்துக்கு முன்னாடி அவளோட பெற்றோரை சந்திச்சு அவங்களோட சம்மதத்தைக் கேளு! அது மாதிரி ஒரு நாளைக்கு உன் காதலியை இங்க கூட்டிக்கிட்டு வா! நாங்களும் உன் காதலியை உனக்கு மனைவியாகப் போறவளைப் பார்க்கணும் இல்லையா!? எங்களோட சம்மதம் இல்லாவிட்டாலும், உன்னோட எதிர்காலம் சிறக்க எங்களோட ஆசி உனக்கு வேணும்பா!”

“கண்டிப்பா கூட்டிட்டு வர்றேன்மா! ஆனால் அவங்க குடும்பம் ரொம்ப கட்டுக் கோப்பான கூட்டுக் குடும்பமாத் தெரியுது! அவளுக்கு அவங்க பெற்றோரின் சம்மதத்தைக் கேட்பதற்கோ இல்லை, அவர்களின் ஆசிரைப் பெறுவதிலோ அவ்வளவு இன்ட்ரஸ்ட் இருக்க மாதிரி தெரியலை!”

“என்னைக் கேட்டா நீயும் அவளும் இரு துருவங்கள்! நீ சின்ன வயசிலிருந்தே எங்களை சார்ந்தே வளர்ந்தவன். எப்படிப்பட்ட நிலைமைக்கும் உன்னை அட்ஜஸ்ட் பண்ணிக்குவ, ஆனால் அந்தப் பொண்ணு,,,? எனக்குப் பயமா இருக்கு தம்பி!” ஆனாலும் என் காதல் மனம் அவர்களை சரிகட்டுவதில் இருந்ததே தவிர அவர்கள் சொல்வதை ஆராயும் மனநிலையில் இல்லை!

அந்த டில்லி பொண்ணைத் திருமணம் செஞ்சா முதலில் அந்தப் பெண்ணுக்காக டில்லியில செட்டில் ஆகிறேன்மான்னு சொல்லுவ! நம்ம இந்தியாவுக்குள்ள இந்தா இருக்க டில்லியில இருந்து சென்னைக்கு விமானத்தில் பறந்து வந்தா ஒரு மணி நேரம் கூட ஆகாதுமானு சொல்வ,,,!

ஆனால் நாளைக்கே ஒரு டிராலிப் பெட்டியை உருட்டிக்கிட்டு நீ பாட்டுக்கு டாட்டா சொல்லிவிட்டு யூகே, யூஎஸ்னு பனிப்பொழிவு இருக்க இடமாப் பார்த்துப் பறந்து போயிருவடா; உன்னைப் பிரியும் சக்தி எங்கக்கிட்ட இல்லப்பா! ஆனால் அவர்களைத் தூக்கி எறிந்துவிட்டுத்தான் என் திருமணத்தை முடித்திருக்கிறேன்

எங்கள் இருவருக்கிடையில் காதல் வளர; சிந்து தன் பங்குக்கு என் அன்பில் கட்டுண்டு, காதலை வளர்த்து, தன்னுடைய போதைப் பழக்கங்களை சற்றே நிறுத்தி வைத்திருந்தாள். அவள் பார்க்கும் வேலையிலிருந்து அவளை விடுவிக்க நாசுக்காய் வழி தேடிக் கொண்டிருந்தேன். மாதங்கள் வருடங்களாய் ஓடத் துவங்க, என்னுடைய 26 வது வயதில் எனக்கு ஒரு வெளி நாடு செல்லும் சான்ஸ் வந்தது.

லண்டன் செல்ல வேண்டும் இவள் எனக்கு வேண்டும் என்னோடு வரவேண்டும், என்னால் இவளைத் தனியாகத் தவிக்கவிட்டுப் பிரிந்து செல்ல முடியாது! ஒரே வழி இவளை என் மனைவியாக்கி, என்னைச் சார்ந்திருப்பவள் என்ற விசாவில் அழைத்துச் செல்லலாம் என்பதுதான்.

அவள் வேலையை ரிசைன் செய்ய நல்ல வாய்ப்பு! அவ வேளிநாடு போகலாம் என்ற மகிழ்சியில் அவள் வேலையை ரிசைன் செய்தாள்.

திருமணத்திற்கு என் பெற்றோர் சம்மதம் வேண்டும், அவர்களின் ஒரே பிள்ளை பற்றி பெரிய கல்யாணக் கனவுகள் இருக்கும்! இப்பொழுதுதான் காதல் போதை தெளிந்து உண்மையான நிதர்சனத்தை என் மனம் சிந்திக்கத் தொடங்கியது ஆனாலும், சிந்துவை இழக்க என் மனம் ஒப்பவில்லை.

ஒரு பக்கம் விசா ப்ராஸஸ்; மறுபக்கம் எங்களுடைய பதிவுத் திருமணத்திற்கான ஏற்பாடுகள்; மறுபுறம் என் பெற்றோர்; இதற்கிடையில் சிந்துவை திருமணத்திற்குச் சம்மதிக்க வைக்க நான் போராடிய போராட்டங்கள் என்று எனக்கு மூச்சுத் திணறத் தொடங்கியது!

எங்கள் திருமணத்திற்கு அவளுடையபெற்றோரின் சம்மதம் வேண்டுமென்றே அவளுக்குத் தோன்றவில்லை! என் கட்டாயத்திற்காக அவர்களிடம் கேட்டும் அவர்களின் சம்மதம் இவளுக்குக் கிடைக்கவில்லை. ஏறக்குறைய அவள் குடும்பத்தாரால் முற்றிலுமாக விலக்கி வைக்கப்பட்டாள்.

ஒரு கட்டத்தில் அவள், “உன் வீட்டு சம்மதமும் வேண்டாம்; என் வீட்டுச் சம்மதமும் வேண்டாம்! வாடா இந்த ஊரைவிட்டு, இந்த உலகத்தைவிட்டு, ஏன் இந்த பிரபஞ்சத்தை விட்டே எங்காவது ஓடிப் போயிரலாம், வாடா இப்பவே ஒடிப் போயிரலாம்!” இது சாட்சாத் சிந்துவே பேசிய வசனங்கள்தான்.

நான் என் பெற்றோரை சந்தித்து எங்கள் திருமணச் செய்தி கூறுவதற்காக விமானம் பிடித்துச் சென்னைக்கு ஓடி வந்தேன். நான் என் திருமணத்திற்கு அவர்களின் சம்மதத்தைக் கேட்கவோ, திருமணத்திற்கு அழைக்கவோ வரவில்லை. ஆனால் விரைவில் பதிவுத் திருமணம் செய்து, அதைத் தொடர்ந்து யூகே பயணம் என்ற செய்தியை மட்டும் கூறவே சென்னை வந்திருந்தேன்.

என் பெற்றோரைப் பார்க்க அரக்கப் பரக்க நான் மட்டுமே விமானத்தில் பறந்து வந்திருந்தேன். என் சிந்து என்னுடன் இல்லை!

நான் கூறிய செய்தியைக் கேட்டு தாயும் தந்தையும் பதறித் தவித்துப் போனார்கள்! கல்யாணப் பெண்ணில்லாமல் நான் மட்டுமே பெற்றோரை சந்திக்கத் தனித்து வந்ததை அவர்களால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. நான் கூறிய செய்தி கேட்டு அணைகட்டு உடைந்து அதில் தேக்கி வைத்த நீரெல்லாம் ஊருக்குள் ஓடி ஊரே வெள்ளக்காடாய் ஆனது போல; அம்மாவின் கண்கள் உடைப்பெடுத்துக் கொள்ள, அப்பா தசரத மஹாராஜா போல் மகனைப் பிரியப் போகும் புத்திர சோகத்தில் ஆழ்ந்து போனார்!

இருப்பத்தாறு வயது வாலிபனான நான் எப்பொழுதும் போல் அம்மா மடியில் ஒரு குழந்தை போல் படுத்திருந்தேன்.

“என் கண்ணுப் புள்ளை இல்லையா, உன்னோட செல்லப் பிள்ளைக்காக யெஸ் சொல்லுமா!” என்று என் தாயை நான் அன்பால் மிரட்டினேன். IMG-EKKUM 0012.jpg தொடரும்
 
Top