Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'என் கண்களில் காண்பது உன் முகமே' அத்தியாயம் 22

Advertisement

'என் கண்களில் காண்பது உன் முகமே' அத்தியாயம் 22

அத்தியாயம் 22

“ஏண்டா கண்ணா, உன்னோட காதல் வாழ்க்கையில் எங்களை மறந்துட்டியா! உன் கல்யாணத்தை எட்டு ஊருக்குப் பந்தல் போட்டு; ஊரையே கூட்டி விருந்து வச்சு இந்தக் கோவைப் பட்டணமே வியந்து பார்க்கிற மாதிரி நடத்தணும்னு நினைச்சமேடா? என் பிள்ளையைச் சுற்றி நாங்க கண்ட கனவு அவ்வளவுதானா, எகிப்த்திய மம்மி மாதிரி எங்கள் கனவுகளை மண்ணிற்குள் புதைக்கப் போறியா?”

“ஏன் கற்பகம் என்னோட புள்ள அவனுக்கு நடக்கப் போகும் கல்யாணத்தைப் பத்திக் கூறும்போது இவ்வளவு அபசகுணமா பேசுற, அவன் நம்ம பிள்ளைடி, அவனுடைய எதிர்காலம் அவன் கையில் இருக்கு, அவனுக்கு ஏதாவது நெருக்கடி இல்லைனா எம்புள்ளை இப்படி எல்லாம் செய்ய மாட்டான்!”

என்னுடைய தந்தையின் பேச்சில் என்னுடைய கண்கள் உடைப்பெடுத்துக் கொண்டன! என் தந்தைக்குத்தான் என் மேல் எவ்வளவு நம்பிக்கை.

“ஏய் பாருடி, என் புள்ளைய! அவன் கண்கள் கலங்குது! அவனைக் கண் கலங்க வைக்காதடி! நீயும் நானும் கல்யாணம் பண்ணித் தனிக் குடித்தனம் வரலையா? என்னோட செல்லம் லண்டனில் தனிக் குடித்தனம் போகப் போறான் அவ்வளவுதான். ராஸ்கல் திரும்பி வரும்போது, புள்ளை குட்டியோட ஒரு புதுவகையான கல்யாணத்தை இங்க செஞ்சு வச்சிருவோம்!” என்று அப்பா சிரித்துக் கொண்டே நடிகர் திலகம் சிவாஜி பாணியில் கண்களில் கண்ணீரோடு கூற, அழுகை சீன் சிரிப்பு சீனாக மாறியது!

அவ்வளவுதான் அம்மா உடனே காரியத்தில் இறங்கிவிட்டார். நாங்கள் வெளிநாட்டில் குடித்தனம் நடத்தத் தேவையான மிளகாய்ப் பொடி, மல்லிப் பொடி, மஞ்சள் பொடி, மிளகுப்பொடி, சாம்பார் பொடி, ரசப் பொடி, இட்லிப் பொடி, பருப்புப் பொடி, சட்னிப் பொடி, இனிப்பு வகைகள், கை முறுக்கு, கால் முறுக்கு என்று எதை எதையோ செய்து ஒரு பெட்டியை நிரப்பிக் கொடுக்க, என் காதலியை பதிவுத் திருமணம் மூலம் கைபிடித்த நான் என் காதல் மனைவியோடு லண்டன் வழியாக லீட்ஸ் பறந்தேன்

அது இளமையின் வேகம்! அந்த வயதில் வரும் கொழுப்பு! என் தாயின் சொல்லை மீறித்தான் என் காதலியைக் கைப்பிடித்தேன்! அம்மா கூறியது போல்தான் அனைத்தும் நடந்தது! ‘இதோ வானம் தொட்டுவிடும் தூரம்தான்’ என்று சொல்லி அவர்களையும் ஏமாற்றி என்னையும் ஏமாற்றிக் கொண்டேன். அவர்களின் வேரைத் தாங்க வேண்டிய இந்த விழுது வெட்டிக் கொண்டு சென்ற பொழுது என் பெற்றோர் முற்றிலுமாய் உடைந்து போனார்கள்.

“ஒரு நாள் மட்டும் ட்ராவல் பண்ணி வந்தா போதும் லண்டனில் தரை இறங்கலாம்!” என்று நான் உண்மை கூறியிருந்தாலும், பணியிலிருக்கும் தாய் தந்தையரால் நினைத்தவுடன் லண்டனுக்கு எளிதில் வர முடியவில்லை

என்னைச் சுற்றியே தங்கள் வாழ்க்கையின் கோலங்களை வரைந்தவர்கள் என் பெற்றோர், தசரத மஹாராஜா, தன் அருமை மைந்தர்களைக் காட்டிற்கு அனுப்பிவிட்டு புத்திர சோகத்தில் தவித்தது போல என் பெற்றோர் இருவரும் தவித்தது எனக்குத் தெரியும்! நான் வெளிநாடு வந்தவுடன் என் தந்தையின் உடல் சீர்கேடு அடையத் தொடங்கியது! நான் இதோ வருகிறேன் என்று நூறு முறை சொன்னாலும்; என்னாலும் அவரைச் சென்று பார்த்து வரமுடியவில்லை

வெறும் இரண்டரை வயதான என் குழந்தை மேல் எனக்கு இவ்வளவு பாசமும், பிரியமும், அவள் எனக்கு மட்டுமே சொந்தம் என்னுடைய உடமை என்ற பொஸஸிவ்னசும் இருக்கிறதென்றால் என்னை ஒன்பது மாதங்கள்; அந்தச் சுமையை இறக்கியே வைக்காமல் தன் உதிரத்தில் சுமந்த என் தாய்க்கு எப்படி வலித்திருக்கும். அவர்கள் வலி இப்பொழுது எனக்குப் புரிகிறது!

“என் கலைந்து போன நினைவுகளை மூளை சேகரிக்கத் தொடங்கியவுடன் முதலில் என் தாயைத்தான் தரிசிக்க நினைத்தேன். ஆனால் எனக்கு அதற்கான மனவலிமை இல்லை! கால வெள்ளத்தில் நான் தொலைத்த மனைவியோடும், குழந்தையோடும் வந்து என்னோட அம்மாவை சந்திக்கிறதா சத்தியம் பண்ணி இருக்கேன். அதுதான் என் பயணத்தின் நோக்கம் ஆனால்,,, சிந்து எனக்குக் கிடைக்க மாட்டாள்,,, அவள் என்னைவிட்டு வெகு தூரம் போய்விட்டாள்!,,,தாமரை

“எனக்கு என் அன்பு அம்மாவைப் பார்க்கணும் தாமரை!”

“அப்பச் செயினை இழுத்து வண்டியை நிறுத்தவா? கோவைக்கு இப்படியே காட்டு வழியில பொடி நடையா நடந்து போறீங்களா? நானும் வேணும்னா வழித்துணைக்கு வர்றேன்! இல்லைனா அடுத்த ஸ்டேஷனில் இறங்கி சென்னை செல்லும் வண்டியில ஏறுங்க!”

“ஐயையோ வேணாம்! எனக்கு என் தாராவைத் தெரியும்! அவள் இந்நேரம் என் தாயை சந்திச்சிருப்பா? நீ வேணாப் பாரு அவ எனக்கு முன்னாடி என் தாயோடு நொய்டாவில் காத்திருப்பா!”

“அது எப்படி? அவங்களுக்கு, உங்க முகவரி, நீங்க எந்த வண்டியில வர்றீங்க? எங்க, எதுல போறிங்கன்ற எந்தக் குறிப்பும் இல்லையே!

“இல்ல அவ பலே கெட்டிக்காரி! அவங்க மூளை மிக வித்தியாசமா செயல்படும்! இந்நேரம் மூளையை குடைஞ்சு அனைத்துக் குறிப்புகளையும் சேகரிச்சிருப்பாங்க,
அவள் ஏமாந்தது என்னிடம் மட்டும்தான்!"

“மறுபடியும் அவங்களை ஏமாத்தப் போறீங்களா!?”

“தெரியலை!, இன்னொரு முறை நான் அவளைப் பார்த்தா, அவள் அன்புப் பிடியில் நானிருப்பேன்! நாங்க கணவன் மனைவியா இணைஞ்சிருப்போம்!”

“நீங்க ரொம்ப வீக் கௌதம்! பெண்களான எங்கக்கிட்ட இருக்க வீரியமும் தைரியமும் கூட உங்கக்கிட்ட இல்லை!”

“அதுதான் என்னோட பலமும், பலவீனமும் தாமரை!”

“சரி உங்க கதையை முடிங்க!!” அப்பொழுது நல்ல இரத்த சிவப்பில் தக்காளி சூப் சுடச் சுட சில்வர் கேனில் வர! அதில் சுவை இல்லை என்றாலும் சூடிருந்தது! பவியை எழுப்பி மடியில் அமர வைத்தவன், ஊதி ஊதி அதை வெள்ளை ப்ளாஸ்டிக் ஸ்பூனில் ஊட்டத் தொடங்கினான். அவன் அன்போடு கொடுத்த எதையுமே அந்தக் குழந்தை வேண்டாமென்று சொல்லவில்லை! அதுவாக வேண்டுமென்று எதையும் அடம் பண்ணிக் கேட்கவில்லை என்றாலும், வேண்டும் என்று அது அடம் பண்ணிக் கேட்டது தாராவை மட்டும்தான்.

“அப்பா, இப்ப தாராம்மா வருவாங்களா? என்று குழந்தை கேட்க,

“தூங்கி எந்திருச்சு நாளைக்குக் காலையில டில்லி போனவுடன் வந்திருவாங்க!” என்று தைரியமாய் அவன் பொய் கூற, அது படபடவென்று கைதட்டி, கலகலவென்று சிரித்தது!

அவனுக்கும் உடனே அம்மாவைப் பார்க்க வேண்டுமென்று தோன்றியது! ஆனால் குழந்தை அடம் பண்ணுவது போல் அவன் அழுது அடம்பண்ணி யாரிடமும் கேட்க முடியாதே! ஆனால் நிச்சயம் இவன் அழுகை தன் தாய்க்குக் கேட்குமென்று நம்பினான். அந்த நம்பிக்கையோடு கௌதம் தன் கதையை தாமரையிடம் தொடர்ந்தான்.

“நாங்க இருவரும் இளம் தம்பதியராய் ஆயிரம் கனவுகளைச் சுமந்து கொண்டு லண்டன் ஹீத்ரு ஏர்போர்ட்டில் இறங்கினோம். அங்கிருந்து என்னுடைய ஒர்க்கிங்க் ஸ்பாட்டுக்கு கனக்ட்டிங் விமானம் மூலம் லீட்ஸ் வந்தடைந்தோம்.

‘ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்!’ என்று பற்கள் தந்தியடிக்க, அந்த ஊரே ஏசி செய்யப்பட்டது போல, ஜில்லென்ற குளிரில் நடுங்கிக் கொண்டிருந்தது! பத்தும் பத்தாதற்கு கருமை நிறப் போர்வையை வேறு வானம் தனக்கு மேல் இழுத்துப் போர்த்தியிருக்க, கிழிந்து தொங்கிய மேகப் போர்வைக்குள் ஆங்காங்கே சூரியன் தன் ஒளிக் கதிர்களைப் பாய்ச்ச முயன்று தோற்றுக் கொண்டிருந்தான்.

மூன்று மணிக்கே ஆறுமணிபோல் பூமிக்கோள் அங்கே தூங்கத் தொடங்க; சூரிய ஒளியின்றி தங்களின் கருப்பு நிறமிகளை இழந்திருந்த வெள்ளை நிற மக்கள், தலையில் தொப்பி, இடையில் ஸ்வெட்டர், அதன் மேல் கம்பளிக் கோட், கைகளுக்குக்கையுரை, கால்களுக்குஸாக்ஸ், பால் வேற்றுமையின்றி கனமான ஜீன்ஸ் பேன்ட் என்று குளிருக்கேற்றார் போல் வகை வகையா தங்களை கறுப்பு வெள்ளைப் புகைப்படங்கள் போல அலங்கரித்துக் கொண்டு சாலைகளில் செல்ல வண்ணப் புகைப்படங்களையே இந்தியாவில் பார்த்த என் கண்களுக்கு, அந்தக் காட்சிகள், நாகரிகத்தில் பின்னே சென்று கறுப்பு வெள்ளைப் படங்களைப் பார்ப்பது போலிருந்தது.

சிந்து குளிருக்கு இதமா என்னுடைய இறுக்கமான லெதர் கோட்டிற்குள் ஒடுங்கிக் கொள்ள அவளைத் என் கை வளைக்குள் அணைத்துக் கொண்டு வெறும் கானல் நீரை ஒரு கனவு வாழ்க்கையாய் நினைத்து வாழப் போனேன்.

ஏற்கனவே வலைகளில் தேடி, ஏஜன்ட் பிடித்து ஹாலோடு இரண்டு படுக்கயறை வீட்டை புக் பண்ணியிருந்ததால் எங்கள் திருமண வாழ்க்கை எந்தவிதச் சிக்கலோ, விக்கலோ இன்றி அழகாய்த் தோடங்கியது!

இருவருமே அந்த வெளிநாட்டு சூழலில் சற்றுத் தடுமாறித்தான் போனோம். முதல் வாரம் உணவு விடுதிகளிலும், சிறிய பெரிய மல்டிப்ளெஃஸ்களிலும் கிடைத்த ரொட்டிகள், சான்ட்விச், பீசா, பர்கர், பன், க்ரைசான்ஸ், மஃப்பிள்ஸ், கேக்ஸ், டப்பாக்களில் அடைக்கப்பட்ட உணவுகள் என்று எதை எதையோ குப்பை கூளங்களைத் தின்று வயிற்றை அடைத்தாலும், அவள் மனம் வடநாட்டு உணவிற்கும், என் மனம் தென்நாட்டு, உணவுக்கும் ஏங்கத் தொடங்கியது!

எந்த ஒரு சிறு பொருளை வாங்கினாலும் அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் பவுன்ட்ஸ் கணக்கை நம் இந்திய ரூபாய் மதிப்பில் பெருக்கிப் பார்த்து மனம் அதிர்ந்து போகும். ஏனென்றால் அந்த காலகட்டத்தில் ஒரு பவுன்ட் நம் இந்திய ரூபாய் மதிப்பில் நூறை நெருங்கிக் கொண்டிருந்தது.

ஒரு வாரம் கழித்து அந்த வீக்கென்டில் என் மடியில் படுத்துக் கண்மூடிக் கிடந்த சிந்துவின் முகத்தில் கவலை கவிழ்ந்திருந்தது!

“என்ன என் கண்ணம்மா முகத்தில் இவ்வளவு கவலை?!” என்று அவளின் கலைந்திருந்த முடியையும் முகத்தில் கவிழ்ந்திருந்த சோகத்தையும் கோதிவிட்டேன்.

“சீ போடா, உன்னை நம்பி கடல் கடந்து வந்ததுக்கு, இந்த அட்லான்டிக் பெருங் கடலிலேயே குதித்துச் செத்துப் போகலாம்னு தோணுது! இப்பவும் ஒண்ணும் கெட்டுப் போகலை, கடலில் விழுந்து உன்னைத் தலை முழுகிவிட்டு டில்லிக்கே திரும்பிப் போயிறலாமானு யோசிக்கிறேன்!”

அவளின் அந்தப் பேச்சால் என் மனசுக்குள் வருத்தமிருந்தாலும் கோபமோ வெறுப்போ அவள் மேல் வரவில்லை. முதலிலிருந்தே அவளுடைய வாழ்க்கை முறை என்னிலிருந்து மாறுபட்டு வேறாகத்தான் இருந்தது! அவுத்து விடப்பட்டிருக்கும் இந்த மேல் நாட்டு நாகரீகத்தில், இரண்டற கலந்துவிடுவாளோ என்ற பயம்கூட என்னிடம் இருந்தது! நல்ல வேளையாக அவளுடைய முதல் கவலை சாப்பாட்டைப் பற்றியதாயிருந்தது!

“ஏய் இந்த, பன்னையும், ப்ரெடையும், பர்கரையும் எத்தனை நாளைக்கு வாங்கித் தரப் போற?” என்ற அவளின் கேள்விக்கு,

“எனக்கே அம்மாவின் கைபக்குவத்தோடு நல்ல முறுகலான தோசையும், காரச்சட்னியும் இருந்தா நல்லா இருக்கும்னு தோணுது டியர்!” என்று பதில் கூறினேன்.

“எனக்கு சப்பாத்தி, குருமா, தால் இல்லைனா வெஜிடபிள் கறி இருந்தா நல்லா இருக்கும்!”

‘ஐய! மறுபடியும் அந்தக் காஞ்ச ரொட்டியா?’ என்று என் மூளை நங்கு நங்கு என்று, என் தலையில் குட்டினாலும், அவளின் சந்தோஷம்தான் எனக்கு முக்கியம் என்று தோன்ற,

“இங்க நிறைய இந்தியன் ஷாப்ஸ் இருக்கு சிந்து! முதலில் இன்னைக்கு வீட்டு உபயோகப் பொருட்கள், மற்றும் காய்கறிக்கான ஷாப்பிங்க். நாளைக்கு நம்ம சமையல் ஆரம்பம். நான் நிறைய சமையல் குறிப்புகளை வலைத் தளங்களிலிருந்து இறக்கி வச்சிருக்கேன்! அம்மாவும் நிறைய மசாலாப் பொடிகளை என் பெட்டியில் ஏற்றுமதி செஞ்சிருக்காங்க! உடனே ஃபைலை திறப்போம்; வேலை கற்போம்; லைஃபை சுகமாய் அனுபவிப்போம்,!” என்று மடியில் கிடந்தவளை நிமிர்த்தி, கலைந்து கிடந்த கூந்தலை நான் ஒதுக்க, என்னைப் பிடித்துத் தள்ளியவள்,

“இதெல்லாம் நமக்குச் செட்டாகாது, பாத்திரம் கழுவி, வீடு கூட்டி, உனக்கு சமைச்சுப் போட்டு புள்ளைகுட்டி பெத்துப் போட ஒரு ரோபாட்டிக் மெஷின் வேணும்னு என்னைக் கட்டிக்கிட்டு கடல் கடந்து கூட்டி வந்தியா!?”

அவள் பேச்சில் இருந்த எரிதழல் அங்கே நிலவிய குளிரை கொஞ்சம் விரட்டி அடிக்க, விசுக்கென்று எழுந்த நான்,

“நீ ஒண்ணுமே செய்ய வேணாம் ராசாத்தி, உன் கை நோகாம ஏதாவது வேலை இருந்தா பாரு, லைக், டிவி பார்த்தல், புக் படித்தல், தொலைபேசி தடவுதல்னு, பட் என் கூடவே இருக்கணும், நான் எல்லா வேலையும் முடிச்சிருவேன், உன்னோட வேலை சப்பாத்திக்கு எப்படி மாவு பிசையணும், எப்படி உருட்டித் தேச்சு, கல்லுல பக்குவமா போட்டெடுக்கணும். இதெல்லாம் ஒரு தடவை சொல்லிக் கொடு, கத்துக்கிறேன்! அப்புறம் நானே என் செல்லத்துக்கு செஞ்சு கொடுப்பேனாம்!”

“நீ பலே கில்லாடி பையா!” என்று சொல்லும் பொழுதே அவளை ரெஸ்ட் ரூமில் உள்ளே தள்ளி ஷாப்பிங்க் கிளம்ப வைத்தேன்!

தினம் தினம் எங்கள் வாழ்க்கை ஒரு போராட்டக் களமானது! குளிருக்கு இதமாய் டூவெட்டை இழுத்துப் போர்த்திக் கொண்டு தூங்குபவளை எழுப்பவே மனமிருக்காது! அப்படியும் அவளை எழுப்ப நினைச்சா ராக்கெட்டே ஏவ வேண்டியிருந்தது! அவளுக்குப் பகலில் வேலை எதுவும் இல்லை என்றாலும் சோம்பேறியாய் கட்டிலில் கிடந்தே சுகம் கண்டாள். கொஞ்சம் தூண்டினால் தனியாக இந்த ஊரை ஆராயப் போய்விடுவாளோ என்ற பயத்தில் அவளை நான் ஒன்றும் சொல்வதில்லை.

தினம் நானே காலையில் எழுந்து காஃபி தயாரித்துக் குடித்துவிட்டு, அவளுக்கும் ஃப்ளாஸ்கில் ஊற்றி வைப்பேன். காலையில் ஓட்ஸோ கஞ்சியோ, கூழோ குடித்துவிட்டு அலுவலகம் ஓடினால் அனைத்தையும் மறந்துவிடுவேன். அங்கே கேன்டினில் கிடைக்கும் உணவில் மதியம் வயிற்றை நிறைத்தால் இரவுக்குக் காஞ்ச ரொட்டியும் ஆலு (ஊருளைகிழங்கு) கறியுமிருக்கும்.

எங்கள் திருமண வாழ்வில், காதலும் பாசமும் இருந்தாலும் பல விஷயங்களில் எங்களுக்குள் ஓர் இணக்கமில்லாமல்தான் இருந்தது! அன்று என் தாய் கூறியது போல் கல்யாணம் என்ற பந்தத்தில் இறக்கி வைக்க முடியாத பல சிலுவைகளைச் சுமக்கத் தொடங்கினேன். நான் பயந்தது போலவே சிந்து முதலில் தனியாகவும் பின்னர் ஆண் நண்பர்களுடனும், கையில் மதுக் கோப்பையுடனும், வாயில் புகையும் சிகரட்டோடும் ஊர் சுற்றத் தொடங்கினாள். அவள் என்னையோ என் காதலையோ ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை என்று புரிந்து போனது!

“மது குடிக்கிறது, உடம்பக்குக் கேடு!” என்று நான் அவளிடம் கூறினால்

“உன்னைக் கட்டிக்கிட்டத் துன்பத்தை நான் மறக்க வேணாமா!?” என்று திருப்பி அடித்தாள்.

“பிளீஸ்டி, நீ சந்தோஷமாயிருக்கணும்னா நான் என்ன செய்யணும் சொல்லு!” என்றேன் ஒருநாள். ஏனென்றால் நான் அவளை மனதாரக் காதலித்தேன். அவளை உண்மையாகவே ஆனந்தப்படுத்த விழைந்தேன்.

“எனக்கு விடுதலை குடு அது போதும் எனக்கு! நான் இழந்த சுதந்திரம் எனக்குக் கிடைத்தாலே போதும் தர்றியா?” அவள் கேள்விக்குப் பதிலின்றி தவித்தேன் நான். அவள் கையிலிருந்த மதுக் கோப்பையைப் பார்த்து,

“என்ன செல்லம்? இப்படி கலர் கலரா, வகை வகையா ஒயின் குடிக்கிற!?”

“நான் தொலைத்த வண்ணக் கனவுகளை இந்த ஒயின்களில் நான் தேடுகிறேன் கௌதம்! அப்பக் கூட என் துன்பங்களை மறக்க அந்த மது போதை எனக்குப் பத்தலை! இன்னும் உச்ச இன்பம் கொடுக்கக் கூடிய வேற போதை வஸ்து இருந்தா சொல்லு, வா நீயும் என்னோடு வா இருவரும் சேர்ந்து இந்த பேரின்பங்களை அனுபவிப்போம் என்றாள் அவள்.

நான் பயந்து கொண்டே எதிர்பார்த்துக் காத்திருந்த நாள் விரைவிலேயே வந்தது! ஒரு நாள் மாலை வீட்டிற்குத் திரும்பிய பொழுது சிந்துவை எங்கும் காணாமல் உடல் பதறி வீடெல்லாம் தேடிவிட்டு ரெஸ்ட் ரூமில் எட்டிப் பார்த்தால் அவள் அங்கே மயங்கிக் கிடந்தாள். அவள் கையிலிருந்த மதுக் கிண்ணத்தில் இருந்து ஒயின் வழிந்து தரையில் ஓடிக் கிடந்தது, திராட்சை ரசத்தோடு எதுவும் போதைப் பொருள் உபயோகிப்பாளோ என்ற சந்தேகமும் என்னிடம் இருந்தது! சிந்துவின் கண்கள் மூடி, வாய் கோணி முகம் வெளுத்து; அவளை அந்தக் கோலத்தில் பார்த்த நான் அதிர்ச்சியின் உச்சத்தைத் தொட்டேன்.

நம்ம ஊர் போலவெல்லாம் உடனே ஆஸ்பத்திரிக்குத் தூக்கிக் கொண்டு ஓட முடியாது! அதுவும் டிரக் அப்யூஸ் கேசில் உள்ள போனால் என்ன ஆகுமென்றே எனக்குத் தெரியவில்லை. அவளை நான் என் கரங்களில் தூக்க ஒரு குழந்தை போல என் கரங்களில் துவண்டு போனாள். அவளைக் கட்டிலில் கிடத்தி கன்னத்தில் தட்டி, முகத்தில் தண்ணீர் அடிக்க திடுக்கென்று கண் விழித்தவள் என்னைப் பார்த்து அரண்டு போனாள்.

அவள் கண்கள் சிவந்து, அவளின் கண்ணின் கருவிழிகள் விரிந்து, முகம் வெளுத்து, கேசம் கலைந்து நான் முதலில் சந்தித்த தேவதை அவள் இல்லை!

அவள் இருந்திருந்தார் போல் ஏதேதோ ஹிந்தியில் புலம்பிக் கொண்டு என் தோள் மேல் சாய்ந்து, ஏங்கி ஏங்கி அழத் தொடங்கினாள்.

இப்பொழுதெல்லாம் அவள் ஒழுங்காக சாப்பிடுவதில்லை, தூங்குவதில்லை, அப்படியே தூங்கினாலும் அடிக்கடி முழித்து ஏதேதோ பிணாத்துவாள். தன்னை எப்பொழுதும் ஓர் அழகியாக அலங்கரித்துக் கொள்பவள் சில நாட்களாக அனைத்தையும் மறந்து போனாள். உடல் நடுக்கம், பேச்சில் ஒருவகையான குளறல், நடக்கும் பொழுது உடலில் ஒரு ஸ்திரத்தன்மை இல்லாத ஒரு ஆட்டம் இப்படி பல நுணுக்கமான மாறுபாடுகளை கவனித்து வந்தேன்.

என்மேலேயே எனக்கு வெறுப்பாக வந்தது. என் அலுவலக நண்பன் பாரதியின் மனைவி ஒரு டாக்டரா ப்ராக்டீஸ் பண்ணிக் கொண்டிருந்தார். அவர் பெயர் வர்ஷா! இருவருமே தமிழ் நாட்டை சேர்ந்தவர்கள்தான்.

“பாரதி உன் மனைவியோடு உடனே கிளம்பி என் வீட்டிற்கு வரமுடியுமா!” என்று அவசரமாய் அழைக்க அவன் பதறிப் போய் ஓடி வந்தான். பாரதி மனைவி வர்ஷாவிடம் சுருக்கமாய் நான் பிரச்சனையைக் கூற, அவர் என் மனைவியின் கண்டிஷனைப் புரிந்து கொண்டு தன் சிகிச்சையைத் தொடங்கினார். வந்தவுடன் ஒரு இஞ்செக்ஷனை ஏற்றி, மாத்திரை கொடுத்து, நீர் அருந்த வைத்து அவளைத் தூங்க வைத்தவர் என்னை வெளியே அழைத்து வந்தார்!

உங்க மனைவி, மது, மற்றும் கொக்கேயின் என்ற போதை வஸ்துவிற்கு மெல்ல மெல்ல அடிமையாகிக் கொண்டிருக்கிறார். நல்ல வேளை இன்னும் காலம் கடக்கவில்லை. இந்தப் போதையும் மெல்ல மெல்ல மனிதனை கொல்லும் ஒருவகை மூளை நோய்தான். அவர்கள் முற்றிலுமாக இந்நோயிலிருந்து வெளி வர வேண்டும். அதற்காக நீங்கள் அதிகமாகப் போராட வேண்டியிருக்கும்! முதலில் அவர்கள் இந்த போதை வேண்டும் வேண்டும் என்று கதறித் துடிக்கும் மூளையிடம் போராட வேண்டியிருக்கும்.

போதைக்கு அடிமையாகி மூளையில் ஏற்படும் ரசாயன மாற்றத்திலிருந்து, மறுபடியும் அதன் ஒரிஜினல் நிலமைக்கு மூளை திரும்பும்வரை இந்தப் போராட்டம் இருக்கும். நீங்க கண்டிப்பா ஒரு வாரம் லீவ் போட வேண்டியிருக்கும்.

எல்லா டெஸ்ட்டும் எடுக்கலாம். அவர்கள் எந்தவிதமான போதை வஸ்தை, என்ன அளவுகளில் எடுக்கிறார், அவர் மூளையின் டோபோமைன் அளவு, மூளை கொடுக்கும், பரிசுப் புள்ளிகள் எவ்வளவு? அந்த போதை தரும் இன்பத்திற்காக இவர் மூளை எவ்வளவு ஏங்குகிறது!? இப்படி நிறைய விஷயங்களை ஆராய வேண்டியுள்ளது!

மறுநாள் ரத்தப் பரிசோதனை, யூரின் டெஸ்ட், மது, மற்றும் போதைகளின் அளவு அனைத்தும் கண்டறியப்பட்டது! எங்களிடம் எதுவும் கூறாமல் ரகசியம் காத்தவர், என்னைத் தனியாக அழைத்துச் சென்று, நான் வானத்தில் ஏறி சந்திர மண்டலத்தை தொட்டது போன்றொரு இனிப்புச் செய்தி ஒன்றையும் கூறினார். கௌதம் நீ அப்பாவாகப் போற,,,,,,,,,,,! தொடரும்ekkum 010 png.png
 
Top