Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'என் கண்களில் காண்பது உன் முகமே' அத்தியாயம் 23

Advertisement

'என் கண்களில் காண்பது உன் முகமே' அத்தியாயம் 23

அத்தியாயம் 23

“கௌதம், நீங்க அப்பாவாகப் போறீங்க. ஆனால் அந்தக் கரு ஒரு தள்ளாட்டத்துடன் அம்மாவின் கருவறையிலேயே கரைந்து போவோமா இல்லை தொடர்ந்து வளரலாமா என்று தவித்துக் கொண்டிருக்கு! நல்ல வேளையா அவங்க முற்றிலும் இந்த போதைக்கு அடிமையாகலை. அவரின் மிகவும் சோர்ந்து போன மனநிலையே இந்தப் பழக்கத்தைத் தூண்டியிருக்கு! உங்க மனைவி, மற்றும் குழந்தையின் உயிர் இனி உங்கள் கையில்தான் இருக்கு!

அவரோடு நானும் ஒரு தோழியாப் பேசிப் பார்க்கிறேன். அன்பான உபசரிப்பு, சத்துள்ள உணவு, நல்ல தூக்கம், மகிழ்ச்சியான சுற்றுச்சூழல், தனிமையைத் தவிர்ப்பது, உடம்புக்கு வேண்டிய எஃஸ்சர்சைஸ், இப்படி பல நல்ல விஷயங்களால் மட்டும்தான் இந்தக் கொடிய பழக்கத்திலிருந்து அவர்களைக் காப்பாற்ற முடியும். முதல் பத்து நாள் கொஞ்சம் கஷ்டப்படுவாங்க. ஆனால் மூளை விரைவிலேயே அந்தப் புதிய சூழ்நிலைக்குப் பழகிவிடும்!” என்று டாக்டர் கூற, அதை என் தலையாய பணியாக மேற்கொண்டேன்.

வீட்டிலும் அலுவலகத்திலும் அதிகமாக உழைத்தேன். பல நாட்கள் ஒர்க் ஃப்ரம் ஹோம் வசதியை மேற்கொண்டு அவளை என் உள்ளங்கையில் வைத்துத் தாங்கினேன். ஒரு ஆண் மகனுக்குத்தான் தெரியும் தான் அப்பாவாகப் போகிறோம் என்ற மகிழ்ச்சியின் உச்சகட்டம் என்னவென்று. தன்னுடைய உயிர் தன் மனைவியின் உதிரத்தில் வளரும் பொழுது அது எத்தகைய இன்ப போதையைக் கொடுக்கும் என்ற உண்மையை நானும் புரிந்து கொண்டேன்! அந்த உள்மனப் பேரின்பத்தின் போதையில் அவளுக்காக 24 மணிநேரமும் உழைப்பது எனக்கு ஒரு பொருட்டாகவே எனக்குத் தெரியவில்லை.

“இந்த சிந்து நதிக்குள்ளிருந்து, ஒரு கிளை நதி தோன்றியிருக்கு, அதைப் பத்திரமா பெத்து என் கையில் கொடுத்திருடா செல்லம்!” என்று நான் கூற, வெகு நாட்கள் கழித்து என் சிந்துவின் முகத்தில் முதல் நாள் பார்த்த அந்த புன்னகை தோன்றியது! அந்தத் தாய்மையின் அழகு அவள் முகத்திற்கு ஒரு தேஜஸைக் கொடுத்தது!

நீ வீட்டில் ஒரு வேலையும் செய்ய வேணாம்! நானே அனைத்தையும் பார்த்துக்கிறேன்! நீ சந்தோஷமா இந்த வீட்டைச் சுற்றிவா! எத்தனை ஹிந்தி படம் வேணும்னாலும் பாரு, நல்ல மியூசிக்கை பாப்பாவை கேட்க வை!” பேசிக் கொண்டே அன்றாட வேலைகளைத் தொடங்கினேன்.

சிந்து, சிறிது சிறிதாக மாறத் தொட்ங்கினாள். அவளுடைய மாற்றங்கள் உடலளவில் மட்டுமில்லாமல் மனதளவிலும் இருந்தது! மூன்றாம் மாதத் தொடக்கத்திலிருந்தே மசக்கை வாட்டி எடுக்கத் தொடங்கியது! எப்பொழுதும் எதற்கும் கண் கலங்காதவள் தன்தாயை நினைத்துக் கண் கலங்கத் தொடங்கினாள்.

“எனக்கு அம்மாவைப் பார்க்கணும் போல இருக்கு கௌதம்! அவங்க மனசை எல்லாம் நான் ரொம்ப நோகடிச்சிட்டேன், எனக்குள் ஜனித்துள்ள குட்டி பாப்பா என்னை ஒரு புது மனுஷியா ஃபீல் பண்ண வைக்குது கௌதம்! நீ எனக்குப் புருஷனாக் கிடைச்சது நான் செய்த பாக்கியம்!” என்று புதுவித மொழியில் பேசத் தொடங்கினாள். என்னுடைய ஆனந்தம் எல்லை மீறியது!

நான்கு மாதங்கள் வரை கவிழ்ந்து படுத்துக்கிடந்தவள், ஐந்தாவது மாதம் முதல், நன்கு உணவுண்டு, என்னோடு வேலைகளைப் பகிர்ந்து, என்னை ஆச்சரியத்தின் எல்லையில் நிறுத்தினாள். அம்மா அப்பாவோடு பேசவே மறுத்தவள் வீடியோ காலில் ஒரே ஒரு முறை தன் முகத்தைக் காட்டினாள்’ அதுதான் என் பெற்றோர் முதலும் கடைசியுமாக என் மனைவியைப் பார்த்தது! என் தந்தை மழ்ச்சியோடு, ஆனந்தத்தில் பூரித்துப் போய் பேசினாலும், அவர் உடல் நிலையில் ஒரு தள்ளாட்டம் தெரிந்தது!

ஒரு நாள் லீட்சிலிருந்த பாலாஜி கோவிலுக்குச் சென்று என் ஆசைகள் அபிலாஷைகள் அனைத்தையும் அவர் பாதங்களில் கொட்டிவிட்டு வந்தேன். சிந்து டாக்டரிடமும் அடிக்கடி கவுன்ஸ்லிங்க் சென்றாள்! எட்டாம் மாதம் தாண்டி ஒன்பதாவது மாதத்தில் அடி எடுத்து வைக்க தாய்மையின் பூரிப்பு என் சிந்துவின் முகத்தில் தாண்டவமாடியது

ஒரு பெண்ணின் வயிற்றில் கருத்தரிக்கும் ஒரு குழந்தையால், அவளின் குழந்தைத்தனங்கள், சுட்டித்தனங்கள், கோபங்கள், கெட்ட பழக்கவழக்கங்கள், முதிர்ச்சியின்மை அனைத்தையும் அந்த ஒன்பது மாத்திற்குள் களைந்தெறிய முடியுமென்ற பேருண்மையை நான் என் சிந்து மூலம் தெரிந்து கொண்டேன். என்னால் செய்ய முடியாத செயலை அவளின் மனமாற்றத்தை என் மகள் செய்து காட்டினாள். இன்னும் பிரசவத்திற்கு இரண்டு வாரங்களே உண்டு என் குழந்தையைக் கைகளில் அள்ளப் போகிறேன் என்ற கனவை உடைத்தது என் தாயிடமிருந்து வந்த அழுகுரல்

‘என் தந்தை தூக்கத்திலேயே இறைவனடி சேர்ந்துவிட்டார்’ என்ற துக்க செய்தி! நான் பத்திரமாக ஊர் வந்து சேர வேண்டுமென்பதற்காக மாமாவின் உடல்நிலை கவலைக்கிடம், உடனே கிளம்பிவா என்று தர்ஷி செய்தி அனுப்பினாள். என் அம்மாவைத் தொடர்பு கொள்ள முடியவில்லை. எனக்கு உடனே புரிந்து போனது, என் வாழ்க்கையின் ஆணிவேர் பிடுங்கப்பட்டு விட்டதென்று. ‘எந்த நேரமும் குழந்தை பிறக்கலாம் என்று அம்பாரமான வயிற்றைத் தூக்கிக் கொண்டு நடமாடும் என் மனைவி சிந்துஜாவா!? இல்லை தன் உயிர்த்துளியில் ஜனிக்க வைத்து, என்னை தன் கைவளைக்குள் காத்து நின்ற என் தந்தையா?’ என்ற மனப் போராட்டத்திலிருந்த என்னை என் சிந்துதான் ஆறுதல் படுத்தினாள்.

“நான் இந்த நிலமையில் உன்னோடு வரமுடியாது! உனக்கு உன் அப்பா மேல் எவ்வளவு பாசமென்று எனக்குத்தெரியும், போயிட்டுவா கௌதம், நீ திரும்பி வரும்வரை நான் என் உயிரைப் பிடிச்சுக்கிட்டுக் காத்திருப்பேன், என் மகள் உனக்காகக் காத்திருப்பாள். இந்தப் பிரிவு நான் செய்த பாவங்களுக்காக இறைவன் எனக்குக் கொடுக்கும் தண்டனை!” என்றவளின் வாயைப் பொத்தினேன் நான்!

“சிறு குழந்தை நெருப்புன்னு தெரியாம கையைச் சுட்டுக்கிறதில்லையா? அப்படித்தான் நீ உன் வாலிப வயதில் அறியாமல் புரியாமல் செய்த சிறிய குற்றங்கள்; நான் வரும்வரை நீ பத்திரமா இருப்பியா கண்ணம்மா?” என்று அவளைக் கட்டிக் கொண்டு கண்ணில் நீருடன் கேட்டேன், சிரித்துக் கொண்டே அவள் தலையாட்டினாள்.

டாக்டரிடம் ஓடினேன். அவர்தான் எனக்கு முழு ஆறுதலும் தேறுதலும் கூறினார், “இன்னும் டியூ டேட்டிற்கு முழுசா ஒரு வாரம் டைம் இருக்கு, எங்க வீட்டுல வச்சு நான் பத்திரமா பார்த்துக்கிறேன். உங்களுக்காக; உங்களுக்கு உங்க மனைவி மேல இருக்கிற ஆழ்ந்த அன்பிற்காக; பாசத்திற்காக; என் சிறகுகளில் வச்சு கோழி தன் குஞ்சை அடைகாக்கிற மாதிரி பார்த்துக்கிறேன்!” என்று கூற, என் நண்பனும் அவர்களோடு சேர்ந்து எனக்குக் கை கொடுத்தான்.

என் சிந்துவைப் பிரியவே மனமின்றி விமானம் ஏறினேன். நான் நினைத்தது சரிதான், என் தந்தையின் உயிரற்ற உடம்பைத்தான் என்னால் பார்க்க முடிந்தது! என் தந்தையை எறியூட்டிய கையோடு,

“விரைவில் உனக்காகவே லண்டன் வாழ்க்கையைத் துறந்து சென்னைக்கே என் வேலையை மாத்திக்கிட்டு உன் மருமகள், பேத்தியோட வர்றேன்மா! இது நான் உனக்குத் தரும் சத்தியவாக்கு!” என்று சொல்லிவிட்டு அவர்களைத் தனிமைப் படுத்திவிட்டு கண்ணில் நீருடன் பிரிந்து வந்தேன்.

நான் மறுபடியும் லண்டனுக்கு விமானம் ஏறும் வரை, சிந்துவிடமிருந்தோ டாக்டரிடமிருந்தோ எனக்கு எந்த அழைப்பும் இல்லை”

கௌதம், “எனக்கே பரபரனு இருக்கு! ஏதாவது சோகக் கதை சொல்லப் போறீங்களா? அப்படி எதுவும் இருந்தா சீக்கிரமா ஒன் லைன் ஸ்டோரியா சொல்லி முடிச்சிருங்க! ப்ளீஸ்” என்றாள் தாமரை.

“எங்க கதையை அவ்வளவு சுலபமா, சுகமா முடிச்சு வைக்க இறைவன் நினைக்கலை போலும்! நான் லீட்ஸ் சென்ற மறுநாள் தான் சிந்துவிற்கு பிரசவ வலி தொடங்கியது! அவள் அந்த வலியில் கத்திக் கதறி, அழுது அரற்றியதை இன்றளவும் என்னால் மறக்க முடியாது! அவளுக்கு குழந்தை பிறக்க ஐந்து நிமிடம் வரையிலும் என் விரல்களைப் பிடித்துக் கொண்டு அவள் விடவில்லை. அவள் வாயிலிருந்து வந்தது இரண்டே வரிகள்தான்.

“எனக்கு ரொம்ப பயமா இருக்கு கௌதம்! என்னை மன்னிப்பியாடா? நான் நிறையத் தப்பு பண்ணிட்டேன்டா! என்னையும் நம் குழந்தையையும் பத்திரமா பார்த்துக்குவியா? என் குழந்தை என்னைப் பார்த்துச் சிரிப்பாளா? எனக்கு பயமா இருக்கு! பயமா இருக்கு! என்னைத்தனியா விட்டுட்டுப் போயிராதடா” என்று சொல்லிக் கொண்டேதான் அவள் பிரசவ வார்டிற்குள் சென்றாள்.

“நான் உயிரோட திரும்பி வரலைனா இந்த மன்னிப்புக் கடிதத்தை படிச்சுப்பாரு என்று எவ்வி என் சட்டைப்பைக்குள் எதையோ திணித்தவள், அந்த வலியிலும் என் முகத்தை இழுத்து அதில் ஆழ்ந்த முத்தமிட்டவள், “சீ போடி!” என்பதை காதில் வாங்கிக் கொள்ளாமலே அந்த உயிர் போகும் வலியிலும்,

“ஏய் நான் கொடுத்ததைத் திருப்பிக் கொடு!” என்று மிரட்டினாள்! நான் என் முத்தத்தை அவள் நெற்றியில் பதித்து முடிப்பதற்குள், அவளை சுமந்திருந்த ஸ்டெரச்சர் உருளத் தொடங்க எங்கள் விரல்கள் வலுக்கட்டாயமாகப் பிரிக்கப்பட்டது.

எங்கள் வாழ்க்கையை அலங்கரிக்க என் செல்லக்குட்டி பவி இப்பூவுலகிற்கு வந்தாள், ஆனால் ஆனால்,,,, கௌதம் கரகர குரலோடு தடுமாற,

“என்னாச்சுப்பா?” என்று தவித்தாள் தாமரை.

“என் சிந்து உயிரோடுதான் இருந்தாள். ஆனால் அந்த நதியில் உயிரோட்டமில்லை! என் குழந்தை என்னைப் பார்த்தது! அது என் சிந்து ஏக்கமாய் என்னைப் பார்ப்பது போலிருந்தது! அவள் முதலில் மூன்று நாட்கள் கண் விழிக்கவில்லை. டாக்டர் என்னை அழைத்துப் பேசினார். சிந்துவிற்குள் இரண்டு உருவங்கள் சண்டை போட்டுக்கிட்டிருக்கு! ஒரு மனம் அவளுடைய கடந்த கால வாழ்க்கையை வெறுக்குது! இன்னொரு மனம் அந்த வாழ்க்கைக்காக ஏங்குது!, இந்த பத்து மாதத்தில் அவளுக்காக நீங்க வாழ்ந்த அந்த தவ வாழ்க்கையைப் பார்த்து அவ உங்களை இன்னும் அதிகமா நேசிக்கத் தொடங்கியிருக்கா!

இது அவளுக்குள்ளேயே நடக்கும் மனப் போராட்டங்கள்! நீங்க அவளை உங்க வாழ்க்கையை விட்டுத் தூக்கி எரிஞ்சிருவிங்களோன்ற பயம் அவளுக்குள் மிக அதிகமா இருக்கு. உங்க பெற்றோர் மீது உங்களுக்கிருக்கும் அளவுக்கதிகமான பாசம் அவளுக்குத் தெரியும். அவள் மனம் அவளுடைய கடந்த கால வாழ்க்கையில ரொம்பவே சிதைஞ்சு போயிருக்கு! அதை நல்லவிதமா உயிர்பிப்பது உங்க கையிலதான் இருக்கு கௌதம். அவள் கடந்த கால வாழ்க்கையை, அதனால் தனக்குள் ஏற்பட்டுள்ள பயங்களை நீங்க இல்லாதப்ப என்கிட்டக் கூறிப் புலம்பிக் கதறி அழுதா கௌதம்!”

“எனக்கு அப்பப்ப அவ மேல் கொஞ்சம் கொஞ்சம் கோபம் வருமே தவிர அவளை நான் சத்தியமா வெறுக்கலை டாக்டர்! என் சிந்து எப்படி இருந்தாலும் பரவாயில்லை, அவ எனக்கு உயிரோடு வேணும் டாக்டர்!”

“பார்ப்போம், நீங்க உங்க நம்பிக்கையைத் தளற விடாதீங்க! நீங்க இல்லாத கடந்த ஒருவாரமும், அவள் போட்ட கூச்சலும், செய்த குழப்பங்களும் எண்ணில் அடங்காதவை, அவளாகவே பேசிச், சிரித்து, அழுது, கத்திக் கதறி, ஒரு ஹிஸ்டீரியா நோயாளி போல்தான் நடந்து கொண்டாள். நைட்மேர்ஸ், ஹாலுசினேஷன் என்று ஆங்கிலத்தில் சொல்வோம் இல்லையா அந்த நிலையில்தான் இருந்தாங்க! அது உங்க பிரிவினால் ஏற்பட்ட பயம்.”

“அவன் இனிமேல் வரமாட்டான், நானும் என் குழந்தையும் இந்த நாட்டில் அனாதைகளா தெருவோரப் பிச்சைக்காரங்களாகப் போறோம், அனைத்தையும் மறக்கும் மது, ட்ரக்ஸ் எது இருந்தாலும் கொடுங்க டாக்டர், பிளீஸ் டாக்டர்! பிளீஸ் டாக்டர்!” என்று என்னிடம் கெஞ்சினா கோபப்பட்டா, அழுதா, மொத்தத்தில் உங்க பிரிவு, போதை மருந்துகளைவிட மிக அதிகமா அவங்களைப் பாதிச்சிருக்கு! கண் முழிக்கட்டும் பார்க்கலாம்!” என்று என்னை ஆறுதல் படுத்தினார்!

மருத்துவமனையிலேயே என் குழந்தை மிக உயர்ந்த கவனிப்பிலிருந்ததால் நான் என் குழந்தை பற்றிய கவலையின்றி என் சிந்துவை என் கண்ணின் மணிபோல அவள் அருகிலிருந்தே கவனித்துக் கொண்டேன்.

“என்னைக் கண் விழிச்சுப் பாருடா, உன் கௌதம் வந்திருக்கேன்னு இடைவிடாமல் ஒரு ஜெபம்போல சொல்லிக் கொண்டே இருந்தேன்!” டாக்டர் கூறியது போல மூன்றாம் நாள் கண்விழித்தாள். கண்விழித்தவள் என்னை சிறிது நேரம் உற்றுப் பார்த்தாள், அதன் பின் கோபக் குரலில் கத்தத் தொடங்கினாள்!

“எங்கடா வந்த? நான் செத்துப் போயிட்டேனான்னு பார்க்க வந்தியா?” கண்களை உருட்டி என்னைப் பார்த்தவளின் கண்களில் அவ்வளவு, கோபம், ஆவேசம், இன்னதென்று கூற முடியாத ஒரு வேதனை! அவள் கோபத்தைத் தணிக்க அவளை அணைத்து, ஏதேதோ கூறி எப்படி எல்லாமோ தேற்ற முயன்று பார்த்தேன், ஆனாலும் என் செய்கைகளால் அவள் கோபம் கூடியதே தவிர ஒரு மைக்ரோ க்ராம் அளவு கூடக் குறையவில்லை,

“உன்னை எனக்குப் பார்க்க வேணாம், என் கண் முன்னாலயே நிக்காத உன் அப்பாக்கிட்டயே ஓடிப்போயிரு!” என்று சொல்லிவிட்டு என் தோள்களில் சாய்ந்து கேவிக் கேவி அழத் தொடங்கினாள்! நான் அவள் கூந்தலை வருடி அவளை சமாதானப் படுத்த முயன்றேன்! அந்த செய்கையில் வெகுண்டவள், என்னைப் பிடித்துத் தள்ளிவிட்டு,

“போ! போ! என் மூஞ்சிலயே முழிக்காதே போ! என்று சொல்லி டாக்டர் டாக்டர்!” என்று கத்த, செவிலியரும், மருத்துவமனை சிப்பந்திகளும், டாக்டரும் ஓடி வந்தார்கள், “டாக்டர், டாக்டர் இவன்கிட்ட இருந்து என்னைக் காப்பாத்துங்க!” என்று கத்திவிட்டு, யாரும் சற்றும் எதிர்பாராத விதமாய், அவள் கழுத்தில் கிடந்த தாலிக் கொடியைக் கழட்டி என் முகத்தில் விட்டெறிந்தவள்,

“உனக்கும் எனக்குமான பந்தம் இப்பொழுதே முடிந்து போனது!” என்ற கத்தலோடும் கண்ணீரோடும் படுக்கையில் சாய்ந்தாள். அவள் தான் பெற்றெடுத்த குழந்தையைப் பற்றி அதுவரையிலும் எதுவுமே கேட்கவில்லை! மறுபடியும், ஊசிகள், மருந்து மாத்திரைகள் அவளை சூழ்ந்து கொண்டன!

என் மார்பில் தெரியாமல் ஏறி மிதித்த அந்தக் குழந்தையின் கழுத்தில் மறுபடியும் அந்தத் தாலிக் கொடியை, எங்களிருவரையும் இணைக்கும் அந்த தொப்புள் கொடியை அணிவித்துவிட்டேன்.

வேறொரு சிந்துவாக மாறி மறுபடியும் கண் விழித்தவள், என்னைக் கட்டிக் கொண்டாள். என்னோடு அன்பொழுகப் பேசினாள், பிறந்திருந்த குழந்தையை மார்போடு அணைத்துக் கொண்டாள், என்னிடம் அன்பையும் காதலையும், காட்டியவள், மறுநிமிடமே அதே அளவு வெறுப்பையும், துவேஷத்தைத்தையும் காட்டத் தொடங்கினாள்.

அவளுக்குள் அடிக்கடி ஒரு அன்னியன் தோன்றத் தொடங்கினான் ஆனால் தன் குழந்தையிடம் மட்டும் சமச்சீராக நடந்து கொண்டாள். குழந்தையிடம் பெரிதாக விருப்பும் இல்லை, வெறுப்பும் இல்லை என்ற ஒரு மன நிலை. என் குழந்தை அழகான ஒரு ஓவியமாய் வளரத் தொடங்கினாள். நான் ‘பேரன்டல் கேர்’ என்ற கோட்டாவில் சிறிது காலம் லீவ் எடுத்து பின்னர் வீட்டிலிருந்தே வேலை செய்து இரண்டு குழந்தைகளையும் கவனித்துக் கோள்ளத் தொடங்கினேன்

எவ்வளவு கட்டுப்படுத்தினாலும் என்னால் அவளுடைய சில வெறித் தனமான செயல்களைக் கட்டுபடுத்த முடியவில்லை, அந்தப் போதைகளில் கிடைக்கும் இன்பம், அந்த கட்டுப் படுத்தப்படாத சுதந்திரம் இரண்டிற்காகவும் அவள் மனம் ஏங்கத் தொடங்கியது. ஒரு நாள் அவள் நடத்தையைப் பொறுக்க முடியாமல் டாக்டரிடம் ஓடினேன்.

“என் தேவதையைக் காக்கும் வழி என்ன டாக்டர்?” “நீங்க உடனே இந்த நாட்டைவிட்டுப் போயிருங்க! அதுவும் போய் டில்லியில் இருக்காமல் நம்ம தமிழ்நாட்டுக்கு ட்ரான்ஸ்ஃபர் வாங்கிட்டு ஓடிருங்க அது ஒன்றுதான் வழி!”

நான் சென்றது மூன்று வருட விசாவில். அது மூன்று வருடத்தில் முடிக்க வேண்டிய ப்ராஜக்ட், ஆனாலும் பரவாயில்லை! ஆஃபிசில் கேட்கலாம்!” என்று உடனே ஊர் கிளம்பும் வழியைத் தேடத் தொடங்கினேன். எனக்கு அலுவலகத்தில் 'நல்ல வேலைக்காரன்' என்ற பெரும் மதிப்பு இருந்ததால் என் கோரிக்கையை ஏற்றுக் கொண்டார்கள். ஆனால் அந்த ஊரைவிட்டுப் போவதற்கும் சிந்து மறுப்பு தெரிவித்தாள்

அலுவலக ப்ரொசீஜர் ஆரம்பித்து, என் குழைந்தைக்கான பாஸ்போர்ட் விசா என்றலைந்து திரிந்து நான் ரிலீவ் ஆகும்பொழுது என் குழந்தை தத்தி தத்தி நடக்கத் தொடங்கி இருந்தாள். பற்கள் தெரிய சிரிக்கத் தொடங்கினாள். என் தந்தை என்னை கைவளைக்குள் அணைத்துக் கொண்டு கதை கூறியது போல் அவளை அணைத்துக் கொண்டு அவளுக்குக் கதைகள் கூறத் தொடங்கினேன் நான். இப்படி ஒரு அழகோவியத்தை; மலர்களின் குவியலை; எனக்குப் பெற்றுக் கொடுத்த சிந்துவிற்கு மனதிற்குள் தினம் தினம் நன்றி கூறினேன்.

என் ப்ராஜக்ட்டும் ஏறக் குறைய முடியும் தருவாயில் இருந்தது! ஒரு வழியாக என் 14 மாதக் குழந்தையையும் அவளையும் அழைத்துக் கொண்டு இந்தியா திரும்பினேன். மறுபடியும் டில்லியில் அவளோடு வாழ்க்கை போராட்டம். ஒரு வழியாக எங்கள் வாழ்கையை சற்றே சீர்படுத்தி, எனக்கு சென்னைக்கு ட்ரான்ஸ்ஃபர் வாங்கிக் கொண்டு, அவளை டில்லியை விட்டுக் கிளப்ப முயன்றேன்.

“தினம் தினம் சண்டை, நான் இந்த ஊரைவிட்டுச் செத்தாலும் வரமாட்டேன்” என்ற பிடிவாதக் கத்தல்கள் என்று அவளுடைய வெறித்தனமான கூச்சல்களும், சப்தங்களும் எல்லை கடந்தது!. குழந்தை எங்கள் கூச்சலைப் பார்த்து பயந்து ஒடுங்கிப் போனாள்.

ஒரு நாய்குட்டிபோல் எப்பொழுதும் அப்பா, அப்பா என்று என்னைக் கட்டிக் கொள்ளத் தொடங்கினாள். அது சிந்துவின் ஆத்திரத்தை மேலும் தூண்டியது! என் குழந்தையை காப்பதற்காகவாவது என் தாயை உடனே சந்திக்க நினைத்தேன். என் தாய்க்கு என் வாழ்க்கையின் சந்தோஷப் பக்கங்கள் தவிர வேறு சோகப் பக்கங்கள் எதுவுமே தெரியாது!

எனக்குத் தெரியாமல் திருட்டுத் தனமாக அவள் பழைய போதை வாழ்க்கைக்குத் திரும்பிக் கொண்டிருந்ததை நான் புரிந்து கொண்டேன். அவள் சுதந்திரங்களைக் குறைத்து அவளை எப்படியாவது கோவை அழைத்துச் செல்லும் முடிவிலிருந்தேன் நான். அதற்கிடையில் சென்னை அலுவலகத்திற்கு மாற்றலும் கிடைத்தது!

என் சிந்துவை இனிமேல் காப்பாற்றிவிடலாம் என்ற இன்பத்திலிருந்த என்னை ஒரே நிமிடத்தில் தண்டித்தாள் என் மனைவி! என்னைத் தண்டிப்பதாய் நினைத்து, எங்கிருந்தோ போதை மாத்திரைகள் வாங்கி, அளவுக்கதிகமாய் சாப்பிட்டு, அந்த போதை தேளியாமலேயே, மூளை, செயலிழந்து போக, மூளைச் சாவில் என் கரங்களில் இறந்து போனாள். அவள் வீட்டினருக்குத் தெரியப்படுத்தினேன். அவர்கள் வந்து இறந்துபோன தன் மகளின் எரியூட்டலில் கலந்து கொண்டு எனக்கு ஆறுதல் கூறிவிட்டுச் சென்றார்கள்.

என் வாழ்வில் நடந்த கொடுமையை நான் என் தாயிடமோ வேறு எந்த உறவுகளிடமோ பகிர்ந்து கொள்ளவில்லை. என்னைத் தவிர என் குடும்பத்தார் யாரையுமே அவள் நேரில் பார்த்ததில்லை பேசியதில்லை, பழகியதில்லை! என் துக்கத்தை என்னுள் புதைத்துக் கொண்டு அவளை எறியூட்டிவிட்டு, ஆறுதல் தேடி உடனே என் தாயை சந்திக்க கோவை கிளம்பினேன்.

டில்லியில் என் அலுவலகத்திலிருந்து நான் ரிலீவாகிவிட்டேன். எனக்கு நடந்த எந்தக் கொடுமையையும் நான் ஆஃபிசில் தெரியப்படுத்தவில்லை. அனைத்தையும் நான் மனதிற்குள்ளேயே போட்டு புதைத்துவிட்டேன்.

இன்நேரம் நான் சென்னை ஆஃபிசில் ஜாயின் பண்ணி ஒரு வருடம் முடிந்திருக்கணும். எனக்கு என்னோட மெயில் ஐடிக்கு பல மெயில்கள் போயிருக்கலாம். எரிந்து போன என் பொருட்கள் அனைத்தும் கோவை ரயில் விபத்தில் என் ஞாபகங்களோடு சேர்ந்து எரிந்து போயிருக்க வேண்டும் தாமரை.

இன்றுவரை நான் சிந்துவோடு வாழ்ந்த அந்த துன்பியலான வாழ்க்கையை யாரோடும் பகிர்ந்து கொண்டதில்லை. நான் டில்லியை விட்டுக் கிளம்பும் போது அந்த இருண்டு போன பக்கங்களை அழித்துவிடு மனமே என்று மறுபடியும், மறுபடியும் என் மூளைக்கு செய்தி அனுப்பிக் கொண்டே இருந்தேன். அந்த விமானப் பயணம் முழுவதும், அந்த வலி நிறைந்த ஞாபகங்களால் நான் அடைந்த துன்பங்களை வார்த்தைகளில் கூறமுடியாது!. என் தாயின் மடியில் முகம் புதைத்துக் கதறிக் கதறி அளவேண்டுமென்றுதான் அந்த இன்டர்சிட்டி விரைவு ரயிலில் அந்த முன் மாலைப் பொழுதில் என் பயணத்தைத் தொடங்கினேன். தொடரும்.IMG-EKKUM 0039.jpg
 
அச்சோ
கௌதமின் மனைவி சிந்து இறந்து விட்டாளா?
அப்புறம் எதுக்கு இவன் டெல்லி போறான்?
தாராவிடமிருந்து விலக விரும்புபவன் கோவையிலுள்ள அம்மாவிடம் போயிருக்கலாமே
 
Last edited:
அச்சோ
கௌதமின் மனைவி சிந்து இறந்து விட்டாளா?
அப்புறம் எதுக்கு இவன் டெல்லி போறான்?
தாராவிடமிருந்து விலக விரும்புபவன் கோவையில் உள்ள அம்மாவிடம் போயிருக்கலாமே
சாரிமா! சிந்துவைப் பற்றிய முழு நினைவுகளும் அவனுக்கு டில்லிக்குப்
போகும்பொழுது பாதி பயணத்தில்தானே வருது!
 
Top