Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'என் கண்களில் காண்பது உன் முகமே' அத்தியாயம் 24

Advertisement

'என் கண்களில் காண்பது உன் முகமே' அத்தியாயம் 24

அத்தியாயம் 24

அந்த நிமிடமே என் தாயின் மடியில் முகம் புதைத்துக் கதறி அழவேண்டும் போலிருந்தது! அதனால்தான் என் ஞாபகங்கள் அழிந்து, பின்னர் அவை என் மூளையில் கண்விழித்த பொழுதும், அவை இருண்ட பக்கங்களாகவே இருந்தன! நான் ஒரு பெண்ணைக் காதலித்துத் திருமணம் செய்து, எங்களுக்குக் குழந்தையும் பிறந்து, என் ஞாபகப் பிழையால் அவளைத் தவிக்கவிட்டு விட்டேனோ என்றுதான் இந்த அவசரப் பயணத்தை டில்லிக்கு மேற்கொண்டேன்.

“சோ இப்ப என்ன முடிவெடுக்கப் போறிங்க கௌதம்?!” “யோசிக்கணும் தாமரை! என்ன முடிவெடுக்கிறதுனு எனக்குத் தெரியலை தாமரை! ஒரு மிக நீண்ட ரயில் பயணத்தின் நடு வழியில் இருக்கிறேன். ஒரு மலையேறுபவன் அந்த மலையின் நடுவிலிருந்தால், அப்படியே மலை உச்சிக்கும் ஏறலாம், அல்லது உருண்டு விழுந்து அதள பாதாளத்தையும் அடையலாம்.

“ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்!!!! சரி சரி, உங்க ரயில் ஸ்நேகிதியை நம்புங்க என் கையைக் கெட்டியாப் புடிச்சுக்குங்க, மனதை பதற்றத்தில் விடாதீங்க, உங்க மூளை அதிக அழுத்தங்களைத் தாங்காதுன்னு உங்களுக்கு நல்லாத் தெரியும்.

உங்க ஞாபகமெல்லாம் முழுசா திரும்பின இந்த நிலமையில நமக்கிட்ட நிறைய ஆப்ஷன்ஸ் இருக்கு! என்கிட்டையும் என் திருமணத்திற்காக நான் சேர்த்து வச்ச பணம் அப்படியே இருக்கு! உங்கக்கிட்டையும் ஏடி.எம்.கார்ட், பணமெல்லாம் வேண்டிய அளவு இருக்குனு சொன்னீங்க சோ ஃபைனான்ஸ் பத்தி நாம இப்பக் கவலைப்பட வேண்டாம்.

நீங்க இப்ப ஒரு அனாதை இல்லை. உங்களை நம்பி உங்க கையில் ஒரு குழந்தை இருக்கு! உங்களுக்காகவே காத்திருக்கும் ஒரு பெண் சென்னையில் இருக்காங்க! உங்களை உயிருக்குயிரா நேசிக்கிற உங்க அம்மா கோவையில இருக்காங்க! ஆனால் உங்களை அவங்கக்கிட்ட அனுப்பாம டில்லி ரயிலேற வச்சிருக்கார் கடவுள். அவரோட பிளான் என்னனு புரியலை!

நீங்க டாஸ் போட்ட ஒத்த ரூபாய் நாணயம் தலையும் விழாம, பூவும் விழாம அதன் முகம் தரையில் பதியாமல் அது தன் விளிம்பில் நின்னுக்கிட்டிருக்குனு வச்சுக்குவோம். நிரந்தரமா அப்படியே நிற்க முடியாது. கண்டிப்பாக அது உருள வேண்டும், அது உருண்டு விழும்பொழுது தலையும் விழலாம், பூவும் விழலாம். அது போலத்தான் நம் வாழ்க்கையும்! வெள்ள நீர் பள்ளத்தை நோக்கி பாய்வது போல வாழ்க்கையை அதன் போக்கில் ஓட விடுங்க.

டில்லிவரை சென்றுவிட்டு பிறகு யோசிப்போம். அவசரப்பட்டு முடிவெடுத்து மறுபடியும் நீங்க ஒரு திசையிலும் உங்க அம்மாவும், தாராவும் வேறு திசைகளில் செல்லவும் வாய்ப்பிருக்கில்லையா?”

தன்னைவிட வயதில் குறைந்தவள், அழகாய் வாழ்க்கைத் தத்துவங்களைப் பற்றியும், எடுக்க வேண்டிய தெளிவான முடிவுகளைப் பற்றியும் பேசியது அவனுக்கு ஆச்சரியமாயிருந்தது.

“சரி நான் உன்னை நம்பி டில்லி வர்றேன்! ஆமாம் உன் ஹாஸியாபாத் நண்பனை என்ன பண்ணப் போற?” அவன் கேள்வியில் முதலில் அதிர்ந்தவள் பின்னர் பதில் கூறத் தொடங்கினாள்.

என் காதலன் கோபமெல்லாம் சூரியனைப் பார்த்தவுடன் உருகி ஆவியாகும் பனித்துளி போல என்னைப் பார்த்த மறு நிமிடம் காணாமப் போயிரும்! என்னை வார்த்தையால் டிவோர்ஸ் பண்ணியவன் என் கழுத்தில் தாலிகட்ட ஏதாவது ஒரு ரயிலடியில் காத்திருந்தாலும் ஆச்சரியப்பட முடியாது!! அவன் காதலைப் பற்றியும், கோபத்தைப் பற்றியும் எனக்குத் தெரியும்!

“ஐயையோ நாம அவன் முன்னாடி ஒரு குழந்தையோட ஜோடியா இறங்கினா மறுபடியும் ஓடிப் போயிர மாட்டானா!”

“அப்படி அவன் ஓடினா நீங்கதான் அவனை விரட்டிப் பிடிக்கணும்” என்று கூறிவிட்டு கலகலவென்று சிரித்தவள், "அவனுக்கு நான் இந்த வண்டியில் வரப்போவது நன்கு தெரியும், என்னை வரவேற்க, மேளதாளத்தோடும், பூமாலையோடும் காத்திருக்காவிட்டாலும், முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டாவது, டில்லி ரெயில்வே சந்திப்பில் காத்திருப்பான். அதன் பின் நடக்கும் கூத்தை நீங்களே நேரடியாப் பார்த்து ரசிக்கலாம்.

நேரா நொய்டா சென்று நான் தங்கியிருக்கும் ரூமிற்குப் போய் என் லக்கேஜை இறக்கிவிட்டுப் பக்கத்திலேயே உங்களுக்கும் ஒரு ரூம் போடுவோம். அதற்கிடையில் நீங்க தாராவை கான்டாக்ட் பண்ணுங்க! உங்க அம்மா நம்பர் தெரியுமா?” “ம்” என்று தலையாட்டிய கௌதம் தொடர்ந்தான்.

“என் மனதில் பதியப்பட்ட கை பேசி எண்கள் முன்றுதான் ஒன்று தாரா, மற்ற இரண்டும் என் அப்பா அம்மாவுடையது!”

இந்த டில்லி பயணத்திலேயே, உங்க கார்ப்பரேட் அலுவலகத்துக்குப் போய் அவர்கள் முன்னால் தோன்றி ஒரு ஷாக் கொடுங்க! நடந்தது முழுவதையும் கூறி உங்க வேலையோட நிலைமையையும் விசாரிச்சுத் தெரிஞ்சுக்கலாம்! அவர்கள் இருவரும் கதை பேசித் தூங்கச் சென்ற பொழுது கற்பகமும், தாராவும் டில்லியை நோக்கிப் பறந்து கொண்டிருந்தார்கள்.

காலை இரண்டு மணிக்கு புறப்படும் விமானத்திற்கு, நடு இரவு பன்னிரண்டு மணிக்கு முன்னரே ஏர்போர்ட்டிற்குக் கிளம்பினார்கள் இருவரும். சென்னை டொமஸ்டிக் டெர்மினலில் செக்கின் முதல், செக்யூரிட்டி செக் வரை அனைத்தையும் முடித்துவிட்டு முத்திரை குத்தப்பட்ட போர்டிங்க் பாசோடு அவர்களுக்கான கேட்டில் காத்திருந்து, நேரம் வந்தபொழுது, கூண்டில் அடைக்கப்பட்ட ஆடுகள் போல் விமானத்திற்குப் பத்திரமாக அழைத்துச் செல்லப்பட்டார்கள்.

கற்பகம் ஒன்றிரண்டு முறையே விமானத்தில் பயணித்துள்ளார். விசுவிற்கு வருடத்திற்கு மூன்று ஆல் இந்தியா ரயில்வே பாஸ் என்பதால் அவர்களுக்கு ரயில் பயணமே மிகவும் எளிதாக இருந்தது! அதுவும் கையைக் காலை நீட்டிக் கொண்டு, ஏசிக் குளிரில் இழுத்துப் போர்த்தித் கொண்டு நிம்மதியாகத் தூங்கலாம். விமானப் பயணம் விரைவில் முடிந்துவிடுமென்றாலும் அந்தப் பயணத்தின் தொடக்கத்திலும், முடிவிலும் செய்யவேண்டிய ஆசாரா அனுஷ்டானங்களிலேயே நமக்கு நொக்குக் கழண்டுவிடும்.

அதிலும் முன்னிருப்பவர் பின்னால் சாய்ந்தால் நமக்குக் கஷ்டம், நாம் சாய்ந்து படுத்தாலோ பின்னாலிருப்பவருக்கு கஷ்டம், என்ன செய்ய முடியும், நிமிர்ந்த நடையும்; நேர் கொண்ட பார்வையுமாய்; கரம், சிரம், புறம் நீட்டாமல், ஆட்டுமந்தை, மாட்டுமந்தை போல் அடைக்கப்பட்ட, விமானங்களை நினைத்தால் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் ரயில் பெட்டிகளே தேவலாம் என்று தோணும்.

இந்த விமானங்களுக்கும், உட்காரும் வசதிகள் மட்டுமே உள்ள பகல் நேர ரயில் வண்டிகளுக்கும் எந்த வித வித்தியாசமும் இருப்பதாகக் கற்பகத்திற்குத் தோன்றவில்லை…!

“எப்படிமா இருக்கு விமானப் பயணம்!?” தாரா கற்பகத்தை விசாரிக்க,

“ரன்வேயிலிருந்து டேக் ஆஃப் ஆனப்ப மட்டும் காதடைச்சு வயிறு குலுங்குச்சு! மனிதனின் மூளை என்றுமே பழக்கத்திற்கு அடிமையானதுதானே, நான் ரயில் பிரயாணம் செய்தே பழக்கப்பட்டவள்!”

“ஒரு பெரிய மனோதத்துவ நிபுணர் ஒரு பாராவில் சொல்லும் கருத்தை நீங்க ஒரு வரியில் சொல்லீட்டிங்க! மனிதனின் மூளை பழக்கத்துக்கு அடிமையானது தான்! அதை திசை திருப்பணும்னா கடலில் கப்பலை திசை திருப்புற மாதிரி பல மாலுமிகள் சேர்ந்து போராடணும். நீங்க நிறைய நேரம் உங்க புள்ளை மாதிரியே பேசுறீங்க!”

“இருபத்தி மூணு வயசு வரைக்கும் எங்க ரெண்டு பேரோட கையைப் பிடிச்சுக்கிட்டே வளர்ந்தவன்மா அவன், அதிலும் அவன் அப்பா செல்லம். அவன் வாலிபனாகும் வரை எங்கே வெளியே சென்றாலும் எங்க கையைவிட்டுத் தனியா நடக்க மாட்டான். ஆனால் அவன் என் தோளுக்கு மேல் வளர்ந்தபின் என் கழுத்தில் அவன் கரத்தைப் போட்டுக்கொண்டோ, இல்லை என் விரல்களை பிடித்துக் கொண்டோதான் நடப்பான். ஒரே வித்தியாசம் நான் அவன் விரல்களைப் பிடித்துக் கொள்வதற்குப் பதிலாக அவன் என் விரல்களை எனக்குப் பாதுகாப்பாய் பிடித்துக்கொள்வான். அவன் டில்லி செல்லும் வரை எங்கள் விரல்களை விட்டதில்லை. எனக்கும் அவன் விரல்களுக்குள் ஒரு பாதுகாப்புணர்வு இருக்கும்.

இதுமாதிரி அளவுக்கதிகமான பாசமும், அதன் பின் பிரிவும்னு வரும்போது நம் மனம் அதிர்ந்து போகுது! அது உயிரைக் கொல்லும் கொடுமையான நோயா மாறிப் போகுதுனு விசுவோட புத்திர சோகத்திலிருந்து நான் புரிந்து கொண்டேன். அவர் எதையோ சொல்ல முடியாம தவிச்சது எனக்கு இப்பத்தான் புரியுது!

‘பார் மகனே பார், நீ இல்லாத மாளிகையைப் பார் மகனே பார்னு!’ ஒருநாள் நடு இரவில் எங்க வீட்டு மாடிப்படியில் சத்தமில்லாமல் கண்ணீர் விட்டழுததை நானே என் கண்களால் பார்த்திருக்கேன்!”

“நீங்க சொல்றது நூத்துக்கு நூறு உண்மை அத்தை!
கௌதமை நான் மனமார காதலித்தாலும், அவன் மேல் கொண்ட காதலைவிட அவனை இழந்திருவோமோன்ற பயம்தான் என் மூளை செல்களை இன்றுவரை அதிகமா அரிச்சுக்கிட்டிருக்கு”

“நீ எப்படி, எங்கே அவனை சந்திச்ச தாரா?!”

“அது ஒரு மிகப் பெரிய கதை அத்தை!” என்று தன் நினைவுப் பெட்டகத்தை தூசு தட்டத் தொடங்கினாள் தாரா! “உங்க புள்ளை உங்கக்கிட்ட ஃபோன்ல பேசின மாதிரியே டில்லியிலிருந்து சென்னைக்கு விமானத்தில் குழந்தை பவியோடு வந்திருக்கான்!

“அப்ப சிந்து அவன் கூட வரலியா?” கௌதமின் மனைவியை, என் பேத்தி பவியோட அம்மாவை நான் இன்னும் ஒரு முறை கூட நேரில் பார்த்ததில்லை!

“சிந்து அவன் கூட வரலை. அவன் ட்ராவல் பண்ணிய அந்த ஏசி கோச்தான் தீயில் கருகியது. அதில் பயணித்த ஒரு பயணிகூட உயிர் பிழைக்கவில்லை. வெறும் எலும்புக்கூடுகளும், சாம்பலும் மட்டும்தான் மிஞ்சியது! உங்களுக்கு ஞாபகம் இருக்கா? ஒரு வருடத்திற்கு முன்னால் பகல் 2.30 மணிக்குச் சென்னையிலிருந்து கிளம்பி இரவு 10.15 மணிக்கு கோவை வரும் இன்டர் சிட்டி விரைவு ரயில் ஈரோடுக்கருகில் விபத்துக்குள்ளானது!

“ஆமா,,,ஆமா,,,லோக்கூர்தனுஷ்பேட் காட்டுப்பகுதியில்,,,, எனக்கு நல்லா ஞாபகமிருக்கு ஏன்னா மறுநாள்தான் என் பையன் விமானம் மூலம் கோவை வர்றதா சொல்லி இருந்தான். முதல் நாள் இரவுதான் இந்த பேரிடர் நடந்தது! சென்னையிலிருந்து கோவை வரை அந்தத் துக்கம் சிதறிக் கிடந்தது! தமிழ்நாடே திமிலோகப்பட்டது. ஒரு ஏசி கோச் எரிந்து 32 பேர் உயிரிழந்து, 30, 40 பேர் படுகாயமடைந்து பல கொச்சுகள் தடம் புரண்டு ஒன்றின் மேல் ஒன்று ஏறி நிற்க, அது என்னால் என்றுமே மறக்க முடியாத ஒரு கொடுமையான் சம்பவம்.”

“உங்க புள்ளை சீக்கிரமே உங்களைப் பார்க்க வேண்டுமென்ற ஆசையில், கனக்டிங்க் ஃப்ளைட்டில் வந்தால் மறுநாள்தானே வரமுடியுமென்று ரயிலில் ஓப்பன் டிக்கெட் எடுத்து, இன்டர்சிட்டி ரயிலேறி அதை செக்கன்ட் ஏசி டிக்கெட்டாக ரயிலில் மாற்றிக் கொண்டு குழந்தை பவியோடு வர, இறைவன் எதற்காகவோ கொஞ்சம் சேதாரத்தோடு உங்கப் பையனின் உயிரைக் காப்பாற்றி கொடுத்திருக்கார்!

அந்தப்பெட்டி தீப்பற்றி எரியும் பொழுது அதிலிருந்த ஒரு ஈ எறும்பு கொசுகூடக் காபாற்றப்படலை. அந்தப் பெட்டியிலிருந்த பயண டிக்கெட் பரிசோதகர் உட்பட அனைவரையும் இறைவன் தன் பாதத்திற்கு அழைத்துக் கொண்டுவிட்டார்! ஆனால் குழந்தையுடன் ரெஸ்ட் ரூம் வந்த கௌதம், ரயில் பெட்டிகள் தடம் புரண்டு ஒன்றொடொன்று மோதின வேகத்தில் திறந்திருந்த கதவின் வழியாக வலுவாக வெளியே தூக்கி எறியப்பட்டு அதே விசையில் வெகுதூரம் பறந்து சென்று பின்தரையில் விழுந்து உருண்டவன், மரங்களுக்கிடையில் வெகு தொலைவிலிருந்த ஒரு பள்ளத்தில் சென்று விழுந்துள்ளான்.

இது போன்ற மரங்களடர்ந்த காட்டுப் பகுதிகளில் விலங்குகளைப் பிடிப்பதற்காக இது போன்ற பள்ளங்கள் தோண்டப்பட்டு, இலை தளை கொடிகளால் மூடப்பட்டிருக்கும். அதுவும் நல்ல இருட்டு நேரத்தில், மரங்களடர்ந்த காட்டுப்பகுதியில் தீவிபத்தோடு சேர்ந்த விபத்தென்பதால் பல அசம்பாவிதங்கள் ஒரே நேரத்தில் நடந்துள்ளது, முதல் நாள் தூறிய மழையின் சகதி வேறு! கூச்சல் குழப்பங்களோடு; இரத்தமும், சகதியும் சேர்ந்த போர்க்களமாகத்தான் காட்சி அளித்தது அந்தப்பகுதி!

நான் என் தோழியின் திருமணத்திற்காக கோவை அருகில் நான் வேலை பார்த்த மருத்துவமனையிலிருந்து ஈரோடு வந்தவள், இந்த ரயில்விபத்து பற்றிக் கேள்விப்பட்டு சரி யாருக்காவது உதவி தேவைப்பட்டால் ஒரு மருத்துவராய் உதவலாமே என்று என் காரை எடுத்துக் கொண்டு அந்த விபத்து நடந்த பகுதிக்குச் சென்றேன்.

மாலை ஏறக்குறைய ஒரு ஐந்து மணி இருக்கும். மனிதக் கூட்டம் குறைந்து, காக்கை, கழுகு, நாய்கள் என்று இவற்றின் கூட்டம் அதிகரித்திருந்தது. பயணிகளில் வெகு சில பேரும், பார்வையாளர்களில் சிலரும் தவிர மற்ற அனைவரும் ரயில்வே ஊழியர்களும், பெட்டிகளை அப்புறப்படுத்துபவர்களும் மட்டுமே அங்கே இருந்தனர். அவர்களும் வேலைப்பளுவால் சோர்ந்து போய் ஒருவித மயக்கத்தில் வேலை செய்து கொண்டிருக்க மக்கள் எல்லாம் அருகில் ஈரோட்டிலிருந்த மருத்துவ மனைகளை முற்றுகையிட்டிருந்தனர்.

என்னை ஒரு டாக்டராக அறிமுகப்படுத்திக் கொண்டு யாருக்காவது உதவி தேவைப்பட்டால் உதவலாமென்று தண்டவாளத்தின் ஒரு புறமிருந்த பள்ளமான மரங்களடர்ந்த காட்டுப் பகுதியில் என் காரை நிறுத்திவிட்டு; ரயில்வே கோச்சுகள் சிதறிக் கிடந்த தண்டவளத்தின் மேட்டுப் பகுதியை மேலேறிச் சென்றடைந்தேன்

தண்டவாளம் சற்றே மேட்டுப்பகுதியில் வளைந்து சுருண்டு கிடக்க; தண்டவாளத்தின் அந்தப்புறம் ஒரு காயலான் கடை போல் காட்சி அளித்தது! ஆங்காங்கே பெட்டிகள், கவிழ்ந்தும், நசுங்கியும், சில பெட்டிகள் ஒன்றன் மேல் ஒன்று ஏறியும், அந்தப் புறமிருந்த பள்ளத்தில் சில பெட்டிகள் உருண்டும் கிடந்தன! ஆனால் அதிலிருந்த பயணிகள் எல்லாம் அப்புறப்படுத்தப்பட்டு பெட்டிகள் அனைத்தும் காலியாகவே இருந்தது. எரிந்துபோன ரயில்வே கோச் தனியாக ஒரு எலும்புக்கூடு போல் நிறுத்தப்பட்டிருந்தது! சரி நம் உதவி அங்கே தேவைப்படாதென்பதை புரிந்து கொண்ட நான், இந்தப்புறமிருந்த பள்ளத்தில் இறங்கி என் காரை நோக்கி நடக்கத் தொடங்கினேன்.

என் காருக்கு அருகே சற்று தொலைவில் ஒரு நாய், ஒரு செவ்வக ஏரியாவைச் சுற்றிச் சுற்றி ஓடிக் கொண்டிருந்தது! சில நிமிடங்கள் அந்த நாய் ஓடுவதை நிறுத்தி, தன் கண்களால் என்னை உற்றுப் பார்க்க, அதன் ஓட்டத்தில் யாராவது வாங்களேன் என்ற எதிர்பார்ப்பு இருப்பது போல் எனக்குத் தோன்றியது!!!

நான் நின்ற இடத்தில் யாருமே இல்லை! அந்த நாய் என்னை வெறிக்க வெறிக்கப் பார்த்துவிட்டு மறுபடியும் இன்னும் வேகமாய் அந்த இடத்தைச் சுற்றத் தொடங்கியது! பயம் மனதைப்பிறாண்டினாலும், கொஞ்சம் பக்கத்தில் சென்றுதான் பார்ப்போமே என்று அந்த நாயை நோக்கி நான் நடக்க, கால் எதிலோ இடறிவிட, கீழே குனிந்து பார்த்த நான் பதறிப் போனேன்.

அங்கே சுக்கு நூறாய் உடைந்துபோன ஒரு வாட்ச்! சோ நாய் நம்மிடம் ஏதோ கூற வருகிறது என்பதைப் புரிந்து கொண்டு அந்த உடைந்த வாட்சைக் கையில் அள்ளிக் கொண்டு, அதனருகில் சென்றேன். நல்ல வேளை இன்னும் ஒரு அடி எடுத்து வைத்திருந்தால் நானும் அந்தப் பள்ளத்தில் கவிழ்ந்திருப்பேன். அந்த மந்தகாசமான அரைகுறை வெளிச்சத்தில், ஒரு உருவம் கிடப்பது தெரிந்தது.

அருகிலிருந்த மரத்தடியில் ஒரு நடுத்தற வயது மனிதன் மயங்கிக் கிடந்தான். அவனிடம் ஓடினேன், அங்கிருந்து வந்த நாத்தமே அவன் பாதி போதையில் கிடப்பதை சுற்று வட்டாரத்தில் அனைவருக்கும் தெரியப் படுத்திக் கொண்டிருந்தான். எனக்கு அந்த நாத்தம் குமட்டிக் கொண்டு வந்தாலும், வந்த வாந்தியை அடக்கிக் கொண்டு அவனிடம் சென்றேன்.

“என்ன கண்ணு ஆக்சிடென்டான எடத்தில ஏதாவது ரூபா, நகை தேறுமானு தேட வந்தியா? நீயே ஷோக்கா இருக்க உனக்கெதுக்கு நகை?” என்றவன், “அங்க பலத்த போலீஸ் காவல் போட்டிருக்காங்க! நீ ரொம்ப லேட்டு! நேத்தே வந்திருக்கணும், நிறைய அடிச்சிருக்கலாம். அவன் பேச்சு எனக்கு அருவருப்பாய் இருந்தாலும் எனக்கு அவன் உதவி தேவை! ஸோ குமட்டிக் கொண்டே, மரியாதையுடன் அவனை “சார்” என்றழைத்து,

“அந்தப் பள்ளத்துக்குள்ள ஒரு மனுஷன் மயங்கிக் கிடக்கான், அவனைத் தூக்கி, அதோ அங்க இருக்க காரில் சேர்த்தா, பெரிய தாள் ரெண்டு தருவேன்!” அதைக் கேட்ட அவன் கண்கள் ஆசையில் செய்தித் தாள் போல் விரிந்தது!

“அம்புட்டுத்தானே!” என்று ஓடிவந்து, இருவருமாய் சேர்ந்து உள்ளே கிடந்தவனை இழுக்க அவனோடு சேர்ந்து ஒரு குழந்தையும் வந்தது! அவனுடைய நாடித்துடிப்பை செக் பண்ணிய நான் அவன் உயிர் ஊசலாடிக் கொண்டிருப்பதை அறிந்து கொண்டேன்.. அவன் நெற்றியில் இரத்தம் உரைந்து போயிருக்க; ஆங்காங்கே கொஞ்சம் எலும்பு முறிவோடு நினைவிழந்திருந்தான். அவனைக் காப்பாற்ற வேண்டுமென்றால் ஒரு நிமிடம்கூட நான் தாமதிக்க முடியாது!”

அவன் கரங்களில் துவண்டு கிடந்த குழந்தையை வலுக்கட்டாயமாகப் பறித்துக் கொண்டு நான் காரை நோக்கி ஓட, மது போதையில் இருந்தவன் அனாயசமாக அவனைத் தூக்கித் தோளில் போட்டுக் கொண்டு தள்ளாடியபடியே காருக்கு வந்தான். தூரத்தில் ரயில்வே தண்டவாளத்தின் அந்தப்புறத்தில் வேலை பார்த்துக் களைத்து சோர்ந்து போயிருந்த யாரும் தூரத்தில் இந்தப் புறம் அந்தப் பள்ளமான காட்டில் பாதி இருட்டில் நடந்த இந்த ட்ராமாவைக் கண்டு கொள்ளவில்லை,

“ரெண்டு டிக்கெட்டு, டபுள் அமவுன்ட் வேணும்!” என்று அவன் பேரம் பேச, “இந்த நாலு தாளோட, இந்தா இந்த ரெண்டாயிரத்தையும் சேர்த்து வச்சுக்க! இன்னைக்கு ஒரு உயிரைக் காப்பாத்திக் கொடுத்ததுக்கு உனக்கு பத்தாயிரம் பரிசு! ஆனால் இதைக் கொண்டு போய் தண்ணி அடிக்காம, உன் பொண்டாட்டி பிள்ளைகளுக்கு வேண்டியதை வாங்கிக் கொடு! அப்ப அவங்க கண்ணில் தோன்றும் சந்தோஷத்தைப் பார்! உனக்கு தண்ணி அடிக்கிறப்ப கிடைக்கிற சந்தோஷத்தைவிட பன்மடங்கு அதிகமான சந்தோஷம் கிடைக்கும்!” என்று கூறிவிட்டு காரை ஸ்டார்ட் செய்தேன்.

இதுதான்மா நான் கௌதமை காப்பாற்றிய கதை! அந்தக் கதையைக் கேட்ட கற்பகத்தின் கண்கள் சிவந்து, அருவி போல் நீரைக் கொட்டத் தொடங்கியது, தன்னருகிலிருந்த தாராவைத் தன் தோள்களோடு சேர்த்து அணைத்துக் கொண்டவர் “நீ எங்கவீட்டுக் குல தெய்வம்மா!” என்றார் தளுதளுத்த குரலில்.

“ஏன் அவன் என் கைகளில் மாட்டினான்? அவனை ஏன் நான் தூக்கிக் கொண்டு ஓடிவந்தேன்? எனக்கும் அவனுக்குமான பந்தம் என்னவென்று இதுவரையில் எனக்குத் தெரியாது! முதலில் கோவைக்கு அருகில் நான் வேலை பார்த்துக் கொண்டிருந்த மருத்துவமனையில் அவனைச் சேர்த்து முதல் கொஞ்ச நாள் அங்கே அவனுக்கு மருத்துவம் பார்த்த நான் பின்னர் சென்னையில் எனக்குத் தெரிந்த மருத்துவமனைக்கு தூக்கிக் கொண்டு ஓடினேன். அவனுக்கு உடல் நலம் தேறி; மயக்கம் தெளிந்தபின்; தன் கடந்தகால நினைவுகள் அனைத்தையும் இழந்து, எந்த உறவுகளுமே இல்லாதிருந்தவனை என் பொறுப்பில் டிஸ்சார்ஜ் செய்து என் வீட்டிற்கு அழைத்து வந்தேன்.

நாளடைவில் எங்களுக்குள் ஏற்பட்ட நெருக்கம், அன்பாகி, பாசமாகி, நட்பாகி காதலாய் விரிந்ததென்பது ஒரு தனிக்கதை! அவன் என் மீது காதல் கொண்டதும்; நான் அவன்மீது காதல் கொண்டதும் எங்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட பெரும் பிழைதான்! நினவு திரும்பியபின் உங்களைப் பற்றி எல்லாம் பல கதைகள் பேசியவன் சிந்துவைப் பற்றி ஒரு வார்த்தை கூடச் சொல்லாமல் என்னைவிட்டுப் பிரிந்து சென்றுவிட்டான்! அவர்கள் இருவருடைய வாழ்க்கை பற்றி உங்களுக்கு ஏதாவது தெரியுமா அத்தை!

“அவர்கள் தங்கள் மணவாழ்க்கையை சிறக்க வாழவில்லை” என்று என் இதயத்தின் அத்தனை அறைகளும் அடித்துச் சொல்லுது தாராம்மா! என் பையனைப் பத்தி எனக்கு நல்லாத் தெரியும் தாரா, அவனால் யாரையுமே ஏமாத்த முடியாது; சிறு வயதிலிருந்தே அவன் அப்படித்தான். அவன் தன் ஞாபகங்களை மறந்திருந்தாலும் அவனோட உள் மனசுக்குத் தெரிஞ்சிருக்கும், உன்னைக் காதலிப்பது தவறா இல்லையானு! அவனுக்கு உன்னைக் காதலிப்பது தவறுனு தோணியிருந்தா உன்னை இந்தளவுக்கு மனசாரக் காதலிச்சிருக்க மாட்டான்!” என்றவர் சிறிது நேரம் நிதானித்து, “ஆமாம் குழந்தை பவி என் பேத்தி எப்படிமா இருக்கா?”

“என்னை உங்க மகனோட கட்டிப் போட்டதே அவனுக்கு அந்தக் குழந்தை மேலிருந்த அளவில்லாத பாசம்தான். நீங்க உங்க பையனை சந்திக்கும் போது கட்டாயம் உங்க பேத்தியையும் பார்ப்பீங்க!”

“அவளுக்கு இப்ப ரெண்டு வயசுக்கு மேல இருக்குமில்லையா? ஓடியாடி விளையாடி மழலையில் கொஞ்சுறாளா? கௌதம் சிறுவனாயிருக்கும் போது,

‘கற்பூர தீபமொன்று;
கைவீசும் தென்றல் ஒன்று;
கலங்காதே கைவீசும் மானே,
கண்ணோரம் ஆனந்த கீதம்னு


நான் பாடினாலே போதும், எங்கே என்ன விளையாடிக் கொண்டிருந்தாலும் அப்படியே போட்டுவிட்டு வந்து என் மடியில உட்கார்ந்துக்குவான்!”

“இதே பாட்டை அவன் பவியிடம் தினம் ஒரு முறையாவது பாடிருவான் அத்தை, அவள் கொடுத்து வைத்த குழந்தை அத்தை என்று பெருமூச்செறிந்தாள் தாரா! தொடரும்IMG-EKKUM WA0001.jpg
 
Top