Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'என் கண்களில் காண்பது உன் முகமே' அத்தியாயம் 25

Advertisement

'என் கண்களில் காண்பது உன் முகமே' அத்தியாயம் 25

அத்தியாயம் 25

மனதிலிருந்த பல சுமைகளை தன் தோழியிடம் இறக்கி வைத்த நிம்மதியில் அன்று இரவு ஓடும் ரயிலில் அமைதியாக உறங்கினான் கௌதம். டில்லியில் இறங்கியவுடன் செய்ய வேண்டியதை ஒன்று இரண்டு என்று அவன் மூளை பட்டியலிட்டுக் கொண்டிருக்கும் பொழுதே இரவு மங்கை அவனை அரவணைத்துக் கொள்ள உடனே தூங்கிப் போனான். வெகு நாட்கள் கழித்து தொலைந்து போன எந்த நினைவுகளையும் தேடாமல், தலை வலி இல்லாமல், கனவுகள் இல்லாத, நிம்மதியான தூக்கம் அவனை அரவணைத்துக் கொண்டது.

காலையில் அவன் கண் விழிக்கும் பொழுதே, கலைத்து விடப்பட்ட எறும்புப் புற்றைப்போல அங்கும் இங்கும் மனிதர்கள் ஓடத் தொடங்கியிருந்தாகள். இன்னும் சில மணி நேரங்களே! ஒரு வருடம் கழித்து அவன் தன் கலைந்து போன கனவுகளோடு டில்லியில் தன் கால் தடத்தைப் பதிக்கப் போகிறான்.

மக்கள் வரிசையாக மூட்டை முடிச்சுகளோடு டில்லிக்கு அருகிலிருந்த ஃபரிதாபாத் போன்ற ஸ்டேஷன்களிலெல்லாம் இறங்கிக் கொண்டே வர, இன்னும் இரண்டு ஸ்டேஷன்களே பாக்கி இருந்தது!

ஹஸ்ரத் நிஜாமுதின் ஸ்டேஷனைத் தாண்டினால் புது தில்லி ஸ்டேஷன்தான். காலியாயிருந்த பெர்த்தின் மேலே, இருக்கைக்கு கீழே, காலுக்கடியில் சீட்டில் என்று கலைந்து கிடந்த லக்கேஜெல்லாம் கௌதம் ஒன்று சேர்க்க, தாமரை குழந்தையை சீவி சிங்காரித்து ரெடி பண்ணத் தொடங்கினாள்.

“அப்பா தாராம்மாவைப் பார்க்கப் போறோம்மா?” என்று பவியின் கேள்விக்கு பதிலின்றி, அவன் தாமரையைப் பார்த்தான்!

“தாமரை ஆன்ட்டி வீட்டுக்குப் போயிட்டு, தாராம்மாவைப் பார்க்கப் போகலாம்!” என்று கூறிக் கொண்டிருக்கும் பொழுதே ரயில் வண்டி கூவிக் கொண்டே நிசாமுதின் ஸ்டேஷனில் வந்து நின்றது! அவர்கள் இருந்த கோச்சின் கண்ணாடிக் கதவுகளை யாரோ தட்டுவது போல கௌதமிற்குத் தோன்ற,

“யார் தாமரை நம் பெட்டியின் ஜன்னல் கண்ணாடியில் தன் முகத்தைப் பதித்துக் கொண்டு மிக அருகில் எடுக்கப்பட்ட புகைப்படம் போல நிற்பது!?” வெடுக்கென்று தலையைத் திருப்பியவள், கண்ணாடியில் தன் தலையை முட்டிக் கொண்டாள். அவ்வளவு க்ளோசப்பில் அஷ்வின் முகத்தைப் பார்த்து அரண்டு போனாள்.

“நல்ல வேளை கண்ணாடி இருந்ததால் என் தலை தப்பியது! அவனேதான் நான் சொன்னேன்ல என்னைக் கூட்டிட்டுப்போக வந்திருக்கான். அவன் இப்ப உள்ள வருவான்!” என்று கூறியவள்,

ஆனாலும் நாம் நியூடில்லி ரயில்வே சந்திப்பில் இறங்குவதில் எந்த மாற்றமும் இல்லை! அவன் ரயிலுக்குள்ள ஏறிவந்தா நீ எங்களை கண்டுக்காத பாஸ்! ஜஸ்ட் நடக்கிற நாடகத்தை மட்டும் பார்!” என்று அவள் கூற,

வெளியிலிருந்து கண்ணாடி வழியாக ஏதோ பேச முயன்ற அஷ்வின், கண்ணாடி வழியாக சத்தம் கடத்தப்படாததால் அவன் கத்திக் கத்திப் பார்த்துவிட்டு, தாமரை கண்டு கொள்ளாமல் தலையைக் குனிந்து கொன்டிருக்க, மறுநிமிடம் அவன் அங்கிருந்து காணாமல் போனான். அதற்குள் ரயில் கிளம்புவதற்கான சங்கை ‘குக்குக்கூஊஊஊ’ என்று ஊதிவிட்டு, ஜிக்குப் புக்கு, ஜிக்குப் புக்கு என்ற இசையோடு இழுக்கத் தொடங்கியது. அதே நேரம்,

நல்ல அழகியத் தோற்றத்திலிருந்த வாலிபன், கௌதம் அருகில் வந்து அமர்ந்து கொண்டு, கொப்பளிக்கும் சிரிப்போடு தாமரையைப் பார்த்தான். அந்த வெகுளித்தனமான சிரிப்பு கௌதமிற்கு அதிகம் பிடித்திருந்தது!

“என் செல்லக் கண்மண்மணிக்கு இன்னும் என் மேல் கோபம் தீறலியா!? என்றவனின் கேள்வியில் அவள் தலையை நிமிர்த்த அந்தக் கண்களில் நாகப்பாம்பின் சீற்றத்தோடு கூடிய நாணச் சிவப்பும் இருந்தது,,,

“சாரிடா! நான் அப்படி பிரேக்கப் சொன்னது தப்புதான்! என் கன்னத்தில் போட்டுக்கிறேன்!” என்று அவள் கன்னத்தைத் தட்ட

“ஏய் ஃப்ராடு, நீ ஒண்ணும் என்கிட்ட நடிக்க வேணாம், நீ ப்ரேக் அப் சொன்ன மறு நிமிஷமே உன்னை என் மனசுல இருந்து தூக்கி எறிஞ்சிட்டேன்! நீ ப்ரேக்கப் சொன்னது சொன்னதுதான். அதை எந்தக் கொம்பனாலும் மாத்த முடியாது!”

“நான் அதை பக்காவா கேட்ச் பண்ணி உன்கிட்ட ரிட்டர்ன் ஸ்மாஷ் குடுத்தேனே, நீ கோட்டை விட்டுட்டியா!? ஆமாம் நீ கல்யாண மயக்கத்தில் இருந்திருப்ப! எங்க உங்க அக்கா, மாமாவோட வருவேன்னு பார்த்தா இப்படி சிங்கிளா வந்து நிக்கிற?”

“தோ அவர்தான் என்னோட மாமா! அவதான் எங்களோட குழந்தை!” என்று கௌதமைத் தாமரை சுட்டிக் காட்ட, அவன் விதிர்விதிர்த்துப் போனான். அவன் முகத்தில் வியர்வைக் கொப்புளங்கள் தோன்ற, கண்ணிலிருந்த பியூப்பா முழுவதும் விரிந்து, மேல் நோக்கி எழும்ப, கௌதம் அவனைப் பார்த்து மையமாக சிரித்து வைத்தான்!

“அவருக்கு நாம் பேசுவது புரியுமாடி என்று அடிக்குரலில் அவளைக் கேட்டுவிட்டு, கௌதமைப் பார்த்து நடுங்கும் குரலில் “ஹலோ!” என்று கூறியவனின் பயத்திலிருந்த மூளை, சற்றே தெளிந்து, பகுத்தறிவோடு வேலை செய்யத் தொடங்கியது.

“அது எப்படிக் கல்யாணம் பண்ணி பத்து மாசத்துக்குள்ள புள்ளை பொறந்தாலே அதிசயம்; உனக்குக் கல்யாணம் பண்ணி பத்து நாளிலேயே இவ்வளவு வளர்ந்த குழந்தையா? அண்ணாச்சியைப் பார்த்தா முப்பது வய்சுகூட இருக்காதுனு தோணுது,! உங்க மாமாவுக்கு சொட்டை ப்ளஸ் தொப்பையோட, உன்னை விட பத்து வயசு அதிகம்னு சொல்லியிருக்க! எங்கயோ இடிக்கிதே? நான் படிச்சது வணிகவியல்தான் என்றாலும் எங்களுக்கும் கொஞ்சம் அடிப்படை விஞ்ஞான அறிவு உண்டு முனைவர் அவர்களே!” என்றான் அவன்

“ஓ அப்படிங்களா? அப்படியே கொஞ்சம் மனோதத்துவமும் படிச்சிருக்கலாம்! ஒரு பொண்ணோட மனசைப் படிக்கத் தெரியாத உனக்கெல்லாம் எதுக்குடா காதல்! பெற்றோரும், உடன்பிறப்புகளும், நண்பர்களும் இணைந்ததுதான் வாழ்க்கைன்றதை நீ முதலில் படிச்சிட்டுவா!”

“ஆமாம் நீ ஏன் ஹஸ்ரத் சந்திப்புல இறங்காம, நியூ டில்லி ஸ்டேஷனுக்குப் போயிட்டு இருக்க? நான் அப்படியே உன்னை ஹாசியாபாத்துக்குத் தள்ளிக்கிட்டுப் போலாம்னு நினைச்சேன்!”

“என்னோட ரயில் காதலருக்கு வழித்துணையா போயிட்டிருக்கேன்?” அவன் மறுபடியும் விலுக்கென்று நிமிர்ந்து கௌதமைப் பார்க்க,

“தாமரை, அஷ்வின் பாவம், அவனை ரொம்பக் கலாய்க்காத!” என்றவன், இவனை எப்படி அழைக்கலாமென்று சிறிது நேரம் தடுமாறிவிட்டு,

“இங்க பாரு மச்சான், என்று அவனை அழைத்துவிட்டு,

“உண்மையாவே தாமரை எனக்கு ஹெல்ப் பண்ணத்தான் நியூ டில்லி ஸ்டேஷன் வர்றாங்க! நீங்க கவலைப்படாதீங்க, எந்தக் காரணம் கொண்டும் உங்க காதலியை நான் கடத்திக்கிட்டுப் போயிற மாட்டேன், நான் என் காதலியைத் தேடிப் போறேன்!” என்று கூறிக் கொண்டிருக்கும் பொழுதே, அந்த மிக வேக விரைவு ரயில், புது டில்லி ரயில்வே ஜங்க்ஷனில் வந்து நிற்க ஜன்னல் வழியாக வேடிக்கை பார்த்துக் கொண்டே வந்த குழந்தை,

“ஐ தாராமா! தாராமா! என்று கைகொட்டிக் கொண்டே, சீட்டில் எழுந்து நின்று நடனமாடி; கிளுகிளுவென்று குதூகலத்துடன் மழலையில் சிரிக்கத் தொடங்கியது!

பவி கூறியது பொய் இல்லை என்பதை மெய்பிப்பது போல அவர்கள் பெட்டியின் கம்பார்ட்மென்ட் வாசலில் தாராவும் அவனுடைய தாய் கற்பகமும் நின்று கொண்டிருந்தார்கள்.

கௌதம் தன் லக்கேஜ்ஜை இறக்கினானோ இல்லையோ தெரியாது, தன் தாயைப் பார்த்தவன், தாயைத் தொலைத்த பால்குடி கூட மறக்காத நாய்க்குட்டி, திரும்பி வந்த தன் தாயைப் பார்த்தவுடன், எப்படி ஓடிச்சென்று அதனுடன் முட்டி மோதி, அதன் மேல் உருண்டு புரண்டு விளையாடுமோ, அது போலத் தன் கையிலிருந்த குழந்தையைத் தாராவிடம் தூக்கிப் போட்டவன் ஓடிச் சென்று அம்மாவைக் கட்டிக் கொண்டு ஏங்கி ஏங்கி அழத் தொடங்கினான்.

தாமரை கௌதமின் லக்கேஜ்களையும் சேர்த்துக் கீழே இறக்கி வைத்து விட்டு, அஷ்வினோடு ஒதுங்கி நின்றவள், அங்கே நடந்த பாசக் காட்சிகளை தன் கண்களிலிருந்தகேமராவில், 3Dகாட்சிகளாய் ஒளிப்பதிவு செய்யத் தொடங்கினாள்.

ரயிலடியில் பலர் அந்தக் காட்சியைக் கண்கொட்டாமல் பார்த்துச் செல்ல ஒரு வருடமாய் காணாமல் போய் கண்டு பிடித்த தன் மகனை உச்சி முகர்ந்து அவன் முகத்தை தன் முத்தங்களால் நிறப்பிய கற்பகம், அவன் கண்களிலிருந்து அருவியாய் கொட்டிய கண்ணீரைத் தன் சேலை முந்தானையால் துடைத்துவிட்டவள்,

“அழாதடா கௌதம், யார் அழுதாலும் உன் அப்பாவிற்குப் பிடிக்காது அதிலும் நீ அழுதா உன் அப்பா தாங்கவே மாட்டார்! மனசு உடைஞ்சு போயிருவார்! ஒரு வருஷமானாலும் நீ எனக்குக் கிடைச்சது பெரும் பாக்கியம் இதுவே எனக்குப் போதும்! உன்னைக் காப்பாத்தின அந்த மஹராசி குழந்தை குட்டிகளோடு நல்லா இருக்கணும்” என்று கூறியவள்,

“எப்படிடா ராசா இருக்க? உடம்புல ஒண்ணும் பிரச்சனை இல்லையே?!” என்று அவர் கேட்க, அவன் திரும்பி தாராவைப் பார்த்தான்,

அப்பொழுதுதான் உதித்து, வானில் மேலேறிக் கொண்டிருக்கும் சூரியக் கோளைப் போல் அவள் கண்களில் எரிதணலின் நெருப்பு தகதகவென்று எரிந்து கொண்டிருக்க, கௌதமின் கண்களிலோ வெம்மை இல்லாத குளிர் நிலவோடு, அந்த நிலவில், மழை பொழிந்து கொண்டிருந்தது!

தன் தாயிடமிருந்துபிரிந்து தாராவிடம் வந்தவன், அவளுடைய விரல்களைப் பற்றி, “ஸாரிடா! உன்கிட்டச் சொல்லாம வந்தது மிகப் பெரிய தப்புத்தான், ஆனா எனக்குத் தெரியும் நான் இந்த உலகின் எந்தக் கோடிக்குப் போனாலும் என்னைத் தேடி வந்துருவேனு!”

“அதுதான் சொல்லாமக் கொள்ளாம உன் சிந்துவைத் தேடி டில்லி வந்தியா? உன் உடல் நிலை எப்படி இருக்குனு உனக்குத் தெரியுமில்லையா? அதுவும் பச்சிளங் குழந்தையைத் துக்கிக்கிட்டு வந்திருக்க; உன்னை நான் காப்பாத்தி இருக்கக் கூடாது, அந்தக் குழியிலேயே உன்னை சமாதி பண்ணியிருக்கணும்!”

“ஸாரிடி! தெரியாம செய்த தவறை மன்னிக்க மாட்டியா!”

“மாட்டேன் இன்னைக்கே, இப்பவே நானும் குழந்தையும் மட்டும் சென்னைக்குக் கிளம்புறோம்! நீயும், உன் அம்மாவும், சிந்துவைக் கண்டுபிடித்து, உன்னைத் தனிக்குடித்தனம் வைக்கச் சொல்லிவிட்டுத் தாராளமா அவ கூட குடும்பம் நடத்து!

“பிளீஸ் கண்ணம்மா என்னைப் புரிஞ்சுக்கோடி! நீ மட்டும்தான் என்னை முற்றிலுமாய் புரிந்து கொள்ளக் கூடிய ஒரே ஜீவன்!”

“என்ன கைக்கொண்ணும், காலுக்கொண்ணும்னு ரெண்டு பொண்டாட்டி கட்டிக்கிட்டு சந்தோஷமா குடும்பம் நடத்தலாம்னு சொல்றியா!?”

“பிளீஸ் தாரா! நம்ம சண்டை இங்க வேணாம். இது பல பேர் வந்து செல்லும் பொது இடம், வா எங்காவது ஒரு அறை எடுத்து தங்கிவிட்டு அமைதியாப் பேசலாம்!” அவள் தீக்கங்குகள் நிறைந்த விழிகளோடு அவனை முறைத்துப் பார்த்தவள்,

“என்ன அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தி, முடிவில் ஒரு அமைதி ஒப்பந்தத்தில் கை எழுத்துப் போடலாம்னு சொல்றியா!” அவளை நெக்குருக பார்த்தவன் பார்வையில் எழுத்தில் பேச முடியாத ஆயிரம் வார்த்தைகள் துள்ளிக் குதித்தது, அனைத்து உணர்வுகளையும் ஓர் பூமாலையாக்கி அவன் கைகளுக்குள் அனுப்பியவன்,

“இப்ப ஒரு வார்த்தைகூட பேசாம என் பின்னாடி அமைதியா வர்ற!” என்று அவள், விரல்களோடு தன் விரல்களைக் கோர்த்துக் கொள்ள, எப்பொழுதும் போல அவன் கைப்பிடியில் ஒரு உறுதி இருந்தது!”

தாரா தன் கைப்பிடியிலிருந்து தப்பிவிடாமல் பார்த்துக்கொண்ட கௌதம், பின்புறம் திரும்பி, அஷ்வினோடு ஒட்டி உரசி நின்று கொண்டிருந்த தாமரையைப் பார்த்து மெல்லிய புன்னகையுடன் ஒற்றைக் கண்ணை சிமிட்டியவன்,

“தாரா இவங்கதான் தாமரை, எனக்கு இறைவனால் அனுப்பப்பட்ட ஏஞ்சல், எனக்குக் கிடைத்த ரயில் ஸ்நேகிதி, எங்க கதை எல்லாம் உனக்கு அப்புறம் சொல்கிறேன்!” என்றவன் அஷ்வினைப் பார்த்து

“உங்களுக்குத் தாமரை காதலியா கிடைச்சது நீங்க செய்த தவத்தின் பலன் அஷ்வின், அவங்களைப் பத்திரமா பார்த்துக்குங்க, ஏதாவது குதர்க்கம் பண்ணிணா அவளோட ரயில்ஸ்நேகிதன் நான் தட்டிக் கேட்டு எட்டி உதைப்பேன்!” என்று கூறிவிட்டு அவன் தாமரையைப் பார்க்க,

“சோ நீங்க இழந்த குடும்பத்தை மீண்டும் மீட்டெடுத்திட்டீங்க நண்பரே! இது சந்தோஷமான ரீயூனியனா இருக்கணும், பவிக்குட்டிதான் என் நினைவுகளை விட்டு நீங்காம என் கண்ணுக்குள்ளையே நிப்பா, சரி தோழரே நான் வாக்குக் கொடுத்தது போல உங்களைச் சேர்க்க வேண்டிய இடத்தில் பத்திரமாச் சேர்த்து விட்டேன், நான் கிளம்பட்டா?” என்று அவள் கேட்க, அவள் விரல்களை எடுத்து அதில் முத்தமிட்டு, ‘போய்வா மகளே போய் வா’ என்று வாய் நிறைய வாழ்த்தியவன்,

“உன் கடமை முடிஞ்சதுனு சொல்றியா? நீ எனக்கு வெறும் ரயில் ஸ்நேகிதி மட்டும் இல்லை தாமரை, வாழ்நாள் பூரா உன் தோழமை எனக்கு வேண்டும், கல்யாணப் பத்திரிகை அனுப்ப மறந்திராத என்றவன் அஷ்வின் விரல்களையும் கையில் எடுத்து,

“இந்தப் பொக்கிஷத்தை என்னைக்கும் தொலைச்சிராத, அவள் இதயத்தில் பல சேம்பர்கள் உள்ளது போல, நம் மூளையில் பல மடிப்புகள் இருப்பது போல நம் அன்புக்கும் பல பரிமாணங்கள் உண்டு,

அதில் மனைவி ஸ்தானத்தில் மட்டும்தான் அன்பின் அனைத்துப் பரிமாணங்களும் உண்டு, ஸோ அவ கையைக் கெட்டியா புடிச்சுக்கிட்டு அவளைத் திருமணம் செஞ்சுக்குங்க, அவ தன்னோட அன்பை; அன்பு, பாசம், நட்புனு வேறு பரிமாணங்களில் பிரிச்சுக் கொடுத்தாக்கூட அவளுக்கு உங்க மேல இருக்கும் காதல் குறையும்னு நினைக்காதீங்க, ஏனா தாமரை உங்களை மட்டும்தான் காதலிக்கிறாங்க” என்று சொல்லிவிட்டுத் தன் ரயில் ஸ்நேகிதியை கனத்த இதயத்தோடு பார்த்தான்.

“உங்க ஸ்டோரிக்கு அப்ப அப்ப அப்டேட் கொடுங்க, உங்க மனசுல இருக்க மூணு கை பேசி எண்களோடு என் நம்பரையும் ஸ்டோர் பண்ணி வச்சுக்குங்க என்று அவள் சிரிக்க,

ஷ்யூர், சென்ட் யுவர் அட்ரஸ் ஆல்சோ என்று அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில் கூறிவிட்டு, இதயத்தில் தன் கண்ணீரைத் தேக்கி, உதட்டில் சிரிப்போடு தன் ஸ்நேகிதியைப் பிரிந்தான்.

கற்பகம் பவியைத் தூக்கிக் கொள்ள, ஒரு கரத்தில் தாராவைத் தன் விரல்களில் இறுக்கிக் கொண்டவன், மறு கரத்தால் தன் ட்ராலி பேகை இழுக்கத் தொடங்கினான்! அவளின் மற்றொரு கரத்தில் இன்னொரு பெட்டி உருண்டது

“யாருடா உன் மனதில் பதியப்பட்டுள்ள நம்பரில் இருக்கும் மூணு பேர்!“

“அப்பாடா என் கண்ணம்மாவின் கோபமும் ஆத்திரமும், இன்னும் அப்படியே இருக்கு! நல்ல வேளை நீ மாறலை, உரிமை உள்ளவுங்கக் கிட்டதான் இதுமாதிரி பொறாமைக் கோபங்கள் வரும்!”

“அப்ப நான் உனக்கு உரிமை உள்ளவன்ன்னு நினைக்கிறியா? ஸோ உனக்கு உரிமையுள்ள சிந்துவை என்ன பண்ணின? அவள் காலில் கல்லைக் கட்டிக் கடலில் தூக்கிப் போட்டுட்டியா!” அந்தக் கேள்வியோடு அவனைச் சுற்றெரித்து விடுபவள் பார்த்தாள் தாரா!

தாராவின் அந்தக் கேள்வியில் குபுக்கென்று அவன் கண்கள் குளம் வெட்டினாலும், மென்மையாக சிரித்துக் கொண்டே,

“அடியே ராட்ச்சஷி, உனக்குத் தெரியாதா டில்லியைச் சுற்றிக் கடலே இல்லைனு!?”

நீ என் கூட ரொம்ப சகஜமா இருக்க மாதிரி, ரொம்ப லவ்விங்கா இருக்க மாதிரி எல்லாம் நடிக்காதடா! என்னோட சண்டை போடாம, கூச்சல் போடாம, என் குழந்தையை என்கிட்டக் கொடுத்துவிடு, நான் போய்க்கிட்டே இருக்கேன்! நான் பாட்டுக்கு சிருச்சுக்கிட்டே உன் வாழ்க்கையை விட்டுப் போய்விடுகிறேன். அதைக் கேட்டு இன்னும் அதிகமா அவள் விரல்களோடு தன் விரல்களை இறுக்கிக் கொண்டான் அவன்.

“டேய் கை வலிக்குது விடுடா!”

“நல்லா வலிக்கட்டும் டாக்டரம்மா! என் பிடியில உங்க எலும்பு முறிஞ்சா அப்புறம் கட்டுப் போட்டுக்கலாம், ஆனால் இதயத்தை உடைத்தால் அதை ஒட்டவச்சு துடிக்க வைக்கிற மருந்தை இன்னும் யாரும் கண்டு புடிக்கலை, ஆமா அது என்ன என் குழந்தையைத் தூக்கிட்டு ஓடிடுவேன்னு ஏதோ சொன்ன!?”

“யெஸ் அவ என்னோட குழந்தையும்தான், இந்த ஒரு வருடமா நாம் ரெண்டு பேரும் சேர்ந்துதானே இந்தக் குழந்தையை வளர்க்கிறோம், ரெண்டு பேருக்கும் அந்தக் குழந்தை மேல் சரி பாதி உரிமை இருக்கு இல்லையா!”

“ஓ! ஓகே! ஓகே!” என்றவன், நல்ல வேளை அது என் குழந்தை எனக்குத்தான் சொந்தம்னு ஒரு குண்டு போட்டு என் இதயத்தை உடைக்காம விட்டியே!”

“அப்ப ஏன்டா நீ என் இதயத்தை உடைச்ச?”

“நிச்சயமா என் கண்ணம்மா இதயத்தை நான் என்னைக்குமே உடைக்க மாட்டேன், நான் உன்னை விட்டு ஓடி வந்தது நம் இருவருக்கும் இடையில் இருந்த அந்த பிசாசுத்தனமான் காதலை நினைச்சுப் பயந்துதான். அந்தக் காதலில் முழுகி இன்னொரு பெண்ணின், அதுவும் என் மனைவியின் இதயத்தை, பவியோட அம்மா இதயத்தை உடைச்சிருவேனோனு பயந்துதான் ஓடி வந்தேன்.

எனக்கு நினைவுகள் முழுவதும் திரும்பாத நிலையில் நம் காதலில் பிழை இருப்பது போல் எனக்குத் தோன்றியது! நான் என் நினைவுகளை இழந்து ஒரு வருடம் நிறைவடையப் போகும் தருணம் நெருங்கிக் கொண்டிருந்தது! நம் திருமணத்திற்கு நாம போட்டுக்கிட்ட டீலே அதுதானே! அதுவரை எனக்கு நினைவுகள் திரும்பலைனா, நம் திருமணத்திற்கு ‘யெஸ்’ சொல்ல நான் குறித்திருந்த நாள் அந்த ஒரு வருடம் முடியும் நாள்தானே.

அதனாலதான் எதுவும் தவறு நடந்திருமோனு பயந்து நான் ஓடிவந்தேன், ஏன்னா நமக்குள் இருந்த அன்பு அவ்வளவு ஆழமானது!, அப்படி எதுவும் நடந்தால் என் மனமே என்னைக் கொன்று தின்றுவிடும்!” பேசிக் கொண்டிருந்த கௌதமை உறுத்து விழித்தவள்,

“இப்ப என்ன? உன் வாழ்க்கையில் கனவுகளோடும், காதலோடும் ஓடிக் கலக்கின உன் சிந்து நதியைக் கண்டுபிடுச்சிட்டியா!” தாராவின் அந்தக் கேள்வியை உள் வாங்கியவன், அடுத்த அடியை எடுத்து வைக்க முடியாமல் அப்படியே அவன் உடம்பு அதிர, அந்த இடத்திலேயே ஒரு மரம் போல் நின்று போனான். அவனுக்கு அந்த நீங்காத தலைவலி வருவதற்கான அலார்ம் மணியை அவனுடைய மூளை அடிக்கத் தொடங்கியது! அவன் நெற்றியைப் பிடித்துக் கொண்டு நிற்க, இரண்டு மகளிரும் அவனிடம் ஓடிவந்தார்கள்.

தாரா தான் இழுத்து வந்த பெட்டியோடும், முதுகில் தொங்கிய லாப்டாப் பேக்கோடு அவனை அருகிலிருந்த ஸ்டோன் பெஞ்சுக்கு இழுத்துக் கொண்டு ஓடினாள். கற்பகம் பெட்டியை இழுத்துக் கொண்டு தன் மகனின் அருகில் சென்று, தாய்மையின் உணர்வுகளைக் கண்களில் தேக்கி அவனை அன்பொழுக பார்த்தார்.

“பயப்படாதம்மா, உன் பையனுக்கு ஒண்ணும் ஆகாது! நான் எத்தனையோ கண்டங்களைத் தாண்டி வந்துட்டேன், தோ என்னோட உயிருக்கு உத்தரவாதம் குடுத்த டாக்டரம்மா என் கூடவே இருக்காங்க, அவங்களுக்குத் தெரியும் என் உயிரை எப்படிக் காப்பாத்தணும்னு, ஏன்னா அவங்களுக்கு நான்தான் உயிர்! அவன் பேச்சில் மயங்கிய மதியோடு தாரா தன் சிகிச்சையைத் தொடங்கினாள்.

“அப்பாக்கு வலிக்குதா மம்மி? என்று பவி ஸ்டோன் பெஞ்சில் ஏறி அவன் மடியில் அமர்ந்து கொள்ள, “பாப்பா இருக்க வரை அப்பாக்கு எல்லா வலியும் போயே போச்சு!” என்று குழந்தையை அணைத்துக் கொண்டான் கௌதம்.

“தாரா நாம இங்க இருக்க 1st கிளாஸ் வெயிட்டிங்க் ரூமில் போய் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கிட்டே என்ன செய்யலாமானு பெசலாமா!?” என்று கற்பகம் கேட்க,

“வேணாம் அத்தை, கௌதம்கிட்ட மட்டும்தான் வேலிட் பயண டிக்கெட் இருக்கு, நம்மக்கிட்ட இருப்பது வெறும் ஃப்ளாட்ஃபார்ம் டிக்கெட்தான். நல்ல ஹோட்டலில் ரூம் புக் பண்ண எத்தனையோ சைட் இருக்கு! இங்க இருந்தே ஒரு நல்ல ரூம் புக் பண்ணலாம். அதுக்குள்ள கௌதம் வில் ஃபீல் பெட்டர்!”

நல்ல ஹோட்டலைத் தாரா தன் ஃபோனில் தேட அவள் ஃபோனிலிருந்த ஐகன் சுற்றத் தொடங்கியது! அந்த உருவம் ஓரிடத்தில் நின்று ஒரு தங்கும் விடுதியைக் காட்ட, மாத்திரை உட்கொண்ட கௌதம் கண்மூடி சிறிதுநேரம் அமைதியாய் அமர்ந்திருக்க, அவனுடைய தலைவலி மெல்ல மெல்ல குறையைத் தொடங்கியது!Photo_EKKUM 630.png
 
Top