Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'என் கண்களில் காண்பது உன் முகமே' அத்தியாயம் 30

Advertisement

'என் கண்களில் காண்பது உன் முகமே' அத்தியாயம் 30

அத்தியாயம் 30

கௌதமின் மூளை வெற்றிகரமான மருத்துவ மீட்படைந்ததில் ஆனந்தக் கூத்தாடினாலும், அவளால் ஓடிவந்து அவனைக் கட்டி அணைத்து வாழ்த்துக்கள் கூற முடியவில்லை!

“எதுக்குடி இந்தப் பார்வை! என்னோட மனமீட்சி உனக்குக் கஷ்டமா இருக்கா? எதுக்கு இப்படி புருவங்கள் முடிச்சிட; மூக்கைச் சுழிச்சு; என்னை ஒரு வேண்டாத பொருளைப் போல முறைச்சுப் பார்க்கிற?

அலுவலகத்துக்கு ஒரு தன்னிலை விளக்கக் கடிதம் எழுதிக் கொடுத்துவிட்டு என்னோட ஃபேமிலி ஸ்டாட்டசையும் மாத்திக் கொடுத்திருக்கேன். ஃபர்ஸ்ட் என்னை விடோயர்னு மாத்தி. மனைவின்ற இடத்தில் டாஷ் போடலாமான்னு முதலில் நினைச்சேன். ஒரே ஒரு நிமிஷம்தான் எனக்கு அந்த தடுமாற்றம் இருந்தது. ஆனால் மறு நொடி மனைவி சிந்து இறந்துவிட்டார் என்று மாற்றி அவர் பெயரை டெலீட் செய்தேன்.

பின்னர் அந்த இடத்தை எப்ப வேணா ஃபில்லப் பண்ணிக்கலாம் என்று நினைத்தாலும் என் மனம் பிடிவாதமாய் அதை மறுத்தது!. அந்த இடத்தில் தாரா என்று டைப் செய்து அதை சேவ் செய்துள்ளேன். எப்ப வேணா அதை நிரந்தரம் பண்ணிக் கொடுத்துக்கலாம். குழந்தைகள்ன்ற இடத்தை மாற்றவில்லை. என்னோட பவி நிரந்தரமா என் மகளாய் அங்கேதான் இருப்பா என்று சொல்லிக் கொண்டே அவன் தாராவைப் பார்க்க, தாரா கண்களில் கோபத்தோடு கௌதமை வெறித்தாள். அதை சிறிதும் கண்டு கொள்ளாத கௌதம்,

அதுக்கும் முன்னாடி என்னோட இரண்டு தோழிகளுக்கும் ஒரே மாதிரியான பரிசுப் பொருள் ஒண்ணு வாங்கி வந்திருக்கேன். இரண்டு மங்கையரும் ஒரு சிறு குழந்தைக்குறிய எதிர்பார்ப்புடன் அவனைப் பார்க்க, என் தாராவிற்கு மிகப் பிடித்த தாமரைக் கலரில் இரண்டு பட்டுப் புடவைகளும் அதுக்கு மேச்சா ரெண்டு ரெடிமேட் ப்ளவுசும் இந்தப் பார்சலில் இருக்கு!

கொஞ்சம் அளவுகள் முன்னப்பின்ன இருக்கலாம். என் நினைவுகள் முற்றிலுமா திரும்பிய இந்த நாளை கேக் வெட்டி உங்க முன்னிலையில் கொண்டாடனும் ஆசைப்படுறேன்,

ரெண்டு பேரும் எனக்காக இந்தப் பட்டுப் புடவையை மாத்திக்கிட்டு வருவீங்களா? பிளீஸ்!” என்று அவன் கேட்க ரெண்டு பெண்களுக்குமே சம்திங்க் ஃபிஷ்ஷி என்று தோன்றினாலும் அவன் கேட்டக் கோரிக்கையை அவர்களால் தட்ட முடியவில்லை! இருவரும் உடை மாற்றி வர பக்கத்து அறைக்குச் சென்றார்கள்.

சிறிது நெரத்திலேயே, இரண்டு பெண்களூம் அழகாய் காஞ்சிப் பட்டுடுத்தி; சிவப்புத் திலகமிட்டு; கண்களில் மை வரைந்து வர, கௌதம் அவர்களைப் பார்த்து புன்னகைத்தான். ஆனால் இந்த அலங்காரம் எல்லாம் எதற்கு என்றுதான் அந்த இரண்டு பெண்களுக்கும் புரியவில்லை! தாரா, தாமரை இருவரையும் பார்த்து பூடகமாய் சிரித்தான் கௌதம்.

“இந்த வீட்டில் கண்டிப்பா ஒரு சாமி அறை இருக்கும். அங்கே விளக்கேற்றி நம் நன்றியறிதல் விழாவை சாமியிடமிருந்து தொடங்குவோம். இங்க வட இந்திய இந்துக்கள் எல்லாம் அதிகமா சிவா, விஷ்னு, கண்ணன், கிருஷ்ணன் காளி, பார்வதி தேவி இப்படித்தான் கும்பிடுறாங்க; ஆனால் நம்ம தமிழ் நாட்டிலிருந்து வந்தவர்களுக்கு இஷ்ட தெவம், முருகனும், அம்மனும், பிள்ளையாரும்தான்.

“என்னோட இஷ்ட தெய்வமும் முருகன்தான், இங்க ஒரு சின்ன ஷெல்பில், முருகனையும், பிள்ளையாரையும் வச்சுக் கும்பிடுறேன்! தாரா உனக்கு ஒண்ணும் ஆட்சேபனை இல்லையே!” என்று தாமரை கூற,

“என்னடா இதெல்லாம்? ஏதோ விளையாட்டு விளையாடுறனு மட்டும் புரியுது!” என்று சொல்லிக் கொண்டே தாரா அவர்களோடு இணைந்து கொள்ள,

பின்னர் இரண்டு பெண்களும் இணைந்து விளக்கேற்ற மூவரும் கைகூப்பி இறைவனைத் தொழுதார்கள்.

“பின்னர் கௌதம் தாமரையிடம் ஒரு கேள்வி எழுப்பினான்!

“தாமரை, டாக்டர் தாரா தங்களோட திருமணம் பற்றி என்ன சொல்றாங்க?”

“இந்த நேரத்தில் இந்தக் கேள்வி தேவையாடா?” என்று தாரா குறுக்கே பாய

“நீ சும்மா இரு தாரா? நான் தாமரையிடம்தான் கேட்கிறேன்!”

“கௌதம் நீங்க ரெண்டு பேருமே ரொம்ப விதண்டா வாதம் பண்றீங்க, இதில் இந்த நாட்டாமை தீர்ப்பு சொல்ல எதுவுமே இல்லை! முட்டையிலிருந்து கோழி வந்ததா? இல்லைக் கோழியிலிருந்து முட்டை வந்ததா? கொடி அசைந்ததும் காற்று வந்ததா? இல்லை காற்று வந்ததும் கொடி அசைந்ததானு கேள்வி கேட்டுக்கிட்டே இருந்தா அதுக்குப் பதிலே இருக்காது!

அது மாதிரித்தான் உங்க பிரச்சனையும். சுற்றும் வட்டத்திற்கு நம்மால் நுனி கண்டுபிடிக்க முடியாது! அது மாதிரி, நீ சொல்ற முதலில் கல்யாணம் அப்புறம் கதையா? இல்லை அவங்க சொல்ற மாதிரி, கதைக்கப்புறம் கல்யாணமானு பட்டிமன்றம் நடந்திக்கிட்டே இருந்தா இதுக்கு முடிவே கிடைக்காது? வாழ்க்கையும் போரடிச்சுப் போயிரும்! கதையும் போரடிச்சுப் போயிரும்! உங்க கல்யாணத்துக்குப் பஞ்சாயத்துப் பண்றதுக்குள்ள எங்க கல்யாணமே முடிஞ்சிரும் போல இருக்கு. யாராவது ஒருத்தர் விட்டுக் கொடுங்க இல்லை ரெண்டையும் ஒரே நேரத்தில் முடிஞ்சா செஞ்சு முடிங்க!”

“உன்னையும் தெய்வத்தையும் சாட்சியா வச்சு நான் ஒரு காரியம் செய்யப் போறேன் தாமரை! நீ என்னோட செயலுக்குச் சாட்சியா இருப்பியா!

“என்ன கௌதம் செய்யப் போற, உனக்கு நினைவுகள் திரும்பினதுல உன் மூளையில் ஏற்பட்ட ஷாக்கில் மூளை எதுவும் கலங்கிப் போகலியே!?” என்று தாமரை பயத்துடன் வினவ,

“இல்லை அது இன்னும் கூடுதல் தெளிவாயிருக்கு!” என்று சொல்லிக் கொண்டே அவன் வேகமாய் தாராவை நெருங்கி அவளுடைய தோள்களை உறுதியோடு பிடிக்க இரண்டு பெண்களும் வெகுவாகப் பதறிப் போனார்கள்!

“எனக்கு மறு ஜென்மம் அளித்த இந்த பொன் மலரை எந்த வகையிலும் நான் காயப்படுத்த மாட்டேன்!” என்று சொல்லி அவன் பையில் வைத்திருந்த தாலியை எடுத்து, அவள் கழுத்தில் கட்டினான். கௌதமின் அந்த செயலில் அதிர்ச்சியில் உரைந்து போனாள் தாரா.

அங்கே சாமி படங்களுக்கு அருகில் வைத்திருந்த குங்குமத்தை தன் விரல் நுனியில் எடுத்தவன் அப்படியே அவள் முகத்தைத் தன் கரத்தில் அள்ளி,

“இது என் தேவதைக்கு நான் தரும் பரிசு!” என்று அவள் நெற்றி வகிட்டில் குங்குமம் இட்டவன், அப்படியே அவளை அணைத்து நேற்றியில் முத்தமிட்டான்.

நம் திருமணத்திற்கு இந்த முருகப் பெருமானும், என் தோழி தாமரையும் தான் சாட்சி! என்று கூறிக் கொண்டிருக்கும் பொழுதே

தாரா, “நோ ஓஓஓ வென்று” கத்திக் கொண்டே, முகம் குப்பென்று வியர்க்க; உடம்பு நடுங்க; தன் ஹேன்ட் பேக்கை மட்டும் கையில் எடுத்துக் கொண்டு யாரிடமும் ஒன்றும் கூறாமல் வெளியே ஓடி அங்கு வந்த ஆட்டோவில் ஏறிச் செண்றுவிட,

இப்படி ஒரு கிளைமாக்ஸ் சீனை சற்றும் எதிர்பாராத தாமரையும் கௌதமும் முற்றிலுமாக அதிர்ந்து போனார்கள்.

“என்ன கௌதம் ஒரு பெண்ணோட சம்மதமில்லாம; அவள் காதலியே ஆனாலும் அவ கழுத்தில் தாலி கட்டுவது தப்பில்லையா!? அது கற்பழிப்புக்கு சமானம்னு உனக்குத் தோணலியா!?”

“பரவாயில்லை தாமரை, டாக்டரம்மாவுக்கு, இப்படி ஒரு ஷாக் ட்ரீட்மென்ட் கொடுத்தாத்தான் தூங்குவது போல் பாசாங்கு செய்யும் தன்னோட தூக்கத்திலிருந்து அவங்க கண்விழிப்பாங்க! அவங்க அவங்களையே ஏமாத்திக்கிறாங்கன்றது உனக்குத் தெரியலியா தாமரை!?”

“அதெல்லாம் சரிதான் ஆனால் நீங்க செஞ்ச இந்தக் காரியத்தை என்னாலயே ஜீரணிக்க முடியலியே!”

“என்ன அவங்க கழுத்தில் ஒரு தாலிக்கயிறுதானே கட்டி இருக்கேன், நான் அவங்களுக்கு வேணாம்னு நினைச்சா அவங்க என்ன வேணா செய்யட்டும். என்னைத் தூக்கிப்போட்டுட்டு போய்க்கிட்டே இருக்கட்டும்.”

“இல்லை கௌதம், இன்னும் பெண்கள் அந்தளவுக்கு தாலி சென்டிமென்டை விட்டு வெளிய வரலை! ஒவ்வொரு பெண்ணுக்கும் தாலி ஒவ்வொரு மாதிரி தோணும். அந்தக் கொடி சில பெண்களுக்கு புனிதமான தாலிக் கயிறாத் தோணும்; சில பேருக்கு அது மாட்டைக் கட்டுற தாம்புக் கயிறாவும்; இன்னும் சிலருக்கு அது தன் கழுத்தைச் சுற்றிய பாம்பாகவும்; இன்னும் சிலருக்கு சுருக்குக் கயிறாகவும்; சிலருக்கு ஒரு பாதுகாப்புக் கயிறாவும் தோணும். சிலருக்கு அது பணத்திற்காகவும், பவுசிற்காகவும் அலங்காரத்திற்காகவும் தாலி கோர்க்கப்பட்ட தங்கச் செயினாகவும் தோணலாம். சில ஆண்களுக்கு அது தங்கள் செல்ல நாயின் கழுத்தில் அணிவிக்கும் நாய் பட்டையா கூடத் தெரியலாம், ஆனால் ஒரு திருமணமான பெண்ணுக்கு அதுதான் பாதுகாப்பு அரண். அவளைக் காக்கும் வேலி.
ஒரு பெண், தன் கணவன் உயிரோடிருக்கும் வரை தன் தாலிக்கொடியை கழட்ட விரும்ப மாட்டாள். அதில் சில எஃஸ்செப்ஷனல் கூட்டம் இருக்கலாம். அவர்கள் தங்களுக்கென்று ஒரு தனி ட்ராக்கைப் போட்டுக் கொண்டவர்கள், எதைப் பற்றியும் கவலைப் படமாட்டார்கள்!” என்று தாமரை விளக்க,

“தாமரை நீ ரொம்பக் கவலைப்படுற, எனக்கு என் தாராவை ஒரு டாக்டரா இல்லாமல் ஓர் சக மனுஷியாத் தெரியும், அவளுடைய இதயம் ஒரு அரிய வகை உணர்வுகளின் கலவை! சில சமயம் முட்களைப் போலிருக்கும் அவள் பேச்சில்; தேனூறும் பலாச்சுளை உணர்வுகளையும் நான் உணர்ந்திருக்கேன், கோபம் குறைந்தவுடன் அவள் என்னைப் புரிந்து கொள்வாள்! என்னைப் பிரிந்து அவளால் இருக்க முடியாது. நான் வந்த இரண்டு வேலைகளும் வெற்றியுடன் முடிந்தது! ஒன்று என் படிப்பிற்கான வேலையை இத்தனை நாட்கள் கழிந்த பின்னும் நான் தக்க வைத்துக் கொண்டுள்ளேன்.

இரண்டாவது என் தோழியை சந்தித்து அவள் முன்னிலையில் எங்கள் திருமணத்தை நிகழ்த்த நினைத்தேன், என் தாய் இதற்கு எதுவும் மறுப்புத் தெரிவிக்க மாட்டாங்கனாலும் அவங்க முன்னாடி என் கை நடுங்கி என் காரியத்தை கோட்டை விட்ருவேன். அதனாலதான் சாட்சியாய் என் தோழி உன்னை நான் தேர்ந்தெடுத்தேன். இப்பக் கோபமா போற தாரா எங்கேயும் போக மாட்டா, என் கைவளைக்குள்ளதான் இருப்பா!”

“கௌதம் நான் பேசிப் பார்த்த வரைக்கும் ஏதோ ஒரு நிகழ்ச்சி, அவங்க மனசை வெகுவா பாதிச்சிருக்கும்னு நினைக்கிறேன். அதுதான் அதுல இருந்து வெளிய வர ரொம்பத் தயங்குறாங்க!”

“உன்னோட தமிழ் மச்சான் என்ன சொல்றாரு?”

“ஊருக்குப் போன இடத்தில், என் வீட்டில் நடந்த அனைத்தையும் கேட்டு கண்ணில் நீர் வரும் வரை சிரி, சிரி என்று சிரித்தான். அவனுக்கு அவன் உதவி இல்லாமலேயே அவன் காதலி காப்பாற்றப்பட்டதில் அவ்வளவு சந்தோஷம். ஆனால் எனக்கோ அவன் ஒரு காதலனாய், வீரத்தமிழ்மகனா நின்னு என்னைக் காப்பாற்றியிருக்கணும், இல்லைனா வேடன் வலையிலிருந்து சாதுர்யமாய் தப்பிக்கிறதுக்கு நோட்சாவது எடுத்துக் கொடுத்திருக்கணும்! ரெண்டுமே இல்லாம ஜஸ்ட் லைக் தேட் ப்ரேக்கப்னு சொல்லிட்டுப் போயிட்டானேங்கிற அதீத கோபம் இன்னும் பாக்கி இருக்கு!” முடிவா ஒரு நல்ல செய்தி சொன்னான்! அம்மா அப்பாக்கிட்ட சொல்லிச் சீக்கிரமே எங்க கல்யாணத்துக்கு நாள் குறிக்கச் சொல்லணும்னு சொன்னான்”

“நம்ம ப்ரேக் அப் மேட்டர் என்னடா ஆச்சுனு கேட்டா!”

“காதலில் இதெல்லாம் சகஜமப்பா, நேத்து வெட்டிக்கிட்டோம் இன்னைக்கு ஒட்டிக்கிட்டோம்!” னு சொல்லி சிரிக்கிறான்.

“கல்யாணத்துக்கப்புறமும் இது மாதிரி 'ப்ரேக்கப், ப்ரேக்கப், பிரேக்கப்' னு மூணு முறை சொல்லி வெட்டிவிட்ருவியானு!” கேட்டேன்

“கல்யாணமாயிட்டா இப்படி அத்தானைக் கட்டிக்கிறேன் ஆட்டுக்குட்டியைக் கட்டிக்கிறேன்னு ஒட மாட்டியேனு சொல்றான். அவன் முதுகில் நாலு போடலாம்னு நான் போனேன் அதுக்குள்ள தப்பிச்சு ஓடிப் போயிட்டான்!”

“ஆனால் அவன் சொன்னதுலையும் ஒரு நல்ல பாயின்ட் இருக்கு தாமரை! திருமணம்கிறது கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் ஏற்படும் ஒரு நிலையான கமிட்மென்ட்! இன்பத்திலும் துன்பத்திலும் சகிச்சு வாழ நம்ம மனசு எதார்த்தமா பழக ஆரம்பிச்சிரும். அதனால்தான் நம் இந்திய கலாச்சாரத்தில் திருமணம் என்னும் கோட்பாட்டை இவ்வளவு வலுவாக் கடைப் பிடிக்கிறோம். சகிப்புத் தன்மைன்றது நம் ஜீன்லயே எழுதப்பட்டிருக்கு! இல்லைனா நம் நாடு விவாகரத்தான ஆண்களாலும் பெண்களாலும்தான் நிறைஞ்சிருக்கும்!

ஆனால் நான் இப்ப ஒரு புயலை சந்திக்கப் போறேனா இல்லை தென்றல் காற்றை சந்திக்கப் போறேனானு தெரியல, என் அம்மாவிடம் வேறு பாவமன்னிப்புக் கேட்கணும், நான் கிளம்பட்டா தாமரை! உன் கல்யாணத்துக்குச் சொல்லு, இறைவன் சித்தமிருந்தா தம்பதியராய் வர்றோம்!

ஆல் த பெஸ்ட் நண்பரே! உங்க கல்யாண வாழ்க்கை சிறக்க என்னோட வாழ்த்துக்கள்! எங்க கல்யாணம் ரிவர்ஸ் கியரில் நடந்தாலும் நடக்கும். ஒரு நாளைக்கு கட்டுறா தாலியைனு நான் அவனை மிரட்டினாலும் மிரட்டலாம். உன் தலைவலி இப்ப எப்படிப்பா இருக்கு?”

“என் சிந்துவைப் பற்றிய ஞாபகங்களை இறக்கி வச்சப்புறம் மூளை இப்ப கனமில்லாம ரொம்ப லேசான மாதிரி இருக்கு! இந்த ஒரு வருடமும் அதை என் மூளை தேடி அலைஞ்சதாலதான் ரொம்ப அதிகமான அழுத்தத்துக்கு ஆளாகி இருக்கணும்!”

“நீ ரொம்ப நல்லவன்டா! நீ சிந்திய கண்ணீர் உனக்கு வெண்முத்துக்களா திரும்பக் கிடைக்கும் நண்பா! இப்படி ஒரு அருமையான ரயில் ஸ்னேகிதம் இனி வாழ்நாளில் கிடைக்குமானு தெரியலை. ரெண்டே நாள் பழக்கம்னாலும் பவி செல்லத்தை என்னால மறக்க முடியலை!”

தாமரையின் கரங்களை எடுத்து அதை தன் கரங்களில் இறுக்கிப் பிடித்துத் தன் கண்களில் ஒற்றிக் கொண்டவன்,,, “பிரிவுன்ற வலியோடு இப்ப என் ரயில் ஸ்நேகிதியை நான் பிரிஞ்சு போறேன். நம் ஸ்நேகிதம் என்னைக்கும் தொடரும்! இனிமேல் எனக்கொரு ப்ரச்சனை வந்தா உடனே உன் பூமுகம்தான் என் ஞாபகத்தில் வரும்!” என்று சொல்லிவிட்டு அவளைப் பிரிந்து வந்தான்.

வெளியே வந்து ஒரு டாக்சி புக் பண்ணி வீடு போய் சேர்வதற்குள்ளாக அம்மாவிடமிருந்து அவசர SOS வந்தது கௌதமிற்கு!

“தம்பி, தாரா பட்டுப் புடவை சரசரக்க, நெற்றி வகிட்டில் குங்குமம் ஜொலிக்க, அவள் நெஞ்சில் தாலிக்கொடி புரள, புல்லெட் ரயில் வேகத்தில் நம்ம அறைக்கு ஓடிவந்தா, தன் ஆடையைப் பற்றியோ, கலைந்து கிடந்த கேசத்தைப் பத்தியோ அவள் கவலைப்படலை. ஏன் பவியைக் கூட அவ கண்டுக்கலை!

“அத்தை மருத்துவமனையில் ஒரு அவசர கேஸ்! நான் உடனே சென்னை திரும்பணும், என்று அவளுடைய சிதறிக் கிடந்த பொருட்களை எல்லாம் ஒன்று சேர்த்தவள், “நான் வரும் வழியிலேயே விமான டிக்கெட் புக் பண்ணிவிட்டேன்! உங்க பையன் பின்னாடி வர்றார். எப்ப? எப்படி? வரலாம்னு அவரே முடிவெடுக்கட்டும்!”

“இது என்னம்மா மணப்பெண் பொல ஒரு திருமணக் கோலம்னு?!” நான் கேட்டேன்

“ஒரு ட்ராமா ரிகர்சல் அத்தை!” என்று சொல்லிவிட்டு,

‘டில்லியில ட்ராமா ரிகர்சலா?’ என்ற கேள்வியோடு நான் வாய் பிளந்து நிற்கும் போதே, “இரண்டு குழந்தைகளும் பத்திரம் அத்தை!” என்று சொல்லிக் கொண்டே ஓட்டமும் நடையுமா போயிட்டாப்பா!” தன் தாய் பேசியதைக் கேட்டபின் அவனுக்கு அப்பாடா என்றிருந்தது!

நல்லவேளை அவள் வீட்டில் ஒண்ணும் சீன் கிரியேட் பண்ணவில்லை!! ‘கள்ளி! மாயஜாலங்கள் பண்ணும் வனதேவதை!’ என்று திட்டிக் கொண்டே வீட்டிற்கு வந்து சேர்ந்தான். அவன் அறைக்குள் நுழைந்து கொண்டிருக்கும் பொழுதே,

“தாராவுக்கு என்னப்பா ஆச்சு! சும்மா சொல்லக் கூடாது! அந்தப் பொண்ணு அந்த சரசரக்கும் பட்டுப்புடவையிலும் நெற்றித்திலகத்திலும் ஒரு வித்தியாசமான அம்மன் சிலையாட்டம் இருந்தா! இயற்கை அதற்குக் கிடைக்கும் வண்ணங்களுக்கு ஏற்றவாரு; அந்தந்த காலத்தைப் பொருத்து; அது தன்னை எப்படி எல்லாம் மாற்றி மாற்றி அலங்கரித்துக் கொண்டாலும் அந்த இயற்கைக்குனு ஒரு தெய்வீக அழகு இருக்கும் இல்லையா அது போன்றதொரு அப்பழுக்கற்ற அழகுப்பா அவள்!”

“எனக்குத் தெரியும் மா! நான் அந்த அழகை இந்த ஒரு வருஷமா ஆராதிச்சுக்கிட்டு தானே இருக்கேன்!

“வெயில்காலத்தின் தகிக்கும் வெயிலை
அணிந்த மஞ்சள்நிற அழகியவள்!
குளிர்காலத்தின் பனித்துளிகளை முத்துமுத்தாய்
அணிந்து கொண்டு மேகப் போர்வையை
இழுத்துப் போர்த்தும் வெள்ளை நிற அழகியவள்!
கார்காலத்தில் கொட்டும் மழையையும்ல,
பூத்துவலாய் தூவும் தூறலையும்,
குடித்துவிட்டு சூரியனிடம் மண்டியிட்டு
கவிழ்ந்து கிடக்கும் மல்லிபூ மலரவள்!
வசந்த காலம் வந்துவிட்டாலோ
இயற்கைக்கு கொண்டாட்டம்தான்;
மரங்கள் தளிர்க்கும், பூக்கள் மலரும்,
சுற்றிலும் தேனீக்களின் ரீங்காரம் கேட்கும்,
எல்லாக்கலத்திலும் என்னவள் ஓர்
வசந்த கால வண்ணத் திருவிழாதான்!


கௌதம் தன் தாய் கூறிய கூற்றிற்குப் பதிலாக தன் மனம் புனைந்த கவிதை வரிகளைத் தன் அம்மாவிடம் கூறியவன்,
“அவள் ஒரு வண்ணங்களின் திருவிழாமா! ஆனால் நான் அவளை எட்டிப்பிடிப்பதற்கு முன்னால் என் கண்களிலிருந்து மறைஞ்சு போயிட்டாமா” என்று தாய்க்குப் பதில் கூற,

“இங்க என்னப்பா நடக்குது!?” என்று கற்பகம் வினயத்தோடு வினா எழுப்ப,

“உன்னைக் கேட்காமலேயே மறுபடியும் ஒரு முடிவெடுத்து அதை செயல்படுத்தவும் செஞ்சிட்டேன்மா, ஏதோ ஒரு அவசரத்தில் அவ கழுத்தில் தாலி கட்டிவிட்டேன்னு நினைக்காத! இது தீர்க்கமா ஆராஞ்சு எடுத்த முடிவு! இந்த முறை நான் தப்பு செய்யலைனு முழுசா நன்புறேன்!”

“ஓ!” என்றவர் முகத்தில் அதிர்ச்சிக்குப் பதில் ஆனந்தமே தாண்டவமாடியது!

“மகனே! கௌதம சித்தார்த்தா! நீ உன் வாழ்க்கையில முதல் தடவையா ரொம்ப நல்ல முடிவு எடுத்திருக்கப்பா! தாராவை என் மருமகளா எப்பவோ என் மனசு ஏத்துக்குச்சு! ஆனால் பெண்கள் மனசு ரொம்பவும் மென்மையாவும்; அதே நேரம் ரொம்பக் கரடு முரடாவும் இருக்கும்,
அவர்கள் இதயத்துக்குள்ள நூறு ரகசிய அறைகளைப் பூட்டி வச்சிருப்பாங்க!”

“இந்த முறை சரியான திறவுகோல் என் கையில் இருக்குமா! இது கண்டதும் வந்த காதல் இல்லை. மனசுக்குள்ள ஊறி ஊறி, அவள் அன்பை உள்வாங்கி அதிலிருந்து பிறந்த காதல் இது, உன் பிள்ளை நிச்சயமா காதலில் இந்த முறை தோற்கமாட்டான்.

தாரா, “எனக்கும் சென்னை போறேன்னு!” ஒரு மெசேஜ் மட்டும்தான் அனுப்பி இருக்கா!” நீ அவளைப் பற்றிய கவலையை விடுமா!” என்றவன், தன் பிளானைப் பற்றி தாயிடம் கூறினான்.

“இப்ப நான் சொல்லப் போறதை கவனமாக் கேளுமா! என்னோட அலுவலகத்துக்கு நான் வேலைக்குப் போகாம ஒரு வருடம் இருந்திருந்தாலும் அதை என்னோட மெடிக்கல் லீவில் எடுத்துக்கிட்டு எனக்கு அதே வேலையில் கோவையில சேர அனுமதி கொடுத்திருக்காங்க! நாம உடனே கோவை கிளம்பனும். நேரா ஃப்ளைட் இல்லைனாலும் எங்காவது ஒரு ட்ரான்சிட் போட்டு நாளை அதிகாலையில கோவை சேர்ந்திருவோம். ஃபர்ஸ்ட் நான் வேலையில சேரனும்; என் அம்மாவோட நான் சேர்ந்து வாழணும்கிற முதல் கனவு பலிக்கப் போகுது; என்னை ஆசிர்வாதம் பண்ணுமா! இந்த நிமிஷம் நான் அப்பாவை ரொம்ப மிஸ் பண்றேன்!” என்று தன் தாயிடம் ஆசிரைப் பெற்றுக் கொண்டு ஊருக்குக் கிளம்பும் வேலையில் ஆயத்தமானான்.

‘என் புள்ளை என்னோட கோவைக்கு வரப் போறானா, என்னோட தங்கப் போறானா, அவன் மனைவி மக்களோடு நான் வாழப்போறேனா? இறைவா இப்படியொரு அற்புதமான செய்தி உண்மையாய் இருக்க முடியுமா? யாருமற்ற அனாதையாய் செத்துப் போயிருவேனோனு தவிச்சுப் போயிருந்த இந்த வயசான காலத்தில், எனக்கு இப்படியொரு இன்ப அதிர்ச்சியா!?’

“என்னம்மா அப்படியே நின்னுட்ட, நீ போய் பவியைக் கிளப்பு, நான் திங்செல்லாம் பேக் பண்றேன்!” மகன் தாயை விரட்ட இவ்வளவு நாளும் துன்பத்தில் தள்ளாடிய தாயுள்ளம் இப்பொழுது இன்பத்தில் தள்ளாடத் தொடங்கியது.

பெங்களூர் வழியாக டில்லியிலிருந்து கோவை சென்றார்கள். இந்த முறை அவர்களின் பயணத் திட்டத்தை கௌதம் வகுக்க விமானம் ஏறினார்கள்.

பவி, ‘மாமு காணும்!’ என்று தாராவைக் கேட்டுக் கொண்டே விமானத்தில் பயணம் செய்தது! தொடரும்.IMG IUS 003.png
 
Top