Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'என் கண்களில் காண்பது உன் முகமே' அத்தியாயம் 31

Advertisement

'என் கண்களில் காண்பது உன் முகமே' அத்தியாயம் 31

அத்தியாயம் 31

ஓரு வழியாக எந்தத் தடங்கலுமின்றி அன்று அதிகாலையிலேயே மூவரும் கோவை வந்து சேர்ந்தார்கள்.

“என் அன்பு மனைவிக்கு, பயணம் முடிந்தது, பத்திரமாக வந்து சேர்ந்தோம்!” என்று தாராவுக்கு ஒரு மெசேஜ் மட்டுமே அவனால் அனுப்ப முடிந்தது! அவனுடைய ஈகோ அதற்கு மட்டும்தான் இடம் கொடுத்தது!

இன்னும் அவன் வேலையில் சேர மூன்று நாட்கள் மட்டுமே பாக்கி இருந்தது! அதற்குள் அவன் தன் பெண்டாட்டியை கோவைக்கு இழுத்து வர வேண்டும். அவளோடு சமாதானமாகாமல் அவனால் வேலையில் சேர முடியாது! வேலை என்றில்லை அவனுடைய அன்றாட வேலைகளைக் கூட அவனால் செய்ய முடியாது! நேரம் செல்லச் செல்ல இருப்புக் கொள்ளாமல் தவிக்கத் தொடங்கினான்.

கற்பகம் ஒரு முறை ஃபோனில் ‘மருமகப் பொண்ணே’ என்று அழைத்துக் குசலம் விசாரித்தார். குழந்தை பவி, “தாராம்மா! தாராம்மா! நீ எப்ப வர்ற? பாட்டி வீடு சூப்பரா இருக்கு!” என்று மழலையில் கைபேசியில் பேசியது. ஆனால் முக்கிய கதைமாந்தர்கள் இருவரும் தங்களுக்குள் ஃபோனில் கூடப் பேசிக் கொள்ளவில்லை!!!

தாரா சென்னை வந்து தூங்கி எழுந்த மறுநாளே, கௌதம் மேசேஜை பார்த்ததிலிருந்தே அவன் மேலிருந்த கோபம் அனைத்தும் மெழுகுதிரி எரியும் பொழுது கரைந்து போவது போல் ஆவியாகிக் கரைந்து போக; அந்த மெழுகு உருகும் பொழுது தரையில் சிந்தும் கண்ணீர்த் துளிகள் போல் அந்த நினைவுகள் மட்டுமே அவளிடம் பாக்கியிருந்தது.

அவள் படுத்து உறங்கிய பொழுது கூட, கௌதம் தன் நெற்றி வகிட்டில் அழுத்தமாக வைத்துவிட்ட குங்குமம் லேசாகக்கூடக் கலைந்து விடாமல் மிகவும் ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொண்டாள். அவளின் வாழ்க்கையில் இருந்த மிகப் பெரிய கேள்விக்குறியை ஒரே ஷாட்டில் ஆச்சரியக்குறியாக மாற்றிவிட்டான் என்பது அவளுக்குப் புரிந்த பொழுது அவள் மனம் இடைவிடாமல் அதிரத் தொடங்கியது!!!

அவள் சற்றும் எதிர்பார்க்காமல் அவன் தாலிகட்டும் அந்த நிகழ்வு நடந்த நொடிப் பொழுதில், தறிகெட்டு ஓடும் காற்றாற்று வெள்ளம் போல் தோன்றிய கோபம்; காலையில் கண் விழித்த பொழுது கடலில் கலக்கும் நதியைப் போல அவனோடு காதலில் உருகிக் கலந்து, அமைதியாய் ஆர்ப்பாட்டமின்றி பாயத் தொடங்க அவள் மனம் சாந்தமடையத் தொடங்கியது.

அவன் மேல் ஏற்பட்ட கோபம், பின்னர் ஆத்திரமாகி, அழுகையாகி, சிரிப்பாகி, மெல்ல மெல்ல நாணத்தில் சிவந்து, அவனிடம் ஊடலாகி முடிவில் அவனோடு கூடலுக்காய் ஏங்கி நின்றது!

“வாரணம் ஆயிரம் சூழ வலம் வந்து நாரணன் நம்பி நடக்கின்றான்
என்றெதிர் பூரணப் பொற்குடம் வைத்துப் புறமெங்கும்
தோரணம் நாட்டக் கனா கண்டேன் தோழி”


பூத்துக்குலுங்கும் வாலிப வயதில் அவள் மனதில் ஆழமாய்ப் பதிந்து போன ஆண்டாள் பாசுர வரிகள் அவை! அவை எல்லாம் அவள் கண்ட கனவுகள்,,,ஆனால் வாழ்க்கையில் நடந்ததோ இதிலிருந்து முற்றிலும் மாறுபட்ட காட்சிகள்!

அன்றொரு நாள், தன் கனவுகள் கலைக்கப்பட்டதற்காக அவள் அழவில்லை, கதறவில்லை, ஒரு பொட்டு கண்ணீர்கூடச் சிந்தவில்லை. ஏனென்றால் அது அவள் தேர்ந்தெடுத்த வாழ்க்கையே இல்லை! அவள் கண்ட கனவு வாழ்க்கை அதுவல்ல.

என் பழைய வாழ்க்கை காற்றோடு காற்றாகக் கலைந்து போகட்டும் இதோ அவளுடைய உயிர்க் காதலன் அவளுடைய நெற்றி வகிட்டில் செந்தூரத் திலகமிட்டுள்ளான்.

அந்த நினைப்பு வந்த உடனேயே கண் விழித்தவள், அவன் வைத்த செந்தூரத் திலகம் தவறுதலாகத் தன் கையோ; முடிக் கற்றைகளோ பட்டு லேசாக நெற்றியில் இழுவியிருக்குமோ என்று நேராகச் சென்று அந்த ஆளுயரக் கண்ணாடியைப் பார்த்தவள், அவனிட்ட செந்தூரம் பளிச்சென்று அவள் நெற்றிவகிட்டில் ஒரு நெற்றிச் சுட்டிபோல் ஓளிர்ந்து கொண்டிருந்ததில் அவள் இதயம் குட்டிக்கரணம் அடிக்க; அது தலைகீழாக ஒரு துள்ளல் போட்டது போலிருந்தது அவளுக்கு.

அந்தத் திலகத்தின் காம்பஸ் வட்டம் லேசாகக் கலங்கியது போல் அவளுக்குத் தோன்ற அதை விரல்களால் சரி செய்தவளின் விரல்கள் நடுங்கியது! ஒருநாளும் இனி நெற்றி வகிட்டில் குங்குமம் இடமாட்டேன் என்ற அவளின் வைக்கிராக்கியம் கலைந்தது மட்டும்மில்லாமல், தன் கணவன் கௌதம் இட்ட குங்குமம் கைபட்டோ நீர்பட்டோ கலைந்துவிடாமலிருக்க நெற்றிக்குக் குடைபிடிக்கலாம் என்று கூடத் தோன்றியது அவளுக்கு!

அந்த எண்ணங்கள் தந்த போதையில் தான் ஒரு டாக்டர் என்பதையே மறந்து, தானாகவே சிரித்துக் கொண்டு அங்கும் இங்கும் ஓடத் தொடங்கினாள். அவள் செய்கையில் அவளுக்கே வெட்கம் பிடுங்கித் திண்ண, தன் கணவன் தனக்காக வாங்கிக் கொடுத்த அந்த அடர் ரோஸ் நிறப் பட்டுபுடவையை நெஞ்சோடு சேர்த்து அணைத்துக் கொண்டு அப்படியே ஒரு மயக்கத்தில் அமர்ந்திருந்தாள். அவனுடைய படர்ந்து விரிந்த மார்ப்பகத்தில் விரிந்து கிடக்கும் கூந்தலோடு அவன் மேல் மல்லாக்க சரிந்து, குனிந்திருக்கும் அவன் முகத்தை அப்படியே தன் கைகளில் அள்ளி,,, ம் அப்படியே கைகளில் அள்ளி ம்,,,ம்,,,அப்புறம்,,,!’

‘சீ போடா!” என்று அவனைத் தள்ளிவிட்டுத் தன் கனவுகளைக் கலைத்தவள், குளியலறைக்கு ஓடி. நெற்றியில் தண்ணீர் படாமல் குளிக்கத் தொடங்க, அந்த செய்கை, தான் செய்யும் ஒரு மேஜரான மூளை ஆப்பரேஷன் போல் அவளை சோர்வடையச் செய்தது.

‘முகத்தை முழுவதும் கழுவாமல் எத்தனை நாளைக்கு நாறிக் கொண்டு திரியப் போற?’, என்று அவளுடைய உள் மனது எகத்தாளமாய் சிரிக்க,

‘வருவான்! என் கழுத்தில் தாலிகட்டியவன் என்னை அழைத்துப் போக வருவான்!’ என்று அந்த மனதின் கிண்டல் குரலுக்குப் பதில் கூறினாள்.

‘எத்தனை நாள் காத்திருக்கப் போற?’

‘எத்தனை யுகங்கள் ஆனால் என்ன? நான் அவனுக்காகக் காத்திருக்கப் போறேன். நான் என்ன தவறு செய்தேன் என்னையே தண்டித்துக் கொள்ள?’ அவள் மனம் 50:50 என்ற சதவிகிதத்தில் சமாதானம் அடையத் தொடங்கியது!

தாரா என்றுமே மருத்துவமனைக்குப் பட்டுப் புடவையுடன் சென்றதில்லை; கூந்தலில் பூச்சூடியதில்லை; நெற்றியில் கண்ணுக்குத் தெரியாத ஒட்டுப் பொட்டுக்கூட வைத்ததில்லை; விழிகளுக்கு அஞ்சனம் தீட்டியதில்லை. கௌதமின் தீவிர வற்புறுத்தல்களுக்காய் சில வருடங்கள் கழித்து ஒரு புள்ளி போல் ஒட்டுப் பொட்டு வைத்துக் கொள்ளத் தொடங்கினாள். டில்லியில் அன்று தாமரை வீட்டிற்குச் சென்ற பொழுதுதான் அவள் மிதமான மேக்கப்பில் சென்றாள். அதற்கே கௌதம்,

‘அழகெனும் ஓவியம் இங்கே! அதை எழுதிய ரவிவர்மன் எங்கே?’

என்று பாடத் தொடங்கிவிட்டான். இன்று அவள் வித்தியாசமான் ஒரு கோலத்தில் மருத்துவமனை செல்லப் போகிறாள்; இதுவரை யாருமே கண்டிராத ஒரு கோலம்; ஒரு உண்மையான கல்யாணப் பெண்ணின் மணக்கோலத்தில் போகப் போகிறாள். அவள் உடம்பில் ஒரு மணப் பெண்ணின் அலங்கார நகைகள் மட்டுமே இருக்காது!

‘பொன் நகைகள் இல்லாமல், புன்னகையில் விரியும் உனைப் பார்க்கும் பொழுது என் மேனி சிலிர்க்கிறது!’ இதுவும் கௌதம் கூறிய கவிதை வரிகள்தான். ரோஸ் வண்ணத்தில் பட்டுப் புடவை கட்டி; பளிச்சென்றுநெற்றியில் சென்னிற ஸ்டிக்கர் ஒட்டி; வீட்டில் மலர்ந்த ஒற்றை ரோஜாவைத் தன் கூந்தலில் சூடி; முகத்திற்கு மிதமான மேக்கப் போட்டு; கண்களுக்கு அஞ்சனம் தீட்டி; தன் தாலிக்கொடியைத் தன் நெஞ்சின் மீது புரளவிட்டு; அவள் கிளம்ப அவளைப் பார்க்க அவளுக்கே வெட்கமாக இருந்தது! “சீ போடி!” கண்ணாடியில் தெரிந்த தன் உருவத்தைப் பார்த்து அவளே வெகுவாக்ச் சிவந்து போக, தன் மருத்துவமனையை அடைந்தாள் தாரா.

எதையுமே மனதில் பதிய வைத்துக் கொள்ளாத சீஃப் டாக்டரே அவளைப் பார்த்து தன் படர்ந்த மூக்கின் மேல் விரலை வைத்தார்,

“என்ன டாக்டர் தாராஜி, ஏதாவது பிளாஸ்டிக் சர்ஜரி செய்துக்கிட்டீங்களா, உங்க முகத்திலிருக்கும் ஒவ்வொரு உறுப்பும் தனித் தனியா எனக்கு வணக்கம் சொல்றாப்புல இருக்கு! இன்னைக்கு ஏதோ ஒரு தனித்துவ அழகு உங்க முகத்தில் தெரியுதே! பட்டுப்புடவை என்ன? நெற்றி நிறைய திலகமென்ன?

கூந்தலில் உள்ள ஒற்றை ரோஸ் காற்றோடு கை குலுக்க; கைகளில் குலுங்கும் வளையல்களும், கண்களில் தீட்டிய மையும், கழுத்தில் புரளும் தாலிக் கொடியுமா, மணவறையில் அமர்ந்த மணப்பொண்ணு மாதிரி அழகா இருக்கீங்க! கழுத்தில் போடுற ஒரு கிலோ நகையும், இடையில் கட்டும் ஒட்டியாணம் மட்டும்தான் மிஸ்ஸிங், சாரிமா, நான் சீஃப் டாக்டரானதுக்கப்புறம் இதுவரையிலும் இங்க வொர்க் பண்ற ஸ்டாஃப் பத்தியோ, நோயாளிகளைப் பத்தியோ எந்தக் கமன்ட்சுமே வாய் திறந்து பாஸ் பண்ணினதில்லை. ஐ ஆம் அ சைலன்ட் ரீடர்! அதுதான் சரியான ஆஃபிஸ் டெக்கரம் இல்லையா!?

ஆனால் இன்னைக்கு என் நாக்கு என் கட்டளையை உதாசீனப்படுத்திருச்சு! நாமளும் மனுஷங்கதானே தாரா?! உணர்வுகளும், சென்டிமென்ட்சும் நமக்கும் உண்டில்லையா? கழுத்தில் தாலி புரள ஆரம்பிச்சாலே பெண்களுக்கு கண்களில் ஒரு தேஜஸ் வந்திரும்! உங்க அலங்காரத்திலும் அப்படி ஒரு அழகு!

தோட்டத்தில் பூக்காமலேயே கப்பும் கிளையுமா இருக்க ஒரு ரோஜாச்செடி, திடீர்னு ஒருநாள், பெரிய ஒற்றை ரோஜா மலரோடு நமக்குக் காலை வணக்கம் கூறினா எப்படி இருக்கும் அது மாதிரி மனசுக்கு ஜில்லுனு இருக்கு தாராஜீ!”

‘இவரையா ‘லூசு; இங்கிதம் தெரியாதவர்னு; நாம நினைச்சோம்! இவ்வளவு கவித்வமா பேசுறாரேனு’ அவள் மனதில் ஒரு திடுக்கிடல் தோன்ற, எல்லா மனிதர்களையும் போல இவரும் தனக்கென்று ஒரு முகமூடி அணிந்துள்ளார்! இவரைப் போல் எல்லா மனிதர்களும் தங்கள் முகமூடிகளைக் கழட்டினால் இந்த உலகம் தாங்காதுப்பா!’ என்று தனக்குள் முணங்கிக் கொண்டவள்,

“எங்களை எல்லாம் கூப்பிடாம கல்யாணத்தை முடிசிட்டீங்களா!” என்றவரின் கேள்விக்கு,

“சிம்பிளா செய்யணும்கிறது நாங்க ரெண்டு பெரும் சேர்ந்தெடுத்த முடிவு! இப்ப ஒரு முக்கியமான கோரிக்கையோடு வந்திருக்கேன் டாக்டர்!” என்றவள்,

“லீவ் எஃஸ்டென்ஷன் வேணுமாமா, தாராளமா எடுத்துக்குங்க, மிஸஸ். தாரா உங்களை இப்படி டென்ஷன் இல்லாமப் பார்க்கவே எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு!”

“என் கணவருக்கு, கோவையில் வேலை. மாமனார் இல்லை, என் கணவர் அவங்களுக்கு ஒரே பையன்! மாமியாரும் அங்கதான் தனியா இருக்காங்க, கொஞ்ச நாளைக்கு நான் அவங்க கூடப் போயிருக்கப் போறேன்! எப்பச் சென்னைக்குத் திரும்பி வருவேன்னு எனக்கே தெரியாது! ஆனால் சென்னைதான் என்னோட சொந்த ஊர் மாதிரி என்மனசில் நிறைஞ்சு போன ஊர். நான் தற்காலிகமாத்தான் கோவை போறேன். கொஞ்ச மாதங்களோ வருடங்களோ கழித்து திரும்பி வர்றேன் டாக்டர்!”

“நீங்க வேலையை ரிசைன் பண்ணனும் தேவை இல்லை. இந்த மருத்துவ மனையின், ‘நியூராலஜிஸ்ட் அன்ட் சர்ஜன்’ போஸ்டிங் உங்க பேர்ல அப்படியேதான் இருக்கும்! ஒரு அவசர ஆப்பரேஷன் டிஸ்கஷன்னா இந்த மருத்துவமனை உங்களைத்தான் அழைக்கும்! யூ வில் பி அவர் கெஸ்ட் டாக்டர்! இந்தச்சின்ன வயசுல இவ்வளவு நுணுக்கமா மூளை ஆப்பரேஷன் பண்ணக்கூடிய விரல்களை உங்கக்கிட்ட நான் பார்க்கிறேன்! உங்களால் இங்க உயிர் பிழைத்தவர்கள் பலபேர் உண்டு. எங்க மருத்துவமனைக்கு நீங்க ஒரு அஸர்ட்! இப்ப நீங்க ஒரு லாங்க் லீவ்ல இருக்கிறதா கணக்கில் எடுத்துக்கலாம். நீங்க எப்ப வேணா திரும்ப வாங்க இந்த ஆஸ்பத்திரி வாசல்கள் உங்களுக்காகத் திறந்தேதான் இருக்கும்!” என்று சீஃப் டாக்டர் கூற, தன் மனதில் துள்ளிய மகிழ்சியை மறைத்துக் கொண்டு,

“இன்னைக்கு என் பணி நிறைவுக்கப்புறம் வந்து உங்களைப் பார்க்கிறேன் டாக்டர்!” என்று கூறிவிட்டு தன் அறைக்குச் சென்றாள் டாக்டர் தாரா! போகும் வழியெல்லாம் வெளியே வெள்ளை கோர்ட் அணிந்து; உள்ளே பட்டுப் புடவை சரசரக்கச் சென்ற டாக்டரை, அந்த மருத்துவமனை, டாக்டர்களும் நோயாளிகளும் விழி விரியப் பார்த்தனர்!

டாக்டர் தாராவிற்கடியில் பயிற்சி டாக்டராய் இருந்த ஜோ அவளை முகத்தில் சிரிப்புடன் குதுகலமாய் வரவேற்றான்.

“நீங்க சத்திர சிக்கிச்சை செய்து காப்பாற்றிய பையன் நல்லா உடம்பு தேறிவிட்டான் டாக்டர். என்னைக் காப்பாத்தின அந்த பெண்தெய்வத்தை நான் பார்க்கணும்னு அவனும் அவன் குடும்பமும் ஒத்தைக் காலில் நிக்கிறாங்க டாக்டர்! அந்த ஆப்பரேஷனை முடிச்ச கையோட எங்க டாக்டர் காணாமப் போயிட்டிங்க?!”

“இன்னைக்குத் அவங்க தவத்தைக் கலைத்துவிட்டு ரெண்டு காலிலும் நிக்கச் சொல்லுப்பா! நான் வந்து பார்க்கிறேன்!” என்று பதில் கூறிய தாராவை விழி விலகாமல் பார்த்த ஜோ,

“இன்னைக்கு ஏதாவது விசேஷமா ஜி! ரொம்பக் கலக்கலா வந்திருக்கீங்க?”

“ரெண்டு நாளைக்கு முன்னாலதான் எனக்குக் கல்யாணமாச்சு!” சொல்லும் பொழுதே அவள் முகத்தில் நாணம் ஏறத் தொடங்கியது!

“ஐ! ஐ! நீங்க இவ்வளவு வெட்கப்படுற பொண்ணுனு தெரிஞ்சிருந்தா நானே ஒரு ரோஜா மலரோடு, லவ் ப்ரப்போஸ் பண்ணியிருப்பேன் ஜி! யூ லுக் ஆசம் டுடே! அச்சு அசலா 25 வயசு கல்யாணப் பொண்ணு மாதிரியே இருக்கீங்க!”

“ஏய்! லூஸ்டாக் விடாதே!” என்று அவள் அதட்ட,

“நான் வந்த நாளிலிருந்து உங்களைப் பார்க்கிறேனே பாஸ்! அப்படியே துடைச்சு விடப்பட்ட பளிங்குத் தரை முகத்தோடும்; தூக்கிப் போடப்பட்ட கொண்டையோடவும்; ரொம்ப சீரியஸ் மனப்பான்மையுடனும் தான் உங்களைப் பார்த்திருக்கேன்! அந்த மொட மொட காட்டன் புடவைகளில் நீங்க ஒரு புத்த சன்னியாசினியோனு கூட நினைச்சிருக்கேன் டாக்டர்!”

“எனக்குத் தாலிகட்டிய கணவர் பேர்கூட கௌதம சித்தார்த்தன் தான். ரெண்டு பேருமே ஞானத்தைத் தேடி அலஞ்சுக்கிட்டிருந்தோம்! ஒரு போதி மரத்தடியில் கிரஹஸ்த்தனா இருக்கதுதான் வீடு பேர் அடைய சிறந்த வழின்ற ஞானம் கிடைத்தது! புத்தன், சித்தார்த்தன் ஆனான்! யசோதா தாராவாகி, சித்தார்த்தனைக் கட்டிக் கொண்டாள்

“ஐ! இந்த ஒன்லைன் ஸ்டோரிகூட ரொம்ப சூப்பரா இருக்கும் மாம்!”

“விட்டா கதை எழுத, பேனா பேப்பரோட உட்கார்ந்திருவ போல இருக்கு! நம்ம டாக்டர் தொழிலுக்குத் தயாராகுப்பா, நான் ஊரில் இல்லாதப்ப, நம்ம செக்ஷ்னுக்கு வந்த நோயாளிகள், அவங்களோட ஹிஸ்டரி, யாரு அட்டெண்ட் பண்ணினாங்க என்ற குறிப்போடு ஓடி வா பார்க்கலாம்!”

“தோ மினிட்ஸ் நூடுல்ஸ்!” என்று ஓடினான் ஜோ! நாளையிலிருந்து இந்த வாழ்க்கையைக் கொஞ்சநாள் மிஸ் பண்ணப் போறோம் என்ற வருத்தம் தொண்டையை அடைக்க, அவள் மனம் சோக கீதம் இசைக்கத் தொடங்கியது!

‘அப்ப கௌதம் இன்னைக்கு நைட்டுக்குள்ள உன்னைத்தேடி வந்திருவான்னு நீ நம்புறியா?!’

‘ஆரம்பிச்சுட்டியா உன் வேலையை என்று தன் மனசாட்சியோடு போர் புரிந்தவள், ‘வரலைனா அவன் எங்கயிருந்தாலும் அவனைக் கட்டியிழுத்துக்கிட்டு வந்து சாகடிச்சிருவேன்’

‘நீ, அவனைச் சாகடிக்கப் போறியா??? சாவின் விளிம்பில் கிடந்தவனைக் காப்பாற்றினதே நீதானே! அவனைப் பார்த்தவுடன் ஒரு மொசக்குட்டி மாதிரி அவன் பின்னால் ஓடி ஒளிஞ்சுப்ப,,, இல்லை வேடன் வலையில் சிக்கிய மாடப் புறா மாதிரி அவன் மடியில் போய் உட்கார்ந்துக்குவ, உன் பசப்பலான நடிப்பு எனக்குத் தெரியாதா?!’ என்று மூளை அலற,

‘ஏய் என்னை ரொம்ப வெறுப்பாத்தாத, உனக்குப் பதில் சொல்ல எனக்கு இப்ப நேரமில்லை!’ என்று மனதிற்குள் கொக்கரித்த மனசாட்சியை விரட்டத் தொடங்கினாள்.

அன்று முழுவதும் கடிகாரத்தை ஃபாஸ்ட் ஃபார்வேர்ட் மோடில் வைத்தது போல வினாடிகளும், நிமிடங்களும் மணியும் ஒன்றை ஒன்றை ஒன்று விரட்டிக் கொண்டே ஓடிவந்து, ஏழு மணியைத் தாண்ட, தாராவின் மனம் பரபரப்படையத் தொடங்கியது! ஒரு வழியாகத் தனக்குத் தெரிந்த சிலரிடம் பை சொல்லிவிட்டு, ஜோவிடம் ஸ்பெஷல் பை சொன்னவள், சீஃப் டாக்டரிடம்

“விரைவில் சந்திப்போம்” என்று “வணக்கமும் நன்றியும் கூறி விடை பெற்றாள்.”

கௌதம் கோவை வந்திருப்பது தெரிந்து உடனேயே அத்தை பொண்ணு தர்ஷி ஓடிவந்தாள். வந்தவுடன் பவியை கைகளில் அள்ளிக் கொண்டவள்,

“மறுபடியும் ஏமாத்திட்ட பார்த்தியா! எங்கடா உன் பொண்டாட்டி? மறுபடியும் அவளை ஒளிச்சு வச்சுட்டியா?”

“இல்ல தர்ஷ், வர்ற வழியில் சென்னையிலையே இறங்கிட்டா! அவ ஒரு டாக்டர் இல்லையா ஒரு அவசர ஆப்பரேஷன்!”

“அவங்க டாக்டரா? அவங்க ஒரு எஞ்சின்யர்னு சொன்னதாத்தானே ஞாபகம்!” தர்ஷி குழம்ப, சரியான நேரத்தில் கௌதமிற்கு கைகொடுத்தார் கற்பகம்

“உன் ஞாபகத்தைத் தூக்கிக் குப்பைக் கூடையில் போடு தர்ஷி! சின்ன வயசிலிருந்தே ட்ரெஸ் போடுறதைக்கூட மறந்து ரோட்டுல திரிஞ்சவதானே நீ, குழந்தையா எத்தனை நாள் வெறும் ஜட்டியோட சுத்தியிருக்கன்னு எனக்குத் தெரியாதா?” கூறும் பொழுதே தர்ஷிக்கு பிறந்த நாள் ட்ரெஸ் பார்சல் அனுப்ப தபாலாபிசிற்கு வந்த விசுவும் அவளும் காதலில் விழுந்த அந்த முதல் நாளின் மலரும் நினைவுகள் மனதிலோட, அவர் ஓட்டிக்கொண்டிருந்த முன் பதிவு வீடியோக்களின் இடையில் புகுந்த கௌதம்,

“அம்மா நீயும், தர்ஷியும் பவியைப் பார்த்துக்குவீங்களா? நான் சென்னை வரை போய் என் பொண்டாட்டியைக் கூட்டிட்டு வர்றேன்?” என்று கேட்க,

“ஏன் உன் பொண்டாட்டிக்கு வழி தெரியாதாக்கும்!” என்று தன் முகத்தைத்தன் தோள் பட்டையில் இடித்துக் கொண்டாள் தர்ஷி!

“அடி லூசு முதத் தடவையா என் மருமக தன் வலது காலை எடுத்து வச்சு நம்ம வீட்டுக்குள்ள வரப் போறா! அப்பப் புருஷன் பொஞ்சாதி ரெண்டு பேரோட பாதமும் ஒண்ணத்தானே நம்ம வீட்டில் பதியப்படணும்!”

“ஆமால்ல! நான் ஒரு லூசு!” என்று தன் தலையில் அடித்துக் கொண்டவள், ஓ! அப்படி ஒரு ஆஸ்பெக்ட் இருக்கில்ல, அதுவும் சரிதான் அத்தை!” என்றவள்,

“டேய் நீ கிளம்பு, எனக்கு உடனே உன் பொண்டாட்டியைப் பார்க்கணும்!

”சரி, நான் அவங்களை எப்படிக் கூப்பிடுறது!?” அதற்குப் பதிலாக அவள் தலையில் குட்டியவன்,

“மிஸஸ் கௌதம், இல்லை தாரா, இல்லைனா தங்காய்னு இப்படிச் செல்லமா எது வேணாக் கூப்பிடு!!!

“என்ன நீ பேரைக் கூட மாத்திக் கூபுடுற? எனக்கு அவங்க பேர் நல்லா ஞாபகம் இருக்கு! அவங்க பேரு சிந்து! இப்ப நீ மாட்டிக்கிட்டியா?!” என்று அவள் சிரிக்க, மனதிற்குள் லேசாக அதிர்ந்துதான் போனான் கௌதம்.

ஆனாலும் சமாளித்துக் கொண்டவன்,

“பரவாயில்லையே என் பொண்டாட்டியே மறந்து போன பேரை நீ நல்லா ஞாபகம் வச்சிருக்கியே! சிந்துதான், ‘இப்படி பஜ்ஜி, சொஜ்ஜி, புஜ்ஜுமா, பேபிமானெல்லாம் கூப்பிடாம நீயே ஒரு செல்லப் பெர் வச்சுக் கூப்பிட்டுக்கன்னு சொன்னா! முதலில் 'ராதான்னு' சொன்னேன்! போ இது ரொம்ப காமன் பேரு சினிமா நடிகை பேரு மாதிரி இருக்குனு அதை எலிமினேட் பண்ணிட்டா! அந்தப் பேரையே திருப்பிப் போட்டு தாரான்னு சொன்னேன்; அவ்வளவுதான் அந்தப் பேரை அப்படியே ஏத்துக்கிட்டா!”

இப்பொழுது கௌதமிற்குப் பொய் மிகச் சுலபமாய் வந்தது! யாருமே சிந்துவைப் பார்த்ததில்லை என்பது அவனுக்கு மிகப் பெரிய ப்ளஸ் பாயிண்டா இருந்தது. அவன் மறக்க நினைக்கும் இறந்த காலத்தை எந்தத் தடயமுமின்றி முற்றிலுமாகக் கொன்று புதைக்க நினைத்தான். இல்லை தன் சொந்தம் சுற்றதாருக்கு அந்த வாழ்க்கையும் தெரிய வேண்டுமென்றால் பின்னர் பார்த்துக் கொள்ளலாம், என்று தன்னையே தேற்றிக் கொண்டவன்,
அன்று மாலைக்குள் தாரா வீட்டை அடைய நினைத்தான்.

உடனே தன்னிடமிருந்த தாரா வீட்டின் ஸ்பேர் சாவியை எடுத்துக் கொண்டு ஒரு லாப் டாப் பேக் அவன் தோளை அலங்கரிக்க ஒரு காரைப் புக் பண்ணி சென்னை நோக்கித் தன்னம்பிக்கையோடு கிளம்பினான் கௌதம். அந்தக் கார் 100 கிமீ வேகத்தில் சேலம் வழியாக சென்னையை அடைய, பின்னர் சென்னையின் கடல் போன்ற ட்ராஃப்ஃபிக்கைத் தாண்டி, மத்திய கைலாஷ் ரோடெடுத்து ஓ எம் ஆர் சாலை வழியாக அவன் சென்னையில் தாரா வீட்டை அடந்த பொழுது நன்றாக இருட்டி வான மங்கையை நட்சத்திர மீன்கள் அலங்கரிக்கத் தொடங்கியிருந்தார்கள். சாலைகள் முழுவதும் ஒளிரும் விளக்குகள் ஏற்றப்பட்டிருந்தாலும் அவனும் பவியும் இல்லாத தாராவீடு இருண்டுதான் போயிருந்தது! தொடரும்.EKKUM 013.png
 
Last edited:
Thanks a lot for your continuous dear from the start.
அருமை மேம், ஒரு வழியா வந்துவிட்டான் கௌதம்........
அவர்கள் சேர்வதில் எனக்கே மிகவும் சந்தோஷமா இருக்கு
 
Top