எழுத்தாளர் தேவி ஶ்ரீனிவாசன் அவர்களின் ‘தேன் சிந்துமோ மேகம்’

Advertisement

ஓம் ஶ்ரீ சாய்ராம்

#கனவுபட்டறை2026
#தேன்_சிந்துமோ_மேகம்
#வித்யா_விமர்சனங்கள்

💞எழுத்தாளர் தேவி ஶ்ரீனிவாசன் அவர்கள் எழுதிய தேன் சிந்துமோ மேகம்💞

இப்படியும் காதலை உணர்த்தலாம் எனத் தனக்கே உரிய தனித்துவமான பாணியில், வருடித்தரும் மெல்லிய மயில் இறகு எனக் காதல் மற்றும் குடும்பக் கதைகளை எழுதுவதில் கைத்தேர்ந்தவர் இவர். இந்த ஒரு காரணத்திற்காகவே இவர் கதைகளை மிஸ் பண்ணாமல் படித்துவிடுவேன்.

இக்கதையிலும் அதை முழுவதுமாக உணரலாம். இந்த கதைக்கு மேலும் ஒரு தனிச் சிறப்பும் உண்டு.

போட்டியில் பங்கேற்க மலையளவு ஆசை இருந்தபோதிலும், தவிர்க்க முடியாத மற்ற வேலைகளால், எழுத்தாளரால் திட்டமிட்டபடி கதையின் அத்தியாயங்களை எழுதி முடிக்க முடியவில்லையாம். (ஒரு பதிவில் குறிப்பிட்டிருந்தார்). இத்தனை இன்னல்களிலும், மனம் தளராமல் தன் முழு முயற்சியை எடுத்ததோடு மட்டுமில்லாமல், கதையை போட்டிக்கான காலவகாசத்திற்குள் பதிவிட்டும் முடித்திருக்கிறார்.

காலை மாலை நள்ளிரவு என நேரம் காலம் பார்க்காமல் அத்தியாயங்களை மின்னல் வேகத்தில் பதிவிட்டிருக்கும் போதும், கதையின் நகர்வில் தொய்வோ, லாஜிகல் எரரோ, disconnectionஓ கடுகளவு கூட இல்லை. இந்த நேர்த்தி, அவர் எழுத்தின் மேல் கொண்டுள்ள தீரா காதலையே உணர்த்துகிறது என்று சொன்னால் அது மிகை ஆகாது.

எழுத்தாளரே! உங்களின் இந்த விடாமுயற்சிக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.

கதைக்கரு:

பெற்றோர் மெச்சும் பிள்ளையாக, மாணவர்கள் போற்றும் ஆசானாக நற்குணங்களின் குவியலாக நாயகன் எழிலன்.

இத்தனை மென்மையானவனா காதலித்து திருமணம் செய்துகொண்ட மனைவியை வருடக்கணக்காகப் பிரிந்திருக்கிறான் என நம்மை அதிர்ச்சியில் ஆழ்த்தி தொடங்குகிறது கதை.

சரி! சரிபாதி தான் பிரச்சனை செய்திருப்பாள் என அவள் பக்கம் திரும்பினால், வீட்டின் செல்லப்பிள்ளையாக, பொறுமையின் சிகரமாக, அடக்கத்தின் மறு உருவமாக கதைக்குள் நுழைகிறாள் நாயகி நிலவழகி.

கல்லூரியில் நிகழும் ஒரு சம்பவத்தின் தாக்கத்தில், சமாதான கொடி நட முதல் அடி எடுத்து வைக்கிறான் நாயகன். மனம்விட்டுப் பேசிக் கொண்டார்களா இல்லை மனஸ்தாபங்களை வளர்த்துக் கொண்டார்களா என்பதே கதையின் நகர்வு.

இது கதைக்கான விமர்சனம் என்பதை தாண்டி, கதையில் எனக்குப் பிடித்த விஷயங்களை உங்களுடன் பகிர்கிறேன் ஆத்தரே!

எழிலன்:

அனைவரிடமும் தன்மையின் அவதாரமாய் பழகுபவன், மணந்தவளை மட்டும் பொழுதுக்கும் சீண்டுவதும், வம்பிழுப்பதும், அவளிடம் குற்றம் கண்டுபிடித்து வெறுப்பேற்றுவதும் ஏன் என்ற கேள்விக்கு நேரடியாக விடை அளிக்காமல் கதையை க்ளைமாக்ஸ் வரை நகர்த்தியது விறுவிறுப்பாக இருந்தது.

நல்ல எண்ணங்களை எடுத்துச் சொல்வதில் உள்ள அக்கறை, அதை சரியான தோணியில் சரியான நேரத்தில் சொல்வதும் எவ்வளவு முக்கியம் எனப் புரியவைக்கும் மிக இயல்பான கதாபாத்திரம் இவன்.

மாமனாரின் முடிவுகளுக்கு எதிர்த்துப் பேசாமல் விட்டுக்கொடுத்துபோன இடங்களிலும், மனையாளிடம் பயந்து தடுமாறி மன்னிப்பை யாசித்த இடத்திலும் மனத்தைக் கொள்ளை அடித்துவிட்டான்.

நிலா பாடல்கள் பதிவு செய்து அனுப்பியது; பெண்ணவள் காதலிக்கிறாள் என்று தெரிந்தும், அதை தனக்குச் சாதகமாக்கிக் கொள்ளாமல் கண்ணியமாக நடந்துகொண்டது அனைத்தும், உங்கள் தனித்துவமான ‘இப்படியும் காதலை உணர்த்தலாம்!’ எழுத்துநடையை அழகாய் எடுத்துரைத்தது.

கதையின் நாயகன் என்பதற்காக, அவன் செயல்களை நியாயப்படுத்தாமல், கதை முழுக்க அவனை அவனாகவே வலம் வர செய்த உங்கள் எண்ணம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

நிலவழகி:

தங்கக் கூண்டில் பிறந்து வளர்ந்த பெண், முதல் முறையாக கல்லூரி, ஹாஸ்டல் என அகன்று விரிந்திருக்கும் வானில் பறந்தபோதும், தன் சுதந்திரத்தை ஒரு நாளும் தவறான வழியில் பயன்படுத்தாதது அத்தனை அழகாக இருந்தது.

தொட்டதுக்கெல்லாம் அண்ணனிடம் ஓடிச் செல்லும் அவள் இயல்பு, மற்றவர்களையும் மனம் நிறைந்தவனையும் கடுப்பேத்தினாலும், நிஜத்தில் அண்ணன் பாசத்தில் மூழ்கிய வாசகர்கள், அவர்கள் பரிபாஷைகளில் மெய்சிலிர்க்கவே செய்வர்.

தன்னவன் குரூப்பில் அனுப்பும் பொதுவான மெசேஜுக்கும், வாட்ஸ் ஆப்பில் வைக்கும் ஸ்டேடஸுக்கும் உருகும் பாவை, எத்தனை வெள்ளந்தி மனம் படைத்தவள் என எடுத்துக்காட்டியது.

கணவனிடம் கங்கணம் கட்டிக்கொண்டு நிற்காமல், அவன் ‘என்னோட வருவாயா!’ என்று உருகிய மறுநொடியே உவந்து சம்மதித்த நிலவழகியின் குணம் கொண்ட பெண்களை நிஜத்தில் காண்பது அரிது. She is someone very special.

வண்ணம் (கோபம்) கொண்ட வெண்ணிலவே;
வானம் (அண்ணன்) விட்டு வாராயோ!

என எழிலன் பாடி அனுப்பியிருந்தால் கூட வந்திருப்பாள் அவள். கணவரிடமிருந்து ஒரு குறுஞ்செய்தி வராதா என அத்தனை ஏக்கம் வழிந்தோடியது அவள் பிரிவில் வாடிய காட்சிகளில்.

மஞ்சு குட்டி:

வயதுக்கே உரிய கள்ளம் கபடமில்லாத உள்ளம். தாய் தந்தை, பாட்டி, தாத்தா, மாமா என அனைவரிடமும் பாரபட்சம் இல்லாமல் பாசம் பொழியும் அவர்கள் வீட்டின் தேவதை.

தந்தையின் குரலில் துயில் கொள்ளும் அவள் காட்சிகள் அத்தனையும் ரசனையாக இருந்தது.

குட் மார்னிங், காலை வணக்கம் என்ற அவள் பலவகையான வணக்கங்களுக்குப் பின்னிருந்த காரணத்தை கற்பனை செய்து எழுதிய உங்கள் பாங்கு சூப்பர்.

நிலவன்:

நீங்கள் ஆயிரம்தான் இவனை பாசக்கார வில்லனாகச் சித்தரக்க முயன்றாலும், கதை முழுவதும் அவன் என் கண்களுக்குப் பாசக்கார அண்ணனாக மட்டும்தான் தெரிந்தான்.

எழிலனுடன் அவன் சண்டைக்குப் பாய்ந்த ஒவ்வொரு சூழ்நிலையிலும், ‘நிலவன் பக்கம்தான் நியாயம் இருக்கிறது!’ என ஜால்ரா அடிக்கும் அளவிற்கு வசீகரித்துவிட்டான் ஆத்தரே.

நிலவன்போல சகோதரன் அமைவது எல்லாம் வரம் என்று மட்டும்தான் சொல்லவேண்டும்.

பாஷா பாய் என்ற அடைமொழி இவனுக்கு மிகப் பொருத்தம். டான்னாக இல்லை: டன் டன்னாக அன்பு பொழியும் சூப்பர் ஸ்டாரின் சகோதரப் பாசத்துக்கு ஒப்ப!

துணை கதாபாத்திரங்கள்:

💞இருவரின் பெற்றோர்; எழிலனின் பாட்டி தாத்தாக்கள்,அனைவரின் பங்கும் வெகு ரசனையாக இருந்தது.

இளையவர்கள் பிரிய பெரியவர்கள் யாருமே காரணம் இல்லை என அறிந்தபோது வாவ் என்று சொல்லத்தோன்றியது.

இருபதுகளின் தொடக்கத்திலேயே கல்யாணம், குழுந்தை எனப் பொறுப்புகள் கூடிவிட்டிருக்க, நிலவழகி சுதாரித்துக்கொள்ள காலமும் நேரமும் அவசியம் என அவள் நலனைக் கருத்தில் கொண்டு யோசித்த பெரியவர்களின் எண்ணம் அவர்களின் நற்குணத்தை எடுத்துக்காட்டியது. That reason and scene was splendid.

அதேமாதிரி, அனைவரும், வீட்டில் நடக்கும் பிரச்சனையை குழந்தையின் கவனத்திற்கு கொண்டு வராமலேயே தீர்வு கண்டுபிடிக்க மெனக்கெடுவதாக கதையை திட்டமிட்ட உங்கள் எண்ணம் அபாரம்.

💞பேரன் மனத்தைத் துல்லியமாக கண்டுகொண்ட வள்ளி ஆச்சியின் presence of mind and alertness வேற லெவல்.

💞எழிலனின் அன்னை மருமகளிடம், ‘ரெண்டு நிலாவும் எப்போது நம்ம வீட்டுக்கு வரப்போகுறாங்க,’ ஜாடையாக கேட்ட இடம் மெய்சிலிர்த்தது.

💞ஆதிரா கேரக்டர் ரசனையாக இருந்தது. கணவன் மனைவி பஞ்சாயத்தில் மூக்கை நுழைக்கிறோம் எனத் தெரியாமலேயே அவள் மூக்கை உடைத்துக்கொண்ட இடங்களில் சிரித்துக்கொண்டே படித்தேன்.

💞வந்தனா மூலம், மாணவர்களுக்கு இடையே மலரும் காதலுக்கும், ஆசிரியர் மாணவர் இடையே மலரும் காதலுக்கும் உள்ள வித்தியாசங்களை அழகாய் வலியுறுத்திருக்கீங்க.

வசீகரமான வர்ணனைகள் & எழுத்துநடை:

💞வரலாறு சார்ந்த கல்லூரி படிப்பு பற்றி நிறைய நிறைய தகவல்களை கதையின் ஓட்டத்தில் இணைத்திருப்பது அசத்தல். வரலாறு துறையில் சாதிக்க நினைக்கும் வாசகர்களுக்கு பெரும் inspiration ஆக இருக்கும்.

💞கல்லூரியில் ஒழுக்கம்; பாதுகாப்பு; ஆரோக்கியமான நட்பு; ஏற்கக்கூடிய கூடாத காதல் எனப் பல்வேறு முக்கிய விஷயங்களை கலை நிகழ்ச்சிகள் நடக்கும் காட்சிகளிலும், வகுப்பறைகளிலும் அழகாய் இணைத்துள்ளீர்.

💞எஸ்.பி.பி பாடல்கள் என்றால் யாருக்குத் தான் பிடிக்காது. அதிலும் நடனம் சார்ந்த மற்றும் அரிதான நிலா மெட்டுக்களைத் தேடித் தேடி காட்சிகளில் இணைத்திருக்கிறீர்கள். எத்தனை மெனக்கெட்டு இருப்பீர்கள் என ஒவ்வொரு பாடலும் அதையொட்டி வந்த தோதான காட்சிகளும் பறைசாற்றுகின்றன. பாடும் நிலா பாலு உங்கள் கதையைப் படித்திருந்தால் நெக்குருகிப் போயிருப்பார்.

💞கிராமத்து வாழக்கைமுறை, நகரத்து வாழ்க்கைமுறை, தலைநகரத்து வாழ்க்கைமுறை என மூன்றின் அம்சங்களையும் அழகாய் கண்முன் நிறுத்தியது உங்கள் எழுத்துநடை.

💞வசிக்கும் இடம், தமிழ் உச்சரிப்பில் உள்ள வேறுபாடுகள், பழக்க வழக்கங்கள் என ஒவ்வொன்றையும் உள்வாங்கினேன், உங்கள் தெளிந்த நீரோடை எனத் தவழ்ந்த மூன்று ஊர்களின் காட்சி அமைப்புகளில்.

💞புல்லட், ஸ்கூட்டி கூட உயிர்ப்பித்து உலா வந்தது உங்கள் அசாதாரண கற்பனையில்.

💞சிணுங்கும் கைப்பேசியிலும், கொஞ்சிப் பேசும் குறுஞ்செய்திகளிலும் மெல்ல வளர்ந்த இவர்கள் காதலைப் படிக்க அத்தனை ரம்மியமாக இருந்தது.

💞மாமன் மச்சான் மனம் தெளிந்து உறவாடுவதை, மளிகை கடை வியாபாரத்தில் மறைமுகமாக உணர்த்திய உங்கள் பாங்கு சூப்பரோ சூப்பர்.

💞கணவன் மனைவி பிரிவு என்றாலே சோகம், அழுகை, விரக்தி எனக் காட்சிபடுத்தாமல், தம்பதிகள் பிரிந்திருந்தபோதும், காலம் பதில் சொல்லும் என்ற மனத்திடத்துடன், தங்கள் கவனத்தை மேற்படிப்பில் செலுத்தி தங்களுக்கென அடையாளம் வளர்த்துக் கொண்டிருக்கின்றனர் எனப் படிக்க அத்தனை மனநிறைவாய் இருந்தது.

💞கதையின் முக்கிய காட்சியை அட்டைப்படமாக வடிவமைத்து, எங்கள் கண்களுக்கும் விருந்து படைத்துவிட்டீர்கள்.

Moral of the story:

காதல் என்பது காதலியிடம் கொண்டுள்ள நேசம் மட்டுமல்ல; காதலியின் உணர்வுகளையும் உறவினர்களையும் ஆத்மார்த்தமான புரிதலுடன் ஏற்றுக்கொண்டு, தன்னுடைய சொந்த விருப்பு வெறுப்புகளுடன் balance செய்து வாழ்வதே உன்னதமான காதல் என உணர்த்தும் விதமாக அழகிய கதை படைத்த உங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

என்றும் அன்புடன்,
வித்யா வெங்கடேஷ்
 

Advertisement

Advertisement

Back
Top