Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கடல் நீ கரையும் நீ -32

Advertisement

Geetha Boopesh

Well-known member
Member
அத்தியாயம் -32

அவள் கொண்டு வந்த ஆடைகள் எல்லாம் அழுக்கும் ஈரமுமாய் இருக்க ப்ரித்வியின் டீஷர்ட்டும் டிராக்கும் தான் அணிந்திருந்தாள்.

ஸ்ரீஜாவின் உடைகள் அவன் எடுத்து தர .. "வேண்டாம் ப்ரித்வி. அவங்களுக்கு நான் அவங்க டிரஸ் யூஸ் பண்றது பிடிக்குமோ பிடிக்காதோ . நான் என் ட்ரெஸ்ஸையே கொஞ்சம் காய வச்சு போட்டுக்கிறேன். " என்று கூறினாள் சம்யு . அவனது தாயும் தங்கையும் தான் எவ்வளவு பாகுபாடு பார்ப்பார்கள் என்பது அவள் அறிந்ததாயிற்றே !

அதை சொல்லும்போதே நிச்சயத்தன்று அவர்கள் பேசியதும் நினைவில் ஆட, ஏற்கனவே அக்கா அத்தானை காதலிப்பதையே ..அவ்வளவு கேவலமாக பேசினார்கள்.. மயக்கிவிட்டாள்.. வலை விரிப்பு என்றெல்லாம் பேசியிருக்க ..இப்போது தங்களுக்குள் மலர்ந்திருக்கும் இந்த நேசத்திற்கு என்ன மதிப்பிருக்குமோ என்ற கவலை மனதை ஆட்கொள்ள.. அவளது உடையை அணிய மறுத்துவிட்டாள்.

பின் அவளாகவே அவனது அலமாரி திறந்து அவனது உடையை எடுத்து அணிய.. அதை பார்த்தவனுக்கு உள்ளுக்குள் ஜிவ்வென்றிருந்தது.

அவளை மேலிருந்து கீழாக அடிக்கடி பார்வையிட .. பாவைக்குள் வெட்கம் கோட்டை காட்டியது.

அவளுக்கு பாலில் கார்ன் பிளெக்ஸ் போட்டு எடுத்து வந்தவன் " ரோடு சரியாயிடுச்சி. இன்னும் கொஞ்ச நேரத்தில் நாம் கிளம்பிவிடலாம் . உன் திங்ஸ் பேக் பண்ணிக்கோ " என்று கூற ஒருபுறம் ஊருக்கு செல்லும் நிம்மதி ஏற்பட்டாலும்.. அவனோடான தனிமை இன்னும் சில மணிநேரங்கள் தான் என்று மனதோரத்தில் ஒரு கலக்கமும் ஏற்பட .. கூம்பிய முகத்துடன் சென்று தன் பெட்டியை கட்டினாள் சம்யு .

காரில் தங்கள் பொருட்களை வைத்தவர்கள் வஜ்ரவேலுவிடம் சொல்லிக் கொண்டு கிளம்ப ..கார் மெல்ல மலையை விட்டு கீழிறங்கி கோவையை நோக்கி சென்றது.

அலைபேசியை எடுத்தவன் "பக்கத்துல வந்துட்டேண்டி .. இன்னொரு டென் மினிட்ஸ் ..கொஞ்சம் வெய்ட் பண்ணு. கோவிச்சுக்காத " என்று கனிவு பொங்க சொல்லவும் ..சம்யுவுக்கு ஏதோ ஒரு மயக்கத்தில் இருந்து வெளிவந்தாற்போல் இருந்தது. இதை எப்படி மறந்தேன்?

யாரோ ஒரு பெண்ணை பார்க்க தானே ..இவன் ரயிலில் இருந்து இறங்கி போனான். இப்போது மறுபடி அவளை சந்திக்க தான் போகிறானா ?

அப்படியானால் இந்த மூன்று நாட்கள் அவன் தன்னிடம் நடந்தது கொண்டதெல்லாம் பொய்தானா ? நொடியில் உலகையே சுற்றி வந்துவிடும் மனமாயிற்றே! ஏதேதோ எண்ணி தவித்தது.

யாரை காண போகிறான் என்று கேட்டுவிட்டால் முடிந்துவிடும். அக்கேள்வி தொண்டையிலேயே சிக்கிக் கொண்டுவிட .. அவனிடம் கேட்க முடியவில்லை.

அவள் ஓரிரு முறை திரும்பி பார்ப்பதை கவனித்தவன் " என்ன சம்யு ?" என்று வினவ ..'ஒன்றுமில்லை' என்பதாய் அவளது தலை ஆடியது.

'யாராவது கேள் பிரெண்டை பார்க்க போயிருப்பான் ' என்று அன்று எண்ணியது இப்போது அசம்பாவிதமாய் நினைவு வந்தது.

'உண்மையாகவே கேள் பிரெண்டாக இருக்குமோ ?' மனம் அலைபாய்ந்து கொண்டிருக்க .. ஒருவழியாக கேட்டே விட்டாள் " யாரை பாக்க போறோம் ப்ரித்வி ?"

" என்னோட க்ளோஸ் பிரென்ட்... என் வாழ்க்கைல எல்லா தருணங்கள்லயும் என் கூட இருந்தவ .. என்னோட பெஸ்ட்டின்னு சொல்லலாம் " என்று கூற ..இவளுக்கு உள்ளுக்குள் லேசான பொறாமை முளைத்தது.

முகத்தை உர்ரென்று வைத்துக் கொள்ள அதை பார்த்தவனுக்கு சிரிப்பு பொங்கியது.

கார் அரசு மருத்துவமனை வளாகத்தின் வாயிலில் சென்று நிற்க .. வாசலில் நின்றிருந்த உமையாளை கண்டதும் அவ்வளவு நேரம் குழம்பியதெல்லாம் மறந்து புன்னகை மலர்ந்தது சம்யுவின் இதழ்களில்.

"உமையை தான் பாக்க போறோம்னு சொல்றதுக்கென்ன ?" என்று செல்லமாய் அவன் தோளில் தட்ட ..அதை பார்த்துக் கொண்டே காரில் ஏறி அமர்ந்த உமைக்கு.. அவர்களுக்குள் இருந்த நெருக்கம் சட்டென்று புலப்பட்டது. சிறு வயதில் இருந்து அவனை உள்ளும் புறமுமாக அறிவாளல்லவா!

"ஹாய் மச்சான் . ஹை சம்யு "

உமை நிச்சயத்தில் வைத்தே நன்கு பேசியிருந்தாள் சம்யுவிடம் . அதனால் சம்யுவிற்குள்ளும் பெரிதாக தயக்கம் இல்லை.
"என்னடா புயலை கூட்டிட்டு போய் ஊட்டியையே பரபரப்பாக்கிட்டியே "
"ஆனாலும் நீ சம்யுவை புயலுனெல்லாம் சொல்ல கூடாது உமை " என்று இருவரையும் கோர்த்துவிட

அவன் தோளில் செல்லமாக ஒரு அடி வைத்தவள் .." சம்யுக்தா அப்படியெல்லாம் நினைக்க மாட்டாங்க. நான் எந்த புயலை சொன்னேன்னு அவங்களுக்கு தெரியும் " என்றவள் "அப்புறம் மச்சான் காங்கிரேட்ஸ் டா " என்று நமட்டு சிரிப்போடு சொல்ல

அவள் எதற்கு வாழ்த்துகிறாள் என்று புரிந்தாலும் இன்னும் தான் வாய்விட்டு தன்காதலை சொல்லவில்லையே ! அதனால் ப்ரித்வி அமைதியாக அமர்ந்திருக்க ..சம்யுவோ " என்ன ப்ரித்வி எதுக்கு வாழ்த்துறாங்க ? என்கிட்டே சொல்லவேயில்லை ?" எனவும் விழிகளாலேயே உமையிடம் கெஞ்சியவன் ..
"ஒன்னும் இல்லை சம்யு. நம்ம ரெண்டு பெரும் போட்ட சண்டையெல்லாம் அவளுக்கு தெரியும். இப்போ நம்ம சமாதானமாயிட்டோம்ல அதுக்குதான். " என்று மழுப்ப ..

" ஓ ..உங்களுக்கும் தெரியுமா ? இவன் எப்பப்பாரு என்கிட்டே சண்டை போட்டுக்கிட்டே இருப்பான் . ரெண்டு நிமிஷம் கூட நாங்க அமைதியா பேசிக்கிட்டதா சரித்திரமே இல்லை. இந்த மூணு நாள் எப்படி தான் சண்டை போடாமல் இருந்தோம்னு நினைச்சு பார்த்தா எனக்கே மலைப்பா இருக்கு."

அவனை லேசாக திரும்பி பார்த்தவள் விழிகள் மின்ன " பட்.. இப்போ அவனோட நல்ல குணங்கள், பொறுமை இதெல்லாம் எனக்கு நல்லாவே புரிஞ்சிடிச்சி. " என்று கூற .. தோள்களை குலுக்கி ப்ரித்வி சிரிக்க .. 'நடத்து நடத்து ' என்பதாய் உமை சைகை செய்ய .. மதிய உணவை முடித்தவர்கள் கலகலப்பாக பேசியபடி உண்ண..சம்யுவிற்கும் உமையை வெகுவாக பிடித்து போனது.

இங்கு வரும்போது யோசித்தாள் .. 'அப்படி என்ன அந்த பெண்ணை பார்க்க வேண்டியிருக்கு ? மூன்று நாள் முன்பு தானே சந்தித்தான்? இப்போது மறுமுறை பார்க்காவிட்டால் என்ன ? அதுவும் தனக்கும் அவனுக்கும் வாய்த்திருக்கும் தனிமையான இந்த பொழுதை கெடுத்துக் கொள்ள வேண்டுமா?' என்று தான் தோன்றியது.

ஆனால் அவளை சந்தித்தபின் அவள் ப்ரித்விக்கு எவ்வளவு முக்கியம் என்று புரிந்து போக .. தனக்கும் அவள் முக்கியமானவள் தான் என்று மனதில் பதித்துக் கொண்டாள்.

இவர்கள் உணவுண்டு பின் உமையை மருத்துவமனையில் இறக்கி விட்டு கிளம்ப கார் சென்னை நோக்கி சென்றது. மிதமான வேகத்தில் சென்று கொண்டிருக்க ..இவளுக்கோ இந்த பயணம் முடிவடையாமல் இப்படியே தொடராதா என்றிருந்தது.

சென்னையை நெருங்கியிருக்க ஏதேதோ ஸ்வீட் நத்திங்ஸ் பேசியபடி நேரம் ஓடிக் கொண்டிருக்க .. தங்களை குறித்து மட்டுமல்லாமல் தங்கள் குடும்பத்தினர் குறித்தும் பேசினர்.

" உனக்கு தெரியுமா ப்ரித்வி ? எப்போ எந்த குடும்ப விழாக்களுக்கு போனாலும் .. ஒரு சிலர் இருப்பாங்க. ' எப்போ உன் ப்ரித்விராஜன் வரப்போறான் சம்யுக்தான்னு ' மொக்கையா கேள்வி கேப்பாங்க .. எனக்கு கோவமா வரும்" என்றதும் அவனுக்கும் நிச்சயத்தில் ஒருவர் அப்படி கேட்டது நினைவு வர " ஆமாம் .. அண்ணன் அண்ணி நிச்சயத்தில கூட அப்படி கேட்டாரில்ல ஒருத்தர் ?'

"அன்னிக்கு மட்டும் அக்காவோட விழாவா இல்லாம இருந்திருந்தால் அவர் தலைல இருந்த நாலே முடியையும் ஆய்ஞ்சு எடுத்திருப்பேன். " என்று கூற .. ப்ரித்வியின் அலைபேசி ஒலித்தது.

புளுடூத்தில் கனெக்ட் செய்யப்பட்டிருக்க, ஸ்பீக்கரில் ஒலித்தது சிவரஞ்சனியின் குரல்.
"ப்ரித்வி நல்லா இருக்கியா ? சென்னைக்கு எப்போ வறீங்க ?"
"வந்திட்டே இருக்கோம் மேம் நானும் சம்யுவும் .. அவகிட்ட பேசுங்க ..ஸ்பீக்கரில் தான் இருக்கு " என்று சொல்ல ..

"சாரி சம்யு.. என் வீட்டுக்காரருக்கு உடம்பு சரியா இருந்திருந்தால் நானே ஊட்டி போயிருந்திருப்பேன் . என்னாலே நீ கஷ்டப்பட வேண்டியிருந்திருக்காது"

"சாரியெல்லாம் எதுக்குக்கா ?இப்படியெல்லாம் நடக்கும்னு யாருக்கு தெரியும் ? எனக்கெந்த கஷ்டமும் இல்லாம ப்ரித்வி பாத்துக்கிட்டான் . நீங்க கவலை படாதீங்க "

"ஓஹ்.. அப்போ நீங்க ரெண்டு பெரும் சமாதான மாயிட்டீங்கன்னு சொல்லு "

"சமாதானமாகறதுக்குதானே நீங்க நல்லா இருக்க அண்ணனுக்கு உடம்பு சரியில்லைன்னு பொய் சொல்லி கழண்டுக்கிட்டிங்க?"

தூக்கி வாரி போட.. காரை ஓரங்கட்டி நிறுத்தினான் ப்ரித்வி.

"இவன் உங்களை கழண்டுக்க சொல்லி கேட்டிருப்பான் . நீங்களும் நம்மால் முடிஞ்ச சமூக சேவைன்னு நெனச்சு செஞ்சிருப்பீங்க . கரெக்ட்டா ?"

"எப்படி தெரியும் சம்யு ?" என்று ஈனஸ்வரத்தில் சிவா கேட்க ..

"இந்த மூணு நாள் டூரு போனீங்க சரி! அதை இன்ஸ்டால ரீல்ஸ் போட்டீங்களே .. உங்களுக்கே நியாயமா இருக்கா ?" என்று நக்கலடிக்க ..தலையில் கைவைத்து ப்ரித்வி அமர்ந்துவிட .. அதை பார்த்ததும் சிரிப்பு பொங்கியது சம்யுவிற்கு.

"வளரும் வழக்கறிஞர்னு நிரூபிக்கிற சம்யு " என்று சிரித்தபடி சிவரஞ்சனி அழைப்பை துண்டிக்க .. காரை கிளப்பாமல் அப்படியே அமர்ந்திருந்தான் ப்ரித்வி.

"என்ன ப்ரித்வி ?" என்றவள் கேள்விக்கு பதிலளிக்காமல் கீழே இறங்கியவன் .." கொஞ்சம் கீழே இறங்கு சம்யு" எனவும் அவளுக்கு ஒன்றும் புரியவில்லை .
எதற்கு நடுவழியில் இறங்க சொல்கிறான்..அதுவும் சுற்றிலும் காடு போல் மரங்கள் அடர்ந்திருக்க அவ்வபோது வாகனங்கள் மட்டும் கடந்து சென்றன .

பாதியில் இறக்கி விட்டு விடுவானோ என்று நினைக்க.. தன்னையே மானஸீகமாகி குட்டிக் கொண்டாள்.

' சே சே .. ப்ரித்வி அப்படியெல்லாம் செய்யவே மாட்டான். இவ்வளவு நாட்கள் அவனை பற்றி தெரியவில்லை. அவனை உள்ளும் புறமுமாய் நன்கு அறிந்தபின் இப்படி நினைப்பது ரொம்ப தப்புடி சம்யு' என்று அவள் மனசாட்சியே அவளை திட்டி தீர்க்க ..

இவள் புறம் வந்து காரின் கதவை திறந்தவன் சீட் பெல்ட்டை விடுவித்து இவள் கை பிடித்து இறக்கியவன் ..பின் கதவை திறந்து இவளை உள்ளே தள்ளி தானும் உடன் ஏறிக் கொண்டான்.

அவள் அருகே அமர்ந்தவன் அவளது கன்னத்தை இரு கரம் கொண்டு தாங்கி அவளது விழிகளுக்குள் ஆழ்ந்து நோக்க ..மங்கைக்கு உலகமே மறந்தது.

"சம்யு .. கொஞ்ச நாளாவே எனக்குள்ள ஒரு மாற்றம்.. இத்தனை வருடங்களா உன்னை பார்க்கும் போது தோன்றாததெல்லாம் இந்த சில நாள்ல தோணுது.. உன்னை எப்பவும் பாத்துக்கிட்டே இருக்கணும்.. உன் கூட நேரம் செலவழிக்கணும்.. உன் கண்களுக்குள்ள பாத்து பேசிக்கிட்டே இருக்கணும்.. உன் கைய விடாமல் பிடிச்சிக்கணும் .. அப்பிடின்னெல்லாம் தோணுது" என்றவன் , அவளது கரங்களை தன் கைகளுக்குள் பொதித்து " எப்பவுமே உன் கைகள் என்னோடு கோர்த்திருக்கணும்னு விரும்பறேன் சம்யு.. வாழ்க்கை முழுசும் .. எப்பவுமே உன்னை பிரியாமல் இருக்கணும்.. வாழ்விலும் சாவிலும்... " என்றதும் தானாக சம்யுவின் கரங்கள் அவன் வாய் பொத்த.. விழிகள் கலங்க நின்றாள் சம்யு.

"வாழறதை பற்றி மட்டும் பேசு ப்ரித்வி.. எனக்கு உன்கூட நூறு வருஷம் வாழணும்னு ஆசையாயிருக்கு " என்று தன் மனதை பட்டென வெளிப்படுத்த .. அதற்குமேல் தவிப்பை அடக்க முடியாதவனாய் 'ஐ லவ் யு சம்யு.. ஐ லவ் யு வித் மை ஹோல் ஹார்ட் " என்றவன் அவளை இழுத்து அணைத்து இதழில் கதை எழுத , மங்கையவளும் மீள முடியாமல், மீள விரும்பாமல் அந்த முத்த சுழலில் சிக்கிக் கொண்டாள்.

நொடிகளா நிமிடங்களா என்றறியாமல் நீண்டு கொண்டிருந்த முத்தம் இருவரையும் வேறு உலகத்திற்கே இட்டு செல்ல .. அதை கலைப்பது போல் இருவரது பேசிகளும் ஒரு சேர ஒலிக்க .. பிரிய மனமின்றி இதழ்கள் தயங்க ..அலைபேசிகளோ விடாமல் அடித்தன.

"இந்த மொபைலை கண்டு பிடித்தவன் மட்டும் என் கையில் கிடைச்சா ?"' என்று பல்லை கடித்தபடி ப்ரித்வி அலைபேசியை எடுத்து பார்க்க .. அழைத்தது இருவரது உடன்பிறப்புகள் தான். இவர்கள் போனை கையில் எடுக்கையிலேயே மறுமுறை ரிங் டோன் ஒலிக்க .. எடுத்து காதில் வைத்தவர்களுக்கு இடி விழுந்தாற்போல் இருந்தது.. மறுமுனையில் பேசியதை கேட்டு.

"நாங்க பிரேக்கப் பண்ணிட்டோம் " என்றனர் அம்ரிதாவும் ரஞ்சித்தும் .
 
Top