Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கண்ணாமூச்சி ஏனடா!-12

Advertisement

Banupriya "பா.ரியா"

Well-known member
Member
அத்தியாயம் -12


அந்த அம்மன் கோயில் திருமணம் நிறுத்தப்பட்டு அன்றோடு ஒரு வாரம்.
ஒரு அடியோடு இழுத்து வரப்பட்ட மதுபாலாவுக்கு வீட்டில் அடி உதை இலவசமாக கிடைத்தது. போனஸாக மித்ராவுக்கு ஒரு அறை கிடைத்தது.

" ஐயோ என்னங்க இது.. வயசுக்கு வந்த புள்ளையை போட்டு இந்த மிதி மிதிக்கிறிங்க.." பாமா குறுக்கே விழுந்து தடுத்துப் பார்த்தார். ஐராவதத்தின் மிதிகளுக்கு அவரும் சிக்கத்தான் நேர்ந்தது. கூடவே மித்ராவுக்கும் இரண்டு அறைகள். வருண் சுவரோடு பல்லி போல ஒட்டிக்கொண்டு நடப்பதை பார்த்து பேந்த பேந்த விழித்துக்கொண்டு இருந்தான்.

" ஓடி போற அளவு உனக்கு தைரியம் வந்துருச்சா..? நல்லநேரம் சரியான நேரத்துக்கு அங்க போனேன்.. இல்லனா என்ன ஆகியிருக்கும்.. நம்ம குடும்ப மானத்தை கப்பலேத்தவே வந்துருக்கா.. எவ்வளவு நெஞ்சழுத்தம் உனக்கு.." இன்னும் ரெண்டு உதை விழுந்தது.

" அப்பா..! அக்கா என்ன செஞ்சிட்டானு இப்படி பண்றிங்க.." எதிர் கேள்வி கேட்ட மித்ராவை பார்வையால் சுட்டெரித்தார் ஐராவதம்.

" என்ன தப்பா.. யாருடீ உங்களுக்கு இவ்வளவு தைரியம் தந்தது..? நீதான் அவளுக்கு சப்போர்ட்டா..? வீட்டை விட்டு வெளிய கால் வைங்களே.. இருக்கு உங்களுக்கு.. அவனவன் கடனை கிடனை வாங்கி பெத்த பொண்ணுங்களை படிக்க வைக்கிறதுக்குள்ள வாயில நுரை தள்ளிடுது. உங்களை படிக்க வச்சி, சீதனம் கொடுத்து நல்ல இடத்துல கட்டி கொடுக்கிறதுக்குள்ள எவ்வளவு பாடுபட வேண்டியதா இருக்கு தெரியுமா? இதெல்லாம் உங்களுக்கு எங்க புரிய போகுது.. உங்களுக்கு உங்க சந்தோஷம் முக்கியம்.. அதானே..."
மித்ரா அமைதியாக இருந்தாள். தந்தையிடம் எதுவும் பேசி ஜெயிக்கக்கூடிய நிலையில் தான் இல்லை என்று உணர்ந்தாள். ஆனால் அந்த நாள் ஒருநாள் வரும் என அவளுக்கு தெரியும்.

" பெத்த வயறு பத்தி ஏறியுதுடி.. ஓடிப் போறாளாம்.. வெளிய போய் பாரு.. உலகம் எப்படிப்பட்டதுனு தெரியும். கல்யாணத்தை பண்ணிக்கிட்டு குடும்பம் நடத்தி பார்த்தா தெரியும் எங்க கஷ்டம்.. அவன் கூப்பிட்டா அப்படியே போயிடுவியா..? என்ன ஜாதியோ எவனோ.." ஐராவதத்தின் பேச்சு குறைந்தபாடில்லை.

வீடே ரணகளமாகி இருந்தது. அக்கம் பக்கத்தவர்கள் வாய்க்கு மென்று தின்ன நல்ல அவல் கிடைத்தது.

அன்றிலிருந்து மதுபாலா அறைக்குள் சிறை வைக்கப்பட்டாள். சங்கமித்ரா கெஞ்சி கூத்தாடி காலேஜ் சென்று வர அனுமதி பெற்றாள். அதுவும் அவள் வெகுவாக கண்காணிக்கப்பட்டாள்.

அந்த சமயத்தில் தான் ஐராவதம் மதுபாலாவுக்கு அந்த வரனை கொண்டு வந்தார். ஹேமந்த் குமார்.
அவன் ஒரு சேல்ஸ் ரெப். ஒரு மருந்து கம்பனியில் வேலை செய்தான். ஒருவழியில் ஐராவதத்தின் தூரத்து சொந்தம். நெடுநெடுவென வளர்ந்து கிடந்த அவன் அமாவாசை நிறம். முன்பல் கொஞ்சம் துருத்தி கொண்டு இருக்கும். கண்களை சுற்றி கிடந்த பள்ளத்தை அவன் போட்டிருந்த லேட்டஸ்ட் சோடாபுட்டி மறைத்தது. மதுபாலாவுக்கு அவனை பிடிக்கவேயில்லை. மறுத்தாள்.

" என்னது பிடிக்கலையா..? கொலை விழும். நீ செஞ்ச காரியத்துக்கு மாப்பிள்ளை வரிசையா வந்து நிற்பாங்க பாரு.. ஓடி போனவ தானே உன் பொண்ணுன்னு என் காதுபடவே பேசுறாங்க.. எந்த மூஞ்சை வச்சிக்கிட்டு போய் சம்பந்தம் பேச முடியும்? ஏதோ நம்ம நல்ல நேரம் உன் கதையெல்லாம் தெரிஞ்சும் கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டாங்க அவங்க வீட்ல.. இதைவிட நல்ல சம்பந்தம் நமக்கு கிடைக்காது. உனக்கு அப்புறம் மித்ரா இருக்கா.. அவ வாழ்க்கை உன் கைல தான் இருக்கு.. யோசிச்சு நடந்துக்க.." என்று கடைசியாய் ஒரு அஸ்திரத்தை வீசிவிட்டு போனார் ஐராவதம்.

பாவம் மதுபாலா. அவளால் என்ன செய்ய முடியும். அவள் ஒரு வாயில்லா பூச்சி. அதிகம் சிந்திக்கத் தெரியாத பூச்சி. தன்னால் தன் தங்கை வாழ்க்கைக்கு பின்னாளில் ஏதேனும் பிரச்சினை முளைக்க கூடாது என்று தலையாட்டினாள்.

இந்த இடைவெளியில் மதுபாலாவுக்கு தாலி கட்ட வந்துவிட்டு தர்ம அடி வாங்கி ஆஸ்பத்திரியில் கிடந்த லஷ்மிகாந்த்தை காலேஜுக்கு கட் அடித்துவிட்டு ரகசியமாக பார்க்க போனாள் மித்ரா.

" மதுவை எங்கயாவது கூட்டிகிட்டு போயிருங்க.." என்று இவள் கேட்க, ' உங்க சங்காத்தமே வேண்டாம்..' என்று கால் எழும்பு முறிந்த அவன் கையெடுத்து கும்பிட்டான். மித்ரா எவ்வளவோ முயன்றும் அவன் ஒத்துக்கொள்ளவேயில்லை. அந்த கோழையை ஒருவித வெறுப்போடு பார்த்துவிட்டு வந்தவளுக்கு மதுபாலா கல்யாணத்துக்கு ஒத்துக்கொண்ட செய்திதான் சுடச்சுட கிடைத்தது.

அவளோடு பேசிப்பார்க்க எதுவும் இருக்கவில்லை மித்ராவுக்கு. காரணம் இரண்டு. ஒன்று லக்ஷ்மிகாந்த் கையை விரித்தது. இரண்டாவது மதுபாலாவுக்கு சின்ன வயதில் இருந்தே அப்பாவின் வாக்கு வேத வாக்கு. அவர் பேச்சுக்கு மறுபேச்சு பேச அவளது வாய் தயங்கும். தடை செய்யும். அதனால் அவளோடு மல்லுக்கட்ட மித்ரா விரும்பவில்லை. ஆயினும் அவசரப்பட்டு இப்படி ஒரு இத்துப்போனவனுக்கு கழுத்தை நீட்ட வேண்டாம் என்று எவ்வளவோ சொல்லிப் பார்த்தாள். ம்ஹூம். அவள் கேட்பதாயில்லை. பல்லை கடித்துக்கொண்டு திருமணத்துக்கு தயாராகிவிட்டாள் மித்ராவும்.

அந்த திருமண ஏற்பாடுகள் எதிலும் தான் கலந்து கொள்ளாமல் இருந்தது எத்தனை பெரிய தவறு என்று பின்னாளில் தான் மித்ரா உணர்ந்து கொண்டாள். ஏனெனில் மதுபாலா திருமணம் முடிந்து அந்த நெடுநெடு ஹேமந்த் குமாருடன் துபாய் செல்லவிருந்தது திருமணத்துக்கு இரண்டு நாட்களுக்கு முன் தான் தெரியவந்தது மித்ராவுக்கு. ஆம். ஹேமந்த் குமாருக்கு துபாயில் ஒரு மருந்து கம்பனியில் வேலை கிடைத்திருந்தது. அது மதுபாலா வந்த நேரம் என்று அவர்கள் குடும்பம் நம்புவதாக தகவல் வேறு. அந்த பாராட்டில் மதுபாலாவும் கொஞ்சம் குளிர்ந்து தான் போனாளோ என்னமோ? ஏனெனில் அதுவரை முகத்தை தொங்கப்போட்டுக் கொண்டு இருந்த மதுபாலாவின் முகம் திடீரென உற்சாகமாக இருந்ததாக தென்பட்டது மித்ராவுக்கு. அவளால் அக்காவுக்காக பரிதாபப்படதான் முடிந்தது. இருந்தும் மீண்டும் ஒரு தடவை முயற்சி செய்து பார்த்தாள்.

" உனக்கு இந்த கல்யாணத்துல நெஜமாவே இஷ்டமா அக்கா?"

" ம்.."

" அந்த லஷ்மிகாந்த்தை மறந்துட்டியா?"

" ஆமா.."

" நெஜமாவா?"

" அடி தாங்காம நான் வேணாம்னு சொன்ன அவன் எங்க? நான் ஓடிப்போனவனு தெரிஞ்சும் என்னை கல்யாணம் பண்ணிக்க ஓத்துக்கிட்ட ஹேமந்த் எங்க..? " என்று பதிலுக்கு ஒரு கேள்வியை வீசினாள் மதுபாலா.

' ஏய் மக்கு மது. அவன் உன் அழகை பார்த்துதான் கல்யாணம் பண்ணிக்கிறான். அவனும் அவன் மூஞ்சியும்.. இப்படி அநியாயத்துக்கு மக்கா இருக்கியே..' என்று மித்ரா நினைத்தாள்.

" அக்கா.. ஓடிப்போவது ஒன்னும் குற்றமில்லை. உனக்கு பிடிச்ச வாழ்க்கையை தேர்ந்தெடுக்க உனக்கு முழு உரிமையும் உண்டு. நீ மேஜர். யோசிச்சு முடிவெடு.. இது உன் வாழ்க்கை.. மிச்சம் இருக்க மொத்த வாழ்க்கையையும் நீ அந்த ஆள் கூட தான் வாழப்போற.. நீ வாழபோறவன் எப்படி பட்டவன்னு முழுசா புரிஞ்சிக்க இந்த ஒரு மாசம் போதுமா?"

" இதபாரு மித்ரா.. நான் எடுத்த முடிவு தான் தப்பா போயிடுச்சு. அப்பா எடுத்த முடிவு தப்பா போகாது.." என்று வீர வசனம் வேறு பேசினாள். அது பிழையாகப்போவது தெரியாமல்.

அதற்கு மேல் மித்ரா அங்கு நிற்கவில்லை.

அம்மன் கோவிலில் நின்று போன திருமணம் முருகன் கோயில் மண்டபத்தில் ஏற்பாடாகியது. முகூர்த்த நேரம் தவறாமல் ஹேமந்த் குமார் மதுபாலா கழுத்தில் மங்கல நாணை அணிவித்தான். அது ஒரு தூக்கு கயிறு என்று தெரியாமலேயே பேதை அவள் சிரித்த முகத்தோடு அந்த கயிற்றை ஏற்றுக்கொண்டாள்.

திருமணம் முடிந்து மணமகன் வீட்டில் மகளை விட்டுவந்த போது யாரும் பெரிதாக அழுது விடை கொடுக்க வில்லை. அவளுக்கு விடை கொடுத்தால் போதும் என்று பெற்றோர்கள் எண்ணினார்கள் போலும். மித்ராவின் மனது சஞ்சலமாகவே இருந்தது. இருந்தும் அக்காவை கட்டியணைத்து முத்தமிட்டு விடை கொடுத்துவிட்டு வந்தாள். அப்படி வந்தவளின் கண்களுக்கு மட்டும் அந்த ஹேமந்த் குமார் நல்லவனாக தெரியவில்லை.

அடுத்தநாள் மறுவீட்டு அழைப்புக்கு வந்த போது தாய் கேட்க வேண்டிய கேள்வியை தங்கை நாகரிகமாக கேட்டாள்.

" அக்கா! எல்லாம் ஓக்கே தானே..?"

இது வழக்கமாக புதிதாக திருமணம் ஆன மகளிடம் தாய் கேட்கும் அந்த கேள்வி தான்.

" ம்.. "

" அவரைப் பற்றி தெரிஞ்சிக்கிட்டியா?"

" ம்.."

" உன்னைப் பற்றி அவர் என்ன கேட்டார்?" அக்காவின் மனநிலையை அந்த புது மணமகன் உணர்ந்து கொண்டானா என்று தெரிந்து கொள்ளவே அந்த கேள்வியை கேட்டாள் மித்ரா.

" ம்.. இதுதான் உனக்கு முதல் ராத்திரியானு கேட்டார்.." என்று சொல்லிவிட்டு பூத்து குலுங்கிய பூக்களை வெறித்துப் பார்த்துக்கொண்டு இருந்தாள் மதுபாலா. மித்ராவின் மனமோ கொந்தளித்தது. அவள் எதிர்பார்த்தது போலவே நடந்திருந்தது.

" அக்கா...!" அவளது தோளில் அழுத்தமாக கை வைத்தாள் மித்ரா. கண்களில் புரண்டு வந்த கண்ணீரை துடைத்து விட்டு கண் மை அழிந்து விடாமல் காப்பாற்றிய மதுபாலா தங்கையைப் பார்த்து விரக்தி புன்னகை ஒன்றை உதிர்த்துவிட்டு சென்றுவிட்டாள்.

அடுத்து வந்த இரண்டே வாரங்களில் அவள் ஹேமந்த் குமாருடன் துபாய் பறந்த போது மித்ராவால் கையசைத்து விடை கொடுக்கத்தான் முடிந்தது. அதற்கு பிறகு என்னவெல்லாம் நடக்குமோ என்று பயந்தது மித்ராவாகத்தான் இருக்க முடியும். ஒரு பெண்ணை கரை சேர்த்த நிம்மதியில் பெருமூச்சு விட்டுக்கொண்டு இருந்த ஐராவதம் ஒரு சுற்று பெருத்திருந்தார்.

துபாய் சென்ற மதுபாலா அவ்வப்போது வீட்டுக்கு போன் செய்து பேசிக்கொண்டு இருந்தாள். அதற்கு பிறகு அவளுடனான தொடர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக குறையத் தொடங்கியது . இது யாருக்குமே சந்தேகத்தை எழுப்பவில்லை. மித்ராவைத் தவிர. அந்த நேரத்தில் தான் மித்ராவின் காலேஜ் அட்ரஸ்க்கு அந்த கடிதம் வந்தது.

அன்புள்ள மித்ராவுக்கு,

நீ சௌக்கியமா? நான் சௌக்கியமில்லை. ஒருவேளை உன் பேச்சை கேட்டிருந்தால் நலமாக இருந்திருப்பேனோ என்னவோ... காதலித்தவன் கைகழுவிவிட்டு ஓடிவிட்டான் என்றதும், அப்பா பார்த்தவானவது நல்லவனாக இருப்பான் என்று நம்பி ஏமார்ந்துவிட்டேன். முதல் நாளன்றே அவன் கேட்ட கேள்விக்கு பதில் கூட சொல்ல முடியாதவளாகத்தான் அன்று இருந்தேன். காரணம் நான் ஓடிப்போனவளாம். ஒரு பெண் வீட்டை விட்டு வெளியே சென்றால் கெட்டுப்போயத்தான் வருவாள் என்று எவன் சொன்னானோ அவனது பரம்பரையே பெண் இல்லாது தவிக்கட்டும்.

நான் நிம்மதியாகவே இல்லை மித்ரா. தினம் தினம் அவனது வசைச் சொற்களுக்கு முகம் கொடுக்கிறேன். ஒவ்வொரு இரவும் எனக்கு கசப்பான இரவாகவே முடிகிறது. வலியும் வேதனையும் மட்டுமே மிச்சம். இப்போதெல்லாம் புதிதாக சிகரெட்டை இழுத்துவிட்டு என் மீது சூடு வைத்து நான் வேதனை படுவதைப் பார்த்து ரசிக்கிறான். தினமும் அடி வாங்காமல் என் பொழுதுகள் ஓடுவதில்லை. நகரத்தில் வாழ்கிறேன். என்றோ ஒருநாள் இறந்தும் போவேன் என்று தெரியும். அதற்கு முன் உன்னிடம் ஒன்றை மட்டும் சொல்கிறேன். நீ தயவுசெய்து என்னைப் போல இருக்காதே. உன் வாழ்க்கையை நீயே தேர்ந்தெடு. இந்த சமூகத்தில் உள்ள நயவஞ்சகமான ஆண்களிடம் இருந்து தள்ளி இரு.. உன்னுடைய தைரியத்துக்கும் தன்னம்பிக்கைக்கும் உன்னை புரிந்து கொண்ட ஒருவன் கிடைப்பான். அவனை கெட்டியாக பற்றிக்கொள். யாருக்காகவும் உன் வாழ்க்கையை இழந்து விடாதே.. இந்த கடிதத்தை அவனுக்கு தெரியாமல் எழுதுகிறேன். எதிர்வீட்டு பையனிடம் கொடுத்து தான் போஸ்ட் செய்ய வேண்டும். அவன் என்னை விட நான்கு வயது சின்னவன். ஆனால் அவன் கூடவும் என்னை சேர்த்துவைத்து கதைத்து.. ச்சீ.. அதைவிடு.. இந்த கடிதம் உன் கையில் கிடைக்கும் போது அநேகமாக என் உயிர் இந்த உலகை விட்டு போயிருக்கும்..
இப்படிக்கு அன்பின் மதுபாலா.


இப்படியாய் முடிந்திருந்த கடிதத்தை படித்த மித்ராவுக்கு கைகள் நடுங்கின. துபாய் இலக்கத்துக்கு தொடர்பு கொண்டபோது தொடர்பே கிடைக்கவில்லை. வீட்டுக்கு ஓடினாள்.

அங்கு பாமா பெருங்குரலெடுத்து ஓலமிட்டது கேட்டதும் மொத்தமும் புரிந்து போனது மித்ராவுக்கு. அந்த கடிதத்தை காட்டவேண்டிய அவசியம் இருக்கவில்லை.

அப்போது தான் அந்த செய்தி வந்து சேர்ந்திருக்க வேண்டும்.

" ஐயோ.. மித்ரா.. உங்க அக்கா செஞ்ச காரியத்தை பார்த்தியா..? மது தூக்கில தொங்கிட்டாடீ...." என்று பாமா கதற சுவரோடு சாய்ந்தாள் மித்ரா. மொத்த குடும்பமும் ஆடிப்போய் மதுபாலாவின் உடலுக்காக காத்திருந்தது.


ஆட்டம் தொடரும் ❤️?

 
லக்ஷ்மிகாந்த் ஒரு கோழை, ஹேமந்த் ஒரு சந்தேகம் பிடித்தவன், தப்பு இரண்டு பக்கமும் இருக்கு. லக்ஷ்மிய கல்யாணம் செய்திருந்தா நாளை பின்னால் ஏதாவது problem வந்தால் இதேபோல மதுவ விட்டு ஓடி இருப்பான். அப்போவும் மது இதே போல கோழை மாதிரி ஏதாவது செய்து இருப்பாள். தங்கைக்கு தற்கொலை கடிதம் எழுதியிருந்ததற்கு பதிலாக உதவி கேட்டு எழுதி இருக்கலாம். ?
 
Last edited:
லக்ஷ்மிகாந்த் ஒரு கோழை, ஹேமந்த் ஒரு சந்தேகம் பிடித்தவன், தப்பு இரண்டு பக்கமும் இருக்கு. லக்ஷ்மிய கல்யாணம் செய்திருந்தா நாளை பின்னால் ஏதாவது problem வந்தால் இதேபோல மதுவ விட்டு ஓடி இருப்பான். அப்போவும் மது இதே போல கோழை மாதிரி ஏதாவது செய்து இருப்பாள். தங்கைக்கு தற்கொலை கடிதம் எழுதியிருந்ததற்கு பதிலாக உதவி கேட்டு எழுதி இருக்கலாம். ?
யாருக்கும் கஷ்டம் தரக்கூடாதுனு அவ முடிவு பண்ணிட்டா.. இனி நம்ம என்ன செய்ய..?
 
Top