Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கண் விழித்தேன் உன் நினைவில் ep 12

Advertisement

Sesily Viyagappan

Well-known member
Member
கண் விழித்தேன் உன் நினைவில்
--செசிலி வியாகப்பன்


அத்தியாயம் 12


அன்று......
கல்லறைத் தோட்டத்தில்

குரு : செபிப்போமாக. ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே, நீர் கல்லறையில் மூன்று நாள் துயில் கொண்டதால், உம்மீது விசுவாசம் கொண்ட அனைவரின் கல்லறைகளையும் அர்ச்சிக்கின்றீர்.
எனவே, உடல் அடக்கத்திற்குப் பயன்படும் இக்கல்லறைகள் உயிர்த்தெழும் நம்பிக்கையையும் வளர்க்கின்றன. நீர் உம் அடியாரை உயிர்ப்பித்து இவருக்குப் பேரொளி தரும் அந்த நாள் மட்டும் இவர் கல்றையில் அமைதியுடன் துயில் கொண்டு இளைப்பாறச் செய்தருள்வீராக.
உயிர்ப்பும் உயிரும் நீரேயாதலால் இவர் உயிர்த்தெழுந்த பின் உம் திருமுக ஒளியில் விண்ணகத்தின் நித்திய ஒளியைக் காண்பாராக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்றவரே. உம்மை மன்றாடுகிறோம்.

எல் : ஆமென்.

(குரு : கல்லறைக் குழியின் மீது தீர்த்தம் தெளித்து, தூபம்காட்டுவார்)

குரு : திருத்தந்தை பவுல் ஆபிரகாம் அவர்கள் இவ்வுலக வாழ்வினின்றும் தம்மிடம் அழைத்துக் கொள்ள எல்லாம் வல்ல இறைவன் திருவுளம் கொண்டதால், இவர் உருவான மண்ணிற்கே திரும்பிச் செல்லும் படி இவர் உடலை நிலத்திற்கு கையளிக்கிறோம்.
ஆவியினும், இறந்தோரிடமிருந்து தலைப்பேறாக உயிர்த்தெழுந்த கிறிஸ்து, தாழ்வுக்குரிய நம் உடலை மாட்சிக்குரிய தம் உடலின் சாயலாக உருமாற்றுவார்.
ஆதலால் நம் திருத்தந்தை பவுல் ஆபிரகாமை ஆண்டவரிடம் ஒப்படைப்போம். ஆண்டவர் இவரைத் தம் அமைதியினுள் ஏற்றுக்கொள்வாராக, இவரது உடலையும் இறுதி நாளில் மகிமையுடன் உயிர்த்தெழச் செய்வாராக.

முதல் : ஆண்டவரே, நித்திய இளைப்பாற்றியை இவருக்கு அளித்தருளும்.

துணை : முடிவில்லாத ஒளி இவர்மேல் ஒளிர்வதாக.


பாடல்


இறந்தோர் வாழ்வு ஒளிபெறுக அவர்
இறைவா உம்மிடம் வந்தடைக

நின் ஒளி அவர்மேல் ஒளிர்ந்திடுக புவியில்
நிதம் அவர் நினைவு நிலைத்திடுக
தீயவை யாவும் விலகிடுக - அவர்
தினம் உம் மகிழ்வில் நிலைத்திடுக

விண்ணக சீயோன் நகரினிலே நிதம்
மண்ணால் உம் புகழ் அவர் இசைக்க
புனிதர் வான தூதருடன் - உம்மை

புகழ்ந்திடும் பேறு அவர் பெறுக.

கருப்பு நிற பெட்டியை சுற்றியிருந்த அனைவரும் ஃபாதர் பவுல் ஆபிரகாமிற்காக இறைவனிடம் வேண்டிக் கொண்டிருக்க, இவற்றையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த கனலி தன் மனதுக்குள் இறுக்கிக் கொண்டு இருந்தாள்.

எப்பொழுதும் முகத்தில் வாடாத புன்னகையுடன் தன்னிடம் செல்லம் கொஞ்சும் அந்த வயது முதிர்ந்த குழந்தை இன்னும் சிறிது நேரத்தில் பூமித்தாயின் கருவறைக்குள் செல்லப் போவதை நினைத்து மனது ஆழ்ந்து துக்கத்தை ஏற்றது.

உலக உறவுகளை இழந்த அந்த துறந்த அந்த துறவியும், உறவுகளால் துறக்கப்பட்ட கனலியும் தங்களுக்கு என ஒரு சிறு உலகில் வாழ்ந்து கொண்டு இருந்தனர்.

அதுவும் கனலி பெங்களுர் வந்த பின் இந்த ஐந்து வருடங்களில் தாய் பிள்ளையன வாழ்ந்து வந்தனர்.

இன்று அந்தத் துறவி உலக வாழ்வையும் துறந்து சென்றுவிட, முதல் முறையாக கனலி தான் யாருமற்ற அனாதையாகி விடுவோமோ என்ற பயம் மனதுக்குள் வர ஆரம்பித்தது.

அனைத்து இறுதி வழிபாடும் முடிந்தபின்பு சிலுவை குறியிட்ட மூடி ஒன்று அந்த கருப்புப் பெட்டியை மூடிவிட, இனி தன்னை பாசமாக செல்லப்பெயர்கள் வைத்து அழைக்கும் தன்னுடைய இன்பத்தையே பெரிதாக நினைத்து வாழும் நபரை சந்திக்கப்போவதில்லை என்ற நினைவே அந்த நிமிட வாழ்க்கையை கசப்புற செய்தது.

அனைவரும் அங்கிருந்து வெளியேறிய பின்பும் தன் விடுதி அறைக்கு வந்த கனலிக்கு யாரிடமும் எதுவும் பேசத் தோன்றவில்லை.

மனதை அழுத்தும் பாரத்தை என்ன செய்வது என்று தெரியாமல் அறையின் விட்டத்தை வெறித்துப் பார்த்தவண்ணம் அமர்ந்து இருந்தாள்.

தோழிகளின் வற்புறுத்தலால் பெயருக்கு எதையோ உண்டு, சொல் பேச்சை கேட்டு நடக்கும் ஒரு பொம்மை போல மற்றவர்களின் பேச்சுக்கு கட்டுபட்டு இயங்கிக் கொண்டு இருந்தாள்.

இப்படியே ஒரு வாரம் செல்ல அன்றும் கல்லூரிக்குச் செல்ல தோன்றாமல் அறைக்குள்ளேயே முடங்கிக் கிடக்க, ஹாஸ்டல் வார்டன் தன்னைக் காண யாரோ வந்திருப்பதாக அழைக்க கனலி அவர் அறைக்கு வந்தாள்.

உள்ளே வந்த கனலி அங்கு அமர்ந்து இருந்த விஷ்வாவை பார்த்த அடுத்த நொடி அவனைக் கட்டிப்பிடித்து அழுது தீர்த்தாள்.

இத்தனை நாள் தன் மனதுக்குள் அடக்கி வைத்து இருந்த ரணங்கள் அனைத்தும் கண்ணீராய் அவளை விட்டு வெளியேற அதை உணர்ந்த விஷ்வாவும், அவள் ஹாஸ்டல் வார்டனும் அவளை தடுக்கவில்லை.

வெகுநேரம் அழுது முடித்த கனலி அருகில் இருந்த நாற்காலியில் அமர வைத்துவிட்டு விஷ்வா

"மேடம் நான் கனலி இங்க இருந்து கூட்டிகிட்டு போறேன், பாதர் ஆப்ரஹாம் அவருக்கு அடுத்த காடியன என்னுடைய நேம் கொடுத்திருக்காரு,
கனலி என்கூட கூட்டிகிட்டு போறதுக்கான ஃபாதர் ஆபிரஹாம் லெட்டர் கூட இதுல இருக்கு வேற ஏதாவது தேவைப்பாடு மேடம்." என்று கேட்க,

இதையெல்லாம் கேட்ட கனலி மனசுக்குள் மகிழ்ச்சி நீரூற்று பொங்கி வழிந்தது.

'இனி தான் தனித்து இருக்க வேண்டாம், தன்னுடைய விஜி அருகிலேயே இருக்க போகின்றோம்.' என்ற ஒரு காரணமே அவள் மகிழ்ச்சிக்கு போதுமானதாக இருந்தது.

''நத்திங் சார் சில பார்ம்ஸ்ல சைன் பண்ணிட்டு நீங்க தாராளமா கனலியை கூட்டிகிட்டு போகலாம்."

அடுத்த சில மணி நேரத்தில் கனலி இருப்பிடம் ஹாஸ்டலில் இருந்து விஜி வீடு என்று ஆனது.

இருவரும் வீட்டை அடையும் பொழுது நேரம் இரவாகி இருந்தது. அந்த இரவின் இருளிலிலும் விளக்கு வெளிச்சத்தில் வீட்டின் பிரம்மாண்டம் தெரிந்தாலும் அது எதுவும் கனலி மனதில் பதியவில்லை.

வீட்டிற்குள் வந்ததும் அவளுக்கான அறையை காட்டிவிட்டு

"இந்த ரூம் தான் இனி உனக்கு, நல்ல தூங்கி ரெஸ்ட் எடு." என்று தனக்கான அறையை நோக்கி திரும்பிய விஷ்வா

அவளது கலங்கிய கண்களும், அவள் விழிகளில் தோன்றியிருந்த லேசான நீர்த்திரை பளபளப்பும் தற்போதய கனலியின் மன நிலையை உணர்த்த, அது அவனுக்கு பரிதாபமாக இருந்தது.

கனலி நிலை விஸ்வாவிற்கு தாய் பறவை யை உடனே அவளை நெருங்கி தன்னோடு இறுக்கி அணைத்துக் கொண்டு

"கனலி நீ கவலை பட்ட எதுவும் மாறப்போறது இல்ல, கவலைப்படாமல் தூங்கு எதுவா இருந்தாலும் காலையில பேசிக்கலாம்." என்ற விஷ்வாவின் கனிவான பேச்சில் அவன் காட்டிய அறையில் கட்டிலில் விழுந்தது மட்டுமே கனலி தெரியும்.

காலையில் முகத்தில் விழுந்த சூரிய ஒளியின் வெப்பத்தால் அவள் கண் விழித்த பொழுது நேரம் ஓன்பதையும் தாண்டி சென்று கொண்டு இருந்தது.

விழித்து எழுந்த அமர்ந்த கனலிக்கு தன்னை நினைத்து ஆச்சரியமாக இருந்தது. என்னதான் விஷ்வா தனது காதலன் என்றாலும் அவனின் இல்லத்தில் இப்பொழுதுதான் தங்கியிருப்பது சரியா? என்ற கேள்வி அவள் முன்பு பூதாகரமாக நின்றது.

இப்பொழுது இவ்வளவு நினைவு வர நேற்று அவன் தன்னை அழைக்க வந்த பொழுது எதுவும் தோன்றாது ஆச்சரியமே!

இதைப்பற்றி விஜியிடம் பேச வேண்டும் என்று மனதுக்குள் குறித்துக் கொண்டு வேகமாக தயாராகி வெளியே கீழே வந்த பொழுது மணி ஒன்பதரையை தாண்டி சென்றது.

கனலி அறையை விட்டு வெளியே வருவதற்கும் அவள் அறைக்கு எதிர்ப்புறம் இருந்த விஷ்வா அறை கதவை திறப்பதற்கும் சரியாக இருந்தது.

"கனல் பேபி நல்லா தூங்கினியா.." என்று விஸ்வா கேட்க பதிலுக்கு அவள் தலையசைப்பை மட்டுமே பதிலாக கொடுத்தாள்.


அவள் தலை அசைக்கும் விதத்திலேயே ஏதோ உள்ளுக்குள் யோசனையாக இருக்கின்றாள் என்பது விஷ்வாவிற்கு புரிந்தது.

காலை உணவு நேரத்தில் கனலி அதிகம் பேசாமல் அமைதியாகவே உணவை எடுத்துக்கொண்டாள். உணவு உண்டு முடித்ததும்

"விஜி நான் உன்கிட்ட முக்கியமான விஷயம் பேசணும்." என்று பேச ஆரம்பித்தாள்

"கனல் என்ன அப்படி முக்கியமான விஷயம் என்கிட்ட பேசணும்."

"இது சரி இல்ல விஜி."

"எது சரியில்ல.......
தலையும் புரியாமல் காலும் புரியாமல் பேசினா நான் எப்படி எடுக்கிறது."

"அது நாம இப்படி இருக்கிறது........" என்று தயக்கத்துடன் கனலி கூற, அவள் அருகில் நெருங்கி அமர்ந்த விஜி

"அட நீ சொன்னதுக்கு அப்புறம் தான் கவனிக்கிறேன் ரொம்ப நாளுக்கு அப்புறம் சந்திச்ச காதலிக்கிட்ட யாராவது இவ்வளவு தூரம் உட்கார்ந்து பேசுவாங்களா." என்று அவளை அணைத்துக்கொள்ள.

தன் காதலன் அணைப்பில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்ட கனலி

"விஜி பீ சீரியஸ். வி ஆர் ஜஸ்ட் எ லவ்வர்ஸ், அப்படி இருக்கும் பொழுது நாம ஒரே வீட்டுல இருக்கிறது சரி வராது." என்று கூறிய கனலி எண்ணப் போக்கை உணர்ந்த விஷ்வா அவளிடம் விளையாடும் பொருட்டு

"இதுல என்ன இருக்கு கனல், வி ஆர் லவ்வர்ஸ் அது போதாதா நம்ம ஓரே வீட்டுல இருக்கிறதுக்கு.

அமெரிக்காவில் எல்லாம் லிவ்விங் live-in ரிலேஷன்ஷிப் ரொம்ப சாதாரணம். நாமளும் கொஞ்ச நாள் அப்படி இருக்கலாம்." என்று அவன் கூறிய அடுத்த நொடி கனலி கைகள் விஷ்வா கண்ணத்தில் இடியென இறங்கியது.

இதை சற்றும் எதிர்பார்க்காத விஷ்வா அதிர்ந்து நிற்க, வேகமாக உள்ளிருந்து மூச்சை எடுத்து வெளியேற்றி தன்னை சமநிலை படுத்திக் கொண்ட கனலி கண்கள் மட்டும் கோபத்தின் வெளிப்பாடாக சிவந்து இருந்தது.

சற்று முன் விஸ்வா பேசிய பேச்சு ஏதோ தன்னை ஒழுக்கக்கேடான பெண்ணாக தன்னை நினைத்து பேசியதாக அவளுக்கு தோன்றியது.

'இவ்வளவு நாள் தன்னிடம் நல்லவனாக பேசி காதலித்தது எல்லாம் தன்னை அவனிடம் கொண்டுவருவதற்கு தானா?' என்ற நினைப்பே அவளுக்கு கசந்தது.

'தனக்கு துணையாக இருந்த பாதர் ஆபிரகாம் மரணத்திற்குப் பின்பு தன்னை இங்கு அவனது வீட்டிற்கு கொண்டுவந்துவிட்ட தன் சுயரூபத்தை காட்டுகின்றனா'

சிலை என நின்ற கனலில் முகத்தை பார்த்துவிட்டு, அவள் தோளை தொட்டு விஷ்வா அசைக்க, அதில் சுய உணர்வு பெற்றவள் அவன் கையை தட்டி விட்டு அவனைச்சுற்றி தாண்டி வீட்டின் வாசலை நோக்கி நடக்கத் துவங்கினாள்.

ஒரு கையால் அவளை அங்கிருந்து அசைய விடாமல் தடுத்து நிறுத்தி விஷ்வா

"என்ன ஆச்சு......
எதுக்கு இவ்வளவு கோபம்." என்று காதலனாக அக்கறை காட்டி பேசினான்.

அவனது பிடியிலிருந்து விடுபட போராடி, அது முடியாத ஆத்திரத்தில் அவனை முறைத்துப் பார்த்த கனலி

"நீ சொல்வதையெல்லாம் கேட்டு நடக்குறதுக்கு வேற மாதிரி பொண்ண தான் நீ பார்க்கணும். இன்னும் நான் உன்னை கொலை பண்ணாம இருக்கிறத நினைத்து சந்தோஷப்பட்டுக்காே. முதலில் என் மேல இருந்து கையை எடு." என்று கோபத்தில் புலி என சீறினாள்.

அவளின் கோபத்தில் குளிர் காய்ந்த விஷ்வா

"அப்படி நான் என்ன சொன்னேன் நீ கோபப்படுற அளவுக்கு...." என்று யோசிப்பது போல் பாவனை காட்டிவிட்டு

"எனக்கு நீ கோபப்படுற அளவுக்கு நான் எதுவும் பேசினதா ஞாபகமில்லை....
நீயே சொல்லு நான் அப்படி என்ன தப்பா பேசினேன்னு." என்று விவகாரமாக கேட்க

"என்ன பாத்தா உனக்கு எப்படி தெரியுது, ஏதோ லிவ் இன் ரிலேஷன்ஷிப் பத்தி பேசுற. உன்ன போய் லவ் பண்ணேன் பாரு என் புத்தியை செருப்பால அடிக்கணும்.

என் ஊரு என்னன்னு உனக்கு தெரியும் தானே பேரிலேயே வீரத்தை வச்சிருக்க ஊரு.
வரைமுறை இல்லாமல் என்கிட்ட பழகணும்ன்னு நினைச்ச உன் கழுத்துல தலை இருக்காது ஜாக்கிரதை." என்று கூறிவிட்டு அவனது கையை உதற முயன்றாள்.

அதுவரை அவளுடன் விளையாண்டு பார்க்கலாம் என்ற விஷ்வாவின் எண்ணம் கனலி பேசிய பின்பு வினையாக மாறியதை உணர்ந்தான்.

"ஸ்டாப் இட் கனலி உனக்கு மட்டும் தான் வாய் இருக்கிற மாதிரி பேசிகிட்டே போகாதே.
நான் உன்கிட்ட விளையாண்டு பார்க்க மட்டும்தான் அந்த மாதிரி பேசினேன். மத்தபடி எனக்கு லிவ்இன் ரிலேஷன்ஷிப் பற்றி எந்த எண்ணமும் இல்லை." என்று கூறி விட்டு

தன் அறைக்குள் சென்ற விஷ்வா சிறிது நேரத்தில் அவள் முன்பு சில காகிதங்களை வைத்தான். அவள் முன் விழுந்து கிடந்த காகிதங்கள் பதிவு திருமணத்திற்கான விண்ணப்பம்.

அதை கையில் எடுத்து கண்கலங்க பார்த்து நின்றவளின் பின்புறம் இருந்து அனைத்த விஷ்வா

"இன்னும் ஒரு மாதத்தில் உன் எம்பிஏ எக்ஸம் முடிஞ்ச பின்னே நம்ம ரெண்டு பேருக்கும் கல்யாணம். அதுவரைக்கும் இந்த வீட்டுல தான் இருக்கப் போறாேம்.

நாம ரெண்டு பேரும் இந்த வீட்டுல தனியா இருக்க போறது இல்ல. இங்க என்னுடைய பாட்டி நம்ம கூட தான் இருக்கப் போறாங்க. சாே என் கூட தங்க போற இந்த ஒரு மாதத்தை நீ எப்படி எடுத்துக்கிட்டாலும் அதை பத்தி பிரச்சனை இல்லை."

கனலி இடமிருந்து எந்த பதிலும் இல்லாமல் போக அவளை தன் புறம் திருப்பிய விஷ்வா, அவள் கண்களில் இருந்து வழிந்த கண்ணீரை துடைத்து,

"சாரி கனலி நான் விளையாட்டா உன் கிட்ட பேசினா வார்த்தை உன்னை இவ்வளவு காயப்படுத்தும்ன்னு நினைக்கல." என்று தன் காதலியிடம் மன்னிப்புக்காக காத்திருக்க, அவன் கைகளை தன் கைகளுக்குள் அடக்கிய கனலி

"நான் உன்னை அடிச்சு கோபமா பேசினதுல உனக்கு என் மேல வருத்தம் இல்லையா." என்று கண்களில் 'என்னை தவறாக நினைத்து விடாதே' என்ற பரிதவிப்பை தேக்கிவைத்து கேட்க,

"என்னுடைய கனல் பேபிய நான் எப்பவும் தப்பா நினைக்க மாட்டேன். உன்னுடைய விஜியை அடிக்கிறதுக்கு மட்டுமில்லை காெல்றதுக்கு கூட உனக்கு மட்டும்தான் உரிமை இருக்கு.

நம்ம ரெண்டு பேரு கல்யாணத்துக்கு இன்னும் ஒரு மாதம் டைம் இருக்கு, இந்த டைம் எதுக்கு தெரியுமா?

வாங்கிய அடியை மறந்து கொழுப்புடன் கேட்ட விஸ்வா வார்த்தைகளில் நிச்சயம் எதுவோ இருந்தது.

அது என்னவாக இருக்கும் என்று கனலி வேகமாக யோசித்துப் பார்த்தாள். எதுவாக இருந்தாலும் நிச்சயம் அதில் தவறான நோக்கம் எதுவும் இருக்கப் போவது இல்லை என்பதை புரிந்து கொண்டு,

"எதுவாயிருந்தாலும் தப்பா இருக்காதுன்னு நான் நினைக்கிறேன்."

"ஒருவேளை தப்பா இருந்தா என்ன பண்ணுவ." என்று கேட்ட அவன் வார்த்தைகளில் இருந்தது குறுகுறுப்பில்

"தப்பா ஏதாவது இருந்துச்சுன்னா,காலம் முழுக்க இரண்டு கை, இரண்டு கால் இல்லாத ஒருத்தன் கூட நான் வாழ்க்கை நடத்த வேண்டியதா இருக்கும் அதையும் பார்த்து ,விடலாம்." என்று கூறிய அடுத்த நொடி

"பேராண்டி, பேத்திப்புள்ள நான் இங்கதான் இருக்கேன்." என்று கூறிக்கொண்டு எழுபதுகளில் இருக்கும் தோற்றத்தில் ஒரு பெண்மணி வந்து நின்றார்.

தோல் சுருங்கி தலைமுடி நரைத்து இருந்தாலும் அவர் தோரணையும் கண்களில் இருக்கும் தீட்சண்யம், வரலாற்று கதைகளில் வரும் மகாராணியின் வருணனைகளை நினைவுபடுத்தியது.

கனலி தோள்களில் கையை போட்டு தன்னோடு இறுக்கிப் பிடித்த விஷ்வா

"பாட்டி நான் சொன்ன என்னுடைய காதலி கனலி. எனக்கு மட்டும் கனல் பேபி, எப்படி என்னுடைய செலக்சன் ஓகேவா." என்று கேட்க அவரோ ஒரு நிமிடம் கனலி கூர்ந்து பார்த்துவிட்டு

"உன்னுடைய செலக்சன் ஓகே பட் கனலி உன்னுடைய செலக்ஷன் சரி இல்லையே." என்று கூற அதில் உள்ள அர்த்தம் புரிந்து கனலி சத்தமாகவே சிரித்தாள். சிரித்து முடித்ததும்

"அதுக்கு என்ன பாட்டி பண்ண முடியும் எனக்குன்னு வந்து வாச்சது இது மட்டும் தானே." என்று கூறிவிட்டு தன் நாக்கை கடித்துக் கொண்டாள்.

என்னதான் பாட்டி சாதாரணமாக தன்னிடம் பேசினாலும், முதல் முறை சந்திக்கும் ஒருவரிடம் அவரது பேரப் பிள்ளையை மரியாதை இல்லாமல் பேசுவது சரியல்ல.' என்று நினைத்து நிற்க

அவள் எண்ண ஓட்டத்தை நன்கு புரிந்துகொண்ட அந்த வயது முதிர்ந்த மூதாட்டி

"கனலி நீ எதைப் பற்றியும் யோசிக்காமல் இந்த வீட்டுல சந்தோஷமா இருக்கணும். அது மட்டும் தான் இந்த பாட்டிக்கு வேணும். பேசி சிரிக்கின்றதுக்கு கூட ஆளில்லாமல் பல வருஷமா நான் இங்கே தனியாக இருக்கிறேன்.

இவன் லீவுக்கு இங்க வந்துட்டு போற அந்த சில நாட்கள் தவிர எனக்கு தனிமை மட்டும்தான் துணையாய் இருக்கும். அது எவ்வளவு கொடுமையாக இருக்கும்னு உனக்கும் தெரியும்னு நினைக்கிறேன்.

அதனால நீ இங்க சிரிச்சு பேசிக்கிட்டு சந்தோஷமா இந்த வீட்டை சுத்தி வரணும்."

வாழ்க்கை இவ்வளவு இனிதாக மாறக்கூடும் என்று கனவில் என்றும் நினைத்துப் பார்த்தது இல்லை.

விஷ்வா பாட்டி மனோரஞ்சிதம் தன்னிடம் ஆதரவாக நடந்து கொண்டது, பாதர் ஆபிரகாம் இறப்பில் இருந்து அவளை மீட்டுக்கொண்டு வர உதவியது.

அன்பை மட்டுமே புரியும் பாட்டியின் கவனிப்பும் கண்பார்வையில் வட்டத்திற்குள் தன்னை வைத்துக்கொண்டு கவனிக்கும் காதலனின் கரைகடந்த காதலும் அவளை உலகின் இன்பம் இது மட்டுமே என்னும் அளவிற்கு என்ன செய்தது.

தங்கள் காதல் வானில் சிறகடித்து பறந்து கொண்டிருந்த காதல் பறவைகள் இருவரும் மறந்தது, வேடன்களாக மாறி தங்கள் மகிழ்ச்சியை வேட்டையாட காத்திருக்கும் இருபக்க உறவினர்களை.

நினைவு நிஜமாகுமா......!
 
அடப் போங்கப்பா
ஜாலியா சந்தோஷமா லைப்பை எஞ்சாய் பண்ணும் இந்த ஜோடியைப் பிரிக்க உறவுகளை கொண்டு வர்றீங்களே
வெரி பேடு வெரி பேடு, செசிலி டியர்
 
Last edited:
அடப் போங்கப்பா
ஜாலியா சந்தோஷமா லைப்பை எஞ்சாய் பண்ணும் இந்த ஜோடியைப் பிரிக்க உறவுகளை கொண்டு வர்றீங்களே
வெரி பேடு வெரி பேடு, செசிலி டியர்
அவங்க பிரிச்சலும் உங்க நல்ல மனசுக்காகவே விஜி-கனல் ஜாேடியை சேர்த்து வச்சுடுவாேம்
 
Top