Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கண் விழித்தேன் உன் நினைவில் ep 13

Advertisement

Sesily Viyagappan

Well-known member
Member
கண் விழித்தேன் உன் நினைவில்
--செசிலி வியாகப்பன்


அத்தியாயம் 13


இன்று........

நேற்றைய இரவின் தாக்கம் கனலி கண்களில் நன்கு தெரிந்தது. இரவு முழுவதும் தூங்காமல் அழுது தன் பழைய நினைவுகளில் உழன்று தவித்ததால் இமைகள் இரண்டும் வீங்கி, ஏதோ காய்ச்சல் வந்தவள் போல இருந்தாள்.

எங்கும் செல்லாமல் அறைக்குள்ளேயே முடங்கிக் கிடக்க வேண்டும் என்று தோன்றும் எண்ணங்களை மாற்றிக்கொண்டு பிள்ளைகளுக்காக இயல்பாக இருப்பது போல தன்னை காட்டிக் கொண்டாள்.

என்னதான் தன்னை இயல்பாக காட்டிக் கொண்டாலும் முகத்தில் தெரியும் சோர்வை மட்டும் மறைக்க இயலவில்லை. அதைக் கவனித்து விட்டு பிள்ளைகளே

"அம்மா உங்களுக்கு உடம்பு சரி இல்லையா?" என்று கேட்கும் அளவிற்கு அவள் முகத்தில் சோர்வு வெளிப்படையாக தெரிந்தது.

"ஒன்னும் இல்லடா அம்மாவுக்கு கொஞ்சம் தலை வலிக்குது, நான் பாத்துக்குறேன்." என்று பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு அலுவலகம் நோக்கி சென்றாள்.

அலுவலக வாயிலை அடைந்த அடுத்த நொடி நேற்று மாலை விருந்தில் நடைபெற்ற அனைத்து நிகழ்வுகளும் கண்முன் வந்து மறைந்தது.

தன் மீது தன் விஜிக்கு இன்றும் குறையாமல் இருக்கும் காதலை நினைத்து மனம் மகிழ்ச்சி அடைந்தாலும், தன்னை மட்டும் தாயாக நினைத்து வாழும் பிள்ளைகளை எண்ணிப்பார்த்து மீண்டும் குழப்பமே மிஞ்சியது.

அலுவலகத்திற்குள் வந்த நிமிடத்திலிருந்து மற்றவர்கள் தன்னை கவனிப்பதையும் தங்களுக்குள் பேசிக் கொள்வதையும் கனலி கவனித்தாலும் காட்டிக் கொள்ளாமல் தன் இடத்தில் அமர்ந்து வேலையை கவனிக்க ஆரம்பித்தாள்.

இன்று வேலை பார்க்க ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே அவள் பார்த்துக்கொண்டிருந்த ஃபைலில் சில விஷயங்கள் தவறாக இருப்பது போல தோன்றியது.

அதற்கு சம்பந்தப்பட்ட நபரை அழைத்து கேட்க அவரோ

"நான் எல்லாமே சரியா தான் பண்ணி இருக்கேன். நீங்க உங்க இஷ்டத்துக்கு தப்பு சொன்னா அதையெல்லாம் நான் கேட்டு நடக்கனும்னு எந்த அவசியமும் எனக்கு இல்ல." என்று 'உன்னால என்ன செய்யமுடியுமோ செஞ்சுக்கோ' என்ற ரீதியில் பதில் கூற கனலி முகம் அப்படியே மாறிவிட்டது.

கனலி சாதாரண சூழ்நிலையில் இதை நிச்சயமாக வேறுவிதமாக கையாண்டிருப்பாள், ஆனால் இன்று தனக்கு இருந்த குழப்பமான மனநிலையில்

"சுரேஷ் எவ்வளவு அசால்டா ஆன்சர் பண்றீங்க. உங்க இஷ்டத்துக்கு ஆன்சர் பண்ண இது உங்க வீடு கிடையாது கம்பெனி, இங்க நீங்க எனக்கு கரெக்டா ஆன்சர் பண்ணியே ஆகணும்." என்று குரலை உயர்த்திக் கேட்க எதிரில் நின்றவனாே

"ஒழுக்கங்கெட்ட ஒருத்தி கிட்ட என்னால இதுக்கு மேல கரெக்டா பேச முடியாது, வேணுன்னா எப்பாே எங்க ரூம் பாேடலாம்னு வேணா பேசட்ட." என்று வார்த்தைகளை விட, கனலி காளியின் மறு உருவமாக மாறிவிட்டாள்.

சுரேஷ் சட்டையை கொத்தாக பிடித்த கனலி

"யாரைப் பார்த்து என்ன வார்த்தை சொன்ன."என்று கேட்க, அவள் பிடியிலிருந்து தன் சட்டையை விடுவிக்க போராடியபடி

"உன்ன தாண்டி சொன்னேன், என்ன பண்ண முடியும் உன்னால." என்று மரியாதை இல்லாமல் பேச, அங்கு வந்த ராம் இருவரையும் பிரிக்க முயற்சி செய்தான்.

சுரேஷ் சட்டையிலிருந்து கையை எடுத்த கனலி தன்னை நிதானப் படுத்திக் கொண்டு

"ராம் இப்போ இவன் என்கிட்ட மன்னிப்பு கேட்கணும்." என்று கோபமாகக் கூற, அந்த சுரேஷ்

"நான் ஒன்னும் தப்பா பேசலை உள்ளதை தானே சொன்னேன். ஒழுக்கம் இல்லம பல ஆம்பளை கூட சுத்துற ஒருத்திகிட்ட வேற எப்படி பேச முடியும்." என்று ஏகத்திற்கும் குரலை உயர்த்திப் பேச கனலி முகம் இறுகி கருத்தது.


சரியாக அந்த நேரம் ஆனந்த் தன் நண்பனை காண அங்கு வர, கனலி பார்த்ததும் அவனிடம் வந்து

"கனலி நானே உன்ன பாக்க வரணும்னு நெனச்சுக்கிட்டு இருந்தேன். உன்னை பார்த்து எத்தனை வருஷம் ஆயிட்டு.
எப்படி இருக்க?
நல்லா இருக்கியா?
நீ இங்க தான் இருக்கிறன்னு அந்த இடியட் கூட என்கிட்ட சொல்லவே இல்ல." என்று தன்பாட்டில் பேசிக்கொண்டு இருந்தான்.

நேற்று நடைபெற்ற விருந்தில் விஷ்வா பாடல் பாடும் பொழுது அவனது கவனம் ஒரே இடத்தில் நிலைபெற்று இருப்பது போன்று தோன்ற, ஆனந்த் அவ்விடம் நோக்கி திரும்பி பார்க்க அங்கே இருந்த கனலி கண்டுகொண்டான்.

சிறிது நேரத்தில் கனலி அங்கு இருந்து மறைந்துவிட அவளைப் பற்றி ஏதாவது தெரியுமா என்று விஸ்வாவிடம் கேட்பதற்காகவே இன்று அலுவலகத்திற்கு வந்தான்.

எப்படியாவது கனலி தன் நண்பனின் வாழ்வில் இணைத்துவிட்டால் அவன் வாழ்வு மகிழ்ச்சியாக மாறிவிடும் என்ற உற்சாகத்தில் ஆனந்த் பேசிக்காெண்டு இருந்தான்.

ஏற்கனவே கோபத்தில் இருந்த கனலி

"டேய் அறிவு கெட்டவனே நீ எல்லாம் பாரின் போய் படிச்சுட்டு வந்தேன்னு வெளியே சொல்லிக்காத.

ஒருத்தர பார்த்தாலே அவங்க கோபமா இருக்காங்களா, இல்ல சந்தோசமா இருக்காங்களான்னு பார்த்துட்டு தான் பேசணும். அந்த சாதாரண விஷயம் கூட உனக்கு தெரியாமல் நீ பாட்டுல பேசிக்கிட்டு போற." என்று சகட்டுமேனிக்கு பேசி வைக்க,

ஒரு நிமிடம் அதிர்ந்த ஆனந்த் தான் கனலி என்று நினைத்து வேறு யாரிடமாவது பேசுகின்றோமா என்று நினைத்தான். பின்பு தன் தலையை உலுக்கிக் கொண்டு தன்னை இந்த அளவிற்கு மோசமாக திட்டக்கக்கூடிய ஒரே நபர் இந்த உலகத்தில் உண்டு என்றால் அது கனலி மட்டுமே என்பதை உறுதி செய்துகொண்டு

"கனலி உனக்கு என்னை யாருன்னு தெரியலையா மா, நான் தான்டா உன்னுடைய அண்ணன் ஆனந்த்." என்று தன்னை யார் என புரிய வைத்து விடும் நோக்கத்தில் பேச அவையெல்லாம் கனலியின் கோப நெருப்பில் எண்ணெய் வார்த்தது போல இருக்க

"என்ன பாத்தா உனக்கு எப்படி தெரியுது, தலையில் அடிபட்டு பழசையெல்லாம் மறந்த அம்னீசியா நோயாளி மாதிரி தெரியுதா."

"இல்லடா அண்ணன்......" என்று பேச ஆரம்பித்த ஆனந்தை தாெடர விடாமல்

"யாருடா அண்ணன்...

நீ எனக்கு அண்ணனா இல்ல, நான் உனக்கு தங்கச்சியா.
இதுக்கு மேல ஏதாவது ஒரு வார்த்தை பேசுனா, இருக்கிற கோவத்துல உன்ன கொலை பண்ணிடுவேன்."

அடுத்த கனலியிடம் என்ன பேசுவது என்று தெரியாமல் ஆனந்த் விழித்துக்கொண்டு நிற்க, சுற்றி நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டு இருப்பவர்களுக்கு கனலி ஆனந்திற்கு வேண்டப்பட்டவர் என்பது நன்கு புரிந்தது.

அதுவரை கனலியை பற்றி தவறாக பேசி கொண்டு நின்ற சுரேஷ் கனலி ஆனந்திற்கு வேண்டப்பட்டவள் என்பது புரிந்ததும் அவனுக்குள் பயம் ஏற்பட ஆரம்பித்தது.

ஏனெனில் அலுவலகத்தில் உள்ள அனைவருக்கும் ஆனந்த் விஷ்வா நட்பு நன்கு தெரியும்.

எந்த ஒரு நேரத்திலும் அனுமதி இல்லாமல் விஷ்வாவை சந்திக்கக் கூடிய ஒரே நபர் ஆனந்த் மட்டுமே. என்றாவது தன்னை சந்திக்க வரும் தாய் தந்தையரை கூட விஷ்வா அனுமதி இல்லாமல் சந்திக்க மாட்டான்.

அப்படி இருக்க ஆனந்திற்கு வேண்டப்பட்ட ஒரு பெண்ணை பற்றி தான் தவறாக பேசி இருப்பது தெரிந்தால் தன் வேலை என்ன ஆகுமோ என்ற பயத்தில் அவன் நாக்கு உலர ஆரம்பித்தது.

குண்டூசி விழுந்தாலும் அதன் சத்தம் கேட்கும் அளவுக்கு அந்த அலுவலகமே அமைதியாக இருந்தது.

அந்த அமைதியைக் கலைக்கும் விதமாக கம்பீரமாக வந்தவனின் வழியை மறித்து கண்ணகி போல ஆவேசமாக நின்றவளை என்னவென்று பார்த்தபடி நின்று கொண்டு இருந்தான் விஸ்வா.

நேற்றை விழாவில் கனலியின் நெருக்கம் தன்னுள் மாேக தீயை வளர்த்தது என்றால், அவள் கண்களின் கண்ணீர் அந்த மாேகினி மீது தனக்கு இருக்கும் தீரத காதலை உணர்த்தியது.

கனலியாக தன்னிடம் வர வேண்டும் என இத்தனை நாள் காத்திருந்தவன் இனி காத்திருக்க தன்னால் இயலாது என்ற முடிவிற்கு வந்தான்.

ஒவ்வாெரு முறையும் தானே கனலியின் முன்பு காதலுக்காக இறங்கி சென்றாலும், அதில் தனக்கு எந்த வருத்தமும் இல்லை என்பதை விஸ்வா ஒத்துக்காெள்ள தயார்.

தாெழில் சாம்ராஜ்யத்தில் எதிரிக்கு சிம்ம சாெப்பனமாக இருப்பவனால் என்றுமே கனலியிடம் காேபமாக கூட ஒரு வார்த்தை பேச முடிவதில்லை.

இன்றாேடு அனைத்திற்கும் முடிவுகட்ட வேண்டும் என நினைத்து வர, தன் எண்ணத்தின் நாயகியே தன் வழியை மறித்து நிற்பதை கண்டு இன்பமாக அதிர்ந்தான் என்றே சாெல்ல வேண்டும்.

தன்முன் புயலென வந்து நின்றவளை ஆச்சரியத்துடன் நிமிர்ந்து பார்த்த விஸ்வஜித், இந்த அலுவலகத்தில் வேலைக்குச் சேர்ந்த இத்தனை நாள்களில் எதற்காகவும் கனலி தன் முன் வந்து நின்றது இல்லை.

அவனாக அழைத்து அவள் தன் முன் வந்து நின்று சந்தர்ப்பங்கள் எல்லாம் விரல் விட்டு எண்ணும் அளவிற்கே இருக்கும்.

இருவருக்குமிடையில் அலுவலகம் சம்பந்தமான உரையாடல்கள் எல்லாம் ராம் மூலமாகவும், இல்லையென்றால் மெயில் மூலமாக மட்டுமே இருக்கும்.

கனலி தன் வழியை விட்டு அகலாமல் நிற்க

"என்ன ஆச்சு அசிஸ்டன்ட் மேனேஜர் மேடம்?
எதுக்காக இப்படி என்னுடைய வழிமறிச்சுகிட்டு நிக்கிறீங்க." என்று நக்கலாக கேட்டான் விஷ்வா.

எப்பொழுதும் விஷ்வா தன்னை தெரியாதது போல் நடந்து கொள்வது தனக்கான தண்டனை என ஏற்று ஒதுங்கும் கனலி, இம்முறை அவன் தன்னை 'மேடம்' என்று கூறியது கோபத்தை ஏற்படுத்த

"யாருடா உனக்கு மேடம்." என சீறினாள்.

அவளின் 'டா' என்ற அழைப்பில் விஷ்வாவின் கண்கள் மின்னி மறைந்தது என்றால் அவன் மனது

'சபாஷ் மை கனல் பே க் டூ தி ஃபாம்.' என்று கூறி காெண்டது.

சுற்றி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அனைவரும் தங்கள் பாஸை ஒரு பெண் 'டா' போட்டு அழைத்த அதிர்ச்சியில் தங்கள் நாற்காலியை விட்டு எழுந்து விட்டனர்.

அலுவலகத்தில் உள்ள அனைவரும் தங்களை வேடிக்கை பார்ப்பதை உணர்ந்த விஷ்வா, தாங்கள் மற்றவர்களுக்கு காட்சிப்பொருளாக விரும்பாமல்

"கனலி எதுவாயிருந்தாலும் என்னுடைய ரூம்ல போய் பேசிக்கலாம்."

"கனலி......!
சாருக்கு ஒருவழியா என்னுடைய பேரு என்னன்னு ஞாபகம் வந்துட்டா.
எல்லாருக்கும் முன்னாடி என்கிட்ட பேசறது கூட உனக்கு பிடிக்கல தானே, அதனாலதான் இங்க உன்னுடைய ஆபீஸ்ல எல்லாரும் என்ன மரியாதை இல்லாமல் நடத்துறாங்க.
என்ன ஒழுக்கம் கெட்டவள்னு சாெல்றாங்க.
சொல்லுடா நான் கெட்ட பொண்ணா...
உன்ன மட்டும் நெனச்சுக்கிட்டு இத்தனை நாள் வாழ்ந்த எனக்கு நல்ல பரிசு கிடைச்சிருச்சு." என்று ஆத்திரத்தில் பேச,

அதுவரை கனலி எதற்காக இப்படி நடந்து கொள்கிறாள் என்பதை புருவங்கள் சுருங்க யோசித்த வண்ணம் இருந்த விஷ்வா, அவள் இறுதிப் பேச்சில் முகம் மாறியவன்

"யாரு உன்னை என்ன சொன்னா." என்று கிட்டத்தட்ட அவனது குரல் உறுமலாகவே கேட்டது.

சிங்கத்தின் கர்சனையாக கேட்ட விஸ்வா குரலில் சுரேஷ் சப்த நாடிகளும் ஒடுங்கியது.

"சொல்லு கனல் பேபி யாரு உன்ன தப்பா பேசினது." என

தன்னவளை பிறர் தவறாக பேசுவதா என்ற ஆத்திரத்தில் பேசியவன் கைகளில் மட்டும் சுரேஷ் சிக்கினால் சிதைந்து சின்னாபின்னமாகி இருப்பான்.

"ஒரு ஆள் தப்பா பேசினா 'இவன் என்ன பத்தி தப்பா பேசுறான்னு உன்கிட்ட நான் சொல்லலாம்.
கிட்டத்தட்ட இந்த ஆபீஸ்ல வேலை பார்க்கிற எல்லாரும் என்ன தப்பா மட்டும்தான் நினைக்கிறாங்க. அப்படி இருக்கும் பொழுது நான் யாரை சொல்லமுடியும்." என்று

தன் மார்பில் சாய்ந்து கதறி அழும் கனலி கண்ணீரை காண முடியாதவன், கனலியை தன்னிடமிருந்து பிரித்து, அவள் கழுத்தில் இருந்த தாலி செயினை வெளியே எடுத்து

"இது நான் தானே உன் கழுத்துல கட்டினேன். அப்படி இருக்கும் பொழுது நீ எதுக்காக இப்படி அழுதுகிட்டு நிக்கிற.
சொல்ல வேண்டியதுதானே.....
நீ இந்த விஸ்வஜித் பாெண்டட்டின்னு.
உன்னை தப்பா பேசினா யாரா இருந்தாலும் அவங்களுக்கு இனி இந்த கம்பெனியில மட்டுமில்ல உலகத்திலே இடமில்லாம பண்ணிடுவேன்."

"என்னடா நடக்குது இங்க, ரெண்டு பேரும் காதலிச்சு பிரிஞ்சதா நான் நெனச்சுக்கிட்டு இருக்கேன். நின்னு பாேன ரிஜிஸ்டர் மேரேஜ் எப்ப நடந்துச்சு." என்ற ரீதியில் அவர்களை ஆனந்த் நின்று கொண்டு இருந்தான்.

ஆனால் அவனின் ஆதிர்ச்சியை கண்டு காெள்ளத்தான் ஆள் இல்லை.

கனலி எந்த வேகத்தில் அவன் முன் வந்து நின்றாலாே, அதே வேகத்தில் அனைத்தும் அனைவருக்கும் தெரியப் படுத்த பட்டது.

கனலி நன்கு அறிவாள் தன் விஜி எந்த சூழ்நிலையிலும் அவளது மானம், மரியாதையை பாதுகாப்பான் என்று.

அவன் மார்பில் தஞ்சம் அடைந்த கனலி இவனை தவிர யாரும் தன்னை இந்த அளவு பார்த்துக் கொள்ள மாட்டார்கள் என்பதை நினைத்த நொடியில் அவள் முகத்தில் பெருமிதம் ஒன்று வந்தது.

இனி எதுவாக இருந்தாலும் அவனிடம் கூறிவிட வேண்டும், இனி அனைத்தையும் அவன் பார்த்துக் கொள்வான் என்ற நம்பிக்கை அவள் முகத்தில் ஒரு தெளிவை கொண்டுவந்தது.

கடந்த காலத்தில் நிகழ்ந்த பிரச்சனையில் சூழ்நிலையின் இறுக்கத்தை சமாளிக்க முடியாமல் அவனை விட்டுப் பிரிந்து வந்தாள்.

ஆனால் இப்பொழுது எந்த பிரச்சனை வந்தாலும் இனி சமாளிக்க தனது காதலன் இருக்கின்றான் என்ற நிம்மதியில் அவனிடம் தஞ்சமடைந்தாள்.

தன்னிடம் தஞ்சமடைந்தவளை ஆதரவாக அவளைப் பிடித்துக் கொண்டவன் தனது அறைக்கு அழைத்துச் சென்றான்.

நடப்பதை மற்றவர்களுடன் நின்று பார்வையாளராக பார்த்துக்காெண்டு நின்ற ஆனந்த் இனி தான் இந்த இடத்தில் அதிகப்படியாக நிற்க தேவையில்லை என்பதால் அங்கிருந்து மன நிம்மதியுடன் வெளியேறினான்.

விஷ்வா அறைக்குள்

"உன்ன விட்டு பாேன ஒரு வாரம் நான் எங்க எப்படி இருந்தேன்னு தெரிஞ்சதுக்கு அப்புறமும் என் மேல இதே காதல் இருக்குமா?" என்று தன் நெடு நாள் சந்தேகத்தை கனலி கேட்க,

"தெரியும்.... 'கமதிபுற' ல தானா இருந்த.
இதுக்காகவா என்ன விட்டு பாேன கனல் பேபி.."



நினைவு நிஜமாகுமா.....
 
Last edited:
அந்த சுரேஷ்ஷை ஓங்கி ஒரு அப்பு அப்பாமல் சட்டையைப் போய் பிடிக்கிறயே கனலி
ஹா ஹா ஹா
ஆனந்த்துக்கும் விஷ்வஜித்துக்கும் கனல் பேபி நல்ல மரியாதை கொடுக்கிறாள்
சுரேஷ் நாயை விஜியிடம் கனலி போட்டு கொடுத்து இருக்க வேண்டும்
வாடி போடின்னு பேசின அவனை சும்மா விட்டிருக்கக் கூடாது
முதலாளி விஷ்வஜித்தான் நாத்தனாரின் கணவன்னு தெரிஞ்ச பூஜாப் பேய் என்ன செய்வாள்?
வாலைச் சுருட்டிக்கிட்டு ஒழுங்கா இருப்பாளா?
இல்லை திரும்பவும் ஏதாவது செய்து நல்லா வாங்கிக் கட்டிக்குவாளா?
 
Last edited:
Top