Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதலாகி காதல் செய்வோமே 08

Advertisement

lekha_1

Active member
Member
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்...

இதோ அடுத்த பதிவு... சென்ற எபிக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி...


காதல் 08

1210


“டேய் அண்ணா… இப்போ நீ அவன விடப்போறியா இல்லையா?” எறு கத்தியவாறு முகிலின் முன் நின்றிருந்தாள் அவன் தங்கை அயினி. விடுமுறைக்காக அன்று காலை தான் வீட்டிற்கு வந்து இறங்கியிருந்தாள். சிறிது நேரத்தில் அங்கே வந்த சக்தி வழக்கம் போல அவளை வம்பிழுக்க, காளி இறங்கியது அவளுக்குள். அதன் விளைவாக அவனை பிரட்டி எடுக்க தயாராக, தன் நண்பனை காக்க தானே களத்தில் குதித்திருந்தான் முகில்.

“விடும்மா… அவன் வம்பிழுக்காம வேற யாரு வம்பிழுப்பா?” என்று சக்திக்கு வக்காலத்து வாங்கினான்.

“ஏன் சொல்லமாட்ட நீ? அவனாவது என்ன வம்பிழுக்கறதுல ஒரு நாயமிருக்கு. நீயும் தான் இருக்கியே! பொறந்தவள ஓட்டுறவனுக்கு ஒத்து ஊதுவ. எனக்கு தானடா நீ சப்போர்ட் பண்ணனும்?” என்று கேள்வி எழுப்பினாள் அவள்.

சக்தி அவர்களுக்கு முறைப்பையன் உறவு வருவதால் காணும் இடம் எல்லாம் அவளை கலாய்ப்பது வழக்கம். அவன் கோடு போட்டால், அதில் ரோடு போட்டு ட்ராக்டர் ஓட்டுவது முகிலின் வேலை. அந்த கடுப்பை இன்று வார்த்தையில் கேட்டே விட்டாள் அயினி.

“ஏன்னா அவன் என் நண்பன்!” என்று இருகை விரித்து முகில் சொல்ல, ‘அப்போ வாங்கிக்கோ!’ என மனதில் நினைத்தவாறு தன் கையில் இருந்த தலையணையை முகிலை நோக்கி வீசினாள்.

முகில் உடனே குனிந்துகொள்ள, இதை எதிர்பார்க்காது அவன் பின்னால் நின்றிருந்த சக்தியின் முகத்தில் அடித்தது.

இதனைக் கண்டு இருவரும் சிரிக்க, ‘நல்ல நண்பன்டா நீ’ என்பதுபோல் முகிலை முறைத்துவிட்டு, “ஏன்மா? ஏன்?” என வடிவேலு மாடுலேஷனில் கேட்டான்.

“என்னை ஓட்டினில்ல.. வாங்கிக்கோ!” என்று மேலும் அவனை அடிக்க பாய்ந்தாள்.

“ஹே! என்ற மொறப்பொண்ண நா ஓட்டாம வேற ஆரு ஓட்டுவா?” என்று இடுப்பில் கை வைத்து கேட்க,

“உனக்கு நா மட்டுந்தா மொறையா? ஆதினி இல்ல? அவ கூட இருந்தாலும் என்னைய மட்டுந்தா நீ கலாய்க்கிற” என்று குறைபட்டாள் அயினி.

“அவளையெல்லாம் ஓட்டமுடியுமா? நீ தான நம்ம வீட்டு புள்ள” என்று சக்தி கூறியவாறு திரும்பிப் பார்க்க, வீட்டு வாசலில் நின்றுகொண்டிருந்தாள் ஆதினி.

அயினி வந்திருப்பதைக் கேள்வியுற்று அவளைக் காண வந்தவள் காதில் இருவரின் பேச்சும் விழ, ‘அப்போ நான் அவனுக்கு முக்கியமில்லையா? விளையாட்டுக்குத் தான் என் பின்னால வந்தானா?’ என மனம் கேட்டது. ஏனோ, அவன் தன்னை மூன்றாவது மனுஷியைப் போல் குறிப்பிட்டது துளியும் பிடிக்கவில்லை அவளுக்கு.

“ஏ ஆதி! வாடி! எப்படி இருக்க?” என்று கேட்டவாறு ஆதினியை உள்ளே அழைத்தாள் அயினி.

அயினியை மறுக்கமுடியாமல் அங்கே சற்று நேரம் இருந்தாலும், சக்தியை முறைத்துக்கொண்டே இருந்தாள் ஆதினி.

‘நம்மாளு ஏன் இப்போ நம்மல இப்படி மொறக்குது? இன்னைக்கு நா எதுவும் பண்ணவும் இல்லையே!’ என்று பேந்தப் பேந்த முழித்தவாறு நின்றிருந்தான் அவன்.

இதனைக் கண்ட முகில் நமட்டு சிரிப்புடன் தன் கைப்பேசியை எடுத்து வெளியேறினான், தன் காதல் பைங்கிளியுடன் கடலை போட.


*******

“ஹாய் முகி… என்ன, சாருக்கு நல்லா நேரம் போகுது போல…” என்று கேட்டவளுக்கு முன் தன் தட்டைக் காட்டி, “ஓ… நல்லாவே பொழுது போகுது…” என்றான்.

“ஹே! இது என்ன, வெள்ளையா இருக்கு… ரசகுல்லாவா?” என்று சப்புகொட்டியவாறு கேட்டாள் அனிலா.

“இது ரவாலட்டு. அயினி வந்திருக்கா. அவளுக்கு பிடிக்கும்னு நைட்டே அம்மா செய்துட்டாங்க” என்றவனுக்கு பிற்பாடலாக ‘அம்மா… இங்க நான் வெச்சுட்டு போயிருந்த தட்டைக் காணோம்மா’ என்ற அயினியின் குரல் கேட்டது.

“அவ உன் தங்கை தான? பேர் வித்தியாசமாக இருக்கு” என்றாள் அனிலா.

“அந்த பேருக்கு அன்னபூரணின்னு அர்த்தம். நிஜமா அவ” என்றவன் தன் தட்டை ஒருமுறை காட்டி, “அன்னபூரணிதான். அவ கிட்ட இருந்து நான் எப்பவும் புடுங்கிப்பேன்” என்று கண்சிமிட்ட, சிரித்தாள் அனிலா.

“வீட்டில் யாராவது இப்படி விளையாட இருந்தால் நல்லா இருக்கும்ல… மாமா வீட்டுக்கு போனால் ரொம்ப ஜாலியா இருப்பேன்” என்றவள் பேசியவாறே தங்கள் வீட்டின் டைனிங் டேபிளில் வந்தமர்ந்தாள்.

அதற்குள் அயினியின் கத்தல் தாங்கமுடியாமல், “கொஞ்சம் வைட் பண்ணு… கட் பண்ணிட்டு கூப்பிடறேன்” என்று அணைக்க சென்றவனை, “முகி… கட் பண்ணாத… எப்படி சண்டை போடறீங்கன்னு பார்க்கிறேன்” என்று அவள் கண்களில் ஆசையோடு கூற, அதனை மறுக்க விரும்பாதவன், கேமிராவில் அனைத்தும் தெரியுமாறு சட்டைப் பையில் வைத்து உள்ளே சென்றான்.

“என்னமோ கில்லில தங்கச்சி சொன்னமாதிரி நீயும் தட்டை காணோம்னு சொல்லிட்டு இருக்க… இந்த உன் தட்டு” என்று வெறும் தட்டை அவள் முன் நீட்ட, “அடப்பாவி! மொத்தமா ஆட்டைய போட்டுட்டியா… எனக்கு…” என்று உதட்டை பிதுக்க, “போய் அம்மாகிட்ட கேளு போ!” என்றவன் அவளை விட்டு நகர, அவனைப் பிடித்து அயினி இழுக்க, அதனை முகில் தடுக்க என்று, அங்கே ஒரு அடிதடி சண்டை ஆரம்பமானது.

இந்த களேபரத்தில் முகிலின் கைப்பேசி தரையில் வீசப்பட, அதுவரை சிரித்து ரசித்துக்கொண்டிருந்தவள் கலவரம் கைக்கலப்பாகும்போதே காலை கட் செய்துவிட்டு ஓடிவிட்டாள்.

சில நேரமோ பல யுகங்களோ, இருவரும் சுற்றியுள்ள அனைவரையும் உண்டு இல்லையென ஆக்கிவிட்டு, தந்தையின் குரல் கேட்டதும் தங்களுக்கு நடுவே வெள்ளைக்கொடியை பறக்கவிட்டு வெள்ளைக்கொடி வேந்தராகினர். (ஓ… மிஸ்டர் புலிக்கேசி… சூப்பர்!)

இருவரும் தங்கள் அறைக்குள் புகுந்தபின்பே தன் கைப்பேசியின் நினைவு வர, அதுவோ ஹாலிலே இருந்து ஓடிவர முடியாமல் அங்கேயே கிடந்தது.

‘சே!’ என்று தலையில் அடித்துக்கொண்டவன் அதனை எடுத்து அறையுள் நுழைந்து மீண்டும் அனிலாவை அழைத்தான்.

மறுமுனையில் இருந்தவளோ சிரிப்போடு அழைப்பை ஏற்க, அதுவே சொன்னது, அவள் எதுவரை பார்த்தாள் என்று.

“இப்படியா அடிச்சுப்பீங்க? வீட்டுல குத்துச்சண்டை பார்க்க டீவியை ஆன் செய்ய வேண்டாம் போலவே!” என்று கேட்டவளுக்கு ஒரு அசட்டுச் சிரிப்பை பதிலாகத் தந்தான்.

அதில் சில நொடிகள் ஈர்க்கப்பட்டவளோ, ‘கொல்றடா என்னய… கண்ணடிக்கும்போது ரொமாண்டிக் ஹீரோவா தெரியுற. இப்போ இப்படி சிரிக்கும்போது சின்ன குழந்தை மாதிரி இருக்க. அப்பப்போ பெரியவன் மாதிரி வழிக்காட்டுற… உன்னோட ஒவ்வொரு பரிணாமத்தை பார்க்கும்போதும் ஏதோ ஒன்னும் உன் கிட்ட என்ன ஈர்க்குது!’ என்று அவள் நினைத்துக்கொண்டிருக்க,

அனிலாவின் பார்வையைக் கண்டவன், அவள் கண்களில் கரைந்துகொண்டிருந்தான்.

இருவர் மட்டுமே இருக்க அது அவர்களது உலகம் இல்லையே!

“அண்ணா…!” என்று குரல் கொடுத்தாள் அயினி வெளியில் இருந்து. அவள் குரலில் கலைந்தவள் காதில் விழுந்தது வெளியில் கேட்ட அந்த பாடல்.

“இந்த சாங்கை எங்கேயோ கேட்டிருக்கேனே! பைகாம் தானே?” என்று அவள் ஆச்சரியமாக கேட்க,

“காற்றே என் வாசல் வந்தாய்” என்றுவிட்டு விரைந்து சென்றுவிட்டான் முகில்.

‘போடா…’ என்று நினைத்தவள் அந்த பாடலைப் பற்றிய ஆராய்ச்சியில் மூழ்கினாள்.

முகில் சொன்ன பாடலை தேடியெடுத்து கேட்க, அடுத்து ஹிந்தியிலும் கேட்டவளுக்கு ஒரு எண்ணம் தோன்ற, அதை முன்பே யாரேனும் செய்திருக்கிறார்களா என்று யூட்யூபிடம் விசாரிக்க, அதுவோ உதடு பிதுக்கி இல்லை என்றது.

சந்தோஷத்துடன் செயலில் இறங்கிவிட்டாள் அனிலா.


*******

இரண்டு நாட்களாக அனிலாவுடன் பேசவே முடியவில்லை முகிலால். புதியதாக ஒரு பாடல் பதிவில் இருக்கிறாளாம். என்னவென்று கேட்டவனுக்கு பதில் தரவேயில்லை அவள். அந்த கடுப்பில் இருந்தான் அவன்.

அதனை தனிக்குமாறு வந்தது அந்த வாய்ஸ் மெசேஜ்.

“ஹாய் முகி… நீ அன்னைக்கு சொன்னியே, அந்த சாங்கை யூட்யூபில் கேட்டப்போ நீ அதற்கு கீழே ரொம்ப பிடித்த பாடல்ன்னு கமெண்ட் செய்திருந்த. எனக்கு அது ஹிந்தில பிடிக்கும். சோ, தமிழ், ஹிந்தி இரண்டும் சேர்ந்து இதோ! உனக்கு தான் முதலில் போட்டு காட்டனும்னு நான் மட்டுமே தனியா ரெக்கார்ட் செய்து அனுப்பறேன். நீ ஓகே சொன்னா தான் அப்லோட் செய்வேன்” என்று முடிவடைந்ததை கேட்டவனுக்கு ‘என்ன சொல்றா இவ?’ என்ற யோசனை வர, அடுத்து வந்தது ஒரு வீடியோ.

அதனை உயிர்ப்பித்தவன் முன் தோன்றினாள் அனிலா.

பின்னனி இசை ஒலிக்க, இரு மொழிகளையும் கலந்து பாடினாள் அனிலா. அதில் மெய்மறந்து நின்றிருந்தான் முகில்.


காற்றே என் வாசல் வந்தாய்

மெதுவாக கதவு திறந்தாய்

ரிம்ஜிம் குஷியோன் கி பர்சே ஹம் பே பர்க்கா

(மழை நம்மேல் மகிழ்ச்சியை தூவுகின்றன)

நேற்று நீ எங்கே இருந்தாய்

சஜ்னி தி தேரி டோலி

(டோலி – பல்லக்கு. அதனை அலங்கரிக்க சென்றிருந்தேன்)

சுவாசத்தில் இருந்ததாக சொல்லிச் சென்றாய்!

துள்ளிவரும் காற்றே துள்ளிவரும் காற்றே தாய்மொழி பேசு

நீலே ககன் கோ பாதல் பண்கே சூஜாவுன் மே

(நீலவானை மேகமாகி தொடுவேன் நானே)

துள்ளிவரும் காற்றே துள்ளிவரும் காற்றே தாய்மொழி பேசு…



கார்காலம் அழைக்கும்போது ஒளிந்துகொள்ள நீ வேண்டும்

தாவணிக்குடை பிடிப்பாயா?

ஹை ஜான் ஜப் தக் மை ரஹூன் தேரே தில் மே ஹி

(என்னுள் உயிர் இருக்கும்வரை உன் இதயத்தில் வாழ்வேனே)

வஹி ஹை மேரா ஆஷியான்

(அதுவே இனி என் உலகம்)

நீ என்னருகில் வந்து நெளிய

நான் உன் மனதில் சென்று ஒளிய

பேகானி துனியா மே ஹை தூ ஹி அப்னா

(தெரியாத உலகில் நீ மட்டுமே அறிந்தவன்)

பூக்களுக்குள்ளே தேனுள்ள வரையில் காதலர் வாழ்க

நீலே ககன் கோ பாதல் பண்கே சூஜாவுன் மே

(நீலவானை மேகமாகி தொடுவேன் நானே)

பூமிக்கு மேலே வானுள்ள வரையில் காதலும் வாழ்க



நெடுங்காலம் சிப்பிக்குள்ளே உருண்டு நிற்கும் முத்து போல்

என் பெண்மை திரண்டு நிற்கிறதே!

சாஹட் கா மௌசம் ஆயா, தன்ஹாயி சங்க் லாயா

(காதலின் காலம் வந்தது, தனிமையையும் சேர்த்தே தந்தது)

என் நெஞ்சம் மருண்டு நிற்கிறதே!

மதுஹோஷி அப் நா டூடே

(இந்த மயக்கத்தில் இருந்து வெளிவர வேண்டாம்)

உன் வருகையினால் வயதறிந்தேன்

ஹை சங்க் தேரா, ரங் தேரா, மேரா க்யா?

(அனைத்தும் உனது, எனக்கென்று என்ன இருக்கிறது?)

பூக்களுக்குள்ளே தேனுள்ள வரையில் காதலர் வாழ்க

நீலே ககன் கோ பாதல் பண்கே சூஜாவுன் மே

(நீலவானை மேகமாகி தொடுவேன் நானே)

பூமிக்கு மேலே வானுள்ள வரையில் காதலும் வாழ்க



காற்றே என் வாசல் வந்தாய்

தாமன் சே பந்த் ஜாயே தாமன்

(நம் இதயங்கள் இணையட்டுமே)

ஜாகி ஆங்கோன் மே மேரி ஜாகா சப்னா

(என் விழிகளில் இந்த கனவு விரிகின்றது)

துள்ளிவரும் காற்றே துள்ளிவரும் காற்றே தாய்மொழி பேசு

நிலவுள்ள வரையில் நிலமுள்ள வரையில் நெஞ்சினில் வீசு

துள்ளிவரும் காற்றே துள்ளிவரும் காற்றே தாய்மொழி பேசு…


அவள் தேர்ந்தெடுத்த வரிகளிலேயே அவள் அறியாத காதலை அவளையறியாமலேயே தெறிக்கவிட்டிருந்தாள் அனிலா. அதனை புரியாமல், அல்லது கவனிக்காமல் அவள் குரலை மட்டும் கேட்டு சூப்பர் என்று செய்தியனுப்பினான் முகில். (உன்னையெல்லாம் ஏன்டா சுனாமி தூக்கல?)

அதற்காகவே காத்திருந்தாற்போல் அனிலா அவனுக்கு அழைக்க, மீண்டும் ஒரு முறை சூப்பர் என்றான் முகில். அவன் பாடல் வரிகளைப்பற்றி ஏதேனும் கேட்பான் என்று அனிலா நினைத்திருக்க, அவனுக்கு அது புரியவேயில்லை. (நீ தான் ‘அன்று ஊமைப்பெண்ணல்லோ’ன்னு பாடிட்டு இருக்க. ஆனா, அந்த சீன் எல்லாம் முகில்கிட்ட இருந்து வராது போல)

அந்த எண்ணத்தை ஒதுக்கிவிட்டு இருவரும் பேச, அப்போது அங்கே வந்த தன் அம்மாவிடமும் முகிலை அறிமுகப்படுத்தினாள் அனிலா.

அந்த இதமான சூழலை கெடுக்கவென்றே வந்தார் அனிலாவின் பாட்டி.

“புதுசா யாரோடயோ பழகுறாபோல தெரியுதே!” என்று அவர் கேட்க,

“ஆமாம் பாட்டி…” என்றவள் அதனை பெரியதாக கண்டுகொள்ளவில்லை. ஆனால், அவரா விடுபவர்?

“பாத்தா நம்ம ஊர் மாதிரி தெரியலியே!” என்று சற்று சந்தேகத்தோடு கேட்க, அவர் பேச்சு எங்கே செல்லும் என்பதை உணர்ந்தவள், முகிலிடம் பிறகு பேசுவதாக கூறி காலை கட் செய்தாள். (அதிகம் வீடியோ கால் தான் இருவருக்குள்ளும்)

“ஆமாம்… நம்ம ஊர் இல்ல… அதுக்கு என்ன இப்போ?” என்று பதிலுக்கு புருவம் உயர்த்தி கேட்டாள் பேத்தி.

“இங்க பாரு! எனக்கு நீ அந்த பாயல் கூட பழகுறதே சுத்தமா பிடிக்கல. இதில் இப்போ இந்தப் பையன் வேற. பழையது எல்லாம் மறந்துபோச்சோ? இவங்களோட எந்த தொடர்பும் இல்லாம இருக்கிறதுதான் நமக்கு நல்லது” என்று அவர் பேசிக்கொண்டே போக,

“என் ஃப்ரெண்ட்ஸைப் பற்றி எதுவும் பேசாதீங்க பாட்டி!” என்று எச்சரித்தவள், “என்னைக்கோ நடந்ததை இன்னும் பிடித்து தொங்குவது நியாயமா?” என்று கேட்க,

“நீ பேசிட்டு இருந்தத பார்த்தா ஃப்ரெண்ட் மாதிரி தெரியல… எங்கேயாவது காதலிக்கிறேன்னு வந்து நில்லு… உன்னை அப்போ பார்த்துக்கறேன்” என்று கூறியவர், அவள் கேட்ட கேள்விக்கு பதில் கூறாமலே நகர்ந்தார், நான் அப்படித்தான் தொங்குவேன் என்று சொல்லாமல் சொல்லி. (அந்தம்மா வேதாளம்… அவங்களை இறக்க விக்கிரமாதித்தியன் தான் வரனும் போல! வரட்டும்!)

இருவரது பேச்சுவார்த்தையையும் கேட்டுக்கொண்டிருந்த அனிலாவின் தாயார் ‘ஏன் இப்படி?’ என்பது போல பார்க்க, அவரையும் இலவசமாக முறைத்தவள், “சே! எப்போ பார்த்தாலும் ஏதாவது சொல்லிக்கொண்டே இருக்க வேண்டியது! அப்படி என்னதான் இவங்களுக்கு பிரச்சனையோ? அங்க இருக்கவங்க கூட எல்லாத்தையும் மறந்துருப்பாங்க. ஆனால், இவங்க இன்னும் அப்படியே இருக்காங்க” என்று சலித்தவாறு அறைக்குள் புகுந்து தன்னை சமன்படுத்துவதற்காக கிடாரை கையில் எடுத்துக்கொண்டாள்.

 
Top