Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதலாகி காதல் செய்வோமே 17

Advertisement

lekha_1

Active member
Member
வணக்கம் ஃப்ரெண்ட்ஸ்...

இதோ, கதையின் அடுத்த பதிவு.

காதல் 17

1274

நினைத்துப்பாருங்கள்! நம் வீட்டின் முன் யாரோ ஒரு மனிதர் ஒரு கோட்டினை இட்டு, இனி இருவரும் தனித்தனி என்றால்? அந்த கோட்டின் மறுப்பக்கம் நம் வேண்டப்பட்டவர் இருந்தால்? இருவரில் ஒருவர் மற்றவர் இடத்திற்கு வந்தாக வேண்டுமல்லவா?

வரைபடத்தில் கிழித்த ஒரு கோடு நம் நாட்டின் சரித்திரத்தை மாற்றியது. அதன் விளைவுகளை இன்றளவும் நாம் எதிர்கொண்டிருக்கின்றோம். அன்று, அதனால் என்னென்ன அனர்த்தங்கள் நிகழ்ந்தன என்பதை வார்த்தைகளால் வடிக்க இயலாது.

எங்கோ சிறிதாக பற்ற வைக்கப்பட்ட பொறி தீயாக வளர்ந்தது. உண்மையில், அது எங்கிருந்து ஆரம்பமானது, எதனால் என்பதை இன்றளவும் அறிய முடியவில்லை. தானாக தோன்றிய சில தலைவர்கள் தன்னை சுற்றியிருந்தவர்களை தூண்டிவிட்டு மற்றவர்களை தாக்க சொல்லினர். அதற்கு முக்கிய காரணமாக இருந்தது, அவர்களின் நிலங்கள். அடுத்த தேசத்திற்கு செல்ல வேண்டியவர்கள் தானே என நினைத்தவர்கள், தனவந்தர்களை அடித்து துரத்தி சொத்தை அபகரித்துக்கொள்ள முயல, அதில் எப்போது கொல்வதும், பெண்களை களவாடுவதும் சேர்ந்துகொண்டன என்பது தெரியவில்லை.

பெற்றவளின் கண்முன்னே அவள் பாராட்டி சீராட்டி வளர்த்த மகனை உரு தெரியாதவாறு வெட்டிப்போட்டார்கள். வீடுகளை அதனுள் இருந்த மனிதர்களோடு தீயிட்டு கொளுத்தினர். எதுவும் வேண்டாம், எங்களை விட்டுவிடுங்கள் என்று ஓடிய மனிதர்களையும் விடவில்லை. நாட்டின் எல்லையை கடக்கும்போது ரயில்பெட்டிகள் பயணிகளை இறக்குவதற்குபதில், பிணங்களை இறக்கின.

நம் குடும்பத்தவர்களே தங்கள் பெண்களுக்கு விஷம் கொடுப்பது கொடுமையல்லவா? அதுவும் நடந்தது அங்கே. கூட்டம் கூட்டமாக பெண்கள் பால்மணம் மாறாத குழந்தைகளை, அவர்கள் பெண்களாக பிறந்த ஒரே காரணத்திற்காக தங்களோடு அழைத்துக்கொண்டு கிணற்றில் விழுந்த சம்பவங்களும் நடந்தன.

எங்கே நிம்மதி என பயந்தோடினர் அனைவரும்.

இந்த கலவரத்தின் மத்தியில் தன்னுயிரைக் காண ஓடிக்கொண்டிருந்தாள் நுஸ்ரத்.


*****

சில நாட்களுக்கு முன் வரை அவள் வாழ்க்கை நன்றாகவே சென்றுகொண்டிருந்தது. தன் வீட்டை அடைந்த ராவல், அவள் குடும்பத்திற்கு ஒரு கடிதம் எழுத, அதன் உரையினுள் அவளுக்கும் மறைத்து ஒரு கடிதத்தை வைத்திருந்தான். எதிர்பாராத விதமாக அதனை பார்த்த அவள் குடும்பத்தினர் அவனை மறக்குமாறு கூற, திட்டவட்டமாக மறுத்திருந்தாள் நுஸ்ரத். அதன் விளைவாக அவள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டாள்.

அதுவரை அவர்கள் இடையில் வராத பேதமெல்லாம் அவர்கள் காதலிப்பதால் மட்டுமே ஓடிவந்து நடுவில் நின்றுகொண்டன. நட்பும் அன்புதான், காதலும் அன்பு தானே? அன்புக்கு ஏது பேதமெல்லாம்?

நுஸ்ரத்தின் உறுதிகண்டு கொழுப்பென பெயரிட்டனர். அவள் தன் காதலை யாசிப்பதை பெற்றவர்களை மதிக்காதவள் என்னும் சாயம் பூசினர். ஒரு கட்டத்தில் உண்ணா நோன்பை அவள் தொடங்க, செத்து மடி என்று விட்டும்விட்டனர் அவள் பெற்றோர்.

நள்ளிரவு நேரத்தில் அவள் அறையின் தாழ் திறக்கப்பட, இந்த நேரத்தில் எந்த சண்டையோ என சோர்வுடன் பார்த்தவளின் விழிகள் ஆச்சரியத்தில் விரிந்தன அவள் கடைசி தங்கையைக் கண்டு.

“அக்கா… உனக்காக நான் பின்பக்க வழிய திறந்து வெச்சிருக்கேன்… இப்போவே தப்பிச்சு ராவல் அண்ணாகிட்ட போயிடுக்கா” என்றவளை கண்ணீருடன் கட்டிக்கொண்டாள் நுஸ்ரத்.

அப்போதும் அங்கிருந்து செல்ல வெகுவாக யோசித்தாள். பல வாரமோ, பல வருடமோ, தன் பெற்றோரின் சம்மதத்தோடே அவனை கைபிடிக்க விரும்பினாள் அந்த காதலி. ஆனாலும், அவள் தங்கை விடவில்லை.

“போ…” என வெளியே தள்ளியவள் கதவை சாற்றிவிட்டு சென்றுவிட்டாள்.

அங்கேயே அமர்ந்து சிறிது நேரம் அழுதுவிட்டு, பின்பு ராவலுடன் வந்து சமாதானப்படுத்தலாம் என்னும் முடிவுடன் அங்கிருந்து நகர்ந்தவள் அறியவில்லை, இனி அவள் இவ்விடம் வரப்போவதும் இல்லை, தன் குடும்பத்தவர்களை காணப்போவதும் இல்லை என.

கையில் காசு எதுவும் இல்லாமல் எவ்வாறு அவ்வளவு தொலைவில் செல்வது என்று யோசித்தவளுக்கு உதவியாக அவள் காதில் மினுமினுத்தது தோடு. அதனை தெரிந்தவரிடம் அவசரத்திற்கு வித்தவள் அடுத்து எவ்வாறு செல்வது என்ற எண்ணத்தில் நின்றாள்.

அதுவரை அனைத்தும் நன்றாகவே நடந்தது. ஆனால், லாகூரை நோக்கி செல்லவேண்டியவள் அங்கே செல்லமுடியவில்லை. வழியெங்கும் கலவரம்! ஒருவர் மற்றவரை அடிக்க, கொல்ல, தீயிட்டு கொழுத்த என உயிருக்கு பயந்து ஒவ்வொருவரும் மான் கூட்டத்தினுள் ஓநாய் புகுந்தாற்போல் சிதறி ஓடிக்கொண்டிருந்தனர்.

அதனை கண்டவளுக்கு தான் எங்கிருக்கிறோம் என்றே புரியவில்லை. அங்கிருந்து ஓடவேண்டும் என்பது அவள் அறிவிற்கு எட்டினாலும், அவளால் அதனை செயல்படுத்த முடியவில்லை.

அப்போது, ஒரு கை அவளை பிடித்திழுத்து மறைவில் தள்ளியது. அவள் கத்தப்போக, வாயை பொத்திய அந்த ஆடவன், “ஷ்…. நான் தான் நுஸ்ரத், வீர்” என்று கூற, அதில் அமைதியடைந்தாள்.

வீர் அவள் வகுப்புத் தோழன். அவன் தான் தனீயாக நிற்கும் நுஸ்ரத்தை கண்டு தனியே இழுத்து வந்தான். இல்லையென்றால் கலவரக்காரர்களின் கண்களில் சிக்கி என்னவாகியிருப்பாளோ?

சிறிது தைரியம் வரப்பெற்றவள், “என்னவாயிற்று?” என மெல்ல வினவினாள்.

‘உனக்கு தெரியாதா?’ என்னும் விதமாக அவளை பார்த்தவன், அவள் முகத்தில் இருந்த அறியாமையைக் கண்டு நடந்ததை விளக்கினான்.

நாட்டின் எல்லைகள் வகுக்கப்பட்டிருக்க, இரு பிரிவினர்களுக்கிடையே கலவரம் துவங்கியது. இரண்டு தேசங்களிலும் அனேக இடங்களில் சண்டைகள் நடக்க, அதனை அடக்கமுடியாமல் தவித்தது காவற்படை. அவர்கள் இருந்ததோ சில ஆயிரம். ஆனால், கலவரக்காரர்களின் எண்ணிக்கை, அப்போதைய மொத்த ஜனத்தொகையில் ஐந்து சதவீதம்.

இதனை அவன் மூலம் அறிந்துகொண்டவள் அங்கிருந்து செல்ல துடித்தாள். தன் குடும்பம் எவ்வாறு இருக்கிறார்களோ? அமிர்தசரஸில் இருந்து வெளியேறிவிட்டாளே!

நான் வீட்டிற்கு போகனும் என்றவளை தடுத்து தன்னோடு வைத்துக்கொண்டான் அவன். தற்போதைய நிலவரப்படி, அவளுக்கு அவனைத் தவிர வேறு எங்கும் பாதுகாப்பு இருக்க முடியாது. இருந்தும் அதனை புரிந்துகொள்ளாமல் அடம்பிடித்தாள் நுஸ்ரத்.

அவளை அடக்கியவன் அங்கிருந்து அவளை அழைத்துச் செல்வதற்காக, அவள் வீட்டின் அருகில் எந்த கலவரமும் இல்லை என்றும், ஆனால், நகரத்திற்கு செல்லும் வழி முழுவதும் பிரச்சினையாகி இருக்கிறதென்றும் கூற, தன் வீட்டினருக்கு ஆபத்தில்லை என்பதிலேயே ஆறுதலடைந்திருந்தாள் நுஸ்ரத். ஆனாலும், அவர்களை அழைத்துக்கொண்டு செல்லவேண்டும் என அவள் கூற, தான் அவர்களை அழைத்துவருவதாக வாக்களித்து அவளை அங்கிருந்து அப்புறப்படுத்தினான் வீர். அதைப்போல் தன் நண்பர்களை அவள் வீட்டின் புறம் அனுப்பிவிட்டு அவளோடு பயணித்தான்.

அவன் வாக்கு என்றைக்குமே நிறைவேறாது, அதனை நிறைவேற்ற அவன் உயிரோடு இருக்கப்போவதில்லை என்பது அவனுக்கு அப்போது தெரியாதல்லவா?


*****

லாகூர் செல்லும் வழி முழுவதும் ரத்த ஆறு ஓட, அத்தடம் வழியே அவளை அழைத்துச் செல்வது அவள் உயிருக்கு ஆபத்தாக முடியலாம் என்றெண்ணியவன், அவளை ராஜபுதினத்தின் வழியே அழைத்துச் செல்லலானான்.

வழிநெடுக காணக்கூடாத காட்சிகளை கண்டவளுக்கு அதனை செய்தது யார் என்பது மனதில் பதிந்து போனது. அவர்களில் ஒருவருடன் தான் தாம் தற்போது பயணித்துக்கொண்டிருக்கிறோம் என்பதை அவள் மனம் மறந்துவிட்டது.

மறைந்து சென்றவர்கள் இறுதியில் குஜராத்தின் எல்லைக்கு வந்து சேர்ந்தனர். அங்கிருந்து ஓடும் ரயில்பாதை வழியாக மறைந்து மறைந்து அந்நாட்டின் எல்லைவரை வந்து விட்டனர் இருவரும். இதற்கே ஒருவாரம் ஆகியிருக்க, அதற்குள் கலவரம் மிகுந்திருந்தது.

அங்கிருந்து சிந்த் பகுதிக்குள் அவள் எளிதாக நுழைந்துவிடலாம். பலர் அவ்வழியாக சென்றுகொண்டிருக்க, தானும் அவர்களுடன் சேர்ந்து வீரிடம் இருந்து விடைபெற்று அயல்தேசமாகிய அங்கே சென்றாள், அவன் தன் குடும்பத்தாரை பத்திரமாக அனுப்பி வைப்பான் என நம்பி.


*****

தன்னோடு வந்தவர்கள் அனைவரும் ஒவ்வொரு பக்கமாக பிரிந்து செல்ல, அந்த வரண்ட பாலைவனத்தில் அவள் மட்டும் ஒரு ஊரின் பெயரைக் கொண்டு ராவலை தேடியவாறு சென்றாள்.

அவள் நல்லநேரமோ அல்லது கெட்ட நேரமோ, அந்த பகுதிகளில் கலவரம் நடக்கவில்லை. நாட்டின் தொடப்படாத எல்லையில் அச்சிற்றூர்கள் அமைந்திருக்க, அங்கே கலவரக்காரர்களின் காலடி படவேயில்லை.

ஒருவழியாக ராவலின் வீட்டை அடைந்தவளின் செவிகளை அடைய ஒரு அதிர்ச்சியான செய்தி காத்திருந்தது. ராவல் அவளைத் தேடி அவள் வீட்டிற்கு சென்றிருந்தான், கலவரம் பற்றி அறிந்தவுடன்.
 
Top