Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதல் கண்ட கணமே- பாகம் 17

Advertisement

பிரேமாமகள்

Well-known member
Member
பாகம் – 17



இடம்: அர்ஜூன் வீடு

நேரம்: உண்மைகளைத் தெரிந்துகொள்ள வேண்டிய தருணம்



என் காதல் நிஜமானது. ஒரு கோழையைப் போல நான் அழுது கொண்டிருக்கப் போவதில்லை. அர்ஜூனை நேராக சந்தித்து, உண்மையை அறிந்துகொள்ள அவன் வீட்டிற்குச் சென்றேன்.

பிளாட் கதவை தட்டிய போது, திறக்கவில்லை.

’உங்க வீட்டு வாசலில்தான் நிற்கிறேன், கதவைத் திறங்க’ என்று மெசேஜ் அனுப்பிய போது, ‘வெளியே இருக்கேன், நீ வீட்டுக்குக் போ’ என்று பதில் அனுப்பினான்.

‘’பொய் சொல்லாதீங்க, உங்க கார் வெளியில் நிற்குது, இப்ப என்னைப் பார்க்க முடியாதுன்னு சொன்னீங்கன்னா, ஆயுசுக்கும் என்னைப் பார்க்க முடியாது, பரவாயில்லையா?’’ என்று கதவருகில் நின்று கத்தினேன்.

பட்டென கதவைத் திறந்தான். ஒருசில நிமிடங்கள் எதுவும் பேசாமல், ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டிருந்தோம்.

உள்ளே செல்ல வழிவிட்டு, அவன் ஒதுங்கி நிற்கவும், எதுவும் பேசாமல் சென்று சோபாவில் அமர்ந்தேன். என்னருகில் தயங்கி தயங்கி அவனும் அமர்ந்தான். இவன் என்னை வெறுக்கவில்லை. இந்த முகத்தில் போலித்தனம் இல்லை, பின் ஏன் என்னைத் தவிர்க்கிறான்?

‘’என்னாச்சு உங்களுக்கு, என்ன பிரச்சனைன்னு சொன்னால்தானே தெரியும்?’’ என்றேன்.

‘’நீதான்டி என் பிரச்சனை, நீ மட்டும்தான்’’ என்றான் தலையைக் குனிந்தவாறு.

எதுவும் புரியாமல் அவனேயே பார்த்துக்கொண்டிருந்தேன்.

‘’இனி… உன்னை நான் நேசிக்கறேன்னு புரிஞ்சபிறகு இனிமேல் வாழப்போற ஒவ்வொரு நொடியும் , நீ எப்பவும் என் கண்பார்வையிலேயே இருக்கனும்ன்னு நினைச்சேன். அதுவும் ’ஐல் ஆப் வெயிட்’ போய்விட்டு வந்தபிறகு, நான் ஒரு நிலையில் இல்லை.

நீ கிட்டவர்றப்பெல்லாம், உன்னை கட்டிப்புடிக்கத் தோனுது, உன் நெருக்கம் என்னை இம்சிக்கிறது. நீ எனக்கானவள் என்று மனசு சொன்னாலும் அது உறுதியாகற வரைக்கும், என்னைக் கட்டுப்படுத்த முடியல.

எங்கே உன்னைப் பார்த்தால், நிதானம் தவறிடுவேன்னுதான், உன்னைத் தவிர்த்தேன். போனில் பேசினாலும் உன்னைத் தேடத் தோனும்ன்னுதான், நீ கூப்பிடறப்பெல்லாம் எடுக்கவில்லை’’ என்றவனை

அதற்குமேல் பேச விடாமல், பாய்ந்து அவனைக் கட்டிப்பிடித்துக் கொண்டேன். ஒரு நிமிடம் தடுமாறியவன், என்னை இறுக அணைத்து நெற்றியில் அழுத்தமாய் முத்தமொன்று தந்தான்.

இவனோடு நான் வாழும் வாழ்க்கையில் நிச்சயம் என்னை கலங்க வைக்க மாட்டான் என்று புரிந்தது.

இந்த பத்து நாட்களாக, பேச நினைத்தையெல்லாம் அவன் தோளில் சாய்ந்தபடி சொல்லிக்கொண்டிருந்தேன். அவன் சொன்ன பதில்கள், ‘சரிடி, சாரிடி.’ என்பது மட்டும்தான்.

மலரக்காவின் குழந்தைக்கு 3 மாதமாகிவிட்டது. இன்னும் சில மாதங்களில் அவர்கள் இங்கு வந்துவிடுவார்கள் என்ற தகவலைச் சொல்லும் போது, சரியாக என் போன் அடித்தது.

அதில் மின்னிய பெயர் ‘புருஷர்’

அர்ஜீனிடமிருந்து எழுந்து சென்று, பேசிவிட்டு வரும் போது, அவன் முகம் குழப்பத்தில் குழம்பியிருந்தது தெளிவாக தெரிந்தது.

‘’என்னாச்சு’’ என்றேன்

‘’இல்ல, அன்னிக்கு இதே நெம்பர்ல இருந்து அழைப்பு வந்தது. ஆனா பேச மாட்டேன்னு சொன்ன, இப்ப சிரிச்சு சிரிச்சு பேசறியே, மறுபடியும் உன்னை வளைக்கப் பார்க்கிறானா ?’’ என்றான்.

‘’ஆமா, அன்னிக்கு கோபத்தில் இருந்தேன், அதான் பேசல, இப்ப ராசியாகிட்டோம்’’ என்று மிக இயல்பாக கூறியதும் அர்ஜூன் முகம் வெளிறிவிட்டது.

பின்புதான் அவன் கேட்டது, எனக்கு முழுசாக உறைத்தது.

‘’ஆமா எனக்கு போன் பண்ணியது யாருன்னு நினைச்சீங்க?’’ என்றேன்.

‘’அதான், போனில் தெளிவா புருஷர்-ன்னு பதிவு பண்ணியிருக்கியே’’ என்றான் கடுகடுத்த குரலில்.

‘’க்கும்’ என்று அவன் தலையில் தட்டி,

‘’இது எங்கம்மாவோட போன், அவங்க 25 வது திருமண நாளுக்கு, எங்கப்பா ஸ்மார்ட் போன் வாங்கித் தந்தார். அதுல முதல்ல, ஆசையா, எங்கப்பா மொபைல் நெம்பரை ‘புருஷர்’ன்னு பதிவு பண்ணி வைச்சிருந்தாங்க.

லண்டன் வர்றதுக்கு முதல்நாள் ராத்திரி என் போன் கீழ விழுந்து உடைஞ்சிடுச்சு. அதான் அவசரத்துக்கு எங்கம்மா போனை எடுத்திட்டு வந்திட்டேன். எங்கம்மா சென்டினெட்டா பதிவு பண்ணியதை, ஏன் ‘அப்பா’ன்னு மாத்தனும், அவரோட பெயர் சுருக்கம்ன்னு நினைச்சுக்கலாம்ன்னு நானும் அப்படியே விட்டிட்டேன்.

பொதுவா எங்கக்காவோ, அம்மாவோ போன் பண்ணும் போது அப்பாவும் கூடப் பேசுவார். அவரா தேவையில்லாமல் போன் பண்ண மாட்டாருங்கிறதால, அந்த பெயர் எனக்கு உறுத்தலா தெரியல’’ என்று விளக்கினேன்.

‘’உங்கப்பாதான்னா, அன்னிக்கு நாம காரில் இருக்கும் போது ஏன் எடுத்துப் பேசல’’ என்று கேட்டான் அர்ஜூன்.

‘’என்னாச்சுன்னா, போன வருஷ பிறப்புக்கு எங்கண்ணன், எனக்குப் புடிக்கும்ன்னு ஆசையா ஒரு மீன் தொட்டி வாங்கித் தந்தான். அதுவும் எனக்கு பிடிச்ச ஆரஞ்ச் நிறத்தில் 2 குட்டி மீன்கள் இருக்கும். குழந்தைங்க மாதிரி அதைக் கொஞ்சுவேன்.

வீட்டுக்கு வந்த எங்க அத்தை, ‘அம்மு தான் லண்டன் ல இருக்காளே, இந்த தொட்டியை நான் எடுத்திட்டு போறேன்’னு சொல்ல, எங்கப்பாவும் தங்கச்சி பாசத்தில் என்னைக் கேட்காமல், மீன்களை குடுத்து அனுப்பிட்டார்.

எங்கண்ணன் ஆசையா வாங்கித் தந்ததை, எப்படி அவரோட தங்கச்சிக்கு தரலாம்ன்னு கோபத்தில், அவர்கிட்ட ஒரு மாசமா பேசலை. போன் பண்ணினாலும் எடுக்க மாட்டேன். இந்த புதுவருசத்துக்கு அதைவிட பெரிய மீன் தொட்டி வாங்கி வைச்ச பிறகுதான் சமாதானம் ஆனேன்.’’ என்று நடந்தவற்றைப் புரிய வைத்தேன்.

‘’அடிப்பாவி, மீன் குட்டிக்காக நீ போட்ட சண்டையில், என்னை பைத்தியம் மாதிரி அலைய விட்டுடியே?

உன் போனில் அந்த பெயரைப் பார்த்திட்டு நான் பட்ட பாடு உனக்கெங்கடி தெரியப் போகுது?’’ என்று நெஞ்சில் கைவைத்துப் புலம்பினான் அர்ஜூன்

‘’அப்ப, மீன் தொட்டியைத் தந்தது சரின்னு சொல்றீங்களா?’’ என்று பிடிவாதத்தில் சிணுங்கினேன்.

‘’இப்ப என்ன உனக்கு மீன் தான வேணும், நம்ம தோட்டத்து கிணத்தில் நிறைய மீன்கள் இருக்கு, பத்தலைன்னா சொல்லு, இன்னோரு கிணறு வெட்டி அதுல உனக்கு பிடிச்ச கலர் மீன்கள் வாங்கி விடறேன். மீனோட மீனா நாமும் சேர்ந்து நீந்தலாம்’’ என்றான் குறும்பு மின்ன.

‘’ தேங்க் யூ’’ என்றபடி அவன் கன்னத்தில் முத்தமிட்டுவிட்டு, கைக்குச் சிக்காமல் ஓடிவிட்டேன்.

காதல் வளரும்
 
ஏய் எப்படி என்னோட guess ஒரு அளவுக்கு மேட்ச் ஆகிடுச்சு.....

அர்ஜுன் உனக்கு அப்போ இப்படி ஷாக் கொடுக்குறதே வேலையா போச்சு அம்முக்கு
 
ஏய் எப்படி என்னோட guess ஒரு அளவுக்கு மேட்ச் ஆகிடுச்சு.....

அர்ஜுன் உனக்கு அப்போ இப்படி ஷாக் கொடுக்குறதே வேலையா போச்சு அம்முக்கு

கண்டுபிடிச்சிட்டீங்களா?

ஆமா.. அம்மு ஒரு குறும்புக்காரி
 
Top