Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

குவியமுடன் ஒரு காதல் 5

Advertisement

Admin

Admin
Member

அத்தியாயம் – 5

“ஏன்டி ஏற்கனவே அம்மா கல்யாணம் பத்தி எப்போ பேசுவாங்களோன்னு பயந்துட்டு இருக்கேன்… இதுல இந்த அத்தை வேற?? இவங்க இப்போ வீட்டுக்கு வந்ததே இதுக்கு தானா??”

வெளியே சென்று தன் அத்தையிடமும், தாயிடமும் பொங்க முடியாததை தன் தங்கை ரித்தியாவிடம் உள்ளே பொருமினாள் மாயா. அவளின் எண்ணவோட்டத்தை புரிந்துக் கொண்ட ரித்தியாவோ, “விடு மாயு… பார்த்துக்கலாம்! எவ்வளவோ பண்ணிட்டோம், இதை பண்ண மாட்டோமா??” என்று ஆறுதல் படுத்தினாள்.

ஆனாலும், மாயாவின் மனம் சமன் அடைய மறுத்தது. அவளுக்கு பெரிதாக வயதில்லை தான்… பத்தொன்பதே ஆன அவளுக்கு இப்போதே ஒன்றும் அவளின் அன்னை அபிராமியும் திருமணம் செய்து வைக்கப் போவதில்லை தான்! இருந்தாலும், காலேஜ் முடிந்தவுடனே கல்யாணம் போன்ற பேச்சுகள் அவளின் நித்திரையை முழுவதாக களவாடியது, சிறிது காலமாக…

ஹாலில் அவளின் அத்தையும், மாயசித்ராவின் படிப்பு முடிந்தவுடன் மாப்பிள்ளை பார்ப்பது பற்றி, அபிராமியிடம் பொறுமையாக விளக்கிக் கொண்டிருந்தார். அதுவே மாயாவின் வயிற்றில் புளிக்காய்ச்சல் கிண்டியது!! இப்படியே போனால், விஷயம் பெரிதாக உருவெடுக்கும் போலவே?? வெளியே சென்று பேச்சை மாற்றுவோம் என்று மாயா வெளியேற போக, ரித்தியா அவளின் கோவத்தை கிலோ கணக்கில் ஏற்றினாள்.

“நல்லகாலம் அத்தைக்கு பையன் இல்லை… இல்லனானானா….”

“பாவி!! உனக்குனு தோணுமே எல்லாம்…”

தங்கையை அடக்கிவிட்டு, ஹாலில் தன் அத்தையின் அருகில் உட்கார்ந்தாள் மாயா. பேச்சு இன்னமும் அவளின் திருமணம் பற்றி தான் ரயில் வண்டியாக ஓடிக் கொண்டிருந்தது.

“அத்தை இதெல்லாம் கல்யாணம் நடக்கறப்போ பார்த்துக்கலாம். இப்போ எதுக்கு அத்தை??”

“ஹா நல்லா இருக்குடி நீ பேசுறது. காலம் இருக்கற நிலைமையில இங்க பாதி பேருக்கு கல்யாணம் தள்ளி போயிட்டே இருக்கு. உங்க அம்மா இப்போவே பார்க்கலாம்னு சொன்னா கேக்க மாட்டேங்குறா. இல்லனா, இப்போ மாப்பிள்ளை பார்த்துட்டு, காலேஜ் முடிஞ்சதும் முகூர்த்தம் வைச்சுடலாம்!

தெரியுமா இல்லையா, நம்ம சக்திக்கு மாப்பிள்ளை அமைய எவ்வளவு நாள் ஆச்சுனு??”

சக்தி அவரின் பெண். எல்லாம் நன்றாக இருந்தும், திருமணம் தகைந்து வர அவளுக்கு இருபத்தியாறு வயது ஆகியது. இதை பிடித்துக் கொண்டே, தன் அத்தை கோதை தன்னை மிரட்டுவது போல் தோன்றியது மாயாவுக்கு.

“எல்லாருக்கும் அப்படி இருக்காது அத்தை. சக்தி கல்யாணம் பண்ணிக்க ஓகே சொன்னா. பட், எனக்கு அப்படியில்ல… எனக்கு நிறைய சாதிக்கனும். கல்யாணம் எல்லாம் இப்போ வேண்டாமே! நான் பண்ணிக்கறேன். ஆனா, கொஞ்ச வருஷம் போட்டுமே? ப்ளீஸ்மா, நீங்களாவது புரிஞ்சுக்கோங்க!”

கெஞ்சலும், கொஞ்சலும் சம அளவில் மிதந்த குரலில் அத்தையிடம் ஆரம்பித்து அன்னையிடம் முடித்த மாயாவை கோவமாக முறைத்தார் அபிராமி. அவரின் மனம் இளகுவதற்கு பதில் இறுகியது. “இந்த பேச்சை விடு மாயா. உனக்கு பல தடவ சொல்லிட்டேன்! இதுக்கு மேல, என்னை திட்ட வைக்காத… வேண்டாம் நீ எதுவுமே சொல்ல வேண்டாம். பெரியவங்க எங்களுக்கு தெரியும், எப்போ என்ன பண்ணனும்னு. உனக்கு பின்னாடியே ரித்து இருக்கா. அதை கொஞ்சம் ஞாபகம் வைச்சுக்கோ!”

ஏனோ எப்போதும் எதிர்பேச்சு வீசும் மாயா அன்று வீசாமல், அமைதியாக தன் அறையினுள் சென்று மறைந்தாள். அந்த அமைதி புயலுக்கு முன் வருவதாக இருக்க கூடாதென அபிராமியின் மனம் கடவுளிடம் வேண்டுக்கொள் விடுத்தது.

ஆனால் மாயாவின் மனம் மௌனமாக கண்ணீர் சிந்தியது அவள் மட்டுமே அறிந்த ஒன்று. தன்னுள்ளே மிகவும் நொந்துப் போனாள் மாயா. எப்படி இவர்களை எல்லாம் கடந்து தன் லட்சியத்தை அடைவது?? ஒரு சாதாரண பெற்றோரின் பார்வையில், தன்னுடைய அன்னையின் எண்ணத்தில் தவறில்லை என்று மாயாவுக்கு புரிந்தது.

தன்னுடைய கனவிலும் எந்தவிதத்திலும், தவறு காணவில்லை அவள். எப்படி யாரின் மனதையும் புண்படுத்தாமல், தன் வழியில் பயணிப்பது. இதுவே, அடுத்த இரண்டு நாட்கள் மாயசித்ராவின் மனதை முழுதாக ஆக்கிரமித்தது.

இவளின் யோசனையான முகத்தை பார்த்து, விநாயகம் கேள்வி எழுப்பிய போது மடை திறந்த வெள்ளமாக அனைத்தையும் கொட்டிவிட்டாள் மாயா. “நம்ம அம்மா, அப்பா ஒழுங்கா யோசிச்சாலும், அதை கெடுக்கறதுக்கே நாலு பேரு சுத்துவாங்க! உன்னோட குடும்பத்துக்கு உன் அத்தை அப்படித்தான் போல. இதெல்லாம் பெரிய விஷயமா மாயுமா?? டோன்ட் வொரிடா…”

விநாயகம் அசாதாரண துணிச்சலுடன் கூற, மாயசித்ரா மறுத்தாள். “உங்களுக்கு தெரியாதுனா… எங்க அத்தை தான் எங்கப்பாக்கு ரொம்ப கிளோஸ். அப்பாக்கு அப்புறம் அம்மா அவங்ககிட்ட கேட்டு தான் எல்லாம் செய்வாங்க… அத்தை கொஞ்சமில்ல, ரொம்பவே பழமையான ஆளு!

அவங்க ஏற்கனவே எனக்கு நிறைய கஷ்டத்த குடுத்துருக்காங்க. இப்போ மறுபடியும்னா…. என்னால முடியும்னு தோணல…”

வேதனை படிந்த கண்களும், அழுகை வழிந்தோடும் குரலும் மாயாவிடம் கண்டு, விநாயகம் பதறிவிட்டான். “ஹே மாயு என்னமா திடீர்னு அழற?? அழாதடா! நான் வேணும்னா உங்க வீட்டுல வந்து பேசட்டுமா??”

“இல்ல அழலைனா… வேணாம் நானே பார்த்துக்கறேன்! ஹெல்ப் தேவைப்பட்டுச்சுனா கண்டிப்பா கேக்கறேன் உங்ககிட்ட…”

“நீ கேப்பியோ இல்லையோ தெரியாதுமா. பட், எனக்கு இப்போ ஒரு ஹெல்ப் தேவை…”

என்னவென்று ஆச்சரியமான முகத்துடன் மாயா நோக்க, “என்ன போட்டோ போட்டாலும் பேஸ்புக்ல இருபது லைக் மேல வர மாட்டேங்குது. நீ என்ன பண்ற, அண்ணாவ வைச்சு சூப்பரா ஒரு போட்டோஷுட் எடுக்கற! லைக்ஸ் சும்மா பிச்சுக்கனும்… ஓகே வா?” என்றான் கெத்தாக. அவன் கூறியதை கேட்டு, சந்தோஷமான மனநிலைக்கு மாறினாள் மாயா.

“அதுக்கென்ன நாளைக்கே எடுக்கறேன். நம்ம காலேஜ்லையே நல்ல இடமா பார்த்து எடுக்கலாம். டி.எஸ்.எல்.ஆர். எடுத்துட்டு வரேன்.”

பேசியபடியே அடுத்த நாள் அவளின் கேமராவை எடுத்து வந்து, புகைப்படமாக எடுத்து தள்ளினார்கள், அண்ணனும் தங்கையும். கார்த்திக்கும் கதிரும் தான் விநாயகத்தை தேடிக் கொண்டே இருந்தார்கள். விநாயகம் என்னும் அறிவாளியோ போட்டோ எடுக்கும் போது டிஸ்டெர்பன்ஸ் இருக்க வேண்டாம் என, தன் கைப்பேசியை சத்தமில்லாமல் ஆக்கிவிட்டான்.

மாயா காலேஜின் பின் பக்கத்தில் இருக்கும் குல்மொஹர் மரத்தின் அடியில் விநாயகத்தை நிற்க வைத்து புகைப்படம் எடுக்க, கார்த்திக்கும் கதிரும் ஒருவழியாக அங்கே வந்து சேர்ந்தனர்.

“டேய் மச்சான்… வாடா, போட்டோஷூட் போயிட்டு இருக்கு. மாயு எங்களையும் ஒரு போட்டோ எடுமா!”

“மச்சானா?? எருமை உன்னை எங்க எல்லாம் தேடுறது?? ஃபோன் பண்ணா எடுக்க மாட்டீங்களோ??”

அடிக்குரலில் கத்தியபடி கதிர் கருவ, கார்த்திக் விநாயகத்தின் முதுகில் ஓங்கி ஒன்று வைத்தான். “அம்மாமாமா” என முதுகை தடவியபடி, மொபைலை அப்போது தான் எடுத்தான் விநாயகம். பார்த்தால் பதினெட்டு மிஸ்டு கால் இருந்தது. “என்னது பதினெட்டா??”

ஒன்றும் பேசாமல் தவறை உணர்ந்து சாந்தமாக அடங்கிப் போனான் விநாயகம். இதையெல்லாம் மாயா கவனிக்கவில்லை. அவளின் கவனம் எல்லாம் கேமராவில், அதுவரை எடுத்த புகைப்படத்தில் இருந்தது.

“சாரிடா கோச்சிக்காத மாப்பிள்ளை. மாயு நீ ஒரு போட்டோ எடுமா.”

இருவரையும் தன் இருப்பக்கமும் நிறுத்திக் கொண்டு விநாயகம் வினவ, அவனையே கோபமாக முறைத்தான் கார்த்திக். “ஏன்டா எப்போவுமே பொண்ணுங்க தான், போஸ் குடுப்பாங்க விதவிதமா… பசங்க போட்டோ எடுப்பாங்க! நீ என்னடா பண்ணிட்டு இருக்க இங்க??”

“நம்மளுக்கு வராததை பத்தியெல்லாம் பேசக் கூடாது மச்சான். ஒழுங்கா நில்லு இப்போ!”

மாயசித்ராவின் பொறுமையை மேலும் சோதிக்காமல், கடைசியில் மூவரும் நின்றனர். அழகாக அதை படம்பிடித்தாள் நம் நாயகி! சில பல போஸ்களில் அவர்களை நிற்க வைத்து, அலப்பறை பண்ணி தன் போட்டோஷுட்டை முடித்தாள் அந்த நிழலழகி! புகைப்படங்களை பார்த்துவிட்டு நன்றாக வந்திருப்பதாக மூவரும் கூறினர்.

சந்தோஷமான மனநிலையுடன் நால்வரும் வீடு சேர்ந்தனர். ஆனால், முகநூலில் தன் புகைப்படத்தை போடும் போது, மாயாவின் பெயரையும் விநாயகம் குறிப்பிட்டான். அதுவே, அவளுக்கு வினையாக போயிற்று. அன்று முதல் காலேஜில் அவளுக்கு அறிமுகம் ஆனவர்கள் எல்லாம், போட்டோக்காக மாயாவை அணுக ஆரம்பித்தார்கள்.

மாயாவும் முடிந்த அளவுக்கு, எல்லாருக்கும் எடுத்து தந்தாள். இதனால், சிறிது அந்த காலேஜில் பிரபலமாகவும் ஆனாள், என்று சொல்லலாம்.

****************************************************************************************************

கண்ணுக்கு மை அழகு கவிதைக்கு பொய் அழகு
கண்ணத்தில் குழி அழகு கார் கூந்தல் பெண் அழகு
கண்ணுக்கு மை அழகு கவிதைக்கு பொய் அழகு

இளமைக்கு நடை அழகு முதுமைக்கு நரை அழகு
கள்வர்க்கு இரவு அழகு காதலர்க்கு நிலவு அழகு

நிலவுக்கு கரை அழகு பறவைக்கு சிறகு அழகு
அவ்வைக்கு கூன் அழகு அன்னைக்கு சேய் அழகு
கண்ணுக்கு மை அழகு கவிதைக்கு பொய் அழகு

விடிகாலை விண் அழகு விடியும் வரை பெண் அழகு
நெல்லுக்கு நாற்று அழகு தென்னைக்கு கீற்று அழகு

ஊருக்கு ஆறு அழகு ஊர்வலத்தில் தேர் அழகு
தமிழுக்கு ழா அழகு தலைவிக்கு நான் அழகு
கண்ணுக்கு மை அழகு கவிதைக்கு பொய் அழகு

மூடிய கண்களும், காந்தமான குரலுமாய் தன்னை சுற்றியிருப்பவற்றை மறந்துவிட்டு, கிட்டாரில் கைகள் விளையாட நெஞ்சுருக பாடினான் கார்த்திக்.

அவன் பாடி முடித்ததும் கிளாப்ஸ் பறந்தது…. கார்த்திக் பாடிய இடம், காலேஜ் பார்க்கிங் ஏரியாவிற்கு பக்கத்தில் இருக்கும் ஒரு மரத்தடியில். அவர்களின் காலேஜ் கல்சுரல்ஸ் தேதி அறிவிக்கப்படிருந்தது. கோயம்பத்தூரிலேயே பெரிய கல்லூரி அவர்களுடையது. ஆதலால், மூன்று நாட்களாக பிரித்து பெரிய விழாவாகவே கொண்டாடுவர்!

அதை ஒட்டியே கார்த்திக் தன் கிட்டாரை எடுத்து வந்து, பிராக்டிஸ் செய்தான். அவன் பாட ஆரம்பித்ததும், கூட்டம் தானாக கூடியது. அவன் முடித்ததும், அனைவரும் கலைந்து செல்ல துவங்கினர். விநாயகம் மெய்சிலிர்த்து போய் வழக்கம் போல், பாராட்டினான் தன் நண்பனை. “ஆசோமாட்டிக் ஆரோமலே மச்சி! செம்ம ஃபீல்…”

“இப்போ எதுக்கு சம்பந்தமே இல்லாம ‘ஆரோமலே’னு உளர்ற??” கதிர் தனக்கே உரிய புன்னகையுடன் கூறவும், கார்த்திக்கும் சிரிக்க ஆரம்பித்தான்.

“ரைமிங் நல்லா இருக்குல?? அதோட பேசாம போவியா… கேள்வி கேட்டுட்டு இருக்க?”

அலட்சியமான பதில் கூறிய விநாயகத்தை ஒதுக்கி விட்டு, கதிரை எண்ணி வியந்தான் கார்த்திக். கதிர் இவனை போல எதுவும் வாய்திறந்து சொல்லமாட்டான். ஆனால், கார்த்திக்கை பாடவிட்டு, தன்னுடைய கைப்பேசியில் ஏற்றிக் கொள்வான் கதிர். கார்த்திக்கின் பாடல் என்றால், அவ்வளவு பிடிக்கும் அவனுக்கு! இது கார்த்திக்கிற்கும் தெரியும்.

கார்த்திக்கின் இந்த சிந்தனையை நிறுத்தவே மாயா அவன் அருகில் வந்தாள். அவளும் கூட்டத்தில் இருந்து கார்த்திக்கின் பாடலை கேட்டாள். நேராக அவனிடம் வந்து அதை பற்றி பாராட்டாமல் வேறு பேசினாள். “நீங்க கல்சுரல்ஸ் ஆர்கனைஸிங் கமிட்டில இருக்கீங்களா??”

கார்த்திக் ஒன்றும் புரியாமல் மேலும் கீழுமாக தலையசைத்தான். விநாயகத்துக்கும் கதிருக்கும் கூட எதுவும் தெரியவில்லை…. மேலும் மூவரையும் குழப்பாமல், தான் வந்ததிற்கான காரணத்தை எடுத்துரைத்தாள். “எனக்கு இந்த கல்சுரல்ஸ்ல வீடியோ கவரேஜ், போட்டோகிராபி வொர்க்கை குடுப்பீங்களா??”

நெற்றிபொட்டில் அடிப்பது போன்று நேரடி தாக்குதலாக மாயா தாக்க, விநாயகமே என்ன சொல்வது என்று அறியாமல் நின்றான். ஆனால், பதில் கார்த்திக்கிடம் இருந்து திடமாக வந்தது.

“வொர்க் அஸைன் பண்றது எல்லாம் நான் மட்டுமே முடிவு பண்ண முடியாது. என் கூட இன்னும் சில பேர் இருக்காங்க, அவங்ககிட்ட கேக்கனும். அது மட்டும் இல்லாம, எப்போவுமே இந்த வேலை பண்றவுங்க விஸ்காம் பசங்க தான். அவங்ககிட்டயும் பெர்மிஷன் வாங்கனும்… இது நார்மல் வொர்க் இல்ல… கல்சுரல்ஸ் ஆரம்பிக்கறதுக்கு முன்னாடியே ரிகேர்சல் பண்றதுலந்து போட்டோ கவரேஜ் எடுக்கனும்.

மூணு நாள்ல, இரண்டு நாள் ஸ்டேஜ் ஷோஸ் இருக்கும். அதை ஃபுல்லா கவர் பண்ணனும். இது எல்லாம் ஒழுங்கா எடிட் பண்ணி, நம்ம காலேஜ் மேகசீன்ல, வெப்சைட்ல போடவும் அனுப்பனும். இப்படி நிறைய இருக்கு…”

“தெரியும்! அதனால தான் கேக்கறேன்…” தான் பெரிதாக கொடுத்த விளக்கத்திற்கு மிகவும் அமைதியாக மாயா கூறிய சிறிய பதிலில் கார்த்திக்கு கோவம் வந்தது. “நான் கேட்டு சொல்றேன்.” இத்தோடு முடித்துக் கொண்டான் கார்த்திக். ஆனால், அவன் நண்பனோ சும்மாவிடவில்லை…

“அதெல்லாம் பெர்மிஷன் வாங்கி கொடுத்துருவான் கவலைப்படாதமா! இவனும் இன்னொருத்தனும் தான் கல்சுரல்ஸ் கமிட்டியே… மத்தவங்க எல்லாம் டம்மி தான்! சொல்லிட்டான்ல பண்ணிருவான் மாயு.”

விநாயகம் கூறியதை கேட்டு அவனை கண்களாலேயே கழுவியுற்றிய கார்த்திக்கை பார்த்து, மீண்டும் தன் வேண்டுதலை அழுத்தமாக பதிந்தாள் மாயா. “நீங்க என்னோட போட்டோஸ் எல்லாம் பார்த்து ஆச்சரியப்பட்டிங்கனு அண்ணா சொன்னாரு. உங்களுக்கு என்னோட டெலன்ட் தெரிஞ்சிருக்கும். நான் அதை எல்லாருக்கும் காமிக்க ஒரு சான்ஸ் தான் கேக்கறேன்.”

அவள் கூறியதை கேட்டு இன்னும் கடுப்பானான் கார்த்திக். விநாயகத்தை பார்வையால் கேள்வி எழுப்ப, “நான் தான் சொன்னேன் மச்சி.” என்று ஒத்துக் கொண்டான் விநாயகம்.

ஒரு பெருமூச்சுடன் சம்மதித்தான் கார்த்திக். “சரி.... நான் எல்லார்கிட்டயும் பேசறேன். பார்க்கலாம்.”

“ரொம்ப ரொம்ப தாங்க்ஸ்…” முகமே பூவாக மலர நன்றியுரைத்தாள் மாயா. கதிர் இது எல்லாவற்றையும் நன்றாக வேடிக்கை பார்த்தான். அவள் கிளம்பும் முன், கார்த்திக்கிடம் அவனின் பாட்டை பற்றி பாராட்டினாள்.

“நீங்க பாடுறது ரொம்ப நல்லா இருந்தது… கல்சுரல்ஸுல பாடுவீங்களா??”

கார்த்திக் நன்றி கூறி, ‘ஆம்’ என தலையசைத்தான். “என்னமா இப்படி கேட்டுட்ட? நம்ம பையனோட பாட்டு இல்லாம கல்சுரல்ஸ் நடந்துருமா என்ன?? அவன் தான் எப்போவும் ஃபரஸ்ட் பிரைஸ் வின் பண்ணுவான். நீ பார்க்க தான போற??” விநாயகத்தின் பதிலை கேட்டு மாயா புன்னகைக்க, கார்த்திக் வேறு கூறினான்.

“ஆமா சான்ஸ் கிடைச்சா நம்ம தான் யூஸ் பண்ணிக்கனும். சும்மா உட்காந்துட்டு இருந்தா, ஒண்ணுமே நடக்காது…” மாயாவை பார்த்தபடி வந்த கார்த்திக்கின் எகத்தாளமான வார்த்தைகள், மாயாவை கூர்மையாக குத்தின!

“நான் ஒண்ணும் சும்மா உட்காந்துட்டு இல்ல…. ஏன் இப்போ உங்ககிட்ட வந்து சான்ஸ் கேக்கலையா?? சும்மா சொல்லாதீங்க!”

“ஆமா ஆமா… நீ சும்மா இல்ல தான். அதான் காலேஜுல எல்லாரையும் போட்டோ எடுக்கறையே அது பத்தாது?? நீயே யோசிச்சு பாரு, உன்னோட டெலன்டுக்கு நீ இந்த மாதிரி மொக்கையா போட்டோ எடுத்துட்டு இருந்தா சரிபடுமானு…

இப்போ காலேஜ் கல்சுரல்ஸுல ஷார்ட் ஃபிலிம் கான்டெஸ்ட் வருது. அதுல போய் கலந்துக்கோ! சும்மா இவன் கூட எவ்வளோ பேசுற? விஸ்காம் பசங்க இன்ட்ரோ கொடுங்கனு எப்போவாவது கேட்டுருக்கியா? விஸ்காம் பசங்க கூட பேசி, ஷார்ட் பிலிம் எடு! நீயா போனா தான் எல்லாம் நடக்கும். அதை மட்டும் புரிஞ்சுக்கோ”

விநாயகத்தை காட்டி கார்த்திக் கூறிய ஒவ்வொரு வார்த்தையும், ஈர சிமென்ட் தரையில் பதியும் கால் தடம் போல், மாயாவின் மனதில் ஆழமாக ஏறியது! தன் தவறை உணர்ந்து அவள் வெறும் மண்டையை ஆட்ட, கார்த்திக்கு உள்ளுக்குள் எதுவோ ஒன்று உருகியது. அவளின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான்.

“சரி நீங்க யாராவது தெரிஞ்ச ஆள் இருந்தா அவங்க நம்பர் குடுங்க. பேசறேன்.”

அழுத்தமான குரலில் கேட்ட மாயா, போட்டியில் கலந்துக் கொண்டு எப்படியாவது ஜெயிக்க வேண்டும் என்று மனதில் நம்பிக்கையுடன் உறுதிமொழி எடுத்தாள்! ஒரு நம்பரை கூறிவிட்டு தன் பக்க எச்சரிக்கையும் சேர்ந்தே தந்தான் கார்த்திக்.

“இவன் பெயர் ஜான். பெரிய டைரக்டர் ஆகனும்னு ஷார்ட் பிலிம் நிறைய எடுப்பான். நான் பேசறேன் அவன்கிட்ட. நாளைக்கு நீ பேசு. அப்புறம் முக்கியமான விஷயம்… எல்லார்கிட்டயும் உன்னோட நம்பரை கொடுக்காத சரியா?? யார்கிட்டயும் குடுக்கறதுக்கு முன்னாடி எங்க மூணு பேர்ல ஒருத்தர்கிட்டயாச்சும் கேட்டுக்கோ… புரியுதா?”

தன்னுடைய நலனும் கருதி அறிவுரை கூறிய கார்த்திக்கை அதியசமாக பார்த்தாள் மாயா. இன்று ஏனோ புதிதாக அவள் கண்களுக்கு தெரிந்தான்! சிரித்த முகமாக அவள் நன்றி கூற, விநாயகம் அவளின் முன் வந்து குதூகலித்தான்.

“ஹய்யா ஜாலி… சண்டை ஓவர்! சண்டை ஓவர்! இனிமே உங்க ரெண்டு பேருக்கும் சண்டையில்ல!!” அவனின் களிப்பை பார்த்து, மற்ற மூவரின் மனதும் நிறைந்தது, சந்தோஷத்தில். அதன்பின் வந்த நாட்களில், கார்த்திக்கின் மனதில் மாயாவும், மாயாவின் மனதில் கார்த்திக்கும் நங்கூரம் பாய்ச்சியது போல் நச்சென்று இறங்கினர்! அவர்கள் அறியாமலே!!!




 
Top