Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

குவியமுடன் ஒரு காதல் 7

Advertisement

Admin

Admin
Member


அத்தியாயம் – 7

மறுநாள் அழகாக விடிய புத்துணர்ச்சியுடன் தன் கல்லூரிக்கு கிளம்பினான் கார்த்திக். தன்னிடம் இருக்கும் சட்டையை எல்லாம் அலசி ஆராய்ந்து, கடைசியில் ஒரு காட்டன் வெள்ளை சட்டையும் புளூ ஜீன்ஸும் அணிந்துக் கொண்டான். அன்று தான் அவனின் பாட்டுப் போட்டி நடை பெற இருந்தது.

இவன் இப்படி கிளம்பினால், மாயாவோ ஒரு அழகான அனார்கலி சுடிதாரில் மின்னினாள். அன்றும் மறுநாளும் ஸ்டேஜ் ஷோஸ் கவர் செய்ய வேண்டும் என்பதால், அவள் சுடிதாரை முதலிலேயே எடுத்து வைத்திருந்தாள். காலையிலேயே கல்லூரி ஆடிடோரியம் சென்று, கேமரா செட்டிங் பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுடன் கூட உதவுதற்கு விநாயகம் ஒரு முதல் வருட விஸ்காம் பையனை அனுப்பியிருந்தான்.

அவனுடன் பேசியபடி திரும்பியவள் தூரத்தில் கார்த்திக்கும், விநாயகமும் வருவதை கண்டு கையசைத்தாள். நெருங்கி வந்தவர்களில் முதலில் பேசியது விநாயகமே… “மேடம் எல்லாம் ரெடியா?? மார்னிங் ஃபர்ஸ்ட் ஷோவே நம்ம சிங்கிங் காம்படிஷன் தான்… பையன் கலக்க போறான் பாரு…”

“எல்லாம் ரெடினா.. ஆல் தி பெஸ்ட்!” விநாயகத்திடம் ஆரம்பித்து கார்த்திடம் முடித்தாள் மாயா. அவள் கூறிய ‘ஆல் தி பெஸ்ட்’ ஒரு கிளாஸ் பூஸ்ட் குடித்தது போல் தெம்பாக இருக்க, “ரொம்ப தாங்க்ஸ்” என்று பதிலுக்கு சிரிக்கிறேன் என்ற பெயரில் அனைத்து பற்களையும் காட்டினான் கார்த்திக்!

நல்ல வேளை விநாயகம் மேலும் பேசாமல், அவனை வேறு எதோ வேலைக்கு இழுத்துச் சென்றுவிட்டான். இல்லையென்றால், விநாயகமே என்னவோ இருக்கிறதென்று கண்டறிந்திருப்பான். ஆனால், மாயாவுக்கு முதன் முதலில் சந்தேகம் எழுந்தது அப்போது தான்… “என்ன இவன் இப்படி இளிச்சுட்டு போறான்?? சும்மாவா இல்ல வேற என்னவோ இருக்கா??”

தனக்குள்ளே பேசியபடி குழம்பிப் போனாள் மாயா…. மேற்கொண்டு அவள் யோசிக்கும் முன்பு, அவளை வேலை அழைக்க அவளின் கவனம் அதில் சென்றது.

ஒருவழியாக கார்த்திக்கின் பாட்டு போட்டி தொடங்கியது. மூன்று வெவ்வேறு கல்லூரியில் இருந்து பாடி முடித்ததும், கார்த்திக் நான்காவதாக மேடை ஏறினான். அதற்கே கைதட்டல்கள் கிழிந்தது…. சிரித்த முகமாக தன் கேமராவின் வழியாக கார்த்திக்கை பார்த்தாள் மாயா. அவளின் கேமரா மேடைக்கு நேராக இருந்ததால், கார்த்திக் கேமராவை பார்த்தான் ஆழமாக…

இரண்டே நிமிடங்களில் ‘மென்டல் மனதில்’ பாடலை அவன் பாட ஆரம்பிக்க, அவனுடன் சேர்ந்து மொத்த கல்லூரியும் ஆடிப் பாடியது! இவனிடம் கண்டிப்பாக ஏதோ ஒரு காந்தவிசை இருப்பதாக மாயா கருதினாள். இதில் “ஓகே என் கண்மணி மடியில்…” என்ற வாரத்தைகளின் போது, அவன் மாயாவை பார்க்க அவள் குழம்பிப் போனாள்.

ஏன்னென்றால், கார்த்திக் கேமராவை பார்க்கிறானா, இல்லை தன்னை பார்க்கிறானா என்று தெரியாத நிலை அவளுக்கு! கேமராவின் வழியாக தானே அவள் மேடையை காண்பது? அவளை பார்த்த மாதிரியும் இருந்தது, கேமராவை பார்த்த மாதிரியும் இருந்தது.

பாடி முடித்ததும் கார்த்திக் இறங்கப் பார்க்க, கூட்டம் மொத்தமும் “வேற சாங்… ஒன்ஸ் மோர்… இன்னொரு பாட்டு வேணும்…” என்று கத்த துவங்கமும், கார்த்திக் சிரித்த முகமாக, “ஓகே ஓகே… உங்களுக்காக இன்னொரு பாட்டு…” என்று கூறவும், அதற்கும் எல்லாரும் ஆர்பரித்தனர். மாயாவுக்கு இது எல்லாம் புதிதாக இருந்தது.

ஆனால், அவளுக்கு தெரியவில்லை, இது எப்போதும் நடக்கும் ஒன்று தான் என. கார்த்திக் ஒரு பாடலுடன் மேடை இறங்கியதாக சரித்திரமே இல்லை! ஒரு நிமிடம் கண்களை மூடி தனக்கு மிகவும் பிடித்த பாரதியார் பாட்டை எடுத்துவிட்டான்.

சுட்டும் விழிச் சுடர் தான் கண்ணம்மா சூரிய சந்திரரோ
வட்டக் கரிய விழி கண்ணம்மா வானக்கருமை கொலோ
பட்டுக் கருநீலப் புடவை பதித்த நல்வயிரம்
நட்ட நடுநிசியில் தெரியும் நட்சத்திரங்களடீ

சோலை மலரொளியோ நினது சுந்தரப் புன்னகை தான்
நீலக் கடலலையே நினது நெஞ்சின் அலைகளடீ
கோலக் குயிலோசை உனது குரலின் இனிமையடீ
வாலைக் குமரியடீ கண்ணம்மா மருவக்காதல் கொண்டேன்

சாத்திரம் பேசுகிறாய் கண்ணம்மா சாத்திரம் ஏதுக்கடீ
ஆத்திரம் கொண்டவர்க்கே கண்ணம்மா சாத்திரமுண்டோடீ
மூத்தவர் சம்மதியில் வதுவை முறைகள் பின்பு செய்வோம்
காத்திருப்பேனோடீ இது பார் கன்னத்து முத்தமொன்று

பாடல் ஆரம்பிக்கும் போது இமைகளை மூடி திறந்தவன், பின் இமைகளை மூடவேயில்லை… அவன் தான் மாயாவை பார்ப்பதிலேயே இருந்தானே?? பின் எப்படி கண்களை மூடுவது??? ஒவ்வொரு கண்ணம்மாவை அவன் உச்சரிக்கும் போது, மாயாவை பார்க்க கார்த்திக் தவறவில்லை! இல்லை இல்லை… கேமராவை பார்க்க தவறவில்லை…

முன் பாடலில் இருந்த துள்ளலும், துடிப்பும் இதில் இல்லையென்றாலும் பாடல் முழுக்க வழிந்தோடிய காதல், வேட்கை, கனிவு, ஆதங்கம் அனைத்தையும் அப்படியே தன் குரலில் கொண்டு வந்தான் கார்த்திக்… அதனால், மாணவர் கூட்டமும் அவன் முன் மகுடிக்கு மயங்கிய பாம்பு போல் மயங்கி இருந்தனர்.

அவன் பாடப் பாட உடம்பெல்லாம் சிலிர்க்க, மாயாவினுள் எதுவோ கழன்று அவனுடன் செல்வது போல் உணர்ந்தாள். அவன் கேமராவை பார்த்தானா, இல்லை தன்னை தான் பார்த்து பாட்டை பாடினானா? இக்கேள்வி மனதுக்குள் ஓடிக் கொண்டே இருந்த போதும், மாயசித்ரா கேமராவின் மூலம் கார்த்திக்கை பார்ப்பதை மட்டும் நிறுத்தவில்லை!

அந்த அளவு அவனின் பாடல் அவளை கட்டிப் போட்டது! ஒருவழியாக கார்த்திக் மேடையை விட்டு இறங்கி வர, விநாயகம் அவனை தனியே தள்ளிக் கொண்டு சென்றான். “என்னடா நீ மாயாவையே பார்த்து பாடிட்டு இருக்க? எதுக்கு சம்பந்தமே இல்லாம பாரதியார் பாட்டு பாடுன இப்போ?”

“நான் எங்கடா அவளை பார்த்து பாடுனேன்? கேமராவ ஃபோகஸ் பண்ணி பாடுனா தப்பா?? அப்புறம், சும்மா எதாவது வித்தியாசமா பாடுவோம்னு தான் எனக்கு பிடிச்ச பாரதியார் பாட்டு பாடுனேன், அவ்வளவு தான்!”

பதிலளித்து விட்டு நகர்ந்து சென்றான் கார்த்திக். விநாயகம் குழம்பிய குட்டையாக நிற்க, மாயாவோ வேறு ஒன்றை அப்போது தான் உணர்ந்து திகைத்தாள். நேற்று அவள் உடுத்தி வந்த புடவையின் நிறமும் கருநீலமே!!! பாடலில் ஒலித்த வரிகள் தற்செயலானதா?? அல்லது வேண்டுமென்றே பாடினானா??

எதுவாக இருந்தாலும், மாயசித்ரா அன்று மனதளவில் மிகவும் வித்தியாசமான பாதிப்பை உணர்ந்தாள் என்பது மட்டும் உண்மை! அன்று இரவு தூக்கம் வராமல், முழித்திருந்த போது தான் தனக்கும் கார்த்திக்கை பிடித்திருக்கின்றதா, என்ற மிகப்பெரிய கேள்வி எழுந்தது அவள் நெஞ்சில்…

ஒருபுறம் ஆம் என்ற பதில் மனதில் தோன்றிய போதே, இந்த காதல் எல்லாம் நிலைக்குமா?? தனக்கு அவசியம் தானா என்ற கேள்வியும் உடன் பிறந்தது…

மனதிலோ ஏற்றி வைத்திருக்கும் லட்சியம் அவளை பார்த்து கை கொட்டி சிரித்தது! காதலில் நம்பிக்கை இல்லாமல் போனதால் வந்த குழப்பமும், கார்த்திக்கிற்கு உண்மையிலேயே தன்னை பிடித்திருக்கின்றதா என்ற கேள்வியுமாய் அன்றைய இரவை கழித்தாள் மாயா.

மாயா குழம்பிய குட்டையாக இருந்த அதே நேரம், கார்த்திக் மிகவும் தெளிந்த நீரோடையாக மனதில் முடிவுகளை எடுத்தான். முதலாவதாக, மாயாவை எவ்வித தொந்தரவும் செய்யக் கூடாது என்று முடிவெடுத்தான். அவளின் வயதும், அவளின் லட்சியத்தில் தான் குறுக்கே நிற்கக் கூடாது என்று அவன் நினைத்ததால், இந்த முடிவை அவன் தழுவியது.

மேலும், அவனுக்கே தெரிந்தது, அவன் காதல் கூறினாலும் மாயாவிடம் நல்லவிதமாக ரியாக்ஷன் எதுவும் இருக்காது என! இரண்டாவதாக, மற்றவரின் முன் தன் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதில் கவனமாக இருக்க வேண்டும் என்று முடிவெடுத்தான். மாயா படிப்பை முடித்ததும் அவளிடம் தன் காதலை கூறி, திருமணம் செய்து சென்னைக்கு அழைத்துச் சென்று அவளை ஒளிப்பதிவு பற்றிய படிப்பில் சேர்க்க வேண்டும் என பல கனவுகளை கண்டான் கார்த்திக்.

அனைத்தும் கனவுகளாகவே மறையப் போகின்றது என அறியவில்லை அவன்.

****************************************************************************************************

அடுத்த நாள், மாயாவின் குறும்படத்திற்கான போட்டி நடைபெற அவளின் குறும்படமும் அரங்கேரியது. ‘ரத்த தானம்’ பற்றிய அவர்களின் குறும்படம் அனைவரின் கைத்தட்டல்களையும் பெற்றது. அன்றைய நாளின் முடிவில், போட்டிகளின் முடிவுகள் தெரிவிக்கப்பட்டன!

கார்த்திக் பாட்டு போட்டியில் முதலாவதாகவும், மாயசித்ராவின் படம் மூன்றாவதாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டது! மாயாவின் சந்தோஷத்துக்கு அளவே இல்லாமல் போனது. பரிசை அவள் நினைத்தது போல அடைந்ததில் அவள் மனம் நிறைவுற்றது. அடுத்த முறை முதலாவதாக வர வேண்டும் என்று மனதில் ஏற்றிக் கொண்டாள்.

கார்த்திக் அவளிடம் “கங்கிராட்ஸ்…” என்றதுடன் நிறுத்திக் கொண்டான். அவனின் முகத்தை ஆவலுடன் யாரும் அறியாமல், ஆராய்ச்சி செய்துக் கொண்டிருந்த மாயா தோல்வியே தழுவினாள் ஒவ்வொரு முறையும். அன்று முழுக்க கார்த்திக் மாயாவை பெரிதாக பார்க்கவில்லை! அவள் அறியாமல் சைட் அடிக்கும் கலையை, அவன் நன்றாகவே அறிந்திருந்தான். விநாயகமும் அன்று எதோ சி.பி.ஐ. ஆபிசர் போல் கார்த்திக்கை குறுகுறுவென நோக்கினான். பின், கார்த்திக் எதுவும் பண்ணவில்லை என்றவுடன் விட்டுவிட்டான்.

இவர்கள் இரண்டு பேரின் நிலைமையும் பார்த்த கார்த்திக்கிற்கு, சிரிப்பாக வந்தாலும் மனதின் உள்ளேயே அதை மறைத்துக் கொண்டான்.

அடுத்த வந்த தினங்களும் அவ்வாரே கழிய, அனைவருக்கும் செமெஸ்டர் தேர்வு நெருங்கியதால், ஸ்டடி லீவ் விடப்பட்டது. அது நாள் வரை யாரும் அறியாமல், கார்த்திக் மாயாவை எடுத்திருந்த புகைப்படங்களை வைத்து தான் அவனின் விடுமுறையை ஓட்டினான்.

அப்போதும் விநாயகமும் கதிரும் அவனுடன் குரூப் ஸ்டடி பண்ணவென அவனின் வீட்டை முற்றுகை இட்டனர். அவர்கள் அறியாமல் அவனின் காதலை காப்பதற்கு தான் மிகவும் கஷ்டப்பட்டான் கார்த்திக்! இன்னும் ஒரு வருடம் இருக்கிறதா மாயசித்ராவின் படிப்பு முடிய??

எப்படி காலத்தை ஓட்ட போகிறோம் என்ற நினைவுடனே தேர்வுகளை எழுதினான் கார்த்திக். ஏனோ மாயா தன் வாழ்க்கையின் பகுதியாகவே மாறியது போல் தோன்றியது அவனுக்கு. தேர்வின் போது மாயாவை பார்த்தாலும், ஒரு சிறு ‘ஹை, பை’ உடன் பேச்சை முடித்துக் கொள்வான் அவன்.

ஏற்கனவே அவளுக்கு படிப்பில் ஆர்வம் இல்லை! இதில் தான் வேறு பார்த்து வைத்தால் அவள் சுத்தமாக படிப்பை கோட்டை விடுவாள் என உணர்ந்தான்… ஒரு சில முறை தங்களின் உறவை எண்ணி அவனுக்குள் சிரிப்பு ஓடும்… தனக்கு அவள் மேல் காதல், அவளுக்கு கேமராவின் மேல் காதல்! என்ன ஒரு முக்கோண காதல்??!!!

இது முக்கோண காதல் இல்லை…. சதுரத்தை போல நான்கு கோண காதல் என்று அவனுக்கு ஒரு புகம்பத்தை அறிமுகப்படுத்தினான் கதிர்! தேர்வுகள் முடிந்து, ரிஸல்ட் வருவதற்காக காத்திருந்தனர் அனைவரும். அதே நேரம் கார்த்திக்கும் அவன் நண்பர்களும் கேம்பஸ் இன்டர்வுயூவில் தாங்கள் தேர்வான கம்பெனிக்கு போவதற்கும் ரெடியாக இருந்தனர்.

மூவரில் கதிர் மட்டும் வேறு அலுவகம். கார்த்திக்கும் விநாயகமும் ஒரே அலுவகம் தான்… கதிர் சென்னையில் இருக்கும் அலுவகத்தில் சேர இருந்தான். கார்த்திக்கும் விநாயகமும் கோயம்பத்தூரிலேயே ஒரு பன்னாட்டு கார் நிறுவனத்தில் சேர காத்திருந்தனர். ஒரு நாள் திடீரென கதிர் கார்த்திக்கிடம் தொலைப்பேசியில் அழைத்து, அவனை பார்க்க வீட்டுக்கு வருவதாக கூறினான்.

கார்த்திக் ஒத்துக் கொண்டதும், “மச்சான் விநாவ கூப்பிடாதடா… நான் உன்கிட்ட தனியா பேசனும்.” என்று கூறி கார்த்திக்கின் ஆவலை கூட்டினான். “சரிடா நீ வா, பேசிக்கலாம்.” அடுத்த பதினைந்து நிமிடத்தில், கதிர் கார்த்திக்கின் முன் அமர்ந்திருந்தான்.

கதிரின் குனிந்த முகமும், பதற்றமான உடல் மொழியையும் கண்டு விஷயம் ஏதோ பெரிது என்று மட்டும் புரிந்துக் கொண்டான் கார்த்திக். “என்னடா விஷயம்?? ரொம்ப சஸ்பென்ஸ் வைக்கிற?? சீக்கிரமா சொல்லு.”

“அதுடா… கார்த்தி நான் மாயாவ லவ் பண்றேன்டா!”

முதலில் கார்த்திக்கு புரியவில்லை… அவன் மனதில் ‘மாயா’ என்றதும், மாயசித்ரா தான் தோன்றினாள்! ‘சேச்சே அவளா இருக்காது… வேற மாயாவா இருக்கும்! நமக்கு தான் ‘மாயா’னு சொல்லவும் அவ கண்ணு முன்னாடி வரா’ தன் மனதை தானே தேற்றியபடி கார்த்திக் கதிரிடம் உற்சாகமாக வினவினான்.

“டேய் உமைக்கொட்டான்! பேசாம இருந்தே லவ் பண்ற வரைக்கும் போயிருக்க… யாருடா அது மாயா??”

கார்த்திக்கின் முகத்தை பார்த்து சிறிது வெட்கப்பட்டபடியே, அவன் மனதில் உண்மையான வலியென்றால் என்னவென்பதை காண்பித்தான் கதிர்.

“ஹே மாயாடா… நம்ம மாயா… மாயசித்ரா! அவ தான்டா ரொம்ப நாளா இங்க இருந்து டார்சர் பண்றா!”

நெஞ்சின் பக்கம் கையை தேய்த்துக் கொண்டே கதிர் கூறவும், கார்த்திக்கின் மனது அதளபாதாளத்தில் விழுந்தது… “அவளை தான்டா ரொம்ப நாளா இங்க இருந்து டார்சர் பண்றா” இந்த வரியே திரும்பத் திரும்ப அவன் காதுகளில் ஒலித்தது!!! அடுத்து கதிர் கூறிய எதுவும் அவனின் செத்து போன மனதில் ஏறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது!


 
Top