Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கெளதம் பேகனின் "ஒரு காதலின் டைரி குறிப்பு"

Advertisement

Gowtham began

Member
Member
அன்றைக்கு ஞாயிற்றுக்கிழமை. வீட்டு வேலைகளை செய்தாக வேண்டுமே என்ற வற்புறுத்தலால் தான் அந்த ஷெல்ப்பை கிளீன் செய்ய தொடங்கினான் நரேன்.

வேண்டாத பேப்பரும், பாலிதீன் கவர்களையும் அப்புறப்படுத்தி கொண்டிருந்த பொழுது தான் அந்த பழுப்பு நிற டைரி அவன் கண்ணில் பட்டது. 8 வருடங்களாக தான் ஆசை ஆசையாக யாருக்கும் தெரியாமல் பாதுகாத்து வரும் டைரி அது. அதை தொடும் பொழுதும், பக்கங்களை திருப்பும் பொழுதும் தனக்கு வயது குறைவது போன்ற ஒரு உணர்வை உணரினான்.

தன் வயது ஒத்தவர்கள் அனைவரும் பெரிதாக டைரி எழுதும் பழக்கம் இல்லாதவர்களாக இருந்தார்கள். அவனும் அப்படி தான். அந்த பழக்கம் தொடங்கியதும் முடிந்ததும் இந்த டைரியில் தான். அதற்கு காரணம்... கயல் ...


11 செப்டம்பர் 2012


நான் என் வாழ்க்கைல எழுதுற மொத டைரி இது!! சத்தியமா எதுக்கு எழுதுறேன் தெரியல, ஆனா இதெல்லாம் சொல்லணும்.. நாளைக்கு நம்மளே படிக்கணும்னு தோணுது.. அதுவும் அவளை இன்னைக்கு பாத்த அப்புறம்தான் அப்படி என்ன ஆச்சு னா ...

அம்பத்தூர் ல இருக்க கார் ஷோரூம் ல தான் ஆடிட்டிங் இன்னைக்கு.. சார் அங்க என்னை மொதல்ல போக சொல்லிட்டாரு.. பின்னாடி அவரும் தேவராஜும் வரேன்னு சொல்லிட்டாங்க. இந்த டிராபிக் ல மயிலாப்பூர் ல இருந்து 2 பஸ் 2 ஷேர் ஆட்டோ மாறி ஒரு வழியா அம்பத்தூர் வந்து சேர்ந்தா மணி 10.. வெளியே நின்னுட்டு இருந்த டூ வீலர் ல கொஞ்சம் முகத்தை கண்ணாடி ல பாத்துகிட்டு ஷோரூம் நோக்கி போய்டேன். பெரிய ஷோரூம் பின்னாடியே சர்விஸ் சென்டர்.
யாரை மீட் பண்ணனும் என்ன பண்ணனும் னு தயார் பண்ணி வெச்சிருந்த லிஸ்ட் எ பாத்துட்டே அவ்ளோ பெரிய கண்ணாடி கதவை உள்ள தள்ள… எதிர் ல அழகா அம்சமா, அளவு எடுத்து செஞ்ச மாதிரி ஒருத்தி…

அங்க ஒர்க் பண்ற எல்லாருக்கும் ஒரே uniform போல.. சுடிதார் துப்பட்டா ல இருந்தவளை பாத்துட்டே நடந்துட்டு இருந்தேன். அவ பெருசா நோட் பண்ணல.. ஆனா நான் கண்டுக்காத மாதிரியே அவளையே பாத்துட்டு Reception கிட்ட போனேன். மேல எங்களுக்கு ரூம் கொடுத்தாங்க கீழேயே இருந்தா நல்ல இருக்குமே அவளை பாத்துட்டே ஒர்க் பண்ணலாம்னு நெனச்சேன்..
நம்ம நெனைக்கிறது எனக்கு நடந்துருக்குது!!! அப்படியும் போன் பேசுற மாதிரி அப்போ அப்போ கீழ அந்த கண்ணாடி வழியா எட்டி பாத்தேன். கண்ணு சும்மா அப்படி இருந்துச்சு.. அந்த கண்ணு தான் அவ னு அப்போவே தோணுச்சு.. அவ்ளோ தூரத்துலயும் அவ கண்ணு ல இட்டுருந்த மை அவ்ளோ அடர்த்தியா தெரிஞ்சுது!! மூக்கு உண்மையிலே ஷார்ப்பு.. அந்த கண்ணனுக்கு தெரியாத அந்த குட்டி Black ஸ்டிக்கர் பொட்டு அவளை இன்னும் அழகா காட்டுச்சு.. கழுத்து ல மெலிசா ஒரு செயின்.. கை ல ஒரு வாட்ச்.. இன்னொரு கை ல வளையல்… ஒண்ணே ஒன்னு..

கல்யாணம் பண்ண இப்படி ஒரு பொண்ணை தான் பண்ணனும் னு நெனைச்ச அத்தனை அம்சமும் இவ கிட்ட இருக்கு.. இவ்ளோ அழகா இருக்கவளை போய் ஒரு லைட் ப்ளூ சுடிதாரும், டார்க் ப்ளூ துப்பட்டவும் போட வெச்சிருக்காங்களே!!! இந்த யூனிபார்ம் ல எவன் தான் கண்டுபிடிச்சானோ!! அவங்க இஷ்டத்துக்கு வர சொல்ல வேண்டியது தானே… அடலீஸ்ட் யூனிபார்ம் ஒரு சாரியா இருந்துருக்க கூடாதா ?? அப்படியாச்சு தெரிஞ்சும் தெரியாத மாதிரி இருக்குற அவ அவ அழக பாத்திரப்பேனே!! யோசிச்சுட்டே இருக்கும் பொழுது தான் பின்னாடி யாரோ முதுகை தட்டினாங்க..
“என்ன பா மேனேஜர் எ மீட் பண்ணியா? புக்ஸ் ல குடுத்துட்டாங்களா” னு சார் கேக்கறாரு.. அப்புறம் திரும்பவும் வேலை.. இந்த தடவ என்னை திருப்பி உட்கார வெச்சிட்டாங்க.. அவளை பாக்க முடியாம பண்ண கடுப்ப காட்டமுடியாம வேலைய பண்ண ஆரம்பிச்சேன்.. வழக்கம் போல அதே ஒர்க்.. வழக்கம் போல அதே டவுட் .. அதே தேவராஜ்… அதே சார்..
லஞ்ச்கு கூட வெளிய போக விடல.. உள்ளேயே வாங்கி கொடுத்துட்டாங்க.. அப்படியாச்சும் அவளை பாக்கலாம்னு இருந்த என் எண்ணத்தை காலி பண்ணிட்டாங்க.. பாத்ரூம்க்கு கூட தப்பி தவறி கீழ போக வழி இல்லாமல் இங்கயே கட்டி வெச்சிருந்தானுங்க.. அந்த கொத்தனார் மட்டும் என் கையில கெடைச்சான்!!!! எல்லா வேலையும் முடிஞ்சு கிளம்பும் பொது அவ முன்னாடியே போயிட்டா னு மட்டும் தெரிஞ்சுருந்தது.. அப்புறம் அதே 2 பஸ் 2 ஷேர் ஆட்டோ மாறி வீட்டுக்கு வந்து இதை எழுதுறேன்… ரொம்ப டயர்ட் ஆ இருக்கு!! இப்போ தூங்குறேன்.. குட் நைட்!!!


12th செப்டம்பர் 2012

நேற்று நான் எழுதிய டைரி எனக்கே பிடிக்கவில்லை.. திரும்பவும் படித்து பார்க்கும் பொழுது ங்கெ என்று தான் இருந்தது.. அதனால் பல வருடங்கள் ஆகியும் படிப்பதற்கு ஏற்ற மாதிரி எழுத வேண்டும் என்று முதல் முயற்சியோடு இன்று நான்..

இன்றும் அதே போல் அதே 2 பஸ் 2 ஆட்டோ கொஞ்சம் கூட சலிப்பாக தோன்றவே இல்லை.. காரணம் அந்த காந்த கண் அழகி!! அவளை பார்க்கும் ஆவலில் 9.15 மணிக்கே அம்பத்தூர் வந்தடைந்து விட்டேன். எப்படியும் 9.30 மணிக்கு அவள் வந்து விடுவாள் என்று தெரிந்தே தான் திட்டம் போட்டு இந்த நேரத்திற்கு இங்கே வந்து இருந்தேன். சாலையை கடந்து அந்த மகிழுந்து காட்சி கூடம் உள்ளே நுழைவதற்கு சற்று தூரம் இருந்தாலும் பளீரென்று அவளது உருவம் என் கண்ணில் தென்பட்டது.. நேற்று ஒரு நாளிலே நொடி பொழுதில் அவளது உருவம் எனக்கு மனப்பாடம் ஆகி இருந்ததன் விளைவு இது. காட்சிக்கூடத்தின் ஒரே வாயிலான அந்த மிகப்பெரிய கண்ணாடி கதவு அருகே அவள் வருவது போலதெரிந்தது. இது தான் சமயம். அவள் நெருங்கி வர, நானும் அந்த கதவை திறக்க எப்படியாவது பேசி விட வேண்டும். இல்லையென்றால் குறைந்தபட்சம் ஒரு பார்வையையும் புண் சிரிப்பையும் தவழ விட வேண்டும் என்று திட்டமிட்டே அடி மேல் அடி வைத்தபடி நான்!!
அப்பொழுது தான் ஒருவன் சிவபூஜையில் கரடியை போல அவளை வர விடாமல் ஏதோதோ பேசி கொண்டு இருந்தான். நானும் கதவை நோக்கிய என் நடையை நிறுத்தினேன். அழைப்பே வராமல் யாரிடமோ கைபேசியில் பேசுவது போல நடித்தேன். அவள் அங்கே பேசி விட்டு கதவை நோக்கி வருவதை அறிந்து எனது கால்களின் வேகத்தை கூட்டினேன். உண்மையை சொல்ல போனால் அவளை அருகில் பார்க்கும் ஆவலில் மிதந்து கொண்டே நகர்ந்தேன்.

சரியாக நான் கதவருகே வருவதற்கும் அவள் கதவை தள்ளுவதற்கும் அலைவரிசை திட்டமிட்டபடி இருந்தது. அதுவரை பார்த்திராத நெருக்கத்தில் அவளை கண்டேன். இம்மி பிசகாமல் எனக்கானவள் ஆகவே படைக்கப்பட்டவள் இவள் என்பதை போல உணர்ந்தேன். அவளும் என்னை பார்த்தாள். என் கண்ணை ஒரு நொடி உற்று பார்த்தாள். கண்களின் அரசியே என் கண்ணை பார்த்தது பாக்கியம் என்று நினைத்தேன். என் கண்ணை எண்ணி நானே உள்ளுக்குள் பொறாமையும் பட்டேன்.

ஆனால் அவளை அருகில் பார்த்ததில் அனைத்தும் மறந்து போனேன்!! திட்டமிட்டபடி எதுவும் பேசவும் முடியாமல் புன்சிரிப்பையும் உதிர முடியாமல் ஒரு மரமண்டையை போல நடந்து மேலே சென்றேன். ஏன் என்று தெரியாமலே ஒரு மிகப்பெரிய வாய்ப்பை விட்டு விட்டேனே என்று இதயம் கதறியதை உணர்ந்தேன். அவள் ஒரு பூவை விட மென்மையானவள் என்று சொன்னால் அது பொய்!! மலரினும் மெல்லிய எதாவது ஒன்று இருந்தால் அது தான் அவள்!!! அப்படிப்பட்ட அவளிடம் வலிய சென்று பேசினால் அவள் எப்படி எடுத்துக்கொள்வாளோ என்று தான் ஒருவேளை நான் அப்பொழுது பேசவில்லையே இப்படி கேள்விகளை எழுப்பிக்கொண்டே எனது தகவாளருடனும் தேவராஜுடனும் வேலை செய்து கொண்டு இருந்தேன்..
வழக்கம் போல் கிளம்பும் நேரம் தாமதமாக, அவளும் அந்நேரத்தில் இல்லாமல் போக சலித்து கொண்டே 2 பேருந்து, 2 பகிர் தானியங்கியில் வீடு வந்து இதோ இப்பொழுது எழுதி கொண்டு இருக்கிறேன் நான்!!

குறிப்பு : நேற்றை விட நன்றாக.. அதுவும் சுத்த தமிழில் எழுத வேண்டும் என்ற முனைப்பில் நான் எழுதிய எழுத்துக்கள் இவை!! சும்மா சொல்லக்கூடாது நன்றாக தான் எழுதி இருக்கிறேன்.. இத்தனை நாட்கள் நான் படித்த குமுதமும், ஆனந்த விகடனும் என்னை கை விடவில்லை.. சுஜாதாவுக்கும், ஜெயகாந்தனுக்கும் போட்டியாக வந்து விடுவேனோ நான்?? அதெல்லாம் வேண்டாம், நாளைக்காவது அவளிடம் பேசிவிட்டால் அது போதும்!! இப்போதைக்கு இரவு வணக்கம்…






13 செப்டம்பர் 2012

நேற்று நான் எழுதிய எழுத்துக்கள் கொஞ்சம் உறுத்தலாக தான் இருந்தது. தமிழ் ஒகே!! அதுக்குன்னு சார் -கு கூட தகவாளர், Share auto- க்கு பகிர் தானியங்கி.. இதெல்லாம் கொஞ்சம் ஓவர் தான்!! எதோ 70களில் எழுதும் கடித காதல் போல இருக்கிறது. கொஞ்சம் English கலந்து அதே சமயம் அழகான தமிழில் எழுதும் முயற்சியில் இன்று நான்…

எப்படியாவது இன்றைக்கு அவளிடம் பேசி விட வேண்டும் என்று நினைத்து கொண்டே பஸ் ஷேர் ஆட்டோக்களை பிடித்து அம்பத்தூர் வருவதற்குள் செத்து சுண்ணாம்பு ஆகி விட்டிருந்தேன். எனக்கு முன்னரே வந்து சேர்ந்தார்கள் எனது சாரும், தேவராஜும்..
அவள் வந்திருக்கிறாளா என்று கூட பார்க்க நேரமில்லாமல் உள்ளே வந்து வேலையை தொடங்கி விட்டிருந்தேன். சட்டென்று அவள் நியாபகம் வரவே ஒருவித யோசனையில் இருந்த என்னை எழுப்பி அடுத்த அறையில் இருக்கும் Xerox machine-ல் நகல் எடுக்க அனுப்பினார் sir!

கையில் பேப்பர்களுடன் உள்ளே நுழைந்த எனக்கு ஒரு பேரதிர்ச்சி!! எதிர்பாராத விதமாக அந்த பேரழகியே அங்கே நின்று கொண்டிருந்தாள்.

“சொல்லுங்க உங்களுக்கு எதாவது எடுத்து தரணுமா??” தீர்க்கமாக என்னை பார்த்துக்கொண்டே அவள் கேட்ட கேள்வியில் செயலற்று நின்றேன்.

ஒரு மலைத்தேனை என் காதில் பாய்ச்சி தொண்டை வரை இனிப்பை தந்தது போல இருந்தது அவள் குரலின் மென்மை.
“ஆமா தேங்க்ஸ்,” என்று பேப்பரை தந்துவிட்டு அவளையே பார்த்து கொண்டு இருந்தேன்.

சுற்றிமுற்றி பார்த்தேன் என்னுடைய சாரும் இல்லை அவள் நிறுவன ஆட்களும் இல்லை என்று தைரியத்தை வரவழைத்து ஒரு வழியாக பேசிவிடும் முயற்சியில்,

“நீங்க நேத்து காலைலே கதவை திறந்து விட்டிங்க எதோ நியாபகத்துல தேங்க்ஸ் சொல்லாம விட்டுட்டேன் சாரி…. “

பின்னாடி திரும்பி என்னை ஒரு பார்வை பார்த்து விட்டு மென்மையான சிரிப்புடன், “பரவால்லங்க” என்று பேப்பர்களை அடுக்கி வைத்து இருந்தாள். நான் பேசிய விதம் அவளுக்கு பிடித்திருந்ததை அறிந்தேன்!!

“நீங்க இங்க புதுசா ஜாயின் பண்ணிருக்கீங்களா” என்று அவள் கேட்ட விதத்தில் அவளுக்கும் என் மேல் ஒரு கரிசனம் இருப்பதாய் அறிந்து கொண்டேன்..

“இல்ல ஆடிட்டிங் காக வந்திருக்கோம், என் பெயர் நரேன்.. உங்க பெயர்” சத்தியமாக எப்படி கேட்டேன் என்று தெரியவில்லை.

அவள் சிரித்துக்கொண்டே என்னிடம் பேப்பர்களை நீட்டியபடி “கயல்” என்றாள்..

இதை விட சிறப்பான வேறு பெயரை இவளுக்கு வைத்திருக்க முடியாது என்று எண்ணியவாறே அவர்களின் பெற்றோர்களை மெச்சினேன்.
நகல் எடுத்து கொடுத்து என்னிடம் திருப்பி கொடுத்து விட்டு, “ பாப்போம்” என்று அவள் அந்த அறையில் இருந்து விடைபெற,
“Sure thank you..” என்றபடி அவளிடம் பேசிவிட்ட சந்தோஷத்தில் என் நடையை கட்டினேன். நாளைக்கு அவளை பார்த்து எப்படி பேசலாம் என்ற சிந்தனையில் இப்பொழுது உறங்க செல்கிறேன்.. இரவு வணக்கம்!!!


14 செப்டம்பர் 2012

இன்று கயல் வரவில்லை.. எப்பொழுதும் போல 2 பஸ் 2 ஷேர் ஆட்டோ தேவராஜ் சார் என்று என் நாள் கழிந்தது!!! எழுதுவதற்கும் ஒன்றும்மில்லை :(

15, 16 செப்டம்பர் 2012 ,
விடுமுறை எழுதவும் ஒன்றுமில்லை…



17 , 18 , 19, 20 செப்டம்பர் 2012 ,

இத்தனை நாட்களும் கயலுடன் ஆன பார்வைகளும் சிரிப்புகளும் தொடர்ந்தன. இருவரின் வேலைப்பளுவின் மத்தியில் கிடைக்கும் சொற்ப நிமிடங்களில் எங்களுக்கான உரையாடல்கள் கண் பார்வையிலே தொடர்ந்தன.
கயலை எப்படியாவது எனக்கானவளாய் மாற்றி கொள்ள வேண்டும்; இன்னும் எழுதலாம்; அதிக வேலைப்பளுவின் காரணமாகவும் அதனால் உண்டான அயற்சியின் காரணமாகவும் தொடர்ந்து எழுத முடியவில்லை. சீக்கிரமே கயலுடன் நட்பை நன்றாக வளர்த்து கொள்ள வேண்டும் அப்பொழுது தொடர்ந்து தினமும் எழுதலாம் என்று இருக்கிறேன் பார்க்கலாம். இரவு வணக்கம்!!!



21 செப்டம்பர் 2012,
காலையிலே கயலை நான் பார்த்து விட்டிருந்தாலும் அதற்கு பின்னர் நடந்தவை தாம் சுவாரஸ்யமாக அமைந்தது.
அன்று மதியமே சார் வேறு ஒரு வேலையாக வெளியே கிளம்பி விட்டார். எனவே கயலிடம் பேச சரியான நேரம் இதுவே என்றபடி அவள் இருக்குமிடத்தை நோட்டம் விட்டேன். எல்லாரும் டீ குடிக்க சென்று விட்டார்கள் போல!! தேவராஜையும் அழைத்தபடி நானும் டீ குடிக்க சென்றேன். எனக்கு டீ குடிக்கும் பழக்கம் இல்லை என்றாலும் அவளுக்காகவே!!

தேவராஜை பற்றி சொல்ல மறந்து விட்டேன். பக்கா கோயம்புத்தூர் பையன். வயது ஒரு 28 இருக்கும். இரண்டு காதில் கடுக்கன் போட்டு கொண்டு பெரிய சைஸ் கண்ணாடி அணிந்து இருப்பார். வேலையில் சுமார் தான் என்றாலும் ஊர்கார பையன் என்பதால் தன்னுடன் வைத்திருக்கிறார் சார்.

தேவராஜ் சற்று இன்னொசென்ட்டும் கூட!!
என் பெயர் நரேன்.. நீங்க?? என்று நான் கேட்ட ஒரு கேள்விக்கு,

“நம்மக்கு கோயம்புத்தூருங்க ஊருக்குள்ள பசங்களோட ராவடி பண்ணிட்டு இருந்த என்னை சார் தான் கூப்டு இங்க சென்னை ல வேலை போட்டு கொடுத்தாருங்க.. நமக்கு படிப்பு அவ்வளவுக்க இல்லை.. எதோ இங்க தனியா ரூம் எடுத்து நானே சமைச்சு சாப்பிட்டு போட்டு இருக்கனுங்க” என்று அவரின் வரலாறையே அளந்து விட்டவரிடம் நான் பிறகு அளவாக தான் பேசுவேன்.

நினைத்தது போலவே கயல் அங்கு நின்று தன தோழிகளுடன் டீ குடித்து கொண்டு இருந்தாள்.
என்னை கண்டதும் ஒரு சிரிப்பை உதிர்த்துவிட்டாள். பதிலுக்கு நானும் கண்களாலே ஒரு ஹாய் சொன்னேன்.
சாப்பிட்டீங்களா என்று கையாலே செய்கையை கொண்டு என்னை விசாரித்தாள். சுத்தி எனக்கு தெரிந்தவர்கள் யாரும் இல்லை என்று உறுதி படுத்தி கொண்டு அவளை பார்த்து ஆமாம் என்பது போல சிரித்தேன். அவளும் அவளது தோழிகளும் எதிரே நின்று கொண்டு பேசி கொண்டு இருந்தனர். நானும் தேவராஜும் டீ குடித்தபடி நின்று கொண்டிருந்தோம் நிஜமாகவே கயல் என்னை கவனிப்பதை என்னால் நம்ப முடியவில்லை!!! அவளுக்கும் என்னிடம் ஒரு ஈர்ப்பு சீக்கிரமே ஏற்பட்டது வியப்பாக தான் இருந்தது. என்னை பற்றி எதையோ தன் தோழிகளிடம் சொல்ல அவர்களும் என்னை பார்த்தபடி தங்களுக்குள் சிரித்து கொண்டு இருந்தனர்!!

அப்படி என்ன என்னை பற்றி அவர்களிடம் கூறி இருப்பாள் அவள்??
இவன் ரொம்ப வழியுரான்டி எங்கிட்ட; Cha cha அப்படி எல்லாம் இல்லை!!

நல்லா இருக்கான் ல பையன் எனக்கு ரொம்ப புடிச்சிருக்குடி ; இப்படியாக வேண்டுமானால் இருக்கலாம் என்று எனக்குள்ளே நான் நினைத்து கொண்டிருக்க அருகில் வந்த தேவராஜ்,

“அந்த புள்ளைங்க எதுக்கு சிரிக்குது தெரியுமா” என்று கேட்டார்..
அய்யொ இவருக்கு தெரிந்து விட்டதே என்று பதறியபடி புரியாமல் பார்த்தேன்..
“அது நானு காதுல கடுக்கனு போட்ருக்கனல்ல.. அதுக்கு தான் இந்த புள்ளைங்க என்னை பார்த்து சிரிக்குதுங்க.. எங்கே போனாலும் புள்ளைங்க இதனால தான் என்னை வெச்ச கண்ணு வெக்கமா பாக்குமுங்க..”

உள்ளுக்குள் எனக்கு குபீர் என்று சிரிப்பு வந்தது கட்டுப்படுத்தி கொண்டு அப்படியா என்பது போல் மட்டும் கேட்டு கொண்டேன். இது தான் கோயம்புத்தூர் குசும்போ என்றபடி!!
மாலை அவள் கிளம்பும் நேரம் தெரிந்து கொண்டு அதற்கு முன்னாலே கிளம்ப பார்த்தேன். தேவராஜை முன்னரே அனுப்பி விட்டிருந்தேன் அவளிடம் தனியாக பேசும் வாய்ப்பை ஏற்படுத்தி கொள்ள வேண்டுமே என்று!!

அதே போல் பஸ் ஸ்டாண்டில் தனியாக நின்று கொண்டிருந்தாள் என்னை பார்த்ததும் மகிழ்ச்சியாக ஹாய் என்றாள்.. நிறைய பேசினோம். அவள் வீடு சேத்பட் என்பதால் கூடவே பயணிக்கும் வாய்ப்பு ஏற்பட்டிருந்தது.
எனக்கு அவளின் நம்பர் கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. எதிர்பாராமல் அவளே கேட்டு வாங்கினாள். இப்பொழுது இதை எழுதி கொண்டிருக்கும் பொழுது நேரம் இரவு 11. இப்பொழுதும் அவளின் மெசேஜ் வந்து கொண்டு தான் இருக்கிறது எல்லாம் சரியாக தான் நடக்கிறது என்று மனம் சற்று நிம்மதியாய் இருக்கிறது.
இது போல் கிடைக்கும் இரவு நேரத்தில் எல்லாம் கயலுடன் பேசி கொண்டு இருந்தால் என்னால் தொடர்ந்து எழுத முடியுமா?? முடிந்த வரை எழுதுகிறேன்.. இரவு வணக்கம்!!!



அத்தனையும் முழுமூச்சில் படித்து விட்டு நிகழ் காலத்திற்கு வந்தான் நரேன்.. கயலை காதல் கொண்ட அந்த கண்ணில் இருந்து நீர் சுரப்பது போல தெரிந்தது. மேற்கொண்டு டைரி எழுதாமல், காலியாக இருப்பதனால் தன் காதலை பற்றி நினைக்கலாமா என்று யோசித்து கொண்டிருந்த வேளையில் தான் அவன் மனைவி ராஜியின் குரல் கேட்டது..

“ஞாயிற்று கிழமை ஒரு நாள் தான் வீட்ல இருக்கீங்க எனக்கு ஹெல்ப் பண்றேன்னு சொல்லிட்டு ரொம்ப நேரமா அப்படி அங்க என்ன தான் பண்ணிட்டு இருக்கீங்க??? குழந்தை வேற அழுவுறான்… இங்க கொஞ்சம் வரலாம்ல”

“இதோ வரேன் மா 2 மினிட்ஸ்” என்று யதார்த்தத்தை புரிந்து கொண்டு அந்த டைரியை அதே இடத்தில் யாருக்கும் தெரியாதபடி மறைத்து விட்டு ஷெல்ப்பின் கதவை மூடினான்..

கூடவே அவனின் முடிந்து போன காதலையும், கயல் பற்றிய நினைவுகளையும்…
 
உங்களுடைய "ஒரு காதலின்
டைரி குறிப்பு"-ங்கிற அழகான
அருமையான புதிய லவ்லி
சிறுகதைக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
கௌதம் பேகன் டியர்
 
உங்களுக்கு அருமையான பெயர்
கடையேழு வள்ளல்களில் ஒருவரின் பெயர்
சூப்பர், கௌதம் பேகன் டியர்
 
உங்களுடைய "ஒரு காதலின்
டைரி குறிப்பு"-ங்கிற அழகான
அருமையான புதிய லவ்லி
சிறுகதைக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
கௌதம் பேகன் டியர்
மிக்க நன்றி!!! :)
 
சிறிய டைரிக் குறிப்பு .....
நல்ல தெளிவான.....தமிழ் நடையில்
வாழ்த்துக்கள்....கௌதம்
 
Top