Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கோகுலத்தில் ராமன் -07

Advertisement

பிரியா மோகன்

Tamil Novel Writer
The Writers Crew
*7*

இமை இணையா போராட்டம், நேற்றைய இரவினில் என்னுள்!

ஏனோ தெரியவில்லை!!



பேரின்பனிடம் பேச காரணம் வேண்டி காண்டீபன் தனிச்சையாய் எடுத்த முடிவு, மில்லை ஒருநாள் அவன் பொறுப்பில் விடுவதென்பது. கவனமாய் அவ்விடயம் தந்தை காதுக்கு போகாமல் அன்று முழுவதும் பார்த்துக்கொள்ள முடிந்த அவனால், யோசிக்கும் நேரத்தில் காரியம் கெட்டதை தடுக்க முடியவில்லை. தடுக்கும் நிலையிலும் அவனில்லை. முதன்முதலாய் உடம்பில் புகுந்த ரசாயனம் அவனை வெகுவாய் தள்ளாட விட்டது.



மனதை ஒருநிலைப்படுத்தி நடந்ததை வேறு விதமாய் மாற்றி சொல்லலாம் என அவன் எத்தனித்த போது நிலைமை கைமீறி போய்விட்டது. சத்தியராஜன் சற்றும் எதிர்பாராதபடி அனைவர் முன்னிலும் பேரின்பனை கை நீட்டி அறைந்திருந்தார். ஸ்தம்பித்து நின்றிருந்தனர் எல்லோரும். பேரின்பனுக்கு அதிர்ச்சி மட்டுமே! கண்டபடி பேசுவார் என அஞ்சியவன், அடிப்பார் என எள்ளளவும் எண்ணவில்லை.



கை தாங்கிய கன்னத்தோடு அவரை வெறித்து பார்க்க, கோவம் அடங்காத சத்தியராஜன், “என்னா நெஞ்சழுத்தம் இருந்தா என் மவன் கிட்ட இருந்த உரிமையை நீ புடுங்குவ? என் பொண்டாட்டிய என்கிட்டே இருந்து பிரிச்சது பத்தாதாடா அபசகுனம் புடிச்சவனே!” அவர் அலறியது கோகிலாவை கலவரப்படுத்தியது. சற்று முன் தன்னிடம் பாசமாய் பேசியவரா இவர்? என திகிலடைந்து போனாள்.



மீண்டும் சத்தியராஜன் கடும் சொற்களை அவன் மீது வீசி, ஓங்கிய கையோடு இன்பனை தாக்க வர, ஒண்டிவீரர் அவனின் முன் பாதுகாப்பு கேடயம் போல வந்து நின்றார். அந்நேரம் அவரை கண்டோருக்கு குலசாமி ஒன்டிகருப்பின் நினைவு கண்முன்னே வந்தது. அத்தனை உக்கிரம் அவர் பார்வையில். இதுவரை ஒருநாளும் தந்தை மகனுக்கு நடுவே சமரசம் பேச வந்திராதவர், இன்று பேரனிடம் கை ஓங்கிய மகனை பார்வையால் எரித்துக்கொண்டிருந்தார்.



அவன் அனல் விழியில் தன் கோவத்தை மட்டுப்படுத்திய சத்தியராஜன் நேர்கொண்டு அவரை காண முடியாமல் தலை குனிய, “ஏன் நிறுத்திட்ட சத்தியா? அடிக்க வேண்டியது தானே? இன்பனுக்கு நீ காட்டுன பாராமுகத்தையும், அவனுக்கு செஞ்ச ஓரவஞ்சனையையும் இத்தனை நாள் கண்டும் காணாம, கண்டிக்காம இருந்த இந்த பொறுப்பிலாத அப்பனை அடிக்க வேண்டியது தானே சத்தியா?” உணர்ச்சியில் குரல் ததும்ப ஒண்டிவீரர் பேசிய பேச்சில், “ப்பா!! என்னப்பா?” என பதறினார் சத்தியராஜன்.



“இத்தனை நாளும், இன்னைக்கு சரியாகும் நாளைக்கு சரியாகும்ன்னு நான் பொருத்து போனதும், கண்டுக்காம விட்டதும் இப்போ எல்லார் முன்னாடியும் தோளுக்கு ஒசந்த பையனை கை நீட்டி அடிக்குற அளவுக்கு உன்னை கொண்டு வந்து விட்டுருக்கு! ம்ம்?” அவர் கேள்விக்கு பதில் சொல்ல வராமல் தலை குனிந்திருந்தார்.



“இத்தனை நாள் நான் கேட்டதில்லை! இன்னைக்கு கேட்குறேன் சொல்லுடா! இன்பா மேல அப்படி என்ன கோவம் உனக்கு? எதுக்காக அவனை இப்படி ஓரங்கட்டுற? அவன் உன் புள்ள தானே?” இறுதியாய் அவர் கேட்ட கேள்வி அவர் மனைவி சம்பந்தப்பட்டதாய் போக, நொடியும் தாமதிக்காது, “அவன் என் புள்ள தான்!! என் புள்ள தான்!!” என்றார் கடுப்புடன்!



“ஆனா, எனக்கு காண்டீபன் மட்டும் போதும்!!” என்ற சத்தியராஜை என்ன சொல்வது என தெரியாமல், “அவன் மட்டும் உனக்கு போதும்ன்னா எதுக்கு இப்போ இன்பனை அடிச்ச? அங்க உன் புள்ளைய பாரு” என காண்டீபனை காட்டினார். போதையில் தளர்ந்த உடலை கடினப்பட்டு தூக்கிக்கொண்டு, மூடி மூடி போகும் விழிகளை பிரயத்தனப்பட்டு திறக்க முயன்றுக்கொண்டிருந்தான் அவன்.



“சுயத்தை இழக்குற அளவுக்கு குடிச்சுட்டு வந்து நிக்குறான்! அவனை நாலு அறை அறைன்ஜாலும் ஒரு தகப்பனா உன் புள்ளையை வழிநடத்துரன்னு நாங்க குறுக்க வராம இருப்போம்! ஆனா அப்டி எதுவுமே இல்லாத இன்பனை காரணமே இல்லாம கைய நீட்ட என்ன காரணம்? சொல்லு!!” ஒண்டிவீரர் விடவில்லை. சத்தியராஜன் செய்தது தவறு என அவருக்கு உணரவைக்கும் நோக்கில் பேசிக்கொண்டே சென்றார். இதுநாள் வரை தன்னை ஒரு சொல் சொல்லிடாத தந்தை இன்று ‘இவனால்’ தன்னை ஏசுகிறார் என அதற்க்கும் இன்பனை தான் மனதுக்குள் குற்றவாளியாக்கி கொண்டிருந்தார் சத்தியராஜன்.



“சொல்லுடா!!!!” ஒண்டிவீரர் அதட்டியபடி அவர் அருகே போக, இத்தனை வயதுக்கும் தன் தந்தையை கண்டு பயந்தார் சத்தியராஜன்.



“இல்லைங்கப்பா! மில்லு சாவியை திருடி கொண்டு வந்து வச்சுகிட்டது தப்பில்லையா? அதான் அடிச்சுட்டேன்” எச்சில் முழுங்கி சொன்னவரிடம், “அவன் திருடுனதை நீ பார்த்தியா? இல்ல உன் புள்ள சொன்னானா அவன் என்கிட்டே இருந்து சாவியை திருடிட்டான்னு!” தந்தையின் கேள்விக்கு அவஸ்தையாய் தன் இளைய மகனை பார்த்தார் சத்தியராஜன்.



கொஞ்சமே கொஞ்சம் தெளிந்திருந்த காண்டீபன் தந்தையை பார்க்க, “நீ வச்சுருந்த சாவி, எப்படி அவன்கிட்ட போச்சு?” என்றார் ஒண்டிவீரர் காண்டீபனை கண்டிப்புடன் பார்த்து.



“நா... நான்தான் குடுத்...தேன்!” காண்டீபனின் பதிலில் நம்பமாட்டாமல் அவனை கண்டார் சத்தியராஜன். “தெரிஞ்சுதா சாவி எப்படி இன்பாகிட்ட போச்சுன்னு? இப்போ நீ அடிச்ச அடியை திரும்பி வாங்கிக்குறியா?” என்ற ஒன்டிவீரரை கலவரமாய் சத்தியராஜன் ஏறிட, “என்னங்க இது?” என முன்னுக்கு வந்தார் சிவகாமி.



“கோவம் கூட போய்டும்! ஆனா வன்மம்!? பெத்த புள்ள மேல இத்தனை வன்மம் வைக்காத சத்தியா! பின்னால ரொம்ப வருந்துவ!!” என்றார் ஒண்டிவீரர் தெய்வ வாக்காய். குனிந்த தலையோடு நின்ற மகனின் தோள் தட்டி ‘உள்ளே போ’ என அனுப்பி வைத்தவர், காண்டீபனை, “போதை தெளிஞ்சதும் உள்ளே வா! அதுவரைக்கும் திண்ணையில படு போ!” என அனுப்ப, “ஓக்கி” என சல்யூட் வைத்து நகர்ந்துவிட்டான் அவன்.

தூணுக்கும் ஆளுக்கும் கூட வித்தியாசம் தெரியாமல் இடித்துக்கொண்டு செல்லும் பேரனை கண்டு, “இவனை இப்படியே வீடியோ எடுத்து காலையில அவனுக்கு போட்டு காட்டு கோகிலா, இனிமே விறைப்பு முறைப்பு எல்லாம் எப்படி வருதுன்னு பார்க்குறேன்!” என்று சின்ன சிரிப்போடு சொல்ல, மெகா சீரியல் பார்ப்பதை போல நடந்ததை எல்லாம் பார்த்தவள், அவசரகதியில் விளையாட்டை கூட உணராது, “சரி தாத்தா சரி தாத்தா” என்றாள்.



செல்லமும் ஷங்கரும் இருந்த இடம் தெரியாமல் நகர்ந்து தங்கள் அறைக்கு சென்றுவிட, சிவகாமி, “வலிக்குடாதா இன்பா?” என்றார் அவன் கன்னத்தை தொட்டு பார்த்து. சிவகாமியின் முகமே கவலை அப்பி தெரிய, தங்கம் விட்டால் அழுதுவிடுவேன் என்ற அளவு சோகமாய் இன்பனை பார்த்துக்கொண்டிருந்தார்.



“கன்னம் வலிக்குது அவ்வ அவ்வா, வயிறு கேக்குது புவ்வா புவ்வா” நிலைமையை இலகுவாக்க இன்பன் ராகமிட்டு பாடியது சரியாய் வேலை செய்தது. அவன் பாடியதும் வாய்விட்டு சிரித்த சிவகாமி, “பாதி சாப்பாட்டுல எழுந்துட்டியே? உனக்கு வேற தோச சுட்டு கொண்டு வரேன், எழுந்து போய்டாத இரு!!” என்று சொல்லிக்கொண்டே அடுக்களைக்குள் ஓடினார், அந்த வயதிலும். அம்மாவை வேலை செய்ய விடவேண்டாமென தங்கமும் அவரோடு சென்றுவிட, எதுவுமே நடக்காதது போல நின்ற இன்பனை நெருங்கினார் ஒண்டிவீரர்.



“குனியறது தப்பில்லை! ஆனா குட்ட குட்ட குனிஞ்சுட்டே இருக்கிறது ரொம்ப தப்பு” பொதுவாய் சொல்லி சென்றுவிட்டார். இப்போது அங்கே இன்பனும் கோகிலாவும் மட்டுமே!



அவனிடம் எப்படி பேசுவது? இல்லை, பேசாமலே போய்விடலாமா? என்ற அவள் யோசனையை கலைக்கும்படி, “ஏய் கொக்கி, அந்த சட்னி எடு! யாருமே தின்னல, நானாவது ஒரு கட்டு கட்டுறேன்!!” என்றான் தட்டில் இருந்த தோசையை வாயில் போட்டுக்கொண்டு.



“ப்ச்!! நான் கொக்கி இல்ல!” பல்லை கடித்துக்கொண்டு அவள் சொல்ல, “சரி மூக்கி! சட்னிய எடு” என்றான் வேண்டுமென்றே.

அவளுக்கு கோவம் வந்தாலும் கேட்டே ஆக வேண்டிய சந்தேகம் ஒன்று இருந்தது.

“நான் ஒன்னு கேட்கவா?” என தொடங்கியவளிடம், “என்கிட்டயே ஒண்ணுதான் இருக்கு, வேணுன்னா அம்மாயிட்ட கேளு, சுட்டு தருவாங்க” என்றான்.



“ஹான்?” என விழித்தவள், “அய்ய, மாமா! நான் தோசையை கேட்கல! உங்களை அடிச்சதை பார்த்த எனக்கே அப்டி ஒரு கோவம் வந்துச்சு! தாத்தா மட்டும் பேசிருக்கலன்னா, நானே சண்டைக்கு நின்னுருப்பேன்!! ஆனா நீங்க எப்டி எதுவுமே நடக்காதாமாறி இப்படி....” கேள்வியை முடிக்காமல் இழுக்க, “ம்ம் முழுசா கேளு, எப்படி இப்டி சூடு சுரணையே இல்லாம தோசையை திங்குரீங்கன்னு தானே கேட்க வந்த?” என்று அவன் எடுத்து கொடுக்க, “ஹீ ஹீ” என பல்லை காட்டினாள் கோகிலா.



“நான் அப்டிதான்!!” ஒரே வரியில் முடித்துவிட்டான். அதன்பிறகு பேச்சே இல்லை. அடுத்த தோசை வந்தபோது மறுக்காமல் உண்டவன், கை கழுவியதோடு மாடியறைக்கு சென்று மறைந்தான். சிவகாமியும் உறங்க சென்றுவிட, அடுக்களையை ஒதுங்க வைத்துக்கொண்டிருந்த தங்கத்திடம் நைசாக வந்தாள் கோகிலா.



அவளை கண்டதும், “ஏதாது வேணுமா கண்ணு?” என்றார் தங்கம் வாஞ்சையாய்.

“ஒன்னும் வேண்டாம் சித்தி! நீங்க சாப்பிட்டீங்களா? எப்பவும் வேலை செஞ்சுட்டே இருக்கீங்களே?” அவளும் வந்தது முதல் பார்க்கிறாள் வீட்டில் எத்தனை ஆட்கள் வேலைக்கு இருந்தாலும் அடுக்களை அவர் ஆட்சியாக தான் இருந்தது. அடுக்களையை விட்டு வெளியே வருவதே இல்லை! ஏதோ ஒன்று செய்துக்கொண்டே இருந்தார்!



“எனக்கு சமைக்கிறது தான் வேலை, பொழுதுபோக்கு, கடமை எல்லாமே!!” என்று வெள்ளந்தியாய் சிரிக்கும் தன் பெரியன்னையை கண்டு அவள் மனம் வருந்தியது, இவர் வாழ்க்கை இப்படி ஆகிவிட்டதே என்று!

பின்னே, “நான் உங்களை பெரிம்மான்னு சொல்லாம சித்தின்னு சொல்றேன், நீங்க ஏன் எதுவுமே சொல்லல?” என்றாள்.

“அட, ஆமா!!” அவள் சொன்ன பிறகே கவனித்தார்.

“நான் ஏன் அப்படி கூப்பிடுறேன்னா, நீங்க என் அம்மாவ விட பார்க்க அழகா யங்கா இருக்கீங்க! அதான்!!” பனிப்பாறையை தூக்கி தலையில் வைத்துவிட்டு கண்சிமிட்டி சிரிக்கும் கோகிலாவை கண்டு வெட்கமாய் சிரித்த தங்கம், “போ கண்ணு! கேலி பண்ணிக்கிட்டு” என்றார்.

“அட நிஜமா சித்தி!!” கற்பூரம் அடிக்காத குறையாய் சத்தியம் செய்தாள் கோகிலா. அதன்பின் அவர் வேலை முடிந்துவிட, “நீங்க படுத்ததும் தூங்கிடுவீங்களா சித்தி?” தூண்டில் போட்டாள் கோகிலா.



“இல்லம்மா! கொஞ்ச நேரம் ஏதாவது புக்கு படிச்சுட்டு அப்புறம் தான் தூங்குவேன்!!” என்றதும், ‘ஹையா மீனு சிக்கிடுசே!’ என உள்ளூர குதூகலித்த கோக்கி, “அப்போ நான் உங்ககூட கொஞ்ச பேசிட்டு இருந்துட்டு போகவா? எனக்கும் தூக்கம் வரல!!” என்றிட, “வா கண்ணு!!” தன்னறைக்கு அழைத்து சென்றார் தங்கம்.



போனதும் வேண்டுமென சில வெட்டி பேச்சுக்கள் பேசிய கோக்கி, இப்போது தனக்கு வேண்டியதற்கு வந்தாள்.

“இன்பா மாமாவ நீங்கதான் வளர்த்தீங்களா சித்தி?” அவர் ‘ஆம்’ என்றதும், “அவர் அம்மா எப்படி இறந்தாங்க?” என்றாள். தங்கம் அதற்கு பதில் சொல்லவில்லை.



“அது எதுக்கு கண்ணு? நம்ம தூங்கலாம், நேரமாச்சு” என மழுப்ப, “சித்தி சித்தி, ப்ளீஸ், சொல்லுங்களேன்!! மாமா ஏன் இன்பா மாமா மேல இவ்ளோ கோவமா இருக்காங்க? அவர் அம்மா எப்படி இறந்தாங்க? எனக்கு தெரிஞ்சே ஆகணும்!!” அடம் பிடிக்கும் தங்கை மகளை, “இன்னைக்கு தான் வந்த! அதுக்குள்ள எதுக்கு இதெல்லாம்?” என பேச்சை கைவிடவே வகை பார்த்தார் தங்கம்.



பலநூறு ‘ப்ளீஸ்’களை போட்டு, “நானும் இந்த வீட்டு பொண்ணு தானே? எனக்கு தெரிஞ்சுக்க உரிமை இல்லையா?” என கோவித்து கொண்டதும் தான் அவள் வழிக்கு வந்தார் தங்கம்.



“நான் சொல்றேன்! ஆனா இதேதும் தெரிஞ்சமாறி காட்டிக்காத!! இன்பனுக்கு இரக்கம் காட்டுனா அறவே பிடிக்காது!!” என்ற பொறுப்புதுரப்பு நோட்டிஸோடு பேரின்பனின் இன்பம் பறிபோன அந்நாளை நினைவு கூர்ந்தார் தங்கம்.



“சத்தியா அண்ணனும் வைதேகி அண்ணியும் காதலிச்சு கல்யாணம் செய்துக்கிட்டாங்க! அண்ணி எங்க சொந்தம் தான், அதனால ரெண்டு வீட்டுக்கும் எந்த தடையும் இல்லை! ஆனா, இங்க நானும் செல்லமும் கல்யாணம் ஆகாம இருக்கப்போ எப்படி அண்ணனுக்கு கல்யாணம் முடிக்குறதுன்னு அப்பாவும அம்மாவும் ரொம்ப தயங்குனாங்க.

அண்ணன் தான் ரொம்ப பிடிவாதம் பிடிச்சு கல்யாணம் செய்துக்கிச்சு! அண்ணி கண்ணுல தூசி விழுந்தா இவர் கண்ணு கலங்கும், அந்த அளவுக்கு ரெண்டு பேரும் அன்னியோன்யமா இருந்தாங்க. வயசு பொண்ணுங்க இருக்க வீட்ல அவங்க ரெண்டு பேரும் கூடி கூடி சுத்துறது சரி வராதுன்னு சோளகாட்டுல இருக்க சின்னவீட்டுக்கு அண்ணன் அண்ணியை தனிக்குடித்தனம் அனுப்பிட்டாரு அப்பா!! அதுவரைக்கும் எல்லாம் நல்லாதான் போய்கிட்டு இருந்துச்சு!!”



“அண்ணன், எங்க குடும்ப தொழில் இத்தனை இருக்க, இது எதுலையும் பொறுப்பெடுத்துக்காம சொந்தமா லாட்டரி சீட்டு தொழில் எடுத்து செஞ்சாரு, லாபம் நிறைய கிடைச்சு, சந்தோசமா இருந்தாங்க!! அப்போதான் கவர்மெண்ட்டு லாட்டரி சீட்டை தடை செஞ்சதோட, அதை வியாபாரம் செய்றவங்களை கைது செய்யணும் உத்தரவு போட்டாங்க!

வியாபாரம் படுத்துடுச்சு, லாபம் குடுத்த தொழிலு முதலுக்கே மோசமா போய்டுச்சு! எல்லாரும் அண்ணனுக்கு நேரம் சரியில்லன்னு சொல்லி வருத்தப்பட, அந்நேரம் அண்ணி கர்பமா இருக்கிறது தெரியவந்துச்சு!!

சந்தோசத்தை முழுசா அனுபவிக்க முடியாம, அடுத்தடுத்து அண்ணன் தொடங்குற எல்லா தொழிலும் ஏதோ ஒரு விதத்துல சரியில்லாம நஷ்டத்தை கொடுத்துட்டே இருக்க, அண்ணி வயித்துல குழந்தை உதிச்ச நேரம் தான் சரியில்லன்னு அரசல்புரசலா எல்லாரும் புரளி பேச, அண்ணன் நடக்குறதெல்லாம் ஒப்பிட்டு பார்த்து அதை உண்மைன்னு நம்ப ஆரம்பிச்சாரு.

ஆனா அண்ணி, குழந்தைக்கும் நமக்கு நடக்குறதுக்கு தொடர்பே இல்லை. அதனால தேவையில்லாத கற்பனை பண்ணிக்காதீங்கன்னு அண்ணன்கிட்ட தெளிவா உறுதியா சொல்லிட, அதுக்குமேல அவரால வெளிப்படையா எதுவும் பேச முடியல. மனசுக்குள்ள இன்பன் உதிச்சது தான் காரணம்ன்னு வலுவா நம்புனாரு. காமாலை கண்ணுக்கு பார்க்குறதெல்லாம் மஞ்சளா தெரியுன்குற மாறி கல்லு தடுக்குனா கூட குழந்தை வந்த நேரம்ன்னு தான் நினைக்க தொடங்குனாரு. இன்பன் அண்ணி வயித்துல வளர வளர அவன் மேல இருந்த வெறுப்பும் அண்ணனுக்கு ஏறிகிட்டே போச்சு!



அண்ணனுக்கு எந்த தொழிலும் இல்லாம சிரமப்படுறதை பார்த்த எங்கப்பா, நகைக்கடைல கொஞ்ச நாள் வேலைக்கு இருந்து தொழிலை கத்துக்கோ, அதுக்கு பிறகு சொந்த தோளுக்கு நானே ஏற்ப்பாடு பண்றேன்னு வாக்கு கொடுத்தாரு!

உங்க அப்பா ஷங்கர் தான் அப்போ எங்களோட எல்லா தொழிலையும் கவனிச்சுட்டு இருந்தாரு. அவர் கல்லால உட்கார, அண்ணன் வேலையாளா நின்னது அவர் தன்மானத்தை சீன்டிடுச்சு! அப்போதான் இன்பா பொறந்தான்! சரியா நிறைஞ்ச அம்மாவாசை ராகுகாலத்துல அவன் வெளிய வந்தான்!



அதுல எங்களுக்கெல்லாம் சின்ன சுணக்கம் இருந்தாலும் வீட்டோட முதல் வாரிசுன்னு எல்லாரும் சந்தோசத்துல இருந்தோம், அண்ணனை தவிர! முதலாளியா இருந்த என்னை பூமிக்கு வந்ததுமே வேலைக்காரனா மாத்திட்டான்னு இன்பா மேல கோவம்!



அவன் எது செஞ்சாலும் அவருக்கு பிடிக்காது! அவனை அபசகுனம்ன்னே சொல்ல ஆரம்பிச்சாரு! அண்ணிக்கும் அண்ணனுக்கும் இதனால சண்டை வர ஆரம்பிச்சுது! அண்ணி அடிக்கடி இன்பானால தான் தன்கிட்ட கோவப்படுறாங்கன்னு அதுக்கும் இன்பனை தான் குறையா நினைச்சாரு அண்ணன்!

இப்படியே ஓடுச்சு ஆறு வருஷம்!!

அண்ணன் மேல நம்பிக்கை வந்ததும் நகைக்கையோட முழு பொறுப்பையும் அவரை இனி பார்த்துக்க சொல்லி சொல்லிட்டாரு எங்கப்பா! சரியா அதேநேரம், காண்டீபன் உருவானான்! இதெல்லாம் எதேட்சையா நடந்ததா, இல்ல அண்ணன் நம்புன மாறி ஜாதகம் நேரம் இதெல்லாம் ஒரு காரணமான்னு தெரியல! நடந்ததெல்லாமே இன்பனை அண்ணன் வெறுக்குறதுக்கு சாதகமா அமைஞ்சுது!



பிரசவத்துக்காக அண்ணி அவங்க அம்மா வீட்ல இருந்தாங்க! காண்டீபன் பொறந்தான்! நல்லா செக்கசெவேல்ன்னு இருந்த புள்ளைய பார்த்து அண்ணனுக்கு அப்படி ஒரு சந்தோஷம்! அவன் பொறந்து ஒரு மாசத்துல தான் எனக்கு கல்யாணம் முடிவு செஞ்சுருந்தாங்க!

உங்க அப்பா ஷங்கர் செல்லத்தோட ஊரைவிட்டு போயிட்டதால எங்க சொத்துகளோட முழு பொறுப்பும் அண்ணன் பார்வைக்கு வந்துச்சு! காண்டீபன் வந்துதான் தன்னை எஜமானன் ஆக்கிட்டான்னு ஊரெல்லாம் தம்பட்டம் அடிச்சாரு!!

அப்போ அண்ணியை தவிர இன்பனுக்கு எந்த ஆதரவும் இல்லை! எங்ககிட்ட கூட அவ்ளோ ஒட்டுதலா வரமாட்டான்!” இத்தனை நேரம் கதையாய் சொன்னவர், கண்ணின் ஓரம் ஈரம் கசிய, நீண்ட நெடுமூச்சையை வெளிதள்ளி, “அண்ணன் அண்ணியோட எட்டாவது கல்யாண நாள் வந்துச்சு” என்றார் சிறு கேவலுடன்!!



கோகிலா அவர் முகத்தையே படித்துக்கொண்டிருந்தாள். தான் கேட்ட கேள்விக்கான விடை வரப்போவதை உணர்ந்து!!! ஆனால் அவரோ, “எனக்கு தூக்கம் வருது கோகிலா! நீயும் போய் படு!!” என்று விட்டேத்தியாய் சொன்னதோடு தன் மெத்தையில் சரிந்து படுத்துக்கொள்ள, தவித்து போனாள் அவள்.



“சித்தி!!! அத்தைக்கு என்ன ஆச்சுன்னு சொல்லுங்க ப்ளீஸ்” அவள் அவர் கையை பிடித்து இழுத்து கெஞ்ச, “சொன்னா கேளுடா கோகிலா! சித்தியால இதுக்குமேல முடியாது! நீ போய் தூங்கு, எனக்கு தலை கிறுகிறுன்னு வருது!!” சொல்லபோவதை ஒரு சாவை பற்றி மட்டும் அல்லவே, தங்கத்தை பொறுத்தவரை அவர் பெறாமலே இன்பனுக்கு தாயான தருணம்! உணர்வுகளின் குவியலில் தலை சுற்ற, படுத்துவிட்டார்.



“என்ன பண்ணுது சித்தி? நான் வேணுனா லெமன் ஜூஸ் கொண்டுவரவா?” அவருக்கு முடியவில்லை என்றதுமே பதட்டமானாள் கோகிலா.

அவள் கரிசனையில் மேலும் கண் கசிய, “வேணாம்டி தங்கம், நீ போய் தூங்கு, மனசுல எதையும் நினைக்காத!!” தங்கை மகளை பரிவாய் அனுப்பிவைத்தார் தங்கம்.



அதற்க்குமேல அவரை தொந்தரவு செய்ய விரும்பாமல், போர்வையை அவர் கழுத்துவரை இழுத்து போர்த்திவிட்டவள், விடிலைட்டை போட்டுவிட்டு அறையை விட்டு வெளியேறினாள்.



அந்த நீண்ட கூடத்தை கடந்து அவள் அறைக்கு மாடியேற, கால்கள் ஒத்துழைக்காமல் ஒன்றோடொன்று பின்னிக்கொன்டதை போல ஆனது. சிரமப்பட்டு மாடியேறிவிட்டாளும் தன்னறைக்கு செல்ல தோன்றாமல் அங்கேயே அவள் சிறிது நேரம் நடக்க, பேரின்பனின் அறை கதவு பூட்டப்படாமல் இருந்தது அவள் கண்ணில் பட்டது.

உடனே, ‘மாமாகிட்ட பேசிபார்க்கலாமா?’ என தோன்ற, மறுகணம், ‘இந்த நேரத்துல எப்படி அவர் ரூமுக்கு போவ, இடியட்’ என மூளை இடித்தது.

அப்படியே சில நேரம் அங்கே உலா வந்தாள். அதற்க்கு மேல் நடக்கபிடிக்காமல் அங்கிருந்த கதிரையில் அவள் அமர, ‘அத்தைக்கு என்ன ஆகிருக்கும்? அதற்க்கு இன்பன் மாமா எப்படி காரனமாகிருப்பாங்க?’ என்ற கேள்வி அவளை தூங்க விடாமல் குடைந்தது. இப்போதைக்கு தூக்கம் வர வாய்ப்பே இல்லை என தெரிந்ததும், ‘சரி, மொட்டைமாடிக்காவது போலாம்!!’ என வேகமாய் தாவி மேல் மாடி ஏற, வீட்டின் வெளிப்புறமாய் கால்போட்டு ஊரின் செழுமையை ரசித்தபடி கைப்பிடி சுவரில் அமர்ந்திருந்தான் பேரின்பன்.



அவனை அந்நேரம் அங்கே கண்டதும் தொலைந்திருந்த உற்சாகம் மேலெழ, “மாமா...!!!” என்ற கூவலோடு அருகே ஓடினாள். ஆள் அரவமற்ற அமைதியில் திடுமென அவள் குரல் கேட்டதும், ஒரு நொடி திகைத்து தடுமாறியவன், கைப்பிடி சுவரை இறுக்க பற்றி தன்னை நிலைப்படுத்திக்கொண்டான். அருகே அவள் வந்ததும், “லூசு! பொறுமையா வந்தாதான் என்னவாம்?” என்றான் முறைத்துக்கொண்டே.



“பயந்துட்டீங்களா?” அவள் சிரிக்க, “ஹே ஹே! நாங்கல்லாம் புயலுக்கே பூ வைக்குறவங்க! எங்கிட்டயேவா?” அவன் பந்தா காட்ட கிளுக்கி சிரித்தாள் கோகிலா.



“இந்நேரத்துல தூங்காம என்ன செய்யுற நீ?”

“இதையே நானும் கேட்கலாமே!!” என்ற கோகிலாவை, “விவரம்தான்!!” என்றான் இன்பன்.

அவன் அமர்ந்திருப்பது ஆபத்தாது என்பதால், “உள்பக்கமா கால் போட்டு உட்காருங்க மாமா!” என்றாள்.

“சின்ன வயசுல இருந்தே இது பழக்கம்! எனக்கொண்ணும் ஆகாது!!” என்றவனை, “அப்போ நானும் உட்காருவேன்!!” என அவள் பிடிவாதம் செய்ய, முறைப்புடனே உள்பக்கமாக கால்போட்டு அவள் முகம் பார்த்து திரும்பியவன், “பிடிவாதம் பிடிக்கிறது குடும்ப சொத்து போல” என முணுமுணுத்தான்.



காதில் விழுந்தாலும் கண்டுக்கொள்ளாமல் இருந்தாள் கோகிலா. தங்கத்திடம் தான் பேசியதை பற்றி கேட்டாள் எங்கே கோவித்துக்கொள்வானோ என ஐயம் கொண்டு ‘கேட்கலாமா? வேணாமா?’ மனத்துக்குள் பட்டிமன்றம் நடத்தியவளிடம், “ரொம்ப நேரம் நிக்காத, பனி பெய்யுது! நான் கீழ போறேன்” என நக்ர்ந்தவனின் கையை “மாமா?” என்று வேகமாய் பற்றினாள் கோகிலா. அவள் எதிர்பாரா தீண்டலில் திடுக்கிட்டு திரும்பிய இன்பன் “என்ன?” கேள்வியாய் பார்க்க, அதன் பிறகே அவன் கையை பற்றியிருப்பதை உணர்ந்து பிடியை விட்டாள்.

அன்று திருமண நிச்சயம் முடிந்த பின்னே, கிஷோர் தன் கையை பற்றியபோது தீ சுட்டார் போல விளக்கிவிட்டவள், இன்று அவலறியாது அவன் கரம் பற்றுகிறாள். அதை அவள் மனம் உணரத்தான் இல்லை!



“ஒன்னும் இல்ல மாமா! கொஞ்ச நேரம் பேசிட்டு இருக்கலாம்ன்னு கூப்பிட்டேன்!” என்று தடுமாற்றத்தை மறைத்து இயல்பு போல் அவள் சொல்ல, சுவற்றில் சாய்ந்து நின்றுக்கொண்ட இன்பன், “பேசு கொக்கி!!” என்றான். அவள் தடுமாற்றம் சட்டென விலகி, “ப்ச்! கொக்கின்னு சொல்லாதீங்க மாமா” என்றாள் சிணுங்கலாய்.



“நீ சொல்லாதன்னு சொன்னாதான் நான் வேணுன்னே சொல்லுவேன்! என் டிசைன் அப்படி” என்று சிரிக்க, “க்கும்” உதட்டை சுளித்து கொண்டவளுக்கு புன்முறுவலே வந்தது. அடுத்து அவன் பேசமாட்டான் என தெரிந்ததும், “உங்களுக்கு யார் மாமா பேர் வச்சாங்க? டிப்பரன்ட்டா இருக்கு?” என கேட்டவளிடம், மெல்ல சிரித்தவன், “அம்மா” என்றான். அவன் சொன்ன அந்த ஒற்றை சொல்லில் அவன் உணர்வுகள் மொத்தமும் அவளுக்கு பிடிபடுவதாய்!!

குரலில் அத்தனை மென்மை, முகம் அன்னையின் நினைவில் விகசிக்க, “அவங்க வச்ச பேரு” என்றான் இன்பன்.

அவள் கேட்காமலே, “நான் எப்பவும் ரொம்ப சந்தோசமா இருக்கணும்னு ஆசைப்பட்டு இந்த பேரை வச்சதா அடிக்கடி சொல்லுவாங்க!!” என்றவன் தன் வாழ்கையின் எதிர்ப்பதத்தை எண்ணி, “ஹும்ம்!!” என கசந்த முறுவலோடு மூச்சொரிந்தான்.



“அம்மாக்கு என்ன ஆச்சு!?” கோகிலாவின் அடுத்த கேள்வியில் அவன் முகத்தின் மென்மை மறைய, “என்னை பார்த்து பேசி முழுசா ஒரு நாள் கூட ஆகலை! ரொம்ப வேகமா போகாத எப்பவும்! ஆக்சிடென்ட் ஆகிடும்!” என்றான் சிரித்துக்கொண்டே! அடுத்து அவள் பேச இடம்கொடுக்காமல் விறுவிறுவென கீழிறங்கி சென்றும் விட்டான். தனித்து நின்ற கோகிலா, “நம்மளும் கொஞ்சம் ஓவரா தான் போறோமோ?” என வாய்விட்டே சந்தேகத்தை சொல்ல, “ப்ச்!! போவோம்! என்ன ஆகிட போது!!” என விளையாட்டாய் சிரித்துக்கொண்டே உறங்க சென்றாள்.

விளையாட்டும் வினையாகுமோ?!

-தொடரும்...


இனி 'புதன்கிழமை' சந்திப்போம்!!! ஹீஹீ
 
Top