Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சட்டென மாறுது வானிலை!-6

Advertisement

praveenraj

Well-known member
Member
இந்திரன், ராஜேந்திரன் இருவரும் பொடிநடையாக அந்த பங்களாவிலிருந்து அவ்வூரின் கடைத்தெரு பக்கம் சென்றனர். என்னதான் இங்கு பலமுறை வந்திருந்தாலும் இப்படி நடந்து எல்லாம் அவன் சென்றதே இல்லை. அதைக்காட்டிலும் இப்படி நிதானமாக ஒவ்வொன்றாராய் அனுபவித்து ரசித்து சென்றதில்லை. ராஜேந்திரனும் அவன் எங்கே பார்கிறானோ உடனே அதைப்பற்றி ஒரு வரலாறைச் சொல்லத் தொடங்கிவிடுவார். அதை அவன் கேட்கிறானா? இல்லை அந்த மனநிலையில் அவன் இருக்கிறானா என்று கூட அறியாமல் எல்லாமும் சொல்லிக்கொண்டிருந்தார். இவனும் முதலில்,'என்னடா இது பெரும் ரோதனையாக போய்டுச்சே?' என்று சலித்துக்கொண்டவன் பின்பு போர் அடித்ததால் அவர் சொல்வதையே கேட்டுக்கொண்டிருந்தான்.
ராஜேந்திரன் பூர்விகமே அட்டகட்டி தான். அவரும் மலைவாழ் மக்களில் ஒருவர் தான். என்ன கொஞ்சம் கேள்வி ஞானமும் பொது அறிவும் கூடவே அந்தக் கூச்ச சுபாவமும் இல்லாததால் அவர் எல்லோரிடமும் பழகத் தொடங்கி விட்டார். மேலும் அங்கு வேலை செய்பவர்களை எப்படி வேலை வாங்குவது என்பதும் தெரிந்துகொண்டதால் இந்த எஸ்டேட்டை இவன் தந்தை வாங்குவதற்கு முன்பு வைத்திருந்தவரிடம் இதே வேலை செய்துகொண்டிருந்தவரை இமையவர்மனும் தன்னுடனே இருக்கும்படி பார்த்துக்கொண்டார். இவரும் முதலாளிக்கு விசுவாசமாக இருக்கவேண்டும் என்று அதே நேர்த்தியாக இருக்கிறார். இங்குள்ளவர்கள் எல்லோருக்கும் ராஜேந்திரன் மீது மதிப்பும் உண்டு கூடவே பொறாமையும் உண்டு. பின்னே வருடத்திற்கு ஒரு முறை தான் இமையவர்மன் தன் குடும்பத்தோடு இங்கே வந்து செல்வார். மற்ற நேரங்களில் எல்லாம் ராஜேந்திரன் தான் இவற்றுக்கெல்லாம் பொறுப்பு. என்னத்தான் மேனேஜர் என்று ஒருவர் இருந்தாலும் இங்கு சகலமும் இவர் தான்.
"தம்பி பார்த்து வாங்க, பாதை சறுக்கும்..." என்றவர் மேலே வானத்தைப் பார்த்து,"சீக்கிரமா வாங்கிட்டு திரும்பிடலாம் தம்பி. இன்னைக்கு மழை உண்டு..." என்று வானத்தைப் பார்த்தபடியே சொன்னவரை ஆச்சரியமாகவே பார்த்தான் இந்திரன். பின்னே அவனைப் பொறுத்தவரை இவர் படிக்காத பட்டிக்காட்டான். இதற்காக அவன் அடிக்கடி இவன் தந்தையிடம் கேள்விகேட்டதும் உண்டு. பின்னே மேனேஜர் எதற்கெடுத்தாலும் ராஜேந்திரன் சார் ராஜேந்திரன் சார் என்று சொல்லுவது இவனுக்கு எரிச்சலைத் தர ஒருமுறை," எதற்கு அந்த ராஜேந்திரனுக்கு அவ்வளவு முக்கியத்துவம் தரீங்க அப்பா?" என்று இவன் தந்தையிடமே கேட்டுவிட்டான்.
அவரோ சிரித்து,"இந்திரா அவர் ஆளைப் பார்த்து நீ தப்பா எடைபோடுற. என் அனுபவத்துல சொல்றேன் நீ இந்த உலகத்துல எந்த மூலை முடுக்குல போய்த் தேடி கொண்டுவந்தாலும் ராஜேந்திரன் மாதிரி ஒரு விஷயம் தெரிந்த விசுவாசியை நீ கண்டுபிடிக்கவே முடியாது..." என்று சொல்லுவார். இவனும் இங்கே வந்ததிலிருந்து அவரைப் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறான். ஒரு வேட்டி சட்டை தான் அவர் உடை. அதும் விலை மலிவானது தான். முகத்தில் எப்போதும் இருக்கும் தாடி, வாயெல்லாம் பாக்கு அல்லது புகையிலை ஆனால் கண்களில் ஒரு தேடல், முகத்தில் ஒரு பொறுப்பு என்று எல்லாமும் கொண்டு தான் இருக்கிறார். அவனுக்கு இவர் ஒரு விந்தையாகவே தான் தெரிந்தார். பின்னே இந்தியாவில் இளநிலை கல்லூரியை முடித்து அப்ராடில் mba முடித்து கிட்டத்தட்ட மூன்று வருடங்களில் எத்தனையோ பெரிய பணக்கார்கள் மனிதர்களை எல்லாம் பார்த்து இருக்கிறான் இந்திரன். ஆனால் இவர்போல் ஒருவர் அவனுக்கு தென்பட்டதில்லை என்பது தான் நிதர்சனம்.
அட்டகட்டி:
கோயம்பத்தூர், திருப்பூர் மாவட்டங்களில் ஆனைமலை சரணாலயத்தை ஒற்றி பொள்ளாச்சி வால்பாறை சாலையில் பொள்ளாச்சிலிருந்து வால்பாறைக்கு செல்லும் வழியில் ஆழியாறு தாண்டி குரங்கருவிக்கும் அய்யர்பாடிக்கும் இடையில் இருக்கும் இயற்கை எழில் கொஞ்சும் இடம் தான் அட்டகட்டி. இங்கு ஒரு செக் போஸ்ட் இருக்கிறது. இதைக்கடந்து தான் செல்ல இவ்வூருக்குள் வேண்டும். சுற்றியும் ஆனைமலை புலிகள் சரணாலயம், ஆழியாறு ரிசெர்வ் காடுகள் தான். திருமூர்த்தி டேம், சோலையார் டேம், பொள்ளாச்சி டாப் ஸ்லிப், பரம்பிக்குளம் புலிகள் சரணாலயம், நல்லமுடி வியூ பாய்ண்ட் உடன் தடுக்கி விழுந்தால் கேரளம் என்று சுற்றியும் ரம்மியமான இடம் தான் இந்த அட்டகட்டி.
இன்னும் கொஞ்சம் புரியும்படி சொன்னால், மனிதனின் பேராசைகளுக்கும் பணமோகத்திற்கும் இன்னும் இயற்கையைச் சீரழிக்காமல் இயற்கையை இயற்கையாகவே இருக்க வைத்து இங்கேயும் மனிதன் வாழலாம் என்று இன்னமும் உலகிற்கு உரக்க குரலிடும் ஒரு இடம். விலங்குகளுக்கு அதன் இருப்பிடத்தை அப்படியே விட்டுக்கொடுத்து வாழும் ஊரிது. புலி, சிறுத்தை, யானை, வரையாடு கழுகு, மான் முதலிய பல உயிரினங்கள் வசிக்கும் இடம். இதில் நீலகிரி தார் எனப்படும் வரையாடு தான் தமிழ்நாட்டின் மாநில விலங்கு.
இப்படி இருக்கும் இடங்களைத் தான் ஆங்கிலேயர்கள் கண்டு ஆச்சரியப்பட்டு இங்கு தேயிலை தோட்டத்தை ஏற்படுத்தி அதனால் சாமான்ய இந்திய மக்களின் ரத்தத்தை உரிந்து எடுத்தனர். பெரும்பாலும் இங்கு வாழ்பவர்கள் எல்லோரும் மலைவாழ் மக்கள் தான். ஆறு வகையான ட்ரைப்ஸ் (tribes) இங்கே வசிக்கிறார்கள். இன்றைக்கும் இது சில பணக்காரர்கள் வசம் ஆனது தான் தலைவிதி போலும். இங்கேயே தோட்டத்தில் பூர்வகுடிகள் வேலையாட்களாக வாழ்வது தான் கொடுமையான உண்மை!
சோ இந்த மாதிரி இடத்தில் அதும் இந்த அந்தி சாய்ந்த பொழுதில் தனியே செல்லக்கூடாது என்பதால் தான் ராஜேந்திரனும் அவனை கூடவே கூட்டி வருகிறார்.
ஏனோ எப்போதும் ஏதாவது மீட்டிங், கமிட்மெண்ட்ஸ், டார்கெட்ஸ் என்று பரபரப்பாகவே சுற்றிக்கொண்டிருந்தவனுக்கு இந்த அமைதி கூடவே இவர்களின் எளிமை, நகரதவர்களைப் போல் பொருட்களின் மேல் மோகம் கொள்ளாமல் இன்னமும் இயற்கையையே நம்பி இருக்கிறார்கள் என்று நினைக்கையிலே இந்திரனுக்கு ஒருவித பிரமிப்பு வந்து சென்றது. இதையெல்லாம் மற்றொரு எபியில் பார்க்கலாம்.
அங்கே பேக்கரி என்பது கூட சாதாரண ஒன்று தான். பிரட் என்னும் ரொட்டிகள் தான் அங்கு அதிகம். இருந்தும் நிறைய ரிஸார்ட்ஸ் உள்ளதால் அங்கு சென்று கேக் வாங்கலாம் என்று சென்றனர். இந்திரனை அங்கேயே நிற்குமாறு சொல்லிவிட்டு ராஜேந்திரன் தான் உள்ளே சென்றார். இவனும் அங்கிருக்கும் விளக்குகள் மற்றும் எளிமையான வீட்டின் கட்டமைப்புகள் என்று எல்லாவற்றையும் வியந்து பார்த்துக்கொண்டிருந்தான்.
அப்போது இவனை நோக்கி சில சிறுவர்களுடன் ஒருத்தி வந்தாள். பகட்டான ஆடையெல்லாம் இல்லாமல் மிக சிம்பிளாக ஒரு சல்வாரில் முகத்தில் ஒரு வித அமைதியுடன் அவள் காட்சியளித்தாள். கூடவே அச்சிறுவர்களுடன் தானும் ஒருத்தியாக வலம்வந்து அவர்களுடன் சிரித்துக்கொண்டிருந்தாள்.
மனம் அவளை நோக்கி சென்றது தான் ஏனென்று தெரியவில்லை. அவளையே தீர்க்கமாய்ப் பார்த்தான். முகத்தில் எவ்வித சலனமும் இல்லை. இப்படி ஒருவன் இருப்பதைக் கூடக் கண்டுக்கொள்ளாமல் அவள் உள்ளே சென்றாள். இவனும் அந்த பசங்களையே பார்த்தான். அதற்குள் உள்ளிருந்து ராஜேந்திரன் ஒரு கேக் பாக்ஸ் உடன் வந்தார். எதிரே வந்த அவர்களைக் கடந்தவர் ஏதோ தோன்றியவராய்,"ஏம்மா பொண்ணு நில்லு..." என்றார்.
அவளோ அக்குழந்தைகளுடன் சிரித்து கொண்டிருந்ததால் அவர் அழைப்பை கவனிக்க வில்லை போலும். அந்த கேக்கை அங்கேயே வைத்துவிட்டு ஓடோடி அவர்கள் முன்னே சென்றார். இதுவரை அமைதியாக இருந்தவன் இப்போது அவர்களை நோக்கி நடந்தான். அது அவர்கள் என்ன பேசிக்கொள்வார்கள் என்று தெரிந்துகொள்ளும் ஆர்வமா இல்லை வேறு எதுவா என்று தெரியவில்லை.
"என்ன விஷயம் ராசு தாத்தா?" என்று அங்கிருந்த பொடியர்களுள் ஒருவன் வினவினான்.
"இந்தா பொண்ணு, நீ யாருத்தா? உன்னை நான் சரியாய்ப் பார்த்ததாய் எனக்கு கவனம் இல்லையே?" என்று தீர்க்கமாய்ப் பார்க்க,
"தாத்தா இது நம்ம சித்தன் தாத்தா பேத்தி. அடையாளம் தெரியில?"
அப்போது மீண்டும் அவளையே உற்று நோக்கியவர்,"ஓ சித்தன் பேத்தியா? பேரு என்ன கண்ணு?"
அவள் முகம் ஒருகணம் தொங்க,
"இது மாது அக்கா. அக்கா பேசாது..." என்றான் ஒரு சிறுவன்.
"மாதுவா?"
"மாது இல்லை மாதுளை..." என்று அந்தப் பொடியன் அழுத்திச் சொல்ல ஏனோ அவள் முகம் சிவக்க சிரித்ததைக் கண்டதும், நீண்ட நாட்கள் கழித்து இந்திரன் முகத்தில் ஒரு குறுநகை தவழ்ந்தது. அது அவளின் பெயரைக் கேட்டதால் தான் என்று தனியாக வேறு சொல்ல வேண்டுமா?
"மாதுளை..." என்று சொல்லிப்பார்த்தான். "வியர்ட்! (weird - வினோதம்). மாதுளையா?" என்று மீண்டும் சொல்லி அவனுக்குள் சிரித்துக்கொண்டான்.
அப்போது தான் இவனின் விளிப்பில் அவளும் இவனைப் பார்த்தாள். அவனையே உற்று நோக்கியவளைக் கண்டு,
"அக்கா இது நம்ம முதலாளி ஐயா மகனாம்..." என்றான் ஒருவன்.
ஓ என்னும் படி புருவம் உயர்த்தி ஆச்சரியம் கொண்டாள்.
"என்ன தாயி தெரியாத மாதிரி கேட்கற? நீதானே அன்னைக்கு இவரு உசுரைக் காப்பாத்தன?" என்றார் ராஜேந்திரன்.
'ஓ இவள் தானா அது?' என்று இந்திரன் ஆச்சரியம் கொண்டான்.
அவனிடம் வந்தவள் அவன் முன் எதோ சைகை செய்ய புரியாமல் நின்றவனிடம் அப்பொடியான்,
"உங்க தலை எப்படி இருக்கு? ஒன்னும் ஆவுளையே?" என்று மொழிமாற்றம் செய்ய,
இல்லை என்றவாறு அவளின் முகத்தை நன்கு ஆராய்ந்தான். ஒப்பனைகள் இல்லமால் அழகாய்த் தெளிவாய் நிறைவாய் இருந்தது. மீண்டும் ஏதோ சொன்னவளைப் பார்த்து அச்சிறுவனிடம் பார்க்க,
"உடம்பைப் பார்த்துக்கச் சொன்னாங்க..."
"ஓகே" என்று தலையை ஆட்டியவன் விடைபெற, திரும்பி நடக்கலானான்.
"ஒரு நன்றி கூடச் சொல்ல மாட்டிங்களா?" என்று அச்சிறுவனே கேட்க இம்முறை அவன் மண்டையில் நங்கென்று ஒரு குட்டு வைத்தாள்.
திரும்பியவனின் முகம் கனலாய் இருந்தது. இருந்தும் சுரத்தையே இல்லாமல்,"தேங்க்ஸ் மாது... ளை" என்று விட்டு விட்டு சொன்னான்.
அவள் சிரிக்க இவர்கள் விடைபெற்றனர்.
"பொண்ணு எவ்வளவு லட்சணமா இருக்கு! பாவம் ஊமையா போயிடுச்சி? சரிதான் எல்லாம் அவன் கணக்குல ஒரு நியாயம் இருக்கும்" என்றபடியே ராஜேந்திரன் வர,
இந்திரன் அவரைப் புரியாமல் பார்க்கவும்,
"அதான் சாமி. எல்லாத்துக்கும் அந்த சாமிகிட்ட விட்டுட்டேன். அவன் கணக்கு எல்லாம் ஒரு காரணமா தான் இருக்கும்..." என்றார் அவர்.
வினோதமாய்ப் பார்த்தவன்,"அப்போ நான் பிழைத்ததுக்கும் காரணம் இருகுங்கறீங்களா ராஜ் அண்ணா?"
"நிச்சயமா தம்பி. நீங்க தான் ஐயாவோட உயிரே..."
"ஆனா என் உயிர்..." என்று சொல்லத் தொடங்கியவன் நிறுத்தினான்.
ராஜேந்திரனுக்கு எதுவும் புரியவில்லை. அவன் மனம் மீண்டும் ஸ்ரீ மற்றும் சிந்து இருவரையும் நினைத்தது. ஏனோ மாதுளையின் நினைவும் வந்தது.
கொஞ்சம் ரிலீவிங்கா வந்தவனைப் பார்த்து சுமதி அம்மா நிம்மதி கொண்டார்.
அன்று மாலையே கல்யாணியை வீட்டிற்கு அழைத்துவரச் சொன்னான். கூடவே தன் தந்தையிடம் ஒரு புது டிரஸ் வாங்கி பார்சல் செய்யும் படியும் சொன்னவனைக் கண்டு இமையவர்மன் சகுந்தலா இருவரும் ஆச்சரியம் கொண்டனர். அன்றிரவே தங்கள் கோவை மேனேஜரிடம் சொல்லி டிரஸ் அட்டகட்டி செல்வதற்கான அணைத்து ஏற்பாடுகளையும் செய்தார்.
சுமதியம்மாவுடைய மகனின் மகள் தான் கல்யாணி. என்ன இங்கே இவர்கள் வரும்போதெல்லாம் துள்ளித்திரியும் அவளை சிந்துவிற்கு அதிகம் பிடிக்கும். சிந்து மட்டுமில்லை இமையவர்மன் சகுந்தலாவிற்கும் கூட அவள் பெட் தான். சிறுகுழந்தை என்பதால் எதுவும் புரியாமல் வெகு சகஜமாய் அவர்களுடன் உரையாடுவாள். இவர்களும் அவளை தங்கள் வீட்டு பிள்ளையாகவே பாவிப்பார்கள். ஏழு வயதாகும் அவளுக்கு ஒவ்வொரு பிறந்தநாளில் சிந்து தன் சார்பில் டிரஸ், கேக், பரிசுகள் வாங்கித் தருவது வழக்கம். அதனாலே இன்று இவன் இவ்வளவும் செய்கிறான். ஒரு ஆத்ம திருப்தி அவ்வளவு தான். ஸ்ரீ கூட அவள் பங்கிற்கு எதாவது வாங்கித்தருவாள். இன்று ஸ்ரீயும் இல்லாமல் சிந்துவும் இல்லாமல் அவன் அவர்களின் இடத்திலிருந்து செய்ய நினைத்தான். ஆனாலும் ஏனோ வரும்போது ராஜேந்திரன் சொன்னதில் ஏதோ அர்த்தம் ஒளிந்திருப்பதாகவே இந்திரன் நினைத்தான். 'நான் மட்டும் உயிர் பிழைத்ததுக்கு ஏதேனும் காரணம் இருக்குமோ? என்ன காரணம்? அதை எப்படி கண்டுபிடிப்பது?' என்று நிறைய குழப்பத்தில் இருந்தான். ஏதோ தோன்றியவனாய் தன் தந்தையை மீண்டும் அழைத்து கதிரவனை தன்னை அழைக்குமாறு உத்தரவிட்டான்.
அவனின் இந்த மாறுதல்கள் ஏனோ இமையவர்மன் சகுந்தலாவை சந்தோசப்படுத்தினாலும் கொஞ்சம் அச்சப்பட வைத்ததும் உண்மை. ஏன்?
*******************
அன்றைக்கு திருக்குமரன் மருத்துவமனையில் எதையோ தீவிரமாக யோசித்துக்கொண்டிருக்க அவனுக்கு அழைப்பு வந்தது. எடுத்தான். அவள் தான் அழைத்தாள். அவனுக்கு அவளின் கோவம் கடுப்பு எல்லாமும் அவளின் குரலிலே தெரிந்தது. அவள் காச் மூச்சென்று கத்திக்கொண்டு இருந்தாள். இங்கே திருக்குமரன் ஒரு வார்த்தையையும் பேசாமல் இருந்தான்.
"டேய் நீ யாருடா எனக்கு காசு தர மாட்டேன்னு சொல்ல? இதென்ன உன் அப்பன் சம்பாதிச்சதா? இல்ல கேட்கறேன். என்ன நெனச்சிட்டு இருக்க நீ? ஓ இப்படி இவ காசு கேட்டா நாம எப்படி இதையெல்லாம் சுருட்டுறது யோசிக்கிறியா? உன்ன விடமாட்டேன் டா..." என்று வசைவுகள் வர வர, பொறுமையிழந்தவனாய்,"இங்க பாருங்க மிஸ் ஐராவதி சந்தான பாரதி. இந்த ஹாஸ்பிடல் வேணுனா உங்க அப்பாவுடையதா இருக்கலாம். ஆனா இது முழுக்க முழுக்க உங்க அப்பாக்கு மட்டுமே சொந்தமில்லை. அதை நல்லாப் புரிஞ்சிக்கோங்க. இதுல அவரும் ஒரு ஷேர் ஹோல்டர் அவ்வளவு தான். மேலும் உங்க அப்பா கணக்குல ரெண்டு கோடி ரூபாய் இருக்கு. ஆனா அதெல்லாம் ஒன்னும் யாரையும் ஏமாற்றியோ திருடியோ எல்லாம் அவர் சம்பாதிக்கல. நியாயமா சம்பாதித்த பணம். அவருடைய தனிப்பட்ட செலவுக்கு கூட அவர் முக்கியத்துவம் கொடுத்ததில்லை. இதெல்லாம் உங்களுக்கும் நல்லாவே தெரியும். இல்ல இருந்தும் நான் இப்படி தான் பண்ணுவேன்னு நீங்க சொன்னா எனக்கு ஒரு பிரச்சனையையும் இல்ல மொத்த பணத்தையும் நாளைக்கே உங்க அக்கௌண்ட்ல ட்ரான்ஸ்பெர் பண்ணிடுறேன். நானும் ரிசைன் பண்ணிடுறேன். நீங்களே வந்து இந்த ஹாஸ்பிடல் அட்மினிஸ்டரேஷன் பாருங்க. நீங்க தான் mba படிச்ச ஆள் ஆச்சே?" என்றான். அதிலொரு குத்தல் இருந்தது உண்மை. "அண்ட் நானே மத்த ஷேர் ஹோல்டேர்ஸ் எல்லோர் கிட்டயும் பேசுறேன்..." என்று சொல்லி நிறுத்தினான்.
ஏனோ இவ்வளவு பணமிருந்தும் அவளால் அனுபவிக்க முடியவில்லை என்ற கோவம் ஆதங்கம் எல்லாம் ஒன்று சேர்ந்து தீயாய் அவள் இருக்க,"என்ன மேடம் நான் சொன்னதுக்கெல்லாம் சம்மதமா? நாளைக்கே என் ரெஸிகேனேசன் லெட்டர் அனுப்புறேன்..." என்று சொல்ல அவளிடம் இப்போது வார்த்தையில்லை. அவள் கோவத்தில் போனை கட் செய்திருந்தாள்.
ஏனோ திருக்குமரனுக்கு தான் மனமே சரியில்லை. 'மிஞ்சி மிஞ்சி போனால் என்ன ஒரு இருபத்தி மூன்று வயதோ இல்லை இருபத்தி நான்கு வயதோ இருக்கும். பெற்றவர்கள் இறந்ததும் ஒருமுறை கூட நேரில் வந்து இந்த மருத்துவமனையைப் பார்த்ததில்லை. ரொம்ப தாராளமாகவே செலவு செய்தாலும் மாதம் இருவது ஆயிரம் அதிகம். ஆனால் இந்த ஆறு மாத காலத்தில் இருவது லட்சங்களுக்கு மேல் செலவாகி இருக்கிறது. அவனுக்கும் இப்போது நிறைய பயம் வந்து சென்றது. ஏதாவது தவறான பழக்க வழக்கமாக இருக்குமோ? இல்லை தவறான சேர்க்கையாக இருக்குமோ என்று அஞ்சினான். அவனுக்கு தலையெல்லாம் வலிக்க ஒரு காஃபீ சொன்னவன் ஏதேதோ யோசனையில் இருந்தான்.
அவனைப் போன்றவர்கள் இங்கே வாழ்வதே சிரமம் என்று நினைக்க அவனுக்கோ நிறைய எண்ணங்களும் குழப்பங்களும் தோன்றி மறைந்தது. மருத்துவம் என்பது அவனைப் போல் குழந்தைகள் காப்பகத்தில் யாரு என்ன என்றே தெரியாமல் வளர்ந்தவனுக்கு உண்மையில் எட்டா கனி தான். யாராவது தன்னை ஸ்பான்சர் செய்வார்களா என்று எண்ணி காத்துகிடக்க அவனுக்கும் அவன் தோழன் மஹேந்திரனுக்கும் கடவுளாய் வந்தவர் தான் இந்த சந்தான பாரதி. அவரின் உதவியால் மருத்துவம் படித்தவர்கள் இன்று அவரின் மருத்துவமனையை தானே ஏற்று பொறுப்பாக நடத்த வேண்டிய ஒரு நிர்பந்தத்தில் இருக்கிறான். ஒருவகையில் இதுவும் ஒரு கைமாறு தான். 'நொடியில் என்ன வார்த்தையெல்லாம் பேசிவிட்டாள்? நான் இந்தப் பணமெல்லாம் சுருட்டிடுவேனா? ச்சை..." என்று உண்மையில் மனம் நொந்தான் குமரன். அவன் கைகள் அனிச்சையாக அலைபேசியில் மஹேந்திரனை அழைத்தது.
"சொல்லுங்க md சார்..." என்று அவன் கிண்டல் செய்ய,
"நீ வேற ஏன்டா?" என்று சலித்து கொண்டான் திருக்குமரன்.
"என்னடா ஆச்சு?"
நடந்ததை இவன் சொல்ல,
"குமரா என்ன இருந்தாலும் இதெல்லாம் நியாயமா அந்தப் பொண்ணுக்கு சேர வேண்டிய சொத்து தானே?"
"நீயும் அவளை மாதிரியே பேசாத மஹேந்திரா. அந்தப் பொண்ணுக்கு என்ன வயசு? வெறும் இருபத்தி ரெண்டோ மூணோ. யாருமே இல்லமா இருக்கும் அந்தப் பொண்ணுக்கு எதுக்கு இவ்வளவு காசு? காசுக்கு கணக்கு கேட்டதுக்கே இவ்வளவு கோவம் படுறானா அப்போ நிச்சயமா ஏதோ தப்பான வழியில தானே போறா? சாரி போறாங்க. என்னால முடியில டா..."
"இப்போ என்ன பண்ணலாம் சொல்லு?"
"நாம வேணுனா நேர்ல ஒருவாட்டி அவங்களை மீட் பண்ணிட்டு வரலாமா?"
"மீட் பண்ணி?"
"என்ன பிரச்சனைன்னு ஏதாவது தெரிஞ்சிக்க முயற்சிக்கலாம் டா..."
யோசித்தவன்,"சரி டா. நீ சொல்றதே சரினு வெச்சுக்கலாம். நாம திடீர்னு நேர்ல போக முடியாதில்லை. பேசாம யாரையாவது விட்டு அவளை பலோவ் பண்ணச் சொல்லலாம்?"
"என்னமோ போ! இதுல பாரதி சார் என்னயென்னமோ சொன்னாரு..." என்று குமரன் சொல்ல,
"என்னடா சொன்னாரு?"
"ஏன் இவ்வளவு ஷாக் ஆகுற? நீ நெனைக்கற மாதிரியெல்லாம் பெரிய விஷயம் ஒன்னுமில்லை. என்னை மாதிரி ஒரு பையனை அவர் பொண்ணுக்கு கல்யாணம் செஞ்சி வெக்கணும்னு..." என்று உண்மையான ஆற்றாமையை குமரன் சொல்லி முடிக்கும் முன்,"டேய் அப்படிப் போகுதா ரூட்?" என்று மஹேந்திரன் இழுக்க,
"நீ வேற ஆளை விடு டா சாமி! கோடி ரூபாய் கொடுத்தாலும் சத்தியமா அந்தப் பொண்ணை எல்லாம் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன். அதுக்கு வேற ஆளைப் பாரு..."
"சரி டா வெக்கறேன்..."
"டேய் மறந்திடாதா டா. எனக்கு அந்தப் பொண்ணைப் பற்றித் தெரியணும்..."
"கண்டிப்பா..."
அங்கே பணம் கிடைக்காத கடுப்பிலும் தன்னைக் கேள்வி கேட்கும் அவனையும் நினைத்து நகத்தைக் கடித்த வண்ணம் கோவத்தில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டு இருந்தாள் ஐராவதி சந்தானபாரதி. 'ஒருவேளை அவன் போர்டு மெம்பெர்ஸ் கிட்டப் பேசி என் சொத்தை எனக்கு தரலைனா?' என்று யோசித்தவள் கோவமாய் 'அவனுக்கு' அழைத்தாள். திருக்குமரன் சொன்னதையெல்லாம் சொல்லிப் புலம்பியவள்,"என் பேர்ல இருக்கும் சொத்தை நான் டேக் ஓவர் பண்ண என்ன வழி இருக்கு? நாம ஒரு லாயரை பார்க்கலாமா? சொல்லு..." என்று மறுப்பக்கம் இருந்தவனைக் கேட்டாள்.(வானிலை மாறும்!)
நாளையிலிருந்து தவறாமல் அப்டேட்ஸ் வரும்...
 
அட்டக்கட்டியில். என் குடும்பத்தோடு 3-4 நாட்கள் இருந்தேன் ,சில வருடங்களுக்கு முன்.
அந்த ஞாபகங்கள் வந்த்து....
அருகில், காடம்பாறை னு, ஒரு பவர் ஸ்டேஷன் இருக்கு...
அங்கு பூமிக்கடியில், தண்ணீரை உபயோகித்து சுழற்சிமுறையில் மின்சாரம்
உற்பத்தி செய்றாங்க....
I think, this is the only one power station,in Asia, producing electricity underground..but Im not sure..
 
நிஜமாவே மாதுளைனு பேர் இருக்கா :unsure: :unsure: :unsure:
மாதுளை -பெயர்க்காரணம் கூறுக ??

Interesting Update writer ji :love::love::love:
ஏன் இல்லாம? தெனாலிராமன் படத்துல மன்னரின் மகள் பெயர் அது தானே? செம்பருத்தி ரோஜானு பூக்களின் பெயரை சூட்டும் போது ஏன் மாதுளை கொய்யானு பழங்களின் பெயரை வைக்கக்கூடாது??? நன்றி... பெயர்க்காரணம் எல்லாம் ஒண்ணுமில்லை. எனக்கு ஒரு கதையோட ஹீரோ ஹீரோயின் பேரை மட்டும் தான் முன்கூட்டியே யோசிப்பேன். மத்த பேரெல்லாம் எழுதும் போது என்ன தோணுதோ அதை வெப்பேன். ஏன் எனக்கு அப்போ மாதுளை தோணுச்சுனு எனக்குத் தெரியில... இத்தனைக்கும் பழங்களிலே சீதா பழத்திற்கு பிறகு எனக்கு பிடிக்காத ஒன்று என்றால் அது மாதுளை தான்... இது தான் முரண் போலும்...
 
அட்டக்கட்டியில். என் குடும்பத்தோடு 3-4 நாட்கள் இருந்தேன் ,சில வருடங்களுக்கு முன்.
அந்த ஞாபகங்கள் வந்த்து....
அருகில், காடம்பாறை னு, ஒரு பவர் ஸ்டேஷன் இருக்கு...
அங்கு பூமிக்கடியில், தண்ணீரை உபயோகித்து சுழற்சிமுறையில் மின்சாரம்
உற்பத்தி செய்றாங்க....
I think, this is the only one power station,in Asia, producing electricity underground..but Im not sure..
ஓ அப்படியா? சூப்பர் சூப்பர்... ஆனா நான் அட்டகட்டிக்குப் போனதில்லை. பாலசந்தரின் ரயில் சிநேகம் என்னுடைய பேவோரைட். அக்கதை நிகழும் இடம் தான் அட்டகட்டி. அதனால் இந்தக் கதையை நான் அட்டகட்டியில் நடப்பதாக எழுதினேன். மத்தபடி ஒன்னும் காரணமில்லை. எஸ் இந்த விஷயத்தை நானும் கேள்விப்பட்டிருப்பிக்கேன். even i am not sure. நானும் கேள்விதான் பட்டிருக்கேன்... நன்றி நான் சீக்கிரம் அங்க போய் தங்கணும்??
 
Top