‘காதலரை திடீரெனப் பார்க்கும் சூழலில் பதறி தெளிவில்லாமல் பேசுவது’
கலங்கி மொழிதல் -23
“ஒரு வாரம்..” என ஸ்ரேயா தொடங்க, அவளின் அன்றைய வேதனையை கிரகித்துக் கொள்ள இயலாமல், வேகயெட்டு வைத்தவன் பின்னே இருந்து அவளை இறுக்கி அணைத்துக் கொண்டு, அவள் தோள்களில் முகம் புதைத்தான். அன்று கிட்டாத ஆதரவையும், அரவணைப்பையும் அணைப்பின் மூலம் அவளுக்கு வழங்கினான்.
அவனின் செய்கையால் மென் புன்னகை இதழில் தவழ, அவன் அணைப்பில் இருந்து விடுபடாமல் உடலை திருப்பி நேர்கொண்டு அமரன் கண்களை ஊடுருவினாள்.
அவனது மென்மையான தொடுகை பேரலையை எழுப்பியது அவளுள். அந்த விழிகளில் தென்படும் பரிதவிப்பு தனக்கே தனக்கு என்கிற உவகையில் சிலிர்த்துக் கொண்டாள்.
“ஐ ஆம் ஒகே டா... இப்ப தெளிவா இருக்கேன்டா..” என பல சமாதானப் படுத்தியும் விலகாமல் துவண்டு இருந்தவனின் மார்ப்பில் அழுத்திய முகத்தை இதழுக்கு வழங்கி, மேல் நோக்கி நண்டாக ஊர்ந்து சென்று அவனிற்கான மூச்சை இதழ் வழியாக வழங்கினாள்.
“நீ ஏன் என்னை முன்னாடியே தேடி வரல..! நீ எனக்காக கொஞ்சம் காலம் காத்திருந்திருக்கலாம், போடி..!” என கோவமாக விலகியவன், மீண்டும் அதே வேகத்தில் அவளை நெருங்கி, “நானுமே உன்னை தேடி வந்திருக்கலாம், சாரிடி..! உனக்காக இனி நான் எப்பவும் இருப்பேன் அண்ட் தேங்க்ஸ் பார் தி டேஸ்டி கிஸ்..” பார்வையால் அவளை கூச்சம் கொள்ள செய்தான்.
“சாரிடா.. இப்படி மொத்த காதலையும் கொட்டி, பதியம் போட்டு வாடாம பாத்துக்க ஒருத்தன் இருக்கான், எனக்காக காத்திருந்து காலம் கடந்து வருவான்னு தெரியாதே..! ஆனா இப்ப நீ என்னோட இருக்க, காதல்ல அளவில்லாம புரிய வைச்சுருக்க.. எனக்காக நீ இருக்க இது போதும்டா..!”
“போதுமா..! அப்ப...?”
“இல்ல வேணும்.. எனக்காக இந்த பாட்டு பாடுறியா..?” என தேர்ந்தெடுத்த பாடலை சுட்டிக் காட்டினாள். மறுக்கவா போகிறான் ஸ்ரேயாவின் வித்தைக்காரன்.
‘கண்ணுக்குள்ளே உன்னை
வைத்தேன் கண்ணம்மா...
நான் கண்கள் மூட மாட்டேனடி
செல்லம்மா
நான் கண்கள் மூட மாட்டேனடி
செல்லம்மா
அடி நீதான் என சந்தோசம்
பூவெல்லாம் உன் வாசம்
நீ பேசும் பேச்செல்லாம்
நான் கேட்கும் சங்கீதம்
உன் புன்னகை
நான் சேமிக்கின்ற செல்வமடி...’
அமர் தோள்களில் தலை சாய்த்து கண்கள் மூடி படுத்திருந்தவளுக்கு கிடைத்த பாதுகாப்பு, அரவணைப்பின் திருப்தி முகத்தில் பிரதிபலிக்க.. அழகின் அகராதி ஏடாக தோன்றினாள்.
இருவரும் தூக்கத்திற்கு நழுவிய நொடி பட்டென கதவை திறந்து மாதவன் உள் நுழைய, அதில் விழித்த அமர் மெல்ல தன்னவளை விலக்கி அவனை முறைத்தான்.
“ஏன்டா.. காமன்சென்ஸ் இல்ல, இங்கிதம் இல்லாம இப்படிதான் கதவ திறப்பியா..?” தூக்கம் இவர்களை தழுவும் முன், இடையூறு தந்தவனை கடிந்தான்.
“ஹலோ.. ஆஸ்பத்திரினு கூட பாக்காம இங்க வந்து ரொமான்ஸ் பண்ணுவீங்கன்னு எனக்கு எப்படி தெரியும்! அதுவும் இல்லாம ரே மயக்கம் போட்டு விழுந்து ஆஸ்பத்திரியில சேர்த்து இருக்குப்ப எப்படி ப்ரோ காமன்சென்ஸ் பங்சன் ஆகும்.! நான் வந்தேன் பரவாயில்ல, அடுத்து உங்க பேவரிட் துவாரபாலகிகள் ஆன் தி வே..” என அவர்களின் அன்னியோனியத்தை மனதிற்குள் சிலாகித்தாலும் வார்த்தைகள் இடக்காகவே வந்தது அவனுக்கு.
“டேய்.. அப்படி எதுவும் பண்ணிறாத.. இப்பதான் தூங்க..” தூங்கும் தன் அழகியை பார்த்தபடியே சொல்லி முடிக்கும் முன், வந்தாள் துவாரபாலகி.
“ஹரி.. இங்க இருக்கா ரே..” என மாதவன் வால் பிடித்து வந்த மாளவிகா கதவைத் திறந்து கத்தவும், அந்த சத்தத்தால் விழித்துக் கொண்டாள் ஸ்ரேயா.
“ரே.. என்னாச்சு? ஏன் எங்கள எழுப்பல? இப்ப ஒகே வா.. டாக்டர் வந்து பாத்தாங்களா?” என கேள்வியை அடுக்கினாள் மாளவிகா. அவளுடன் ஒத்துப்போகும் விதமாக ஹரிதாவும், “சொல்லு ரே..? திடீர்னு என்னாச்சு?”
“எனக்கு ஒன்னும் இல்லபா, ஐம் டூ குட். நீங்க எப்படி வந்தீங்க, நான் இங்க இருக்குறது எப்படி தெரியும்?”
“இன்னைக்கு ஸ்னோர்கலிங் போகலாம்னு சீக்கிரம் எழுந்து பாத்தா நீ இல்ல.. அப்புறம் மேடி கிட்ட சொல்லி ரெசார்ட் முழுக்க தேடிட்டு இருக்கப்ப வாட்ச்மேன் தான் சொன்னான், பிரக்னன்ட் லேடிய கூப்பிட்டு போனிங்கன்னு, ராகுல் ஆஸ்பத்திரிக்கு போன் பண்ணி கேக்கும்போது நீ அட்மிட் ஆனதா சொல்றாங்க..” ஹரிதா சொல்ல,
தன்னழகியின் தூக்கத்தை கெடுத்ததும் இல்லாமல், தங்கள் தனிமையில் இடையூறு தந்தவர்களை கன்டனத்தோடு முறைத்தான்.
அமரின் பார்வையை உள்வாங்கிய மாதவன், “ரே.. மயக்கம் போட்டு விழுந்தானு சொன்னாங்க! பசி இல்லா உணர்வு, வாமிட் சென்சேசன் இந்த மாதிரி எதுவும் இருக்கா?” என குதர்க்கமாக கேட்க, அது புரியாதவள், “ம்ம்.. சம் டைம் அப்படியும் இருக்கு மேடி..” சொல்லிவிட்டு தன் இருமலர்களின் பாச மழையில் ஐக்கியமானாள்.
மாதவனின் செய்கை புரிந்தவன், “டேய்.. ஏன்டா? ஒரு நாள் தான் தனியா போனோம், அதுக்குள்ள எப்படி முடியும்..! கிண்டலாக இருந்தாலும் நியாயம் வேண்டாமா..”
“ஹா.. ஹா.. எனக்கு தான் சென்ஸ் இல்லன்னு சொன்னியா மா..மாமா..!”
“மச்சான்டா..!” அவனின் அழைப்பில் குதூகலித்து மாதவனை இறுக அணைத்துக் கொண்டான்.
ஆடவர்களின் அலம்பலைக் கண்ட மாளவிகா, “இவங்களுக்கு என்னாச்சு..?” என புரியாமல் பார்த்தாள்.
“இது ரொம்ப முக்கியம் பாரு, உனக்கு ஏன் மயக்கம் வந்துச்சு?” மாளவிகாவை கண்டித்து, ஸ்ரேயாவிடம் விவரம் சேகரித்தாள்.
“அந்த லேடி கத்துன கத்துல ரே பேனிக் ஆயிருப்பா அதனால சட்டுன்னு மயக்கம் வந்துருக்கும்” சாதகமாக பதில் தந்தாள் ஹரிதா.
“அதில்ல.. இந்த பிரசவ வலி தெரியாதவ பயந்தா அது வேற, ஆனா கண்ணா பிறந்தப்பவே பயம் போயிருக்குமே, அப்புறம் எதுக்கு நீ மயங்கி விழுந்த.. உனக்கும் இந்த மாதிரி பெயின் வந்திருக்கும்ல..?” என தனது நீண்ட நாள் சந்தேகத்தை உசுப்பினாள் மாளவிகா.
ஏற்கனவே கண்ணா பிறப்பு பற்றிய ஐயப்பாடு அவளுக்கு இருந்தது, கண்ணாவின் பிறப்பு சான்றிதழில் குறிப்பிட்ட தேதியை கணக்கிட்டவளுக்கு குழப்பமே இருந்தது, தோழியை சங்கடப்படுத்த இயலாமல் அதை தவிர்த்து இருந்தாள்.
மாளவிகாவின் மதிநுட்பத்தை உள்வாங்கி மாதவனிடம் மெச்சுதலாக புருவம் உயர்த்தி பாராட்டினான் அமர்நாத்.
ஹரிதாவோ, “இப்ப யாருக்கு பெயின் வருது, அதோட ரேக்கு சி-செக்சன் பண்ணிருப்பாங்க.. இதலாம்..” நடுவில் மறுப்பாக தலையசைத்தாள் ஸ்ரேயா.
“இல்ல.. கண்ணா என்னோட உதிரத்துல உருவாகல..” என சொல்ல மற்ற மூவரும் அதிர்ந்து பார்க்க, அதை இயல்பாக கடந்தவனோ, “பயர் ஃப்ளை, இப்ப எதுவும் வேண்டாம், முதல்ல நீ ரெஸ்ட் எடு..” பரிவும், கரிசனமும் கலந்தே இருந்தது அவனது குரலில்.
குமிழ் சிரிப்புடன் தன்னவனை ரசிக்கும் பார்வை பார்த்து, “தே ஆல்சோ வான்ட் டூ நோ அமரா..”
இரவு முழுவதும் அமரிடம் பகிர்ந்த அவளின் கடந்த காலத்தை நாலே வரியில் சொல்லி முடித்து, பாதியில்விட்ட கடந்த கால கசப்பை தொடங்கினாள்.
“அம்மா வீட்டுக்கு போய் ஒரு வாரம் தான் இருக்கும், போலிஸ் ஸ்டேஷன்ல இருந்து கால் வந்துச்சு.. கெளசிகன் சூசைட் அட்டன்ட் பண்ணி மறுபடியும் ஹாஸ்பிட்டல்ல இருக்கிறதாவும், ஆஸ் எ வைப் நான் ஸ்டேஷன் வரணும்னு சொன்னாங்க..”
“இத முதல்ல சொல்றப்ப ஸ்ருதி ஒத்துக்கல, யாரும் போக வேண்டாம்னு சொல்லிட்டா.. நாங்க போகலங்கவும் லோக்கல் ஸ்டேஷன்ல இருந்து வார்ன் பண்ணி அந்த ஊர் ஸ்டேஷன் போய் ஒரு கையெழுத்து போட்டா மட்டும் போதும்னு சொல்லவும், மூணு பேருமே போனோம்.”
“ஸ்டேஷன்ல அவங்களுக்கு வேண்டிய ஆட்கள வச்சு பேச டிரை பண்ணாங்க, நான் வாய திறக்கவே இல்ல, ஸ்ருதி தான் தீர்மானமா இருந்தா டிவோர்ஸ் வாங்கிறதுல..”
“சம்மந்திமா.. நீங்களும், நானும் புருஷன் இல்லாம பட்ட கஷ்டம் கொஞ்சமா நஞ்சமா, அந்த நிலைமை நம்ம ஸ்ரேயாக்கு வேணுமா யோசிங்க..”
பெண்ணை பெற்றவளாக மட்டும் இருந்த தன் அன்னை, இன்று உறவில் சம்மந்தியாக உரு மாற்றம் அடைந்திருக்கிறார் என்பதில் ஸ்ரேயா உழண்டு கொண்டிருக்க,
சாஸ்ருதியோ, “என் தங்கச்சி எதுக்கு புருஷன் இல்லாம இருக்கணும், ஓர் ஸ்டர்லோட பொண்டாட்டியா இருந்தது போதும், நாங்க ஸ்ரேயாக்கு வேற கல்யாணம் பண்ண போறோம்..!” என்றதில் ஸ்ரேயா முதற் கொண்டு அதிர்ந்து பார்க்க, அங்கு வந்த கெளசிகன், “அது எப்படி? அவ என் பொண்டாட்டி, எப்படி வேற கல்யாணம் பண்ண முடியும், ஸ்ரேயா.. நமக்கு யாரும் தேவையில்ல, நீ என்னோட வா.. நம்ம வீட்டுக்கு போகலாம்” கையை பிடித்து முரட்டுதனமாக இழுத்தான்.
அதில் பெரும் கலவரம் நிகழ, கெளசிகனை தடுக்க யாராலும் இயலவில்லை.
தோற்றத்தில் கெளசிகனை ஒத்திருந்த ஒருவன் அவனை தடுத்து ஸ்ரேயாவை விடுவித்தான்.
“டேய் முட்டாள்.. கார் பார்க் பண்ணிட்டு வரதுக்குள்ள என்னடா பண்ற..? போலிஸ் ஸ்டேஷன்ல இருக்கிறது கூட தெரியாம..” என கடித்தவனின் பேச்சு, ஸ்ரேயாவின் வதங்கிய முகத்தை காணவும் அவளின் கையை பிடித்து மணிக்கட்டை ஆராயந்தான். அடுத்த ஆடவனின் கரம் பட்டவுடன் விலக முயன்றவளை தடுத்து,
“ஏங்க.. தப்பான இன்டன்சன்ல தொடலங்க, ஐ ஆம் எ டாக்டர்..”
“அம்மு.. இவன் என்னோட மூத்த பிள்ள அரவிந்தன், டாக்டர் தான் பயப்படாம கைய குடு என்னனு பாக்கட்டும்..”
கெளசிகனின் தாய் உத்தரவாக சொல்ல, அவள் மறுக்கும் முன் அரவிந்தனே விரல்களை வருடி மெல்ல அழுந்த பிடித்து ஆராய்ந்தான். தம்பியை போல் எலும்பை சேதமாக்குமாறு கையை இறுக்கி பிடிக்கவில்லைதான், ஆனால் இந்த அழுத்தம் எரிச்சலை உண்டாகியதோடு பெண்மை எச்சரிக்கையை கையாண்டது.
அவளின் விலகல் புரிந்து அவனே விடுவித்து, “கொஞ்சம் லேசா ஸ்ப்ரைன் ஆகியிருக்கு.. டேக் ரெஸ்ட்..”
அரவிந்தன் பேச்சால் நிதானத்துக்கு வந்த கெளசிகன், “அச்சோ.. சாரி ஸ்ரேயா, வேணும்னு அழுத்தி பிடிக்கல, நீ வா நம்ம வீட்டுக்கு போய் ரெஸ்ட் எடுப்போம்..” என அவளை தோளோடு சேர்த்து அணைக்க வர, சட்டென அவளை சாஸ்ருதி தன் பக்கமாக இழுத்துக் கொண்டாள்.
அங்கே நடந்த தள்ளு முள்ளில் சாஸ்ருதி பின்னடைந்திருந்தாள்.
கெளசிகன் ஸ்ரேயாவை நெருங்கவும் தன்னோடு இழுத்து நிறுத்திக் கொண்டாள். மீண்டும் கெளசிகன் ஆங்காரம் கொள்ள முயல அவனை தடுத்து சமாதனப்படுத்தி தாயுடன் சற்று நேரம் வெளியே நிற்குமாறு அனுப்பி வைத்துவிட்டு, இரட்டையர் பக்கம் நகன்றான் அரவிந்தன்.
“வாவ்.. இரண்டு பேரும் ட்வின் சிஸ்டரா..! நான் டாக்டர் அரவிந்த், கெளசிகனோட அண்ணன்..!” என அறிமுகப்படுத்தி கையை நீட்ட, சாஸ்ருதியே முன் வந்து பரிச்சயப்படுத்திக் கொண்டாள்.
“லவ்லி டூ மீட் யூ.. எனக்காக கொஞ்ச நேரம் வைட் பண்ணீங்கனா, இந்த ப்ராப்ளம நான் கொஞ்சம் ஷார்ட் அவுட் பண்றேன்..”
ஒப்புதலின்றி இரு சகோதரிகளும் நிற்க, அவர்களது அன்னையோ, “தம்பிதான் சொல்லுதுல, பொறுத்து இருந்து என்னனு பேசி முடிச்சுட்டு போவோம்..”
மருத்துவனாக ஒருவன் முன் வரவும் நல்லவனாக இருப்பானோ என பாவம் அநியாயத்துக்கு நம்பினார்கள்.
கெளசிகனிடம் தனித்து வந்தவன், “உனக்கெல்லாம் என்னடா பெருசா லவ் வந்து...! பொண்ணும் ஆவரேஜா இருக்குமேனு இத்தனை நாள் பாக்க வராம இருந்தது தப்பா போச்சு.. உன் பொண்டாட்டியே இப்படி இருக்கானு பாத்துக்கிட்டு இருந்தா, அவள ஜெராக்ஸ் எடுத்த மாதிரி இன்னொருத்தி வந்து நிக்குறா, உனக்கு எல்லாம் எப்படிடா இப்படி அமையுது..!” தம்பி மனைவி என்கிற இங்கீதமின்றி பேசினான் அரவிந்தன்.
தமையனின் பேச்சு விகல்பமாக தோன்றவில்லையா? அல்லது இப்படிப்பட்ட பேச்சுகள் இவர்களுள் சகஜமோ..!
சற்று தொலைவில் சகோதரிகள் இருவரும் தாயுடன் அளவளாவிக் கொள்வதை கண்டவனின் பார்வை, எண்ணம், சிந்தனை எல்லாம் ‘அரவிந்தா.. இரண்டு லட்டு திங்க ஆசையா..!’ என சேற்று பன்னியாக உழண்டது.
இரட்டையரிடம் சென்றவன், “பர்ஸ்ட் சாரி டூ மை செல்ப், இவ்வளவு பிரச்சனை நடந்ததோ, கல்யாணம் பண்ணதோ எதுவுமே எனக்கு தெரியாது.
தெரிஞ்சிருந்தா இவ்வளவு தூரத்துக்கு வந்திருக்க விட்டிருக்க மாட்டேன்..” தன்மையாக பேசினான்.
“இப்படிதான் உங்க அம்மாவும் எதுவுமே தெரியாத மாதிரி நடிச்சாங்க, நீங்களும் ஏன் அதே மாதிரி அப்படியே சொல்றீங்க..” சாஸ்ருதி பட்டென பதில் தந்திருந்தாள்.
“நம்புங்க.. இதுல பொய் சொல்ல என்ன இருக்கு, இப்பக்கூட நீங்க என்ன முடிவு எடுத்தாலும், உங்களுக்கு சப்போர்ட்டா நான் இருப்பேன். டிசிசன் இஸ் யுவர்ஸ்..”
“எப்படி உங்கள நம்புறது..?” சாஸ்ருதி கடுப்புடன் கேட்டாள்.
“நம்புங்க.. உண்மையாவே எனக்கு எதுவும் தெரியாது, அதேமாதிரி என் தம்பிய ஆண்மை இல்லாதவன்னு சொல்லி முத்திரை குத்தாதீங்க ப்ளீஸ்..”
“உங்க தம்பிங்கிறதுக்காக உண்மை மறஞ்சு போயிறாதே.. அக்ஸப்ட் பண்றதோ பண்ணாம போறதோ உங்க இஷ்டம், இப்படி ஒருத்தனோட இவ வாழ விரும்பல..” சகோதரிக்காக பரிந்து பேசினாள்.
“அந்த டிசிஷன் உங்க சிஸ்டர் தாங்க எடுக்கனும், ஒன் மோர் திங்க் எக்ஸாக்ட்டா அவன ஸ்டர்ல்னு சொல்லிட முடியாது, மருத்துவ உலகத்துல இத சரி பண்ண வாய்ப்பு இருக்கு..” மருத்துவனாக அவன் தொனி அவர்களை நம்பவைத்தது.
கெளசிகன் மீது காதல் இருக்கிறதா என்றால் அதை அவள் உணரவில்லை என்பதே நிதர்சனம். அவளின் அமைதியில் மற்றவர்களின் கருத்து நிழாடியது.
‘தாம்பத்தியத்தை காரணமாக காட்டி விவாகரத்து கேட்டா, இதுக்காக நீ அலையுற மாதிரி பேசுவாங்க! கோர்ட், கேஸ்னு போகுறப்ப நாலு பேர முன்னாடி நிக்க வச்சு அநாகரீகமான கேள்விகள் கேப்பாங்க.. இதுல மூணு பேரும் ஆண் துணையில்லாம தனிச்சு வாழுறீங்க, யோசிச்சு பாருங்க..” கெளசிகன் தரப்பில் வந்த வக்கீல் பேசிவிட்டு செல்லவும்,
ஸ்ரேயாவின் தாயாரும், “அவங்க சொல்றதும் சரிதான, அந்த பையன் உன் மேல உசுரா இருக்க போய்தான் இரண்டு தடவ தற்கொலை வரைக்கும் போயிருக்கு, இத காரணமா சொன்னா பொம்ளையதான்.. இதுக்கு அலையுறமாதிரி சமூகம் தயவு தாட்சனியம் இல்லாம கேவலமா பேசும், யோசிமா..” என பேசியிருக்க.
“எப்படி டாக்டர்? கல்யாணமாகி ஓர் வருசம் ஆகப் போகுது இதுவரைக்கும் அந்த மாதிரி பீலிங்ஸ் அவன்கிட்ட எதுவும் வரலனு சொல்றா..”
தங்கையின் அமைதி உறுத்தலை தர அரவிந்தன் பேச்சும், ஸ்ரேயாவின் நிலையில்லா அமைதியும் அடுத்த கட்டத்தை நோக்கி செல்ல முடிவு செய்தாள் சாஸ்ருதி.
“புரியுது.. இவ்வளவு அழகான பொண்டாட்டி இருந்தும் அவனுக்கு ஆர்வம் இல்லன்னு சொல்ல வர்றீங்க, தெளிவா புரியுது. ஆனா இது நிரந்தரம் இல்ல, பெஸ்ட் ட்ரீட்மெண்ட் கொடுத்தா இட்ஸ் க்யூரபுல்.. அதனாலதான் அவசரப்படாதீங்கனு சொல்றேன்...”
“அத்தை.. இவங்க இரண்டு பேரும் இந்த காலத்து பொண்ணுங்க எடுத்தோம் கவுத்தோம்னு முடிவு எடுப்பாங்க நீங்க கொஞ்ச சொல்லி புரிய வைக்க பாருங்க..” என்றதோடு,
“இங்க பக்கத்துலதான் என்னோட வீடு இருக்கு, உங்கள கெளசி தொந்தரவு பண்ணாம பாத்துக்குறேன். முடிஞ்சா அவன வெளியவே தங்க வச்சுரலாம்..” என பவ்வியமாக சொன்னான்.
கெளசிகனே தன்னை இன்று வரை உறவு சொல்லி அழைக்காமல் இருக்க, அரவிந்தன் அத்தை என்று கூப்பிடவும் மூத்த பெண்மணி தான் இளகியதோடு அல்லாமல் மகள்களையும் சம்மதிக்க வைத்து அரவிந்தன் இல்லத்திற்கு வரவைத்து விட்டான்.
Last edited: