Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தேன்மழை தூவுதடி 2

Advertisement

திட்டிக்
மழைத்துளி 2

சென்னை விமான நிலையத்தில் திருவனந்தபுரம் செல்லும் விமானத்திற்காக காத்திருந்தனர் புதுமணத் தம்பதிகளான ஆதியும் அமிர்தாவும், இன்றுக் காலையில் தான் வடபழநி முருகன் முன்பு எளிய முறையில் நெருங்கிய உறவுகள் மட்டும் சூழ அமிர்தாவின் கழுத்தில் மாங்கல்யம் அணிவித்திருந்தான் .

எவ்வளவு சொல்லியும் வரவேற்பு இப்போதைக்கு வேண்டாம் , பின்னொரு நாளில் வைத்துக் கொள்ளலாம் என்று விட்டான். தனது திருமண அறிவிப்பை தொழில் முறைச் சார்ந்தவர்களுக்கு மெதுவாக தெரிவித்துக் கொள்ளலாம் என்று விட்டதால் உறவுகளின் ஆசியோடு தன் புத்தம் புது மனைவியை மட்டும் அழைத்துக் கொண்டு உடனேக் கிளம்பி விட்டான்.

உடன் வரத் தயாராக இருந்தவர்களிடம் அவன் பதிலளிக்காது அம்மாவைப் பார்த்தவன் கண்களால் இறைஞ்சி" ம்மா ப்ளீஸ் நீங்களே சொல்லுங்க" என்றவுடன் அவரும் ,அமிர்தாவின் அப்பாவிடம் ,

"அண்ணா ஆதி அங்க நான் சொல்லும் போது தான் நீங்க வரணும்னு சொன்னதால தான் நாங்க அங்கப் போனதேயில்ல….அவனோட ஆசை, கனவு எல்லாமே அதுதான் .... இப்ப இந்த முடிவே எனக்காகத்தான் எடுத்திருப்பான்..... என் பிள்ளைய எனக்கு நல்லாவேத் தெரியும் … " என்றவர் , ஆதியின் கையைப் பிடித்து முத்தமிட்டு ,

"இனியும் அம்மா உன்னைக் கட்டுப்படுத்தல …சாரிடா கண்ணா.... நீ எப்ப விரும்புறியோ அப்ப நாங்க எல்லாரும் அங்க வாறோம்…." என்று விட்டு , அமிர்தாவின் அப்பாவிடம் சென்றவர் ,

"நீங்க துளிக்கூட கவலைப்பட வேண்டாம்ணா… உங்கப் பொண்ண அவன் நல்லாப் பார்த்துக்குவான். அது மட்டுமில்ல நாம கொஞ்சம் தள்ளியிருந்தா தான் அவங்களுக்குள்ள ஒரு புரிதலும் … ஒருவரை ஒருவர் தெரிஞ்சுக்கிறதற்கான வாய்ப்பாவும் அமையும்னு நினைக்கிறேன். அதுக்கு மேல உங்க விருப்பம்" சொல்லிவிட்டு தன் கணவன் அருகில் சென்று அவர் நின்றுவிட ,

ஆதியும் அவரருகில் வந்தவன் , "மாமா உங்க பொண்ண நிச்சியமா உங்கள விட நல்லாப் பார்த்துக்குவேன்ற நம்பிக்கை எனக்கு இருக்கு .... இன்னும் ரெண்டு வாரத்துல துபாய் போற வேலையிருக்கு… அப்ப இங்க வந்து விட்டுட்டுப் போறேன்.... இப்போ அம்மா சொல்றது போல நாங்க ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்கிறதுக்கு இந்த தனிமை அவசியமாவும் இருக்கலாம் ...." என்று அருகில் மனைவியைப் பார்க்க ,

மகளருகில் வந்த அமிர்தாவின் அப்பா நாதன் , கண்கள் கலங்க அவள் நெற்றியில் முத்தமிட்டு … "அம்மா …போய்ட்டு வாம்மா" எனவும் , தந்தையின் நெஞ்சில் சாய்ந்து அழுதவளை தட்டிக் கொடுத்து விட்டு நகர்ந்தார்.

அதற்கு மேல் அவர்களைத் தொந்திரவு செய்ய வேண்டாம் என்ற எண்ணத்தில் அனைவரும் ஒதுங்கிக் கொண்டனர்.

விமானத்தினுள் ஏறும் எஸ்கலேட்டரில் புடவையை ஒரு கையால் தூக்கிப் பிடித்துக் கொண்டு ஏறியவளிடம்,

"சுடி, ஜீன்ஸ் இப்படி ஏதாவதுப் போட்டுருக்கலாமே… இந்த டிரஸ் உனக்கு கம்ஃபர்ட்டா இல்லனு நினைக்கிறேன் . " என்றவாறு அவள் வலக்கையில் அவன் இடக்கை விரல்களை கோர்த்துக் கொண்டே சொல்ல ,

அதுவரை படி ஏறுவதில் கவனம் வைத்திருந்தவள் , அவனது இந்தச் செய்கையில் உள்ளமும் உடலும் சிலிர்த்து அவனைப் பார்த்தாள்.

அவன் விழிகளைச் சந்தித்தவள், தன் விழிகளை 'இல்லை' என்பது போல் அழகாக சிமிட்டி புன்னகைத்தாள்.புன்னகைக்கும்போது அந்தக் கன்னக்குழி அழகில் ஆதி மயங்கித்தான் போனான்.

அன்றுக் காலையில் எந்தவித சடங்குகளும் சம்பிரதாயங்களும் இன்றி வீட்டிலுள்ளவர்கள் முன்பு அவளுக்கு மாலையிடும் போதும் , மாங்கல்யம் அணிவிக்கும் போதும் அவள் கழுத்தில் அவன் விரல்கள் பட்டதோடு சரி , இப்போது தான் அவள் கரத்தைப் பிடிக்கிறான்.

அதன் பிறகு விமானத்தினுள் ஏறி இருக்கைக் கண்டு பிடித்து அமரும் வரையுமே கரம் விலக்கவில்லை. திருவனந்தபுரம் வந்திறங்கி கார் நிறுத்துமிடம் வந்தவன், வண்டியை எடுத்து வந்து மனைவியை அருகமர்த்தி காரை ஓட்ட ஆரம்பித்தான்.

அருகில் அமர்ந்திருந்தவளிடம் , " ம் ... இப்ப மணி ஏழாகுது எப்படியும் நாம அங்கப் போக பதினொரு மணியாவது ஆகிடும் , உனக்கு டயர்டா இருந்தா பின்னால நல்லா வசதியா படுத்து தூங்கறியா , நான் வீட்டுக்கு வந்ததும் எழுப்புறேன்."

வேகமாக தலையை " மாட்டேன்" என்பது போல அசைத்தவள் மொபைலை எடுத்து டைப் செய்து அவனிடம் காட்டினாள்.

"எனக்குத் தூக்கம் வரலை… இங்கயே உட்கார்ந்துருக்கேன் .. "

"ஹேய் நீ எழுதி எல்லாம் காட்ட வேண்டாம் , சத்தம் கம்மியா வருதே ஒழிய பேச முடியாம இல்ல... சோ பேச ட்ரைப் பண்ணு நானும் புரிஞ்சுக்க முயற்சிப் பண்றேன்.. இப்படி எழுதிட்டே இருந்தா பேசணும்ங்கிற எண்ணமே வராது ஒகே ...."

புன்னகையோடு அவள் தலையாட்ட , " இப்படி தலையாட்டறதோ , எழுதறதோ, சைகை காட்டறதோக் கூடாது … வாயால பேச ட்ரைப் பண்ணு… "

தலையாட்டப் போனவள் பின் அவள் பேச முயற்சி செய்ய , அவள் உதடுகளையேப் பார்த்துக் கொண்டிருந்தவன் , அந்த ஈர இதழ்களின் பளபளப்பிலும், நாவைச் சுழற்றிப் பேசும் அழகிலும் தன்னை மறந்து பார்த்துக் கொண்டே இருக்க ,அவன் பதில் எதுவும் சொல்லவில்லை என்றதும், அவனது தோளில் கை வைத்து உலுக்க ,

பார்வையை அவள் விழிகளுக்கு எடுத்துச் சென்றவனிடம் , "என்ன " என்பதாக இரு புருவங்களை உயர்த்திக் காட்ட,

" எ..ன்..ன.. " என்றுத் தடுமாறியவனிடம் , 'ப் உ" என்பதாக உதட்டைக் குவித்து காற்றை வெளியேற்றியவள் , புன்னகையுடன் ,

"பார்த்தீங்களா … புரிஞ்சுக்க கஷ்டமாருக்கு தானே … அதான் நான் இப்படி டைப் பண்ணியே காட்டுறேன்.... " தன் கைப்பேசியை காட்டினாள்.

அப்பொழுதுதான் புரிந்துக் கொண்டவன், தலையைக் கோதி , " நான் அந்த உதடும் நாக்கும் டான்ஸ் ஆடுறத மட்டும் தானே பார்த்தேன்...." என்று நினைத்துக் கொண்டே ,

" இ... இல்ல நீ பேசு … இப்ப புரியும் … எ… என்ன சொன்ன … "அவளும் சிரித்துக் கொண்டே மறுபடியும் இதழ்களை நடனமாட விட ,

"டேய் ஆதி ….அவளப் பேசுனு சொல்லிட்டு இப்படி ஆஸ்திரேலியா ஆப்பிள கடிச்சுச் சாப்பிட தயாரனது போலப் பார்க்குறியே … இவ லிப்ஸ் அப்படி இருந்தா நான் அப்படித்தான் பார்ப்பேன்…ம்மா ...... இப்படி பண்ணிட்டிங்களே… " என்று யோசித்தவன் ,


"ம்ஹூம் … இது சரிபட்டு வராது போலவே ......பேசாம நார்மல் லைஃப்க்கு ஸ்டெப் எடுத்தா என்ன …. பெரிய இவனாட்டம் அது இதுனுப் பேசி சொதப்பி வச்சுட்டேனே....." அவனுக்குஅவனே மனதில் திட்டிக் கொண்டு இருக்க ,

அமிர்தாவோ இப்பொழுதும் அவன் அவளது உதட்டையேப் பார்த்துக் கொண்டு இருப்பதைப் பார்த்து , கையினை இம்முறை காற்றினில்' போங்க' என்பது போல் வீசி சாலையைப் பார்த்து அமர்ந்துக் கொண்டாள். சடுதியில் யோசனையைக் கைவிட்டவன் ,

"வெய்ட்…வெய்ட்… இப்ப சொல்லு நான் கண்டிப்பா நீ என்ன சொன்னனு சொல்றேன் … "
நன்கு திரும்பி கைகளைக் கட்டிக் கொண்டு , "ம் புல்லும் புண்ணாக்கும் " அவனால் கண்டுபிடிக்க முடியாது என்று சலித்துக் கொண்டே சொல்ல , அவனோ

" என்ன புல்லும் புண்ணாக்குமா…" என்று சரியாகச் சொல்ல , ஆச்சரியத்தில் கண்களை அகல விரித்தவள் , பின் சிரிக்க ஆரம்பித்து விட்டாள். சத்தம் மட்டுமே வரவில்லை … ஆனால் அவளால் அடக்க முடியாத சிரிப்பில் உடலும் குலுங்கி புரையேற ஆரம்பித்தது.

மனைவியின் புன்னகையில் மனதைப் பறிகொடுத்தவனுக்கு இதுவரை இருந்த தயக்கங்கள் காணமல் போக.... அவள் முகம் அருகே நெருங்கி இதழில் இதழ் பதிக்க நினைக்க ….அதே வேளையில் வெளியே கேட்ட மற்றொரு வண்டியின் ஹார்ன் சத்தம் கேட்டு அமிர்தா திரும்ப இதழில் விழ வேண்டிய முத்தம் அவள் கன்னத்தில் விழுந்தது.

இருவருமே சிலையானது போன்றதொரு தோற்றம் , மீசையின் குறுகுறுப்பும் அவனது இதழழுத்தமும் அமிர்தாவை அப்படியே விழிகளை விரிக்க வைக்க , அவனது விழிகளோ கன்னத்து மென்மையில் மூடிக் கொண்டது.

எதிரே வந்த வாகனத்தின் ஒளியில் கண்கள் கூசவும் இயல்புக்கு வந்த அமிர்தா , இடக்கையால் அவனை மெல்ல விலக்கப் பார்க்க , கண்களைத் திறந்தவன் , அவன் இருக்கைக்கு நகர்ந்துக் கொண்டே ,

"இ .... இல்ல.... அ...அது.. லிப்ஸ்.... இல்ல.... புரையேறுச்சா அது தான்… இப்படி ஷாக் கொடுத்தா நின்னுடும்னு சொல்வாங்க …. ஐயோ.... உளறுறேனோ…. விக்கல் வந்தா தான் அப்படிச் சொல்வாங்களோ…"

இப்பொழுது வெட்கத்தோடு மறுபடியும் சிரிப்பு வர , சைகையோடு "முதல்ல கார் எடுங்க …" என்று வாயசைக்க ,

அவனுக்கும் புன்னகை வர , வண்டியை ஓட்ட ஆரம்பித்தான். ஒரு சில நிமிடங்களிலேயே தன்னையறியாமல் உறங்கி விட்ட வளைப் பார்த்தவனுக்கு முகத்தில் புன்னகை அரும்பியது , தூக்கம் வரல தூக்கம் வரலனுட்டு தூங்குறதப் பாரு"

உறக்கத்தில் அவள் முகம் பார்த்தவனுக்கு , இரு நாட்கள் முன்பு வரை அவனுக்கு அவளோடு திருமணம் நடக்கும் என்றேத் தெரியாது. கண்மூடி கண் திறப்பதற்குள் எல்லாம் நடந்து முடிந்துவிட்டது. தன் நீண்ட நாள் கனவு நிஜமாகும் வரை திருமணம் என்ற ஒன்றில் சிக்கிக் கொள்ளவே விரும்பவில்லை… வேறு வழியில்லை என்பதாலும் தன்னால் மற்றவர்களுக்கு வேதனை வேண்டாம் என்பதாலும்… அதோடு தொழிலில் எவ்வளவு பெரிய இடத்தில் இருந்தாலும் அம்மாவுக்கு பிள்ளை தானே.... அவர் ஒன்று சொன்னால் விளையாட்டாகப் பேசினாலும் உடனே செய்வான். அப்படித்தான் இந்த திருமணமுமே..... அவர் கேட்டதுமே முதலில் தயங்கினாலும் உடனே மணம் புரிய சரி என்றான்.

ஆனால் இப்போது அவளைப் பார்க்கும் போது தோன்றும் உணர்வு.... மனதினுள் சிரித்துக் கொண்டே அவளைப் பார்க்க … அவளது தலை சாய்ந்து ஜன்னல் கதவில் தட்டவும் , உறக்கத்திலேயே முகத்தை சுழித்துக் கொண்டவளுக்கு பின்புறம் கிடந்த அலங்கார தலையணையை எடுத்து , அவள் தலையருகே வைத்தவன் அதன் பிறகு வீடு வந்து தான் காரை நிறுத்தினான்.

வெளிகேட்டைத் தாண்டி சிறிது தூரம் சென்று தான் அந்த பங்களாவை நெருங்க முடியும். அந்த வளாகத்திலயே இரண்டு மூன்று ,இரு படுக்கை அறைகள் கொண்ட மூன்று வீடுகளும் அவனிடம் பணிபுரிபவர்களுக்காக கட்டிக் கொடுக்கப்பட்டிருந்தது.

இவர்களை வரவேற்க அங்கிருந்த அனைவரும் குடும்பத்தோடு வந்து காத்துக் கொண்டிருந்தனர். காரை நிறுத்தியவுடன் , " அமிர்தா " என்று கையில் தட்ட , விழிகளைத் திறந்தவளிடம்,

"வெளிய நம்மள வரவேற்க எல்லாரும் நிக்கிறாங்க … " என்று வெளியே விரல் நீட்டியவன் , தன்னிடம் இருந்த சீப்பை எடுத்து , " தலையை சரி பண்ணிக்கோ … அப்படியே டிரஸ்ஸையும் … நான் அந்தப் பக்கம் வந்து ஓபன் பண்றேன்…" என்றவன், அவன் தன்னைச் சரிசெய்ய நேரம் கொடுக்கும் விதமாக இறங்கி அவன் புறம் நின்றவர்களிடம் பேசிவிட்டு வந்து கதவைத் திறந்தான்.

சீப்புத் தரவும் தலைமுடியை சரி பண்ண கையைக் கொண்டுப் போனவள் அவன் உடையைச் சொன்னதும் திடுக்கிட்டுக் குனிந்துப் பார்த்தவளுக்கு 'ஐயோ' என்றாகி விட்டது. தூக்கத்தில் சேலை விலகியிருக்க வேகமாக அதைச் சரி செய்தவளுக்கு வெளியே அவனைக் காணவே வெட்கமாகி விட்டது. அதற்குள் அவன் இந்தப் புறம் வருவது தெரியவும் , புடவையையும் தலையையும் சரி செய்துக் கொண்டவள் , அவன் புறம் திரும்பாது அங்கு நின்றிருந்தவர்களுக்கு கரம் கூப்பி புன்னகை செய்தாள்.

இவர்கள் வெளியே நிற்கைலையே உள்ளிருந்து ஆரத்தி தட்டுடன் வந்தப் பெண் ,

"அண்ணா அண்ணியோட சேர்ந்து நில்லுங்க" எனவும் பேசிக் கொண்டிருந்தவன் அருகில் வந்து ,

"அம்மா ஃபோன் பண்ணி இதெல்லாம் செய்யச் சொன்னாங்களா , பனிக்குள்ள குழந்தையை வச்சிட்டு ஏன் மா.... "

" டேய் அம்மா சொல்லனாலும் நாங்க செய்திருப்போம் தான் , முதல்ல தங்கச்சிக் கூட சேர்ந்து நில்லு… உன்கிட்ட அப்புறம் பேசிக்கிறேன் …" என்ற உடன் படித்த நண்பனும் , தற்போது அவனது நிறுவனத்தில் பணிபுரிபவனுமான வேந்தன் சொல்லவும் அமிர்தா அருகில் நிற்க, வேந்தனின் மனைவி ராகவி ஆலம் சுற்றிய பின் அவர்களை வீட்டினுள் அழைத்துச் சென்றாள்.

உள்ளே வந்த ராகவி கணவனின் தோளில் உறங்கிக் கொண்டிருந்த குழந்தையை வாங்கித் தன் தோளில் போட்டுக் கொள்ள , குழந்தையைக் கண்டதும் முகத்தில் மலர்ச்சித் தோன்ற , குழந்தையின் தளிர்கரத்தை எடுத்து முத்தம் பதித்த அமிர்தா ,

"குழந்தைப் பெயர் என்ன … " என காற்றாக வந்தக் குரலில் ராகவியிடம் கேட்க ,

ராகவியும் ,"பரவால்ல அண்ணி சத்தமாவே பேசுங்க , அவ நல்லா தூங்குறா… எந்த சத்தத்துக்கும் இப்ப எழுந்துக்க மாட்டா...." எனப் புன்னகைக்க ,

அப்பொழுதுதான் தன்னையே உணர்ந்த அமிர்தாவுக்கு கண்களில் நீர் தேங்கி விட்டது.ராகவியின் பேச்சைக் கேட்ட ஆதிக்கும் என்னவோ போல் ஆக , அமிர்தாவின் கண்களைப் பார்த்தவன் ,

" கவிமா…. பிள்ளையை கொண்டுப் போய் படுக்க வை … நீங்களும் போய் ரெஸ்ட் எடுங்க , காலையில பேசிக்கலாம்" என்றதும் , வந்திருந்தவர்கள் அனைவரும் விடை பெற்றுச் சென்றனர் .அவர்களை புன்னகையோடு தலையசைத்து வழியனுப்பி வைத்த அமிர்தா உதட்டைக் கடித்து அழுகையை அடக்கி நிற்க , அவள் கைப் பிடித்தவன் ….

" மேல லெஃப்ட் சைட் செகன்ட் ரூம் என்னோடது … பக்கத்துலயே இன்னொரு ரூமும் இருக்கு … உனக்கு எது கம்ஃப்ர்டோ அங்க போய்க்கோ…. நான் கதவை பூட்டிட்டு வாறேன்…" என்று அவளை மாடிக்கு அனுப்பினான்.

வேந்தன் வெளியே ஆதிக்காக நின்றவன் , அவனை தனியாக அழைத்துப் போய் , "ஆதி … மலைக்குப் போய்ட்டு வந்து உனக்கு வச்சுக்கிறேன்.... ஆனாலும் அன்னைக்கு நாங்கள்லாம் கிளம்பும்போதுக் கூட நீ உனக்கு கல்யாணம்னு சொல்லலயேடா….. "

"சாமி .... எனக்கே அப்புறம் தான் தெரியும் … சரி நடக்கிறது நடக்கட்டும் … மற்றத நேர்ல சொல்லி உங்கிட்ட திட்டு வாங்கலாம்னு முடிவு பண்ணிட்டேன்...."

"புரியுது ஆதி … நாங்கள்லாம் உன் கல்யாணத்த ரொம்ப எதிர்பார்த்தோம்... இப்படி ஓவர் நைட்ல புது மாப்பிள்ளையா வந்திருக்கியா … அது தான் ....சரி நான் கிளம்புறேன். இப்ப நீ ஒன்னும் சொல்ல வேண்டாம் .நான் மலைக்குப் போய்ட்டு வந்து கேட்டுக்கிறேன்.... " என்றவன் அருகிலுள்ள அவன் குடியிருக்கும் வீட்டுக்கு கிளம்பி விட்டான்.

கதவை அடைத்துக் கொண்டு வந்தவன் , அவனறைப் பூட்டியிருக்க , அருகிலிருந்த அறையில் விளக்கு எரியவும் யூகித்துக் கொண்டவன் அவனறைக்குச் சென்றுக் குளித்து உடை மாற்றி வெளியே வர , அப்பொழுதும் அங்கு விளக்கெரியவும் , கீழே சென்று பால் எடுத்து வந்தவன் , கதவைத் தட்ட , கதவை விரியத் திறந்தாள். அவளும் சேலையிலிருந்து சுடிதாருக்கு மாறியிருந்தாள்.

ஆனால் ' உள்ளே செல்லலாமா ', என்ற யோசனையில் அவனும் , 'வெளியே போகணுமோ ' என்ற குழப்பத்தில் அவளும் நிற்க , பின் ஒரே சமயத்தில் அவரவர் யோசனையை செயல்படுத்த முனைய , இருவரும் முட்டிக்கொள்ள மட்டும் தான் இல்லை , உடனே அவள் வரட்டும் என இவனும் , அவன் வரட்டும் என இவளும் பின் வாங்க , இப்போது இருவருக்குமே ஒரே நேரத்தில் முறுவல் தோன்ற , " வாங்க" என்ற வாயசைப்பில் உள்ளே சென்றாள்.

வந்தவன் கட்டிலில் அமர்ந்து பால் அருந்திக் கொண்டே ,

"நீயும் உட்கார்" எனப் பக்கத்தில் கண்களால் காட்ட ,

அவளும் அமர்ந்துக் கொண்டாள். அவன் ஒரு ஓரம் இவள் ஒரு ஓரமாக அமர ,

"நீ இப்படி தூரமா இருந்தா நீ பேசுறது எனக்குத் தெரியாது.. ஐ மீன் நீ வாயசைக்கிறத என்னால எப்படி பார்க்க முடியும்... கொஞ்சம் பக்கத்துல உட்கார்... " என்றதும் சிறிது நகர்ந்து அமர்ந்தாள் .

"இன்னும் பக்கத்துல " எனவும், அவன் விழிகளைப் பார்த்தவள் கொஞ்சம் அருகில் வர , அவனது, 'இன்னும் ' என்ற வார்த்தையில் மிகவும் நெருக்கத்தில் வந்தவளிடம் ,

திரும்பவும் அவன் வாயைத் திறக்கப் போக ,

"இன்னும் பக்கத்துலனா உங்க மடியிலதான் உட்காரணும்'' அவன் கவனித்திருக்க மாட்டான் என்ற நினைவில் கண்களால் பாவனை செய்துக்கொண்டே வாயசைக்க ,

"பரவால்ல … மடியில உட்கார்ந்தா இன்னும் வசதி தான்…" என்ற அவனது குறும்பு பேச்சில் திடுக்கிட்டு அவனைப் பார்க்க ,

கண்களின் சிரிப்பில் புருவங்களை ஏற்றி இறக்கி , அவன் அருந்திக் கொண்டிருந்தப் பால்கோப்பையை அவளிடம் தந்துக் கொண்டேப் புன்னகைத்தவனிடம் மயங்காமல் இருக்க முடியாது. அமிர்தாவும் மயங்கித்தான் போனாள். சில நொடிகளுக்கு மேல் அவன் விழிகளைச் சந்திக்க இயலாது நாணம் பூசிக்கொள்ள , கோப்பையை வாங்கிக் கொண்டே விழிகளை வேறு புறம் திருப்பிக் கொண்டாள்.

"ஏன் உட்கார மாட்டியா …. " என அவள் காதருகில் ரகசியமாக கேட்க ,

அவள் அமைதியாக குனிந்து துப்பட்டாவை விரலில் சுற்றி சுற்றி எடுத்துக் கொண்டிருந்தாள். பதிலும் சொல்லவில்லை , அவனையும் பார்க்கவில்லை. இப்போது ஆதி அவளை நெருங்கி அமர ,

பட்டென்று எழுந்துக் கொண்டவள் கையை வேகமாகப் பிடித்தான். அவள் கையை மெல்ல உருவிக் கொள்ள முயற்சிக்க ,

"ஏன்… என்னாச்சு… "

இப்போது அவனைப் பார்த்தவள் , மொபைலை எடுக்க ,

"இல்ல நீ பேசு … நான் புரிஞ்சுக்குவேன் ....."

"திடீர்னு நீ கல்யாணம் பண்ணிக்கோனு உங்களை சொன்னதும் …நீங்க …நீங்க …யோசிச்சீங்க தானே … உடனே சரினும் சொல்லலயே " மெதுவாக காற்றாக வந்த அவள் பேச்சை புரிந்துக் கொள்வதில் தோற்றுப் போனவன் …, அவள் மொபைலைக் கையில் தந்து ,

"சாரி ..... இந்த ஒரு டைம் … போக போக புரிஞ்சுக்குவேன்" அதுவரை அழுகையை அடக்கி வைத்திருந்தவளுக்கு இப்போது கண்ணீர் உடைப்பெடுக்க , துப்பட்டாவால் கண்களைத் துடைத்துக் கொண்டே, பால்கோப்பையை மேசை மேல் வைத்து விட்டு அவனிடம் கைப்பேசியை வாங்கி டைப் செய்ய ஆரம்பித்தவள் , எழுதி முடித்து அவனிடம் தந்து விட்டு அந்த அறையின் பால்கனியில் சென்று நின்று எதிரில் தெரிந்த இந்திய மகா சமுத்திரத்தை வெறிக்க ஆரம்பித்தாள். ஆம் அவர்கள் வந்திருக்கும் இடம் கன்னியாக்குமரி.

" உண்மையைச் சொல்லணும்னா என்னைக் கல்யாணம் பண்ணது உங்களுக்கு கஷ்டமான விஷயம் தான் .. நீங்க அடுத்த மாசம் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்னதுக்கூட நம்ம வீட்ல உள்ளவங்க யோசிக்க டைம் கொடுக்கதான்னு நினைக்கிறேன் … ஆனா அத்தை பிடிவாதமா இருந்ததால மட்டும் தான் நீங்க உடனே ஓகே சொன்னீங்க.... நம்ம கல்யாணம் தான் பெரியவங்க கட்டாயத்தால உங்க விருப்பமில்லாம நடந்துச்சு …ஆனா நாம….. நம்ம வாழ்க்கையை ஆரம்பிக்கிறது நம்ம கையில தானே இருக்கு ..... ஒருத்தருக்கு ஒருத்தர் பிடிக்காம வாழ்க்கைய ஆரம்பிக்கணும்கிறது- .... ஒரு ரெண்டு மாசம் வெய்ட் பண்ணுங்க … நம்ம வீட்டு ஆளுங்க முன்னாடி மட்டும் தானே.. நமக்கு கல்யாணம் ஆனது வேற யாருக்கும் தெரியாதில்லயா….நான் எங்க அப்பா கிட்ட பேசி.….நான் எங்க வீட்டுக்குப் போயிடுறேன்.... " அதற்கு மேல் படிக்காது எழுந்து வெளியே அவளருகே வந்து நின்றான்.

அவனைக் கண்டதும் உள்ளே செல்லத் திரும்பியவளை , "ஒரு நிமிஷம் " என்ற அவன் குரல் தடுத்து நிறுத்தியது. அப்படியே தலையைக் குனிந்தபடி நின்றவளின் அருகில் வந்தவன் , அவள் இரு கைகளையும் எடுத்து அவனது இரு கரங்களையும் கொண்டு சேர்த்துப் பிடித்து ,

"சாப்பிடவே மாட்டியா… இவ்வளவு ஒல்லியா இருக்க...." எனவும் அவன் விழிகளை ஏறிட்டவள் மறுபடியும் தரையைப் பார்க்க ஆரம்பித்தாள்.

"நீ ஒன்னு கவனிச்சியா அன்னைக்கு நான் இந்தக் கல்யாணம் வேண்டாம்னு சொல்லலயே ….இப்போக் கல்யாணம் வேண்டாம் … ஒரு மாசம் ஆகட்டும்னு தானே சொன்னேன் … இதுல உன்னை பிடிக்கலனு எங்கயாவது சொன்னேனா..... நீன்னு இல்ல … வேற எந்தப் பொண்ண எங்கம்மா கை காட்டியிருந்தாலும் கல்யாணம் பண்ணிக்குவேன்… ஆனா ஒரு மாசம் டைம் தான் கேட்டேன்..... அது ஏன்னா … " என்று அவள் கை விரல்களுக்குள் தன் கை விரல்களைக் கோர்த்து விளையாடியவன் … குறும்புச் சிரிப்பு சிரித்துக் கொண்டே அவளைப் பார்க்க ,

அவளும் என்னவாக இருக்கும் என்றவாறு அவன் விழிகளை நிமிர்ந்துப் பார்க்க ,

கோர்த்திருந்த கைகளை விடுவித்து தாடைப் பற்றி கண்களில் முத்தம் பதித்தவன் , அப்படியே கன்னத்திலும் பதித்துக் கொண்டே வந்து இதழை நெருங்கும் போது பட்டென்றுக் கையை எடுத்து விட்டான்.

"இதுக்குத் தான் … இப்படி எல்லாம் பண்ணத் தோணுது அதனால தான் " என்று கைகளை அவன் அணிந்திருந்த டிராக் பேன்டில் விட்டுக் கொண்டு அவளைப் புன்னகையோடுப் பார்த்தான்.

உடலில் உள்ள நரம்புகள் எல்லாம் முகத்தில் அதிக இரத்தத்தைப் பாய்ச்ச … விழி மூடிக் கணவனின் இதழொற்றலில் தன்னை மறந்து நின்றவளுக்கு திடீரென்று அவன் கையெடுக்கவும்… ,

புரியாது விழி திறந்துப் பார்க்க , அவனது குறும்பு புன்னகையில் அவனது விழிக் காண இயலாது நாணமோங்க , தன் இதழ் சொல்லாத ரகசியங்களை தன் விழி சொல்லிவிடுமோ என்றஞ்சியவள் தன் பேசும் நயனங்களை வேறு புறத்தில் திருப்பிக் கொண்டாள்.

முத்த மழையில் அமிர்தாவும் … அமிர்த மழையில் ஆதியும் .....
தூவும் …
 
Top