Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நலங்கிட வாரும் ராஜா - 1

Advertisement

Sarayu

Tamil Novel Writer
The Writers Crew
நலங்கிட வாரும் ராஜா...

அத்தியாயம் – 1

“மது... லேசா இப்படி திரும்புடி.. இந்த பக்கம் ஹேர் பின் குத்தனும்....”

“ம்ம்...”

“அழகா இருக்க மது... உன்ன இந்த கோலத்துல பாக்கமாட்டோமான்னு எத்தனை நாள் வேதனை பட்டிருப்பேன் தெரியுமா டி... எப்படியோ இப்போவாது உனக்கு கல்யாணம் கூடி வந்துச்சே...”என்று தன்னுள்ளது ஆதங்கத்தையும், மகிழ்வையும் ஒரு சேர கூறி முடிக்கும் போதே,

“ம்மா இவன் அடிக்குடான்....”என்று இரண்டு வயது சிறுமி தன் ஐந்து வயது அண்ணனை தாயிடம் புகார் செய்ய, அவர்களை சமாதனம் செய்யச் சென்றாள் மதுவின் உயிர்த்தோழி சோபனா.

அவளது சமாதானத்தையும், பிள்ளைகளின் குறை பாடல்களையும் மௌனமாய் சிரித்தபடி பார்த்தவளுக்கு, மனதினுள்ளே ஒரு நிம்மதி பரவியது. மீண்டும் ஒருமுறை கண்ணாடியில் தன்னுருவதை கண் குளிர பார்த்துக்கொண்டாள்.

இருபத்தியெட்டு வயது என்று யாராலும் கூற முடியாதோ என்றே தோன்றியது அவளுக்கு.

கண்களை மூடி, ஆழ மூச்செடுத்து, “இருபத்தி எட்டு....”என்று அவளது உதடுகள் உச்சரிக்கும் போதே, இத்தனை ஆண்டுகளை கடக்க எத்தனை பாடு பட்டேன் என்று மனம் அலறியது.

மதுவின் முதல் அக்கா சுபஸ்ரீக்கு திருமணம் நடக்கும் போதே இவளுக்கு வயது இருபத்தியிரண்டு, அதன் பிறகு இரண்டாவது அக்கா நித்யஸ்ரீ திருமணம். இரண்டு அக்காக்களுக்கும் மாறி மாறி பிரசவம் வந்து அடுத்த இரண்டு ஆண்டுகள் ஓடிவிட்டன.

கிடப்பதெல்லாம் கிடக்கட்டும் மதுவிற்கு மாப்பிள்ளை பார்க்கவேண்டும் என்று அவளது அம்மா பாக்கியம் ஆரம்பித்த போதே, மதுவின் அண்ணன் ஸ்ரீதரன் ஒரு பெண்ணை காதலிக்கிறேன் என்று வந்து நின்றான். மதுவின் திருமணம் முடியட்டும் பார்க்கலாம் என்று கூறிய பாக்கியத்தின் பேச்செல்லாம் எங்கோ தூர ஓடி போனது அவனுக்கு.

தனக்கடுத்து ஒரு தங்கை திருமண வயதில் இருக்கிறாள் என்பதனை மறந்து காதலித்த பெண்ணை மணமுடித்தே வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டான். அடுத்தடுத்த பஞ்சாயத்துக்கள் நடந்து, அனைத்தும்சுமுகமாய் முடிந்த போது நடுவில் இவளது திருமண பேச்செல்லாம் யாருக்கும் நினைவில் இல்லை.

இதற்கிடையில் மூச்சு முட்டிவிட்டது மதுவிற்கு.

“கல்யாணம் ஆகாத பொண்ணு வீட்ல இருக்கும் போது...” என்று இவள் காது படவே பிறர் பேசிய பேச்சைக் கேட்டு இவளுக்கு அத்திரம் பொத்துக்கொண்டு வந்தது.

ஸ்ரீதரன் காதலித்த பெண்ணை திருமணம் செய்ததற்கும், மதுஸ்ரீக்கு திருமணம் கூடிவராமல் இருப்பதற்கும் என்ன சம்பந்தம்.??
இல்லை அவளுக்கு மட்டும் என்ன வேண்டுதலா??

மனதில் எழும் குமுறல்களை யாரிடம் சொல்ல முடியும்..?? அதுவும் இப்படிப்பட்ட பேச்சுக்களை பேசினால் இவள் திருமணத்திற்காக ஏங்கி வீங்குகிறாள் என்றல்லவா அடுத்த நிமிஷம் பேச்சு வரும்.

மதுவின் அப்பா கந்தவேலுக்கு டவுனில் இரண்டு பலசரக்கு கடைகள் இருந்தன. இரண்டையும் அவர் தான் பார்த்துக்கொண்டிருந்தார், திருமணம் ஆனதும் என்னானதோ ஸ்ரீதருக்கு பொறுப்பு வந்துவிட்டது போல, ஒரு கடைக்கு அவன் பொறுப்பேற்றுக்கொண்டான்.
அண்ணியாக வந்தவளோ மதுவை விட சிறியவள். ஒரு மரியாதைக்கு “அண்ணி...”என்று அழைத்ததற்கு,

“அடடா அண்ணி.. நான் உங்களை விட சின்ன பொண்ணு. லட்சுமின்னே கூப்பிடுங்க. என்ன பண்றது உங்களை விட சின்ன பொண்ணு எனக்கே கல்யாணம் ஆகிடுச்சு...”என்று பாசமாய் பரிதாபம் காட்டியவளின் பேச்சில் குன்றித்தான் போனாள்.

திருமணம் கூடி வராதது அவளது தவறா..??

முதல் அக்காவின் கணவன் மணிகண்டன் முழுநேரக் குடிகாரன், இரண்டாவது அக்காவின் கணவன் பாஸ்கரனோ மகா கஞ்சன். இரு அக்காக்களும் சிறு சாக்குக்கிடைத்தால் போதும் பிள்ளைகளை தூக்கிக்கொண்டு தாய் வீடு வந்துவிடுவார். அதன் பிறகு மதுவிற்கு மிச்சம் மீதியிருக்கும் நிம்மதியும், நான் போய் வருகிறேன் என்று கைகாட்டி சென்றுவிடும்.

பாக்கியம் தான் ஓயாது கணவரிடம் “தரகர் வந்தாரா...?? இந்த ஜாதகத்தை பார்க்க வேண்டும். உங்க சித்தப்பா ஒரு வரன் சொன்னார்...” என்று எதையாவது சொல்லிக்கொண்டே இருப்பார்.

தந்தையான அவருக்கும் இவளது திருமணத்தை பற்றி எண்ணமில்லாமல், கவலையில்லாமல் இருக்குமா?? அவரும் தான் சல்லடை போட்டு தேடுகிறார். கைக்கு எட்டுவது வாய்க்கு எட்டவில்லை என்பது போல் முடித்துவிடலாம் என்று வரும் வரன் தட்டி போகிறது.
அனைவர்க்கும் பிடித்தால் மதுஸ்ரீக்கு பிடிப்பதில்லை. அனைத்தும் சரியென்று வந்தால் ஏதாவது ஒரு தடங்கல்.

முதல் முறை பெண் பார்க்க வந்த பொழுது இருந்த உணர்வெல்லாம் அடுத்தடுத்து அவளுக்கு இல்லை.

வா... பாரு... எனக்கும் பிடித்தால் மேற்கொண்டு பார்ப்போம் என்ற எண்ணமே. ஓயாது அலங்கரித்து, வருபவர்களை நமஸ்கரித்து, வெட்கம் என்பது போல தலை குனிந்து... ஷப்பா..... அழுத்துவிட்டாள் மது.

அவளொன்றும் திருமணத்திற்காகவும், தம்பத்ய உறவிர்க்காகவும் ஏங்கிக்கொண்டிருக்கவில்லை. ஆனாலும் வருபவனை ஓரளவுக்காவது மனதிற்கு பிடிக்கவேண்டுமே. அவள் வாழ்வை பற்றி அவளுக்கும் சில பல கனவுகள் இருக்குமே.

டவுனும் அல்லாமல், கிராமமும் அல்லாமல் இடைப்பட்ட அவளது ஊரில், பொழுது போக்கிற்காக வெளியே செல்லவும் முடியாது. இவளுக்கு நேரமும் இருக்காது. உடன் பயின்ற தோழிகள் எல்லாம் திருமணம் முடிந்து வெவ்வேறு ஊர்களில் இருக்க, ஏதாவது நல்லது கேட்டது நிகழ்வுகளுக்கு மட்டுமே காண முடியும்.

அதுவும் இப்பொழுதெல்லாம் இவளே ஒதுங்கிக்கொள்கிறாள்.

“எப்ப கல்யாணம்..?” என்று யாராவது கேட்டால், அப்படியே அவர்களை கொன்று போட்டுவிட வேண்டும் என்ற வெறி அவளுள் தோன்றுவதும், அதனை அடக்க பெரும்பாடுப்பட்டு, சிரித்த முகமாய் பதில் கூறுவதும் அவளுக்கு அறவே பிடிக்காத விஷயம்.
ஆனால் அதை தான் பல வருடங்களாய் செய்துக்கொண்டு இருக்கிறாள். அவளது உணர்வுகளை புரிந்து அவள் மனம் காயப்படாமல் நடந்துகொள்வது சோபனா மட்டுமே.

“உன் குணத்துக்கு கண்டிப்பா நல்ல வாழ்க்கை கிடைக்கும் மது...” என்பாள்.

தாய் தந்தையின் கவலை நிறைந்த முகத்தை பார்த்து உடன் பிறந்தவர்களிடம் ஏதாவது சொன்னாலோ,

“ஏன் டி நாங்கெல்லாம் கல்யாணம் செஞ்சு என்னத்த கண்டுட்டோம்...”இது மூத்தவள்,

“மது அப்பா உனக்கு ரெண்டு பவுன் சேத்து போடணும்னு சொன்னாராமே...”இது இரண்டாமவள்,

“ஏன் அண்ணி, உங்களுக்கே இத்தனை வயசு ஆச்சே, வர மாப்பிளைக்கு எப்படியும் நரையே வந்திருக்கும்...”இது அண்ணன் மனைவி.
இம்மாதிரியான பேச்சுக்களை கேட்கும் போது, எங்காவது ஓடி விடலாமா என்றுகூட தோன்றும்.ஆனால் அது சாத்தியமில்லையே. உலகம் வேறு விதமாய் அல்லவா கதை கட்டிவிடும்.

அவ்வளவு தான், ஆறுதல் தேடியவளுக்கு அமிலமாய் வார்த்தைகள் வந்து சேர, அத்தோடு மௌனியாகிவிட்டாள்.மனம் சரியில்லையெனில் சோபனாவிடம் பேசுவாள், அதுவும் அவளுக்கு மனமிருந்தால் தான். இல்லையெனில் அதுவும் இல்லை. கோவிலுக்கு போவாள் அவ்வளவே.,

நாட்கள ஆக ஆக கந்தவேலுக்கும், பாக்கியதிற்கும் எப்போதடா கடமையை முடிப்போம் என்றானது. கடைசி பெண்ணின் திருமணத்தை சீரும் சிறப்புமாய் செய்ய நினைத்தவர்களுக்கு, வருடங்கள் ஓட ஓட, வீட்டின் பிரச்சனைகள் கூட கூட, குடும்ப பாரமும் அழுத்த எப்போதடா மதுவின் திருமணம் முடியும் என்றானது.

இவர்கள் வீட்டில் இப்படியிருக்க, கண்டேன் கண்டேன் என்று வந்த கந்தவேலுவின் உறவு பெண் ஒருவர், “இங்க பாரு பாக்கியம், நமக்கு தோதாவே எல்லாம் வரும்னு எதிர்பார்க்க கூடாது. ஓரளவுக்கு சரியா இருந்தா நகட்டிடனும். இவளுக்கும் என்ன வயசு கம்மியாவா ஆகுது..”என்று அவர் பங்கு அறிவுரையை சொல்ல,

“நாங்களும் பார்த்துட்டு தான் இருக்கோம் சித்தி. அதுக்குனு புள்ளைய பிடிச்சு தள்ளவா முடியும்..”என்று பாக்கியம் பதில் கூற இதையெல்லாம் கேட்டபடி சமையல் செய்துக்கொண்டிருந்தாள் மது.

காலை ஏழு மணிக்கெல்லாம் அப்பாவும், அண்ணனும் கடைகளை பார்க்க கிளம்பிவிட, அதற்குள் அவர்களுக்கு காலை உணவும், மதிய சாப்பாடும் கட்டி வைத்து விட வேண்டும். இது அவளுக்கும் அவளது அம்மாவிற்கும் பாத்தியப்பட்ட வேலை.

திருமணமாகி வருடம் முடிந்துவிட்டது, லட்சுமி இன்னும் அடுக்களை பக்கம் கால் வைத்ததில்லை. “அண்ணி நீங்க கல்யாணம் ஆகி போயிட்டா எனக்குத்தான் ரொம்ப சங்கடம்...” என்று பாவலா காட்டுபவளிடம்,

“அதுக்கு காலம் முழுக்க உனக்கு சமையல்காரியா இருக்க சொல்றியா டி...” என்று சண்டையிட வேண்டும் போல தோன்றும், ஆனாலும் அமைதியாய் ஒரு பார்வை பார்த்து விலகி விடுவாள்.

காலை உணவு வேலை முடிந்து, சற்றே ஆசுவாசமாய் அமர்ந்து அண்ணன் மகனை கொஞ்சிக்கொண்டிருந்தாள்.

“மது நான் சொல்றேன்னு தப்பா நினைக்காத, வர மாப்பிளைக்கு வயசு கூட குறையா இருந்தாலும் சரின்னு சொல்லிட்டு, தாலிய வாங்கிட்டு இங்கிருந்து கிளம்புற வழிய பாரு..”என்று அந்த உறவு பெண்மணி கூற, இவளோ ஒன்றும் சொல்லாமல் பாக்கியத்தின் முகம் பார்த்தாள்.

“என்ன சித்தி நீங்க பேசுறதை பார்த்தா எதோ வரன் பார்த்துட்டு வந்து பேசுற மாதிரி இருக்கு..வெளிப்படையா சொன்னாதானே தெரியும்..” என்றபடி பாக்கியம் வர,

“ஆமா பாக்கியம்.. எனக்கு தெரிஞ்ச குடும்பம் தான். ஆளு அம்புன்னு நல்ல வசதித்தான்..”என்று ஆரம்பித்தார் அவர்.

“அப்புறம் என்ன சித்தி... மாப்பிள்ள ஜாதகம் வாங்கி குடுங்க, தோதா வந்தா பேசுவோம்...”

“அட எந்த காலத்துல இருக்க நீ... ஜாதகம் அது இதுன்னு... அவங்களுக்கு அதெல்லாம் நம்பிக்கை இல்ல. பொண்ணு குடுத்தா போதும்னு சொல்றாங்க.. நானும் இந்த விசயமா தான் வந்தேன்.. கந்தவேலு வந்தா பேசுவோம்னு இருந்தேன். நீயே ஆரம்பிச்சுட்ட...”

“அவர் வரவும் சொல்றேன் சித்தி. மாப்பிள்ள என்ன வேலை செய்றார்?? எத்தனை வயசு?? எவ்வளோ சம்பளம்..??கூட பிறந்தவங்க எத்தனை பேர்..??”

“உத்தியோகமெல்லாம் பெரிய உத்தியோகம் தான், சம்பளமும் லச்சத்துக்கு கிட்ட, என்ன வயசு தான் கொஞ்சம் ஜாஸ்தி...”என்று அவர் இழுக்கும் போதே, மதுவிற்கு எதுவோ சரியில்லை என்று பட, அவர்கள் பேச்சை கவனிக்காதது போல கவனித்தாள்.

“என்ன சித்தி ஒரு முப்பது, முப்பத்திமூணு இருக்குமா..???”பாக்கியம் ஆவலாய் விசாரிக்க,

“போன மாசம் நாப்பது முடியுது.. ஆனா ஆள் பாக்க நல்ல அம்சமா இருப்பான்...”என்று அவர் கூறவும் படக்கென்று திரும்பி தன் அன்னையை பார்த்தாள்.

கிட்டத்தட்ட பன்னிரண்டு வயது வித்தியாசம். அவளது அன்னைக்கும் தந்தைக்கும் கூட இத்தனை ஆண்டுகள் வித்தியாசம் இல்லை. பாக்கியதிற்குமே இதை கேட்டதும் மனம் திடுக்கென்று இருந்தது.

“என்ன சித்தி இவ்வளோ வயசா...???”

“அட என்ன டி இவ.. வயச பாக்காதா.. வசதிய பாரு...”

ஆத்திரம் பொத்துக்கொண்டு வந்தது மதுவிற்கு. ஏதாவது சூடாய் வார்த்தையை விட்டால் அதுவேறு தேவையில்லாத பிரச்சனை என்று தன் அன்னையை ஒரு அழுத்தமான பார்வை பார்த்துவிட்டு எழுந்துச் சென்றுவிட்டாள். அத்தனை கோவம் அவளுள்.
இவர்களை எல்லாம் வரன் கொண்டு வா என்று யார் அழைத்தார்கள்??

கொஞ்சம் கூட மனசாட்சி வேண்டாம்..??

எனக்கெதில் குறை?? நான் ஏன் இதற்கு சம்மதிக்க வேண்டும் ???

மதுஸ்ரீ ஒன்றும் அமைதியான ரகம் இல்லை. பதிலுக்கு பதில், கேலி கிண்டல் பேச்சென்று கலகல வகை தான். ஆனால் என்று அவளது திருமண பேச்சு பிரச்சனையாய் மாற ஆரம்பித்ததோ அன்றிலிருந்து மனதில் அழுத்தம் கூட கூட அமைதியாகி போனாள்.
வெளியே பாக்கியம் என்ன சொல்லி அப்பெண்மணியை சமாதானம் செய்து அனுப்பினாரோ, இவளுக்கு மனம் சற்றே அமைதி அடையவும், அந்த மாப்பிள்ளையை எண்ணி சிரிப்பு வந்தது.

அட லட்சத்துக்கு அருகில் சம்பளம் வாங்கும் நீ கூட கல்யாண சந்தையில் இன்னும் விலை போகவில்லையா..? பரவாயில்லை உனக்கானவள் வரும் வரை காத்திரு. ஆனால் நான் உனக்கானவள் இல்லை.

நான் எப்படி ஏன் வாழ்க்கை துணைக்காக காத்திருக்கிறேனோ அதே போலத்தானே எனக்கானவனும் காத்துக்கொண்டிருப்பான். என்னுடைய குடும்பம் எப்படி புது மாப்பிள்ளையின் வரவை எதிர்நோக்கி காத்திருக்கிறதோ அதே போலத்தானே அந்தக்குடும்பமும் என்னுடைய வரவை எதிர்பார்த்திருக்கும்.

இந்த எண்ணமே அவளது மனதை சமன் செய்ய, முகம் கழுவிக்கொண்டு அவளுக்காய் தற்சமயம் காத்திருந்த வேலைகளை கவனிக்கச் சென்றாள்.

“அத்தை எதுக்கு வேணாம் சொன்னீங்க..?? முன்ன பின்ன இருந்தாலும் பேசி முடிக்க வேண்டியது தான...???” என்று ஓரக்கண்ணில் இவள் வருவதை பார்த்தபடியே கேலியாய் பேசும் அண்ணன் மனைவியை முறைத்தபடி, பாத்திரங்களை எடுத்துப்போட்டு கழுவ,

“அதெல்லாம் எங்களுக்கு என்ன செய்யனும்னு தெரியும். நீ குழந்தைக்கு வேண்டியதை மட்டும் பாரு...”என்று மாமியாராய் அடக்கினார் பாக்கியம்.

இந்த பேச்சுக்களால் ஏற்பட்ட மன வலி சற்றே ஆறிவர,அதெப்படி நீ நிம்மதியாய் இருக்கலாம் என்று விதி நினைத்ததுவோ என்னவோ..??

சுபஸ்ரீ தன் பிள்ளையை தூக்கிக்கொண்டு பிறந்த வீட்டிற்கு வந்தாள்.

“வா டி சுபா.. என்ன திடீர்னு வந்திருக்க....??”

“ஏம்மா பிறந்த வீட்டுக்கு வர சொல்லிட்டுதான் வரணுமா என்ன?? அதுவும் ஒரு நல்ல விஷயமா வரும் போது..”

“என்ன டி நல்ல விசயம்...???”

விஷயம் வேறொன்றுமில்லை, சுபஸ்ரீயின் குடிகார கணவனின் தம்பிக்கு உன் தங்கையை பேசி முடி என்று அவள் மாமியார் இவளை போட்டு படுத்த, அது பொறுக்காமல் பிள்ளையை தூக்கி வந்துவிட்டாள். அந்த தம்பிக்காரனோ அண்ணனுக்கு அடுத்த வாரிசாய் வந்துக்கொண்டிருக்கிறான் என்று இவர்களுக்கு தெரியாதா என்ன??

இது தான் விஷயம் என்றதும் பாக்கியத்திற்கு அழுகையே வந்துவிட்டது. தன் கடைசி பெண்ணின் வாழ்வு இப்படியா இருக்கவேண்டும் என்று ஆதங்கப்பட்டார். வயதானவன், குடிகாரன் எல்லாம் துணிந்து பெண் கேட்டு வரும்படியா அவள் இருக்கிறாள்??

அவள் குணமென்ன ?? அவள் அழகென்ன??

மூத்த மகளிடம் முடியவே முடியாது என்று அடித்துச் சொல்லிவிட்டார்.

“ஏன் மா ஏன் முடியாது..? எதோ ஏன் தங்கச்சிய கொண்டு போனா எனக்கும் அவளுக்கும் நல்லதுன்னு தானே கேக்குறேன். என் கொழுந்தனார் எதுல குறைச்சல்..???”

மாமியார் வீட்டில் பதில் சொல்ல வேண்டுமே. அவள் கஷ்டம் அவளுக்கு.

“இங்க பாரு டி அந்த தம்பி எதுலையும் குறைவில்லாம இருக்கலாம்.. ஆனா மதுவுக்கு தோதா இருக்கனுமில்ல.. இது சரி படாது. ஒரே வீட்ல ரெண்டு பொண்ணும் குடுக்க கூடாது, பெண் குடுத்து எடுக்கவும் கூடாது.. இதுக்கு தான் வந்தன்னா நீ கிளம்பு...”
முகத்தில் அடித்தது போல் பெற்றவர் பேசவும் ரோசமாகி போனது சுபஸ்ரீக்கு. அமைதியாய் நடப்பதை பார்த்துக்கொண்டிருந்த தன் தங்கையிடம்,

“இப்படியே வர மாப்பிள்ளைய குத்தம் குறை சொல்லிட்டே இருங்க.. ரொம்ம்ம்ப சீக்கிரத்துல உனக்கு கல்யாணம் நடந்திடும்...”என்று கடிந்துவிட்டு, வந்த வேகத்தில் கிளம்பிவிட்டாள்.

இந்த நினைவுகள் எல்லாம் மனதில் ஊர்வலம் வந்து மதுவை இப்பொழுது எள்ளலாய் நகைக்க வைத்தது. எனென்ன பேசினீர்கள், இருக்கும் போது ஒரு பேச்சும், இல்லையென்றால் ஒருபேச்சும் என்று. இப்பொழுது எனக்கும் ஒரு காலம் வந்திருக்கிறதே.

எழிலரசன் என்ற பெயருக்குபொருத்தமாய் இல்லையென்றாலும், கண்ணுக்கு கம்பீரமாய் தெரிந்தான்.
தரகர் வந்து ‘Ex. மிலிட்டரி மென்’ என்று கூறவும், “ஐயோ வயது அதிகமோ...”என்று எண்ணியவளுக்கு,மாப்பிள்ளையின் வயது முப்பத்தி இரண்டு என்று கூறவும் நெஞ்சில் பால் வார்த்தது போல இருந்தது.

பாக்கியம் தான் வந்து எழிலின் புகை படத்தைக் காட்டினார். சந்தன நிற முழுக்கை சட்டை அவனது நிறத்திற்கு அழகாய் பொருந்தியிருந்தது. லேசாய் சாய்ந்து நின்றிருந்தது போல் இருந்தது. ஆனால் அவன் நின்றிருந்த விதமும், சிரியாமல் சிரித்த கண்களும் அவளுக்கு பிடித்துத்தான் இருந்தது.

“உங்களுக்கு பிடிச்சா எனக்கு சரிம்மா..”என்று மட்டும் கூறிவிட்டு, இது கூடி வரவேண்டுமே என்று வேண்டிக்கொண்டாள்.
ஏனெனில் இத்தனை வருடங்களாய் பார்த்த மாப்பிள்ளைகளின் புகைப்படங்களை விட எழிலரசனின் புகைப்படம் அவளை ஈர்த்தது உண்மை தான்.

“இருபது வயசிலேயே மிலிட்டரிக்கு போயிட்டாராம் மது, ரெண்டு வருசத்துக்கு முன்ன கால்ல எதோ அடி பட்டிருக்கும் போல, இங்க அவங்க தாத்தா மட்டும் தானாம், அதுனால VRS வாங்கிட்டு வந்துட்டாங்களாம்.. நம்ம பக்கத்து டவுனுதான். சின்னதா ஹோட்டல் வச்சிருக்காங்க போல டி..

எந்த பிக்கல் பிடுங்கல் இல்லை. சொந்த வீடு இருக்கு.. தாரளாமா குடுக்கலாம்னு தரகர் சொல்லிட்டு போனாரு.. உங்கப்பா வரவும் பேசணும்...” என்று தன் போக்கில் பாக்கியம் பேசிக்கொண்டிருக்க, அவளும் கேட்டுக்கொண்டாள்.

அன்று மாலையே கந்தவேலுவும் வீட்டிற்கு வர, மீண்டும் இவ்விவரம் எல்லாம் தெரிவிக்கப்பட்டு, மறுநாளே ஜாதகமும் பார்க்கப்பட்டது. பத்துக்கு ஒன்பது பொருத்தம் இருக்கவும், அனைவருக்கும் நிம்மதியானது. இப்படியாக ஆரம்பிக்கப்பட்ட திருமண பேச்சு, இதோ இன்று நிச்சயம் செய்து பரிசம் போட வருகிறார்கள் என்றளவில் வந்திருக்கிறது.

மகிழ்ச்சியாய் இருப்பது போல உணர்ந்தாள் மதுஸ்ரீ. இன்னும் அவள் எழிலரசனை நேரில் பார்த்ததில்லை. புகைபடத்தில் மட்டுமே.ஆனாலும் அவனை பிடித்திருந்தது. குறை என்று சொல்ல எதுவுமே இல்லை. பார்த்ததுமே இவளுக்கு பிடித்தும் போனது. இதுவரை ஒரு இடம் கூட இப்படி அனைத்திலும் பொருந்தி போனதில்லை. ஒருவேளை இத்தனை நாள் திருமணம் தட்டி போனதெல்லாம் இவனோடு தன் வாழ்வு பொருந்துவதற்கு தானோ என்றெல்லாம் தோன்றியது அவளுக்கு.

லேசாய் வெக்கம் கூட எட்டி பார்த்தது.

“அட அண்ணி இந்த வயசுல கூட வேக்கமெல்லாம் வருமா...” என்று கேட்ட லட்சுமியை பார்வையில் பொசுக்கிவிடும் கோவம் வந்தது.
வெட்கத்திற்கும் வயதிற்கும் என்ன சம்பந்தம்..??

பொக்கை வாய் கிழவியின் வெக்கம் கூட அழகானதாய் தானே இருக்கும். அதென்ன எப்பொழுது பார்த்தாலும் வயது பற்றியே பேசி சீண்டுவது. படக்கென்று ஒரு நிமிர்வு. இதெல்லாம் எத்தனை நாளுக்கு. எல்லாம் சிறிது நாள் தான். உன் ஆசையை நான் கெடுப்பானேன். பேசினால் பேசிவிட்டு போ என்று ஒரு அலட்சிய பாவனை காட்டினாள் மது.
 
Top