Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நலங்கிட வாரும் ராஜா - 2

Advertisement

Sarayu

Tamil Novel Writer
The Writers Crew
அத்தியாயம் – 2

“தாத்தா, எல்லாம் தெளிவா பேசிட்டீங்களா..?? அவங்களுக்கு முழு சம்மதம் தான..?? கடைசி நேரத்துல எதுவும் மாறிடாதே..??” என்றபடி நடந்து வந்தவனை மகிழ்ச்சியாய் பார்த்தார் வேதாச்சலம்.

“என்ன தாத்தா நான் கேட்டிட்டு இருக்கேன். நீங்க இப்படி பார்த்தா எப்படி..??”

“இல்ல எழில், இப்படி ஒரு நாள் வராதான்னு, நான் ஏங்காத நாளே இல்லடா.. அதான் உன்னை பார்த்ததும் அப்படியே நின்னுட்டேன்..”

“ஹ்ம்ம் என்னை உட்கார்ந்து கூட ரசிக்கலாம்..”என்றவன் அவரை அமரவைத்தபடி, மீண்டும் முதலில் கேட்ட கேள்வியையே கேட்க,

“அதெல்லாம் தெளிவா பேசியாச்சு எழில். நீ ஏன் குழப்பிக்கிற. அவங்களுக்கு முழுச் சம்மத்தம். ப்ரோக்கர் தெளிவா எல்லாத்தையும் சொல்லிட்டாரு. அவங்களும் நம்ம கடைக்கு வந்து உன்னை பார்த்துட்டு போனப்புறம் தானே இந்த ஏற்பாடு..?”

“ஆனா...”

“ஆனாவும் இல்லை, ஆவன்னாவும் இல்லை. நீ போட்டு குழப்பிக்காம கிளம்பற வழிய பாரு.. உனக்கென்னடா குறை... உன் குணத்துக்கு எல்லாம் நல்லது தான் நடக்கும்..” என்று சற்றே அதட்டல் போடவும் வேறு வழியில்லாமல் கிளம்பினான் எழிலரசன்.

அவனுக்கிருக்கும் ஒரே உறவு வேதாச்சலம் மட்டும் தான். இருபது வயதிலேயே ராணுவத்தில் சேர்ந்தவன், வேலையை விட்டு வர எல்லாம் அவனுக்கு மனமில்லை, ஆனால் காலில் அடிபட, மேற்கொண்டு அங்கே இருக்க முடியாத சூழலும் உருவாக, அவனே விருப்ப ஓய்வு வாங்கி வந்துவிட்டான்.

என்னதான் சொந்த பந்தங்கள் இருந்தாலும், தேவையில்லாத பொறுப்பு நம் தலையில் விழுந்துவிடுமோ என்ற நினைப்பில் அவர்களெல்லாம் சற்று ஒதுங்கியே இருந்துகொள்ள, எழிலுக்கும் அவன் தாத்தாவிற்குமான உறவு இன்னும் மெருகேறியது.
கடந்த ஓராண்டாகவே அவரது நச்சரிப்பு தாங்கவில்லை.

“பொண்ணு பாக்குறேன்... காலாகாலத்துல கல்யாணம் பண்ணு...” என்று அவர் கூற முதலில் ஒரேடியாய் மறுத்தான். வேண்டவே வேண்டாம் என்றான். பிறகு இப்பொழுது வேண்டாம் கொஞ்ச நாள் போகட்டுமென்றான்.

இப்படியாக வருடமும் ஓட, ஒருவழியாய் பேரனை சம்மதிக்க வைத்தார். வேதாச்சலம் பெண் பார்க்க ஆரம்பித்ததும் நீ நான் என்று வந்தார்கள் தான், ஆனால் கடைசியில் ஏதாவது ஒரு காரணம் கூறி தவிர்த்து விடுவர். ஒருசிலரோ வீட்டில் பெண்கள் இல்லை நம்பி எப்படி பெண் குடுப்பது என்று வெளிப்படையாகவே கேட்டனர்..

இன்னும் சிலரோ வேதாச்சலத்தை முதியோர் இல்லத்தில் விட்டு மாப்பிளை பெண்ணும் மட்டும் தனியே இருக்க முடியுமா என்று கேட்டனர். அனைத்தும் சரியாய் வந்து பெண் பார்க்கவென்று போனால், அவ்வளவு தான் போன சிறிது நேரத்திலேயே ஏதாவது ஒரு காரணம் வரும் திரும்பி வருவர். அன்று இரவெல்லாம் வேதாச்சலம் உறங்கவே மாட்டார்.

“உனக்கு ஒரு நல்லது செஞ்சிடனும்னு பாக்குறேன். முடிய மாட்டேங்குதேடா..” என்று புலம்பும் போதெல்லாம்,

“தாத்தா எதுக்கு இதெல்லாம், பேசாம நம்ம இப்படியே இருந்துடலாம். கல்யாணம் இதெல்லாம் வேணாமே..” என்று சொல்பவனை காண அவருக்கு அத்தனை வருத்தமாய் இருக்கும்.

அவரது நிம்மதிக்காக, “எல்லாம் சரியாகட்டும் தாத்தா அப்புறம் கூட பாக்கலாம்..” என்பான்.

அவரோ, “எதுனாலம் காலாகாலத்துல நடந்தாதான் நல்லது டா.. நீ சும்மாயிரு..” என்று அவன் வாய் மூடிவிடுவார்.

அப்படியான சமயத்தில் தான் மதுவின் ஜாதகமும், புகைப்படத்தையும் தரகர் கொண்டு வர, விசாரித்த அளவில் வேதாச்சலத்திற்கு இந்த சம்பந்தம் பிடித்து போனது.

“எழில், விசாரிச்சதுல நல்ல குடும்பம்னு தான் சொல்றாங்க. சொந்த பந்தம் நிறையடா.. நாளைக்கு உனக்கு ஒண்ணுன்னா எல்லாம் வருவாங்க.. பொண்ணும் நல்லா லட்சணமா இருக்கு...”

“தாத்தா... எல்லா உண்மையும் சொல்லி அதுக்கு அப்புறம் பேசுங்க. அதைவிட்டு, சும்மா சும்மா என்னால வந்து அசிங்கப்பட முடியாது. எல்லாம் சொல்லுங்க, முதல்ல அவங்க சம்மதிக்கட்டும்.. நீங்களும் ஒருதடவை அவங்ககிட்ட தெளிவா பேசுங்க..” என்றுவிட்டு பெண் பார்ப்பதற்கு வரமாட்டேனென்று சொல்லி விட்டான்.

ஏனோ அவனுக்கு பெண் பார்க்க போய், பார்த்து யாருக்காவது ஒருவருக்கு பிடித்து ஒருவருக்கு பிடிக்காமல் போய் அது வேறு ஏதாவது குழப்பம் ஏற்பட்டால் என்ன செய்யவென்று, இதெல்லாம் அவனுக்கு பிடிக்கவில்லை. அவர்களுக்கு முழு சம்மதம் என்றால் சரி என்ற மனவோட்டத்தில் இருந்தான்.

வேதாச்சலமும், அவரது நண்பர் குடும்பமும் தான் சென்றது. மதுஸ்ரீயை பார்த்ததுமே அவர்களுக்கு பிடித்து போனது. வேதாச்சலம் ஒன்றுக்கு இரண்டு தடவையாய் கந்தவேலை கேட்டுவிட்டார்,

“உங்களுக்கு இதுல பரிபூரண சம்மதம் தானே...” என்று.

கந்தவேலும் முழு மனதாய் சம்மதம் சொல்ல, அடுத்து ஒரு நல்ல நாளில், பெண் வீட்டில் இருந்து அங்கே வருவதாய் ஏற்பாடானது. பின் மதுவின் அப்பா என்ன நினைத்தாரோ, எழிலின் ஹோட்டலுக்கே வந்து பார்த்துக்கொள்கிறோம் என்று கூறிவிட்டார்.

வியாபாரம் எப்படி நடக்கிறது என்பதை பார்ப்பதற்காய் கூட இருக்கலாம். அப்படிதான் சென்று பார்த்துவிட்டும் வந்தார்கள். ஆனாலும் இதெல்லாம் ஒருபக்கம் இருக்க எழிலின் மனதில் மட்டும் எதுவோ போட்டு அவனை குழப்பிக்கொண்டே இருந்தது.

“இங்க பாருடா இன்னிக்கு நிச்சயம் பண்ண போறோம்.. அதை மனசில வச்சிட்டு வா.. நீயா குழம்பி எதையும் கெடுத்துவைக்காத..” என்று பேரனை அழைத்துச்சென்றார்.

“டி மது மாப்பிள்ள வீட்டுல இருந்து கிளம்பிட்டாங்களாம் டி..” என்று சோபனா வந்து சொல்ல, சுபஸ்ரீயும் நித்யஸ்ரீயும் வந்து,

“இத்தனை நாள் காத்திட்டிருந்ததுக்கு பரவாயில்ல டி நல்ல இடமா தான் அமைஞ்சிருக்கு..”என்று கூறும்பொழுதே, இவர்கள் சந்தோசமாகத்தான் சொல்கிறார்களா என்ற சந்தேகம் வந்தது மதுவிற்கு.

மேலும் சிறிது நேரம் கடக்க “அவங்கெல்லாம் வந்துட்டாங்க..” என்று வெளியே பரபரப்பான குரல்கள் கேட்க, இவளுள்ளும் படபடப்பு வந்து ஓட்டிக்கொண்டது.

அவள் மட்டுமே அறையில் இருக்க, தன்னை அழைத்து போகும் தருணத்திற்காய் காத்திருந்தாள். ஐயோ இப்பொழுதே கால்கள் பின்னுகிறதே, என்று சந்தோசமாய் பயந்துக்கொண்டாள் மதுஸ்ரீ.

“ஹ்ம்ம் இனிமே எங்க நல்ல வரன் வரப்போகுது...” என்று தன்னை ஏளனம் செய்தவர்கள் முன் நன்கு வாழ்ந்துக்காட்ட வேண்டும் என்ற வெறி வந்தது.

இமைகள் படபடத்தது, இதயம் தடதடத்தது. வேகவேகமாய் மூச்சுக்களை எடுத்துக்கொண்டாள். எத்தனையோ பேர் பெண் பார்த்து சென்றிருக்கிறார்கள் அப்பொழுதெல்லாம் வராத ஒரு உணர்வு, எழில் பெண் பார்க்க வரவேயில்லை என்றாலும் அவளுக்கு மனதில் புதிதாய் பூத்தது. மதுஸ்ரீக்கு அவளது உணர்வுகளே அழகிய கீதமாய் இருந்தது.

ஒருவேளை எழிலரசனை பிடித்ததினாலா??

பெண் பார்க்க வரவில்லை, ஆனால் இன்று நேரில் என்னை பார்த்து பிடிக்காமல் போனால் என்ன செய்ய?? என்று அஞ்சிய மனதை நீ கூட தானே நேரில் பார்க்கவில்லை. அதுபோல தான் போட்டோவில் பார்த்து உன்னை பிடித்துப்போயிருக்கும் என்று தனக்கு தானே ஆறுதல் கூறியவளுக்கு,

திடீரென்று வெளியில் கேட்ட பேச்சுக்குரல்களும், லேசான சலசலப்பும், அழகிய கீதம் அறுந்து, அபஸ்வரமாய் அமைய என்னவோ என்றானது.

“மது நம்ம ஏமாந்துட்டோம்டி. மாப்பிள்ள குச்சி ஊண்டிக்கிட்டு வரான்டி.. கால்ல அடின்னு தான சொன்னாங்க, ஆனா நொண்டின்னு சொல்லலையே..” என்று சோபனா வந்து கண்ணீரோடு கூறவும், அவளுக்கு அத்தனை நேரம் இருந்த உணர்வுகள் எல்லாம் சொல்லாமல் கொள்ளாமல் ஓடிவிட்டன.

“என்.. என்ன.. டி சொல்ற..??”

“ஆமா டி.. அந்த மாப்பிளைக்கு குச்சி வச்சுத்தான் நடக்க வருமாம்.. மிலிட்டரில இருக்கும்போது கால்ல அடி பட்டுருச்சாம். ரொம்ப நாள் நடக்கவே முடியாம இருந்தாராம் டி. நம்மகிட்ட சொல்லவே இல்லாம மறைச்சுட்டாங்க..”

“இல்.. இல்லடி.. அப்பா, அண்ணே, மாமா எல்லாம் போய் பார்த்துட்டு தான வந்தாங்க..” என்றவள் வேகமாய் எழ,

“இல்ல மது நீ இங்கயே இரு. உன்னைய வெளிய வர வேணாம்னு அம்மா சொன்னாங்க...”என்று சோபனா அவளை தடுத்தாள்.
அவளுக்கு அங்கே வாழ்வே போய்க்கொண்டிருக்கிறது இந்நேரத்தில் அவள் அமைதியாய் இருக்க முடியுமா என்ன?? இதில் யார் ஏமாற்றினார்கள் இல்லை யார் ஏமாந்தார்கள்?? தெரிந்துக்கொண்டே ஆக வேண்டும்.

“இல்ல டி...”என்று மறுத்தவள், வேகமாய் வெளியேறினாள்.

“நீங்க சொல்றதெல்லாம் சரிதாங்க.. ஆனா ப்ரோக்கர் எங்கட்ட கால்ல அடி, அதான் வேலையைவிட்டு வந்தாங்கன்னு மட்டும் தான் சொன்னாரு. இப்படி மாப்பிள்ள நொண்டிகிட்டு வருவார்னு சொல்லவே இல்லை..” என்று சுபஸ்ரீயின் கணவன் மூத்த மருமகனாய் கத்திக்கொண்டிருக்க,

இதை கேட்ட எழிலரசனின் முகம் வேதனை, அவமானம், என்ற கலவையான பாவங்களை காட்டியது.

“ச்சே கடைசியில நான் நினைச்சது போலதானே ஆச்சு...” என்று தன் தாத்தாவை பார்க்க, வேதாச்சலமோ கந்தவேலுவை கெஞ்சாத குறைதான்.

“இந்த நேரத்துல இப்படி சொன்னா எப்படிங்க...?? நீங்க எல்லாம் நேர்ல வந்து பாத்துட்டு தானே போனீங்க.. இப்போ இப்படி சொல்றீங்களே..”

“இங்கபாருங்கய்யா நாங்க வந்து பாத்தோம் இல்லைன்னு சொல்லல, ஆனா அந்த நேரம் இந்த தம்பி கல்லால உட்காந்து இருந்தாரு, உங்க ஹோட்டல்ல வேற கூட்டமா இருந்தது. சரி எதுக்கு வியாபாரத்தை கெடுத்துட்டுனு நாங்களும் பேசிட்டு போயிட்டோம்.. எங்களுக்கு நிஜமாவே இப்படின்னு தெரியாது. அடி பட்டிருந்துச்சுன்னு தெரியும் ஆனா இப்படி நடக்க முடியாதுன்னு தெரியாது..
மனுசங்களை பார்த்து நம்புறவன் நான், அதான் ரொம்பவும் வெளிய விசாரிக்கலை. இதுல தப்பு எங்க மேலயும் தான். இத்தனை நாள் வீட்ல பொண்ண வச்சிட்டு இப்படி குடுக்க மனசு வரலைங்க...” என்று கந்தவேலு சிறிது தன்மையாகவே பேச,

எழிலின் முகம் மேலும் மேலும் கறுத்து சிறுத்து. இதற்கு தானே அத்தனை தலைபாடாய் அடித்தான். அவனும் மனிதன் தானே. மானவமானம் அவனும் பார்ப்பான் தானே. அடிபட்ட கால் இன்னும் சரியாகவில்லை. சக்கர நாற்காலியில் இருந்தவன் இந்தளவிற்கு நடப்பதே அவனது கடின முயற்சியால் தான்.

மதுவின் பார்வையோ எழிலை தவிர வேறு யார் மீதுமில்லை. அவனது முகத்தில் தென்படும் மாறுதல்கள் ஒவ்வொன்றும் அவளது மனதில் பல மாறுதல்களை ஏற்படுத்தியது. எழிலின் முகத்தில் சிறிதும் பொய்யில்லை. அவனை பார்த்தால் ஏமாற்றும் ஆள் போல் இல்லை.

“உன்னைய யாருடி வெளிய வர சொன்னா.. உள்ள போ..” என்று நித்யஸ்ரீ சொல்ல அவளை முறைத்துவிட்டு, தைரியமாய் நடுகூடத்திற்கு வந்தாள்.

ஆளாளுக்கு பேசிக்கொண்டிருக்க, இவள் வந்ததை முதலில் யாரும் கவனிக்கவில்லை. கவனித்த பிறகோ ஒருநொடி அங்கே யாரும் பேசவில்லை.

“மது நீ உள்ள போ..” என்று பாக்கியம் சொன்ன பிறகே, எழில் வேகமாய் திரும்பிப்பார்த்தான்.

அவன் இப்பொழுது தான் முதல்முறையாய் மதுவை பார்க்கிறான். யாருக்குமே பார்த்தால் பிடித்துவிடும் ரகம் தான் மது, அதில் எழில் மட்டுமென்ன விதிவிளக்கா??. அதுவும் இன்று அவள் செய்திருந்த அலங்காரம் இன்னும் அழகாய் காட்டியது அவளை.

வேதாச்சலம் புகைப்படம் காட்டியதற்கு கூட, உங்களுக்கு சரின்னா எனக்கும் சரியென்று மட்டுமே பதில் அளித்தவன், இப்பொழுது மதுவின் வரவை உணரவும், “ஐயோ இந்த பெண் வேறு என்ன சொல்ல போகிறாளோ..” என்றிருந்தது.

ஒருமுறை அனைவரும் தெளிவாய் பேசியிருந்தால் இந்த பிரச்னையே வந்திருக்காதே. நிச்சயம் செய்யுமளவு வந்துவிட்டு இப்படி நிற்பது அவனுக்கு எப்படியோ இருந்தது. சுற்றியிருந்த சொந்தங்களோ முழுசா விசாரிக்க வேணாமா?? என்று தங்கள் பங்கிற்கு வாய் திறக்க, இன்னொரு பக்கம் கந்தவேலுவின் இரு மருமகன்களும் தங்கள் வாய் சவடாலை காட்ட, போதாத குறைக்கு ஸ்ரீதரன் வேறு,

“என் தங்கச்சிய வீட்லையே வச்சிருந்தாலும் வச்சிருப்போமே தவிர உங்களுக்கு குடுக்க மாட்டோம்..” சத்தம் போட்டுக்கொண்டிருந்தான்.

பாக்கியதிற்கோ என்ன செய்வதென்றே தெரியவில்லை. நல்ல இடம், ஆனால் கடைசியில் இப்படியொரு குறை வந்துவிட்டதே. யாரை சமாதனம் செய்வது??

“இதுக்கு அந்த நாப்பது வயசு மாப்பிள்ளையே பரவாயில்ல போல...” முனுமுனுப்பாய் லட்சுமி சொல்ல,

“ஏன் என் தம்பிக்கு கூட நாங்க கேட்டோமே..” என்று சுபாவின் கணவன் வரிந்துக்கட்டிகொண்டு வந்தான்.

ராணுவத்தில் இருக்கும்போது இப்படியெல்லாம் நேர்வது சகஜம். அவனென்ன நடக்கவே மூடியாத முடமா?? நம்பிக்கையும், வைத்தியமும், பயிற்சியும் இன்னும் அவனை சிறிது நாட்களில் நடக்க வைத்துவிடும். அந்த உறுதி அவனுக்கு இருந்தது.
ஆனால் பார்ப்பவரெல்லாம் நொண்டி என்று கூறும்பொழுது, அதுவும் இப்படி சபையில் வைத்துக் கூறும்பொழுது அவனுக்கு அத்தனை சங்கட்டமாய் இருந்தது. இதையெல்லாம் விட அவனது தாத்தா, தனக்காக இப்படி கெஞ்சி நிற்பது மேலும் வருத்தத்தை தர,

“தப்பு எங்கமேல தான்.. நாங்களும் உங்ககிட்ட ஒருமுறை தெளிவா பேசியிருக்கனும். மன்னிச்சுக்கோங்க..” என்று கரம் குவித்தவன், மதுவை ஒரு பார்வை பார்த்தான்.

இந்த மன்னிப்பு நான் உன்னிடம் கேட்பது என்று சொல்லாமல் சொல்லியதோ என்னவோ.

புகைப்படத்தில் எழில் லேசாய் சாய்ந்து நிற்பது போன்று தோன்றியது ஏனென்று இப்பொழுது புரிந்தது அவளுக்கு. ஆக அவர்கள் யாரும் எதையும் மறைக்க முயலவில்லை. புரிந்துகொள்ளாதது தங்களது தவறே என்று உணர்ந்தாள்.
இனி என்ன செய்வது..??

இந்த திருமணத்தை தானே அவள் பெரிதும் நம்பியிருந்தாள்.. சற்று முன்பு அவள் மகிழ்ந்திருந்தது என்ன.?? இப்பொழுது குழம்பித் தவிப்பது என்ன.?? இதுவும் இல்லையென்றால் அதன் பிறகு அவளது நிலையை எண்ணி பார்க்கக்கூட முடியவில்லை.
நிச்சயம் அந்த நாற்பது வயதுக்காரனுக்கோ, இல்லை அந்த குடிக்காரனுக்கோ பேசுவார்கள். வாழ்வு நரகமாவது நிச்சயம். இதையெல்லாம் மீறி அவளுக்கு அவனை பிடித்திருக்கிறது. அவர்களும் பிடித்ததினால் தானே வந்திருக்கிறார்கள்.

எழில் என்ன குடித்துவிட்டு கண்ட இடத்தில் விழுந்துக்கிடந்தா காலை உடைத்துக்கொண்டான், இல்லையே. தேவையில்லாத தகராறில் இப்படியானதா?? அதுவுமில்லையே. எத்தனை மதிப்பு மிக்க உத்தியோகம். நாட்டை காக்க செல்வதென்றால் சும்மாவா..??
இப்படியான எண்ணங்கள் தோன்ற, அடுத்த நிமிடம் மனதில் ஒரு நிமிர்வு வந்தது. அவன் மன்னிப்புக்கேட்ட விதமும், தன்னுணர்வுகளை அடக்கி, அவன் பேசிய பாங்கும், அவனை இன்னுமின்னும் அவளுக்கு பிடிக்கச் செய்தது.

அவளது அடக்கப்பட்ட சூழலில் இருந்து அவளுக்கு விடுதலை தருவது திருமணம் மட்டுமே. அந்த கதவையும் இப்பொழுது எழிலரசன் தான் திறந்து வைத்து நிற்கிறான். அவனும் சென்றுவிட்டால், மீண்டும் அக்கதவு தாழ்படும், இருள் சூழும், இவளுக்கு மூச்சு முட்டும்.
மீண்டும் அப்படி ஒரு இருளில் சிக்கிக்கொள்ள அவள் விரும்பவில்லை .

அவனோ அங்கே கிளம்ப எத்தனிக்க, மனதில் இருந்த கலக்கமெல்லாம் அவளுக்கு இப்பொழுது இல்லை. சட்டென்று ஒரு முடிவுக்கு வந்துவிட்டாள் மதுஸ்ரீ.

“நீ ஏன் டி இன்னும் இங்க நிக்கிற.. உள்ள போ.. நாங்க சொன்ன மாப்பிளைய எல்லாம் கட்டியிருந்தா இந்நேரம் உனக்கு குழந்தையே பிறந்திருக்கும்..” என்றபடி அவளது அக்காமார்கள் அவளை இழுக்க,

மீண்டும் அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு, “தாத்தா, வாங்க போலாம்...” என்று வேதாச்சலத்தை அழைத்துக்கொண்டு எழிலரசன் திரும்ப,

“அம்மா எனக்கு கல்யாணம்னு ஒன்னு நடந்தா, அது இவர் கூட மட்டும் தான்..” என்று மதுஸ்ரீ அழுத்தம் திருத்தமாய் கூறிவிட்டிருந்தாள்.

அடுத்த நொடி “மது...!!!!” என்ற அதிர்ச்சி கோரஸ் அவர்கள் வீட்டினரிடம் இருந்து வெளிப்பட, எழிலரசனோ ஸ்தம்பித்து நின்றான்.

“என்ன கூறுகிறாள் இவள்??”என்றெண்ணியவன், விலுக்கென்று திரும்பி அவள் முகம் பார்த்தான். கண்கள் நான்கும் பிண்ணிக்கொண்டன.

அடுத்தடுத்து யார் என்ன சொல்லியும் மதுவோ முடியவே முடியாது என்றஉறுதியில் நின்றாள்.
எத்தனை பேர் வந்திருப்பார்கள், எல்லாம் தட்டி போனது. அனைத்தும் பொருந்தி, அனைவர்க்கும் பிடித்து, நிச்சயம் வரை வந்தது எழில்தான். ஆகையால் அவனையே கட்டிவையுங்கள் என்றாள். மீண்டும் ஒரு முறை இப்படியெல்லாம் அலங்கரித்துக்கொண்டு வேறொருவர் முன் வந்து நான் நிற்கமாட்டேன் என்று கூறினாள்.

“அடியே எங்களை எல்லாம் அசிங்கப்படுதுறியா..??” என்று ஆளாளுக்கு கத்த, அவளோ தன் முடிவில் திடமாய் இருந்தாள்.

யார் என்ன சொன்னாலும் சரி, இது ஏன் வாழ்வு, எனக்கு பிடித்தமாய் அமைத்துக்கொள்வதில் என்ன தவறு இருக்கிறது. இத்தனை ஆண்டுகள் யார் யாருக்காகவோ பொறுத்து போனதெல்லாம் போதும். இனி என்னுடையதை நான் காண வேண்டும்.

எழில், அவனை பார்க்கும் பொழுது நிச்சயம் அவன் மோசமான ஆள் இல்லை என்றே தோன்றியது. லேசாய் சாய்ந்து நடக்கிறான். அவ்வளவே. அதை தவிர வேறு என்ன அவனிடம் குறையாய் இருக்கிறது. சொல்லப்போனால் அவன் அப்படி நடப்பது கூட அவளுக்கு குறையாய் தெரியவில்லை. அது தான் உண்மை.

மதுஸ்ரீ அத்தனை திடமாய் பேசியது எழிலரசனுக்கு ஆச்சரியமாய் இருந்தது. ஆள் பார்க்கத்தான் அமைதி போல என்று எண்ணிக்கொண்டான்.

ஆனாலும் இத்தனை திடம், ஒரு பெண்ணிடம்..

“இவளோடான வாழ்வு நிச்சயம் சிறப்பாய் தான் இருக்கும்...” என்று அவன் மனம் கூற, அவனால் தற்சமயம் வேடிக்கை மட்டுமே பார்த்திட முடிந்தது.

ஏனெனில் இன்னும் யாரும் எந்த முடிவிற்கும் வரவில்லையே. மதுவை தவிர.

“இத்தனை நாள் நல்லாதான டி இருந்த, இப்போ என்ன வந்துச்சு உனக்கு...” என்று பாக்கியம் கண்ணீர் வடிக்க,

“என்னையும் கொஞ்சம் புரிஞ்சுக்கோங்க ம்மா... ” என்றால் கண்ணீர் மல்க.

அவள் கலங்கி நிற்பதே, எழிலரசனுக்கு எப்படியோ இருந்தது. தனக்காக இப்படி ஒரு கண்ணீர் வடிக்கிறாளே என்று லேசாய் ஒரு பெருமை எட்டிப் பார்த்தது. ஆனால் அடுத்த நொடியே அது காணாமலும் போனது.

ஒருவேளை மதுவிற்கு என்னைவிட நல்ல மாப்பிள்ளை அமையுமானால்?? அவளுக்கு என்ன குறை, வயது சற்று அதிகமாகி விட்டது. அதற்காக என்னை திருமணம் செய்திட வேண்டுமா??

வேண்டாம் எழில் உனக்கு இப்படியான ஆசை வேண்டாம். உன் கால்கள் சரியான பிறகு, நிச்சயம் உனக்கு திருமணம் நல்ல முறையில் நடக்கும்.

ஆனால் ஆதற்காக இந்த பெண்ணை அனைவரும் கேள்வி கேட்பது போல வைக்க வேண்டாம் என்றெல்லாம் அடுத்தடுத்து எண்ணங்கள் தோன்ற, தன் தாத்தாவை பார்த்தான். ஆனால் அவரோ எதோ வரம் தரும் தெய்வத்தை காண்பது போல மதுஸ்ரீயை பார்த்தபடி நின்றிருந்தார்.
 
:love: :love: :love:

மது ஸ்ரீ கல்யாணம் பன்னிப்பாளா???
பொண்ணு ஓகே சொன்னாலும் அக்கா அண்ணி என்ன இப்டி பேசுறாங்க???
 
Last edited:
Top